home கவிதை, டிரெண்டிங் அஹ்மத் ஃபரஸ் கவிதை

அஹ்மத் ஃபரஸ் கவிதை

விழி வங்கி

 – அஹ்மத் ஃபரஸ்

 

இந்தத் துயரம் நிரம்பிய பார்வையைப் பார்த்து நடுங்குகிறேன்
பார்வையின் இந்தத் தாபம் போல்
இன்னமும் எவ்வளவுதான் இருக்கின்றன

யாருடைய நிலப்பரப்பில் அவதானிப்பின் பொக்கிஷம் இல்லை
யாருடைய விதியில் காண்பதற்கு கொண்டாட்டமில்லை, இறைதூதருமில்லை
கிரணங்கள் பாய்ந்தோடுவதைக் காண யார் தகிப்பது
பாதையைத் தேடும்
வெளிச்சம் அதுவல்ல என யார் கூறுவது

என் விழிகளைப் பெற்றுக் கொள்ள அவர்களிடம் கூறுங்கள்
என் உடல் அதன் துடிப்பை நிறுத்துவதற்கு முன்
இந்த அழுக்கு ஆன்மாவும் விடுபடுவதற்கு முன்
பல்வேறு பேரழிவுகள் நிகழ்வதற்கு முன்

ஒரு எண்ணமாக மாறுவதிலிருந்து என் விழிகளைப் பத்திரப்படுத்துங்கள்
என் விழிகளை அவர்களின் முகங்களில் பொருத்துங்கள்

என் விழிகள் பார்வையிட்ட சிதிலங்களைச்
சகித்துக் கொள்ள யாரால் இயலும்
விழிகளை இமைக்காமல் திறந்து வைத்திருக்க
யாருக்குத் துணிச்சல் இருக்கிறது
சிங்கத்தலையும் ஆட்டுடலும் பாம்பின் வாலும் கொண்ட
தீயைச் சுவாசிக்கும் நெருப்பு அரக்கிகள்
தங்கள் கசைவார்களைச் சுழற்றும் பொழுதும்
வெடிபொருளின் உடைபாடுகள் காற்றில் பரவி
சுவாசத்தில் படியும் பொழுதும்
எஞ்சிய வாழ்வுக்காக
உயிர் கதறும் பொழுதும்.

 

Ahmad Faraz (1931-2008) புகழ் பெற்ற உருதுக் கவிஞர்

 

உருது மொழியிலிருந்து: அஞ்சுலி ஃபாத்திமா ராஸா கால்ப்

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!