home நேர்காணல், புதிய அலை ஈராக்கில் கவிதை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது

ஈராக்கில் கவிதை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது

ஜார்ஜ் வீடன் உடன் நேர்காணல்

 

நபீல் யாசின் தனது மனைவி நாடா மற்றும் மூன்று வயது மகனுடன் 1979ல் தன்னுடைய தாய்நாடான ஈராக்கை விட்டு வெளியேறினார். ஏனெனில் சதாம் ஹுசைனைப் பற்றிய அங்கதக் கவிதைகளை எழுதி வெளியிட்டது தான் காரணம்.

சதாம் ஹுசைனால் 1972ல் தேசத் துரோகி என முத்திரையிடப்பட்ட நபீல் யாசின் தொடர்ந்து ஈராக்கில் குடியிருந்த போது சதாம் ஹுசைனின் பாதுகாவலர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார். அப்போது நபீல் யாசின் எழுதுவதற்கும், பயணம் செயவதற்கும் ஏன் சிந்திப்பதற்கும் கூட தடை செய்யப்பட்டு உயிர் வாழ்வதற்கே தகுதியற்றவரானபடியினால் தன் தாய்நாட்டை விட்டு கடவுச் சீட்டோ, மற்றெந்த அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வெளியேறி லெபனான், ஜெர்மனி என மூன்று ஆண்டுகள் வரை சுற்றியலைந்து இறுதியில் இங்கிலாந்தில் குடியேறினார். அங்கிருந்து இவர் எழுதிய கவிதைகள் இவரது தாய்நாடான ஈராக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

தற்சமயம் இந்த ஈராக் கவிஞர் தன் தாய்நாட்டிற்கு திரும்பி வந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இத்தருணத்தில், ‘பாக்தாத்தின் கவிஞர்’ என்ற தலைப்பில் நபீல் யாசினின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்கிய இயக்குநர் ஜார்ஜ் வீடன் உடன் அல் ஜசீரா இதழ் எடுத்த நேர்காணல்.

 

நபீல் யாசினை நீங்கள் எப்படிச் சந்தித்தீர்கள்?

பி.பி.சி.யில் நாங்கள் வெவ்வேறு படங்களில் பணியாற்றும் போது நான் நபீல் யாசினைச் சந்தித்தேன். அவர் ஈராக் படத்தினைப் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்டார். அப்பொழுது தான் நான் மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதி முடித்துத் திரும்பியிருந்தேன். நாங்கள் பேசிப் பேசி நண்பர்களானோம்.

 

நீங்கள் ஏன் யாசினைப் பற்றி படம் எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தீர்கள்?

அவர் மிக நுட்பமான மனிதர். எவரையும் ஈர்த்து விடக்கூடிய மிகச்சிறந்த வெளிப்படையான குணம் அமையப்பெற்றவர். வலிமையான மனோதிடமும், ஆழ்ந்த அறிவுத்திறனும் நுட்பமான உணர்வுத் திறனும் கொண்ட மிகச் சிறந்த கவிஞர். சோகமான கதையினை படமாக்கும் போதும், அதன் சிக்கலை கூட மகிழ்வாக அனுபவிக்கும் விதமாக ஆர்வமூட்டக் கூடிய நகைச்சுவை உணர்வுடைய மனிதர். 2003 ம் ஆண்டு ஈராக் போர் அறிவிக்கப்பட்ட போது தான் நபீல் தன்னுடைய இருபத்தி எட்டு ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது. அவர் அரசியல் காரணிகளால் நாடு கடத்தப்பட்டதையும் தன் நாட்டிற்கு திரும்புதலையும் பற்றி நான் தெரிந்து கொண்டதால் அவரைப் பற்றி படம் எடுக்க விரும்பினேன். மேலும், ஈராக் பற்றிய ஒரு படம் எடுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதில் யுத்தத்தின் கொடுமைகளைப் பரவச்செய்யும் காட்சிகள் எதுவும் இல்லை.

 

நபீலைப் பற்றிய உங்களின் முதல் அபிப்பிராயம் என்ன?

தலைமைப் பபண்பும், புத்திசாலித்தனமும், கருணையும் மிக்கவர்.

 

படம் தயாரிப்பதற்காக நீங்கள் எப்படி உங்களைத் தயார்படுத்தினீர்கள்?

BAFTA விருது பெற்ற புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் Tom Swindell உடன் நான் பணியாற்றினேன். மேலும் கவித்துவமான காட்சிகளை நான் வசிக்கும் லண்டனிலேயே உள் திரையரங்கில் வைத்து தயாரித்தோம். அந்த அரங்கின் ஒலி, ஒளி அமைப்பு நபீலின் கவிதை வாசிப்பதற்கு ஏற்ற சூழலைச் சிறப்பாக அமைத்துத் தந்திருந்தது. நண்பர் Imigo Gilmore கொடுத்திருந்த சில அடிக்குறிப்புகளின்படி நபீலின் ஈராக் படங்களும் மேலும் படத்தொகுப்பாளர் Johny Burke எடுத்திருந்த சில காட்சிகளையும் இணைத்து படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ஒரு கூட்டு முயற்சி.

 

இந்தப்படத்திற்கான அம்சமாக எது உங்களைத் தூண்டியது? மேலும் நபீலிடம் எது உங்களைக் கவர்ந்தது?

விடுதலை மற்றும் நீதி – இவற்றின் மீது நபீல் மேலான நம்பிக்கை வைத்திருந்தார். அடக்குமுறை ஆட்சியாளரின் கீழ் அமைதியாக இருக்க முடியாதிருந்த போதும், தன்னை நேர்வழியிலும், தன் குடும்பத்தை பாதுகாப்பாகவும் வைத்திருந்தார். இதுவே மிகச்சிறந்த குணமாக நான் நினைக்கிறேன்.

 

அவருடைய கதை ஏன் முக்கியத்துவம் மிகுந்ததாக நினைக்கிறீர்கள்?

கலாச்சார மாற்றத்திற்கு உட்பட்டு வருகிற சமூகத்தின் சக்தியையும், ஈராக் கடந்த கால இறப்புக்கள் மற்றும் அழிவுகளின் சாயலிலிருந்து அது மீண்டு வருவதை எடுத்துக் காட்டுவதன் மூலமாக இந்தக் கதை முக்கியத்துவம் பெறும் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் மாறிவருகின்ற ஈராக்கின் காட்சிகளில் நானும் ஒரு அங்கமாக இருப்பதையே விரும்புகிறேன்.

 

அவரை எப்படிக் கதை சொல்ல வைத்தீர்கள்?

நாங்கள் நண்பர்களாக இருந்த சமயத்தில், நபீல் நாட்டை விட்டு வெளியேறியதையும் பின் நாடு திரும்புதலையும் பற்றி படம் எடுப்பதாக நான் விவாதித்திருந்தேன். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மரியாதையும் உண்மைத்தன்மையும்தான் படத்தின் துவக்கத்திற்கு முழுமையாக பயன்பட்டது. ஏனெனில் நாங்கள் நண்பர்கள். அவர் என்னிடம் தன் கதையைக் கூறுவதில் மகிழ்ந்தார். அவர் தன் நாட்டை விட்டு வெளியேறி இருந்த போது தன் தாய்நாடு பற்றிய நினைவும், பின்பு தனது நாட்டைப் பற்றிய அவரது கனவுகளும், தன் தாய்நாடான ஈராக்கிற்கு திரும்பிய போது மாறுபட்ட நிலையில் இருந்த ஈராக்கின் உண்மை நிலையையும் ஒப்பிடும் விதத்தில் அவரது நினைவுகள் இருக்கின்றன. அவர் தன் உன்னதப் பயணத்தின் துவக்கத்திற்கு முன்பு தன்னைப் பற்றி என்னுடன் மிக ஆர்வமாகப் பதிவு செய்து கொண்டார்.

 

எது உங்களது பெரிய சவாலாக அமைந்திருந்தது?

நபீலுக்கு ஈராக்கில் கேமராவை உபயோகிப்பது பற்றி சொல்லிக் கொடுப்பது.

 

எப்படி இந்த படத்தை விவரிக்க விரும்பினீர்கள்?

அரசியல் சூழ்நிலையை உள்ளடக்கிய ஒரு காதல் கதையாக.

 

எப்படி நபீலுக்கான கதை ஆரம்பிக்கப் பட்டது? அவர் எவ்வாறு ‘பாக்தாத்தின் கவிஞர்’ ஆனார்?

நபீல், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் இருந்த போது கவிதைகள் வாசித்துக் கொண்டு இருந்தார். இவரது கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளில் மக்கள் பெரும் திரலெனக் கூடினர். அவர் தனது கவிதைத் தொகுப்பை வாசித்த போது (The Poets Satirizes the King) சதாம் ஹுசைனின் இரகசியக் காவலர்களால் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். அடிக்கடி ரகசிய காவலர்களால் கண்காணிக்கப்படும் நிலையில் இருந்த நபீல், நரக வாழ்க்கை வாழும் நிலை ஏற்பட்டது. இறுதியாக அவர் ஈராக்கை விட்டு தன் மனைவி, மற்றும் தன் முதல் குழந்தை யம்மாம் உடன் ஈராக்கை விட்டு வெளியேற முடிவு செய்தார். ஹங்கேரி மற்றும் ஐக்கிய நாடுகளில் குடியேறுவதற்கு முன்பு பல்வேறு நாடுகளில் நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்தார். அந்தக் கால கட்டத்தில் நபீல் தன் தாய் நாட்டை ஒரு மூடிய பெட்டகம் என்று வர்ணித்துள்ளார். பின்பு ஈராக்கில் நபீலின் கவிதைகள் தடை செய்யப்பட்ட போதிலும் அவர் கவிஞராகவே நிலைத்திருந்தார். மேலும் Brother Yasin என்று அழைக்கப்பட்ட அவரது கவிதை மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது.

 

பாக்தாதின் கவிஞர்களின் பங்கு என்ன?

ஈராக்கில் கவிதை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தது. ஈராக்கின் பாரம்பரியத்தையும், கலையையும் கலாச்சாரத்தையும் எடுத்துக் காட்டும் விதமாக கவிதைகள் அமைந்திருந்தன.

 

யாசின் கவிதை எதைப்பற்றியது அது ஏன் சக்தி உடையதாக இருந்தது?
எனக்கு அவரது கவிதை, பிரபஞ்சத்தின் நியதியான குடும்பம், காதல், அன்பு மற்றும் பிரிவு இவற்றைப் பற்றியதாகத் தோன்றுகிறது. மேலும் எளிமையாகவும், அழகாகவும் உண்மையை உணர்த்தும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.

 

நபீல் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
புதுப்பிக்கப்பட்ட Renew Iraq என்ற கட்சியை துவங்கி ஜனவரி 2010 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் பிரதம மந்திரியாக வருவார் என்று நம்புகிறார். நபீல் வெற்றி பெறுவதற்கான
வாய்ப்பும் அமைந்திருக்கிறது. நபீல் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படும் விதமாக பழங்குடியினர் மற்றும் மதவாதத்தால் பிரிந்திருப்பவர்களை ஒன்றிணைத்து முற்போக்குடன் கூடிய நல்ல அரசாங்கத்தை அமைப்பார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

 

ஏன் உங்களது குறும்படத்திற்கு நபீலை தேர்ந்தெடுத்தீர்கள்? வேறு கவிஞர்கள் இல்லையா?

நபீலை நான் முன்கூட்டியே அறிந்திருந்தது மட்டுமல்ல. மேலும் அவர் செறிந்த கருத்துக்களை யுடைய புகழ் மிக்க கவிஞராகவும் கல்வி அறிவு உடையவராகவும் இருந்தார். அவர் தன் நாட்டை விட்டு வெளியேறி இருபத்தி எட்டு ஆண்டுகள் அரசியல் காரணங்களினால் நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் தனது தாய்நாடு திரும்புவதற்கான ஒப்பற்ற அணுகுமுறையும் ஏற்பட்டது.

 

இவர் ஈராக் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரா?
ஆம்.

 

நபீல் பற்றிய குறும்படத்தினால் மக்களிடம் எவ்வாறான வரவேற்பு ஏற்பட்டது?

பெரும்பாலான மக்கள் இப்படத்தினால் ஈர்க்கப்பட்டனர். மிக நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ள ஈராக்கின் எதிர்காலம் பற்றிய அவரது நம்பிக்கை மக்களால் கவரப்பட்டது. உலகம் முழுவதும் இருக்கும் ஊடகத்துறை எங்களுடன் இணைந்திருப்பதால் நபீலின் கதையை பெருமளவில் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல முடிகிறது.

 

ஈராக் இன்று எந்த பெரிய பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது? அனைத்து பகுதியிலும் அல்லது துறைகளிலும் உள்ள ஒற்றுமையின்மை மற்றும் வேண்டாத நடவடிக்கைகளின் பட்டியல் வன்முறை மற்றும் நிலையற்ற தன்மையை நிறுத்துவதற்காக ஈராக் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஈராக்குக்கு பலமான மதிப்பிற்குரிய ஒபாமா போன்ற ஒரு சிறந்த தலைவர், உள்நாட்டில் எதிர்காலத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கக் கூடியவராகவும் சர்வதேச அரங்கில் ஈராக்கின் மதிப்பை உயர்த்துபவராகவும் பணியாற்றும் ஒரு ஆளுமை தேவை. அவ்வாறான ஒருவரை நான் பரிந்துரைக்கிறேன்.

 

உங்களது அடுத்த திட்டம் எதை நோக்கியதாக இருக்கும்?

நான் தொடர்ந்து நபீல் மற்றும் அவர் குடும்பத்துடன் இணைந்து படம் செய்வேன். அதையே நான் எப்போதும் விரும்புகிறேன். 1968ல் வெளிவந்த Haskell Wexler’s படமான Meadium cool என்ற படத்தை முன் மாதிரியாக வைத்து ஒபாமாவின் துவக்க விழாவிற்காக பல்வேறு சிறப்பம்சம் பொருந்திய கால நிலை மாற்றம் பற்றிய ஒரு படத்தில் பணியாற்றுகிறேன்.

 

தமிழாக்கம் : சக்திஜோதி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!