home உன்னதம், சிறுகதை கட்டற்ற ஒரு சொல்

கட்டற்ற ஒரு சொல்

–  ஊர்ஸுலா லா குன்

 

அவன் எங்கிருக்கிறான்? தரை கடினமாயும் ஈரமாயும், காற்று கடுமையாகவும் துர்நாற்றத்துடனும் – இவைதான் அங்கிருந்தன. தவிர தலைவலியும். குளிர் பிசுபிசுத்த ஈரத்தரையில் மல்லாந்திருந்த ஃபெஸ்டின் மெல்ல முனகினான். ‘மந்திரக்கோலே’ பிரம்பாலமைந்த அக்கோல் கைக்கு வராதது கண்டு தான் பேராபத்திலிருப்பதை அறிந்து கொண்டான். மெல்ல எழுந்து அமர்ந்தவன், மந்திரக்கோல் இல்லாத நிலையில் வெளிச்சத்தை உருவாக்க நடுவிரலையும் பெருவிரலையும் சேர்த்து சொடக்கி மந்திரத்தை உச்சரிக்க தீப்பொறி தோன்றிப் பாய்ந்து நீல நிற நெருப்புக் கோளம் உருவாயிற்று. ‘மேலே’ நெருப்புக் கோளம் நடுக்கத்துடன் சடசடத்து மேலெழுந்தது. மேலே செல்லச் செல்ல நாற்பதடி உயரத்தில் புள்ளியாய் தன் வெளிறிய முகம் கண்டான். மிகுந்த உயரத்தில் வளைந்த கதவுப் பொறியை நெருப்புக் கோளம் வெளிச்சமிட்டுக் காட்டியது. வெளிச்சம் கலங்கலான பிசுபிசுத்த சுவர்களில் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மாயாஜாலத்தினால் சுவர்கள் இரவுடன் நெய்யப்பட்டிருந்தன. ஃபெஸ்டின் தன்னுடன் திரும்ப இணைந்ததும் நெருப்புக் கோளம் அகன்றது. இருட்டில் முஷ்டியை உள்ளங்கையால் குத்தியபடி அவன் அமர்ந்திருந்தான்.

எதிர்பாராத தருணத்தில் பின்னாலிருந்து மாயாஜாலத்தினால் அவனைக் கட்டியிருக்கக் கூடும். தனது சொந்த கானகத்தில் நடந்து கொண்டும், மரங்களுடன் சம்பாஷித்துக் கொண்டும் இருந்ததுதான் கடைசி நினைவு. முன்னதாக வாழ்க்கையின் நடுவே தனிமையான வருடங்கள். உபயோகமற்றும் சக்தி செலவிடப்படாமலும் இருப்பதாக உணர்வு கொண்டமையால் ஏற்பட்ட சுமை. எனவே பொறுமை பயிலும் பொருட்டு மரங்களுடன் சம்பாஷிக்க கிராமங்களை விட்டகன்றான். குறிப்பாக நீரோட்டத்துடன் ஆழ்ந்த உணர்வுத் தொடர்புடைய வேர்களைக் கொண்ட ஓக், செஸ்ட்நட் மற்றும் சாம்பல் நிற ஆல்டர் மரங்களைக் கண்டு பேச. மனிதர்களுடன் பேசி ஆறு மாதங்களாயிற்று. மந்திர மாயமின்றி எவருக்கும் தொந்தரவின்றி தனது அத்தியாவசியங்களுடன் இருக்கையில் யார் இந்தத் துர்நாற்றக் கிணற்றில் கட்டிப்போட்டது?

‘யார்? யாரது?’ சுவர்களை நோக்கி வினவினான்.

கற்களில் கறுப்பு வேர்வை வெளியிடுவது போல் மெதுவாக சுவர்களில் ஓர் பெயர் சேகரமாகி அவனிடம் வழிந்தோடியது’.

‘வோல்’

ஃபெஸ்டின் ஒரு கணம் வியர்வையில் குளித்திருந்தான் – வெகு காலத்திற்கு முன்னர் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டது – ஒரு மாயாவிக்கு மேலாகவும் மனிதத்தன்மை குறைந்தும் அவுட்டர் ரீச் ல் உள்ள தீவுகளைக் கடந்தவன். தொன்மையானவற்றைத் தலைகீழாக்குதல், மனிதர்களை அடிமைப்படுத்துதல், காடுகள் விளைநிலங்களைக் கெடுத்தழித்தல், தன்னுடன் மோதமுற்பட்ட எந்த ஒரு மாயாவி மற்றும் கீழ்த்திசை ஞானியை பாதாளச் சிறையில் அடைத்தல்.

அவனது அடிமைகள் கப்பலில் பின் தொடர, காற்றின் மேல் மாலை வேலைகளில் கடலிலிருந்து வருவதாக பாழடிக்கப்பட்ட தீவுகளிலிருந்து வரும் அகதிகள் ஒரேமாதிரியான கதை சொல்வர். கப்பலைக் கண்டிருக்கிறார்கள். ஆனால் எவரும் வோலை நேரில் பார்த்ததில்லை – தீவுகளில் தீய நோக்குடைய மனிதர்களும் உயிரினங்களும் பல இருந்தும், பயிற்சியின் போது அஹிம்சா நோக்கு கொண்டமையால் இம்மாதிரி கதைகளில் அதிக கவனம் கொள்ளவில்லை. முயற்சிக்கப்படாத தனது ஆற்றலை அறிந்தவனாய் ‘இந்தத் தீவை என்னால் பாதுகாக்க முடியும்’ என்று எண்ணியவனாய் வனம் திரும்பினான். ஓக், ஆல்டர் மர இலைகளினூடே காற்றின் சப்தம். அடிமரம், தளிர், மெல்லிய கிளைகள் இவற்றின் வளர்ச்சியின் தாளகதி, இலைகளில் பாய்ந்து சுவை காணும் சூரிய ஒளி அல்லது வேர்களைச் சுற்றியுள்ள கரிய நிலத்திடி நீர் -அவையெல்லாம் இப்பொழுது எங்குள்ளன? மரங்கள், அவனது பழைய சகாக்கள்.. அனைத்தையும் அழித்து விட்டானா வோல்?

விழித்தெழுந்து நின்ற ஃபெஸ்டின் உறுதியுடன் தனது வலக்கரம் கொண்டு இருஅகன்ற அசைவுகளுடன் ஒரு பெயரை உரக்கக் கூவினான். அப்பெயரானது மனிதனால் செய்யப்பட்ட எல்லாக் கதவுகளின் தாழ்களை சிதறடிக்கவல்லது. ஆனால் இச்சுவர்கள் இரவுடன் சூல்கொண்டு அசைக்க இயலாததாகி இதைக் கட்டியவனின் பெயரைத் தவிர, கேட்கவைக்க இயலவில்லை. அந்தப் பெயர் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் காதுகளை அறைந்தது. முழங்காலிட்டு வீழ்ந்த ஃபெஸ்டின் எதிரொலி அடங்கும் வரை காதுகளை இறுகப் பொத்திக் கொண்டான். பின் தாக்குதலால் தடுமாறி அமர்ந்த அவன் தியானித்தான்.

அவர்கள் கூறியது சரி. வோல் பலசாலிதான். தனது சொந்த மண்ணில் மந்திர பாதாளச் சிறையில் வோலின் மாயாஜாலம் எந்த ஒரு நேர்த்தாக்குதலையும் தாங்கக் கூடியதே. மேலும் மந்திரக்கோலின் இழப்பினால் ஃபெஸ்டினுடைய சக்தி பாதியாக்கப்பட்டது. ஆனால் அவனைச் சிறைப்பிடித்தவன் கூட ஃபெஸ்டினின் முழு ஆற்றலையும் – முன் செலுத்தும் மற்றும் உருமாறும் ஆற்றலை – அபகரிக்க இயலாது. எனவே இரட்டிப்பாக வலிக்கும் தனது தலையைத் தேய்த்தபடி உருமாறினான்.

சப்தமின்றி அவனது உடல் உருகி நுண்ணிய மூடுபனி மேகமாக மாறியது. சோம்பலாக தடம் கண்டு மேலெழுந்தது. பிசுபிசுக்கு ஈரச் சுவர்களை ஒட்டி பயணித்தது. மேல்வளைவும் சுவரும் சந்திக்குமிடத்தில் மயிரிழை பிளவு காண அதன் வழியாக துளித்துளியாக கசிந்து வெளியேறியது. ஏறத்தாழ அனைத்தும் பிளவு மூலம் வெளியேறும் போதில், சூடான காற்று உலைக்களத்திலிருந்து பீறிட்டது போன்ற ஒன்று தாக்கி மென்பனித் துளிகளை சிதறடித்து உலர்த்தியது. அவசர அவசரமாக மென்பனி தன்னை சிறைப்பெட்டகத்திலுள்ளே திரும்ப உறிஞ்சிக் கொண்டது. ஃபெஸ்டினின் சுயரூபம் சுருண்டு மூச்சு வாங்கிக் கிடந்தது. அஹிம்சையாளனாக சுயமையம் உள்ள ஃபெஸ்டினுக்கு உருமாற்றம் உணர்வு பூர்வ உளைச்சலாகும். இந்த உளைச்சலுடன் மனிதத் தன்மையற்ற உருமாற்றத்தில் சாவை எதிர்கொள்ளும் அனுபவம் சேர்ந்தது கொடூரமானதே. ஃபெஸ்டின் சற்று நேரத்திற்கு வெறுமனே மூச்சுவிட்டுக் கிடந்தான்.

தன் மேலேயே அவனுக்குக் கோபம். பனியாக வெளியேறுதல் என்ற எளிய எண்ணம் சர்வ சாதாரணமானது தான். எந்த ஒரு முட்டாளும் அறிந்த யுக்தி அது. அநேகமாக வோல் சுடுகாற்றை அங்கே காக்க வைத்திருக்கக்கூடும். ஃபெஸ்டின் தன்னை கரிய சிறிய வௌவாலாகத் திரட்டிக்கொண்டு விதானம் வரை பறந்து மெல்லிய காற்றோடையாக பிரிவின் மூலம் கசிந்து வெளியேறலானான். இத்தடவை முற்றிலுமாக வெளிவந்து மென்மையாக விசிறிக் கொண்டு ஹாலில் சன்னலை நோக்கிச் செல்கையில் கூர்மையான அபாய உணர்வு பெற்று படக்கென்று முதலில் மனதில் பட்ட சிறிய தங்கமோதிரமாக உருமாறினான். சன்னல் வழியாக வந்த ஆர்கடிக் சூறாவளிக் காற்று தற்போதைய உருவ அமைப்பைப் பரவலாக்கிவிடும் நினைக்க இயலாத பெருங்குழப்பம் மோதிர வடிவை மெல்லியதாக நடுங்க வைத்தது. புயல் கடக்கையில் அடுத்த எந்த உருவம் எடுத்து சன்னலிலிருந்து விரைவாக வெளியேறலாம் என அதிசயித்து பளிங்குத் தரையில் கிடந்தான்.

அவன் உருள ஆரம்பிப்பதற்குள் காலம் கடந்துவிட்டது. பூதாகரமான முகமற்ற கூனல் அரக்கனொருவன் நிலமதிர நடந்து வந்து வேக உருளலைத் தனது பெரிய சுண்ணாம்பு போன்ற கைகளால் தடுத்துப் பிடித்து எடுத்தான். பீடு நடை போட்டு விரைந்த சென்று கதவுப் பொறியின் இரும்புக் கைப்பிடி திறந்து குதூகல முணுமுணுப்புடன் ஃபெஸ்டினை திரும்ப இருட்டுக்குள் போட்டான். நாற்பதடி உயரத்திலிருந்து ‘க்ளிங்’ என்ற சப்தத்துடன் கல்தரையில் விழுந்தான்.

சுய உருவம் திரும்பப் பெற்ற ஃபெஸ்டின் வருத்தம் தோய முழங்கை சிராய்ப்புகளைத் தேய்த்தபடி எழுந்தமர்ந்தான். வெறும் வயிற்றில் இவ்வளவு உருமாற்றம் போதும் போதும் என்றாகியது. மந்திரக்கோலுக்காக விரக்தியுற்றான். அது இருந்தால் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் வரவழைக்கலாம். தனது வடிவத்தை உருமாற்றவோ, சில மந்திரங்கள் போடவோ இன்னபிற ஆற்றல்களை வெளிப்படுத்தவோ முடியுமெனினும் ஸ்தூல பொருட்களை உருமாற்றவோ வரவழைக்கவோ முடியவில்லை – மின்னலையோ அன்றி ஆட்டுக்கறியையோ.

‘பொறுமை பொறுமை’ தனக்குள் சொல்லியபடி ஆசுவாசப்படுத்திக் கொண்டு தனது உடம்பை மெல்லக் கரைத்து எண்ணெயில் ஆட்டுக்கறி வறுக்கையில் உண்டாகும் அருமையான மணமாக மாறி மேலெழுந்து, மீண்டும் அதே பிளவின் மூலம் வெளியேறினான். கூன் அரக்கன் சந்தேகத்துடன் முகர்ந்து கொண்டிருக்கையில் அனைத்தையும் சேர்த்திழுத்துக் கொண்டு பருந்தாக சன்னலை நோக்கிப் பறந்தான். கூன் அரக்கன் தாவிப்பிடிக்க முயன்ற ஒருசில அடிகளில் தவறவிட்டு வெடித்த கற்குரலில் ‘கழுகு, கழுகு, அந்தக் கழுகைப் பிடி’ என்று அலறினான்.

மந்திரக் கோட்டையிலிருந்து மேற்கே தனது அடர்ந்த கானகம் நோக்கி ஃபெஸ்டின் பறந்தான். சூரிய ஒளியும் கடல் பிரதிபலிப்பும் கண்களைக் கூசவைத்தன. காற்றினூடே கடுகிச் செல்கையில் வேறொரு அதிவேக அம்பு அவனைத் தாக்கியது. அலறியபடி வீழ்ந்தான். சூரியன், கடல்கோபுரம் சுழன்றன. நினைவிழந்தான்.

இருட்டுச்சிறையின் ஈரத்தரையில் விழித்தான். அம்பு தோளைத் துளைத்ததால் ஆன ரத்தம் பரவி கைகளை, உதடுகளை நனைத்திருந்தது. காயத்தை மூடி மந்திரித்தான். இப்போதைக்கு எழுந்து உட்கார முடிந்தது. குணமாக்கவல்ல மந்திரம் கூட நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை. புறத்தே நெருப்புக் கோளத்தால் வெளிச்சம் உருவாக்கியும் கண்களுக்கு ஏதும் புலப்படவில்லை. பறந்து செல்கையில் பார்த்த அதே கரியமூடுபனி. அவனது கானகத்தில் மீதும் அவனது நாட்டின் சிறிய நகரங்கள் மீதும்.

நாட்டைக் காப்பாற்ற வேண்டியது அவனைப் பொறுத்தது தான்.

மறுபடியும் நேர்த்தப்பித்தலை முயற்சிக்கலாகாது. மிகுந்த பலவீனமாய் சோர்வாயும் உள்ளது. தனது ஆற்றலை அளவுக்கதிகமாக நம்பி சக்தி இழந்தாயிற்று. இனி எந்த ஒரு உருவம் எடுத்தாலும் மேலும் பலகீனமாகி சிக்கிவிடக்கூடும்.

குளிரால் நடுங்கியபடி நெளிந்தான். நெருப்புக்கோளம் தனது இறுதி மித்தேன் வாயுவை விட்டபடி அகன்றது. மனக்கண்ணில் வாயுவின் மணம் காட்டின் எல்லையிலிருந்து கடல் வரையிலான தாழ்வான விரிந்த சதுப்பு நிலப்பரப்பு. மனித சஞ்சாரமற்ற அந்நிலப்பரப்பில் அன்னப் பறவையர் தரைமேவின பறப்பு. இடையே இன்னமும் குளங்களும், சட்டெனத் தென்படும் கோரைப்புல் தீவுகள் சிற்றோடைகளின் கடல் நோக்கிய அமைதிப் பயணம், ஆஹா அந்த ஓடைகளிளொன்றில் ஒரு மீனாக அல்லது இன்னும் மேலே மேல்நீரோட்டமாக, நீரூற்றுகளின் அருகே, கானகத்தில் மரங்களின் நிழலில், ஆல்டர் மரத்தின் வேர்களின் அடியே உள்ள நெளிந்த பழுப்பு நிற நிலத்தடி நீரிலே, ஒளிந்து ஓய்வு…

இதுதான் மாயாஜாலத்தின் சிகரம்; மகத்தான சாதனை. ஃபெஸ்டின் இதைச் சாதித்தான். எந்த ஒரு மனிதனையும் விட நாடு கடத்தப்பட்டோ, ஆபத்திலிருக்கையிலோ தனது வீட்டின் மண்ணுக்கும் நீருக்குமான ஏக்கம் தலை உயர்த்தி சன்னலினூடே ஆவல் ததும்பிய தனது பார்வையில், சாப்பிட்ட மேஜை, தனது படுக்கையறை, சன்னலுக்கு வெளியே மரக்கிளைகள் – கனவு தான் இவைகளைக் கொண்டு வரும். இவையன்றி ஃபெஸ்டின் சாதித்திருந்தான், மாபெரும் கீழ்த்திசை ஞானிகள் இல்லம் சேரும் ஜாலத்தை உணர்ந்திருந்ததை எலும்புக் குருத்திலிருந்த குளிர் ஊர்ந்தபடி நரம்புகள் நாளங்களூடே வெளிவர, கரிய சுவர்களுக்கு நடுவே ஃபெஸ்டின் நின்றிருந்தான். தனது மனோபலமனைத்தையும் திரட்டி இருண்ட சதைகளில் தீபஒளி மிளிர அந்த மகா மௌன ஜாலத்தை செயல்படுத்தத் துவங்கினான்.

சுவர்கள் மறைந்தன. அவன் பூமியில் இருந்தான், பறவைகளும் கிரானைட்டின் நாளங்களும் எலும்புகளாகவும், நிலத்தடி நீர் ரத்தமாகவும், நிகழ்வுகளின் வேர்கள் நரம்புகளாகவும் அவனிருந்தான். முன்னும் பின்னும் இருண்டிருக்க மெதுவாக ஒரு குருட்டுப் புழுபோல மேற்கு நோக்கிப் பயணித்தான். உடனே அவனது முதுகிலும் வயிற்றிலும் மெல்லிய தடைகளற்ற, விரயமற்ற குளுமை தழுவியது. தன் பக்கங்களில் அந்த நீரை அருந்தியதில் மின்னோட்டத்தை உணர்ந்தான். தனது இமையல்லாக் கண்களில் ஆல்டர் மரத்தின் ஆணிவேர்களுக்கு இடையே ஆழ்ந்த பழுப்புக் குளத்தைக் கண்டான். முன்னேறி புள்ளியாய் மின்னி நிழலில் மறைந்து வீடுவந்து சேர்ந்தான் – விடுதலையாகி.

தெளிந்த ஊற்றிலிருந்து – காலவரம்பின்றி ஓடிய நீரை அகழ்ந்தபடி அக்குளத்தின் மணலில் கிடந்தான் ஃபெஸ்டின். குணப்படுத்தக் கூடிய எந்த ஒரு மந்திரிப்பையும் விட பலமாக அவனது காயத்தைக் குணப்படுத்திய அக்குளுமை, முன்னர் கொண்டிருந்த அந்த முகமற்ற குளிரை அலம்பியது. அட, எவரின் நடமாட்டம் அவனது காட்டினில் மீண்டும் உருமாற மிகவும் சோர்வான நிலையில் தனது பளிச்சிடும் உடலை ஆல்டர் மரவேர் வளைவின் அடியில் ஒளித்துக் காத்திருந்தான்.

பெரிய சாம்பல் நிற விரல்கள் நீரில் மணலை சிலிர்த்தபடி துழாவியது. மங்கலான ஒளியில் நீருக்கு மேலே அடையாளமற்ற முகங்கள், வெறித்த கண்கள் தோன்றி மறைந்து தோன்றின. சுய உருவம் பெற வேண்டிய மட்டும் போராடியும் முடியவில்லை. அவனது வீடு சேரும் மந்திரமே அவனைக் கட்டிப் போட்டிருந்தது. வலையில் நெளிந்தான். வறண்ட பிரகாசமான பயங்கரக் காற்றில் திணறினான். கடும் வலி அதிகரிக்க அதற்கப்பால் எதுவும் அறிந்திலன்.

வெகு நேரத்திற்குப் பின் சிறிது சிறிதாக பிரக்ஞை வந்தபோது திரும்ப மனித ரூபத்திலிருந்தான். தகிக்கும் கசப்பான திரவமெதையோ வலுவில் தன் தொண்டைக்குள் ஊற்றப்படுவது கண்டான். காலம் மறுபடியும் பிசகியது. திரும்ப அவன் எதிரியின் கட்டுப்பாட்டில் இருந்தான் என்பதை இருட்டுச் சிறையில் தலைகுப்புறப்படுத்துக் கிடந்தபடி அறிந்தான். மூச்சுவிட முடிந்ததெனிலும் சாவு நெடுந்தொலைவிலொன்றும் இல்லை.

நடுக்கம் உடல் முழுக்க விரவியிருந்தது. உடலை அசைத்தபொழுது விலாவிலும் முன் கையிலும் வலி குத்தியது. வோலின் சேவகத்திலுள்ள கூலி அரக்கர்கள் அவனை இங்கே கொண்டு வருகையில் நசுக்கியிருக்கக்கூடும். உடைந்து சக்தியின்றி இரவின் கிணற்றடியில் கிடந்தான். உருமாற ஆற்றலெதுவும் இல்லை. வெளியேற வழியில்லை, ஒன்றைத் தவிர, வலியின் எல்லைக்கருகில் அசைவற்றுக் கிடந்த அவன் எண்ணமிட்டான்,

என்னை ஏன் அவன் கொல்லவில்லை? ஏன் உயிருடன் வைத்திருக்கிறான்?

ஏன் அவன் தென்படவில்லை? எந்தக் கண் கொண்டு அவனைக் காண்பது? எதில் அவன் நடக்கிறான்?

அவன் பயப்படுகிறான், நான் பலமற்றிருந்தும்.

அவன் தோற்கடித்த அனைத்து மாயாவிகளையும், ஆற்றல்மிக்க மனிதர்களையும் உயிருடன் இம்மாதிரி கல்லறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக, விடுதலைக்கு முயற்சித்தபடி வருடக் கணக்கில் வாழ்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் எவனொருவன் வாழ்வைத் தேர்ந்தெடுக்காவிட்டால்?

எனவே ஃபெஸ்டின் தேர்வை முடிவு செய்தான். எனது முடிவு தவறாயின் நானொரு கோழை என மனிதர் கருதுவர் என்பதே ஃபெஸ்டினின் இறுதி எண்ணமாகும். பக்கவாட்டில் சற்றே தன் தலையைத் திருப்பி, கண்கள் மூடியிருக்க இறுதி மூச்சிழுத்து, கட்டற்ற அந்த வார்த்தையை, ஒரு தடவை மட்டுமே பேசப்படுகின்ற ஒன்றை முணுமுணுத்தான்.

இது உருமாற்றமல்ல, அவன் மாறவில்லை. அவன் உடம்பு, நீண்ட கால்களும் அறிவார்த்தக் கைகளும், மரங்களையும் ஓடைகளையும் விரும்பிக் கண்ட கண்களும் அசைவற்று – துளிக்கூட அசைவற்று – மிகக் குளிர்ந்து மாறாமல் கிடந்தன. மாயாஜாலத்தால் கட்டப்பட்ட சிறை மறைந்தது. அறைகளும் கோபுரங்களும் மறைந்தன. அந்தக் கடலும், வனமம், மாலைநேர வானும் மறைந்தன. அனைத்தும் மறைந்தன. ஃபெஸ்டின், இருப்பின் தூரத்து மலைச்சரிவில் புதிய நட்சத்திரங்களடியில் மெல்ல பயணித்தான்.

ஒரு தீபஒளி போன்று இருட்டிலே பரந்துபட்ட நிலப்பரப்பினூடே சென்றவன் தனது வாழ்வில் மாபெரும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இங்கு அதை மறக்கவில்லை. நினைவு வந்தவனாக தனது எதிரியின் பெயர் சொல்லி அழைத்தான்.

‘வோல்’

அழைப்பைத் தாங்கவொண்ணாமல் அடர்ந்த வெளிறிய நஷத்ரஒளி உருவில் வோல் அவனை நோக்கி வந்தான். ஃபெஸ்டின் அணுகுகையில் மற்றது எரியூட்டப்பட்டது போன்று பயத்தால் குறுகி ஊளையிட்டது. சட்டென பலதாக அது மாறி ஓடி ஒளிகையில் மிக அருகாமையில் ஃபெஸ்டின் தொடர வெகுதூரம் சென்றனர். பெயரிடப்படாத நஷத்திரங்களைத் தொடுமளவு கூம்புகளைக் கொண்ட வறட்டுத் தீக்குழம்புகள் வழியும் நெடிய எரிமலைகளினூடே, மௌனமான மலை முகடுகளினூடே, குட்டையான கறுப்புப் புற்களைக் கொண்ட பள்ளத்தாக்கினூடே, நகரங்களினூடே கடந்து சென்றனர். கீழே வெளிச்சமில்லா தெருக்களுக்கிடையேயான வீடுகளின் சன்னலூடே யாரும் பார்க்கவில்லை. நஷத்திரங்கள் வானில் தொங்கின. எவையும் நிலைபெறவில்லை. எழவில்லை. இங்கு எவ்வித மாற்றமுமில்லை. நாளெதுவும் வராது. அவர்கள் சென்று கொண்டே இருந்தனர். முன்னொரு காலத்தில் ஒரு நதி ஓடிய இடத்திற்குச் சென்றடையும் வரை ஃபெஸ்டின் எப்பொழுதும் தன்முன்னே செல்பவனை விரட்டியபடியே சென்றான். வாழ்நிலங்களிலிருந்து வந்த நதி அது. அந்த வறண்ட நதியின் நீர் அரித்த பாறை இடுக்குகளிடையே சடலமொன்று கிடந்தது. நிர்வாணமாக, மரணம் அறியாத நஷத்திரங்களை வெறித்தபடி நிலைகுத்திய கண்களுடன் வயோதிகனின் சடலமது.

‘உள்ளே போ’ ஃபெஸ்டின் ஆணையிட்டான். வோல் நிழல்ஹீனமாய் உடைந்து முனக ஃபெஸ்டின் அதன் அருகே சென்றான். வோல் கூனிக்குறுகி நகர்ந்து வளைந்து தனது சடலத்தில் திறந்த வாயில் நுழைந்தான்.

சடலம் உடனடியாக மறைந்தது. சுவடுகளற்று, களங்கமற்று வறண்ட பாறையிடுக்குகள் நஷத்திர ஒளியில் பளிச்சிட்டன. ஃபெஸ்டின் சிறிது நேரம் அசையாது நின்றான். பின்னர் மெதுவாகப் பெரிய பாறைகளுக்கிடையே ஓய்வெடுக்க அமர்ந்தான். ஓய்வுதான் தூக்கமல்ல, வோலின் உடலைத் திரும்ப அதன் கல்லறைக்கு அனுப்பி, சாம்பலாக்கி, தீய ஆற்றலை அழித்து காற்றால் சிதறடிக்கப்படும் வரை, கடல் புரத்தை மழை கழுவும் வரை இந்த இடத்தைக் காவல் காத்தாக வேண்டும். ஒரு சமயம் சாவு மற்றொரு நிலம் கண்ட திரும்பிய இந்த இடத்தைக் கண்காணித்தாக வேண்டும். இப்பொழுது பொறுமையுடன் – எல்லையற்ற பொறுமையுடன் – கடல் எல்லையற்ற நாட்டின் இனி என்றுமே ஓடாத நதியின் பாறைகளிடையே காத்திருந்தான். இன்னமும் மேலே நிலைகொண்டிருந்த நஷத்திரங்களைக் கவனித்தபடியே. ஓடைகளின் குரல்களையும், உயிர்க்கானகங்களின் இலைகளில் மீதான மழையின் சப்தங்களையும் மெல்ல மிக மெல்ல மறக்க ஆரம்பித்தான்.

 

தமிழாக்கம் : ரஞ்சித் புத்திரன் ராமஸ்வாமி

 

இது, உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான ஊர்ஸுலா கே. லா குன் எழுதிய  “The Word of Unbinding” கதையின் தமிழாக்கம். 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த இந்தக்கதை Fantasy வகையின் புகழ் பெற்ற கதையாகவும், லா குன் ஐ கவனம் பெறவைத்த கதையாகவும் இருந்தது. பின்னாளில் லா குன் எழுதிய அவரது தனித்துவம் மிக்க மாஸ்டர் பீஸ் எனப்படும் Earthsea  கதைகளின் உருவாக்கத்திற்கு இந்தக்கதைதான் உட்தூண்டலாக அமைந்தது.

உன்னதம் 4 வது இதழில் (ஜனவரி 1995) வெளிவந்தது. ரஞ்சித் புத்திரன் ராமஸ்வாமியின் நினைவாக மறுபிரசுரம் ஆகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!