home உன்னதம், கவிதை அலெஹாந்த்ரா பிஸார்னிக் கவிதைகள்

அலெஹாந்த்ரா பிஸார்னிக் கவிதைகள்

  • அலெஹாந்த்ரா பிஸார்னிக்

 

1.

விடியலுக்காக நானே அந்தத் துள்ளலை உருவாக்கினேன்.

ஒளியின் அருகில் எனது உடலை நிலைப்படுத்தி

பிறப்பின் துயரம் பற்றி பாடினேன்.

 

 

2.

இவை சில சாத்தியமுள்ள பதிப்புகள்:

ஒரு துளை, ஒரு நடுங்கும் சுவர்…

 

 

3.

வெறும் தாகம்

மெளனம்

முரண் இல்லை

என்னிடம் சற்று எச்சரிக்கையாயிரு, என் அன்பே

வெறுமையான கோப்பைகளுடன் உள்ள பயணியின் பாலைவனத்தில்

மெளனமாக இருக்கும் பெண்ணிடம் சற்று எச்சரிக்கையாயிரு

மற்றும் அவள் நிழலின் நிழலுடனும்.

 

 

4.

அவ்ரோரா மற்றும் ஜூலியோ கொர்த்தஸாருக்கு

இப்போது பிறகு:

நினைவிலிருந்து அகன்ற பெண்ணுக்கான அஞ்சலிகளைத்

தேடும் அவர்களின் கரங்கள் மூழ்குவதை யார் நிறுத்துவது?

குளிர் அஞ்சலி செலுத்தும். காற்று அஞ்சலி செலுத்தும். மழையும்

அஞ்சலி செலுத்தும். அதேபோல, இடிமுழக்கமும்.

 

 

5.

ஒரே ஒரு முறை திறந்த கண்களுடன்

வாழ்தலின் ஒரு சிறு தருணத்திற்காக மட்டும்

அறிவார்த்தத்தின் மீது சிறு பூக்களையும்

குரல் இழந்த ஒரு மனிதனின் வாயில்

உள்ள சொற்களைப் போல நடனமாடுவதையும்

காணும் ஒரு நிமிடத்திற்காக மட்டும் 

 

 

 6.

அவளுடைய நினைவின்

பொன்னுலகத்தில் அவள் ஆடைகளைக் களைகிறாள்

அவளுடைய பார்வைக் கோணங்களின்

அச்சம் மிகுந்த விதி பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது

இருத்தலற்ற ஒன்றுக்குப் பெயரிடுவது எவ்வாறு

எனத் தெரியாமல் இருப்பது பற்றி அவள் அச்சம் கொள்கிறாள்.

 

 

7.

அவள் தாவிக் குதிக்கிறாள், மேற்சட்டை நெருப்பு பற்ற,

நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரத்திற்கு,

நிழலிருந்து நிழலுக்கு.

காற்றின் இந்தக் காதலனின்

நெருங்கிப் பழகாத ஒரு மரணத்தில் அவள் மரணிக்கிறாள்.

 

 

 8.

ஒரு ஒளிரச் செய்யும் நினைவு, நான் எதிர்பார்த்திருந்த

நிழலால் தொல்லை தரும் ஒரு படி அரங்கம்.

அது வருகை தரும் என்பது உண்மையல்ல. அது வருகை தராது

என்பது உண்மையல்ல.

 

 

9.

இந்த உறுப்பெச்சங்கள் இரவில் பளிச்சிடுகின்றன,

ஒரு திண்மமான பறவையின் உயிர்ப்புள்ள தொண்டையில்

இந்தச் சொற்கள் மதிப்புமிக்க கற்கள் போல,

வசீகரமான இந்தப் பச்சை,

வாட்டும் இந்த இளஞ்சிவப்பு,

வெறுமையான இந்த மறைபொருள் இதயம்.

 

 

ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: யுவெட்டே ஸீகெர்த்

 

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

 

அலெஹாந்த்ரா பிஸார்னிக் (1936 – 1972) லத்தீன் அமெரிக்காவின் Boom காலகட்டத்தில் பெரும் புகழ்பெற்றவர். அவரது கவிதை மொழி  அமானுஷ்யமான மயக்குறு நிலைகொண்டது. லத்தீன் அமெரிக்காவில் கொர்த்தாஸாரின் சிறுகதை, நாவல் மொழிநடையை  இலக்கிய ஆர்வலர்கள் எவ்வளவு கொண்டாடினார்களோ, அதற்கு நிகராக இவரது கவிதை மொழியை ஆராதித்தார்கள். இவர் தனது வாழ்நாளில் ஒரே சிறுகதைதான் (The Bloody Countess) எழுதியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பதோரி சீமாட்டி பற்றிய பயங்கரமான விநோதப் புனைவு. அது தமிழில் ‘ரத்தவேட்கை’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

 

போதைப் பழக்கத்திற்கு பலியாகி, Secobarbital sodium ஐ அளவுக்கு அதிகமாக உட்கொண்டு இறந்து போனார்.

 

இந்தக் கவிதைகள் Diana’s Tree என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்புக்கு ஆக்டேவியா பாஸ் முன்னுரை எழுதியுள்ளார். (உன்னதம் இணைய இதழில் வெளிவந்துள்ளது)
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!