home உன்னதம், நேர்காணல் எல்லாமும் ஒன்றுமில்லாததும்

எல்லாமும் ஒன்றுமில்லாததும்

ஆலிஸ் வாக்கர் உடன் ஒரு நேர்காணல்

 

புகழ்பெற்ற கவிஞரும் கட்டுரையாளரும் தமது ஊதா நிறம் என்ற புதினத்திற்காக புலிட்சர் பரிசை வென்றவருமான ஆலிஸ் வாக்கர் தமது எந்த இலக்கியப் படைப்பின் படைப்பாழத்திற்கும் அறைகூவல் விடுக்கின்ற வகையிலான வாழ்க்கையை வாழ்ந்துவந்தவர். ஜார்ஜியாவிலுள்ள புட்னம் மாவட்டத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிற பெற்றோருக்கு மகளாக, உடன்பிறந்தோர் எண்மரில் கடைக்குட்டியாக 1944இல் பிறந்தது முதல் குடிமக்களுக்கான உரிமைகள், கருப்பின மக்களின் கலைகள், அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் வந்த பெண்ணிய இயக்கங்கள் ஆகியவற்றில் அவர் கொண்ட ஈடுபாடு வரை அமெரிக்காவின் அதிமுக்கியமான, ஊக்கமூட்டிய பொது அறிவுஜீவிகளுள் ஒருவராகத் தம்மை நிலைநிறுத்திக்கொண்டவர். 1970களில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்கள் படைப்புகளின் மறுமலர்ச்சி என்று சான்றோர்கள் அழைத்த ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களின் சிக்கலான அனுபவங்களுக்குக் குரல்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பாலினச் சமவுரிமை, இன-பொருளாதார நீதி, போர், அமைதி எனப் பலதரப்பட்டப் பொதுச் சர்ச்சைகளில் அந்தக் குரலை ஒலிக்கச்செய்தார்.

எமோரி பல்கலைக்கழகப் பேராசிரியரும் வாக்கர் படைப்புகளின் ஆய்வாளருமான ருடால்ஃப் பி. பிர்டுடனான இந்த உரையாடல், வாக்கர் மேற்கொண்ட பயணத்தையும் அந்தப் பயணத்தின் பாதையில் அவர் கண்டடைந்தவற்றையும் காண்பதற்கான ஒரு வாயிலை நமக்கு அளிக்கிறது. மார்டின் லூதர் கிங் முதல் ஒபாமா வரை, ஜிம் குரோ சௌத்தில் மேற்கொண்ட குடியுரிமைப் பணி முதல் தற்போது பாலஸ்தீனம், பர்மா, இந்தியா ஆகியவிடங்களில் அவர் திரிந்து செயல்பட்டது வரை, ஊதா நிறம் முதல் சமீபத்தில் வெளியான அவரது கவிதைத் தொகுப்பான நெருக்கடியான சமயங்களில் தேவை ஆனந்தத் தாண்டவம்: கவிதைகளால் நிறைந்த ஓர் ஆண்டு வரை இது வாக்கரது படைப்புலகத்தினுள்ளும் அவற்றின் பின்னணியில் இருக்கும் தன்வரலாற்று நிகழ்வுகளினுள்ளும் உட்பொதிந்துள்ள பார்வையைப் புத்தாய்வுசெய்கிறது. பிர்ட் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வாக்கரும் வேறுபலரும் (அவர்களுள் மறைந்த ஹோவர்ட் சின், பேமா கோட்ரோன் ஆகியோர் அடங்குவர்) கலந்து விவாதிக்கும் உள்ளங்கவரும் ஒரு நீள்தொடரைக் கொண்ட, ‘உலகம் மாறிவிட்டது: ஆலிஸ் வாக்கருடனான உரையாடல்கள்’ என்ற நூலிலிருந்து இந்த நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது.

ஆலிஸ் வாக்கர் பல்லாண்டுகளுக்கு முன்பு புட்னம் மாகாணத்தைவிட்டு வந்தபிறகு அவருள் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் ஒன்று மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது: அது அமெரிக்காவிலுள்ள கலைஞர்களின் வகிபாகம் பற்றிய அவரது கோணமும் அதனால் தன்னைக் குறித்த அவரது கோணமும் தான். ‘’உங்கள் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் ஓர் எழுத்தாளர் என்ற வகையில் உங்களை ஆக்கிரமித்துள்ள முன்னீடுபாடுகள் எவை?” என்று பிர்ட் கேட்கிறார். அதற்கு ஆலிஸ் வாக்கர் இறுக்கும் விடை: “இந்த உலகத்தின் நெருக்கடியான வேளையில் அதற்கு உறுதுணையாக இருப்பதைவிட வேறென்னவாக இருக்க முடியும்?”

 

ருடால்ஃப் பிர்ட்: ‘உலகம் மாறிவிட்டது: ஆலிஸ் வாக்கருடனான உரையாடல்கள்’ நூலுக்காக உரையாடல்களும் நேர்காணல்களும் இடம்பெறுகிற முதல் தொகுதியின் வெளியீட்டைப் பதிவுசெய்யும் முகமாக நீங்கள் ஒரு கவிதை எழுதியுள்ளீர்கள். அந்த கவிதையின் உருவாக்கத்தையும் அதன் மையமாகத் தாங்கள் நம்புகிற கேள்விகளைக் குறித்தும் சொல்லுங்கள்.

ஆலிஸ் வாக்கர்: ஐக்கிய அமெரிக்க மாகாணங்களுக்கான ஜனாதிபதி பதவிக்கு ஒரு கருப்பின மனிதரைத் தேர்ந்ததன்மூலம் உலகம் மாறிவிட்டது. இது நிஜமாக நடக்கும்வரை இத்தகைய ஒரு நிகழ்வு பலருக்கும் கனவிலும் கூட நினைக்கக் கூடியதாக இல்லை. வட அமெரிக்காவின் விவகாரத்தில் இந்த வரலாற்றுத் திருப்பம் நிதர்சனமானது என்பதை நம்புவதில் ஒரு சிலருக்குச் சிறிதும் விருப்பமில்லை. புதிய யதார்த்தத்தை நம்ப மறுப்பதன்மூலம் அவர்கள் அதனை ஒட்டுமொத்தமாகத் தவறவிடவேண்டி வரலாம் என்பதை உணர்த்த அவர்களுக்கு ஒரு கவிதை (கட்டாயம்) தேவை. அமெரிக்கா என்னவாக இருக்கிறது (அல்லது) என்னவாக ஆகலாம் என்பதைப் பற்றிய புரிதலை மாற்றிக்கொள்வதன் வாயிலாகப் பயனடையக் கூடியவர்களுக்கு இது பயனற்றதாயும் துயரமாயும் ஆகிவிடக்கூடும். என்னிடம் பதவியேற்பு விழாவிற்காக ஒரு நாளிதழ் கவிதை கேட்டது, அது எந்த நாளிதழ் என்றோ அது கவிதையை வெளியிட்டதா என்றோ எனக்கு நினைவில்லை. நம்பிக்கையின்மையால் இதனைக் கொண்டாட முடியாதவர்களின் மீதே என் எண்ணம் முழுக்க இருந்தது. பதவியேற்பு நாளன்று ஜனநாயகம் இதோ! என்ற நிகழ்ச்சியில் அந்தக் கவிதையை வாசிக்க முடிந்தது. மிகவும் மதிக்கத்தக்க ஏமி குட்மனுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன்.

வாஷிங்டனிடமிருந்து கிடைக்கப்பெற்ற அற்ப நம்பிக்கையையும் சொற்ப அழகையும் பல்லாண்டு காலமாகத் தாங்கிக்கொண்டுவந்திருந்த எங்களைப் போன்றவருக்காக நான் கொண்டாட விரும்பினேன். ஒபாமா என்ற ஆளுமையின்மீது நாங்கள் தொடர்ந்து நம்பிக்கை கொண்டதும் அதன்பிறகு மாற்றத்திற்காக உழைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும். நாங்கள் இன்னும் சிறப்பான உலகத்தைப் பெறத் தகுதியானவர்கள், நாங்கள் எதை விழைகிறோமோ அதனை உருவாக்கக் கூடிய எங்களின் ஆற்றலின் மீதான நம்பிக்கையை உறுதியாக்குவதன்மூலம் அது கட்டாயம் நடைபெறும். மனிதர்கள் எங்கள் மேலுள்ள நம்பிக்கையை மீட்டெடுத்து, தீமையைக் காட்டிலும் பரஸ்பரம் உள்ள நன்மையை அதிகமாகப் பார்க்க முயலவேண்டும்.

 

ருடால்ஃப் பிர்ட்: நீங்கள் கடந்த ஆண்டைப் பயணம் செய்வதற்காகவும் உலகத்தைச் சுற்றிப்பார்க்கவும் தியானம் செய்யவும் ஒதுக்கினீர்கள். உங்களது வாழ்க்கையை இவ்விதம் ஏன் வடிவமைத்துக் கொண்டீர்கள்? இந்தக் காலகட்டத்தில் உங்களைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? சுற்றித் திரிதலும் தியானமுமான இந்தக் காலகட்டம் உங்கள் எழுத்தின் மீது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்திற்று?

ஆலிஸ் வாக்கர்: எனது எழுத்துப் பணிக்கும் மெக்சிகோவின் தியானம் செய்யும் ஓய்விடத்திற்கும் அப்பாற்பட்டு வேறு எங்கும் பயணம் செய்ய நான் திட்டமிடவில்லை. சிறிது காலத்திற்கு நான் அந்த இடத்துடன் பொருந்தி அமைதியாக இருந்தேன். உள்ளூர்க் கலைஞரால் வடிக்கப்பட்ட குழந்தையை/ இதயத்தை – குழந்தையோ அல்லது இதயமோ அதனைச் சிவப்புநிறப் பெருங்கல் ஒன்று குறிப்பால் உணர்த்த – நெஞ்சோடு அரவணைத்தபடி இருக்கும் தாயின் சிற்பத்தை பார்த்தபடி இருக்கும் எனது சொகுசணையில் (குஷன்) தியானம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். எனது பார்வைக்கு, வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியுடன் துய்க்கவேண்டும் என்பதை அறிந்தவர்களாகக் காட்சிதரும் மெக்சிகோ மக்கள் நிரம்பிய ஒரு உள்ளூர்க் கடற்கரையைத் தாண்டி வேறு எங்கும் செல்லவேண்டாம் என நினைத்தேன். அங்கே நிறைய தாய், தந்தையரும் குழந்தைகளும் இருந்தனர்; அவ்வப்போது வரும் நாயும் கதிரவனின் வெங்கதிர் படாமலிருக்க பனையோலை வேயப்பட்ட குடில்களும் உணவுவகைகளும் அங்கே ஏராளமாக இருந்தன. ஒரு வலைத்தளத்தையும் வலைப்பூவையும் தொடங்கினேன். எப்பொழுதாவது ஒருவேளை எழுதலாம் என நான் நினைப்பவற்றுக்கு அது தோதாக இருக்கும். இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக நான் கண்டுகொண்ட ஓர் ஒழுங்கமைவின்படி, அதீத பயன்பாட்டால் வற்றிப்போய்ச் சிறிது ஓய்விற்குப் பிறகு ஊற்றுவிட்டு நிரம்பும் ஓடையைப் போன்றவள் நான். கிட்டத்தட்ட தினமும் எனது வலைப்பூவில் எழுதத் தொடங்கினேன். கோலார்ட் (முட்டைகோஸ் போன்றது) கீரைகள் எனது தோட்டத்திலோ எனது அண்டைவீட்டுக்காரரின் தோட்டத்திலோ (துரதிர்ஷ்டவசமாக அவற்றை எறும்புகள் இரவோடிரவாகத் தின்றுவிட்டன) செழித்து வளர்வதற்கு நான் செய்த முயற்சிகளைப் பற்றியும் அடிக்கடி எழுதினேன். மெக்சிகோவிலிருந்து புறப்பட்ட ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே நெடுந்தொலைவிலுள்ள பர்மா, காசா போன்ற இடங்களுக்குச் சென்றது நானே ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம்.

பழைய முறையிலான எழுத்தும் வாழ்வும் – திட்ட அட்டவணைகள், புத்தகம் தொடர்பான பயணங்கள், விளம்பரங்கள் – இவற்றுள் எதுவும் என்னைக் கவர்ந்ததில்லை. எதிர்பாராமல் திடீரென எழுதுவதும் பயணம் செய்வதுமாக இருக்கின்ற இந்தக் காலகட்டம் என்னை உருமாற்றுவதாக உணர்கிறேன். நன்றியுடன் பச்சை பசுமையில் ஆழ்ந்துபோகும் ஓர் உணர்வு. ஆழ்ந்த அமைதியையும் தெளிவான, எதுவுமற்ற (காலியான), தனியொரு ஆத்மாவாக நான் மட்டுமே இருந்துகொள்ளக்கூடிய மனவெளியையும் வேண்டி ஆன்மா குரலெழுப்பும். நிச்சயம் இது மூப்படைவது எதற்கு என்பதன் ஒரு பகுதியே: பேரொளி வீசுகிறதும் நல்ல இடமாயிருக்கிற ஒன்றாக நான் கருதும் அனைத்துமாயிருக்கும் ஒன்றுக்குள் மெல்ல மெல்ல இழுத்துக்கொள்ளப்படுவதற்கு நம்மைத் தயார்படுத்தவே.

 

ருடால்ஃப் பிர்ட்: நீங்கள் விரைவில் தரம்ஷாலாவிற்குச் சென்றுவிட்டு காசாவுக்குத் திரும்ப இருக்கிறீர்கள். எது உங்களை இப்படி வெவ்வேறான இடங்களுக்கு இழுத்துச்செல்கிறது? இவ்விரு இடத்து மக்களுக்கிடையிலும் பொதுவான வரலாறு ஏதேனும் உள்ளதா?

ஆலிஸ்வாக்கர்: தரம்ஷாலாவில் மாண்புமிகு தலாய்லாமாவின் தரிசனம் எனக்குக் கிட்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரைச் சந்திக்கக் கிடைத்த தேதிக்கு மிக அண்மையில் (அதாவது) 31 டிசம்பர் 2009 அன்று காசாவில் நடைபெறும் ஒரு சுதந்திரப் பேரணியில் கலந்துகொள்ளும் திட்டம் இருப்பதனால் அவருடனான சந்திப்பை ரத்துசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சந்தித்தோம், அவர் முதல் முறை சான்ஃப்ரான்சிஸ்கோவுக்கு வந்தபோது என நினைக்கிறேன். நமது இளைஞரிடையே உரையாற்றுவதற்காக வந்திருந்தார், நானும் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். திபெத்திய மக்களின் தலைவராக இருக்கும்படி வாழ்க்கையால் வழங்கப்பட்ட பாரிய பொறுப்பைப் பணிவுடன் சுமக்கும், ஒரு வகையில் ஏறக்குறைய தாங்கவே முடியாத சூழ்நிலைகளிலும் ஆன்மாவை எப்படிப் பேணுவது என்பதற்கு உயிர்வாழும் சான்றை வேண்டி நிற்கிற நம்மைப் போன்ற பிறருக்கும் தலைவராக இருக்கும் தலாய்லாமாவை நான் மிகமிகப் போற்றுகிறேன். ருவாண்டா, காங்கோ, பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்குச் செல்லும்போது ஆன்மாவிடத்து அக்கறை காட்டும் அவரது முறைமையை முன்மாதிரியாகக் கொள்கிறேன். தமக்குத் தெரிந்தவற்றை – தியானம் மற்றும் தெளிந்த நோக்கு – அவற்றைத் தாமே கடைபிடித்ததன் மூலமாக இடைவிடாது தொடர்ந்து போதிக்கும் தன்மையைப் பயனுள்ளதாக உணர்ந்துள்ளேன். அவற்றுடன் அமைதியை மேம்படுத்துவதையும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதையும்கூட.

கேரளாவில் இருக்கும்போது எழுத்தாளர் அருந்ததி ராயுடனும் அவர் தாயாருடனும் நேரத்தைப் போக்கலாம் என்றிருக்கிறேன். சாமானிய மக்களிடத்தே கொண்ட ஓர் ஆழமான ஏன் மிகத் தீவிரமான பரிவைக் கொண்டதாக ராயின் எழுத்து இருக்கிறது. சாத்தியப்பாட்டின் மீது இப்படியொரு நம்பிக்கையையும் கடப்பாட்டையும் உற்பத்திசெய்த கேரளாவைப் பார்க்க ஆசைப்படுகிறேன். ராயின் தாயாரைப் பற்றி நான் கேள்விப்பட்டது குறைவே ஆனால் வல்லமை வாய்ந்தவராக இருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

புது தில்லியில் இருக்கும்போது மகாத்மா காந்திக்கு என் வணக்கங்களைச் செலுத்த விரும்புவேன். அங்குள்ள காந்தி நிறுவனத்தில் நான் சொற்பொழிவாற்ற இருக்கிறேன். மார்டின் லூதர்கிங் நம் நாட்டின் வெள்ளையர் மேலாதிக்கத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கிய சமயத்தில் நான் உயர்நிலைப்பள்ளி மாணவி. அப்பொழுதே அவரிடம் எனக்குப் பட்டெனத் தோன்றியது என்னவென்றால் எங்களை, கருப்பு நிறத்தவரான எங்களை, நிஜமாக உள்ளத்துக்குள் நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தார் என்பதே. நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படியே, அவ்விதமே எங்களை ஏற்றுக்கொண்டார். தமது உயிருக்கே ஆபத்து வந்தாலும் அதனைத் துச்சமாக மதித்து மக்களுடனே வாழ்ந்து, போதித்து, வழிநடத்தக்கூடிய அளவுக்கு இந்தியர்களிடம் இருந்த எதனை காந்தி நேசித்து, புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்தியா செல்ல விரும்புகிறேன். தாம் செய்யும் எந்தத் தியாகத்திற்கும் நாங்கள் தகுதியானவர்கள்தான் என்று மார்டின் லூதர்கிங் நினைத்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது; அது என்னை நெகிழ்த்தியது, கண்களைப் பனிக்கச்செய்தது. அவருக்கு எப்படித் தெரியும் என வியந்தேன். எப்படி எங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருந்தார்? இருந்திருந்து நாங்கள் எல்லாம் யார்? நானூறு ஆண்டுகால அடிமைத்தனத்திற்கும் அடிமை வாழ்வுக்குப் பின்னான இழிநிலைக்கும் பிறகு எங்களில் மிகப் பெரும்பாலானோர் மிகவும் சீரழிந்த நிலையில் இருந்தோம். ஆனால் அவரது அசாதாரணமான தீர்க்கமான அந்தக் கண்களால் எங்களின் சீரழிவுக்கும் அப்பால் தொலைநோக்குடன் கண்டு பரிவுடன் எங்களை அரவணைத்தார். தமக்குள்ளிருந்த தெய்விகத்தை உணர்ந்த அவர் எங்களிடமும் அதனைக் கண்டார். நமஸ்தே!

திபெத்திய மக்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் நடந்தவற்றுள் ஒற்றுமைகள் உண்டு. இவ்விரு மக்களின் மீதும் அத்துமீறல் நிகழ்ந்துள்ளது, நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அவர்களது பண்பாடு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் மூத்தகுடியைச் சேர்ந்த மக்களிடம் சீன, இஸ்ரேலிய அரசுகள் ஒத்த கொடூரத்துடன் நடந்துகொண்டுள்ளன. பாலஸ்தீனரும் திபெத்தியரும் பலத்த எதிர்ப்பைக் காட்டும் வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்களது பண்பாடு இயற்கையிலும் இசையிலும் மதம்-ஆன்மிகத்திலும் கலைகளிலும் ஆழ வேரூன்றியது. நிலத்தின் மேல் அபரிமிதப் பற்றுகொண்ட, பெரும்பகுதி உழவு செய்யும் குடியானவ மக்கள் அவர்கள். இந்தக் காரணந்தொட்டே நான் அவர்களுடன் என்னை ஒப்பவைத்து உணர்கிறேன். எப்பொழுதெல்லாம் தங்களது பழங்களையும் கனிமரங்களையும் காய்கறிகளையும் நிலத்தையும் நேசிக்கிற மக்களை நான் சந்திக்கிறேனோ அப்பொழுதெல்லாம் என்னுள் இருக்கும் விவசாயி அவர்களுடன் கைகுலுக்கக் காண்கிறேன். இதைவிட வேறெந்த அரசியல் தொடர்பும் எனக்குத் தேவையில்லை. சந்தேகமேயில்லாமல் இதற்கு எனது சமயத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கையே காரணம். இயற்கையும் நாமும் கடவுளும் ஒன்றே வேறல்ல என்பது எனது நம்பிக்கை. எனது உள்ளுணர்வால் உந்தப்பட்டு அடைந்த இந்தப் புரிதலுக்கு எனது அர்ப்பணம்.

 

ருடால்ஃப் பிர்ட்: நீங்கள் எழுத்தாளராக இருந்த ஆரம்ப காலத்தில் ஜீன் டூமரின், ‘பிரம்பு’ (Cane), ஸோரா நீல் ஹர்ஸ்டனின், ‘அவர்களின் கண்கள் கடவுளைப் பார்த்துக்கொண்டிருந்தன’ (Their Eyes Were Watching God), ஃப்ளானெரி ஓ கானரின், ‘உயர்ந்து எழும்பும் எதுவும் ஒருமுகப்படவேண்டும்’ (Everything That Rises Must Converge), எர்னெஸ்ட் ஜெ. கெயினஸின், ‘செல்வி ஜேன் பிட்மனின் தன்வரலாறு’ (The Autobiography of Miss Jane Pittman), சார்லஸ் டிக்கென்ஸின், ‘இரண்டு நகரங்களின் கதை’ (A Tale Of Two Cities), பெஸ்ஸி ஹெட்டின், ‘மழை மேகங்கள் திரளும்போது’ (When Rain Clouds Gather), அயி க்வெய் அர்மாவின், ‘அழகானவை இன்னும் பிறக்கவில்லை’ (The Beautiful Ones Are Not Yet Born) ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினீர்கள். உங்களது கலை வளர்ச்சிக்கு முக்க்கியமானதாகத் தாங்கள் கருதுகிற எழுத்தாளர்களின், அவர்களுடைய புத்தகங்களின் வெறும் ஒரு சோற்றுப்பதம் தான் இது. ஓர் எழுத்தாளர் என்ற முறையிலும் உலகியலாளர் என்ற முறையிலும் எந்த புனைவு அல்லது புனைவல்லாத நூல்களுடன் தற்போது ஊடாடுகிறீர்கள்?

ஆலிஸ் வாக்கர்: வாசித்தல் என்பது பற்பல படிநிலைகளைக் கொண்டது. எந்த வகையாயிருந்தாலும் தற்காலத்திய நெருக்கடியைப் புரிந்துகொள்வதற்காக வாசிப்பது ஒருவிதம்; மனமகிழ்ச்சிக்காக வாசிப்பது மறுவிதம்; ஆன்மாவுக்காக வாசிப்பது மற்றொரு விதம்.

பாலஸ்தீனிய மக்களை – பெருவாரியாகக் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களை – அழிப்பதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை (எனது பங்கும்கூட அதில் இருப்பதை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்) பயன்படுத்துகிறது. காசாவின் இந்தச் சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை அமெரிக்காவிற்கு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டிருப்பதால் பாலஸ்தீன, இஸ்ரேலிய எழுத்தாளர்களான அலி அபுனிமா, சரீ மக்திசி, டேவிட் க்ராஸ்மன், மார்சியா ஃப்ரீட்மன் உள்ளிட்ட பலரது புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்திய எழுத்தாளர்கள் சிலர் எழுதுவதும் எனக்குப் பிடிக்கிறது. “அஞ்சறைப் பெட்டியின் தலைவி” (Mistress of Spices) புதினம் எனக்கு மிகவும் பிடித்தது. அருந்ததி ராய் என்ன எழுதினாலும் அதனைப் படிப்பேன். அண்மையில் “இந்தியாவை விட்டு வெளியேறல்” என்ற ஓர் அருமையான புத்தகத்தைப் படித்தேன். அது புதினமன்று, இந்திய நாட்டை விட்டுவிட்டு ஃபிஜி போன்ற மிகவேறான தேசங்களுக்குச் சென்று குடியேறிய தன் உறவினர்களையும் மூதாதையர்களையும் தேடி ஒரு பெண் உலகம் முழுக்க மேற்கொள்ளும் பயணங்களைப் பற்றியது. நான் ரசித்த அனைத்துப் புதினங்களையும் எழுத்தாளர்களின் பெயர்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு எனது நினைவாற்றல் இன்னும் கூர்மையாயிருந்தால் நன்றாயிருக்கும். ஜெர்ட்ரூட் ஸ்டெய்ன், ஆலிஸ் பி. டோக்லாஸ் மற்றும் அவர்களது வியட்நாமிய சமையல்காரரைப் பற்றிய வியட்நாமிய எழுத்தாளர் மோனீக் ட்ருவாங் எழுதிய உப்பு நூல் (The Book of Salt) புதினத்தை என்னால் ஒருநாளும் மறக்க முடியாது. சுறாமீன் உரையாடல்கள் (Shark Dialogues) எழுதிய ஹவாயைச் சேர்ந்த எழுத்தாளர் கியானா டேவன்போர்ட்டின் விசிறி நான். ஹவாயைப் பற்றிய அவரது புதினங்களைப் படிக்காமல் யாரும் ஹவாய்க்குப் போகக்கூடாது.

தினசரியும் தம்மபதம், உபநிடதங்கள் டெங் மிங்-டாவ் எழுதிய 365 டாவோ, ஆன்மிகப் பாடங்களைப் போதிக்கும் இன்னும் பிற நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஜாக் கார்ன்ஃபீல்டின் எழுத்து எனக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாகக் குறுந்தகட்டில் வெளியான நூல்களான பௌத்த(மத) உளவியலின் வேர்களின், புத்தமத அறிமுகம், இதயத்தின் பாதையுடன் ஆகியவை பிடிக்கும். போரை மறுதலிப்பவரும் தொன்மவியலாளரும் கதைசொல்லியாக (இது குறுந்தகட்டிலும் உண்டு) இருப்பவருமான மைக்கேல் மீட்டின் எழுத்தும் பிடிக்கும். கிளாரிஸ்ஸா பிங்கோலா எஸ்தே தொகுத்து எழுதிய பழங்கதைகள் பல்லாண்டுகளாக எனக்கு ஆதரவாக இருந்துள்ளன. கற்பனையின் அரங்கம் என்ற அவரது இரண்டு தொகுதிகள் கொண்ட ஒலிநூல் அனைவரின் ஒலி நூலகத்திலும் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஒன்று என்பது என் கருத்து. கார்ல் ஜங், லாரன்ஸ் வான் டெர் போஸ்ட் இருவரையும் படித்துப் பயனடைந்துள்ளே. வான் டெர் போஸ்டைப் படிப்பதற்குக் காரணம் காட்டுவாசிகள் மண்ணுக்கு நெருக்கமான தமது பழமரபான முறைப்படி ஆப்பிரிக்காவில் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் காலத்தில் வாழ்ந்தவர். அவர்களது மென்மை, இரக்கம், தம்மைச் சூழவுள்ள உலகைக் கபளீகரம் செய்யும் ஆர்வமற்று இருக்கும் தன்மை ஆகியவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. ஜேன் குடாலின் எழுத்துகளையும் அத்துடன் மலிடோமா சோமேவின் எழுத்துகளையும் விரும்பிப் படித்திருக்கிறேன். மனிதக் கற்பனைக்கும் வளர்ச்சிக்கும் தெம்பூட்டக்கூடிய வெகுமதிகளாக ஆப்பிரிக்காவின் ஆறுதலளிக்கும் ஞானம், நீரினதும் ஆத்மாவினதும் ஆகிய நூல்கள் திகழ்கின்றன. பேமா கோட்ரோனின் எழுத்துகள் மீது எனக்குப் பெருத்த மதிப்புண்டு. புத்தகங்கள் எனக்கு வெகு பிடித்தமானவை (புத்தகங்களும் வீடுகளும் – குறிப்பாக ஒரு நல்ல வீடு – இவையே சிறுவயது முதல் நான் மிகவும் ஏங்கிய விஷயங்கள்), ஆனால் இப்பொழுது எதைப் படிக்கவேண்டும் என்பதில் தேர்ந்த கவனத்துடன் இருக்கிறேன். நேர்மையோ ஆன்மிக ஆற்றலோ அற்ற எதையும் என்னால வெறுமனே படிக்கவியலாது என்பதை உணர்கிறேன். என் படுக்கைக்கு அருகில் பின்வரும் நூல்கள் இருக்கும்: ஐ சிங் (I Ching) மிக நீண்டகாலமாகப் பயன்பட்டுவந்ததனாலேயே இதனை எனக்குப் பிடித்திருப்பதாய்ச் சிலசமயம் உணர்கிறேன், சூசன் ஒயிட்டின் மதர்பீஸ் டேரட்: டெக் அண்ட் புக் (Motherpeace Tarot: Deck and Book) இதையும் அடிக்கடி படிப்பதுண்டு, புதிய சோதிடம் [சீனமுறையும் மேற்கத்திய முறையும்] (இது ஓர் அற்புதமான புத்தகம் – அவர் குரங்குகளைப் பற்றிச் சரியாகச் சொல்வதால் மட்டுமல்ல), கோல்மன் பார்க்ஸ் மொழிபெயர்த்த அத்தியாவசியமான ரூமி. இதனைப் படித்துப் பரவசப்பட்ட இலட்சக்கணக்கான வாசகர்களும் ரூமியும் நானும் ஒரே நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து மனத்திற்கு இதமாக இருந்தது.

போதனையின் மூலம் அறிவைப் போலவே ஆன்மாவும் பயனடைகிறது என்பதையும் அந்தப் போதனை தயாராகக் கிடைக்கிறது என்பதையும் மக்கள் பலரும் உணர்வதில்லை. நாமே தான் அதனை மும்முரமாகத் தேடிக் கண்டடையவேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சர்ச்சுக்குச் செல்வது நல்ல ஊட்டமான அனுபவம் என்றாலும் அது ஒரு குறிப்பிட்ட உணவுவகை மட்டுமே கிடைக்கக்கூடிய உணவகத்திற்கு உணவருந்தச் செல்வது போன்றது. ஆன்மா ஒரு பருக்கையை மெல்லலாம் ஆனால் அது உண்மையாகக வேண்டுவது எதுவோ அது அங்குக் கிடைக்காமலும் போகக்கூடும். ஆன்மாவை அதன் தளைகளிலிருந்து விடுவித்து அதற்குத் தேவையான, அதற்கேயான தனிச்சிறப்பான ஊட்டத்தைத் தேடித் திரியவிடுவதே ஆன்ம மேம்பாட்டினை உறுதிசெய்யக்கூடியதன் ஒரு பகுதியாகும். நொறுக்குத் தீனிகளும் அதீதமாக வெந்த கீரைகளும் மட்டுமல்ல, இயற்கை உணவும் தூய்மையான நீரும் இவை போன்ற ஆன்மாவிற்குத் தேவையான அனைத்துவித ஊட்டங்களும் வளமாகக் கிடைக்கிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்று சொல்லலாம்.

அடிப்படையில் நான் ஓர் ஆன்மவாதி (அனைத்திற்கும் ஆன்மா உண்டு என்பவள்) மற்றும் சமயத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கைவாதி (இயற்கையையும் இயற்கையின் ஆற்றலையும் வழிபடுபவள்). ஆனால் ஞானத்தை எங்கே கண்டாலும் அதன் வசப்படுபவள் நான். புத்தர், ஏசு, கவிஞர் ரூமி, சோமே, மீட், கார்ன்ஃபீல்ட், கோட்ரோன், ஏமா, ஃபிடல் இவர்கள் எல்லோரும் எனக்கு நெருக்கமானவர்களே.

 

ருடால்ஃப் பிர்ட்: மிகவும் அழகான, நிலைத்து நிற்கக்கூடிய எழுத்துகளைக் கதை, கட்டுரை, கவிதை, புதினம் எனப் பல வகைமைகளிலும் படைத்துள்ளீர்கள். ஒவ்வொரு வகைமையின் மீதுமுள்ள ஈர்ப்பையும் அவை விடுக்கும் சவாலையும் பற்றி விரிவாகக் கூற முடியுமா? உரையாடல்களை எழுதுவதில் உங்கள் பலம் வெளிப்படையாகத் தெரியும். அத்தகைய எழுத்தாளரான உங்களுக்கு நாடகங்கள் எழுதும் எண்ணமுண்டா?

ஆலிஸ் வாக்கர்: ஊதா நிறத்துக்காகத் திரைக்கதை எழுதத் தொடங்கியபோது நான் அதை ரசித்தேன் (அது திரைப்படத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை). நாடகங்கள் எழுதுவதை என்னால் கற்பனை செய்ய முடியும். எனக்கு நடிகர்கள் வேண்டுமே என்ற எண்ணமே அதன் குறுக்கே நிற்கிறது. என்னால் எந்த அளவுக்கு முழுமையாகச் செய்ய முடியுமோ அதற்குமேல் செய்யத் தேவையிராத வகைமையை எழுதுவதில் எனக்குப் பாரிய திருப்தி ஏற்படுகிறது. கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேடும் முயற்சியிலோ அதைப் பற்றி நினைப்பதினாலோ கூட எனது கவனம் சிதறிவிடும் என்பதை என்னால் உய்த்துணர முடிகின்றது. மேலும் என் வாழ்க்கையின் இந்தத் தருணத்தில் எனது முதற்காதலான கவிதைக்கு மீண்டும் திரும்பிவருவதாகத் தோன்றுகிறது. ‘நெருக்கடியான சமயங்களில் தேவை ஆனந்தத் தாண்டவம்: கவிதைகளால் நிறைந்த ஓர் ஆண்டு’ என்ற கவிதை நூலைக் கடந்த ஓராண்டில் எழுதியுள்ளேன். ஒரு வாரத்துக்குப் பல கவிதைகள் என்ற விதத்தில் அதிலுள்ளவை எழுதப்பட்டன.  திடீர் விருந்தாளியைப் போல் ஒரே நாளில் உருவான பல கவிதைகளும் உள்ளன.

 

ருடால்ஃப் பிர்ட்: கதைகளும் மொழியின் கம்பீரங்களும் ஒருபுறமிருக்க அவற்றுடன் உங்களது புனைவில் இடம்பெறுவதில் மறக்கமுடியாதவை கதாபாத்திரங்கள் ஆகும். கதாபாத்திரங்களின் உருவாக்கத்திற்குத் தங்களை இட்டுச்செல்லும் கூறுகள் எவை? கதாபாத்திரங்களை உருவாக்குகிற செயல்முறையையும் பெயர்கள் வைப்பதையும் பற்றி விளக்கமாகக் கூறுகிறீர்களா?

ஆலிஸ் வாக்கர்: கதாபாத்திரங்களை உருவாக்குவது எனக்கு மிகவும் பிரியமானது. ஏனெனில் நமது குழந்தைகளைப் போல யதார்த்தத்தில் தம்மைத் தாமே உருவாக்கிக் கொள்பவை அவை. நம்மால் ஏதோ ஓரளவு, எல்லாமுமே அல்ல, செய்யப்பட்ட அபாரமான ஒன்று மெல்ல மெல்ல உயிர்பெறுவதை நாம் தள்ளி நின்று பார்க்கவேண்டும். அது மாயாஜாலம் மிக்கது. அவற்றுக்குப் பெயரிடுவதும் அப்படிப்பட்ட ஓர் அற்புதமே. ஒரு சில நூல்களை எழுதும்போது சிறுமியாக இருந்தபோது நான் கேட்ட நண்பர்களின், குடும்பத்தினரின், உறவினரின் பெயர்களை எனக்குப் பிடித்தமான ஏதோவொரு விதத்தில் கவிநயம் உடையதாகத் தோன்றிய நபர்களின் பெயர்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முயல்வேன். வேறு எந்த விதத்திலும் மரியாதை செய்யப்படாத, நினைவுகூரப்படாத குடும்பத்தை மரியாதை செய்யும்விதமாக ஊதா நிறம் என்ற புதினத்தில் இதனைச் செய்தேன். (உண்மையாக இருந்த ஒரு நபரின் அடிப்படையில்) தனது மனைவியை மோசமாக நடத்துகிற ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இருக்க, அந்த உண்மையான நபரின் தாய் அல்லது மகளின் பெயரை அந்தக் கதாபாத்திரத்தின் மனைவியின் பெயராக வைப்பது என இதுபோன்று பெயர்களை குழப்படியாக மாற்றிவைத்தது எனக்கு வேடிக்கையாக இருந்தது. இறந்தபிறகு அந்த மக்களுக்காக பரஸ்பரம் அவர்களைப் பற்றி நான் கற்பிக்க முயல்வதற்கு இது ஒரு வழி என்று நினைக்கிறேன். அத்துடன் கருணையைத் தூண்டவும். அதேபோன்று, கிராஞ்ச் கோப்லண்ட் (Grange Copeland) என்ற பெயர் நிலத்தைக் குறிப்பதற்காக (Grange – பண்ணை) மட்டும் வைக்கப்பட்டதன்று; நான் சிறுமியாக இருந்தபோது நாங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த நிலத்தின் சொந்தக்காரராக இருந்த ‘’கோப்லண்ட்” என்ற பண்ணையாருக்காக வைக்கப்பட்டது. நிலத்திற்கும் உழவருக்கும் நிலக்கிழாருக்குமான பந்தம் மிக உறுதியானது. ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் இது மிக அரிதாகவே இலக்கியத்தில் தெரிந்தே பின்னப்பட்டுள்ள ஒன்றாக உள்ளது. மெம் கோப்லண்டின் பெயர் பிரெஞ்சு மொழியின் ”அதே” என்ற பொருள் கொண்ட லா மெமே என்ற சொல்லிலிருந்து வருவது. இது குடும்ப வன்முறைக்கு அப்பெயர் ஏற்படும் முன்னமே அது பரவலாக நிலவியது என்பதை வாசகர்களுக்குக் குறிப்பால் உணர்த்துவது. கல்லூரியில் படித்த காலத்தில் எனக்கு பிரெஞ்சு பிடிக்கும், கல்லூரி வளாகத்தில் நான் பிரெஞ்சு அகத்தில் வசித்தேன்.

எனக்குப் பரிச்சயமான கோவிலை எழுதியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கவனத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்ட பல பெயர்களை அதில் உருவாக்குவது மேலும் மகிழ்வூட்டியது. தனது கதாபாத்திரங்களுக்கு பெயரிடுவதை டிக்கென்ஸும் மிக விரும்பினார். குறுந்தகட்டில் (DVD) டிக்கென்சைப் பார்ப்பதில் களிப்புறும் நானும் எனது நண்பர் ஒருவரும் சமீபத்தில்தான் வெறிச்சிட்ட வீடு பார்த்து முடித்தோம். என்ன அருமையான பெயர்கள்! சீமாட்டி டெட்லாக் (Dedlock – முட்டுக்கட்டை), திரு. கப்பி (Guppy – ஒரு வகை ஆற்றுமீன்), திரு. ஸ்மால்வீட் (Small weed – சிறிய களை). ஒவ்வொருவருமே கச்சிதமாக வேடிக்கையானவர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். எழுத்தாளர்களான நாம் நமது படைப்புடன் விளையாடுவதற்கும் ஏதோவொரு பத்தியையோ அத்தியாயத்தையோ பல நூறாவது முறை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கும் போது (சலிப்பை நீக்கி) நம்மை நாமே மகிழ்வூட்டிக்கொள்வதற்குமான ஒரு வழியே கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுவது என நினைக்கிறேன்.

 

ருடால்ஃப் பிர்ட்: உங்களது எழுத்து வாழ்க்கையின் தொடக்க காலகட்டத்தில் உங்களின் ஆக்கிரமித்துள்ள முன்னீடுபாடுகளாக ஒன்றுக்கொன்று ஓரிடத்தில் இணைந்திருக்கும் இரண்டு விஷயங்களைப் பற்றி “ஆன்மிகரீதியான உயிர்வாழ்வும் எனது மக்களின் உயிர்வாழ்வின் முழுமையுமே எனது மனத்தில் எப்பொழுதும் முன்னுரிமையுடன் நிற்பவை. ஆனால் அதற்கும் அப்பால், கருப்பினப் பெண்களின் மீதான ஒடுக்குதல்களை, அவர்களின் மனப்பிறழ்வுகளை, விசுவாசங்களை, வெற்றிகளைப் புத்தாய்வுசெய்து நாடுவதையே எனது கடமையாகக் கொண்டுள்ளேன்” என்று கூறினீர்கள். எழுத்தாளராக இந்தக் காலகட்டத்தில் உங்களை ஆக்கிரமித்துள்ள முன்னீடுபாடுகள் எவை?

ஆலிஸ் வாக்கர்: இந்த உலகத்தின் நெருக்கடியான வேளையில் அதற்கு உறுதுணையாக இருப்பதைவிட வேறென்னவாக இருக்க முடியும்? மனிதர்களான நாம் அச்சுறுத்தக்கூடிய முனைக்குத் திரும்பியுள்ளோம். நமது கூட்டை நாமே சின்னாபின்னமாக்கியுள்ளோம். தண்ணீரும் நிலமும் மறுக்கப்படும் பாலஸ்தீனர்களைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றி மட்டுமன்று ஒழுக்கத்தைப் பற்றிய விலைமதிப்பற்ற போதனையை நமக்கெல்லாம் வழங்கக்கூடிய ஆங் சான் சூகியைப் பற்றியோ நான் எழுதினால், வன்முறையையும் போரையும் பற்றியோ காய்கறிகளையும் கோழிக்குஞ்சுகளையும் பற்றியோ எழுதினால் இதே விஷயங்களில் அக்கறைகொண்டவருடன் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். உயிர்வாழ்தல் குறித்த கலந்துரையாடலை, நளினத்துடனும் நியாயத்துடனும் பண்பட்ட தன்மையுடனும் முன்னெடுத்துச்செல்ல இயலும் என்று நம்புகிறேன். உயிர்வாழும் தகுதியையுடைய ஓர் உயிரினமாக நாம் உயிர்பிழைத்து வாழ்வதற்குப் பல்வேறு தரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

 

ருடால்ஃப் பிர்ட்: 1976இல் நீங்களூம் உங்கள் தோழியும் சக எழுத்தாளருமான மறைந்த ஜூன் ஜோர்டனும் இணைந்து சகோதரித்துவத்தை நிறுவினீர்கள். இந்தக் குழுவின் தொடக்க மூலங்கள் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா? எத்தனை நாட்களுக்கொரு முறை சந்திப்பீர்கள்? அந்தச் சந்திப்புகள் ஏதாவது கூறிப்பிட்ட வழியில் அமைக்கப்பட்டனவா? அமெரிக்க, உலக இலக்கியத்தின் மீது அத்தகைய ஆழமானதும் பரந்ததுமான தாக்கத்தை சகோதரித்துவத்தின் எழுத்தாளர்களான ஜூன் ஜோர்டன், டோனி மாரிசன், டோஷேக் ஸாஞ்சே ஆகியோர் ஏற்படுத்துவர் என்பதை அந்தச் சமயம் கற்பனை செய்தீர்களா?

ஆலிஸ் வாக்கர்: எங்களை மீறிய தரவரிசைமுறை எதையும் எங்கள் மீது திணிக்க முற்படும்போது அதனை முதல்நிலை ஆட்களாக எதிர்த்து நின்ற போராளிகள் நானும் ஜூனும் தான். (கருப்பினப் பெண் எழுத்தாளர்கள்) ஒருவரை ஒருவர் மதிக்கவும் அறிந்துகொள்ளவும் கருப்பினப் பெண் எழுத்தாளர்களிடையே ஒரு வெளியை உண்டாக்கவும் இந்த வெளியின் மூலம் வெளியிலிருந்து வரும் எந்த ஒன்றாலும் எங்களுக்குள் சண்டை மூட்டிவிட முடியாத நிலையை, போட்டியாக எண்ணவைக்காத நிலையை உருவாக்க எண்ணினோம். இதுவே சகோதரித்துவத்தின் நோக்கமாகும். நான் இன்னும் நியூயார்க்கிலேயே இருந்த சமயம் நாங்கள் சில முறைகள் மட்டுமே சந்தித்தோம். நான் கலிஃபோர்னியாவுக்கு இடம் மாறினேன், பிறகு ஜூனும் கூட மாறினார்.  பெண்கள் வட்டங்களினுடனான எனது தொடர்பு தொடர்ந்தது. பத்தாண்டுகளாக ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்கள் சங்கத்தின் உறுப்பினராக நான் இருந்துள்ளேன். அத்துடன் பல இனப் பெண்களைக் கொண்ட ஒரு பெண்கள் பேரவையில் ஏழு ஆண்டுகள் இருந்தேன் (இப்பொழுது தற்காலிக ஓய்வில் உள்ளது). நாம் இருக்கிற இந்தக் காலத்தில் மனித மேம்பாட்டிற்கு (இத்தகைய) வட்டங்கள் முக்கியமானவை. எந்தக் கவலையுமின்றி மக்கள் தங்களது சோகங்களையும் அச்சங்களையும் வெளிப்படுத்தக் கூடிய பாதுகாப்பான ஓரிடத்தில் உலகத்தின் சிந்தனையை நம்மால் மடைமாற்ற இயலும். ஏனெனில் இலட்சக்கணக்கில் இருக்கும் இத்தகைய வட்டங்கள் ஒன்றாக இணைந்து நமது பாதுகாப்பான பொறுமையான இல்லங்களிலிருந்து உருவாகி வந்த திடமான, பயனுள்ள சிந்தனையைக் கைகோத்து வரவேற்று உள்வாங்க இயலும்.

 

ருடால்ஃப் பிர்ட்: இலக்கியம், மதம், கருப்புப் பெண்ணியம் ஆகியவற்றில் பல புதிய ஆய்வுக்களங்கள் உருவாவதற்கு மூலக் காரணமாக விளங்கிய, பரவலாக எடுத்துக் காட்டப்பட்ட மகளிரியம் பற்றிய உங்களது வரையறையை நமது அன்னையரின் தோட்டங்களைத் தேடி நூலில் எங்களுக்கு வழங்கினீர்கள். அதன் இறுதி (வடிவ) வரையறை பின்வருமாறு: “ஊதாவுக்குக் கத்தரிப்பூ நிறம்போல் மகளிரியத்திற்குப் பெண்ணியம்”. இந்த வாய்பாட்டமைவில் நீங்கள் பெண்ணியத்தைவிட மகளிரியம் தீவிரமானது என்று மறைமுகமாகச் சொல்லுகிறீர்கள். மகளிரியம் பற்றியும் பெண்ணியத்துடனான அதன் தொடர்பு பற்றியும் தற்சமயம் உங்கள் எண்ணம் என்ன?

ஆலிஸ் வாக்கர்: வெள்ளை நிறத்தவரைப் பிற நிறத்து மக்களுக்கு மேல் இருத்துகிற இனக் கருத்தாக்கம் இந்த உலகத்தை ஆதிக்கம் செய்கிறவரை கருப்பின/ பிற நிறம் சார்ந்த பண்பாட்டிலிருந்து வருகிற மகளிரியலாளரின் காண்கோணம் மேலும் ஆழமான, மேலும் தீவிரமான ஒன்றாகவே இருக்கும். இது தர்க்கபூர்வமான ஒன்றுதான். ஓர் எடுத்துக்காட்டாக, பொதுவாகப் பேசுகையில், வெள்ளைநிறப் பெண்கள் வெள்ளை இன ஆண்களின் ஒடுக்குமுறையைச் சமாளிக்க, கருப்பினப் பெண்களோ தங்கள் இனத்து ஆண்களாலும் வெள்ளை இனத்து ஆண்களாலும் வெள்ளை இனத்துப் பெண்களாலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். ஆனால் சற்றே மகிழ்ச்சிக்குரிய பக்கத்தில், சொல்லின் படைப்பாளரைப் போல ஆடல்பாடல் மூலமாகப் புவியுடனும் அண்டத்துடனும் தொடர்புகொள்ளும் உள்நோக்கத்துடன் இருப்பவரான மகளிரியலாளரை நாம் கட்டாயம் மரியதை செய்யவேண்டும். முழுமையாக; நன்றியுடன் பேருவகையுடன். தான் எதிர்க்கிற அந்த ஒடுக்குமுறையின் கீழ் தனது வாழ்வைத் தானே வாழக்கூடிய போராட்டமான ஒரு வாய்ப்பு தரப்படும்போது மகளிரியலாளர் எந்தக் குறையும் சொல்வதில்லை. தனது சொந்த வீட்டிலிருந்து பிடித்துவரப்பட்டு நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டும் இனவெறிக்கு ஆளாகியும் இப்படி அவளது வரலாறு மிகவும் கரடுமுரடாக இருந்துள்ளமையால் தனக்குள் இன்னும் மறைந்திருக்கக்கூடிய ஏதேனும் அகவயப்பட்ட அடிமைத்தனத்தை விட்டுவிட்டு சுதந்திரத்தையே அன்றாடம் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவள் ஹேரியட் டப்மனுக்கு மரியாதை செலுத்துகிறாள். பெண் விடுதலை என்பது என்னவாக இருந்தாலும் அது சுதந்திரத்தைப் பற்றியது. இதனை அவள் அறிவாள். இதனைக் கூறிய பிறகு நான் “பெண்ணியவாதி” என்று சொன்னாலும் “மகளிரியவாதி” என்று சொன்னாலும் அதைப் பற்றி எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. இந்தச் சொல்லைப் படைத்ததன்மூலம் பெண்களின் உலக இயக்கத்தின் வானவில்லில் புவியின் இரண்டாந்தர மூன்றாந்தர குடிமக்களாகப் போதும்வரை உழன்ற வெள்ளை அல்லாத நிறத்துப் பெண்களைத் தனித்து நிறுத்துவது எது என்பதை நான் மென்மேலும் தெளிவாகப் பார்க்க முயல்கிறேன். ஒரு நாள், நமது பூமியும் இனமும் உயிர் பிழைத்திருந்தால், நாங்கள் மீளவும் புனிதராகவும் சுதந்திரமானவராகவும் அழைக்கப்படுவோம். எங்களுக்கேயுரிய சுட்டுப் பெயர்களால்.

 

ருடால்ஃப் பிர்ட்: எங்களுக்காகத் தான் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம் என்ற நூலில் நீங்கள் வாதிக்கிறதுபோல் சார்ந்திருக்கும் தன்மை அதிகரித்துக்கொண்டே வருகிற, அத்துடன் துண்டாடப்படுதலும் தனிமைப்படுத்தலும் முன்னாதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கக்கூடிய ஓர் உலகத்தில் நாம் வாழ்கிறோம். மாறிக்கொண்டே வருகிற உலகத்தில் குறிக்கோளையும் நிதானத்தையும் தக்கவைத்துக்கொள்ள உங்களுக்குப் பேரளவு உதவும் பயிற்சிகள் யாவை?

ஆலிஸ் வாக்கர்: தியானம் எனது வாழ்வில் ஆதாரப்பொருளாக இருந்து வந்துள்ளது. தியானம் செய்வது எப்படி என்பதைப் பயில்வதற்கு முன்னர் இது எவ்வளவு உதவிகரமாக இருக்கும் என்ற எண்ணமில்லை. கற்றுக்கொண்ட பின்னர் எனது கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அது உதவிகரமாய் இருந்துள்ளது. எழுதுவது, தாயாக இருப்பது, பயணம் செய்வது, போராளியாக இருப்பது, அத்துடன் செலவுகளைச் சமாளிப்பது என இத்தனை அழுத்தங்கள் இருந்த ஆரம்ப காலத்தில் எப்படி தியானம் செய்தேனோ அதே போல் இப்பொழுது தியானம் செய்வதில்லை. இப்பொழுது நான் மேலும் தியானரீதியாக வாழ்கிறேன் – இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது – எனது இயல்பையும் அது ஊட்டமடைய வேண்டியவற்றையும் புரிந்துகொண்டு எனது மனநலத்தையும், அடிக்கடி, மன அமைதியையும் தக்கவைத்துக்கொள்ள உதவும் ஓய்வு வெளிகளை நான் உருவாக்கியுள்ளேன். என் மகள் கருவுற்றிருந்தபோது நான் மெக்சிகோவைக் கண்டடைந்தேன். அப்பொழுது ஐந்து அல்லது ஆறாவது மாதம் இருக்கும். எனக்கு அந்த இடம் பிடித்துவிட்டது. மெக்சிகோ மக்களின் இனிமையிலும் நண்பர்களின் பரிவிலும் ஓம்பலிலும் ஓய்வு எடுக்க இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு வருடமும் சென்றுவருகிறேன். மொலோகாய் கடற்கரையின் மிக குதூகலமான வீட்டின் உரிமையாளரான ஹவாயைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞரைப் பல்லாண்டுகளுக்கு முன் காதலித்தேன். அந்த உறவு முடிந்துவிட்டது, ஆனால் இன்னமும் அந்த வீட்டில் எங்கள் இருவருக்கும் பங்கு இருக்கிறது. எனக்குச் சோர்வு ஏற்படும்போது அங்கு சென்று அமர்ந்து நீரில் தெரியும் நிலவொளியைப் பார்த்தபடி இருப்பேன், எல்லாம் சரியாகிவிட்டது என்று எனக்குத் தெரியும்வரை. இந்தச் சிறிய உயிர் அமைதியாக இருக்கிறதோ இல்லையோ, எழும்பியும் அடங்கியும் சில படகுகளைக் கரையேற்றியும் சிலவற்றை கரையேறவிட மறுத்தும் அலைகள் தமது பணியைச் செய்தவண்ணம் இருக்கும். முற்றுமுழுதான அற்புதத்துடனும் அலட்சியத்துடனும்.

 

ருடால்ஃப் பிர்ட்: நீங்கள் கார்ல் ஜங்கின் எழுத்தின் ரசிகர். உங்களது மகிழ்ச்சியின் ரகசியத்தைப் பொத்திவைத்திருத்தல் (Possessing the Secret of Joy) புதினத்தில் ஜங்கின் உளவியல் ஒழுங்கமைவின் ஆழ்தடம் (imprint) இருப்பதைக் கண்டோம். ஜங்கின் ரசிகர்களுடனும் பிற எழுத்தாளர்களுடனும் சேர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலான அவரது கனவு வாழ்க்கையைப் பதிவுசெய்யும் அவரது சமீபத்திய நூலான செந்நூலை (The Red Book) விமர்சனம் செய்தீர்கள். செந்நூலின் மூலம் தாங்கள் உணர்ந்து தெரிந்தது என்னென்ன?

ஆலிஸ் வாக்கர்: அது அழகார்ந்தது என்பதே! அதுவே எங்களது ஆன்மாவுக்கு எங்களிடமிருந்து தேவைப்படுவது; அழகிலிருந்தும், கனவிலிருந்தும்கூட, உண்டாக்கப்பட்ட அனைத்துக் கருவிகளையும் கொண்டு அதனை நாங்கள் ஆராய்கிறோம் என்பதே. தனது உயிரும் ஆன்மாவும் முழுமையாக விரிந்துபரவ என்ன தேவையோ அதனைக் கொடுப்பதில் ஜங் துளியும் கஞ்சத்தனம் செய்யவில்லை. அவருக்குத் தன் மீது (சுயத்தின் மீது) அச்சமில்லை என்பது அதிர்ஷ்டவசமான ஒரு யதார்த்தம். சிலருக்குத் தன் மீதே ஓர் அச்சமிருக்கும், ஏதோ தங்களாலேயே சிறிதும் அறிந்துகொள்ளப்படாத இயல்புகள் கொண்டவராகத் தங்களை எண்ணிக்கொள்வர். சிலர் உண்மையாகவே அப்படி இருப்பர். ஆனால் ஒரு மனிதராக, நமது அச்சங்களையும் தவறுகளையும் பிறர் மேல் சுமத்தாமல் இப்புவியில் அமைதியாக வாழ நாம் செய்யவேண்டிய பணியின் ஒரு பகுதி நம்மை நாமே யார் என்று அறிந்துகொள்வது. (செந்நூலின்) ஓவியங்கள் மிகப் பொலிவுடன் இருக்கின்றன; பொறுமையுடன் நுட்பமாக வரையப்பட்டுள்ளன. அவை உள்ளதிர்வுகளை ஏற்படுத்துவனவாகவும் தீவிரத்தன்மையுடனும் இருக்கின்றன. முதன்முதலில் ஜங்கின் எழுத்தைப் படித்தது முதலே அவர் ஓர் ஒத்த மனமுடைய ஆத்மா என்பதை நான் எப்பொழுதும் உணர்ந்து வந்துள்ளேன். அதனாலேயே மகிழ்ச்சியின் ரகசியத்தைப் பொத்திவைத்திருத்தலில் அவரையும் ஒரு கதாபாத்திரமாக வடித்துக்கொண்டேன்.

 

ருடால்ஃப் பிர்ட்: ஊதா நிறத்தின் ஒலிப்பதிவைச் சற்றுமுன்பே முடித்துள்ளீர்கள். உங்களது எழுத்துத் தொகுதியின் மிகவும் பேசப்பட்ட, புகழ்வாய்ந்த, இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக ஐயத்திற்கிடமின்றி இடம்பெறக்கூடிய அதனை வாசகர்கள் உங்கள் குரலில் கேட்பதோ அல்லது அதனை வாசித்தபடி செவிசாய்ப்பதோ மிகவும் அற்புதமாக இருக்கும். எழுதப்பட்ட சொல்லை இவ்விதத்தில் கொண்டுசெல்வது எப்படி இருந்தது? குடும்ப வரலாற்றின் கூறுகளை உடைமையாகக் கொண்ட ஒரு புதினத்தை எழுதுகையில் உங்கள் மூதாதையரின் ஆதரவு இருந்ததாக உணர்ந்தேன் என்று கூறியிருந்தீர்கள்.. இந்தப் புதிய ஊடகத்தில் அவர்களது கதைகளைப் பெயர்த்துச் சொல்லும்போதும் அவர்களது ஆதரவு இருந்ததாக உணர்ந்தீர்களா?

ஆலிஸ் வாக்கர்: என் வாழ்க்கையின் மிக மோசமான, சளி பிடித்திருந்த வேளையில் இந்த ஒலிப்பதிவைச் செய்தேன்! ஒரே இருமலும் தும்மலுமாக இருந்தது. ஆனால் ஊதா நிறத்தைப் பதிவு செய்வதற்காக இருபத்தைந்து ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த எனக்கு என் சளி சரியாகும்வரை காத்துக்கொண்டிருக்க விருப்பமில்லை. மூதாதையர், கதாபாத்திரங்கள், ஆத்மாக்கள் என வெவ்வேறு நேரங்களில் நான் எப்படிப் பெயரிட்டு அழைத்திருந்தாலும் அந்த மக்கள் மிக அற்புதமாக வந்துள்ளனர். மக்கள் அப்படியே நேரில் வந்தனர்! ஆதரவு கொடுத்தனர். அது உண்மையில் மாயாஜாலமாக இருந்தது. எண்பதுகளின் தொடக்கத்தில் எப்படி என்னுடன் முதன்முதலில் இருந்தார்களோ அதே போல் அப்படியே இருந்தார்கள். ஒரு நாளுக்கு நான்கு மணிநேரம் என இதற்காக நான் பணிபுரிந்த அந்த நான்கு நாட்களும் என்னுடனேயே இருந்தனர்.

 

ருடால்ஃப் பிர்ட்: கலிஃபோர்னியாவில் உள்ள உங்களது இல்லத்தில் கோழிக்குஞ்சுகளை வளர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? புதிதாகக் கிடைக்கும் முட்டைகளைத் தவிர்த்து, இயற்கையுடனும் உங்களது ஜார்ஜிய கிராமப் பின்னணியுடனும் மீளவும் இவ்விதம் தொடர்புகொள்வதன் மூலம் உங்களுக்கு என்னென்ன பயன்கள் விளைந்துள்ளன?

ஆலிஸ் வாக்கர்: மேடெலீன் குக்கியே பாரீஸில் வாழ்ந்த பிரவுஸ்டை பழைய விஷயங்களை நினைவுகூர்தலுக்கு இட்டுச்சென்றது. ஜார்ஜியாவின் கிராமப் பின்னணியைக் கொண்ட எனக்கோ கோழிக்குஞ்சுகள் அதனைச் செய்தன. கோழிக்குஞ்சுகளைப் பற்றி அடிக்கடி எனது வலைப்பூவில் எழுதும்போது, சிறுமியாக இருந்தபோது காயப்பட்ட, எனது அடக்கப்பட்ட நினைவின் ஒரு பகுதியை நோக்கி இழுத்துச்செல்லப்படுவதைக் காண்கிறேன். காயங்களுடன் இருக்கும் குழந்தைகளைப் போல, எனக்கு நேர்ந்த மாற்றத்தில் நான் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன் – பிறர் எப்படி என்னிடம் வினையாற்றுகின்றனர் என்பதைத் தொடர்ந்து அனுபவித்து வந்தேன் – அதைத் தவிர வேறு எதன் மீதும் என் எண்ணம் செல்லவில்லை. எனது பல்லாண்டு கால நினைவுகள் அழிக்கப்பட்டன, அதாவது, மூழ்கடிக்கப்பட்டன எனலாம். எனது நாற்பது வயதுகளில் பாலிக்குச் சென்றிருந்தபோது தூசிமயமாக இருந்த உபட்டின் ஒரு சாலையோரத்தில் நடந்துகொண்டிருந்தேன். ஒரு கோழி தனது குஞ்சுகளுடன் என் எதிரில் வந்தது. என்ன காரணமோ தெரியவில்லை நான் அந்தக் காட்சியால் கவரப்பட்டு வேரூன்றி நின்றுவிட்டேன். என்னால் முற்றிலும் மறக்கப்பட்ட என் குழந்தைப் பருவத்தின் பற்பல ஆண்டுகளின் நினைவுகளுள் சிலவற்றை மீட்டெடுக்கும் சாத்தியப்பாட்டை எடுத்துச்சொல்லி விழிப்பூட்ட எனது நனவிலி மனத்துடன் தொடர்புடைய கருணையைப் பரப்பும் தூதுவர்களே அவை எனப் பல்லாண்டுகளுக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன்.

இப்பொழுது என்னை மிகவும் ஈர்ப்பது என்னவென்றால் புனைகதைகளை எழுதுவதை ஒரு வகையில் எனது நினைவை, அது பெரும்பாலும் புனைவாக இருந்தாலும், தக்கவைத்துக்கொள்ளும் வழியாகவே நான் பார்க்கிறேன் என்பதே.

 

தமிழாக்கம் : இரெ. மிதிலா

 

உன்னதம் 36 வது இதழில் (ஜூலை 2010) வெளிவந்தது

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!