home கவிதை, டிரெண்டிங் கவிதைகள் : பூவிதழ் உமேஷ்

கவிதைகள் : பூவிதழ் உமேஷ்

மீன்கள்

நீரின் சாயலில் ஒரு பெண்
மணலாற்றில் நடக்கிறாள்

கூந்தலில் பெருகிய நதியில்
அவள் காலடித் தடங்கள்
மீன்களாகி நீந்துகின்றன.

 

ஓய்வு

எண்களை மட்டுமே சேகரமாக வைத்திருக்கும்
கணக்கு மாஸ்டருக்கு பசி எடுத்தால்
இரண்டு பூஜ்யங்களைத் தின்பார்

வெயில் நேரங்களில்
ஐஸ் போல ஒன்பதை எடுத்து சப்பியபின்
குச்சி போல “ஒன்றை” எறிவார்
பார்வை மங்கிவிட்டதால்
“எட்டை” கண்ணாடி போல அணிகிறார்

குளித்துக் களையவிட்ட கூந்தலுக்கு
ஹேர் கிளிப்பாக பேத்தியிடம் இருக்கு “மூன்று”

விளையாட்டில் வேடிக்கையில் விருப்பமுள்ள பேரன்
“ஆறில்” சுருக்கு நீட்டி ஓணான் பிடிக்கிறான்

“ஏழை” கொக்கியாக உயர்த்திய அவர் மனைவி
சலிப்பாக முருங்கைக்காய் ஒடிக்கிறாள்

சதா சண்டையிடுகிறார்கள்
“நான்கையும் ஐந்தையும் ” சமமாகப் பிரிக்க முடியாத மகன்கள்

காலம்
“இரண்டின்” சாயலில் பாம்பாக
எப்போது வருமெனக் காத்திருக்கிறார் கணக்கு மாஸ்டர்.

– பூவிதழ் உமேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!