home நேர்காணல், புதிய அலை அதனால் எனது படங்கள் வேறுபட்டவை

அதனால் எனது படங்கள் வேறுபட்டவை

பக்மன் ஹோபாடி உடன் ஒரு நேர்காணல்

பக்மன் ஹோபாடி 1969ல் ஈரானிய குர்திஸ்தானில் பானேஹ் எனுமிடத்தில் பிறந்தார். மாணவராக இருந்தபோதே ஒரு ரேடியோ நிலையத்தில் பணிபுரிந்தார். டெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழகத்தில் சினிமா வகுப்புகளில் பயின்றார். பிறகு சனண்டாஜ் என்ற அமெச்சூர் குழுவினருடன் சேர்ந்து திரைப்படம் ஒன்றை உருவாக்க முனைந்தார். எனினும் அதை அவர் முழுமை செய்யவில்லை. 1995 முதல் 1999 வரையிலான ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து சிறு படங்களை அவர் இயக்கினார். அது அவருக்கு தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. No One Knows about Persian Cats என்ற அவரது படம், டெஹ்ரானில் இசை தொடர்பாக நிலவும் சூழல்களைப் பற்றிப் பேசுகிறது. 17 நாட்களில் அப்படத்தை அவர் முடித்தார். அஷ்கன் கோஷான்சாத் மற்றும் நெகர் ஷெகாகி என்ற இரண்டு இசைவாணர்கள் எவ்வாறு ஒரு இசைக்குழுவை உருவாக்குகின்றனர் என்பதைப் பற்றிய கதை இது. இசைக்குழு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இசை நிகழ்த்த பயணிக்கலாம் என நினைக்கின்றனர். பல வகையான இசை பற்றி இப்படம் விவரிக்கிறது. இவரது பிற படங்கள்: No one knows about the Persian Cats, Half Moon, Turtles Can Fly, The Songs of my Mothers Land, A Time For Drunken Horses….

குர்திஷ் சினிமா இதழுக்காக நேர்காணல் கண்டவர்: கவிதா கஸ்தூரி

 

பிற ஈரானியத் திரைப்படங்களிலிருந்து உங்கள் படம் எவ்வாறு வேறுபடுகிறது? அவற்றின் உருவாக்கத்திலும், உள்ளடக்கத்திலும்? சாதாரணமானவரிலிருந்து ஒரு பெர்சியன், குர்து மற்றும் அனைவருக்கும் ஒரே கேள்வியுள்ளது, குர்திஷ் அடையாளத்தை எப்படி நீங்கள் காப்பாற்றுகிறீர்கள்?

சினிமா விமர்சகர்களால்தான் அந்த வித்தியாசம் கூறப் படவேண்டும். பொதுவாகக் கூறவேண்டுமானால், இதுவரை அறிமுகமாகாத கதைகளின் அடிப்படையில் எனது வேலையைச் செய்கிறேன். எனது வாழ்வனுபவங்கள் மற்றும் நான் வாழும் உலகம் ஆகியவற்றின் அடிப்படையில் எனது வேலை அமைகிறது. அதாவது, குர்திஷ்தான். அதனால் எனது படங்கள் ஈரானைச் சுற்றியுள்ள மற்ற நகரங்களிலுள்ள கதைகளின் அடிப்படையில் வரும் பிறவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. குர்திஷ்தானிலிருந்து நான் கதைகளைப் பெறுவதற்கும், அவற்றை நான் திரைமொழியில் மாற்றம் செய்கிறேன் என்பதற்கும் தொடர்பு உண்டு.

 

அதனால்தான் குர்தியர்களின் கதைகளை உலகத்திற்குச் சொல்ல சினிமாக்காரராக ஆனீர்களா? எப்படித் திரைப்படங்களுக்குள் வந்தீர்கள்? எப்போது அவற்றைப் பார்க்கத் துவங்கினீர்கள்? திரைப்படப் பள்ளியில் சேர்வது எளிதாக இருந்ததா?

இளமைக்காலந்தொட்டே நான் சினிமாக்களைப் பார்த்து வருகிறேன். இந்தத் துறைக்கு வந்த பிறகுதான் அவற்றைத் தீவிரமாகப் பார்க்கத் துவங்கினேன்.

 

மொஹ்ஸன் மக்மல்பஃ ப்பின் Black Board திரைப்படத்தில் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்திலும், கியரஸ்டோமியின் The Wind Will Carry us படத்தில் உதவியாளராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள். அவர்களது படம் இயக்கும் பாணியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சில படங்களில் பணியாற்றியதன் மூலம்தான் அகாடமியில் என்னால் சேர முடிந்தது. அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் நான் அவற்றில் பணியாற்றினேன் என்றாலும், எனது நோக்கம் என்பது, அவர்கள் எனது தாயகத்தில் படம் செய்ய வேண்டும் என்பதுதான் – ஈரானிய குர்திஷ்தான். வெளியுலகிற்கு இப்பகுதி அவ்வளவாகத் தெரியாது. பிற திரைப்படக்காரர்களின் கவனத்கைக் கவர்வதற்காகவும், இந்நிலப்பகுதியின் மதிப்பை பிறர் அறிவதற்காகவும் நான் இப்பகுதியில் படம் செய்ய நினைத்தேன். எனது கவனத்தை நான் சிதற விடவில்லை. சில படங்களில் அவர்கள் கூறியதால் நடித்தேன். எனினும், அவர்களது படங்களைப் பற்றி குறிப்பிட்டுக் கூற எதுவுமில்லை. தங்களுக்குப் பிடித்த படம் பற்றி மக்கள்தான் கூறவேண்டும்.

 

ஈரானுக்கும், தொழில்நுட்பத்திற்கும் நெருக்கம் இல்லை என்பது போலத் தோன்றினாலும், உங்களது வலைத்தளம் மற்றும் உங்களது திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்து ஈரானியர்கள் தொழில் நுட்பத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. அதிகம் அறியப்படாத இந்த விடயத்தைப் பற்றி விளக்குவீர்களா?

நாமென்ன கற்காலத்திலா இருக்கிறோம்? காடுகளில் இருப்பவர்களும், தொடர்பெல்லை தாண்டி வசிப்பவர்களும்தான் தொழில்நுட்பத்தை அறியாமலிருப்பார்கள். ஈரானுக்கு நீங்கள் இப்போது வந்தால் அழகான நீரூற்றுகளையும், பிற இடங்களையும் காணலாம். பிறர் பயன் படுத்துவதைப் போல நாங்கள் அதைப் பயன்படுத்துவதில்லை என வேண்டுமானால் கூறலாம். ஈரான் மற்றும் குர்திஷ்தான் பற்றி மக்கள் கொண்டுள்ள எண்ணம் மாறவேண்டும்.

 

Half Moon படத்தில் இசைக்கலைஞர்கள் கீர்கேகார்ட் போன்ற தத்துவவாதிகளைப் பற்றிப் பேசுகின்றனர் என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இது வழக்கமாக நடக்கிற ஒன்றுதானா?

மடிக்கணினி வைத்திருக்கிற அவர்கள் தத்துவ வாதங்களிலும் ஈடுபடமுடியும். ஒரு சிறிய விஷயத்திலிருந்து நிறைய தெரிய விரும்புகிறீர்கள். அது சாத்தியமில்லை. திரைப்படக்காரர்களைப் பற்றித் தீர்மானிப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நாம் அறியவேண்டும். அவை சரியா தவறா எனக் கூறுவதற்கு, அவை உங்கள் அடுத்த வீட்டுக்காரரைப் பற்றிய கதைகளிலிருந்து உருவாக்கப்படவில்லை.

 

ஹுசைன் அலிஸாடேஹ் என்ற இசைவாணரைப் பற்றிக் கேட்க விரும்பினேன். அவரது சீடர் Off Moon படத்தில் பாடியிருக்கிறார். அவரைப் பற்றிக் கூறுங்கள். குர்திய இசை மரபு பற்றியும் சொல்லுங்கள்.

ஹுசைன் அலிஸாடேஹ் சிறந்த இசை ஆசிரியர். ஈரானிய இசையில் அவர் நிறைய புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தார். அம்மாற்றங்களைக் கொண்டுவர, தான் எவ்வாறு போராடினேன் என்பதை அவர் ஒரு படமாக உருவாக்கினார். அதன் காரணமாக அவருடன் இணைந்து நான் ‘Zaman-E-Brayee Mastee Aspha’ படத்தில் பணியாற்றினேன். மேலும் இரண்டு படங்களிலும் நாங்கள் இணைந்து பணியாற்றினோம்.

 

இந்தியத் திரைப்படங்கள் எவ்வளவு புகழ் பெற்றுள்ளன? நீங்கள் பார்க்க முடிகிறதா? குர்துப் பகுதிகளில் அவற்றைப் பார்க்க முடிகிறதா? ஹிந்தி தவிர பிறமொழிப் படங்களை நீங்கள் பார்த்தீர்களா?

இந்தியத் தியேட்டருக்கு இங்கே நீண்ட வரலாறு உண்டு. காரணம், நீண்டகால நட்பு அந்த விஷயத்தில் எங்களுக்கிடையே உண்டு. சமீபத்திய ஈரான் படங்கள் பாம்பே ஸ்டூடியோக்களில் தயாராயின. இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் இந்தியத் திரைப்படங்களுக்கு அவற்றில் வரும் நடனங்கள் மற்றும் இசை காரணமாக மவுசு குறைந்தது. எனினும், இந்தியப் படங்கள் இன்னும் காணொளிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்க்கப்படுகின்றன.

 

Half Moon படம் பெண்களின் உரிமைகள் அவர்கள் பாடுதல், பொதுஇடங்களில் பங்கெடுத்தல் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பு பற்றிப் பேசுகிறது. ஹீஸோ, அவரே ஒரு உறுதியான பெண்மணி. ஷிரீன் எபாடி, அஸார் ந ஃபீஸி போல ஈரானியப் பெண்கள் தைரியமானவர்கள் என நாங்கள் காண்கிறோம். அரசியல் சூழல் காரணமாக இதுபோன்ற தோற்றம் உள்ளதா அல்லது இது தேசம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றா? அவர்களைப் பற்றி பொதுவாக மக்கள் கருதுவதிலிருந்து மாறானதாக இது இருக்கிறதே?

அதிகப்படியான நெருக்குதலுக்குள்ளாகும் போது அவர்கள் எதிர்வினையாற்றுவார்கள். பல்வேறு வழிகளில் ஈரானியப் பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் எதிர்வினையாற்றுவது இயல்பானதுதான். ஈரானியப் பெண்கள் இயற்கையாகவே உறுதிமிக்கவர்கள் என்பதும் சரியானதே.

 

சினிமாவில் அடுத்த அலை என்பது எங்கிருந்து வரக்கூடுமெனக் கருதுகிறீர்கள்? எந்த நாடு நம்பிக்கையூட்டும்படி இருக்கிறது?

அப்படிக் கூறுவது கடினமானது. அது சூழல்கள் மற்றும் எவ்வாறான அரசியல், சமூக, கலாச்சார நிலைமைகளில் பணியாற்ற வேண்டியுள்ளது என்பதைப் பொறுத்து அமைகிறது.

தமிழாக்கம்: ஆனந்த ராஜ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!