home கவிதை, டிரெண்டிங் கவிதைகள் : வான்மதி செந்தில்வாணன்

கவிதைகள் : வான்மதி செந்தில்வாணன்

 

பாலைக் கப்பல்

ஏ குறுநிலத்தானே….
என் வற்றிய ஆடுகள்
உன் வெற்று நிலத்தில்
மேய்ச்சலுக்கு அலைகின்றன.
அன்று
விதையென நீ தூவிய
பதர்கள் காற்றுக்கு இரையாயின.
தகதகக்கும் சூரியக் கதிர்கள்
மண் தொடுகையில்
தெறிக்கிறது சுடுமணம்.
மேய்ச்சல் பறவைகள்
வெறுநில மண்கிளறி
களைத்துச் சோர்கின்றன.
உன் வறள்நிலம் முழுக்க
ஆங்காங்கே
காற்றிசைக்கும் நெகிழிகள்
கூடாரமிட்டுக் குவிந்திருக்கின்றன.

அதுசரி
உன் மேய்ச்சல் பசுக்கள் எப்போது கழுதைகளாயின?
சுவரொட்டிகளைத் தின்று
பருத்துக் கிடக்கின்றன
அவற்றின் வயிறுகள்.
அவை அசைபோடுவதை
நிரந்தரமாக நிறுத்திவிட்டன போலும்.
ஈடுசெய் பொருட்டு
அவைகளின் கழுத்துமணிகள்
ஓயாது அசைவிடுகின்றன.

எப்பொழுதேனும்
உன் சிறுநீர் பட்டெழும்பும் மண்துகள்,
நுரையீரலில் சடாரென்று
மழையின் நறுமணத்தை
அரைகுறையாய்த் தெளித்துப் போகின்றது.

இதென்ன
விதைபடாத உன் நிலத்தில்
புதிதாக முளைத்திருக்கிறது நடுகல்.
அருகில் நிலம் விற்பனைக்கென்ற
பதாகை வேறு.
உன் பூத உடல் புதைபடவேனும்
துண்டுநிலம் வேண்டாவா?
மின் மயானத்தை எண்ணித்
தேற்றிக்கொண்டாய் போலும்.

நேற்று பசி மிகுதியால்
வெயிலின் வேர்கள் ஆழப் பதிந்த
உன் நிலத்து மண்ணை ஒரு கைப்பிடி
இறுக்கமாக அள்ளினேன்.
வாயிலிட்டு மெல்லுகையில்
மொறுமொறுத்த மண்புழு
மேலும் சுவை கூட்டிற்று.

நிலபுலன்களைத் தொலைத்துவிட்டு
மூச்சுக்காற்றை மட்டுமே
உள்ளிருப்பாய்க் கொண்டிருக்கும்
உன் உருவம்
எனக்கு ஒரு பாலைக் கப்பலாய்க்
காட்சி தருகிறது.
நீ அறிவாயா?
இப்பாலையில் நீர்த்தாகம் மிகுமாயின்
சற்றும் தாமதிக்காது உன் உடல்கிழித்து
இருப்பென வழிந்தோடும்
நீர்மம் பருகத் திட்டமிட்டுள்ளேன்
எனதன்புக் குறுநிலத்தானே..

 

 

நதியில் நீந்தும் மீன்கள்

நீங்கள் நினைப்பதுபோல்
நதியில் நீந்தும் மீன்களெல்லாம்
வெறும் மீன்களல்ல.
என் ஆழ்மன துயரங்கள்தான் அவை .
நீந்தியவாறே
நொடிக்கு நொடி
புதுப்பித்துக்கொள்ளும் அவைகளை
நதிக்கரையில் நின்றவாறே நான்
உற்று ரசித்திருக்கிறேன்.
அவைகளும் தலைதூக்கி
எனைக் கண்ட மகிழ்வில்
சிலுப்பிக்கொண்டு நீரின் அடியில்
சீழ்க்கை எழுப்ப முனைகின்றன.
நீர்க்குமிழியாகவே கேட்கிறது
எனக்கந்த சீழ்க்கை.

நதியின் மேனியில்
நான் கால்வைக்கும்போதெல்லாம்
எவ்வித எதிர்பார்ப்புமின்றி
துயர்கள் என்னை முத்தமிடுகின்றன.
பதிலுக்கு

உடலை நதியினுள் இறக்கி
அவைகளுக்கு என்னை
முழுதாக முத்தமிடத் தருகிறேன்.

போயும் போயும் என் துயர்களா
உங்களின் பசியடக்கப் போகிறது?
அவைகளை விழுங்கும் நோக்கில்
துளியும் பொறுமையின்றி
நதிமுழுக்க வலைவிரிக்கும்
உங்களைப் பார்க்கையில்
நான் மிகவும் அருவருப்பு கொள்கிறேன்.

மூழ்கியபடி
மீன்கள்போல் சீழ்க்கை எழுப்புகையில்
எண்ணிலடங்கா நீர்க்குமிழிகள்
என்னிலிருந்து விடுபடுகின்றன.
சீழ்க்கை அடங்கியதும்
உடைபடாத குமிழியென
நீர்மேனியில் மிதக்குமென்னை
எவ்வித வலையுமின்றி
உங்கள் பசிக்கென
தாராளமாய்க் கைகொள்ளலாம்.
அதுவரையேனும்
சற்று பொறுமையாக இருங்கள்.

 

– வான்மதி செந்தில்வாணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!