home டிரெண்டிங், நேர்காணல் உங்கள் மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தில் உங்கள் எழுத்தின் இடம் எது?

உங்கள் மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தில் உங்கள் எழுத்தின் இடம் எது?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான யான் லியான்கி இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்

 

 

நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?

யான் லியான்கி: சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பதினாறு அல்லது பதினேழு வயதில் நான் ஆக்கப்பூர்வமாக எழுதத் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் எனது வயிற்றை நிரப்புவது, நாட்டுப்புறத்திலிருந்து தப்பித்துச் செல்வது மற்றும் ஒரு நகரத்திற்கு இடம் பெயர்வது எனது மாபெரும் கனவுகளாக இருந்தன. ஒரு நாவலை எழுதியதன் விளைவாக நாட்டுப்புறத்திலிருந்து ஒரு மாகாணத் தலைநகருக்கு இடம்பெயர முடிந்த ஒரு எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, என்னாலும் அவ்வாறு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் எழுதத் தொடங்குவது என்று முடிவு செய்தேன். இரண்டு, மூன்று வருடங்களாக ஒவ்வொரு இரவும் தொடர்ச்சியாக எழுதிய பிறகு, ஒரு நாவலை நிறைவு செய்ய முடிந்தது. அது ஏறக்குறைய மூன்று இலட்சம் சீனப் பாத்திரங்களை உள்ளடக்கியது. அந்தப் படைப்பு வெளியிடப்படவில்லை. அதற்கு மாறாக, எனது தாயாருக்கு அடுப்பு எரிப்பதற்காக அந்தக் காகிதங்கள் விறகாகப் பயன்படுத்தப்பட்டன.

எனது எழுத்து வாழ்வின் ஒவ்வொரு நிலையும் மாறுபட்ட குறிக்கோளால் இயக்கப்பட்டது. நான் இளைஞனாக இருந்த போது, நாட்டுப்புறத்திலிருந்து தப்பிப்பதற்காக நான் எழுதினேன். ஆனால், பின்னர் நான் பணத்திற்காகவும் புகழுக்காகவும் எழுதத் தொடங்கினேன். அதன் பிறகு, “பேசப்பட முடியாத மற்றும் எழுதப்பட முடியாத மெய்நிலையால்” ஊக்கம் பெற்றேன். நான் எழுதவில்லை என்றால், நான் உயிருடன் இருக்கிறேனா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலை ஏற்படும் என்று உணர்ந்ததால், தற்பொழுது நான் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொல்வதென்றால், நான் எழுதுவதற்கான காரணம், என்னால் பேசவும் சுவாசிக்கவும் முடியும் என்பதை நிரூபிப்பதற்காக.

 

உங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின் குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள் எழுத்து புறக்கணிக்கிறது?

யான் லியான்கி: சீன இலக்கிய வரலாறுகளில் எனக்கு நம்பிக்க இல்லை. ஏனென்றால், அவை அதிகச் செயற்கைத் தன்மை கொண்டவையாக இருக்கவே விழைகின்றன. இலக்கிய வரலாறுகள் அனைத்தும் மிகவும் தத்துவார்த்தமானவை. அவை இலக்கிய அல்லது இலக்கிய-வரலாற்றுரீதியான அமைதியின்மைகளை முதன்மையாக அறிவிப்பதில்லை. சில வேளைகளில், நவீன, சமகால இலக்கியங்களின் வரலாறுகள் அதிகார இலக்கிய வரலாறுகளைவிட அல்லது அதிகாரத்தால் அறிவிக்கப்படும் இலக்கிய வரலாறுகளைவிடச் சற்று அதிக உன்னிப்பாகப் பார்க்கப்படுகையில், செவ்வியல் இலக்கிய வரலாறுகளும் கருத்தியல் மற்றும் அதிகாரத் தாக்கத்திலிருந்து தப்ப முடிவதில்லை. அதனால்தான் இவ்வாறு அழைக்கப்படும் இலக்கிய வரலாறுகளில் நான் அதிகமாகக் கவனம் செலுத்துவதில்லை.

சீன எழுத்தாளர்களில், நான் குறிப்பாகத் தாக்கம் பெற்றதாகக் கண்டடைந்த முன் நவீனத்துவவாதி வூ செங்’ன் மற்றும் அவருடைய நாவல் Journey to the West. நவீன காலகட்டத்தில், என் மீது அதிகத் தாக்கம் செலுத்தியவர் லூ சுன். நான் புறக்கணிக்கும் இலக்கிய நடைமுறை எதுவென்றால், ”சீனப் பாணி மெய்யியல்” மரபு என்று கூறுவேன். அது இன்று வரை சீன எழுத்தாளர்கள் மற்றும் சீன இலக்கியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சீனப் பாணி மெய்யியல் இலக்கியத்திற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, எண்ணற்ற தலைமுறைக் குழந்தைகளின் வாசித்தலையும் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

 

உங்கள் எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?

யான் லியான்கி: எனக்குப் பிடித்த புத்தகம் எதுவுமில்லை. பிற இலக்கிய மரபுகளிலிருந்து குறிப்பாக, தொன்மங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் உள் நாட்டு நாடகங்கள் எனக்குப் பிடிக்கும். இந்தத் தொன்மங்களும் நாட்டுப்புறக் கதைகளும் பல்வேறு மாறுபட்ட கலாச்சாரங்களின் கிரேக்க, ரோமானிய தொன்மங்களையும் நாட்டுப்புறக் கதைகளையும் உள்ளடக்கியவை. மேலும், தொன்மங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் கலவையாக உள்ள பைபிளையும் பிற மதங்களின் வரையறைப் பிரதிகளையும் நான் அவ்வப்பொழுது பார்ப்பதுண்டு. நாடகத்தைப் பொறுத்தவரை, நான் சீன உள்நாட்டு நாடகங்களைக் குறிப்பிடுவேன். முப்பதுக்கும் அதிகமான மாறுபட்ட உள்நாட்டு நாடக மரபுகளை சீனா பெற்றுள்ளது. அவை ஒவ்வொன்றும் முற்றிலும் வித்தியாசமான கலாச்சாரங்களையும் சுவைகளையும் கொண்டவை. எனது எழுத்து இத்தகைய உள்நாட்டு நாடகங்களால் மிக ஆழமாகத் தாக்கம் பெற்றது. எனினும் இந்தத் தொன்மங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் உள்நாட்டு நாடகங்கள் எனது நாவல்களில் நேரடியாக நுழைவதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்கு மாறாக, ஒரு தூறல் போல, ஒரு தென்றல் போல அவை எனது கதைகளுக்குள்ளும் எனது மொழியினுள்ளும் வெகு நுணுக்கமாக ஊடுருவுகின்றன.

 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!