home டிரெண்டிங், நேர்காணல் உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் என்ன?

உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் என்ன?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான டோர்த்தி நோர்ஸ் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்

 

 

நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா?

டோர்த்தி நோர்ஸ்: மொழியிடம் ஒரு குறிப்பிட்ட இரக்க உணர்ச்சியுடனும், மொழி மூலமாக உலகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேவையுடனும் நான் பிறந்துள்ளதாக நினைக்கிறேன். எனக்கு எட்டு வயதாக இருக்கும் பொழுது ஒரு எழுத்தாளராக ஆக வேண்டும் என நான் விரும்பினேன். அன்று முதல் ஒரு நூலை வெளியிடும் வரை, நான் எழுதினேன், வாசித்தேன், எழுதினேன், வாசித்தேன், எழுதினேன், வாசித்தேன்.

 

எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது?

டோர்த்தி நோர்ஸ்: அது எனது அடையாளத்தின் ஒரு உறுதியான பகுதியாகவும் மாறியது. உண்மையில் நான் மேலும் தேர்ந்த ஒரு வல்லுநராக மாறினேன். நான் மேலும் கலைக்கக்கூடாத பல விஷயங்கள் இருக்கின்றன, ஆயினும் மொழி வாயிலாக முன்னெடுத்துச் செல்லும் சோதனை மாற்றமடையவில்லை (எனது எட்டு வயதிலிருந்து நான் சோதிக்கும் கருப்பொருள்கள் மாற்றம் பெற்றிருந்தாலும் கூட).

 

உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?

டோர்த்தி நோர்ஸ்: காலப்போக்கில் நான் மாறவில்லை என்றால், ஒரு விசித்திர மனித உயிராக இருந்திருப்பேன். நான் முழுமையான உயிர்ப்புடன்  சதை, இரத்தத்தால் ஆனவள், நம்பிக்கை, அச்சங்களால் ஆனவள், வெறும் பெளதீகப் பொருள் அல்ல இந்த டோர்த்தி. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்: நிச்சயமாக!

 

உங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்? 

டோர்த்தி நோர்ஸ்: டேனிஷ் இலக்கிய மரபில் தோன்றிய குறைந்தபட்ச பாணியில் நான் எழுதுகிறேன் – நுட்பம், உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் போக்கு, உளவியல் கூறுகள் வரிகளுக்கு அடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போக்கு. ஸ்வீடிஷ் மரபிலும் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன். பல்கலைக் கழகத்தில் நான் ஸ்வீடன் மொழி பயின்றேன். எனது எழுத்தில் ஸ்வீடன் இருத்தலியல் உட்பொதிந்துள்ளது. எனவே, வடிவம்: டேனிஷ். உள்ளடக்கம்: ஸ்வீடிஷ் (இது அதீதமாக எளிமைப்படுத்துவது).

 

உங்கள் எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?

டோர்த்தி நோர்ஸ்: எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்றில்லை. எனது வாழ்வின் குறிப்பிட்ட காலகட்டங்களில் எனக்குப் பலவற்றை அர்த்தப்படுத்திய புத்தகங்கள் இருக்கின்றன. ஏனெனில், நான் வாழ்கிறேன், மாற்றம் அடைகிறேன், அவை வாழ்கின்றன, மாற்றம் அடைகின்றன. ஐந்து வருடங்களுக்கு முன் உண்மையில் என்னை ஏதோ செய்த புத்தகங்களில் ஒன்று இங்க்மர் பெர்க்மனின் நினைவுகள், Laterna Magica, ஆனால் அது எப்பொழுதும் எனக்குப் பிடித்த புத்தகமாக இருந்ததில்லை. கிளாடியா ரேன்கின் எழுத்துகள் இப்போது உண்மையில் என்னை ஈர்க்கின்றன. இன்னும் ஐந்து வருடங்களில் – நான் என்ன வாசிப்பேன், எதை நேசிப்பேன் என்று யாருக்குத் தெரியும்.

 

 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!