home கட்டுரை, புதிய அலை ஈராக் அரசியலின் அங்கதச் சுவை

ஈராக் அரசியலின் அங்கதச் சுவை

 

– ஆண்டிச்சாமி

 

உலக திரைப்படங்கள் என்ற கருத்தாக்கம் வந்தாலே முதன்மையாக முன்னிற்பவை ஈரான் படங்கள்தான். அதன் அண்டை நாடான ஈராக் திரைப்படங்கள் பற்றிப் பேசப்படுவதே இல்லை. ஈராக் என்றாலே வரட்டுத்தனமான மத அடிப்படை வாதங்களும் பயங்கரவாதங்களுமே நிரம்பிய நாடு என்பது போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன..  ஹாலிவுட் திரைப்படங்களில் மிக மோசமாகச் சித்தரிக்கப்பட்டும் செயற்கையான காட்சிப் படுத்தல்களுடன் தயாரிக்கப்பட்டும் ஈராக் பற்றிய பிம்பங்கள் நம்முன் வைக்கப்படுகின்றன.

ஆனால், Bekas (2012) (வாழ்க்கை வாழ்வதற்கே) என்ற திரைப்படம் இந்தக் கருத்துகளைப் புறந்தள்ளி வெகுஜன ரசனையாக அதே சமயத்தில் அரசியல் கலந்த அங்கதச் சுவையுடன் ஒரு பார்வையை முன்வைக்கிறது.

அமெரிக்கா செல்ல வேண்டுமென்பது இந்திய மக்களுக்கு, குறிப்பாக ஐ.டி. துறையில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஐ.டி. கம்பெனிகளில் இதற்கென நடக்கும் அரசியலும், மோதல்களும் மிக அதிகம். எப்படியாவது அமெரிக்கா சென்று கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்கிற அமெரிக்க மோகம் இங்கே ஏறக்குறைய அனைவருக்குமே இருக்கிறது. ஆனால், 1990ல் ஈராக் நாட்டைச் சேர்ந்த இரண்டு அனாதைச் சிறுவர்கள் ‘சூப்பர் மேன்’ உண்மையிலேயே அமெரிக்காவில் வசிக்கிறார் என்று நம்பி யாருடைய உதவியுமின்றித் தனியாக அமெரிக்காவை நோக்கிப் பயணப்படுகிறார்கள். பயணத்தின் போது என்னென்ன தடைகளையெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதுதான் Bekas (2012) என்ற ஈராக் படத்தின் கதை.

********

ஆண்டு 1990. ஈராக் நாட்டில் ஒரு சிறிய கிராமம். தம்பி ஜானா (வயது 7), அண்ணன் டானா (வயது 10) சகோதரர்கள் இருவரும் போரில் தங்கள் பெற்றோரைப் பறிகொடுத்துவிட்டுத் தற்போது ஷூ பாலீஷ் போட்டுப் பிழைத்து வரும் கடவுளின் குழந்தைகள். திரையரங்கின் உள்ளே சென்று படம் பார்க்கக் காசில்லாததால், திருட்டுத்தனமாக மேற்கூரை ஓட்டை வழியே சூப்பர்மேன் திரைப்படத்தைக் கண்டு ரசிக்கிறார்கள். தீயவர்களைத் தன் சக்தியால் உடனடியாக அழிக்கும் சூப்பர்மேன் அவர்களின் ஆதர்சமாகிவிடுகிறான். படத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையரங்கு உரிமையாளரிடம் மாட்டிக்கொண்டு அடி உதை வாங்குகிறார்கள்.

பிறகு அங்கிருந்து தப்பித்து அந்த ஊரின் மலை உச்சிக்கு வருகிறார்கள். மலைக்கு அந்தப்பக்கம்தான் அமெரிக்கா இருக்கிறதெனவும் அங்கேதான் சூப்பர்மேன் வாழ்ந்துவருகிறான் எனவும் இருவரும் நம்புகின்றனர். எப்படியாவது அந்த மலையைத் தாண்டி அமெரிக்கா சென்று சூப்பர்மேனைச் சந்தித்துவிட்டால் தங்கள் துன்பமெல்லாம் தீர்ந்துவிடும் என்றும் முடிவெடுக்கின்றனர். தங்களைத் துன்புறுத்திய எதிரிகளையெல்லாம் சூப்பர்மேனிடம் போட்டுக்கொடுத்துத் தண்டனை வாங்கிக்கொடுக்க முடிவெடுக்கின்றனர். அதில் முதல் ஆளாக சதாம் உசேன் பெயரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அமெரிக்கா செல்வதற்கு பாஸ்போர்ட் என்ற ஒரு வஸ்து தேவை எனவும் அதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதும் அண்ணன் டானாவிற்குத் தெரிந்திருக்கிறது. அதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க, தீவிரமாக உழைக்க முடிவெடுக்கிறார்கள்.

அவர்கள் தங்குவதற்கென்று வீடோ, வேறு எந்த ஓர் இடமோ கிடையாது. ஷூ பாலீஸ் போடுவதற்கான சாமான்களை எல்லாம் அவர்களுக்கு உதவி செய்யும் ‘பாபா காலித்’ என்ற வயதான, கண்பார்வையற்ற தாத்தாவின் கடையில் வைத்துள்ளனர். தினமும் அங்கிருந்து அதை எடுத்துச்சென்று மார்க்கெட் அருகே கடைவிரித்து, வருவோர் போவோரிடம் கூவிக்கூவி ஷூ பாலீஸ் போட்டுக் கிடைக்கும் காசுதான் அவர்களின் மொத்த வாழ்வாதாரம். அப்படி ஷூ பாலீஸ் போடவரும் ஒரு பணக்கார ஆசாமியின் மகள் ஹீலியா மீது அண்ணன் டானாவுக்குக் காதல் வருகிறது. அந்தக்காதல் படிப்படியாக வளர்ந்து அவளைத் தனியே சந்தித்து முத்தம் வாங்கும்வரை வளர்கிறது.

‘பாபா காலித்’ தாத்தாவின் மீது ஜானாவுக்குக் கொள்ளைப் பிரியம். தன்னை மகனே என்று அவரை அழைக்கச் சொல்லுமளவுக்கு அவர்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறான். ஒருநாள் டானாவின் காதலி ஹீலியாவின் தங்கச்செயினை யாரோ ஒரு குறும்புக்கார சிறுவன் பிடுங்கி ஏரியில் எறிந்துவிடுகிறான். ஹீலியா கோபித்துக்கொண்டு ஓடிவிட, அவளைச் சமாதானப்படுத்த டானா ஏரியில் குதித்துத் தன் உயிரைப் பணயம் வைத்து அந்தச் செயினைக் கண்டுபிடிக்கிறான். திரும்பிவந்து பார்க்கும்போது ஹீலியாவும் அவளது குடும்பமும் அமெரிக்காவுக்குக் கிளம்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அந்தச் செயினை அவளிடம் கொடுக்க எவ்வளவோ முயற்சிசெய்தும் கடைசியில் முடியாமல் போய்விடுகிறது.

அதற்கடுத்த நாள், அவர்களுக்கென்று இருந்த ஒரே ஆதரவான பாபா காலித் தாத்தா இறந்துபோகிறார். இருவரும் மனமுடைந்து போய், மலையுச்சிக்குச் செல்கின்றனர். இனிமேலும் இந்த ஊரில் இருப்பதில் அர்த்தமில்லை என்றும், கையிலிருக்கும் அந்தத் தங்கச்செயினைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்றும் முடிவெடுக்கின்றனர். அண்ணன் டானா அந்த ஊரில் பாஸ்போர்ட் பெற்றுத்தருபவர்களிடம் சென்று தங்கச்செயினைக் காட்டி பாஸ்போர்ட் கேட்க, அவர்கள் அவனை அடித்துத் துரத்துகின்றனர். இதற்கிடையில் ஜானா மற்றொரு சிறுவனிடம் கோலிக்குண்டு விளையாடி அவனைத் தோற்கடித்து விடுகிறான். தோற்றுப்போன சிறுவன் கோலிக்குண்டை இழக்க விரும்பாமல் அதற்குப் பதிலாக அவன் வீட்டில் இருக்கும் கழுதையை எடுத்துக்கொள்ளச் சொல்கிறான். ஜானா அதை எடுத்துக்கொண்டு ஒய்யாரமாகச் சவாரி போட்டுக்கொண்டு வரும்போது, கழுதையின் சொந்தக்காரர் பார்த்துவிடுகிறார். அடி உதை கொடுத்து அவனை விரட்டிவிடுகிறார். பாஸ்போர்ட் கிடைக்காத சோகத்தில் அண்ணன் டானா வர, பிறகு இருவரும் சேர்ந்து அந்தக் கழுதையையே விலைக்கு வாங்கி அதில் ஏறி அமெரிக்கா செல்லலாம் என்று முடிவெடுக்கின்றனர். தங்கள் கையிலிருக்கும் காசைப்போட்டு அந்தக் கழுதையை வாங்கி அதற்கு மைக்கேல் ஜாக்சன் என்று பெயரும் வைக்கின்றனர்.

ஊரிலுள்ள சிறுவர்களெல்லாம் கூடி அவர்களை வழியனுப்ப, ஓர் உலக வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டு, கழுதையிலேறி இருவரும் உற்சாகமாக அமெரிக்காவை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் வழியில் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள், தடைகள்தான் மீதிப்படம்.

படம் மொத்தமே ஒன்றரை மணிநேரம்தான். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நாமும் 1990களின் ஈராக் வீதிகளில் நடமாட ஆரம்பித்துவிடுகிறோம். படம் நம்மை அந்தளவு ஆக்கிரமித்துக்கொள்கிறது. அந்தச் சிறுவர்களோடு சேர்ந்து நாமும் அமெரிக்கா நோக்கிப் பயணிப்பதைப் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உணர்ந்துகொள்ளலாம். அந்தச்சிறுவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்வுகளும் பார்வையாளர்களும் உணர்ந்துகொள்ளும்படியான காட்சியமைப்புகள், அதற்கேற்ற ஒளிப்பதிவு, நடிப்பு எனப் படம் அத்தனை துறைகளிலும் முதலிடம் பெறுகிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஜானா மற்றும் டானாவாக நடித்த அந்த இரண்டு சிறுவர்கள்தான். தங்களின் துறுதுறுப்பான நடிப்பால் மொத்தப்படத்தையும் தங்களின் பிஞ்சுத் தோள்களில் சுமந்துள்ளனர். படம்பார்த்த எவரும் இந்த இரண்டு சிறுவர்களின் நடிப்பை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதிலும் தம்பி ஜானாவாக நடித்த Zamand Taha வின் நடிப்பு பிரமாதம். ஜானா, தன் அண்ணனிடமும், பிறரிடமும் எப்போதும் அறை வாங்கிக்கொண்டே இருப்பவன்; எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாகப் பேசும் பழக்கம் இல்லாதவன். எப்போதுமே பரபரவென்று உற்சாகமாக இருக்கும் ஜானாவைப் படம்பார்க்கும் எவருக்கும் பிடிக்கும்.

படத்தில் ஜானா செய்யும் குறும்புகள் அனைத்துமே அட்டகாசமாய் அமைந்து நமக்கு வெடிச்சிரிப்பை வரவழைக்கின்றன. மசூதியில் பிரார்த்தனை செய்யும் காட்சியில் மற்றவர்களைப் பார்த்துக்கொண்டே குறும்புகள் செய்வான். பிறகு கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்போது “கடவுளே..!! நானும் என் அண்ணனும் அமெரிக்கா சென்று சூப்பர்மேனைப் பார்ப்பதற்கு உதவிசெய். அதற்காக இந்த ஊரிலுள்ள அனைத்து அழுக்கான ஷூக்களையும் எங்களிடம் அனுப்பு” என்று வேண்டுவான். “அப்படியே கொஞ்சம் பணமும்கேட்க வேண்டியதுதானே” என்று அண்ணன் கேட்கும்போது “கடவுளிடம் பணம் கேட்கக்கூடாது என்று பாபா காலித் சொல்லியிருக்கிறார், அப்படிக்கேட்டால் இப்போது இருப்பதையும் திரும்ப எடுத்துக்கொள்வாராம்” என்று பதில் சொல்லுவான் ஜானா. “அடேய் முட்டாள். இப்போது மட்டும் என்ன இருக்கிறது எடுத்துக்கொள்வதற்கு? எதுவும்தான் இல்லையே. அதனால் கடவுளிடம் என்ன வேண்டுமானாலும் கேள். அப்படியே பாஸ்போர்ட்டும் கேள்” என்று டானா கிண்டல் செய்யும்போது, “கடவுளே..!! என் அண்ணனை மன்னித்துவிடு. இன்றைக்கு அவன் மனநிலை சரியில்லை” என்று மறுபடியும் வேண்டிக்கொள்ளும் காட்சி சிரிப்புக்கு உத்திரவாதம்.

வீடு என்பதே அவர்களுக்கு இல்லை என்பதால், எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஒரு கோணிப்பையைப் போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். குளிப்பதற்குக்கூட யாரிடமாவது இரண்டு வாளிகள் நிறைய தண்ணீர் வாங்கி அதில் குளிப்பார்கள். அப்படி ஒருமுறை குளிக்க ஆரம்பிக்கும்போது ஜானா அப்படியே வாளிக்குள் இறங்கிவிடுவான். அதைப்பார்த்த டானா பளாரென்று ஓர் அறை கொடுத்து, “எடுத்தவுடனேயே வாளிக்குள் கால் வைக்காதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்?” என்று கேட்க, அதற்குப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டே “7 தடவைகள் அண்ணா” என்று ஜானா சொல்லுமிடம் அனுதாபச் சிரிப்பை வரவழைக்கிறது.

பாபா காலித் தாத்தா வருவது ஒருசில நிமிடங்களே என்றாலும் அவரும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடுகிறார். ஜானா தன் அண்ணன் டானா மீது கோபப்பட்டு அதை பாபா காலித் தாத்தாவிடம் சொல்லுவான். அதற்கு அவர் ‘ஒற்றைக் குச்சியை உடைப்பது எளிது. ஆனால் கற்றைக் குச்சிகள் இணைந்த கட்டை உடைப்பது கடினம்’ என்கிற ஜென் தத்துவத்தை அவனுக்கு ப்ராக்டிகலாக விளக்கிச்சொல்லி அண்ணன்-தம்பி இருவரும் என்றும் பிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க வேண்டும் என்று எடுத்துரைப்பார். அந்தக்காட்சியும், அதில் தாத்தாவுக்கும் ஜானாவுக்குமிடையே இழையோடும்அன்பும் காண்பதற்கு மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்குகிறது.

இருவரும் கழுதையில் ஏறி அமெரிக்காவை நோக்கி உற்சாகமாகப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தெருமுனையில் நின்று எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் முழிப்பதும் சிரிப்பை வரவழைக்கிறது. அதேபோல, கழுதையில் சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு வண்டியில் கோக் பாட்டில்கள் இருப்பதைப் பார்த்து அதனைக் குடிக்க ஆசைப்பட்டு டானா அந்த வண்டியில் ஏறுவான். அந்தச் சமயம் பார்த்து கோக் வண்டி கிளம்பிவிட, அதற்குள் டானா மாட்டிக்கொண்டுவிட, ஜானா என்ன செய்வதென்று தெரியாமல் கழுதை மீதேறி அந்த வண்டியைப் பின்தொடர்ந்துசெல் என்று கழுதையைப் பார்த்துக் கத்துவான். அஃது ஆடாமல் அசையாமல் அங்கேயே நின்றுகொண்டிருக்கும். சற்று நேரத்தில் கோக் வண்டி வெகுதூரம் போய்விட, அண்ணனைப் பிரிந்த சோகத்தில் கழுதையிடம் சென்று, “என் அண்ணனைப் பின்தொடர்ந்து போ என்று சொன்னேனா இல்லையா ? ஏன் போகவில்லை ? இப்போது அவனைப் பிரிந்துவிட்டோமே என்ன பண்ணுவது? கொஞ்சமாவது அறிவிருக்கிறதா உனக்கு. மூளையில்லாத ஜென்மமே” என்று கழுதையைத் திட்டும் காட்சி அருமை.

இயக்குனர் (Karzan Kader) நல்ல குறும்புக்காரர் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. கழுதைக்கு மைக்கேல் ஜாக்சன் எனப்பெயர் வைப்பதும், அதன் நெற்றியில் ‘BMW’ என எழுதியிருப்பதும் அக்மார்க் குசும்புத்தனங்கள். அதேபோல ஜானா சிறுநீர் கழித்துக்கொண்டே மைக்கேல் ஜாக்சன் மாதிரி நடனமாடிக் காண்பிப்பதும், அதற்கேற்றவாறு கழுதை கத்துவதும் பகடியின் உச்சகட்டம். நாட்டின் எல்லைக்கோடு அருகே பாதுகாவலுக்கு நிற்கும் ராணுவ அதிகாரிகளின் முன்னாடி கழுதையுடன் தெனாவெட்டாகச் சென்று, “கொஞ்சம் வழிவிடுறீங்களா? நானும் என் அண்ணனும் அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று கேட்கும்காட்சி அட்டகாசம்.

செம்மண் புழுதிக்காடான ஈராக் நாட்டை அப்படியே அழகாக அள்ளிக்கொண்டுவந்திருக்கிறது ஒளிப்பதிவாளரின் கேமரா. கண்களில் எடுத்து ஒத்திவைத்துக் கொள்ளலாம்போல அவ்வளவு அருமையான ஒளிப்பதிவு, அதற்கேற்றாற்போலப் பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடும் பிண்ணனி இசை, அலுக்காத வகையில் படம் வேகமாகச் செல்ல உதவும் படத்தொகுப்பு எனப் படத்தின் அத்தனை அம்சங்களுமே படத்தை வெகுவாக உயர்த்திப் பிடிக்கின்றன.

படம் முழுவதும் நமக்குப் பலவிதமான உணர்ச்சிகள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன.சிரிப்பு, அழுகை, நெகிழ்ச்சி, அன்பு, பரிதாபம், புன்னகை, ஏமாற்றம், பாசம், சோகம் என அனைத்துவிதமான உணர்ச்சிகளும் கலந்த கலவை இந்தப்படம். படம் படு உற்சாகமாகச் சென்றாலும், படம் முழுவதும் ஒரு மென்சோகம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அது நமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அடுத்தவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாத இரண்டு சிறுவர்கள் எந்தவொரு கவலையுமின்றி வாழ்க்கையை இவ்வளவு நம்பிக்கையுடன் எதிர்கொண்டு பயணிக்கிறார்களே என்று, படம்பார்க்கும் பார்வையாளர்களான நம் மனசுக்குள்ளும் நம்பிக்கை ஊற்றுப் பெருகும். உற்சாகம் அலைகடலெனத் திரண்டுவரும். எவ்வளவு பெரிய தடைக்கற்களையும் உடைத்தெறியும் தைரியம் அதிகரிக்கும். இந்தப்படம் வாழ்க்கைக்கு ஓர் உற்சாக ஊற்று. க்ளைமாக்ஸ் பார்த்து முடிக்கும்போது நமக்கு வாழ்க்கையின் மீதான பார்வையே மாறும். மனசு முழுக்க அன்பும், மனிதாபிமானமும் பெருக்கெடுத்து ஓடும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!