home உன்னதம், கவிதை என் சகோதரியை நான் மெச்சுகிறேன்..

என் சகோதரியை நான் மெச்சுகிறேன்..

  • விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை
அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும்
நான் நினைக்கவில்லை
அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான்
அப்பாவையும் போலத்தான்
அவரும் கவிதைகள் ஏதும் எழுதுவதில்லை
எனது சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான்
மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன்
எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விட
செத்துப் போவதையே விரும்புவார்
இது – ஏற்கனவே நிலவும் ஒரு கவிதை போல
எனக்குத் தோன்றுகிறது – எனது சொந்தக்காரர்கள்
எவரும் கவிதை எழுதுவது இல்லை என்பது –

எனது சகோதரியின் காகிதக் கட்டுக்களினிடையில்
ஏதும் பழைய கவிதைகள் காணப்படவில்லை
அவளது கைப்பையிலும் கூட
புதிதாக எழுதப்பட்ட கவிதைகள் ஏதும் இல்லை
எனது சகோதரி என்னை மதிய உணவுக்குக் கூப்பிட்டபோது
அவள் கவிதைகளை எனக்கு வாசித்துக் காண்பிக்கிற
திட்டமேதுமில்லை என்பதையும் நான் அறிவேன்
அவளது சூப்புகளில் அற்புதமாக ருசி கூடியிருக்கிறது
அவளது கையெழுத்துப் பிரதிகளில்
காபியின் சிதறின சொட்டுகள் ஏதுமில்லை

நிறையக் குடும்பங்கள் இருக்கிறது எவருமே கவிதைகள்
எழுதாமல்
அப்படியே எங்கேயேனும் எழுதுபவிருப்பாரானால்
அநேகமாக ஓரே ஒருவராகத்தான் இருப்பார்
சிலவேளை கவிதை தலைமுறைகளினிடையே அருவியாகத்
தெளித்துக் கொண்டிருக்கும்
பரஸ்பர அனுபவத்தில் பெருநீர்ச்சுழிப்பாய்த் தங்கியிருக்கும்

எனது சகோதரி அற்புதமான பேச்சுநடை கொண்டவள்
அவளது கருத்துக்கள் விடுமுறை காலத் தபால் கார்டு
எழுதுவதற்கு அப்பால் போனதில்லை
ஒவ்வொரு வருடமும் மாறாமல் அதே வாசகங்கள்தான்
இருக்கும்
ஆனால் அவள் திரும்பவும் என்னிடம் வரும்போது
அவள் சொல்வாள்
அனைத்தும் பற்றி
அனைத்தும் பற்றி
அந்த எழுத்துக்களிலிருக்கும் அனைத்தும் பற்றி

 

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா : 1996 ஆம் வருடத்திற்கான நோபல் விருது பெற்ற போலந்து கவிஞர். உலகப் புகழ் பெற்ற அவரது கவிதைகள் உலகின் பல்வேறு மொழிகளிலும்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 

தமிழில் : யமுனா ராஜேந்திரன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!