home கட்டுரை, தமிழி ஆவணம் : மலேசியக் கூலி

ஆவணம் : மலேசியக் கூலி

 

மலேசிய மண்ணிற்குத் தமிழர்களின் ரத்தம் உரமாக இருந்ததற்கான ஒரு சிறு பிரதி இது.

அந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சுகபோகியாக அல்லாமல், தனது ரத்தத்தைத் தேனீராக மாற்றும் அடிமைக் கூலியாகவும், உறவுகளையும் நட்புகளையும் வெட்டிவிட்டு வேரோடு தன்னைப் பிடுங்கி எடுத்து இன்னொரு மண்ணில் ஊன்றி வாடிவதங்கித் தளைத்த தமிழனது துயரக் காட்சியின் ஒரு சிறு துணுக்கு இது.

தமிழ்நாட்டிலிருந்து கங்காணி மூலமாக மலேசியாவுக்குக் கூலிக்கு ஆள் எடுக்கும் இந்த அறிக்கை 1927-ல் வெளிவந்தது.

தமிழனின் ரத்தத்தை உறிஞ்சிப் பெருத்த சயாம் ரயில் தண்டவாளங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் அவனது ஆன்மாவின் குரல் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.

மலேசியத் தமிழர்களின் ஜீவாதார உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் இவ்வேளையில் இந்த ஆவணம் முக்கியத்துவம் பெறுகிறது.

 

ஆவணக்காப்பாளர் : கு. தங்கராசு

 

G.O.  No. 91 L., 12th Janury 1927.

STATEMENT OF

Information as per Rule 17,

Indian Emigration Rules

 

G.O.  நெம்பர் 91 L., ஜனவரி மாசம் 12 தேதி 1927.

இந்தியன் எமிகிரேஷன்  நெ. 17

உத்தரவின்படி அறிவிப்பு ஜாப்தா.

 

 

நோடிஸ்

பினாங்கு, சிங்கப்பூர் முதலிய மலாய் நாடுகள்.

ப்ரிடிஷ் மலேசியா சம்பந்தமாய்த் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் (இந்து தேசத்து குடியேறுவது சம்பந்தமான விதிகளைச் சேர்ந்த 17 வது விதி)

மலாய் நாடுகளின் வெவ்வேறு பாகங்கள் எவையென்றால், – ப்ரிடிஷ் மலேயா என்பதில் அடியில் கண்ட நாடுகள் சேர்ந்திருக்கின்றன:-
(i) பினாங்கு, ப்ராவின்ஸ் வெல்லெஸ்லி, டிண்டிங்ஸ், மலாக்கா, சிங்கப்பூர் என்பவை சேர்ந்த ஸ்ட்ரெய்ட்ஸ் மெண்டுகள் அல்லது தொடுவாய்ப் பகுதிகள்.

(ii) பேரா, ஸெலங்கூர், நெகிரிஸெம்பிலான், பாஹாங்க் என்னும் நாடுகள் சேர்ந்த ஐக்கிய மலாய் நாடுகள்.

(iii) கெட்டா, பெர்லிஸ், கெலன்டான், ட்ரெங்கானு, ஜோகூர் என்னும் இதர மலாய் நாடுகள்.

சீதோஷ்ண ஸ்வாதி:-
மலாய் நாடு உஷ்ணதேசமாயிருந்தாலும், அது தென் இந்தியாவைப்போல அவ்வளவு உஷ்ணமாக ஒரு போதும் இருப்பதில்லை அந்த நாட்டின் ஏறக்குறைய எல்லா பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்கிறது. வருஷ முழுவதும் அடிக்கடி மழைபெய்து வருவதால் அங்கே வெயிலின் கொடுமை அதிகமாய் இராது. அனேகமாய் மலாய் நாட்டில் வெயில் காலம் மழை காலம் என்ற வித்தியாசமே கிடையாது, ஆகையால் இந்தியர்கள் குடியேறுவதற்கு அது தகுந்த தேசமாயிருக்கிறது.

கூலியாள்களுக்கு இன்னவேலை கிடைக்குமென்பது:-
ரப்பர் தோட்டங்களிலும், தென்னந் தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும், ஸர்க்கார் ரோட்டுகளிலும், ரெயில் வண்டிப் பாதைகளிலும் இன்னும் இதர இடங்களிலும் கூலியாள்களுக்கு வேலை கிடைக்கும். மேற்படி தோட்டங்களில் மரத்தின் பட்டையை சீவி பால் எடுக்கும் வேலையும், லாலாங் என்னும் கோரைப்புல் முதலியவைகளை எடுக்கும் வேலையும் கிடைக்கும். (மேலே சொன்ன இடங்களுக்குள் ரப்பர் தோட்டங்களில்தான் இந்தியக் கூலியாள்கள் மிகவும் அதிகமாய் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.)

மலாய் நாட்டுக்குப் போகும் விதம்:-
நீ மலாய் நாட்டுக்குப்போக இஷ்டப்பட்டால், உன் சொந்த செலவிலேயே போகலாம், அல்லது உன்னுடைய ஜில்லாவிலிருந்து கங்காணியோடு கூட போகலாம். கங்காணியோடு கூட போனால், ரெயில் சார்ஜாவது, கப்பல் சார்ஜாவது கொடுக்க வேண்டியதில்லை. இதல்லாமல், இன்னொரு விதமாகவும் போகலாம். அதைப்பற்றி கீழே 6வது பாராவில் விவரமாய்ச் சொல்லியிருக்கிறது.
நாகபட்டணத்திலிருந்து பினாங்குக்குப் போக ஐந்து நாளும், கிள்ளானுக்குப் போக ஆறு நாளும் கப்பலில் பயணம் செய்யவேண்டும். சென்னையிலிருந்து நாகபட்டணம் வழியாய்ப் பினாங்குக்குப் போக ஒன்பது நாளும் கிள்ளானுக்குப் போக பத்து நாளும் பிடிக்கும்.

கங்காணி ஆள்களைச் சேர்ப்பது:-
கூலியாள்களைச் சேர்ப்பதற்கு ஒவ்வொரு கங்காணியிடத்திலும் லைஸென்ஸ் இருக்கிறது, எந்த தோட்டத்துக்கு கங்காணி ஆள்கள் சேர்க்கிறாரோ அந்த தோட்டத்தின் பெயர் முதலிய விவரங்கள் லைஸென்ஸில் எழுதியிருக்கும். மேலும், 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் கூலியாளுக்கு இன்ன கூலி கிடைக்குமென்றும், 15 வயதுக்கு மேற்பட்ட பெண் கூலியாளுக்கு இன்ன கூலி கிடைக்குமென்றுங்கூட அந்த லைஸென்ஸில் எழுதியிருக்கும். மலாய் நாட்டுக்குப்போக உத்தேசிக்கும் கூலியாள், தான் போகச் சம்மதிப்பதற்கு முன்னே லைஸென்ஸில் எழுதியிருக்கும் வேலை சம்பந்தமான ஷரத்துக்களை நன்றாய்க் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். கங்காணி சேர்க்கும் ஒவ்வொரு ஆளையும் அழைத்துக் கொண்டு போக கிராம முன்ஸிப் அனுமதி கொடுத்ததற்கு அடையாளமாக கங்காணி அவருடைய கையெழுத்து வாங்கவேண்டும் ரெயில் சார்ஜ், கப்பல் சார்ஜ் முதலியவைகளுக்காகச் செய்யப்படும் எந்தச் செலவையும், கங்காணிக்கோ அல்லது தோட்ட அதிகாரிகளுக்கோ, கூலியாள் கொடுக்க வேண்டியதில்லை. கூலியாளுக்குக் கொடுக்கும் கூலியிலிருந்து அதற்காக பணம் எதுவும் பிடித்துக் கொள்ளக்கூடாது. கங்காணி சேர்க்கும் ஒவ்வொரு ஆளுக்காகவும், தோட்டக்காரர்கள் கங்காணிக்குக் கம்மிஷன் கொடுக்கிறார்கள். ஆகையால், கூலியாள்கள் தங்களை அழைத்துக் கொண்டு வந்த கங்காணிக்கு எவ்விதமாகவும் கடன் பட்டவர்களல்ல.

கங்காணியால் சேர்க்கப்படாத (தர்ம ஆர்டரில் போகிற) கூலியாள்கள்:-
மலாய் நாட்டுக்குப் போக உத்தேசிக்கும் கூலியாள்கள் தங்குவதற்காக ஆவடியிலும், நாகப்பட்டணத்திலும் எமிக்ரேஷன் டிப்போக்கள் இருக்கின்றன. யாராவது கூலியாளாக மேற்படி நாட்டுக்குப்போக இஷ்டப்பட்டால், அவர் டிப்போக்களில் ஒன்றுக்குப் போய் தான் மலாய் நாட்டுக்குப்போக இஷ்டப்படுவதாக தெரிவித்துக் கொள்ள வேண்டும், அந்த ஆள் உள்ளபடி கூலியாள் தானென்று எமிக்ரேஷன் கம்மிஷனராவது அஸிஸ்டன்ட் எமிக்ரேஷன் கம்மிஷனராவது பார்த்துத் தெரிந்து கொண்டால், எவ்வித செலவும் இல்லாமல் கூலியாள் மலாய் நாடு வந்து சேர்ந்தவுடனே தங்களுக்குப் பிரியமுள்ள எந்த இடத்துக்காகிலும் வேலை செய்யப் போகலாம், இன்ன இடத்துக்குத்தான் போய் வேலை செய்ய வேண்டுமேன்று அவர்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவர்கள் போய் இறங்கும் துறைமுகத்திலிருந்து, அதாவது பினாங்கிலிருந்து அல்லது கிள்ளானிலிருந்து, அவர்கள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு அவர்களுக்கு இலவசமாய் ரெயில் டிக்கெட் வாங்கிக் கொடுக்கப்படும் அல்லது பெண்பிள்ளைகளுக்கும் சில்லறைச் செலவுகளுக்காக ரொக்கமாய் இரண்டு (டாலரும்) வெள்ளியும், சிறுவர்களுக்குத் தலைக்கு ஒரு வெள்ளியும் கொடுக்கப்படும்.

வேலை ஒப்பந்தம்:-
கூலியாள்கள் வேலையை விட்டு விட்டுப்போக இஷ்டப்பட்டால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விட்டுப் போகலாம். ஆனால், அவர்கள் அந்தப்படி விட்டு விட்டுப் போவதற்கு முன்னே ஒரு மாச நோடீஸ் கொடுக்க வேண்டும், அல்லது நோடீஸ் கொடுப்பதற்கு பர்த்தியாக அவர்கள் தங்களை வேலைக்கு வைத்துக் கொண்டவரிடத்தில் ஒரு மாசச் சம்பளம் கொடுத்துவிட வேண்டும். அதே மாதிரி தோட்டத்து மானேஜர் கூலியாளை வேலையிலிருந்து நீக்கிவிட இஷ்டப்பட்டால், அவர் அந்தப்படி நீக்கிவிடுவதற்கு முன்னே ஒரு மாச நோடிஸ் கொடுக்க வேண்டும், அல்லது நோடிஸ் கொடுப்பதற்கு பர்த்தியாக ஒரு மாச சம்பளம் கொடுத்து விடவேண்டும்.

வேலை செய்யும் நேரம்:-
மலாய் நாட்டிலுள்ள இந்தியக் கூலியாள்கள் பெரும்பாலும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். சாதாரணமாய் காலையில் சுமார் 6 மணிக்கு வேலை ஆரம்பிக்கும். (ஆனால், அவர்கள் அதற்கு முன்னமேயே எழுந்து சமையல் செய்து கொள்ள வேண்டும்.) ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்துக்கு அதிகமாய் வேலை செய்யும்படி எந்த கூலியாளையும் கட்டாயப் படுத்தக்கூடாது.
வாரத்தில் ஆறு நாளைக்கு அதிகமாக எந்த கூலியாளும் வேலை செய்யவேண்டுமென்று கட்டாயமில்லை.

ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்துக்கு அதிகமாக ஒரு கூலியாள் வேலை செய்தால், அந்தப்படி அதிகமாய் செய்யும் வேலைக்கு இரட்டிப்புக் கூலி பெற அந்த கூலியாளுக்குப் பாத்தியதை உண்டு.

கூலி வீதம்:-
நூறு (ஸென்ட்) காசு கொண்டது ஒரு வெள்ளி. சாதாரணமாய் ஒரு வெள்ளி 1 1/2 ரூபாய் முதல் 1 3/4 ரூபாய் வரையில் பெறும். ஒரு காசு கால் அணாவைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமானது.
இடத்துக்குத் தகுந்தபடி கூலி வித்தியாசப்படும், பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆண் கூலியாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 காசு முதல் 50 காசு வரையில் (அதாவது, 10 3/4 அணாமுதல் 12 3/4 அணா வரையில்) கிடைக்கும். 15 வயதுக்கு மேற்பட்ட பெண் கூலியாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 30 காசு முதல் 40 காசு வரையில் (அதாவது, 7 1/2 அணா முதல் 10 3/4 அணா வரையில்) கிடைக்கும்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 காசு முதல் 20 காசு வரையில் (அதாவது, 2 1/2 அணா முதல் 5 அணா வரையில்) கிடைக்கும்.

கூலியாள் வேலை செய்யும் நாள்கள் அல்லது நேரத்துக்கு மாத்திரமே கூலி கிடைக்கும். (சாதாரணமாய்த் தோட்டங்களில் ஞாயிற்றுக் கிழமைகளும் இதர ஸர்க்கார் ரஜா நாள்களும் நீங்கலாக மாசத்தில் 24 நாள்களுக்கு வேலை கிடைக்கும்.) எந்த நாளிலாவது கூலியாள் அரைநாள் மாத்திரமே வேலை செய்தால், அரைநாள் கூலிதான் கிடைக்கும். வேலைக்குப் போகாவிட்டால் அபராதம் போடக்கூடாது.

அட்வான்சு:-
தோட்டங்களில் வேலை செய்யும் கூலியாள்களின் செலவுக்காக அவர்களுக்கு சாதாரணமாய் 2 வெள்ளிக்கு மேற்படாமல் ரொக்க அட்வான்சு (முன் பணம்) கொடுக்கப்படும். அரிசியும் காய்கறி வகையறாக்களும் வாங்கின விலைக்கே அவர்களுக்கு ரொக்கத்துக்காவது கடனாகவாவது கொடுக்கப்படும். கூலியாள்களுக்குக் கொடுத்த ரொக்க அட்வான்சும் அரிசி, காய்கறி வகையராக்களின் விலையும் மாசக்கடைசியில் அவர்களுடைய கூலியிலிருந்து பிடித்துக் கொள்ளப்படும். சந்தா தொகைகள், பிரவேச கட்டணங்கள் முதலியவைகளுக்காக ரெஜிஸ்டரான எந்த கோவாபரேடிவ் ஸொஸைடிக்காவது (ஐக்கிய சங்கத்துக்காவது) கூலியாள் பணம் ஏதாகிலும் செலுத்த வேண்டியிருந்தால், அதை அந்தக் கூலியாளை வேலைக்கு வைத்துக்கொண்டவர் கூலியாளின் சம்மதத்தின்மேல் கூலியிலிருந்து பிடித்து அந்த ஸொஸைடியின் ப்ரெஸிடென்டினிடம் கொடுக்கலாம். கூலியாளின் கூலியிலிருந்து வேறே எதற்காகவும் பணம் பிடித்துக் கொள்ளக்கூடாது.
கடனுக்குக் கள் விற்கவும் அதன் விலையைக் கூலியாள்களின் கூலியிலிருந்து பிடித்துக் கொள்ளவும் கூடாதென்று சட்டத்தில் சொல்லியிருக்கிறது. கள் குடிக்க வேண்டுமென்றாவது இன்னாரிடமிருந்து தான் அல்லது இன்ன தோட்டத்தில் வைத்திருக்கும் கடையிலிருந்துதான் அரிசி முதலிய சாமான் வாங்கவேண்டுமென்றாவது கூலியாள்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது.

ஜீவனச் செலவு:-
சாப்பாட்டுக்காகவும், துணிமணி முதலிய அவசியமான வஸ்துக்கள் வாங்குவதற்காகவும் ஒரு கூலியாளுக்குச் சராசரியில் மாசம் ஒன்றுக்கு சுமார் 8 வெள்ளி, அதாவது 12 ரூபாய் முதல் 14 ரூபாய் வரையில் பிடிக்குமென்று தெரிகிறது.

வீடுகள்:-
அனேக தோட்டங்களிலும், ஸர்க்கார் இலாகாக்களிலும், கூலியாள்கள் குடியிருப்பதற்காக வாடகை இல்லாமல் வீடுகள் கிடைக்கும். அந்த வீடுகள் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட ப்ளான்படி கட்டப்பட்டிருக்கும்.

வைத்திய சகாயம்:-
கூலியாள்களுக்கு நோய் கண்டால், அவர்களுக்குத் தோட்டங்களைச் சேர்ந்த ஆஸ்பத்திரிகளில் தர்ம வைத்தியம் செய்யப்படுகிறது. இல்லாவிட்டால், தோட்டக்காரரின் செலவில் அவர்களை ஸர்க்கார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஒரு தோட்டத்தில் ஆஸ்பத்திரி இராவிட்டாலுங்கூட, கூலியாளுக்கு வைத்தியம் செய்ய ஒரு ட்ரெஸ்ஸராகிலும் இருப்பார்.

பள்ளிக்கூடங்கள்:-
பள்ளிக்கூடம் போகக்கூடிய பிள்ளைகள் பத்துபேருக்குமேல் ஒரு தோட்டத்தில் இருந்தால், அந்தப் பிள்ளைகளின் நன்மைக்காக ஒரு பள்ளிக்கூடம் வைக்கும்படி லேபர் கன்ட்ரோலர் என்னும் சஞ்சிதுரை மானேஜருக்கு எழுதி ஏற்பாடு செய்யலாம்.

கோயில்கள்:-
அனேகமாய் ஒவ்வொரு தோட்டத்திலும் அதில் வேலை செய்யும் கூலியாள்களுக்காக சொந்த கோயில் ஒன்று இருக்கிறது.
காலி நிலங்களும், ஆடுமாடுகளும்:- அனேக தோட்டங்களில் காலி நிலங்கள் இருக்கின்றன. அவைகளில் கூலியாள்கள் தோட்டப்பயிர் செய்யலாம், ஆடுமாடுகளும் வைத்திருக்கலாம். ஸர்க்காரைச் சேர்ந்த நிலங்களை அடமானம் பெறும் விஷயமாகவும் விக்கிரயத்துக்கு யோக்கியமான நிலங்களை வாங்குவது விஷயமாகவும் மற்ற ஜாதியாருக்கு இருக்கும் பாத்தியம் இந்தியர்களுக்கும் உண்டு.

(1) கூலியாளுக்கு தேகசௌக்கியம் இல்லாவிட்டாலும்.

(2) மலாய் நாட்டில் செய்ய வேண்டிய வேலை கூலியாளின் சக்திக்குத் தகுந்தாயில்லாவிட்டாலும்,

(3) வேலைக்கு வைத்துக் கொண்டவர் கூலியாளை நியாய விரோதமாய் நடத்தினாலும்,

(4) தகுந்த காரணம் வேறே ஏதாகிலும் இருந்தாலும், அந்தக் கூலியாளைச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்புவது உசிதமென்று மலாய் நாட்டிலுள்ள இந்தியா கவர்ன்மென்ட் ஏஜென்ட் அவர்களுக்குத் தெரிய வந்தால், அந்தக் கூலியாளுக்குச் செலவு எதுவும் இல்லாமலே சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி விடுவார்கள்.

அல்லாமலும், மலாய் நாட்டுக்கு வந்து ஒரு வருஷத்துக்கு மேற்பட்டாலும், வியாதி கண்டு வேலை செய்ய சக்தியற்றவர்களாய்விட்ட கூலியாள்களையும், வியாபாரம் மந்தமாயிருப்பது காரணமாக வேலையில்லாமல் சங்கடப்படும் கூலியாள்களையும், அவர்களுக்குச் செலவு எதுவும் இல்லாமல் அவர்களுடைய ஊருக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

கூலியாள்கள் சம்பந்தமான குற்றங்கள்:- புதிய லேபர் கோட் என்னும் சட்டப்படி, கூலியாள்கள் சம்பந்தமான குற்றங்களுக்கு (க்ரிமினல்) தண்டனை எதுவும் கிடையாது. கூலியாள்களுக்கும் அவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டவருக்கும் உள்ள சம்பந்தம் ஸிவில் நீதியானதாகவே பாவிக்கப்படும்.

(லேபர்) சஞ்சி ஆபிஸர்களும் இந்தியா கவர்ன்மென்ட் ஏஜென்டும்:-
மலாய் நாட்டிலே குவாலாலம்பூரில் லேபர் கன்ட்ரோலர் என்னும் பெரிய சஞ்சிதுரை ஒருவர் இருக்கிறார். கூலியாள்களின் குறைகளை விசாரிக்கவும், மற்றபடி அவர்களுடைய நன்மையைக் கவனிக்கவும் மேற்படி துரையைத் தவிர அடியிற்கண்ட இடங்களிலும் சஞ்சி ஆபிஸர்கள் இருக்கிறார்கள்:-

(1) டெப்யுடி சஞ்சிதுரை, பினாங்கு.

(2) டெப்யுடி சஞ்சிதுரை, குவாலாலம்பூர்.

(3) அஸிஸ்டன்ட் சஞ்சிதுரை, கிள்ளான்.

(4) அஸிஸ்டன்ட் சஞ்சிதுரை, ஸெறம்பான்.

(5) அஸிஸ்டன்ட் சஞ்சிதுரை, மலாக்கா.

(6) சஞ்சிதுரை, ஜோகூர், ஜோகூர் பாரு.

(7) சஞ்சிதுரை, கெட்டா, அலோர் ஸ்டார்.

(8) எக்ஸ்ட்ரா அஸிஸ்டன்ட் சஞ்சிதுரை, சிங்கப்பூர்.

பொதுவாய் மலாய் நாட்டிலுள்ள இந்தியர்களின் நன்மைக்கும் முக்கியமாய் இந்திய கூலியாள்களின் நன்மைக்கும் பாதகம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வதற்காக இந்தியா கவர்ன்மென்டார் ப்ரிடிஷ் மலேயாவில் ஒரு ஏஜென்டையும் நியமித்திருக்கிறார்கள். எந்தக் கூலியாளுக்காகிலும் தன்னை வேலைக்கு வைத்துக் கொண்டிருப்பவர் மேல் வருத்தம் ஏதாவது இருந்தால், அதைப்பற்றி மலாய் நாட்டிலுள்ள சஞ்சிதுரைகளிடத்திலாவது இந்தியா கவர்ன்மென்ட் ஏஜென்டினிடத்திலாவது தெரிவித்துக் கொள்ளலாம்.

இந்தியா கவர்ன்மென்ட் ஏஜென்டின் மேல்விலாசம்:-
இந்தியா கவர்ன்மென்ட் ஏஜென்ட், 1-ம் நெ., க்ளார்க் ஸ்டட்ரீட், குவாலாலம்பூர், 59-ம் நெ, தபால்பெட்டி.

 

 

 

உன்னதம் 20 வது இதழில் (மார்ச் 2009) வெளிவந்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!