home டிரெண்டிங், நேர்காணல் உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்?

உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், நோபல் மற்றும் மேன்புக்கர் விருதுகளுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான அமோஸ் ஓஸ்  இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்

 

நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?

அமோஸ் ஓஸ்: ஒரு சிறுவனாக நான் சற்று குள்ளமானவன், மிகவும் மெலிந்தவன், மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவன். பள்ளியில் நல்ல படிப்பாளி அல்ல, விளையாட்டிலும் சிறந்தவன் அல்ல, நகைச்சுவையிலும் பொழுது போக்கு அம்சங்களிலும் கூட அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. பெண்களைக் கவர்வதற்காக எனக்குத் தெரிந்த ஒரே வழி பல விதமான கதைகளை உருவாக்கிக் கூறுவதுதான். இப்படித்தான் நான் எழுத்தாளன் ஆனேன். நான் ஏன் கதைகளைச் சொல்வதிலும் அவற்றைப் புத்தகங்களாக எழுதுவதிலும் லயித்திருக்கிறேன் என்பதற்கு இது ஒரு முதன்மையான காரணமாகவும் இருக்கலாம்.

 

உங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின் குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள் எழுத்து புறக்கணிக்கிறது?     

அமோஸ் ஓஸ்: நான் எனது எழுத்தை நீண்ட சூழலுக்குள் பார்க்கவில்லை. நான் செயல்படும் போது, எனது பார்வைகள் நாகரீகத்தின் மீதோ, சமூகம், கலாச்சாரம் அல்லது கருத்தியல் மீதோ கட்டமைக்கப்படுவதில்லை. எழுதுதல், அழித்தல் மற்றும் சரியான பெயர்ச் சொல்; சரியான வினைச்சொல், உரிச்சொல்; வாக்கியத்தின் ஒலியியைபு; மற்றும் உரையாடலின் துல்லியத்திற்கான தேடலில் திரும்பத் திரும்ப எழுதுதல் பற்றிய பதைபதைப்பிலிருந்து நான் விலகிச் சென்று விடுகிறேன். எனது செயல் ஒரு மூலக்கூறு. ஒரு அரசியல் சிந்தனையாளராக, ஒரு இஸ்ரேல் யூதராக, ஒரு அமைதி இயக்கச் செயற்பாட்டாளராக, மற்றும் ஒரு இலக்கிய ஆசிரியராக பலவிதமான சிக்கல்கள் பற்றிய கருத்து எனக்கு உண்டு, ஆனால் இது முன்னரே வேறு விதமான கேள்விக்காகப் பதில் அளித்ததில் உள்ளது.

 

உங்கள் எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?

அமோஸ் ஓஸ்: எனக்கு மிகவும் பிடித்த இலக்கியப் படைப்பு Don Quixote. சில வருடங்களுக்கு ஒரு முறை நான் அதைத் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன். நான் அந்தக் கதை நாயகனை மிகவும் நேசிக்கிறேன். அவன் முதல் நாவலின் எதிர்-நாயகனும் கூட. அந்த நாவல் முதல் நவீன நாவலும் கூட. முதல் பின்நவீனத்துவ நாவலும் அதுதான். அது முதல் கட்டுடைப்பு நாவலாகவும் உள்ளது. டான் க்விக்ஸாட்டின் மரபார்த்த அம்சங்களை இதுவரை உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இலக்கிய, திரைப்பட உருவங்களில் காணலாம். அந்த மரபணுக்களில் சில ஒவ்வொரு ஒற்றை பிந்தைய-க்விக்ஸாட் மானுட வாழ்விலும் இருக்கக்கூடும்.

 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!