home கவிதை, டிரெண்டிங் கவிதைகள் : அகமது ஃபைசல்

கவிதைகள் : அகமது ஃபைசல்

இந்தக் கவிதையை ஆயிரம்
வருடங்களுக்குப் பின் வாசிக்கவும்

அழகிய கடல்தனை இப்படி சீர் குலைக்கலாம்
தொலைபேசியை எடுக்க மறந்து
ஒரு அலை
திரும்பிச் செல்கின்றது.

**
என் மகன்
கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு
பாடசாலை செல்ல தயாராகின்றான்.
நான் வேலைக்குச் செல்லும் நேரத்தைப் பார்க்க
வீட்டில் கடிகாரமில்லை.

**
ஆறு நீரின்மேல் ஓடிக்கொண்டிருக்கிறது
மீன்கள் நீருக்குள் இறங்கி
ஆற்றில் பயணம் செய்கின்றன.

**
கூட்டமாக பறக்கிறபோது
ஒரு பறவைக்கு இன்னொரு பறவை
இப்படியும், அப்படியும்
குறுக்கும்,நெடுக்குமாக பறந்து காட்டும்.
தனித்துப் பறக்கிறபோது ஆகாயத்தில் இடவசதி
அற்றிருக்கும்.
இப்போது போனால் எதைத் திருடலாம்.
நாள் என் உடலில் விழுந்து மரணிக்கிறது
புதையுண்டு கிடக்கும் நாட்களைக் காட்டுகிறது என் உடல்
நான் கிழவன்.

**
இன்று நான் கடைக்குச் சென்று ஒரு புதிய பேனா
வாங்கினேன்
என் பேனாவுக்குள் மொத்தம் எத்தனை சொற்கள்
இருக்கின்றன
பேனாவை எனக்கு விற்றவனும்
எண்ணிக் கணக்கெடுக்கவில்லை.

**
தூரம் என்ற பட்டம்
எனக்கு முன் பறந்துகொண்டிருக்கிறது
பிடிக்க முடியாமல் களைப்பிலே தினமும் நின்றுவிடுகிறேன்.

**
சீப்பு என் தலைமுடியை
தன் அடிமையாக்கிக் கொண்டது

**
நீரை நிற்கவைத்து கேள்வி கேட்கிறது
வெள்ளிப் பாத்திரம்.
என்னைச் சந்திக்க நினைக்கும்போது
நான்
அவன் கண்ணுக்குள் ஏறி நடிக்கத் தொடங்குகிறேன்.
வீட்டில் நான் இல்லை என்றதும்
மேடையிலிருந்து வெளியேற்றப்படுகிறேன்.

**
மலைப்பாம்பு நெளிகிறது
மலைகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

**
கைக்குழந்தை சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறது
வீட்டிற்குள் சாமான்கள் போட்டது போட்ட இடத்திலேயே
கிடக்கிறது
தொலைக் காட்சிப் பெட்டி மட்டும்
இடம் மாறி இடம் நகர்ந்துகொண்டிருக்கிறது

நான் கோபமாக பேசியதைக் கேட்டு
பாதை பேசாமல் வந்தது.
நீண்ட நேரம் பேசாமல் வந்த பாதை
எழுந்து நாக்கை மடித்து என் பிடறியில் அடிக்க கையை
ஓங்கியது.
பாதையில் பயணம் செய்துகொண்டிருந்த யாவரும்
சரிந்துகொண்டிருந்தனர்.

**
ஒவ்வொரு நாளும் கூவி என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பும்
சேவல்
நேற்று இரவு அசந்து தூங்கிவிட்டது.
அன்றைய காலைப் பொழுதை நான் கூவி
விடியவைத்துவிட்டேன்.

**
சரிந்து கொண்டிருக்கும் மண் குவியலில்
புதைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மண்ணையும்
காப்பாற்றி
வெளியே கொண்டுவர
இரண்டு கைகளையும் உபயோகிக்கின்றேன்.
முன்பு காப்பாற்றிட யாருமற்று இறந்துபோன மண்
ஒவ்வொன்றாக
என் கைகளில் வருகின்றது.

ஊருக்குப் போகிறேன் ஐயா
பஸ்ஸில் இந்த வாழைக் குட்டியையும் ஏற்ற வேண்டும்.
போகிற வழியில் குட்டிபோடுமா?
குலை போடுமா?
இது புது அனுபவம்
வழியில் பஸ்ஸை நிறுத்தாமல் போனால்
பிழுக்கை போடும்

**
எவ்வளவு நேரமாக
அழைப்பு மணியை அடித்துக்கொண்டிருக்கிறேன்.
கதவுகளுக்கு கேட்கவில்லை.
காது கேளாத கதவுகளை வைத்துவிட்டு
வீட்டுச் சொந்தக்காரன் எங்கே போயிருப்பான்?

**
மிகவும் சிக்கலாக இருக்கின்றது
மீனவன் கையிலிருக்கும் வலை.
படகில் செல்லும் யாரும்
இதைப் பற்றி பேசுவதில்லை
இரகசியமாகவே வைத்திருக்கின்றார்கள்.

சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு
காது வெளியே இருக்கிறது.
கேட்பதற்கு யாருமில்லாமல்
பசி உள்ளே இருக்கிறது.

**
மரம் உறங்குகின்ற தருணம் பார்த்து
தப்பிக்கின்றன சில இலைகள்.
என் மகன் இலைகளோடு பேசிக்கொண்டிருக்கின்றான்.

**
காற்று உள்ளே வரவில்லை என்கிறீர்கள்
அதற்கு வெளியே போகத் தெரியாது.

 

  • அகமது ஃபைசல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!