home கட்டுரை, டிரெண்டிங் ஈராக்கிய பிராங்கென்ஸ்டைன் நாவல் 

ஈராக்கிய பிராங்கென்ஸ்டைன் நாவல் 

 

 

அகமது சாதவியுடன் ஒரு நேர்காணல்

 

மிகவும் விரும்பப்படுகிற புகழ்பெற்ற அரபு புனைவிலக்கியப் பன்னாட்டு விருதிற்கான இந்த ஆண்டு சுருக்கப்பட்டியலில் ஈராக்கிய நாவலாசிரியரான அகமது சாதவி இடம்பிடித்ததொன்றும் வியப்பிற்குரியதில்லை. இளம் நாவலாசிரியரான அவர் அவரது மூன்றாவது நாவலான ‘பாக்தாதில் பிராங்கென்ஸ்டைன்’ (2013) வெளியிடப்பட்ட உடனேயே பெரும்புகழ் பெற்றார். அந்த நாவல் கந்தை மற்றும் எலும்பு மனிதனான, ஹாதி அல்- அட்டாக் 2005 இல் உள்நாட்டுப் போரின்போது பாக்தாத் தெருக்களில் மானுடப் பிணம் ஒன்றினை ஒன்றுசேர்த்து ஒட்டித் தைப்பதற்காக, புத்தம்புதிய மனித உடலுறுப்புகளைத் தேடியலையும் கதையினை நடுங்கும் திகிலுடன் விவரிக்கிறது. பணி முடிவடைந்ததும், ஒட்டிச் சேர்க்கப்பட்ட பிணம் அதன் உடம்பில் இணைந்திருக்கும் உறுப்புகளுக்குச் சொந்தமானவர்களின் சார்பில் பழிவாங்கும் செயலில் குதிக்கிறது.

கவிஞர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான சாதவி ‘கெட்ட பாடல்களின் நூற்றாண்டு’ (2000) என்னும் கவிதைத் தொகுதியுடன் ‘அழகான நாடு’ (2004) மற்றும் ‘உண்மையிலேயே அவன் கனவு காணுகிறான் அல்லது விளையாடுகிறான் அல்லது மரணிக்கிறான்’(2008) என்ற இதர இரண்டு நாவல்களையும் படைத்தவர்.

வெற்றிகரமான மேன் புக்கர் விருது போன்று வடிவமைக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும்  ஐ.பி.ஏ.எப் இலக்கிய விருது உயர்தர அரபுப் புனைவினை அங்கீகரித்து ஊக்கமளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டின் விருதுக்கான ஆறு நபர் சுருக்கப்பட்டியல் 150 மனுக்களின் ஆவணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டு ஏப்ரல் 29, 2014 அன்று அபுதாபியில் அபுதாபி பன்னாட்டு புத்தகக் கண்காட்சியின் போது பாக்தாதில் பிராங்கென்ஸ்டைன் நாவலுக்கு வழங்கப்பட்டது. சுருக்கப்பட்டியலில் மற்றுமொரு ஈராக்கிய எழுத்தாளர் இனாம் கச்சாச்சி, இரண்டு மொராக்கர்கள், அப்துல் ரஹீம் லாபிபி மற்றும் யூசுப் பாதெல், ஒரு எகிப்தியர், அகமது மௌவ்ராது மற்றும் ஒரு சிரியர் காலேட் காலிஃபா ஆகியோர் இருந்தனர்.

அசார்க் அல் -ஆசாட், சாதவியுடன் இந்த நாவல் குறித்தும், அது அமெரிக்க ஆதிக்கத்திற்குப் பிந்தைய ஈராக்கினை எவ்வகையில்  தொடர்புறுத்துகிறது என்பது குறித்தும் அதேநேரத்தில் நாவலாசிரியர் என்ற முறையில் இந்த விருது எந்தவகையான விளைவினை ஏற்படுத்துமென்பது குறித்த அவரது எதிர்பார்ப்புகள் குறித்தும் விருது வழங்கும் 29.04.2014க்கு முன்னர் அரபு மொழியில் நிகழ்த்திய நேர்காணலின் சுருக்க வடிவமே இது.

 

அசார்க் அல் -ஆசாட் : ‘பிராங்கென்ஸ்டைன்’ என்பது பிரித்தானிய நாவலாசிரியர் மேரி ஷெல்லியின் பிராங்கென்ஸ்டைன் நாவலிலிருந்து எழுந்த ஒரு பொதுக் கருத்தாக்கம். அதுதான் ‘பாக்தாதில் பிராங்கென்ஸ்டைன்’ நாவலுக்கும் உந்துசக்தியாக இருந்ததா?

அகமது சாதவி : என்னுடைய நாவலில் பிராங்கென்ஸ்டைன் பற்றிய குறிப்புகள் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளன. ஜெர்மன் ஊடகவியலாளர் குறிப்பிடும் ஒன்று, மற்றொன்று பாகிர் அல் – சாயீதி குறிப்பிடுவது. இந்த இரண்டு குறிப்புகள் தவிர்த்து நாவலின் பாக்தாத் மக்கள் அந்த வினோத அரக்கப்பிறவியை ‘அதன் பெயரென்ன’ என்றோ ‘பெயர் எதுவுமில்லாத ஒன்று’ என்றோ தான் அழைக்கிறார்கள். அது பிராங்கென்ஸ்டைன் போலத் தோன்றுகிறதா இல்லையா என்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லாமலிருக்கலாம்.

அது எப்படியானாலும், ‘பாக்தாதில் பிராங்கென்ஸ்டைன்’ ஷெல்லியின் பிராங்கென்ஸ்டைனிலிருந்து வேறுபடுகின்ற ஒரு கருத்தாக்கம் பற்றிப் பேசுகிறது. இந்த நாவலின் பிராங்கென்ஸ்டைன் என்பது ஈராக்கின் இப்போதயப் பிரச்னைகளின் சுருங்கிய வடிவம். நாவல் நிகழ்கின்ற காலவரம்பில் ஈராக்கில் பிராங்கென்ஸ்டைன் போன்ற அதிபயங்கரத் திகில் சூழல் கடுமையாக நிலவியது.

 

அசார்க் அல் -ஆசாட் :  ‘அதன் பெயரென்ன’ பாத்திரம் பற்றி அல்லது எந்தவொரு குறிப்பிட்ட மனிதர் அல்லது பிறவியையும் பிரதிபலிக்காத அந்தப் பிணத்தின் ‘உன்னதப் பணிநோக்க’த்தின் தன்மையைப்பற்றிக் கூறுங்கள்.

அகமது சாதவி : ‘அதன் பெயரென்ன’ வுக்கு மூன்று விளக்கங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியான மூன்று உன்மத்த மனிதர்களில் ஒருவருடையது.

முதல் வாசிப்பில், அது, பல்வேறுபட்ட இனம், உட்பிரிவுகள் மற்றும் தொல்பண்பாட்டுக் குழுக்களைச் சேர்ந்த ஈராக்கியரின் உடலுறுப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளதால் ‘ அதன் பெயரென்ன’ முழுமையான ஒரு ஈராக்கியத் தற்காலத் தனிநபரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அடையாளங்கள் அனைத்தையும் உருக்கி ஒன்றிணைக்கும் ஒரு   உலோகக்கலத்தின் அபூர்வமான ஒரு மாதிரி தான் ‘அதன் பெயரென்ன’. ஈராக், அது நிறுவப்பட்ட இருபதாம் நூற்றாண்டிலிருந்தே இந்தச் சீரழிவுச் சிக்கலில் அதிகமாகவே அவதிப்படுகிறது. சதாம் உசேனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபின் ஈராக்கிய தேசிய அடையாளப் பிரச்சினை மிகக் கடுமையாக வெடித்துக்கிளம்பியது.

இந்த நாவலை வாசிக்கும் மற்றொரு முறை, பாதிக்கப்பட்ட அனைவரின் சார்பிலும் பழிவாங்கும் அந்த அரக்கப்பிறவியின் விருப்பத்தை அங்கீகரித்து, அது, ஒரு மீட்பரைப் பிரதிபலிப்பதாகக் கொள்வது. ஈராக்கில் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயிருக்கும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதென்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும் பாதிப்புக்குத் தக்க பரிகாரம் வழங்குவதுதான். இங்கே, பரிகாரம் வழங்குவது என்ற கருத்தாக்கத்தின் தத்துவப் பார்வை தனிமனிதன் ஒருவனின் கைக்குள் செல்வதை உணர்கிறோம். பரிகாரத்தின் இந்தக் கருத்தாக்கத்தைத் தான் நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த மாதிரியான ஒரு கருத்தாக்கமே அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் தனிமனித சர்வாதிகார உருவாக்கத்திற்கு இட்டுச் செல்வதாயிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, ஈராக்கில் இப்போதும் தனிமனித சர்வாதிகாரமே தொடர்ந்து நிலவுவதோடு, அது சதாம் உசேனின் எதேச்சதிகார ஆட்சியோடு முடிந்துபோனதாக இல்லை.

மூன்றாவது வாசிப்பு, அந்த அரக்கப்பிறவியை பெரும் அழிவுசக்தியின் மறுவடிவமாகப் பார்க்கிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதானால், சிறுபனிப்பந்து உருண்டு பெரும் பனிப்பாறைச் சரிவினை ஏற்படுத்தும் விளைவினையொத்த அழிவின் நாடகீயக் குறியீடாக ‘அதன் பெயரென்ன’ உருக்கொள்கிறது.

அசார்க் அல் -ஆசாட் :  ஈராக்கியப் போர் இலக்கியத்தின் பெரும் நீரோட்டத்திலிருந்து மாறுபட்டு ‘பாக்தாதில் பிராங்கென்ஸ்டைன்’  ஈராக்கியத் துன்பியல் துயரத்தை மிகைக்கற்பனை வாயிலாகக் கையாள்கிறது. உதாரணமாகச் சொல்வதெனில், நடப்பியல் வாழ்க்கையில் நாம் சந்திக்கவியலாத ‘மந்திரவாதி’ மெய்விளக்கியல் ஆசான் மற்றும் மூன்று பைத்தியங்கள் போன்ற மனிதர்கள் தாம் உங்கள் நாவலில் பாத்திரங்களாக உள்ளனர். இதுபற்றி உங்கள் வாதம்தான் என்ன?

அகமது சாதவி : ‘அதன் பெயரென்ன’வில் விவரிக்கப்படும் பத்தாம் அத்தியாயத்தில் காணும் இந்த பாத்திரங்கள் நடப்பியல் தன்மையைக் காட்டிலும் மேலதிகக் குறியீட்டுத் தன்மைகொண்டவைதாமெனினும், அவை ஈராக்கின் அச்சாணி மற்றும் அதிகார மையங்களுக்கு ஈடாகச் செயலாற்றுகின்றன. எடுத்துக் காட்டாக, பாகிர் அல் சயீதிக்கு இணையானவர் மெய்விளக்கியல் ஆசான்; அந்த மந்திரவாதி, ஈராக்கிய அரசுக்குப் பணிபுரியும் மாபெரும் நற்பேறு முன்கணிப்பாளரைப் போன்றவர்.

மிகைக்கற்பனைப் பயன்பாடு இந்த நாவலுக்கு மிகுந்தவொரு வாசக வரவேற்பினை அளிப்பதோடு நடப்பினை வழக்கமில்லாத ஒரு புதிய வகையில் கையாள்வதற்கான வாய்ப்பினையும் வழங்குகிறது. மிகைக்கற்பனையம்சம் இந்த நாவலுக்கு, அதன் கொடூரத்தைத் தணித்து, ஓர் எள்ளலுவகைச் சாயலினை அளிக்கிறது.

அசார்க் அல் -ஆசாட் : மூன்றாவது அத்தியாயம் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களின் ஆவிகள் அவற்றின் சிதைக்கப்பட்ட உடல்களைத் தேடுவது பற்றியதாக உள்ளது. அந்த மாதிரியான ஒரு விவரிப்பு இந்த நாவலினை ஈராக்கிய நடப்பிலிருந்தும் வெகுதூரத்துக்கு அந்நியப்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

அகமது சாதவி : இந்த அத்தியாயம், நாவல் கட்டுமானத்திற்கான ஒரு  முக்கிய பணியைச் செய்வதோடு, அலைகின்ற ஆவியொன்று ‘அதன் பெயரென்ன’ பிணத்தினுள் எப்படி நுழைகிறதென்பதை விவரிக்கிறது. அத்துடன், தாங்கள் நேசித்தவர்களின் துண்டு துண்டுகளாகச் சிதறிப்போன உடல்களைப் புதைக்கக் கூட இயலாமற்போனவர்களின் மனங்களுக்குள் என்னென்ன நிகழுமென்பதைப் பொதுவில் பிரதிபலிக்கிறது. தாங்கள் நேசித்தவர்களின் ஆவிகள், அவற்றின் உடல்களைத் தேடியலையுமென அவர்கள் நினைக்கிறார்கள். இன்னும் ஆழமாக, இந்த அத்தியாயம் சுட்டிக்காட்டுவது, வன்முறைக்கலவரம் மற்றும் குழப்பங்களின் போது பாதுகாப்பான ஒற்றைக் கணத்தைக்கூடக் காணமுடியாமல் நாம் எப்படி ஆவிகளைப் போல அலைகிறோம் என்பதைத்தான்.

அசார்க் அல் -ஆசாட் : பாதிப்படைந்தோர் சார்பில் பழிவாங்குவதற்காக, ஈராக்குக்குத் தற்போது பிராங்கென்ஸ்டைன் போன்ற அரக்கத்தன்மை தேவைப்படுகிறதா?

அகமது சாதவி : இல்லை, நிச்சயமாக அப்படி இல்லை. அதற்கு எதிர்நிலையில் தான்,  நாவல் பேசுகிறது. நீதி உணர்வு, பல்லுக்குப் பல்,  பழிவாங்கல், தண்டனை போன்றவற்றில் நமது தனிநபர் தராதரங்களைத்தான் ‘அதன் பெயரென்ன’ பிரதிபலிக்கிறது. ஒரு குழுவுக்கு நீதியாக இருப்பது மற்றொன்றுக்கு அநீதியாகிறது.

ஈராக்கிய பிராங்கென்ஸ்டைன், ஒன்றுக்கொன்று பகைவர்களாகக் கருதிக்கொள்கிற வேறுவேறு குழுக்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டோரின் உடல் உறுப்புகளால் ஒன்றிணைக்கப்பட்டது. எனவே, இந்த பிராங்கென்ஸ்டைன் தன்னைத் தானே கொன்றுகொள்வதில் தான் முடிவடையமுடியும். அதையே இப்படியும் சொல்லலாம், ஒருவரையொருவர் கொன்றுகொள்கின்ற நடைமுறையின் கற்பனைப் பிரதிபலிப்புதான் ‘அதன் பெயரென்ன’. இந்தப் பாத்திரம், ஒரு தீர்வு என்பதைவிட மிகப்பெரும் சிக்கல் ஒன்றின் உருக்காட்சிப் பிம்பமாகவே இருக்கிறது.

அசார்க் அல் -ஆசாட் : உங்கள் நாவலின் பாத்திரமொன்று, “ நமக்கு நேர்ந்திருக்கிற துயரங்கள் எல்லாவற்றிற்கும் நமது பயம்தான் காரணம்” என்கிறது. இன்றைய ஈராக் மக்களை அந்த அளவுக்கா பயம் ஆட்கொண்டிருக்கிறது?

அகமது சாதவி : சதாம் உசேனின் ஆட்சி வீழ்ந்து, அமெரிக்கா ஆக்கிரமித்திருந்த முன் காலப்பகுதியில், அமெரிக்கப்படைகள் அவர்களின் இராணுவத் தளங்களுக்குள்ளேயே இருந்ததோடு, பாக்தாதின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக எதுவுமே செய்யவில்லை. நகருக்குள் பணி செய்ய ஒரு காவல்துறை அலுவலர் கூட இல்லை.

அந்த நேரத்தில், ஷியாக்கள் நிறைந்த ஊர்ப்பகுதிகளில் எவனொருவனுங்கூட சன்னி தீவிரவாதிகள் வருகின்றனரெனக் கூச்சலிட்டுக்கொண்டே வெடிச்சத்தத்தை விளைவித்துவிடமுடியும். வதந்தியா, உண்மையா எனத் தெரிந்துகொள்வதற்கு யாருக்குமே அக்கறையிருக்கவில்லை; ஏனென்றால் அந்தளவிற்கு பயம் அவர்களை ஆட்டிப்படைத்தது.

இன்னொரு பக்கத்தில், ஒரு முறை மோசுல் நகரில் ஷியாக்கள் வருகின்றனரென்ற வதந்தியால் சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டன; பின்னர் பார்த்தால் ஷியா பிரிவின் துருக்கியர் குழுவினரின் சவ ஊர்வலம் ஒன்று அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இப்போதும் பயமென்பது ஈராக்கியரைப் பல வடிவங்களில் பீடித்திருக்கிறது. அதனாலேயே 2006, 2007 உட்குழு வன்முறைக் கலவரத்தின் போது போராளிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஈராக்கியர் பலரும் சேவகம் செய்கிற நிலைக்குக் கொண்டு சென்றது. அந்தச் சமயத்தின்போது. மதச்சார்பற்ற அறிவிஜீவுகளும், தாம் மற்றும் தம் குடும்பங்களை மதம் சார்ந்த போராளிகள் தாம் காப்பார்களென நம்புவது சர்வசாதாரணமாகியிருந்தது.

அசார்க் அல் -ஆசாட் : உங்கள் நாவல் முழுவதும் ‘அதன் பெயரென்ன’ பிணத்தின் உடல், பாதிக்கப்பட்டவர்களோடு குற்றவாளிகளின் உடலுறுப்புகளையும் ஒன்றிணைத்துச் செய்யப்பட்டது போன்ற  எதிரெதிரான இரட்டைநிலைகள் நிறைந்துள்ளன. இந்த இரட்டைநிலைகளை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள்?

அகது சாதவி: ‘அதன் பெயரென்ன’வின் முரண்பாட்டு உருவாக்கமுறை நாம் வாழுகின்ற நடப்புநிலையைப் பிரதிபலிக்கிறது. இன்றைய கட்டத்தில் நம்மில் யாரொருவரும் வன்முறைச்சூழல் மற்றும் பாதிப்பு ஏற்படுத்துகின்ற நிலையில் தனக்கு எந்தவொரு வழியிலும் பங்கில்லை, நான் முழுமையாகப் பாதிக்கப்பட்டு மட்டுமேயிருக்கிறேன் எனக் கூறிவிடமுடியாது. ஒரு குழுவினருக்கு ஏற்பட்ட பாதிப்பின் வேதனையில், அவர்கள் வேறுபட்ட உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, மகிழ்ச்சி கொண்ட நிகழ்வுகள் குறித்து பல பத்திகளை, ஊடகங்களில் நான் எழுதியிருக்கிறேன். ஈராக்கியர்களாக  இந்தக் கணத்தில் நின்று, நாம் பெற்றுக்கொள்ளவேண்டிய பாடம் மற்றும் நீதிமுறையென்பது ”நம்மில் யாரொருவரும் பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமேயில்லை என்பதோடு பாதிக்கப்பட்டவர்கள் உருவாவதற்கு நாம் அனைவருமே ஒருவழியில் இல்லையென்றாலும் இன்னொரு வழியில் உதவியிருக்கிறோம்” என்பதை உணர்வுபூர்வமாக ஒப்புக்கொள்வதுதான்.

அசார்க் அல் -ஆசாட் : பாக்தாதில் பிராங்கென்ஸ்டைன் எந்தெந்த எழுத்துக் கட்டங்களைக் கடந்து வரவேண்டியிருந்தது?

அகமது சாதவி : எழுதி முடிக்கவே நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. நேர்காணல்கள், ஆய்வுகள், புகைப்படமெடுத்தல் மற்றும் செய்தி சேகரிப்பதிலேயே வெகுநீண்ட காலம் செலவிடவேண்டியிருந்தது. 2008 கோடையில் www.kikah.com தளத்தில் நாவலின் ஒரு துண்டுப்பகுதி வெளியானது. ஏப்ரல் 2011 இல் 40 வயதுக்குக் கீழுள்ள அரபு எழுத்தாளர்களில் சிறந்த படைப்பு என்ற தேர்வில் ப்ளூம்பெரியின் 39 பெய்ரூட்டில் இரண்டு அத்தியாய வரைவுகள் ஆங்கிலத்திலும் அரபிலுமாக வெளியிடப்பட்டன.

அசார்க் அல் -ஆசாட் : உங்கள் மூன்றாவது நாவல் அரபு புனைவிலக்கியப் பன்னாட்டு விருதுக்கான சுருக்கப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

அகமது சாதவி : வாசகர்கள் மத்தியில் நல்லதொரு பாதிப்பினை என் நாவல் ஏற்படுத்தும் என நான் எதிர்பார்த்தேன். உண்மை என்னவென்றால், ஐபிஏஎப் சுருக்கப்பட்டியல் வெளியாவதற்கு முன்னதாகவே இந்த நாவலின் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது. என் நாவல் மீது எனக்கு நம்பிக்கையிருந்தாலும் இந்த ஆண்டுக்கான போட்டி நுழைவுகளின் எண்ணிக்கை அதிகமென்பதால் முன்கணிப்பு என்பது கடினம்தான்.

இந்த நாவல் சுருக்கப்பட்டியலுக்குள் நுழைந்ததே முக்கியமான ஒரு நிகழ்வுதான் என்பதோடு அதனால் நாவல் நல்ல பிரபலமடைந்துள்ளது. இந்த நாவல் ஐபிஏஎப் 2014 விருது பெறுமானால்  தனிநபர் என்ற முறையில் எனக்கு முக்கியமான நிகழ்வுதானென்றபோதிலும் நவீன ஈராக்கிய நாவலுக்கும் பொதுவில் சிறப்பான மேம்பாட்டு நிலைதான்.

 

தமிழில் ச. ஆறுமுகம்

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!