home கட்டுரை, டிரெண்டிங் அனைத்துக் கலைகளும் போராட்டங்களின் வாயிலாகவே வருகிறது…

அனைத்துக் கலைகளும் போராட்டங்களின் வாயிலாகவே வருகிறது…

ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் உடன் ஒரு நேர்காணல்

 

ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ், 73, ஓர் அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர். இவரது முதல் புத்தகம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களை எழுதியிருக்கிறார். நியூஜெர்சியிலிருக்கும் பிரின்ஸ்டனில் வசித்துவருகிறார்.

”உலர்ந்து போன ஒப்பனையும், விரிசலும் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கனவு கண்டேன், அவள் தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொண்டாள்” என்று சொல்லும் ஓட்ஸ், எழுத்து, கைம்மைத்தனம் மற்றும் சமீபத்தில் Mud woman என்கிற நாவலாக மாறிய அவரது கனவு பற்றியும் பேசுகிறார்.

கார்டியன் இதழுக்காக நேர்காணல் கண்டவர் : டிம் ஆடம்ஸ்

 

உங்களுடைய புதிய நாவலான Mud woman, குப்பையில் அனாதையாக கைவிடப்பட்ட ஒரு பெண் குழந்தை, பின்னாளில் பிரபலமான பல்கலைக்கழகத்தின் தலைவியாக வளர்வது பற்றியதாகும். இது ஒரு கற்பனையான, ஆழ்மன நிலையைக் கொண்டதாக இருக்கிறது; அப்படித்தான் நீங்களும் பார்க்கிறீர்களா?

வழக்கத்திற்கு மாறாக, அந்த முறைப்படிதான் அது வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு எடின்பரோ விழாவுக்காகச் சென்றிருந்தேன். அப்போது ஒரு நாள் இரவு முகத்துக்கு அதிகமாக ஒப்பனை செய்து, உலர்ந்து அதில் வெடிப்பு உண்டாகியிருந்த ஒரு பெண்ணின் முகம் என் கனவில் வந்தது. அவள் தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொண்டிருந்தாள். அவள் பல்கலைக்கழகத்தில் மேன்மையான ஒரு நிலையில் இருப்பவள் போல் தோன்றியது. நான் எழுந்தபோது அந்த பிம்பம் என்னிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மிகவும் பரவசத்துடன் அது பற்றி 5 அல்லது 10 பக்கங்கள் எழுதினேன். அந்த பெண் யார் என்பதை அறிந்து கொள்ள மீண்டும் செல்வதற்கு எப்போதும் விரும்புகிறேன்.

 

நாம் எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் நம்முடைய கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பது இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் அந்த
மாதிரி உணர்கிறீர்களா?

ஆமாம். இந்த நாவலில் வரும் கதாபாத்திரம் வளர்ந்து வரக்கூடிய இடத்திற்கும் நான் வளர்ந்து வந்த இடத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. ஆனால் என்னுடைய அம்மா கொலைகார அம்மா இல்லை. அது இப்போது நான் வாழ்ந்து வரும் இடமான பிரின்ஸ்டன், நியூ ஜெர்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனக்கு இந்த வேறுபாடு ஆச்சரியத்திற்கான ஒரு மூலமாகவே இருந்து வருகிறது. என்னுடைய தலைமுறையினரில் பலர் செய்தது போல பெரும்பாய்ச்சலை ஏற்படுத்திய யாருக்கும் அவர்களுடைய குடும்பம் வந்த இடம் குறித்த ஓர் ஏக்க உணர்வு இருக்கும்.

 

அந்த மாதிரியான பெரிய மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மை எழுதுவதற்கான தேவையைக் கொண்டுவருகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?

அனைத்துக் கலைகளும் போராட்டத்திலிருந்து ஏற்படுகிறது என நான் நினைக்கிறேன். நான் எழுதும்போது எப்போதும் ஒரு நிகழ்வின் வியத்தகு மையக்கருவை எதிர்பார்க்கிறேன், மக்கள் வாழ்வின் சந்திப்புகள் ஒரு
திசையில் தான் பயணிக்குமே தவிர இன்னொரு திசையில் இல்லை. சிலர்`”ஜாய்ஸிடம் இருள், வன்முறை, சோகம் ஆகிய உணர்வுகள் இருக்கின்றன” என சொல்வதுண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மட்டும் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதில்லை. எழுதுவது கிளர்ச்சியூட்டக் கூடியதாகும்.

 

அந்த கிளர்ச்சியின் ஒரு பகுதி என்பது தோல்விக்கான பயமா?

அது எப்போதும் உங்களிடம் இருக்கும். ஆனால் நீங்கள் புத்தகத்தில் இருக்கும் போது கொந்தளிப்பும் உற்சாகமும் இருக்கத்தான் செய்யும். நீங்கள் முடிக்கும் போது தோல்வியடைந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு இருக்கும். ஆனால், நீங்கள் அதில் இருக்கும் போது அந்த உணர்வு இருக்காது.

 

நீங்கள் எப்போது எழுதுவீர்கள்?

காலை வேளைகளில், 7 மணிக்கு, வீட்டில் உள்ளவர்கள் எழுந்திருக்காத போது, புதிய மின்னஞ்சல்கள் எதுவும் இல்லாத நிலையில், நாள் ஆரம்பமாவதற்கு ஓரிரு மணிநேரங்களுக்கு முன்பாக நான் எழுதுவதுண்டு. ஆனால் நாவல் குறித்த இதயத் துடிப்பு எப்போதும் – நான் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அல்லது வேறு ஏதாவது செய்து கொண்டிருந்தாலும் – இருந்து கொண்டே இருக்கும்.

 

இப்போதும் ஒவ்வொரு நாளும் ஓடுவது உண்டா?

ஆமாம். நான் ஓடும்போது அதிகமாக சிந்தித்துக் கொண்டிருபேன். வழக்கமாக 40 நிமிடங்கள்.

 

உங்களது பணிவாழ்க்கை அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கான மிகப் பெரிய சாட்சியமாகும்; எழுத்தாளராக, வாசகராக அது பிரதிநிதித்துப்படுத்துவது தொழில்நுட்பத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?

எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் கிண்டிலில் படித்திருக்கிறேன். ஆனால் கிண்டிலை நான் எட்டு மாதங்கள்தான் உபயோகித்தேன் அதன் பின் அது வேலை செய்யவில்லை. புத்தகங்களை `சரி செய்ய’ வேண்டுமென்கிற அவசியமில்லை.

 

அந்த காலகட்டம் குறித்து உங்களுடைய நினைவலையான `A Widow’s Story’ யில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்க்கையின் அந்தப் பகுதி இப்போது முடிந்துவிட்டது என உணர்கிறீர்களா?

அது அறையின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், நான் அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். விதவையானவர்களில் பெரும்பாலோர் தாங்கள் தொடர்ந்து வாழ்வதால் அவர்களுடைய துணையை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறார்கள். இது ஒரு தவறான சிந்தனையாகும். எனக்கு அது தெரியும், ஆனால் உங்கள் உணர்வை நிறுத்த முடியாது.

 

Mud woman உங்களுடைய இரண்டாவது கணவருக்கு, சார்லஸ் க்ரோஸ், சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய `முதல் வாசகர்’ என்று நீங்கள் யாரை விவரிப்பீர்கள், ஏன்?

எனது முதல் கணவர் என்னுடைய படைப்பை ஒருபோதும் படித்தது இல்லை. எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. சார்லி ஒரு நரம்பியல் நிபுணர், இலக்கியவாதி இல்லை; கண்டிப்பாக நான் படிப்பேன் என அவர் சொல்கிறார்.

 

அவர் அப்படி செய்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?

எனக்கு நெருக்கமாக இருக்கும் யாரும் என்னுடைய படைப்பைப் படிப்பதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. என்ன சொல்கிறேன் என்றால், அவர் தூங்கிவழிவதைப் பார்க்கும்போது நான் என்ன செய்வது?

 

எழுதக்கூடாது என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

எழுதக்கூடாதென்றா? இல்லை, நாம் எல்லோரும் கதை சொல்வதை விரும்புபவர்கள், எழுத்தாளாராக இருந்தால் நீங்கள் எப்போது கதைசொல்லியாக இருப்பீர்கள்.

 

தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம்

 

One thought on “அனைத்துக் கலைகளும் போராட்டங்களின் வாயிலாகவே வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!