home கவிதை, டிரெண்டிங் கவிதைகள் : பூவிதழ் உமேஷ்

கவிதைகள் : பூவிதழ் உமேஷ்

இன்செப்ஃசன் கைகள்

சிவப்பு நிற பட்டாம்பூச்சி வரைந்ததற்கு
ஏன் அவ்வளவு கோபமாக இருக்கிறான்
சிவப்பு அவனது இரத்தமாச்சே
ஓவியனை தட்டிக் கேட்லாம் வா..

அதோ பார்
ஏற்கனவே வரைந்த வயதான பட்டாம்பூச்சிக்கு
இரத்தம் கொடுத்த அவன் தாத்தா
தள்ளாடி நடந்து போகிறார் …

இது கூட பரவாயில்லை

அடுத்து வரையப் போகும்
சிறிய பட்டாம்பூச்சிக்கு
அவன் குழந்தையின் இரத்தம் கேட்கிறான்

கூட்டுப் புழுவின்
படம் வரைய
கர்ப்பவதி மனைவியின்
சிசு இரத்தம் கேட்கிறான்

சரி வா நாமாவது தூரிகையை எரித்துவிடலாம்

தூரிகைக்காக
என் தலை முடியை மழித்து சென்றவன் அவன்தான்

கித்தானையே கிழித்துவிடலாம் வா

இல்லை … இல்லை
கித்தானுக்கு தன் ஆடையைக் கொடுத்த பெண்
அதன் பின்னே நிர்வாணமாக நிற்கிறாள்

ஓவியனின் கையை ஒடித்திடலாம் வா

இல்லை இல்லலை …
அது ஒற்றை கை அல்ல
கிறிஸ்டோபர் நோலனின் கைகள்.

 

விக்கலை வரைதல் 

தண்ணீர் வரையத் தெரியுமா என்றான்

வரைந்ததும்
தண்ணீருக்குள் நிறைய புழுக்கள் என்றான்

தாகத்தை வரைய சொன்னான்
பாதி நிரம்பிய குவளை வரைந்தேன்
வலசை பறவையின் தாகமாக இல்லை என

விக்கல் வரைய சொன்னான்
நான்  கல் எறிந்த குளம் வரைந்தேன்

அவனாகவே
இறக்கை வரைந்துகொண்டு பறந்தான்

இன்னொரு கல்
என்னிடம் இருந்தது
அவனுக்கு எப்படி தெரிந்திருக்கும் ?

– பூவிதழ் உமேஷ்

One thought on “கவிதைகள் : பூவிதழ் உமேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!