home டிரெண்டிங், நேர்காணல் எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள் எழுத்து புறக்கணிக்கிறது? 

எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள் எழுத்து புறக்கணிக்கிறது? 

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருது போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்

 

நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?

ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன்: எதேச்சையாக ஒருவர் எழுத்தாளராக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒரு எழுத்தாளராக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்; நீங்கள் ஒரு கலைஞனாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்; அது உங்கள் பிறப்புடன் தொடர்புள்ள ஏதோ ஒன்று, அதிலிருந்து நீங்கள் எளிதாகத் தப்பித்து விட முடியாது. ஆனால் நான் மிகவும் தாமதமாகவே துவங்கினேன், இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு என நினைக்கிறேன்; அல்லது அது இங்கு அயர்லாந்தில் மிகவும் தாமதம் எனக் கருதப்படலாம்… நான் என்னவாக இருந்தேன் என்பதை மட்டும் கணக்கிட எனது காலத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்; ஆனால் நான் அதைக் கண்டடைந்த நேரம் எனக்கு மிகத் தெளிவாக நினைவில் இருக்கிறது. அது ஒரு அற்புதமான தருணம். முதல் முறையாக எனது உண்மையான சுயத்தைச் சந்திக்கும் ஒரு போக்கில் சென்றதாக உணர்ந்தேன். அதுதான் “வசிப்பிடம்”. இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. எழுத்து தவிர்த்த வாழ்க்கை உள்ளது என்பதை என்னால் சிந்தித்துப் பார்க்க முடியாது, அது எனது மூச்சு, எனது இதயத்துடிப்பின் ஒரு பாகம். மேலும் கதையும் கவிதையும் தான் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்பது எனக்கு எப்பொழுதும் ஒரு தேவையாக இருந்தது – முழுமையாக அதில் நம்பிக்கை கொண்டிருந்தேன். அனைத்துக் கலைகளையும் போல. மக்கள் மீதும், அவர்களுடைய உணர்வுகள் மீதும், அவர்களுடைய பார்வைகள் மீதும், அவர்கள் எவ்வாறு உலகத்தைக் காண்கின்றனர் என்பதன் மீதும், அவர்கள் எவ்வாறு தங்கள் உள் உலகத்தைக் காண்கின்றனர் என்பதன் மீது அது தாக்கம் செலுத்த வேண்டும். இலக்கியம் என்பது வாழ்க்கையாக இருக்க வேண்டும், தனிநபருக்கும் சமூகத்திற்கும். அப்படி இருக்க முடியும், இருக்க வேண்டும்.

 

உங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின் குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள் எழுத்து புறக்கணிக்கிறது?     

ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன்: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தச் சூழலில் எனது எழுத்தை வைத்து நான் சிந்திக்கவில்லை. அந்த அர்த்தத்தில் அதை எங்கு வைக்க வேண்டும் என்பதில் நான் ஒரு போதும் வியந்ததில்லை. எனது எழுத்தை வரையறை செய்வதில் எனக்கு ஆர்வமில்லை, பிறருடைய படைப்புகள் நான் எழுதியதைவிட அதிகத் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. நான் எனது படைப்புகளை உள்ளிருந்து பார்க்கிறேன்; அதன் விளைவாக, மரங்களுக்காக மரத்துண்டுகளைக் காண்பதில் எனக்கு ஒரு சிக்கல் இருப்பதாகச் சொல்ல முடியும்… அதைப் போலவே, என்னைப் பற்றி நானே விவரிக்க நான் சிறந்தவன் அல்ல. நான் ஒரு கவிஞனாக எழுதத் துவங்கினேன். கவித்துவ பாணியில் எழுதிய – நட் ஹாம்ஸன், ஜோஸ் ஸரமகோ, ஹெர்தா முல்லர் – மற்றும்/அல்லது வடிவத்தைப் புதுப்பிக்க முயன்ற ஃபாக்னர், இடாலோ கால்வினோ, ஜேவியர் மரியாஸ் போன்றவர்களின் மீது எனக்கு எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஒரு புதினம் என்பது மிகவும் பரந்துபட்டதாக இருக்க முடியும். அதே நேரத்தில் அது யாவுமாகவும் இருக்க முடியும்: ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு கட்டுரை, ஒரு கோள அமைப்பு, ஒரு ராக் பாடல், ஒரு ஒப்பாரி, ஒரு இசைத் துணுக்கு, ஒரு உரசல் சப்தம், ஒரு கனவு… புதினத்திற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் முடிவற்றவை; வடிவத்தை மேலும் ஏதேனும் ஒரு வழியில் விரிவுபடுத்தவே எப்பொழுதும் முயற்சிக்க வேண்டும்.

 

உங்கள் எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?

ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன்: இருபத்தி ஐந்து-முப்பது வருடங்களுக்கு முன் அதிகமாகக் கவர்ந்த ஒரு சில புத்தகங்களின் பெயர்களை எளிதாக உதிர்க்கலாம்; அதே போல அவை எனது எழுத்தின் மீது தாக்கம் செலுத்தியனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனல் அவை என்னை மிகவும் கவர்ந்தவை. எனக்குப் பறப்பது போல இருந்தது. தாமஸ் மன் எழுதிய Tonio Kröger, மிக்கெய்ல் புல்ககோவ் எழுதிய The Master and Margarita, ஹால்தர் லாக்ஸ்னஸ் எழுதிய World light, ஹெமிங் வேயின் The Old Man and the Sea தாக்கம் பெற்ற மற்றொரு அயர்லாந்து எழுத்தாளரான குன்னார் குன்னார்ஸன் எழுதிய Advent (or Good Shepard), மாபெரும் படைப்பாளியான நட் ஹம்சனின் Pan, மேலும் எண்ணற்ற கவிதைகள் – உதாரணத்திற்கு, சீஸர் வாலெஜோ எழுதிய The Violence of the Hour- எனது எழுத்துகளின் மீது தாக்கம் செலுத்தின, தூண்டுதலாய் இருந்ததன.

 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!