home கட்டுரை, டிரெண்டிங் என்னைப் பேசவிடுங்கள்

என்னைப் பேசவிடுங்கள்

  • பிரிந்தன் கணேசலிங்கம்

 

(01)

 

போரிலக்கியங்களில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. பெரும்பாலான போரிலக்கிய கவிதைகளின் போக்கு தமக்கான தேசத்தை வேண்டியோ அல்லது உரிமைகளை மீட்டெடுக்கவோ அல்லது இழந்த  உயிர்களையும் உடைமைகளையும் பற்றிப் பாடுவதாகவோ  அமைந்துவிடுகிறது. விரும்பியோ விரும்பாமலோ கவிதைகளின் பாடுபொருள் மேற்கூறிய ஒன்றிற்குள் வகைப்பட்டுவிடுகிறது. இதனால் போரிலக்கிய கவிதைகளின் பொதுத்தன்மையான ஒன்றை முன்வைப்பது இலகுவானது. ஆதிக்கசக்தி ஒன்றிற்கு எதிரான குரல்களே கோபமாகவும் கவலையாகவும் போராட்ட குணத்துடனும் வெளிப்படுகின்றது. பெரும்பாலானவை ஆதிக்க சக்தியை எதிர்த்து நின்று போராடுபவையாக பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் –  சாதாரண மனிதரது அவலங்களையும் உணர்வுகளையும்  சொற்பமாகவே பாடுகின்றனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் எஸ் போஸ் எனப்படுகின்ற சந்திரபோஸ் சுதாகர். அவரின் சுயம் என்ற கவிதையினூடாக பத்தியினைத்தொடங்கலாம்.

 

“என்னைப் பேசவிடுங்கள்

உங்களின் கூக்குரல்களால்

எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன”

 

அடக்குமுறைக்கு கீழே இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களினதும் கோஷமும் கருத்து சுதந்திரமாகவே இருக்கும். சிலி நாட்டின் கவிஞர் விக்தோர் ஹாராவை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன். இறுதியில் சிறைச்சாலையில் விக்தோர் ஹாரா கொல்லப்பட்டதைப்போலத் தான் எஸ் போஸும். பெரும்பாலும் ஆதிக்க சக்திக்கு எதிராக குரல்கொடுக்கின்ற மனிதர்களின் முடிவு ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. எஸ் போஸும், தான் பேசவே கேட்கிறார். ஆனால் பிரச்சனை அடுத்த வரியிலேயே தொடங்கிவிடுகிறது. யாருக்கு மத்தியிலிருந்து தன்னை பேசக் கேட்கிறார்? “உங்கள்” என்று யாரை விளிக்கின்றார்? ராணுவத்தையா? புரட்சியாளர்களையா? அல்லது தன்னோடிருக்கும் சக மக்களையா? யார் அவரின் காயங்களை ஆழமாகக் கிழிப்பது?

 

“எனது குரல்கள் உங்கள் பாதச்சுவடுகளின் ஒலியில்

அமுங்கிச் சிதைக்கின்றது

வேண்டாம்.

நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்

எப்போதும்.”

 

கவிஞர்கள் எப்போதும் தங்களின் கருத்துக்கள் மற்றவர்களின் கால்களின் கீழே ஒடுங்கிப்போவதாகவே பாடுவார்கள். ஆனால் எஸ் போஸ் அதைவிட மெல்லிதான பாதச்சுவட்டின் ஒலியிலேயே ஒடுங்கிப் போகின்றார். அல்லது உரத்துப்பாடுகின்ற எஸ் போஸின் குரலை விட மற்றவை எல்லாம் ஓங்கியிருக்கின்றன. கொடூரமான யுத்தத்தின் பின்புலத்தில் இந்த சிறு கவிஞனின் குரல் எப்படி கேட்கப்போகிறது. ஆனாலும் எஸ் போஸ் தன்னை ஒரு கவிஞனாகவோ கலைஞனாகவோ முன்னிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர் எப்போதும் தன்னைப்போலவே இருக்க விரும்புகிறார். ஒரு சாதாரண குடிமகனாக. அதற்காகவே பாடுகிறார்.

 

“வானத்திலிருந்து நட்சத்திரங்கள்

சிதறி உடைகின்றன,

நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்,

மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன

நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்

உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்

சில கணங்களோடும்

யாருக்காவது அனுமதியளியுங்கள்

அவர்களின் தொண்டைக்குழியிலிருந்து அல்லது

மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை

அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்.”

 

செல்களையும் மிதிவெடிகளையும் நட்சத்திரங்களாகவும் விதைகளாகவும் உருவகிக்கிறார். செல்கள் வெடிக்கும் போதும் மிதிவெடிகள் சிதறும் போதும் “நீங்கள்” என்று எஸ் போஸ் விழிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்காக தலைகுனியவும் செய்கிறார். இதிலிருந்து நீங்கள் என்பது யாராக இருக்கமுடியும் என்று ஊகிக்க தொடங்கலாம். சந்நதம் என்பது ஆவேசம். போரொன்றின் போது கூச்சலும் ஆவேசமும் அடைகின்ற தரப்பு – எப்படியும் யுத்தத்தில் முன்னேறுகின்ற தரப்பாகவே இருக்கும். அதுவும் இக்கவிதை எழுதப்பட்ட 1999 களில் ?

ஆதிக்க சக்தி ஓர் இனத்தையே அழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அழிப்பின் மூலம் கைப்பற்றுகின்ற ரத்தம் தோய்ந்த  நிலங்களின் மீது நின்று கூச்சலடைகின்றார்கள். உடன்பிறப்புக்களினதும் சொந்த இனத்தினதும் குருதியின் மீது நிற்கின்றவர்களைப் பார்த்து வெட்கிக்கின்ற மனோபாவம் எஸ் போஸிற்குரியது.  இங்கே எஸ் போஸ் ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி உணர்வுள்ள மனிதராகப் பரிமாணம் எடுக்கிறார்.

எஸ் போஸ் போரை விரும்பவில்லை. நிலமீட்பையும் நிலக்கைப்பற்றலையும் விரும்பவில்லை. எப்போதும் போல உயர் மட்டங்களே முடிவெடுத்து முடிக்கின்ற விடயங்கள் மீது சாதாரண மக்களின் நிலைப்பாட்டையும் கேட்கச் சொல்கிறார். எல்லாவற்றையும் பேசியே தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கடைசிவரை நின்றார்; அதையே பாடினார். கண் முன்னே தன் இனமே அழிந்து சீரழிகின்ற போது ஒரு கவிஞன் வேறு எதைத்தான் கேட்டுவிட முடியும்.

 

“எனது உடைந்த குரலில்

நானும் பாடவிரும்புகிறேன்

அன்பு நிறைந்த துயரப் பாடல்களை”

 

ஒரு கவிஞனின் குரலாக மட்டுமே எஸ் போஸின் கவிதைகளை அணுகமுடியாது. இது ஓர் இனத்தின் குரல். சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்புகின்ற – ஆனால் வாழமுடியாத அளவு போர் மூண்டுள்ள சூழலில் உழல்கின்ற மனிதர்களின் குரல். அதனாலேயே எஸ் போஸும் நானும் பாடவிரும்புவதாக சொல்கின்றார்.

எஸ் போஸின் கவிதைகளைப் பற்றியும் அவற்றைச் சார்ந்த இன்னபல விடயங்கள் பற்றியும் தொடர்ந்து வரும் பத்திகளில் பேசலாம்.

எஸ் போஸின் படைப்புகள்  முழுமையாக தொகுக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன. 2007 சமாதானக் காலப்பகுதியில் வவுனியாவில் உள்ள தனது வீட்டில்  ஏழு வயதுப் பிள்ளையின் முன்னர்  இனந் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒன்பது வருடங்களின் பின்னர் 2016இல் வடலிப் பதிப்பகம் மூலம் கருணாகரன், ப. தயாளன் மற்றும் சித்தாந்தனின் விடா முயற்சியால் “எஸ் போஸ் படைப்புகள்” என்று தொகுக்கப்பட்டன. ஆனால் இன்னமும் தொகுக்கப்படாமல் அவரின் சில  படைப்புகள் மறைந்து வாழுகின்றன.

 

(02)

 

கசுவோ இஷிகுரோ தனது நோபல் விரிவுரையில் இவ்வாறு கூறியிருப்பார்,

” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாச்சாரப் பின்னணியிலிருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது ஒரு மெய்நிகர் உள்ளுணர்வு. ”

இதை இன்றைய ஈழ இளைஞர்களின் எழுத்துக்கள் அல்லது கருத்து வெளிப்பாட்டின் போக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் அவசியமான ஒன்று. இந்தப் பத்தியின் இரண்டாவது பகுதி இதையொட்டியே இருக்கப்போகிறது.

இன்றைய இளைஞர்களின் எழுத்துக்கள் அல்லது கருத்து வெளிப்பாடுகள் என்றவுடன், முகப்புத்தகம் தான் ஞாபகத்தில் வருகின்றது. அதிலொன்றும் பெரிய பிரச்சனை இல்லை. இன்றைய கால ஓட்டத்தில் முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு – இளைஞர்களின் மத்தியில் அதிக பயனை அளிக்கின்றது. இளைஞர் ஒருவருக்கும் உலகத்திற்குமான நெருக்கமான உறவு இணையத்தால் – சமூகவலைத்தளங்களால் உருவாகின்றது என்பது முற்றிலும் உண்மை. இன்றைய இணையம் அல்லது சமூகவலைத்தளங்கள் ஒரு திரைக்குள் கொண்டு வந்து சேர்க்கின்ற தரவுகளும் தகவல்களும் ஏராளம். ஒரே கலாச்சாரத்திலிருந்து பழக்கப்பட்ட நாம், இணையத்தினூடு பல் கலாச்சாரம் சூழலிற்கு  அறிமுகப்படுத்தப்படுகிறோம். பல் கலாச்சாரம் என்ற பெயரில் உருவாகின்ற  மாயை – பெரும்பாலும் இளைஞர்களைச் சூழ்ந்துவிடுகிறது.

முகப்புத்தகங்கள் மூலம் உருவாகின்ற எழுத்தாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிக்கொண்டே போகின்றது. ஜனவரி புத்தகக் கண்காட்சியில் இதன் விளைவுகளை அவதானிக்க முடியும். முகப்புத்தகத்தின் மூலம் உருவாகின்ற எழுத்தாளர்கள் மீது பெரும்பாலும் அதிருப்தியே மிஞ்சுகிறது. இதற்கு அவர்கள் எழுத்தாளர்களாக உருவாகி வருகின்ற விதம் முக்கிய காரணம். அவர்கள் எழுத்தாளர்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஒருத்தர் முகப்புத்தகத்தில் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக ஓரிரண்டு பதிவுகள் இட்டவுடனேயே, வாசகர்கள் வட்டம் உருவாகத்தொடங்கிவிடுகிறது. இவர்களை வாசகர்கள் என்றோ இவர்களின் குழுமத்தை வாசகர் வட்டம் என்றோ சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனினும் வைத்துக்கொள்வோம். விருப்புகளும் கருத்துக்களும் மெதுவாக அதிகரித்துக்கொண்டுபோக – அவர் மேலும் மேலும் சுவாரஸ்யமாக எழுதத்தொடங்குகிறார். அவர்களின் சுவாரஸ்யங்கள்  அரசியலில் இருந்து தொடங்கி  சொந்தக் கதை மட்டுமாக எல்லையில்லாமல்  விரிந்துகொண்டே போகும். கூடவே அவரைப்போல பதிவுகளை இடுபவர்களையும் அதிக விருப்புகளை வாங்குபவர்களை பின்பற்றத்தொடங்குகின்றார். அவர் பின்பற்றுவோரும் இதே படிநிலையினூடாக வளர்ந்தவர்களாகவே இருக்கும். அவரின் வாசகர்கள் அதிகரிக்க காரசாரமாக சினிமா விமர்சனங்கள் எழுதுவதும் புத்தக விமர்சனங்களை அட்டையைப் பார்த்து எழுதுவதும் கிரிக்கெடைப் பற்றி எழுதித் தள்ளுவதுமாக எழுத்துக்களின் குப்பைக் குவியல்  ஒன்றை உருவாக்கி எழுத்தாளராக உருப்பெற்று விடுவார்கள். அவரைச் சார்ந்துள்ள – இதே மாயைக்குள் சிக்கித் தவிக்கும் குழுமம் – வெகு விமர்சையாக அவரின் புத்தகத்தை வெளியீடு செய்து,  அவரை  எழுத்தாளராக உருவாக்கி விடுவார்கள்.

இதன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் “கவிஞர்” என்று  முகப்புத்தகத்தில் தேடி அவர்களின் கவிதைகளையும் நிலைப்பாட்டையும் வாசித்தால் புரியும். ஓரளவு மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் வலைப்பூக்கள் (பிளாக்கர்) பக்கம்  நான் சொன்ன வாசகர்களின் வருகை மிகவும் குறைவு என்பதால் வலைப்பூக்கள் தப்பிப்பிழைத்திருக்கின்றன.

சரி, இதெல்லாம் ஒரு புறம் இருக்க இவர்களின் எழுத்துக்களினால் மறைந்து போகின்ற வேர்கள் பற்றி அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. சரியான வழிகாட்டல் இல்லாத எழுத்துக்கள் என்று பொதுப்படையாகச் சொல்லிவிடலாம். ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி வெண்ணிற இரவுகளில் எதை எழுதுகிறார்? டால்ஸ்டாய் போரும் அமைதியிலிருந்து பாமுக்கின் இஸ்தான்புல் நினைவுகள் வரை அடிப்படையாக தத்தம் கலாச்சாரத்தை முன்னிறுத்தியே எழுதினார்கள்- எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் என்பதுவும் அதுதானே. வேர்களைத் தான் தேடவும் அறியவும் வேண்டாம், வரலாற்றின் மீதான சரியான புரிந்துணர்வுடனும் எதிர்காலத்தின் தேவையை நோக்கிய தூரநோக்குடனும் சிந்திக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மேம்போக்கான அரசியல், போராட்ட , சமகால சிந்தனைகளுடன் வாதங்களை மேற்கொள்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இலகுவாக முடிவிற்குள் நுழைந்து விட முடியாது. இவர்களைத் தாண்டி இலக்கியத்தின் புரிதலுடன் வேர்களைத் தேடவும் விவாதிக்கவும் நிலையாக நிறுத்தவும் இளைஞர்கள் ஈழத்தில் செயற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

 

  1. “மரபின் அழிப்பென்பது ஓர் இனத்து இருப்பின் அழிப்பு வரலாற்றின் அழிப்பு . அதனை மீட்பதென்பது அதன் சந்ததிகளின் கடமை . சொற்ப அளவிலான நிலங்களும் மரங்களும் குளங்களும் ஏரிகளும் கட்டடங்களும் தமக்கென்ற வரலாற்றுக் காலகட்ட சாட்சியமாக நம்மிடம் எஞ்சி நிற்கின்றன . பண்பாட்டு உற்பத்திகள் கைவினைகள் வழக்குகள் ,நடைமுறைகள் , ஆற்றுகைகள் போன்ற சமூக அசைவியக்கத்தின் பேறுகளை நாம் அடையாளம் காணுதல் நமது காலகட்டத்தின் தேவையென உணருகிறோம் .பெரும்பான்மை இனத்தின் புதிய அடையாள உருவாக்கங்கள் நிகழும் இக்கால கட்டத்தில் நமது தொன்மையை அறிதலும் கொண்டாடுதலும் நம்மிடம் இருக்கும் ஓர் எதிர்ப்பு நடவடிக்கை .இந்த அடிப்படையில் நமது தொன்மங்களை புழக்கத்திற்குறிய கொண்டாட்டத்திற்குரிய இடங்களாக மாற்றுவதற்கான ஒரு முன்னெடுப்பே ‘தொன்ம யாத்திரை’ .

 

(மார்ச் 30 தொன்ம யாத்திரை முகநூல் பக்க பதிவிலிருந்து )

 

தொன்ம யாத்திரை பற்றிய குறிப்பு இது. ஒரு குழும இளைஞர்கள் தங்கள் தொன்மங்களை ஆவணப்படுத்தவும் கொண்டாடவும் களத்தில் இறங்கி இன்று வரை ஐந்து யாத்திரைகளை முடித்துள்ளனர்.

 

  1. இன்னொரு குழும இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட வேள்விக்கான தடை பற்றிய பொது உரையாடல் ஒன்றை வவுனியாவில் நடத்தினார்கள். அதில் தொன்ம கலாச்சாரம், பண்பாட்டுப் பின்னணி, நம்பிக்கை சார் வழிபாடுகள் என்று நீண்ட உரையாடல்களை நிகழ்த்தினார்கள்.

 

  1. கிரிஷாந்த்( புதியசொல் ), துவாரகன்(உவங்கள்) போன்ற இளைஞர்கள் தொன்மங்களைப் பற்றி தொடர்ந்து தமது கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டு வருகின்றார்கள்.

 

இவை என்னளவில் அவதானித்த உதாரணங்கள். மிக குறுகிய வட்டம் வேர்களைத் தேடியும், பெரிய இளைஞர் குழுமமே பாழ் கிணற்றுக்குள்ளும் விழுந்துகொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். மீண்டும் சில இடங்களை வித்தியாசமாக இனம்காட்டுகிறது கசுவோ இஷிகுரோவின்  நோபல் உரை.

 

” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாச்சாரப் பின்னணியிலிருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது ஒரு மெய்நிகர் உள்ளுணர்வு. ”

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!