home கட்டுரை, புதிய அலை இண்டிபென்டென்ட் திரைப்படங்களின் இயக்குனரா நீங்கள்?

இண்டிபென்டென்ட் திரைப்படங்களின் இயக்குனரா நீங்கள்?

 • பால் ஓஸ்போர்ன்

 

சுயாதீன (Independent) திரைப்படங்களின் இயக்குனரா நீங்கள்?

அப்படியென்றால் செலவில்லாமல் விளம்பரம் செய்ய சில சிறப்பான யோசனைகள்!

உங்கள் படம் வேலைகளெல்லாம் முடிந்து தயாராக இருக்கிறது. திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருப்பீர்கள், வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் விற்பனை (வீடியோ ஆன் டிமாண்ட்) செய்யும் விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் போட்டிருப்பீர்கள்.

நீங்கள் அந்த ஒப்பந்தங்களைப் பற்றி சிந்திக்கும் வேலையில் உங்களை உறைய வைக்கும் இந்த வரிகள் உங்கள் காதுகளில் கேட்கும்:

“இயக்குனர்கள்தான் படத்தின் விளம்பரம் மற்றும் பிரபலத்திற்கு முழு பொறுப்பு.”

இந்த வார்த்தைகள் இப்போது மிக இயல்பானவை. ஏனெனில் ஏறக்குறைய அனைத்து டிஜிட்டல் விநியோகஸ்தர்களும் விற்பனைக்கான அனைத்து வேலைகளும் இயக்குனர்களுடையதாக நினைத்துக்கொள்கிறார்கள் ஆனால் விளம்பரம் மற்றும் விற்பனைக்கான வேலைகளுக்கு எந்த வகையிலும் துளி கூட ஆதரவு தருவதில்லை. ஆமாம், உங்களால் இந்த விநியோகஸ்தர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு உங்கள் படத்தை நீங்களே யு டியூப்பிலும் விமியோவிலும் வெளியிட முடியும், ஆனால் உங்களுடைய படம் பெருமளவில் கொண்டாடப்பட வேண்டும் — உங்களுடைய நீண்ட பயணத்தின் நோக்கம் அதுதான். — அதற்கான வேலைகளை நீங்கள் உங்கள் தோள்களில் சுமந்துதான் ஆக வேண்டும்.

விநியோகஸ்த நிபுணர்கள் பலர் சுயாதீன படங்களின் பட்ஜெட்டில் பெருமளவு – 10 சதவீதம் — விளம்பரம், வெளியீடு சம்பந்தமான வேலைகளுக்குத்தான் ஒதுக்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்கள். உண்மையில் இது மிகச்சிறந்த யோசனை. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் பெரும்பாலான சுயாதீன திரைப்படங்கள் ‘மைக்ரோ பட்ஜெட்’ வகைமைகளில்தான் இருக்கின்றன. படமே அவ்வளவு சிறிய செலவில் எடுக்கும்போது, படத்தை முடிப்பதற்கே அது போதாது, ஒவ்வொரு ரூபாயாகப் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டியிருக்கும். அதிலும், அதிர்ஷ்டவசமாக, மாயமந்திரமாக, அதில் பத்து சதவீதத்தை மீதம் பண்ணிவிட்டாலும், நிச்சயம் அந்தத் தொகை விளம்பரம் மற்றும் பிரபலப்படுத்துவதற்கான செலவுகளை சமாளிக்க முடியாது.

நீங்கள் நம்பிக்கையிழந்து விரக்தியடைவதற்கு முன் இதை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள், அதற்கான அங்கீகாரத்தைப் பெறவும் அதே போல் நீங்கள் பாடுபட்டாக வேண்டும். உங்களுக்காக, செலவில்லாத விளம்பர பிரச்சார உத்திகள் இதோ இங்கே. இவற்றை ஒரு பிரம்மாண்ட அரங்கில் உங்களுடைய படத்தைக் கொண்டு செல்வதற்கான அழகுபடுத்தல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான தொடக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

உத்திகள்

வின்ஸ்டீன் சகோதரர்களால் துவக்கப்பட்ட ‘மிராமேக்ஸ்’ என்னும் விநியோக நிறுவனம்  இன்று டிஸ்னியின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக வளர்வதற்கு பல ஆண்டுகள் ஆனது. — வின்ஸ்டீன் சகோதரர்கள் புத்திசாலித்தனமாக ஒரு விஷயத்தை உணர்ந்தார்கள், படத்தைப் பற்றி செய்திகளில் கொண்டுவருவதற்கு போராடுவதைவிடவும் விளம்பரங்கள் செய்வதற்கான பல சாத்தியங்களைக் கண்டறியவும் அதற்கு பெரும் பொருட்செலவை செய்யவும் தயாரானார்கள். செய்தியாளர்கள் வியாபார அம்சங்கள் நிறைந்ததாகவே பெரும்பாலும் எழுதி வெளியிடுவார்கள், அதைவிட விளம்பரத்திற்கென்று ஒரு குழுவை வைத்து அதை நாமே செய்வது குறைவான செலவுதான்.

அதுவே இப்போது உண்மையாகியிருக்கிறது. உங்களுடைய படத்தைப் பற்றி சிஎன்என் தொலைக்காட்சி பேசுகிறதென்று வைத்துக்கொள்வோம், அதே சமயம் ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் உங்கள் படத்தைப் பற்றிய செய்திக்காக தவம் கிடக்கிறார்கள். இன்று, பெரும்பாலான சினிமா ரசிகர்கள் ட்ரெயிலரை திரையரங்குகளில் பார்ப்பதே இல்லை. இணையதளங்களிலேயே  பார்க்கிறார்கள். — விலைக்குப் போடுகிற விளம்பரங்களில் பார்ப்பதில்லை. ஆனால் செய்திக் கட்டுரைகளில் படிக்கிறார்கள். ஸ்டூடியோக்கள் இணையதளங்களுக்கு அனைத்து விளம்பர அம்சங்களையும் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்திருக்கின்றன (முன்னோட்டங்கள், கவனத்திற்கான இடங்கள், விளம்பர பக்கம், வீடியோ துணுக்குகள்), அவற்றை செய்திக் கட்டுரைகளாகவும் மாற்றுகின்றன.  உங்களுடைய சுயாதீன ட்ரெயிலருக்கு, டாம் குரூஸ்சின் புதிய படத்திற்கு கிடைப்பது போல பெரிய சேனல்களில் கவனம் கிடைக்காத போதும், உங்களுக்காகவே ஆச்சர்யப்படத்தக்கவகையில் அவற்றைப் பற்றி எழுதுவதற்கு எண்ணற்ற தளங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன, அதனால் கவலைப்படவே தேவையில்லை.

இதற்கெல்லாம் அப்பால், செலவு செய்து விளம்பரம் செய்வது ஒரு படி மேலான பிரச்சாரம்தான், (உங்களுடைய செலவில்லாத விளம்பரங்களால் போதுமான மக்களை சென்றடையாத பட்சத்தில், உங்களுடைய படத்தின் தன்மையைப் பொறுத்து முடிவு செய்யலாம்), செய்தியாளர்களின் கவனத்தைப் பெறுவதில் முயற்சி செய்துகொண்டிருக்க வேண்டும். எனவே உங்களிடம் செலவு செய்ய குறிப்பிட்ட தொகை இருந்தால், ஒரு விளம்பரதாரரை வேலைக்கு அமர்த்துவதுதான் மிகச்சிறந்த யோசனை, அதுவும் சுயாதீன படங்களைப் பற்றிய அனுபவமிக்கவராக இருந்தால் மிக நன்று. இந்தக் கட்டுரையைப் பொறுத்தளவில், மன்னித்துவிடுங்கள், நாங்கள் உங்களை நயா பைசா இல்லாதவராக அனுமானித்துக்கொள்கிறோம், உங்களுடைய படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான உத்திகளை இக்கட்டுரையில் உங்களைப் போன்றோருக்காக விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் படத்தைச் செலவில்லாமல் விளம்பரப்படுத்த,

உங்களுக்குத் தேவையெல்லாம்,

 1. ஒரு புதிய முன்னோட்டம் (ட்ரெய்லர்)

நீங்களும், பிற இயக்குனர்களைப் போலவே உங்கள் படத்திற்கு ஒரு ட்ரெயிலரை வைத்திருப்பீர்கள், ஒன்று உங்களுடைய பின்-தயாரிப்பு (போஸ்ட் புரொடக்‌ஷன்) வேலைகளின் போது உருவாக்கப்பட்டதும் திரைப்பட விழாக்களில் விளம்பரப்படுத்தப்பட்டதுமாக இருக்கும். ஆனால் நீங்கள் புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் ஏற்கனவே அதைப் பார்த்து சலித்தவர்களையும், புதிய வரவுக்காக காத்திருப்பவர்களையும்  உற்சாகப்படுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு உங்களுடைய பழைய ட்ரெயிலரை தூக்கி தூர எறிந்துவிட வேண்டுமென்பது அர்த்தமல்ல, ஆனால், அதைக் கொஞ்சமாவது கூர்ந்து கவனித்து எங்கு மாற்றத்தை செய்யலாம், எங்கு கொஞ்சம் தாக்கத்தையும் புதுமையையும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் துண்டலாம் என்று திட்டமிட வேண்டும்.

முதலில், உங்களுடைய ட்ரெயிலர் “உண்மையான ட்ரெயிலர்” தன்மையில் இருக்கிறதா என்று பாருங்கள் ஏனெனில்  பெரும்பாலான சுயாதீன இயக்குனர்கள் அப்படி செய்வதில்லை. எவ்வளவு ஓட்ட நேரம் அதற்கு இருக்க வேண்டும்? குறைந்தபட்சம் ஒரு படத்தின் ட்ரெயிலர் இரண்டரை நிமிடத்திற்கு மிகாது இருக்க வேண்டும். ட்ரெயிலரில் புண்படுத்தும் வசனங்களோ, ஆபாச காட்சிகளோ போதை மருந்துகளோ இருக்கிறதா? படம் பெரும்பான்மை பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென்றால், முடிந்தவரை இவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் அது படத்தின் கரு மற்றும் கதையை தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்குவதாக இருக்கிறது அல்லது அவை வசனங்களை வெட்டி வெட்டி போட்டதாக இருக்கிறதா?

இணையத்தில் ட்ரெயிலரை உருவாக்குவது பற்றிய பல சிறந்த கட்டுரைகள் உள்ளன, ஆனால் அதைப் பற்றிய ஒரு எளிய யோசனை: நீங்கள் படத்தை எடுப்பதற்கு முன்பு, உட்கார்ந்து கதையை எழுதுவீர்கள் அல்லவா. அதை உங்களுடைய தயாரிப்பாளர்கள், உங்களை ஊக்குவிக்கும் ஆதரவாளர்கள், அல்லது உங்கள் நடிகர்கள் ஆகியோரிடம் கொண்டு செல்வீர்கள் அல்லவா… உண்மையில், அடிக்கடி நீங்கள் அதனை அழகாக்க வேண்டியிருக்கிறது, அதை போலத்தான் இரண்டு நிமிடங்களுக்குள் அடங்கிய அழகான படத்தின் சுருக்கமாக அது இருக்க வேண்டும். உண்மையில் அதுதான் ட்ரெயிலர் —உங்களுடைய கரு, அதை சொல்லும் விதம், கிராஃபிக் சேர்ப்புகள் மற்றும் முக்கிய வசனங்கள் என ஒரு குறுந்தொகுப்பாய் அது இருக்கும். நீங்கள் கதையின் ஒவ்வொரு முக்கியமான புள்ளியையும், திருப்பங்களையும் அதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஆனால் படத்தின் கரு பற்றியும் அதன் போக்கையும் சொல்லும் தொடக்கமாக அது இருக்க வேண்டும்.

இறுதியாக, ட்ரெயிலருடன், திரைப்பட விஷயங்களின் பங்களிப்பு, விருதுகள், சிறந்த விமர்சனம் போன்ற “அங்கீகாரம்” சார்ந்த விஷயங்களை இணைப்பது நல்ல யோசனைதான். மூன்றாம் நபர்களின் பாராட்டுகளை மேற்கோள் காட்டுவதன் மூலம் உங்கள் படத்தை முக்கியமான ஒன்றாகக் காட்டலாம்.

 1. செய்தியாளர் சந்திப்பிற்கு தேவையானவை

இது உங்களுடைய படத்தின் கதைச்சுருக்கம், நடிகர்கள்/படக்குழுவினரின் தகவல்கள், செய்தியாளர்கள் அல்லது விமர்சர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு ஏதேனும் முக்கிய தகவல்கள் ஆகியவை உள்ளடக்கிய ஒரு பிடிஎஃப். சில சிறந்த பிடிஎஃப்களின் மாதிரிகள் வலைதளங்களில் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். அதைத் தயார் செய்து முடித்தவுடன், உங்களுடைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்வது போன்றும், விண்ணப்பத்தின் பேரில் செய்தியாளர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பவும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

 1. விளம்பரம் மற்றும் தயாரிப்பு உத்திகள்

நிச்சயமாக, நீங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது ஒருவர் அந்தப் படப்பிடிப்புத்தளத்தின் காட்சிகளைப் புகைப்படமாக்கிக்கொண்டிருப்பார், ஏனெனில் இப்போதைய காலகட்டத்தில் உங்களுக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட, சரியாக, 10 நல்ல புகைப்படங்கள் உங்களுக்கு கண்டிப்பாக தேவை. முக்கியமாக நடிகர்கள் நடிக்கும்போது எடுக்கப்பட்டவை. (அந்த வசதிகள் உங்களுக்கு இல்லையென்றால், பரவாயில்லை உங்களுடைய படத்திலிருக்கும் காட்சிகளையே இதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.) அச்சடிக்கப்பட்ட பிரதிகளை நீங்கள் உங்கள் வலைதளத்திலும் விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்துகொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

 1. வலைதள வெளியீடுகள்

உங்களுக்கு வீடியோ வலைதளங்களில் (YouTube or Vimeo)ஏற்கனவே கணக்குகள் இருந்தால் இது எளிதானது, அப்படி இல்லையென்றாலும், அது போன்ற வலைதளங்களில் உங்கள் படத்தின் சில நொடி சுவாரஸ்ய காட்சிகளை, தனிநபர் பாஸ்வோர்டு பாதுகாப்பு இணைப்போடு பதிவேற்றலாம்.

 1. செய்தி வெளியீடு

அடிப்படையில், இது உங்களுடைய படத்தின் விநியோகம் பற்றிய விரிவான தகவல் வெளியீடு. முக்கியமாக இது உங்களுடையப் படத்தின் வெளியீட்டு நாள் மற்றும் அப்படம் எதைப் பற்றி பேசுகிறது, எந்த மாதிரியான அனுபவத்தைத் தர இருக்கிறது என்பதையெல்லாம் உள்ளடக்கியது. இதற்கான மாதிரி பதிவுகளை வலைதளங்களில் ஒரு சிறு தேடல் செய்வது உங்களுக்கு உதவியாக இருக்கும், ஆனால் அவை மிகவும் எளிமையாகவும் சுருக்கமாகவும் இருப்பது நல்லது. ஏனெனில் இவற்றை நீங்கள் அனுப்பவது, ஏற்கனவே இவை போன்ற ஏராளமான செய்திகளைப் படித்து அலுத்து சோர்ந்து போன செய்தி ஆசிரியர்களுக்கு. ஆகையால் எவ்வளவு தெளிவாகவும் கச்சிதமாகவும் நீங்கள் உங்கள் தகவல்களைத் தருகிறீர்களோ, அதைப் பொறுத்து உங்களுடைய தகவல்கள் குப்பைக்குப் போகாமல் இருப்பதைத் தவிர்க்கலாம்.

 1. படத்தின் துண்டு காட்சிகள்

உங்களுக்கு ஒரு நிமிடத்திற்கு ஓடக்கூடிய படத்தின் துண்டு காட்சிகள் மூன்றிலிருந்து நான்குவரை அவசியம். உங்களுடைய முன்னோட்டம் போலவே, இவற்றில் உறுதியளிப்பதோ, நிர்வாண காட்சிகளோ, வேறு ஏதேனும் படைப்பை கெடுக்கும் அம்சங்களோ அல்லது கொடூரமான காட்சிகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், நீளமான காட்சிகளைக் கூட நீங்கள் சில நீக்கங்களைச் செய்து கச்சிதமாக்கலாம். இந்தக் காட்சி துண்டுகளுக்குக் கடைசியில் படத்தின் தலைப்போடு வெளியீட்டு நாள் மற்றும் படத்தை எங்கெல்லாம் பார்க்கலாம் என்ற தகவல்களையும் கொண்டு வாருங்கள்.

 1. கூடுதல் விளம்பர காட்சித் தொகுப்புகள்

உங்கள் படத்தைப் பிரபலப்படத்தும் நேரங்களில், உங்களுடைய விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டும், எனவே அவற்றை நீங்கள் உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எளிதான ஒரு வழி, உங்களுடைய முன்னோட்ட வீடியோவிலிருந்து 30 நொடிகள் ஓடும் அளவுக்குப் படத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டுவது போல கத்தரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். —அவற்றில், ஒன்று முழுக்க கதையைப் பற்றி, ஒன்று சண்டைக் காட்சிகள், மற்றொன்று விமர்சன கருத்துக்கள் என இருக்கலாம். உங்களுடைய படத்தில் பாடல் ஏதேனும் இருந்தால், அந்த இசை தொகுப்புடன் படக்காட்சிகளை இணைத்து உருவாக்கலாம். முடிந்தால் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகர்களின் வீடியோக்களையும் சேர்க்கலாம். நீங்கள் உங்களுடைய தயாரிப்பு வேலைகளை மட்டும்தான் காட்சிகளுக்கு அப்பாலான காட்சிகளாகப் பிடிக்கிறார்களா? ஏன் உங்களுடைய படைப்பின் உருவாக்கத்தையோ அல்லது உங்களுடைய நடிகர்களின் பேட்டியையோ பதிவு செய்யக் கூடாது? ஒருவேளை நீங்கள் எடுப்பது ஆவணப்படமாக இருந்தால், நீங்கள் நீக்கிய காட்சிகளை ‘வலைதளங்களில் வெகுமதி’களாக உலாவ விடலாம். ஆனால் அவை நான்கு நிமிடங்களுக்கு மிகாதவையாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

 1. தொடர்பாளர்களின் பட்டியல்

ஒரு அனுபவமிக்க விளம்பரதாரர் தன்னுடைய மேசையில் முதலில் வைத்திருப்பது ஒட்டுமொத்த செய்தியாளர்களின் பட்டியலாகத்தான் இருக்கும், அதாவது படங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுத தயாராய் இருக்கும் செய்தி நிலையங்களின் பட்டியல். விளம்பரதாரராக மாறியதிலிருந்து நீங்களும் உங்களுடையப் பட்டியலை தயார் செய்துகொள்ள வேண்டும். இதற்காக கூகுள் தேடலிலும் தேவையில்லாத மின்னஞ்சல்களிலும் நேரத்தைக் கழிப்பதற்கு முன் இங்கே கொஞ்சம் கவனியுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான தொடக்கம்:

முதலாவதாக, நீங்கள் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டுவிட்டீர்கள் என்றால் – அது சிறிய விழாவாக இருந்தாலும் கூட – நீங்கள் சில செய்தியாளர்களால் கவனிக்கப்பட்டிருப்பீர்கள், அவர்களும் உங்களைப் பற்றி எழுதியிருப்பார்கள். அவற்றில் உள்ளூர் செய்தித்தாள்கள், வலைப்பூக்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவர்கள் எல்லோருமே செய்தியாளர்கள்தான், உங்களுடையப் படத்தை கவனத்திற்கு கொண்டு வருவதில் ஆர்வமுள்ளவர்கள். உங்களைப் பற்றி எழுதிய செய்தியாளர்களின் பெயர்களையும் மின்னஞ்சலையும் முதலில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக, திரைப்பட விழாக்களையே எடுத்துக்கொள்வோம். சிறியதும், குறிப்பிட்ட பிராந்தியம் சார்ந்ததுமாக இருந்தாலும் அந்த விழாக்குழு ஏற்கனவே இது போன்ற சுயாதீன படங்களைப் பார்க்க ஆவலாயிருக்கும் (ஆயிரத்தில் பத்து பேர் கூட இல்லாமல் இருக்கலாம்) நபர்களின் மின்னஞ்சல் பட்டியல்களையும் சமூக வலைதளப் பக்கங்களையும் வைத்திருக்கும். நீங்கள் கலந்துகொண்ட ஒவ்வொரு திரைப்பட விழாக்களையும் அணுகி, அவர்களுடைய தகவல்களை வைத்துள்ளவர் யார் என்பதை கண்டுபிடியுங்கள். நினைவில்கொள்ளுங்கள், அவர்கள் திரையிட்ட படம் வெளியீட்டு வாய்ப்புகளை அடையும்போதுதான் அந்தத் திரைப்பட விழா சிறப்பானதாக தோன்றும், அதனால் அவர்களுக்கு உங்கள் பட வெளியீட்டை விளம்பரப்படுத்துவதிலும் ஒரு முக்கியமான நோக்கம் இருக்கிறது.

இறுதியாக, உங்களுடைய படத்தின் ஆதாரக்கருவை கவனத்தில் கொள்ளுங்கள். அது தனக்கென தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்கிக்கொள்ள வல்லதா, அல்லது, அது சமூக பிரச்னை ஒன்றை மையப்படுத்தியதாக இருக்கிறதா? உங்களுடைய படம் நாடு முழுவதும் பரவக்கூடியதாக இருக்குமானால், நாடு முழுவதும் கொண்டு செல்லக்கூடிய நிறுவனங்களை அணுக வேண்டும். அவர்கள் உங்கள் படங்கள் பற்றிய தகவல்களையும் உங்களுடைய விளம்பர மற்றும் முன்னோட்டக் காட்சி துண்டுகளையும் தங்களின் உறுப்பினர்களுக்கு அனுப்புவதிலும் அவர்களுடைய வலைதளங்களில் பதிவேற்றவும் ஆர்வமுடன் இருப்பார்கள். அந்த விளம்பர மற்றும் மக்கள் தொடர்பு நபரைப் பற்றி தெரிந்துகொண்டு அவரையும் உங்கள் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்.

 1. உங்களுடைய சொந்தக் கட்டுரைகள்

பல பெரிய பிரபலமான செய்தி நிறுவனங்கள் இயக்குனர்களையும் விருந்தினர் எழுத்தாளர்களாகப் பயன்படுத்துகின்றன, குறிப்பாக திரைப்பட தொழிலில் சம்பந்தப்பட்ட கட்டுரையாளர்கள். பல்வேறு விதமான பயனுள்ள கட்டுரை யோசனைகளுடன் நீங்களோ அல்லது உங்கள் குழுவிலிருந்து ஒருவரோ —உங்களுடைய நடிகர்கள், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் —பத்திரிகைகளில் எழுதுவதற்கு தயாராக இருக்க வேண்டும், சரியான நேரம் வரும்போது அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தக் கட்டுரை உங்களுடைய படத்தைப் பற்றியதாக இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. வித்தியாசமான பார்வை கொண்ட கட்டுரைகள் சில நேரங்களில் சிறப்பாக கைகொடுக்கும் ஏனெனில் வாசகருக்கு அக்கட்டுரை உங்களுடைய படத்தை விளம்பரம் செய்வதற்காக மட்டுமே எழுதப்படவில்லை என்ற உணர்வோடு அணுக உதவும்.

பத்திரிகை நிறுவனங்கள் உங்கள் கட்டுரைகளுக்கு செவிமடுக்காவிட்டாலும்கூட, பரவாயில்லை, கட்டுரையைத் தொடர்ந்து எழுதுங்கள். கடைசி நேரத்தில் நீங்கள் அதை வலைப்பூக்களில் கூட வெளியிட்டு வலைதளங்களில் உலாவுபவர்களைச் சென்றடையலாம்.

 1. கூடுதல் மதிப்புக்கூட்டு விளம்பரப் பிரச்சாரங்கள்

எல்லோருக்குமே இலவசமாய் கிடைப்பவற்றின் மீது ஒருவித ஆர்வமுள்ளவர்கள்தான், அதனால் அந்த வழியைப் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை. இதைச் செய்ய எளிதான வழி ஒரு போட்டித் திட்டத்தை அறிவியுங்கள். டி-ஷர்ட், போஸ்டர்களைக் கூட நீங்கள் விநியோகிக்கலாம்… உண்மையில், எவையெல்லாம் உங்கள் படத்தோடு தொடர்புடையவையாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் தாராளமாக நீங்கள் தரலாம், போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி இலவசமாக இருக்கட்டும். பொழுதுபோக்கு வலைதளங்கள் அனைத்துமே போட்டிகளில் மிகத்தெளிவாக செயல்படும். ஏனெனில், அவர்களுடைய வாசகர்களுக்கு அவை சில மாறுபட்ட விஷயங்களையும் தருகின்றன, அதனால் உங்களுடைய “பிரத்யேக” ஆதாரவாளராக ஒருவரைக் கண்டுபிடிப்பது மிக எளிது. நீங்கள் பரிசு கொடுத்தாலே போதும், அவர்களே அதனை விளம்பரப்படுத்திவிடுவார்கள்.

இன்னொரு வழி “மதிப்பு கூட்டு சேவைகள்”, அது கணக்கிடமுடியாத அளவுக்கு மக்களை சென்றைடைய வேண்டியது, அது குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினால் சாத்தியம். உதாரணத்திற்கு பட வெளியீட்டு நாளில் நீங்கள் உங்களுடைய பட இயக்குனரின் கருத்துகளைப் படம் பார்க்கும்போதே அனைவரும் பார்க்கவும் பதிலுரைக்கவும் ஏதுவாக ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் உங்களுக்கு படம் பார்த்ததற்கு சான்றாகத் தங்கள் டிக்கெட்டை அனுப்புவார்கள், பதிலுக்கு நீங்கள் உங்கள் கருத்துகளை அனுப்பலாம். இத்தகைய கூடுதல் ஊக்கத்தை மிகக்குறைவான செலவிலேயே பெற்றுவிட்டீர்கள்.  இப்போது உங்களிடம் எல்லாம் தயாராக உள்ளது.

அடுத்து என்ன?

இப்போது முக்கியமாக திட்டமிட வேண்டியதெல்லாம்,

எது, யாரை, எப்போது சென்றைடைய வேண்டும்?

பெரும்பாலான சுயாதீன இயக்குனர்கள் செய்யும் வழக்கமான தவறு, உருவாக்கிய அனைத்தையும் உடனே உடனே யோசிக்காமல் பதிவேற்றிவிடுவது. ஆனால் இப்படி வெறுமனே வலைதளங்களில் திட்டமிடாமல் கொட்டும் உங்களது விளம்பரங்களாலும் ட்ரெயிலர்களாலும் உங்கள் படத்தைப் பற்றிய கவனத்தை அதிகரிக்க முடியாது. உங்களுடைய பட வெளியீட்டு நாள் வரைக்குமான முறையான திட்டமிடலால் மட்டுமே அது சாத்தியம்.

விநியோகஸ்தர்கள் பலர் மிக நீண்ட பிரச்சாரங்களையே செய்வார்கள், அவை பெரும்பாலும் பட வெளியீட்டிற்கு முந்தைய இரண்டு மாதங்களுக்கு நடக்கும். பிறகுதான் பிரதான ட்ரெயிலரையே வெளியிடுவார்கள். ஆனால் சுயாதீன படங்களுக்கு தனிநபர் ஆர்வமானது குறைவாகவே இருக்கும். அதோடு நிதி நெருக்கடியும் உள்ளது, அதனால் உங்களுடைய விளம்பர காலத்தை ஒரு மாதத்திற்குள் அடக்கிக்கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். உங்கள் படத்தைப் பற்றிய ஆர்வத்தை உருவாக்க இந்த நேரம் போதுமானது, ஆனால் உங்களுடைய வருகையைப் பற்றிய உணர்வு மறைந்துவிடும் அளவுக்கு இந்த கால அளவு நீளமல்ல. (இதில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் கிட்டதட்ட மக்களின் கூட்டு நிதியத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்களின் விளம்பரங்களுக்கு செய்யப்படும் முயற்சிகள் போலத்தான், மேலும் ‘கிக் ஸ்டார்டர்’ தளமும் பொதுவான விளம்பர காலமாக 30 நாட்களைத்தான் பரிந்துரைக்கிறது.)

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு வாரமும் பரவலான மக்களைச் சென்று சேர உங்கள் படத்தைப் பற்றி புதிதாக உங்களிடம் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். மேலும் உங்கள் பட வெளியீட்டுக்கு முந்தைய வாரத்தின் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதேனும் ஒன்றை வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அந்த நேரங்களில், ஏதேனும் ஒரு தளம் (பத்திரிகையோ, இணையமோ)உங்களுடைய படத்தைப் பற்றி பேச தயார் என்றால், தயங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள், சுயாதீன படங்களை ஆதரிக்கவும் பேசவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் உங்கள் படத்தின் காணொளி உள்ள தளங்களின் இணைப்பை வழங்க வேண்டும், உங்கள் படத்தைப் பற்றிய செய்திக்குறிப்புகளையும் புகைப்படங்களையும் கொடுங்கள். ஆனால் முக்கியமாக, படம் வெளியாவதற்கு ஓரிரு நாட்கள் முன் வரையிலும் அந்த விமர்சனத்தை வெளியிடாதிருக்க வேண்டுமென்று கேட்டு உறுதி செய்துகொள்ளுங்கள். அவர்கள் படத்தின் விமர்சனத்தை வெளியிடும்போது, வாசகர்கள் அதைப் படிப்பதற்கும் படத்தைப் பார்ப்பதற்குமிடையிலான இடைவெளி மிகக்குறைவாக இருக்க வேண்டும்.

வெளியீட்டிற்கு நான்கு வாரங்களுக்கு முன்:

முதல் தொடக்கமாக உங்கள் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உங்கள் படத்தைப் பற்றி ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிடுங்கள், குறிப்பாக செய்தி நிறுவனங்களுக்கும் திரைப்பட விழாக்களுக்கும் வித்தியாசமான பிரத்யேக செய்தியோடு  அனுப்புங்கள்.  உங்களுடைய செய்தி வெளியீட்டோடு, புதிய ட்ரெயிலர் ஒன்றின் இணைப்பையும் சேர்த்து அனுப்புங்கள். உங்களுடைய ட்ரெயிலரை அவர்களுடைய தளங்களிலும் பதிவேற்ற நீங்கள் கோரிக்கை வைக்கலாம், ஆனால் அந்தத் தகவலை விரிவாகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும். இது ட்ரெயிலருக்காக மட்டுமல்ல எதிர்காலத்தில் அனைத்திற்கும் இதே செயல்முறைதான்.

நேரத்தைப் பெருமளவு உறிஞ்சினாலும், ஒவ்வொரு மின்னஞ்சலையும் தனித்தனியே அனுப்புவது என்பது முக்கியம். நீங்கள் ஒட்டுமொத்தமாக மின்னஞ்சல்கள் அனுப்புவதைத் தவிர்க்கும்போது உங்களைப் பற்றிய அவர்களின் கவனம் சிதறாமல் இருக்கும், பத்தோடு பதினொன்றாகத் தவிர்க்கப்படுவதைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு தளமும் உங்களைப் பற்றி வித்தியாசமாக எழுதும்போது நீங்களும் அவர்களோடு உங்கள் உறவை தனிப்பட்டமுறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று வாரத்திற்கு முன்:

இந்த வாரத்தில்தான் நீங்கள் உங்கள் “மதிப்பு கூட்டு” விளம்பர பிரச்சாரங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் போட்டி நடத்துவதாக இருந்தால், உங்களுடைய ட்ரெயிலர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு வலைதளத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அதை ஒப்படைத்துவிட வேண்டும். ஒரு சரியான பங்குதாரரைக் கண்டுபிடிப்பதுதான் அதிகபட்ச பங்கேற்பாளர்களைக் கொண்டு வருவதற்கு மிக முக்கியம்.

மேலும், இந்த நேரத்தில் நீங்கள் எழுதிய செய்தி துணுக்குகளை தகுந்த வலைதளங்களுக்கு அனுப்புங்கள், பத்திரிகைகள் என்றால் அவற்றை குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் படம் வெளியாவதற்கு முந்தைய வாரம் வெளியிடுமாறு கேட்பதில் கூச்சப்படாதீர்கள். இது விளம்பரத்திற்காகதான் என்பது எல்லோருக்குமே தெரியும்.

கடைசியாக, கூடுதலாக ஒரு விடியோவைப் பதிவேற்றுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்ய திட்டமிடுங்கள்.

இரண்டு வாரத்திற்கு முன்:

உங்களுடைய பட்டியலில் இருக்கும், நேரலை மற்றும் இணைய வானொலி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, நீங்களோ அல்லது உங்கள் குழுவிலிருந்து யாராவது நேரலையில் கலந்துகொண்டு பேச முடியுமா என்று கேளுங்கள். இரண்டு வாரங்கள் இருக்கும் நேரத்தில்தான் பேட்டிகள் போன்றவற்றை கொடுக்க வேண்டும். உங்களுடைய வீடியோ துண்டுகளை வலைதள செய்தி நிலையங்களுக்குப் பிரத்யேகமாகக் கொடுக்க வேண்டும், மீண்டும் கடந்த வாரத்தைப் போலவே இன்னொரு புது வீடியோவை உருவாக்கி வெளியிடுங்கள்.

படம் வெளியீட்டுக்கு முந்தைய வாரம்:

உங்களுடைய நேரம் சரியாக இருந்தால், நீங்கள் எழுதிய கட்டுரைகளும், வீடியோ துண்டுகளும் கூட பிரத்யேகமானவையாக மாறலாம், உங்களுடைய படக்குழுவினரின் பேட்டிகளை இணையத்திலும், வானொலியிலும் பரவவிடலாம், நீங்கள் விஷயம் தெரிந்தவராக இருந்தால், தொலைக்காட்சிகளிலும் கூட வருவீர்கள். விமர்சனங்கள் இந்நேரத்தில்தான் சூடுபிடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

உங்களுடைய ட்ரெயிலர்கள், செய்திகள், கட்டுரைகள், காணொளிகள் மற்றும் விமர்சனங்கள் அனைத்திற்குமான இணைப்புகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும், உங்களுடைய படக்குழுவினர், திரைப்பட விழாக்குழுவினர் மற்றும் வலைதளங்களிடம் அவற்றை மீள்பதிவு செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புது வீடியோவை பதிவேற்றுங்கள். நீங்கள் போட்டிகளை நடத்தியிருந்தால், வெற்றியாளரை அறிவியுங்கள்.

படம் வெளியீடு அன்று:

உங்களுடைய மிக முக்கியமான நாள் வந்துவிட்டது. ஒரே ஒரு கடைசி வீடியோ துண்டையாவது நீங்கள் பதிவேற்றியாக வேண்டும், உங்கள் கணினியின் முன்னாள் அமர்ந்துகொண்டு, நீங்கள் காற்றில் சுண்டிவிட்ட அத்தனை பந்துகளையும் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால், கடைசியாக ஒருமுறை உங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லி ஒரு மின்னஞ்சலை அனுப்புங்கள். நீங்கள் அடுத்த படத்தை எடுத்து முடித்திருக்கும்போது, மீண்டும் அவர்கள் உங்களுக்குத் தேவைப்படலாம்.

 

பால் ஓஸ்போர்ன் சுயாதீன (Independent) திரைப்படங்களின் இயக்குனர், திரைக்கதையாளர் மற்றும் தயாரிப்பாளர்.

 

தமிழில் : ஜெய சரவணன்

நன்றி :  Movie Maker

2 thoughts on “இண்டிபென்டென்ட் திரைப்படங்களின் இயக்குனரா நீங்கள்?

 1. மிகவும் பயனுள்ள அற்புதமான கட்டுரை. Marketing is must for any type of movie.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!