home நேர்காணல், புதிய அலை ஒருவேளை நான் விசித்திரமான ஆளாக இருக்கலாம்

ஒருவேளை நான் விசித்திரமான ஆளாக இருக்கலாம்

‘வைல்ட் டேல்ஸ்’ இயக்குனர் டேமியான் சிஃப்ரான் உடன் ஒரு நேர்காணல்

 

ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அர்ஜெண்டினப் படமான ‘வைல்ட் டேல்ஸ்’ ஆறு வித்தியாசமான கதைகளின் தொகுப்பாக உருவாக்கியிருக்கிறார் அதன் இயக்குனர் டேமியான் சிஃப்ரான் (Damián Szifrón) – அக்கதைகள் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ், ரோட் செர்லிங் மற்றும் கிராண்ட் கிக்னோல் ஆகியோரின் கதைகள்.

பெட்ரோ மற்றும் அகஸ்டின் அல்மடோவர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் சென்ற ஆண்டு மே மாதத்தில் கேன்ஸ் திரையிடலில் திரையிடப்பட்டு பலதரப்பிலிருந்தும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றதற்குப் பிறகு, சோனி கிளாசிக் பிக்சர்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் பிப்ரவரி 20, 2015இல் வெளியிட்டது. பாராட்டுகள் ஒருபக்கம் இருந்தாலும், இதன் ரகசியமான சூழ்ச்சிகள் கலந்த நகைச்சுவைதான், வைல்ட் டேல்ஸை சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருதுகள் பிரிவில் வித்தியாசமான ஒரு போட்டியாளராக விளங்கியது. (அப்பிரிவில் இவ்வருடத்திற்கான விருதை வென்றது பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய போலிஷ் பேரழிவு திரைப்படமான ‘இடா’ )

சில வருடங்களுக்கு முன்பு, நடிகர் ஃப்ரெட் வில்லார்ட் (தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்த நடிகர்), வெளிநாட்டு மொழி படங்களுக்கான ஆஸ்கார் விருது பிரிவில் உறுப்பினராக இருந்தார், அவர் இது வரை பார்த்த வெளிநாட்டு மொழி படங்கள் அனைத்தும் “தெளிவில்லாமலும் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் அளவுக்கு மிகவும் மனவருத்தம் தருவதாகவும் இருக்கும்” என்றார். ஆனால் வைல்ட் டேல்ஸ் முற்றிலும் அதற்கு எதிர்மாறான வினைகளை ஆற்றுகிறது: மகிழ்ச்சியான அனுபவம். கதாபாத்திரங்கள் நீதியின்மை, ஏற்றத்தாழ்வுகள், அழுத்தம் ஆகியவற்றைச் சந்திக்கின்றன, மேலும் அதனால் அவர்கள் தவறான முடிவுகளையே எடுக்கின்றனர். ஒரே விஷயத்தில் பலமுறை தோல்வியடையும் அவர்கள், ஒரு கட்டத்தில் வெடித்து வெளிவருகிறார்கள். சில சமயங்களில் நீண்ட நேர சண்டைகளிலும் ஈடுபடுவார்கள். ஓநாய்கள் போல, புலிகள் போல, திமிங்கலங்களைப் போல, மிகக்கொடுரமான விலங்குகள் போல படத்தின் ஆரம்பத்தில் வரும் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிஃப்ரானின் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களுடைய அடிப்படை உணர்வுகளுக்கு தீனி போட்டிருக்கிறது.

முதல் தொடக்க கதையில், Twilight Zone உணர்வைக்கொண்ட அக்கதையில், ஒரு அழகான பெண் அவள் வென்ற ஒரு ரகசியமான பயணத்திற்காக விமானத்தில் ஏறுகிறாள். அப்போது ஒரு குறும்புக்கார வயதானவர் அவளுடன் உரையாட ஆரம்பிக்கிறார், அவளிடம் அவர் ஒரு இசை விமர்சகர் என்று கூறுகிறார். அவள் தன்னுடைய காதலன் ஒரு பாடகன் என்று சொல்லும்போது, அவர் அவனைப்பற்றி எதிர்மறையான விமர்சனங்களையே முன்வைக்கிறார். விரைவில், அனைத்து பயணிகளும் பேச ஆரம்பிக்கின்றனர், அவர்கள் பார்க்காத அந்தக் காதலனோடு தங்களுக்கு தொடர்பு இருப்பதை தெரிந்துகொள்கிறார்கள் -ஆனால் அனைவருமே அவனைப் பற்றிய தவறான கணிப்பில்தான் இருக்கிறார்கள். விமானத்தின் கதவு மூடுகிறது….

அதேசமயம், கடைசில் அந்த மிக விரிவான கதை, “மரணம் நம்மை பிரிக்கும் வரை,”யில் அந்த யூத திருமணத்திற்கு மிகையாக சண்டைக்காட்சிகள் மையப்படுத்தப்பட்டிருக்கிறது. மணப்பெண், ரொமினாவாக எரிகா ரிவாஸ் அழகாக நடித்திருக்கிறார், அருகிலிருக்கும் கவர்ச்சியான விருந்தாளியுடன் சேர்ந்து மணமகன் (டியாகோ ஜெண்டில்)தன்னை ஏமாற்றிவிட்ட உணர்வை நன்கு வெளிப்படுத்துகிறார். தன்னுடைய முதல் தற்கொலை முயற்சிக்குப் பின்னர், அந்த மணப்பெண் பழிவாங்கும் வெறிபிடித்த மனநிலைக்குப் போகிறாள், அப்போது அந்த சாகச காட்சி கோமாளித்தனமான குழப்பமாக மாறுகிறது, அது எந்தளவுக்கு கொடுரமானதோ அந்தளவுக்கு வேடிக்கையானதும்கூட.

கடந்த மாதம், இந்த அர்ஜெண்டின இயக்குனர் வைல்ட் டேல்சை விளம்பரப்படுத்துவதற்காகவும், National Board of Review விருது பெறவும் மன்ஹாத்தனுக்கு சென்றிருந்தார். அவர் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நடத்திய உரையாடலில் ராபர்ட் டூவல் மற்றும் ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கோப்போலா ஆகியோருடனான சந்திப்பில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். “ராபர்ட் டூவல் என் படத்தைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தார், டாம் ஹாகனோடும் கை குலுக்கினேன்,” என்கிறார் சிஃப்ரான்.

அவருடன் Movie Maker இதழுக்காக நிகழ்த்திய உரையாடல்: பாவ்லா ஷ்வார்ட்ஸ்

 

நீங்கள் ஒரு படத்தில் ஆறு கதையை வைத்திருக்கிறீர்கள். இதற்கு உங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் பற்றி சொல்லுங்கள்.

நான் படத்தை எடுப்பதற்கு முன், எடுக்கப்போகிற படத்தோடு தொடர்புடைய சில படங்களைப் பார்ப்பேன் – உதாரணத்திற்கு, டூயல், ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படம், வைல்ட் டேல்ஸில் வரும் சாலை வன்முறை பகுதிக்காக. ஒரு பணக்காரத் தந்தை தன் மகனை சிறைக்குச் செல்வதிலிருந்து பாதுகாக்கும் பகுதிக்காக, நாடகத்தன்மையும் நகைச்சுவையும் கலந்த கோன் பிரதர்ஸையும் பார்க்க நினைத்தேன்.

நான் முதலில் ஒவ்வொரு கதையாகக் கற்பனை செய்து, அவற்றை தனித்தனியாக பிரிக்க முயற்சிப்பேன், அதே நேரத்தில் அவற்றை ஒன்றாக ஒரே திரைக்கதை ஓட்டத்திற்கும் அனுபவத்திற்கும் மாற்றவும் முயற்சிப்பேன். முன் தயாரிப்பு வேலைகளின் ஆரம்பத்தில் நாங்கள் மிகத்திறமையான ஒளிப்பதிவாளர் ஜாவியர் ஜூலியாவுடன், ஒவ்வொரு பகுதிக்கும் மிக வித்தியாசமாகக் காட்சிகளை அமைக்க வேண்டும் என்று பேசினோம். அந்தப் பணக்கார குடும்பத்தின் கதை பகுதியை கருப்பு வெள்ளையாக எடுக்க வேண்டும் – அந்த சாலை வன்முறை பகுதியை ஒரு படத்திற்கான உணர்வுடன் எடுக்க அனமார்பிக் (அகலத்திரை) லென்ஸ்களையும் மற்றும் 35மிமீ லென்ஸ்களையும் பயன்படுத்த வேண்டும். பிறகு கடைசி பகுதியான அந்தத் திருமண காட்சிகளை ஒரு பொது நிகழ்வில் பயன்படுத்தும் கேமராவை வைத்து எடுக்க வேண்டும் என எடுத்தோம். ஆனால் இறுதியில், இந்தப் படம் வெவ்வேறு இயக்குனர்கள் பலரால் எடுக்கப்பட்டது போலவும், அனைத்து கதைகளும் தொடர்பில்லாமல் இருப்பது போலவும் உணர்ந்தேன். அதைத்தான் நான் தவிர்க்க முயற்சித்தேன் – அந்தக் கதைகள் அனைத்தையும் ஒரே முழு அனுபவமாக மாற்றவே நான் விரும்பினேன்.

 

கதைகளின் வரிசைகளை எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்?

நீங்கள் படத்தை எந்த வரிசையில் பார்த்தீர்களோ அதே வரிசையில்தான் நான் அவற்றை எழுதும் போதும் வரிசைப்படுத்தியிருந்தேன். நான் எழுதிய அதே வரிசையில்தான் அவை இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு நான் வரவில்லை – நான் பல்வேறு வித்தியாசமான வரிசைகளையும் முயற்சி செய்தேன், ஆனாலும் இறுதியில் இந்த வரிசைதான் சரியான முடிவாகப்பட்டது. கேன்சில் திரையிடும்போதும் இந்த வரிசையில்தான் படம் சிறப்பாக இருப்பதை உணர்ந்தேன். அவற்றில் முன்னேற்றமும் அதே நேரத்தில் மாற்றங்களும் இருந்தன. விமானத்தில் நடக்கும் அந்த தொடக்கக் காட்சி ஆரம்பத்தில்தான் சரியாக பொருந்தும், அதை உங்களால் இறுதிக் காட்சியாக வைக்க முடியாது. இறுதிக்காட்சிக்கு தேவையான விஷயங்களையும் திருப்பங்களையும் கொண்டுள்ள அந்தத் திருமணக் காட்சி… ஒரு கதாபாத்திரமோ அல்லது இரண்டோ அதிக மாற்றங்களை அடையும்போது முழுமையாகக் காட்சியில் பங்காற்ற வேண்டியிருக்கும்… அப்படிப்பட்ட காட்சியை இறுதியாகத்தான் வைக்க வேண்டும். இது கிட்டத்தட்ட உடலுறவு போலத்தான் – அது முடியும்போது நீங்கள் உணவருந்தவே விரும்புவீர்கள், மீண்டும் அதையே செய்ய விரும்பமாட்டீர்கள்.

 

சாலை வன்முறை கதைப் பகுதியில் இருக்கும் ஒரு காட்சி இதற்குமுன் கிட்டதட்ட எந்தப் படத்திலும் வராதது: ஒரு மனிதன் காரின் மீது மலம் கழிக்கும் காட்சி. இந்த யோசனை உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

எப்படி இது நிகழ்ந்தது என்றே எனக்கு தெரியவில்லை. என் அம்மாவிடம் முதன்முறையாக முழுப்படத்தையும் நான் காட்டும்போது, அவர் என்ன நினைப்பாரோ என்ற சங்கடத்திலேயே இருந்தேன் ஆனால் அவர் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை நான் விசித்திரமான ஆளாக இருக்கக்கூடும். ஒரு இயக்குனராக, அழுத்தம், மனச்சோர்வு மற்றும் கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள் என்னில் தாக்கம் செலுத்தின. எப்போழுதெல்லாம், அது எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கட்டும், அதிகாரம் துஷ்ப்ரயோகம் செய்யப்படுகிறதோ அப்போதெல்லாம் நான் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிடுவேன். நான் அந்த உணர்வுகள் முழுவதையும் என் கற்பனையைச் செதுக்கப் பயன்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன், என் முழு கோபத்தையும் என்னுடைய படைப்பின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறேன்.

 

உங்களுக்கு இயல்பாகவே அதிகாரத்துவத்தின் மீது வெறுப்பு உண்டோ?

ஆமாம். நான் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதை விரும்பவதே இல்லை. அந்தச் சுதந்திரமின்மையை நான் வெறுக்கிறேன். இங்கு வரையறுக்கப்பட்டிருப்பது எல்லாமே அடுத்தவருடைய நலனுக்காக மட்டுமே என்று உணரும்போது, நாம் ஒரு மிகப்பெரிய பொருளொன்றில் கண்ணுக்குத் தெரியாமல் கிடக்கும் சிறு துகள் போலவே இருக்கிறோம் என்பது எனக்குள் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது. எனக்கான நேரத்தை நான் தவறவிடுவதையும் விரும்பமாட்டேன். நேரம் விலைமதிப்பில்லாதது. இந்தப் பிரபஞ்சத்தில் நமக்கென இருப்பது மிகக்குறைவான நேரம், அதை முழுமையாக நான் விரும்பியபடி பயன்படுத்தவே நான் விரும்புகிறேன். வரிசையில் நிற்பதும், வரி கட்டுவதும் அல்லது வெறுமனே திரையைப் பார்த்துக்கொண்டிருப்பதுமாக இருக்க முடியாது.

 

உங்களுடைய பின்னணி என்ன?

நான் ஒரு யூதன். கடைசி காட்சியில் வரும் திருமணம் யூத கலாச்சாரத்தைச் சார்ந்தது. என்னுடைய தந்தையின் பெற்றோர்கள் இரண்டாம் உலகப் போரின் போது தென் அமெரிக்காவிற்கு வந்தனர்.

 

அவர் நாஜிகளிடமிருந்து தப்பித்த அகதிகளா?

ஆம். குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர், தப்பித்தது இவர்கள் மட்டும்தான். என் தாத்தா போலிஷ் ராணுவ வீரர். அவர் ரஷ்யர்களால் பிடிக்கப்பட்டார், அதனால் அவர் ரஷ்யாவுக்காகச் சண்டையிட வேண்டியிருந்தது. அவர் முகாமிற்கு போய்க்கொண்டிருந்த ரயிலிலிருந்து தப்பிவிட்டதால் அவர் பிழைத்தார். அவர் ஒரு கொல்லர், ரயில் கடுமையான பனியில் சிக்கி இரண்டு மணி நேரத்திற்கு நின்றிருந்த போது கதவை உடைத்து, இரு ஜோடிகளுடன் அதிலிருந்து தப்பித்தார். என்னுடைய அம்மாவும் யூதர்தான். என் அம்மாவின் பெற்றோர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் அனைவரும் அர்ஜெண்டினாவில் பிறந்தவர்கள். ஆனால் அவர்களும் வெகுகாலத்திற்கு முன் ரஷ்யாவிலிருந்து அர்ஜெண்டினா வந்தவர்கள்தான்.

என் அப்பா 1948இல் பிறந்தார், என் தாத்தா பாட்டிகள் அர்ஜெண்டினாவுக்கு வரும்போது மிகுந்த வறுமையில் இருந்தனர். அவர்களுக்கு மொழியும் தெரியாது. அவர்களிடம் எதுவுமே இல்லை.  அப்பாவுக்கு இளவயதில் முதலில் கிடைத்த வேலை சினிமாவில்தான். அவர் சக்கரங்களையும் உருளைக்கலன்களையும் படப்பிடிப்பு தளத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவரால் இலவசமாக படங்கள் பார்க்க முடிந்தது. அவர் பெரிய சினிமா பைத்தியக்காரராகிவிட்டார், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவருடன் சினிமாவுக்கு என்னை அழைத்துப் போவது நினைவில் இருக்கிறது.

 

சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகு பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவரா நீங்கள்?

நான் அது நடந்துகொண்டிருந்தபோதே பிறந்தேன். நான் 75இல் பிறந்தேன், கடைசி சர்வாதிகாரம் 76இல் தொடங்கி 83இல் முடிந்தது. ஆனால் அப்போது நான் மிகவும் சிறியவன். நான் குழந்தை. என் குடும்பமும் எதிலும் ஈடுபடவில்லை. அவர்களுக்குத் தெரியும், இங்கு ராணுவம் ஆட்சியில் இருக்கிறதென்று. ஆனால், அவர்கள் பாகுபாடான்றி அனைத்து மக்களையும் கொல்கின்றனர் என்பது தெரியாது. சொல்லப்போனால் இந்த விஷயம் இங்கு பெரும்பாலானோருக்கு தெரியாது. கடைசியில் நாங்கள் அதை 83இல் பலவித விசாரணைகளுக்குப் பின்னர்தான் கண்டுபிடித்தோம்.

 

உங்களுக்கு பல விஷயங்களில் அநீதி சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது. அவை எந்த மாதிரியான தாக்கத்தை படத்தில் உண்டாக்கியிருக்கிறது என்பது பற்றி சொல்லுங்கள்.

அநீதி, ஊழல், அதிகார துஷ்ப்ரயோகம், நான் இதையும் சொல்லியாக வேண்டும், முட்டாள்தனம். நான் அதற்கும் எதிரானவன். நான் எந்த அரசையும் இதற்காக பழி சொல்ல மாட்டேன். என்ன பட்டாலும் சரி, கடைசியில் மக்கள் மதிப்பில்லாத குப்பை விஷயங்களுக்காக தங்களை விற்றுவிடுகிறார்கள். அவர்கள் மிக நீண்ட நேரத்தைத் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள், பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். நீங்கள் தூங்கி எழுந்த நொடியிலிருந்தே எதையாவது விற்று உங்கள் தலையில் திணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு பெரிய மாலில் இருக்கும் கழிப்பறைக்குப் போனால் கூட- சிறுநீர் கழிக்குமிடத்தில் உங்களுக்கு எதிரே ஒரு விளம்பரத்திரை இருக்கும்.

நாம் அனைவருமே பகட்டு விஷயங்களால் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறோம், அப்போது நம்முடைய ஆழ்மனதுக்குள் சென்று பார்க்கவோ சிந்திக்கவோ மிகவும் கடினமாகிவிடும். உண்மையாக நான் எழுத வேண்டுமென்றால் வீட்டிலிருந்து வெகுதொலைவுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது, காரணம் ஃபேஸ்புக், அலைபேசியின் தொல்லை, தொலைக்காட்சி, சாலை நெருக்கடி, ஹாரன்களின் பெரும் சத்தம் இவற்றிலிருந்தெல்லாம் தப்பிக்க வேண்டுமல்லவா? அப்போதுதான் உங்களால் எப்போதுமே சிந்திக்கும் மனநிலையில் இருக்க முடியும்… இன்று ஒரு புத்தகத்தை மூன்று மணி நேரம் ஒதுக்கிப் படிக்கவே அவ்வளவு துணிச்சல் தேவைப்படுகிறது.

 

நீங்கள் கடைசிக் காட்சியில் வைத்துள்ள யூத திருமணக் காட்சி விசித்திரமான அனுபவம்? அது போன்ற அனுபவத்திற்கு நீங்கள் ஆட்பட்டிருக்கிறீர்களா? அந்தக் காட்சியை எடுக்க உங்களைத் தூண்டியது எது?

திருமணத்தில் மணப்பெண்ணையும் மணமகனையும் தவிர்த்து, அது பற்றி எல்லாம் தெரியும் என்பது போன்று மற்ற எல்லோரும் இருக்கும் திருமணங்களுக்குச் சென்றிருக்கிறேன். கோட் சூட் போட்டுக்கொண்டு எல்லோருக்கும் பொய்யாக இருக்கும் ஒன்றை ஆனந்தமாய் கொண்டாடும் அந்த இடத்தில் இருப்பது வினோதமானது. ஆனால் அங்கு இது போன்று எதுவும் நடக்கவில்லை.

 

நீங்கள் அந்தக் கடைசிக் காட்சியை எப்படி எடுத்தீர்கள்?

எனக்கு மிகச்சிறந்த குழு அமைந்தது, காட்சிகளுக்குச் சிறப்பு விளைவுகள் சேர்ப்பது என அனைத்துமே முழுமையாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இப்படத்திற்கு முன் நான் தொலைக்காட்சித் தொடர்களையும் இரண்டு படங்களையும் எடுத்திருக்கிறேன், நான் ஒரு காட்சியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போதே இரண்டு வாரத்திற்கும் முன் எடுத்த காட்சியைத் தொகுக்கவும் வேறொரு காட்சியை இயக்கவும் செய்வேன். அனைத்தையுமே பரபரப்பாக செய்துகொண்டிருப்பேன். ஒருகட்டத்தில் அப்படி செயல்படுவதை நிறுத்த முடிவு செய்தேன், ஒரு இயந்திரம் போல் இயங்குவதை தவிர்க்க நினைத்தேன். ஒரு இயக்குனராக அது தோல்வியைத் தருவதாக உணர்ந்தேன். எழுதவும், சிந்திக்கவும் இயக்கவும் தகுதியான நேரங்கள் எனக்கு தேவை என்பதைப் புரிந்துகொண்டேன். வைல்ட் டேல்சில் நான் பால்ரூமில் தூங்கினேன். அந்தப் பணக்கார குடும்பத்தின் வீட்டில் படுத்துறங்கினேன், இப்படி படத்தின் கதாபாத்திரங்களாகவே நடமாடிக் கொண்டிருந்தேன். அதனால் படப்பிடிப்பிற்கு குழு தயாராக இருக்கும்போது, எங்களுடைய தேவை மற்றும் எதிர்பார்ப்பு என்ன என்பதை எல்லோருமே அறிந்திருந்தோம்.

 

இப்படத்தில் பயன்படுத்துவதற்காக நீங்கள் தொலைக்காட்சி தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

கிட்டதட்ட. வைல்ட் டேல்சின் ஆதாரக்கருவைப் பற்றிப் பேசும்போது, நான் பின்னோக்கி என்னுடைய ஆறு வயதுப் பருவத்திற்குப் போய் இலக்கியங்களின் தொகுப்புகளைப் படிக்க வேண்டியிருந்தது. அதுதான் முதல் குறிப்பு. மாஸ்டர் டேல்ஸ் ஆஃப் மிஸ்ட்ரி, என்ற தொகுப்பில் பலவிதமான கதைகள் இருப்பது எனக்கு நினைவிருக்கிறது. அதோடு, எட்கர் ஆலன் போ, மாப்பஸான், கானன் டயலின் சில மற்றும் போர்ஹேஸ்… என மூலைமுடுக்கெங்கும் உள்ள எழுத்தாளர்கள். புத்தகத்தின் உள்ளடக்கத்தில் உள்ள தலைப்புகளைப் பார்ப்பது எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு கதையும் ஐந்து அல்லது பத்து பக்கம் இருப்பது, என்னை ஈர்க்கும் ஒரு பிரம்மாண்டமான விஷயம். தொலைக்காட்சிக்கு, ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் வழங்கியது போல, Twilight Zone, Amazing Stories. படங்களுக்கு, நியூயார்க் கதைகள். புத்தகங்களுக்கு, ஜே.டிசாலிங்கரின் ஒன்பது கதைகள். இவையனைத்தும்தான் எனக்குள் இது போன்ற ஒரு படத்தை என்னால் உருவாக்க முடியும் என்று உணர வைத்தவை.

 

நீங்கள் பல விதமான கதைக்களங்களை வைத்திருக்கிறீர்களே.

அவையனைத்துமே எனக்குப் பிடித்தவை. ஒரு இயக்குனராக இந்தப் படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறேன், ஏனெனில் இது உங்களால் செய்ய முடிந்தவற்றின் தொகுப்பு. இதில் உங்களுக்கு சண்டைக் காட்சிகள் இருக்கிறது, பல்வேறு விதமான சூழல்கள் காட்டப்பட்டிருக்கின்றன. நான் சாலை வன்முறைக் காட்சிகளைப் படம்பிடிக்கும்போது நடிகர்களுடன் அவர்கள் மைக்கேல் ஹனாகே படத்தில் இருப்பது போல பேசினேன். எல்லாமே மிகவும் இருண்டு தெளிவற்றதாய் இருந்தது, அவர்களும் அழுத்தத்தில் இருந்தார்கள். ஆனால் குழுவிலிருந்த பிறர், ரோட்ரன்னர் போல, வில்லி ஈ. கோயட் போல மற்றும் கார்ட்டூன் போல ஏதோ செய்துகொண்டிருப்பதாக நினைத்தார்கள்.

 

வைல்ட் டேல்சில் வழக்கமான நாயகர்கள் அதிகம் இல்லை. யாரேனும் ஒரு வழக்கமான நடிகரை வைத்து படம் பண்ணுங்கள் என்று தயாரிப்பாளர் கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் உங்களுக்கு ஏதும் பிரச்னையா?

எனக்கு நாயகர்கள் பிடிக்கும், ஆனால் வித்தியாசமான நாயகர்கள். அதற்காக அந்தப் பெண் பாத்திரத்தை நாயகன் என்று சொல்லவில்லை – ஆனால் அந்த மணப்பெண் கதாபாத்திரம்தான் நான் எனக்குள்ளிருந்து எழுதிய முதல் பெண் கதாபாத்திரம். மேலும் நான் இன்னபிற சில விஷயங்களையும் உருவாக்குகிறேன், அவற்றில் பெண் பாத்திரங்கள் வருகின்றன, ஆனால் நான் ஆண் கதாபாத்திரத்தை ஆணாக இருந்து எழுதுகிறேன், பெண் கதாபாத்திரத்தை எழுதும்போதுதான் பிரச்னை வருகிறது. இந்தமுறை நான் ஒரு மணப்பெண்ணாக இருக்கிறேன், அவள் செய்வது நாயகத்தன்மையாக இருக்கிறது. அவள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்கிறாள், அப்போது நீங்கள் அவள் அங்கிருந்து குதிக்கப்போவதாக நினைப்பீர்கள் ஆனால், அவள் மீண்டும் திருமண இடத்திற்கு சென்று எல்லோரையும் எதிர்கொண்டு உண்மையைச் சொல்கிறாள், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. ஏனெனில் அவள் துணிச்சலானவள்.

 

தமிழில் : ஜெய சரவணன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!