home டிரெண்டிங், நேர்காணல் இருண்ட உளவியலுக்கான இடம் சிறுகதைகளாகும்…

இருண்ட உளவியலுக்கான இடம் சிறுகதைகளாகும்…

சாரா ஹால் உடன் ஒரு நேர்காணல்

 

சாரா ஹால் புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இடம் பெற்றவர், வன இயற்கைக்காட்சிகள் மீதும் இயற்கை உலகின் மீதும் கூரிய கவனம் கொண்டவர், The Electric Michelangelo மற்றும் The Wolf Border புத்தகங்கள் மூலம் பல ரசிகர்களைப் பெற்றவர் இந்த எழுத்தாளர். இவருடைய சமீபத்திய சிறுகதைகள் தொகுப்பான Madame Zero வில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் எல்லாம் மாறுபடக்கூடிய மனநிலைகளிலும், புதிய சவால்களை சமாளிப்பதைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

“இருண்ட உளவியலுக்கான இடம் சிறுகதைகளாகும் ” என்று சொல்லும் இந்த தற்கால நாவலாசிரியை, மிகப்பெரிய தடுமாற்றம் தரக்கூடியக் கதைகள், பாலியல், அவருடைய குமுறல் நிறைந்த குடும்ப வாழ்க்கை, குறிப்பாக சிறுகதைகள் எழுதுவது ஏன் கடினமான ஒரு கலை என்பது குறித்தெல்லாம் பேசுகிறார்.

கார்டியன் இதழுக்காக நேர்காணல் கண்டவர் : வனேசா தோர்ப்

 

சிரமப்படக்கூடிய அடையாளங்களைக் கொண்டதாக இருக்கும் இந்தப் புத்தகம் உங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறதா?

உங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனும் நீங்கள் அதற்கு முன்பு இருந்தது மாதிரிதான் இருப்பீர்கள் என நினைத்தால், அது சுத்த அபத்தமான ஒன்றாகும். இரண்டு வருடங்கள் எனக்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. ஏனென்றால், நான் குழந்தையை பிரசவித்ததோடு என்னுடைய அம்மாவும் நீடித்த நோயினால் பீடிக்கப்பட்டவராக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. எனவே, நான் இருவகையான சூழ்நிலையை எனது மகளின் அப்பாவிடமிருந்து பிரிந்த பிறகு ஒற்றைப் பெற்றோராக எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அவள் பிறப்பதற்கு முன்பாக எந்தக் கதையை எழுதினேன், அவள் பிறந்த பிறகு எந்தக் கதையை எழுதினேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவளுக்கு இரண்டு வயது, எனவே நான் வேலை செய்வதற்கான தருணங்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்ததால் அது மிகவும் கடினமாக இருந்தது.

 

நீங்கள் கும்ப்ரியாவில் வளர்ந்தவர், எனவே வனத்தைப் பற்றியும் மிருகங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். நகர்புறமான நார்விக்கில் வசித்து வருவது வித்தியாசமாக இருக்கிறதா?

எனக்கு திறந்த நிலப்பரப்புகளும் பிடிக்கும், நான் அங்கு இல்லாவிட்டாலும் அதைப் பற்றி எழுத விரும்புவதுண்டு. எனக்கு கொஞ்ச தூரம் தேவைப்படுகிறது. எனது மகள் ஒரு பிரியமான பிராணியை வைத்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், ஆனால் நாய் வைத்திருப்பவர்கள் அவர்களோடு ஒரு சிறிய பையை கூடவே எடுத்துச் செல்வதைப் பார்த்தால் `பெட்’ வைத்திருப்பது நகரத்துக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. நாங்கள் சிறுமிகளாக இருந்தபோது `பெட்’ வைத்திருந்தோம். அது ஒரு கிராமப் பகுதி என்பதால் அங்கு குதிரைகளும் இருந்தன. நான் அதிகமாக நீச்சலடிப்பதுண்டு. அதிலும் இயற்கையான ஆறு, ஏரிகளில் நீச்சலடிப்பது சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன். தண்ணீர் சுத்தமாக இருப்பதாகத் தெரிந்தால் நான் அதில் நீச்சலடிக்க உள்ளே இறங்கிவிடுவேன்.

 

உங்களுடைய கதைகள் பெரும்பாலும் ஒரு தனிப்பட்ட வலுவான கருத்தையே மையம் கொண்டிருப்பதாக இருக்கிறது. அது உங்களுக்கு அப்படித்தான் வருகிறதா?

சிறுகதைகள் ஒரு சக்திமிக்க வடிகட்டுதலாக இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு. அது ஒரு இருண்ட உளவியலுக்கும், வீரியமிக்க இலக்கிய அளவுக்குமான இடமாகும். நான் ஆரம்பிக்கும் போது வழக்கமாக அது சிந்தனையிலிருந்து அல்லது நான் கேட்ட செய்தி அதற்கு ஒரு வடிவத்தை கொடுப்பதிலிருந்து வரும். மேலோட்டமாக தெரியாத ஆனால் உங்களுக்கு பெரிய தடுமாற்றம் தரக்கூடிய கதைகளை படிக்க நான் விரும்புவதுண்டு. மென்மையாக இருப்பதை நான் விரும்புவதில்லை.

 

கருத்தைக் கவர்கின்ற பிம்பங்கள் உங்களுடைய படைப்புகளில் பெரிதாகத் தெரிகிறது, குறிப்பாக மனைவிக்கு உடல்ரீதியில் ஏற்படும் மாற்றம் பற்றி இந்தத் தொகுப்பிலிருக்கும் பரிசு பெற்ற ஆரம்பக்கதை, Mrs Fox. நீங்கள் கனவுகளால் தூண்டப்படுகிறீர்களா?

நான் கலை வரலாற்றில் பட்டம் பெற்றவள் என்பதால் அது இதன் ஒரு பகுதியாக இருக்கக்கூடும். காய்ச்சலின் போது ஏற்படும் கனவுகள் போல் நான் என்னுடைய சில கதைகளை உணர்வதுண்டு, ஆனால் நீரோட்டம் திரும்பும் சமயத்தில் ஏற்படும் உணர்தல் தருணங்களிலிருந்து அது வருவதுண்டு, சில உண்மையான கனவுகளிலிருந்து வராமல் தவறாகப் போய்விடுவதுமுண்டு.

 

சிறுகதை என்பது கருத்தை எளிமையாக்குவதா அல்லது புதிரை உருவாக்குவதா?

சிறுகதைத் தொகுப்பு என்பது ஒரு தோழமையான விஷயமாகும். ஏனெனில், வாழ்க்கை ஏதோ ஒருவிதத்தில் சிரமமானது என்பதை அது புரிந்து கொண்டிருக்கிறது. நாமெல்லாம் மனிதர்கள் என்கிற உண்மையிலிருந்து சிறுகதைகள் அதனுடைய கண்களை எடுப்பதில்லை. அவை கட்டளை பிறப்பிக்காவிட்டாலும் கூட அவற்றை எழுதுவது சிரமமாகும். நீங்கள் சொற்களின் எண்ணிக்கையால் வரையறுக்கப்பட்டால் அது மிகவும் கடினமாகும். நான் போதுமான கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன். உங்களிடம் பதிலெதுவுமில்லை.

 

பாலியல் குறித்த உங்களது எழுத்து ஒரு பெண்ணியக் கூற்றா?

நான் பாலியல் குறித்து எழுத விரும்புகிறேன். ஏனெனில், அது ஒரு சிக்கலான விஷயம் என்பதோடு எனக்குப் பரிட்சயமான ஒன்றுமாகும். அது ஒரு பகிர்வுக்கான விஷயமாக இருந்தாலும் கூட உங்களுடைய தலைக்குள் ஓர் இடமாக இருக்கிறது. இவை ஒரு உடல்ரீதியிலான விஷயம் என மிகவும் எளிதாக ஆண்கள் சொல்லக்கூடும். எனக்குத் தெரியாது. ஆனால் உறுதியாக பெண்களுக்கு சமூகரீதியில் நூற்றாண்டுகளாக பாரபட்சம் இருந்து வருகிறது. பெண்களின் விடுதலைக்கான ஓர் அங்கமாக பாலியல் இருப்பதுதான் எனது பிரச்சனை. ஏனென்றால், விடுதலை என்பது அதற்கும் மேலானது.

 

நீங்கள் எழுதும்போது வெற்றி உங்களை சுய விமர்சகராக உருவாக்குகிறதா?

சிறுகதையைப் பொருத்தவரையில், அளவு திருத்தம் என்பது முதல் வரைவிலேயே சரியாக இருக்க வேண்டும். நான் கடிகாரத்தோடு போட்டி போடுகிறேன் என்றால் நான் உண்மையிலேயே கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நாவலைப் பொருத்தவரையில், சில சமயங்களில் அது சரியாக வேலை செய்யாமல் போகலாம். எனவே, ‘எடிட்டரும்’ எனது மூளையின் ஒரு பகுதி என்பதால் சில வேளைகளில் ஒரு வாக்கியம் கூட என்னால் எழுத முடிவதில்லை

 

எழுதப்பட்ட உங்களுடைய உரையாடல்கள் உதிரியாகவும், மிகவும் வலுக்கட்டாயமாகவும் இருக்கிறது. நீங்கள் சிறிய உரையாடல்களும் செய்வதுண்டா?

நார்விக் ஒரு தோழமை உணர்வு கொண்ட இடம் என்பதால் மக்களிடம் பேசுவதற்காக நான் நிற்பதுண்டு, ஆனால் டின்னர் பார்ட்டிகளில் மிகவும் பிரகாசிக்கக்கூடிய நபராக நான் கருதப்படுவதில்லை. அல்லது சிறந்த வேடிக்கைக்காரியாகப் பார்க்கப்படுவதுண்டு. எனவே நான் வாழ்க்கையில் அப்படி இருப்பதற்குப் பதிலாக எனது பக்கங்களில் அப்படி இருக்கிறேன்: வெளிப்படுத்திக் கொள்வதற்கு அது ஒரு சிறந்த இடமாகும். ரெளடி குடும்பத்தினரால் வளர்க்கப்படாமல் குழந்தையாக இருக்கும் போது மூர்களுடன் நான் சுற்றித் திரிந்தது கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். என்னுடைய மூத்த சகோதரன் எப்போது மரம் ஏறிக் கொண்டேயிருந்தான்.

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!