home கட்டுரை, தமிழி கால்டுவெல் முன்னெடுத்த கீழ்த்திசையியல்: தமிழ் இனவியம் பற்றிய நோக்குநிலை

கால்டுவெல் முன்னெடுத்த கீழ்த்திசையியல்: தமிழ் இனவியம் பற்றிய நோக்குநிலை

 

 • முனைவர் பக்தவத்சல பாரதி

 

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் உலகின் பிற நாடுகளுக்குச் சென்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து குடியேற்ற நாடுகளின் மரபுகளை யெல்லாம் நுட்பமாக ஆராயத் தொடங்கினார்கள். கீழ்த்திசை நாடுகள் பற்றி ஐரோப்பியர்கள் உருவாக்கிக் கொண்ட அறிவுமுறையும் அதன்வழி உருவாக்கிய மேலாண்மையும் ஒரு கருத்தினமாக மாறி, அதுவே பின்னாளில் ‘கீழ்த்திசையியல்’ (ழுசநைவெயடளைஅ) என இனங்காணப்பட்டது.

கீழ்த்திசையியல் பற்றிய நுட்பமான ஒரு வரைவினை எட்வர்டு சைத் (Edward Said, 1978) முன்வைத்துள்ளார். அது பற்றிய ஆய்வில் சைத் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “கீழ்த்திசையியல் என்பது கீழ்த்திசை நாடுகளோடு இணைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்; கீழ்த்திசை நாடுகள் குறித்த அறிக்கை தருதல், அது தொடர்பான கருத்துக்களை ஏற்றல், விளக்குதல், கற்பித்தல், சரிப்படுத்தல், ஆட்சிக்கு உட்படுத்துதல் என்பதாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கீழ்த்திசையியல் என்பது கீழைநாடுகளின் மீது மேற்கின் மேலாதிக்கம், மறுகட்டமைப்பு, அதிகாரம் ஆகியவற்றை நிலைப்படுத்துவதாகும்” (சைத் 1978: 3; விரிவுக்குக் காண்க: டிரவுட்மன் 2007: 258).

கிழக்கிந்தியக் கும்பினி 1757 இல் முகலாயரைத் தோற்கடித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய காலத்தில் வங்காளத்தில் ஒரு வலுவான மையத்தை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்தது. இதனையடுத்து கொல்கத்தாவில் வில்லியம் ஜோன்ஸ் 1784 இல் உருவாக்கிய வங்க ஆசியக் கழகத்தின் ஊடாகக் கீழ்த்திசையியல் ஒரு முறையான தொடக்கத்தைக் கண்டது. 1804இல் வில்லியம் கோட்டைக் கல்லூரியும், அதேயாண்டில் பம்பாய் இலக்கியக் கழகமும் உருவாயின. வில்லியம் ஜோன்ஸ் தொடங்கி கோல்புரூக், மேக்ஸ் முல்லர் ஊடாக எண்ணற்ற ஐரோப்பிய அறிஞர்கள் சமஸ்கிருத மொழியானது இந்தோ – ஐரோப்பிய மொழிகளோடு இன உறவுடையது எனக் கண்டறிந்த பின்னர் இந்தியப் பண்பாடும் நாகரிகமும் சமஸ்கிருத, வேத மரபுகளிலிருந்தே உருவாயின எனும் கருத்தை முன்னெடுத்தார்கள். இதனாலேயே டிரவுட்மன் போன்ற அறிஞர்கள் இக்குழுவினர் முன்னெடுத்தவற்றைக் ‘கல்கத்தா கீழ்த்திசையியல்’ என்பார்கள் (டிரவுட்மன் 2007: 260).

கல்கத்தாவுக்கு இணையாகக் கிழக்கிந்தியக் கும்பினி சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டபோது இங்கிலாந்திலிருந்து நேரடியாக ஒரு குழுவினர் இங்கு வந்து தங்கிச் செயல்பட்டார்கள். 1812 இல் ஃபிரான்சிஸ் வொயிட் எல்லிஸ் (1777 – 1819) புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கி ஆங்கில அதிகாரிகளுக்கான மொழிப் பயிற்சியையும் ஆங்கில நிர்வாகத்திற்கான தேவைகளையும் மேற்கொண்டார். சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கு மூலம் என்று கல்கத்தா கீழ்த்திசையியலார் பேசிவந்த நிலையில் அலெக்சாண்டர் டங்கன் காம்ப்பெல் தெலுங்கு மொழிக்கு ஓர் இலக்கணத்தை 1816 இல் உருவாக்கினார். அந்நூலுக்கு முன்னுரை எழுதிய எல்லிஸ் திராவிட மொழிகள் தனித்துவமானவை என்பதற்கான சான்றுகளைச் சுட்டிக்காட்டினார்.

காம்ப்பெல் நூலுக்குப் பின்னரும் திராவிடம் தனித்துவமானது என்பதை நிறுவுவதற்கான சான்றுகளை எல்லிஸ் தேடிக்கொண்டே இருந்தார். காம்ப்பெல், எல்லிஸ் தொடங்கி கால்டுவெல் ஊடாக திராவிடச் சான்று மெல்ல மெல்ல உறுதியானது. இந்நிலையில் சென்னையிலிருந்து கீழ்த்திசையியலுக்குப் பணியாற்றியவர்கள் ‘சென்னைக் கீழ்த்திசையியல்’ குழுவினர் எனப் பெயர் பெற்றனர் (மேலது: 149). இது பற்றிய மிக விரிவான புரிதலை டிரவுட்மன் தன்னுடைய ‘திராவிடச் சான்று: எல்லிஸும் திராவிட மொழிகளும்’ (2007) நூலில் ஆராய்ந்திருக்கிறார்.

இனி கால்டுவெல் முன்னெடுத்த கீழ்த்திசையியல் பற்றிக் காண்போம்.

 

 

கால்டுவெல் முன்னெடுத்த கீழ்த்திசையியல்

சென்னையை மையமிட்டுச் செயல்பட்ட கீழ்த்திசையியல் முன்னோடிகளில் கால்டுவெல் பாதிரியார் (1814 – 1891) முக்கியமானவர்; இவரின் பங்களிப்பு தனித்துவமானது. ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற ஒன்றைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தவர். இது தவிர கால்டுவெல் பல்வேறு நிலைகளில் கீழ்த்திசையியலுக்குப் பங்காற்றியுள்ளார். அவர் எழுதியவற்றில் முக்கியமானவை வருமாறு:

 1. இடையன்குடி மிஷன் (1844, 1847)
 2. திருநெல்வேலி சாணார்கள் (1849)
 3. திராவிட ஒப்பிலக்கணம் (1856)
 4. திருநெல்வெலி மிஷன் பற்றிய சொற்பொழிவுகள் (1857)
 5. இந்தியாவில் கிறித்தவத்தின் வளா;ச்சி (1857)
 6. இந்துக்களின் இறைவிளக்கம் (1863)
 7. இந்தியாவின் மொழிகளும் மறைப்பணிகளோடு அவற்றின் உறவுகளும் (1875)
 8. உயர்சாதி மக்களிடம் மறைப்பணியாற்றுதல் (1876, 1877, 1878)
 9. திருநெல்வேலி மிஷனின் முதல் நூற்றாண்டு (1880)
 10. தொடக்கக் காலம் முதல் ஆங்கில ஆட்சிவரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் வரலாறும் பொது வரலாறும் (1881)
 11. திருநெல்வேலி மிஷனின் தொடக்க கால வரலாறு பற்றிய ஆவணங்கள் (1881)
 12. இந்தியாவில் திருச்சபைப் பள்ளிகளில் சமய போதனைகளை மேற்கொள்ளுதல் (1881)
 13. தென்னிந்தியாவில் பூத வழிபாடு (1886)
 14. கிறித்தவமும் இந்துத்துவமும் (1893)

கால்டுவெல் பங்களிப்புகளில் மிகவும் முதன்மையானது திராவிட மொழிக் குடும்பம் பற்றியதாகும். கீழ்த்திசையியல் புலத்தில் அதுவரை யாரும் வெளிப்படுத்தாத ஒரு புதிய கண்டுபிடிப்பினைக் கால்டுவெல் செய்தார். ‘திராவிட மொழிக்குடும்பம்’ எனும் ஒரு புதிய கருத்துருவாக்கத்தை முன்னெடுத்து உலக அளவில் உள்ள மொழிக்குடும்பங்களில் ஒரு புதிய மொழிக் குடும்பத்தை வெளிப்படுத்தினார். கால்டுவெல் இங்கிலாந்தில் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் படித்தவர்; கிரேக்கப் பேராசிரியர் டேனியல் சான்ஃபோர்டு என்பவரிடம் ஒப்பியல் மொழியியல் கற்றவர். தென்னிந்தியாவில் சமயப் பணியாற்றுவதற்காகவே லண்டன் மிஷன் இவரை மொழியியல் கற்கவைத்தது. கால்டுவெல் புலமை மிகுந்தவராக மாறினார். அவருக்கு லத்தீன், கிரேக்கம்,  ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள் தெரியும். மேலும், மொழியியல், இனவியல், வரலாறு, சமயம் ஆகிய துறை அறிவுகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தார்.

தமிழ்ச் சமூகத்தாருடன் மறைப்பணியாற்றிய காலத்தில் கால்டுவெல் மொழிக்கு அப்பால் நின்று தமிழ் இனவியம் (Tamil ethnicity) சார்ந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். திராவிட மொழிக்குடும்பம் எனும் ஒரு புதிய கருத்துருவாக்கத்தை உலகுக்கு உணர்த்தித் தனிப்பெரும் புகழை அடைந்த அவர் அம்மொழிச் சமூகத்தாரின் இனவியம் பற்றிக் கூறியவை இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகின்றன. இவற்றை மானிடவியல் அணுகுமுறையில் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ் இனவியம்

ஓர் இனக்குழுவின் அடையாளம் சார்ந்த அனைத்து விடயங்களும் ‘இனவியம்’ (ethnicity) எனப் பொருள்கொள்ளலாம். இனவியத்தில் பல கூறுகள் அடங்கியுள்ளன. இனப்பெயர், மொழிப்பெயர், இனவரலாறு, தோற்றத் தொன்மம், புலப்பெயர்வு, இனப்பரவல், இன இயைபு, இனமுரண்கள், பிற்கால – இக்கால அசைவியக்கம் எனப் பலவும் இதிலடங்கும். தனி அடையாளம் கொண்டுள்ள ஒவ்வோர் இனக்குழுவும் (ethnic group) தனக்கான அடையாளத்தை உருவாக்கிய வரலாறு இனவியத்தில் முதன்மை பெறுகிறது. கால்டுவெல் தன்னுடைய மொழி ஆய்வினூடாகத் தமிழ் இனவியம் சார்ந்து பல கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

முதலில் இனம் (race) பற்றிய அவருடைய கருத்துகளைக் காண்போம். திராவிடர்களின் உடலமைப்பு பற்றியும் அவர்களுடைய இனவகைமை (racial type) பற்றியும் கால்டுவெல் அறிய முயன்றார் (1856ஃ1998: 610). அவர் காலத்திய ஐரோப்பிய வல்லுநர் ஹாட்சன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொல்குடிகள் பற்றி ஆராய்ந்தார். அவ்வரிசையில் தென்னிந்தியத் தொல்குடிகள் பற்றிய கட்டுரையில் (Aborigines of Southern India, 1849) பின்வருமாறு கூறியுள்ளார். அக்கருத்துக்களை கூர்ந்து ஆராய்ந்த பின்னர் அவற்றை மறுதலிக்கும் முகமாகக் கால்டுவெல் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார். முதலில் ஹாட்சன் (Hodgson, 1849) கூறியவற்றைக் காண்போம்.

“பட்டறிவு நிறைந்த பார்வையுடன் காணும் எவரும் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே காணப்படும் உடற்கூற்று வேறுபாடுகளை எளிதில் உணருவார்கள். ஆரியர்கள் உயரமானவர்கள், சீர்மையுடையவர்கள், மிருதுவான நிறமுடையவர்கள், நெளிவு சுளிவு கொண்டவர்கள். ஆனால் இவற்றிற்கு மாறாகத் திராவிடர்கள் உயரம் குறைந்தவர்கள், சீர்மை குறைந்தவர்கள் (less symmetric), குண்டாகவும் மந்தமாகவும் இருப்பவர்கள்” என்று கூறியிருந்தார் (கால்டுவெல் 1856: 506-507).

ஹாட்சனின் இக்கருத்துகளைக் கால்டுவெல் பின்வருமாறு மறுக்கிறார்.

“பண்பட்ட உயர்சாதித் திராவிடர்களை நாம் காணும்போது இவர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே அடிப்படையான வேறுபாடுகள் காணப்படுவதில்லை.  பல்வேறு நிலைகளில் நோக்கும்போது திராவிடப் பெண்கள் மென்மைத் தன்மை  கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். மேலும், பிராமணர்களுக்கு நிகரான தோற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள், தெலுங்கு முன்ஷிக்கள்,  மொழிபெயர்ப்பாளர்கள், பண்டிட்டுகள் போன்றோரின் தலையமைப்பு வெள்ளையர்களிடமிருந்துதான் வேறுபடுகிறது. திராவிடர்கள் சிறிய, குறுகிய தலையைக் கொண்டிருக்கிறார்கள்” (மேலது: 510-515).

திராவிடர்களின் இனவகைமை (racial type) பற்றி ஆராய்ந்த கால்டுவெல் திராவிடர்கள் சித்திய இனத்தின் (Scythian race) தொல் மூலத்திலிருந்து பிரிந்தவர்கள் என்று தம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் கூறுகிறார் (1998: 610). திராவிட மொழிக் குடும்பத்தார் ஆதியில் சித்திய தேசத்திலிருந்து நடு ஆசியா வழியாக வடமேற்கு இந்தியாவில் ஆரியர்களுக்கு முன்னர் குடியேறினார்கள் என்பது கால்டுவெல் முடிவாகும். மொழிக்கூறுகளின் உறவை முன்வைத்துத் திராவிட- சித்திய இன உறவை முதன்மைப்படுத்தினார். சித்திய மொழியின் பல்வேறு இலக்கணக் கூறுகளும் சொல் ஒப்புமைகளும் திராவிட மொழிகளோடு நெருங்கிக் காணப்படுவதால் கால்டுவெல் இம்முடிவுக்கு வந்தார் (1998: 39, 49-53, 610-624). புராதன சித்திய இனத்தின் (ancient Scythian) ஒரு கால்வழியாகப் பிரிந்தவர்களே திராவிடர்கள் என்பது கால்டுவெல் கருத்தாகும். கமில் சுவலபில் (1972: 57-63; 1990: 48), ஆன்ட்ரி சோபெர்க் (2009: 130-134) போன்ற மொழியியல் அறிஞர்களும் திராவிடர்கள் ஈரான் வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்கின்றனர்.

தமிழர்களைச் சித்திய இனத்தோடு இணைக்கும் கால்டுவெல்லின் முடிவு இன்றைய மானிடவியலார்களால் ஏற்றுக்கொள்ளப் பெறவில்லை. மனித இனங்களை வகைப்படுத்துவதில் இன்று உடற்கூறுகளே முதன்மை பெறுகின்றன. மக்களின் குணாதிசியங்களும் பிற உடல்சாரா பண்புகளும் இடம்பெறுவதில்லை. கால்டுவெல் தமிழர்களை மந்தமானவர்கள், மன ஆற்றல் குறைந்தவர்கள், மறைமுக வழிமுறைகளைக் கையாளுபவர்கள், நெகிழ்வுத் தன்மை கொண்டவர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டார். இவை நடத்தைமுறைசார்ந்த பண்புகளாகும். இப்பண்புகளைக் கொண்டு மானிடவியலார்கள் மனித இனங்களை வகைப்படுத்துவில்லை. இன்றைய தமிழர்கள் உள்ளிட்ட திராவிடச் சமூகத்தார் தொன்மை ஆஸ்திரேலியர் (proto-Australoid) இனவகையைச் சேர்ந்தவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் (விரிவுக்குக் காண்க: பக்தவத்சல பாரதி, திராவிட மானிடவியல்,).

எனினும் கால்டுவெல் கண்டறிந்த ‘திராவிட மொழிக்குடும்பம்’ எனும் கண்டுபிடிப்பு மொழி நூல் வழி அறிவியல் தன்மையானவொன்று; எக்காலத்தும் அழியாதவொன்று. மொழிநூல் ஆய்வில் அவர் கண்டறிந்த புறவியல் கருத்துகளாக அமைந்த இனம், சமயம், சமூகம் பற்றிய கருத்துகள் அவருடைய முதன்மையான மொழிநூல் ஆய்விற்குப் பாதிப்பாக அமையாது.

தமிழ் இனவியம் பற்றிய இன்னும் சில கருத்துகளைக் கால்டுவெல் திருநெல்வேலி சாணார்கள் (The Tinnevelly Shanars, 1849) எனும் நூலில் விவாதிக்கிறார். இந்நூலின் துணைத் தலைப்பாகிய “சாணார்களின் சமயம், நன்னடத்தை நெறிகள் (morals), ஒரு சாதியாகச் செயல்படும் பண்புகள், அவர்கள் கிறித்துவத்தை நோக்கி நகர்வதில் உள்ள வாய்ப்புகள், தடைகள்” இந்நூலின் பொருளை உணர்த்துகிறது. தமிழ்ச் சமூகம் பற்றிய பல்வேறு கருத்துருவாக்கங்களை உருவாக்கிக் கொள்ள முனைந்த கால்டுவெல் சாணார்களை ஒரு விடயகலை ஆய்வாக (case study) எடுத்துக்கொண்டு ஆராய்ந்தார்.

இது பற்றிய புரிதலை உருவாக்க முனைந்த போது கால்டுவெல் திராவிடச் சமூகத்தின் தொல்படிவமான வடிவங்கள் (prototype) பலவற்றையும் தேடுகிறார். அதில் ஒன்று தமிழர்களின் தொல் சமயம் பற்றியதாகும். தன் ஒப்பிலக்கண நூலில் நான்காம் பின்னிணைப்பில் “திராவிடர்களின் பண்டைய சமயம்” (Ancient Religion of the Dravidians) எனும் தலைப்பில் இதனை எழுதியிருக்கிறார். இதில் ‘திராவிடர்களின் பூத வழிபாடு’ எனும் தொடரினை வெளிப்படையாகக் கையாளுகிறார் (1856: 521-522). வேத சமயத்தைக் காட்டிலும் தொன்மையானது திராவிடர்களின் பூத வழிபாடு என்றும், அது பிராமணர்களின் சமய நெறியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் விவாதிக்கிறார்.

கால்டுவெலின் இந்த ஆய்வு விரிவானதும் ஒப்பியல் நிலையில் மேற்கொள்ளப்பட்டதும் ஆகும். கால்டுவெல் தொல் சமயம் பற்றிய அனைத்துக் கோட்பாடுகளையும் முழுமையாகப் படித்த பின்னர், சமயங்களின் வரலாற்றையும் அறிந்து கொண்டார். அதன் பின்னர் திராவிடர்களின் மொழிக் கூறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் முன்வைத்துப் பூத வழிபாடு பற்றிய கருத்துகளை நிறுவுகிறார். இவருடைய விவாதத்தில் ஓரிடத்தில் குறிப்பிடும் போது “இந்திய நாகரிகத்தில் நாம் காணும் பல கருத்துகள் நீக்ரோ மக்களைவிட சற்று மேம்பட்டதாக உள்ளது; இந்தியாவின் பரந்துபட்ட பல்வேறு கருத்துகளில் ஒரு தனி வகையினமாக அது திருநெல்வெலியில் காணப்படுகிறது; இவையாவும் ஐரோப்பியர்களுக்கு அறிமுகமாகாதவை” என்கிறார் கால்டுவெல் (மேலது: 29).

இவ் விவாதத்தில் இன்னுமொரு கருத்தையும் முன்மொழிகிறார். “கடவுள்கள் எப்படியோ அப்படியே தேசங்களும்” (nations are what their Gods are…. 1849: 32) என்று சாணார்கள் பற்றிய நூலின் இரண்டாம் இயலில் குறிப்பிடுகிறார். பூத வழிபாடு கொண்டிருந்த சாணார்கள் கீழ்நிலைச் சாதியாராகவும், அறநெறியில் ஏதுமற்றவர்களாகவும் மேலோரால் கருதப்பட்டதாலேயே அவர்கள் கிறித்துவத்தை ஏற்றுக்கொள்ள வேகமாக முன்வந்தனர் என்கிறார். சாதி அடிமைத்தனம், பஞ்சம், வறுமை முதலான சமூகக் காரணிகள் சமய மாற்றத்திற்கு உதவியாக அமைந்ததையும் கூறுகிறார்.

தமிழ் இனவியம் பற்றிய கால்டுவெலின் இன்னொரு கருத்து நம் கவனத்திற்குரியது. உலகில் ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு மூலப்படிவத் தொன்மம் உண்டு. அது இனத் தோற்றம் பற்றியதாக அமையும்; இன்னும் சில தொன்மைகளைச் சுட்டக்கூடியதாகவும் அமையும். கால்டுவெல் ஆரியர், திராவிடர் ஆகிய இருவருக்குமான ஒரு பொது மூலப்படிவத் தொன்மத்தை எடுத்துக் கொள்கிறார். அது அகத்தியர் பற்றியதாகும். அகத்தியர் வேத ஆசிரியர்களில் ஒருவர் என்றும், பெருங் காடுகளில் வேள்வியும் தவமும் புரியும் முனிவர்களின் தலைவர் என்றும், ஆரியர் குடும்பத்தின் தலைவர் என்றும் கூறப்படும் தொன்மத்தை ஒருபுறம் காண்கிறார். மறுபுறம், அகத்தியர் தமிழ் மரபின் மூலவர் எனக் கருதும் தொன்மத்தையும் காண்கிறார். இவ்விரண்டு துருவக் கருத்துகளை ஆராயுமிடத்து அவர் ஓர் அயலினப் பார்வையோடு அதனைப் “புராணங்கள் உருவாக்கிவிட்ட ஒரு திருவுருவமே அகத்தியர் எனக் கொள்வதுதான் பொருத்தமானது” என்கிறார் (1998: 114-115). ஆனால் தொன்மங்களை மக்கள் காணும் அகவயப் பார்வையுடன் ஆராய்வது அவசியமாகும்.

திராவிட மொழிக் குடும்பத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்திய கால்டுவெல் அகத்தியர் தொன்மங்கள் இருவேறுபட்ட மரபுகளில் ஒற்றுமையைவிட வேற்றுமையைக் குறித்து நிற்கின்றன என்பதை வெளிப்படுத்த முனையவில்லை. இந்த இருவேறுபட்ட வடிவங்களுக்குமான பொருண்மைகளை ஆரிய, திராவிட நோக்கோடு அணுகாமல் தன்னியல்பான தன் இனமையப் பார்வையில் அதனை ஒரு புராணக் கட்டுமானம் எனப் பொதுமைப்படுத்திவிட்டார். திராவிடம் நோக்கிய அவருடைய முன்னெடுப்பில் மொழியலுக்கு அப்பால் நிற்கும் புராணங்களை அவர் முதன்மைப்படுத்தவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. உண்மையில் அகத்தியர் தொன்மமானது தமிழின் மூலப்படிவத் தொன்மங்களில் மிகமுக்கியமான ஒன்றாகும் எனபதை இனவரலாற்று (நவாழொளைவழசல) ஆய்வுமுறையில் உணரமுடியும்.

இனப்பெயர்

நீண்ட வரலாறு கொண்ட எந்தவொரு தேசத்திலும் பேரினங்களின் பெயர்களும், இனப் பெயர்களும் (ethnonyms), சமூகங்களின் பெயர்களும் காலவோட்டத்தில் வெவ்வேறு நிலையில் மாறி வந்திருக்கின்றன. இம்மாற்றத்தில் மக்களின் ‘அகப்பார்வை’ (insider’s view) ஒருபுறமும், அம்மக்களைச் சுற்றி வாழும் பிற இனத்தவர்களின் ‘அயல்பார்வை’ (outsider’s view) மறுபுறமும் தொழிற்படுகின்றன. தமிழ்ச் சமூகத்தின் அயலவர்களாக விளங்கிய வடமொழியாரும் தெலுங்கர், கன்னடியர் உள்ளிட்ட தென்புலத்தாரும் தமிழர்களைப் பின்வருமாறு இனங்கண்டனர். அதனைக் கால்டுவெல் நுட்பமாக உணர்ந்து தம் திராவிட ஒப்பிலக்கண ஆய்வில் பின்வருமாறு விளக்கிச் செல்கிறார் (1998: 14-16).

கால்டுவெல் பின்வருமாறு எழுதுகிறார்: தமிழுக்கு ‘அரவம்’ என்றொரு பெயருண்டு. தக்காண முசல்மான்கள், தெலுங்கர்கள், கன்னடியர் ஆகியோர் தமிழை அரவம் என அழைக்கின்றனர். அரவம் என்ற சொல் எப்படி வந்தது? இதன் தோற்றம் தெளிவாகப் புரியவில்லை என்கிறார் (1998: 14). தமிழ் இலக்கியம் மற்ற இலக்கியங்களை விட நீதிநெறிகளை மிகுதியாகப் பேசுவதால் தமிழர்களை ‘அரவா’ என்று அழைத்திருக்க வேண்டுமென குண்டர்ட் கருதியதைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்.

இக்கருத்துப்படி அரவா என்றால் அறம் சார்ந்தவர்கள் என்பது பொருள். தமிழில் அறம் என்பது நீதிநெறிகளைக் குறிப்பதால் இக் கருத்து பொருத்தமானதாகும் எனக் கருதுகிறார். இச்சொல் புத்த சமயத்தாரையும் குறிக்க வாய்ப்புள்ளது. ‘அறவன்’ என்பது தமிழில் புத்தாpன் பெயர்களில் ஒன்று. இவ்வாறு பொருள் காண்பதற்குத் தெலுங்கிலும் கன்னடத்திலும் அரவம் என்ற சொல்லில் வரும் இடையின ‘ர’ கரம் தமிழில் அறம் என்ற சொல்லில் ‘ற’ கரம் வல்லினமாக உள்ளது தடையாக இருக்க முடியாது. ஏனெனில் தமிழ் ‘ற்’ தெலுங்கிலும் கன்னடத்திலும் ‘ர்’ ஆக மாறுவது வழக்கம். அறம் என்ற தமிழ்ச் சொல் கன்னடத்தில் அரவு என உள்ளது.

இச்சொல்லுக்கு இன்னொரு பொருள்கோடலும் உண்டு. மக்கள் இனங்களில் தமிழர்கள் அறிவாளிகளாகக் கருதப்படுவதால் ‘அறிவு’ எனும் தமிழ்ச் சொல்லிலிருந்து அரவம் என்னும் சொல் வந்ததாக இன்னொரு கருத்துள்ளது.

தமிழ் இலக்கணக்காரர்கள் குறிப்பிடும் கொடுந்தமிழ் வழங்கும் பன்னிரண்டு மாநிலங்களில் எங்கோ ஓரிடத்தில் இடம் அறியாமல் கிடக்கும் ஒரு மாவட்டத்தின் பெயர் அரவா என்பதால் அதிலிருந்து அரவா வந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இந்த விளக்கங்கள் எல்லாவற்றிலும் உள்ள பெரும் சிக்கல் என்வெனில், இவை தமிழ் பற்றியவை என்றாலும் அரவம் எனும் சொல் தமிழுக்கோ தமிழ் பேசுவோருக்கோ உள்ள பெயராகத் தமிழில் முற்றிலும் அறியப்படவில்லை. தெலுங்கர், கன்னடியர், தக்காணர்கள் ஆகியோரால் இந்தப் பெயர் பயன்படுத்தபடுவதால் இதன் உருவாக்கத்தினைத் தமிழ் நாட்டுக்கு வெளியிலிருந்து தேடவேண்டும் என்கிறார்.

கால்டுவெல் கலந்துரையாடிய தெலுங்குப் பண்டிதர்களின் கருத்துப்படி அரவா என்ற சொல் திராவிடச் சொல் அல்ல, அதுவொரு வடமொழிச் சொல். ஒலியற்றது எனப் பொருள்படும் அரவ என்பதிலிருந்து இது பெறப்பட்டதாகும். வலிந்து ஒலிக்க வேண்டிய வல்லொலி எழுத்துக்களைத் தமிழ் இழந்துள்ளமையால் தமிழர்களுக்கு அவர்களின் வடமொழி நண்பா;களால் அப்பெயர் இடப்பட்டது என அத்தெலுங்காசிரியர்கள் கருதினார்கள். இந்திய மொழிகளில் உரத்த ஒலி எழுத்துக்களை இழந்துள்ள ஒரே மொழி தமிழ் ஆதலின், அதைக் குறையாகக் கருதிய வெளியாரால் எள்ளி நகைக்கப்பெற்றது. அதனால்தான் தமிழ் ஒலியற்றது -‘அரவ’- என அழைக்கப்பெற்றது. இதுதான் உண்மையான மூலம் என்றால் தமிழர்கள் தங்கள் மொழியில் இப்பெயரை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்றும் கால்டுவெல் கருதினார்.

தெலுங்கில் அரவமு எனத் தமிழ்மொழிக்குப் பெயர் வைத்ததுடன் தெலுங்கர்கள் ஒருபடி மேலே சென்று தமிழ் பேசிய மக்களை ‘அரவாலு’ எனவும் அழைத்தனர். தமிழ் மொழியைக் குறிக்கும் அரவமு எனும் தெலுங்குச் சொல்லையும், சத்தத்தைக் குறிக்கும் அரவம் என்ற தமிழ்ச் சொல்லையும் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. பிந்தையது ‘சத்தம்’ எனவும் முந்தையது ‘சத்தம் அற்றது’ எனவும் பொருள் தருவது வேடிக்கையான சூழலாகும். தமிழ்ச் சொல்லில் மொழி முதல் எழுத்தாக வரும் ‘அ’ கரம் வடமொழியின் எதிர்மறை ‘அ’ கரம் அல்ல. இது ‘ர்’ ஒலியில் தொடங்கும் வடசொற்களைத் தமிழில் எழுதச் சேர்க்கும் ‘அ’ (வடமொழியில் ராஜர் தமிழில் அரசன் என வருவதை ஒப்பிட்டு நோக்கலாம்). வடமொழிச் சொல் ‘ரவ’ என்பது உரத்த பேரொலி எனும் பொருளைக் குறிக்க, ‘அரவம்’ எனும் தமிழ்ச் சொல் நுண்ணிய ஒலி எனும் பொருளைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது (மேலது: 15).

தமிழ் இனவியத்தில் பெயர் சார்ந்த கருத்தினங்களைக் கால்டுவெல் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து அவற்றைத் திராவிட ஒப்பிலக்கணம் நூலில் முன்பகுதியில் விளக்கிச் செல்கிறார். தமிழுக்கும் தமிழருக்கும் இன்னொரு அடையாளமாக ‘மலபார்’ எவ்வாறு தோன்றி வளர்ந்தது என்பதையும் கூட கால்டுவெல் நுட்பமாக விளக்கியிருக்கிறார். கொரமண்டல் (சோழமண்டலம்) என்ற சொல்லுக்கான ஆய்வும் குறிப்பிடத்தக்கது (மேலது: 20-25). இனமும் சமூகமும் காலகதியில் ஏற்றுக்கொள்கிற பெயர்கள் அகவயமாகவும் புறவயமாகவும் நிகழ்கின்றன. இவை அந்தந்த இனத்தின் இனவரலாறாக (ethnohistory) அமைகின்றன. தமிழர்களின் இனவரலாற்றை ஆராய்வதில் கால்டுவெல் புறவயக் கூறுகளையும் கணக்கிலெடுத்திருப்பது அவருடைய ஆய்வு முழுமை சார்ந்தது (holistic) என்பதை நிறுவுகிறது.

சமயமும் சமூகமும்

கால்டுவெல் 1837 இல் சென்னைக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் தங்கி, அதன் பின்னர் 1841 ஆம் ஆண்டு இறுதியில் திருநெல்வேலி சென்றடைந்தார். அதன் பின்னர் தமிழ்ச் சமூகம் பற்றிய அடிப்படைகளை உருவாக்கிக் கொண்ட காலகட்டத்தில் சமயம், சமூகம் பற்றிப் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். தமிழர்களின் பரவலான சமய நம்பிக்கை பேய் பிசாசு சார்ந்த பூதவழிபாடு (demonolatry) என அழுத்தம் திருத்தமாகப் பல இடங்களில் எழுதினார் (1886). தமிழர்களின் பன்மைத் தன்மையுடைய, நீண்ட நெடிய வரலாறு கொண்ட வழிபாட்டு முறைகளையெல்லாம் அறிந்த கால்டுவெல் அவற்றை ஒருமுகப்படுத்தி பூதவழிபாடு என ஒற்றை வழிபாட்டு முறைக்குள் கொண்டுவந்தார். இந்த அணுகுமுறையானது கீழ்த்திசையியல் அறிஞர்களின் ஐரோப்பிய மையவாதம் சார்ந்தது என்பதை எளிதில் உணர்ந்துவிடலாம்.

கால்டுவெல் தொடங்கி மறைத்திரு ஹென்றி வொயிட்ஹெட், தியோடா; எல்மோர் உட்பட அனைத்துக் கீழ்த்திசையியல் அறிஞர்களும் இந்து மதத்தினரை ‘சிலை வழிபாட்டினர்’ என வருணித்தனர். கடவுளைக் கல்லாக்கி வழிபடும் சிலை வழிபாட்டினரை அவர்கள் மிகவும் விநோதமாகவும் வேடிக்கையாகவும் பார்த்தார்கள். இந்து சமயத்தின் பன்முகத் தன்மையைச் சிலை வழிபாடு என்ற ஒற்றைக் கருத்தினமாகச் சுருக்கிவிட்டது என்பது ஐரோப்பிய மையவாதத்தின் இனமையச் சார்புடைய (ethnocentrism) கருத்தாகும்.

கால்டுவெலிடம் ஐரோப்பிய மையவாதச் சார்பு இருந்தாலும் திராவிடச் சான்றினை நிறுவிய போது, அது ஆரியத்திலிருந்து வேறுபட்டது என்பதை உறுதிப்படுத்தித் தன்னுடைய கருத்தை முழுமையாக நிறுவினார். கல்கத்தா கீழ்த்திசையியலார் இந்திய நாகரிகத்தின் மூலம் சமஸ்கிருதம் என்ற வாதத்தை முன்னெடுத்த காலகட்டத்தில் சென்னைக் கீழ்த்திசையியலார் திராவிடச் சமூகம், பண்பாடு, நாகரிகம் தனித்துவமானது; அது ஒரு தனிமரபு என்பதை ஓங்கி உரைத்தனர். இந்நிலையில் சமூகம் பற்றிய கால்டுவெல் பங்களிப்புகளில் மிகவும் கூர்மையுடையதாக என்னைக் கவர்ந்தது ‘சூத்திரர்’ பற்றிய அவருடைய அவதானிப்பாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் இருவேறு சமூக, பண்பாட்டு முறைகளைக் கண்டறிந்த கால்டுவெல் சூத்திரர் எனும் வகையினத்தை ஆரியவயப்பட்ட ஒரு சமூகக் கருத்தினமாக முன்மொழிந்தார். பண்டைய சிந்து நதிக்கரையில் வாழ்ந்த தொல்குடிகளை மட்டும் குறித்து வந்த சூத்திரர் எனும் சொல் பிற்காலத்தில் அனைத்திந்திய அளவில் பயன்பாட்டுக்கு வந்த வரலாற்றைக் கால்டுவெல் மிகச் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறார் (1998: 109-113).

சிந்து நதிக்கரையில் இருந்த ‘சித்ரொஸ்’ எனும் நகரத்தையோ அந்நகரில் வாழ்ந்த ‘சுத்ரொகி’ எனும் இனத்தாரையோ குறித்து நின்ற ஒரு வழக்கை அடிப்படையாகக் கொண்டு அம்மக்களை வென்று அடிமைப்படுத்திய ஆரியர்கள் அவர்களைச் ‘சூத்ர’ என்று வழங்கலாயினர். அதே காலத்தில் வாழ்ந்த ‘தஸ்யூ’, ‘மிலேச்சர்’ ஆகியோர் ஆரியர்களுக்கு அடங்காத சுதேசி இனமாகக் காணப்பட்டார்கள். இது பற்றிய தன் நுட்பமான ஆய்வில் கால்டுவெல் பின்வரும் கருத்தினை நன்கு விவரிக்கிறார்:

“சூத்திரர் என்ற பட்டப்பெயர், வட நாட்டைக் காட்டிலும் தென்னாட்டில் உயர்ந்த பொருளுடையதாகவே வழங்கலாயிற்று. வடஇந்தியாவைச் சேர்ந்த பழங்குடிச் சூத்திரர்கள், ஆரியருக்கு அடிமைகளாகவும், தமக்கென ஓர் உடைமையும் உரிமையும் அற்றவர்களாகவும் விளங்குகின்றனர்; தென்னிந்தியாவிலோ என்றால், அதற்கு மாறாக, திராவிடர்களில், இடைநிலை, உயர்நிலை மக்களுக்கே சூத்திரர் என்ற அப்பட்டம் இடப்பட்டிருந்தது. வடஇந்தியச் சூத்திரர்களுக்கு நிகரான இனத்தவர், சூத்திரர் என்று அழைக்கப்பெறாமல் பள்ளி, பறையன் என்றே அழைக்கப்பட்டனர்… (ஆரியர்) அமைதியாகக் குடியேறி, வஞ்சப் புகழ்ச்சியால் வாழிடம் பெற்ற ஆரியப் பார்ப்பணர்கள், சூத்திரர் என்று அழைப்பதால் திராவிடர்களுக்குச் சிறப்புப் பெயர் சூட்டிப் பெருமை செய்வதாக அத்திராவிடர்களை நம்பும்படி செய்திருத்தல் வேண்டும்… திராவிட இனத்தவர், சூத்திரர் என்ற பெயரை வெறுக்காது ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, வட இந்தியாவில் சூத்திரர் என்றால் இழிகுலத்தவராக, தென்னிந்தியாவில் பார்ப்பணருக்கு அடுத்த நிலையில் இருக்கத்தக்கவராவர். திராவிட இனத்தவரைக் குறிக்க, சத்திரிய, வைசிக என்ற பெயர்கள் எவ்வளவு பொருத்தமற்றனவோ, அவ்வளவு பொருத்தமற்றது சூத்திரர் என்ற பெயரும். திராவிட இனத்தவரை, அறவே பொருத்தமற்ற முறையாகிய மனுமுறைப்படி பிரித்து வழங்காது, ஆங்காங்குள்ள வழக்காற்றை யொட்டி, ‘வேளாளர்’, ‘நாயக்கர்’ என்பன போலும் அவரவர் குலப்பெயரால் பெயரிட்டு அழைப்பதே சாலப்பொருந்தும்” (மேலது: 112-113).

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரியச் சமூகமும் திராவிடச் சமூகமும் வெவ்வேறானவை என்பதைக் கால்டுவெல் சூத்திரர் எனும் சமூக வகையினத்தைக் கொண்டு சான்றுகளுடன் நிறுவியுள்ளார். திராவிட மொழிக் குடும்பம் என்ற மொழியியல் கண்டுபிடிப்புடன் அவர் கண்டறிந்த சமூகம் (சூத்திரர்) பற்றிய கருத்தினமும் மிகவும் மெய்யானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமாகும். இதற்கு அவர் கையாண்ட மொழி நூல் சார்ந்த விளக்கங்கள் துணை நின்றன என்பதை அறிய முடிகிறது.

வடமொழியாளர்கள் சூத்திரர் என்போரைக் தனிவகையினமாகக் கருதினார்கள். அதனைக் கால்டுவெல் நுணுகி ஆராய்ந்து “தென்னிந்தியாவில் பறையர்கள் திராவிடர்களா?” (Are the Pariars of Southern India Dravidians?) எனும் கட்டுரையை எழுதினார். அதில் மொழிவழியாகவும் இனவியல் வழியாகவும் பறையர்கள் திராவிடர்கள் என்பதை நிறுவுகிறார்.

உண்மையில் ஆரியர்களின் வருகைக்கு முன்னர் தமிழ்ச் சமூகம் ‘குடி’ முறையிலான சமூகமாகவே இருந்தது. ஒவ்வொரு திணையிலும் வாழ்ந்த சமூகத்தார் குடி என்றே அடையாளம் பெற்றிருந்தனர். அம்குடி, முதுகுடி, குரம்பைக்குடி, வேட்டக்குடி, நீள்குடி, விழுக்குடி, வீழ்குடி, செழுங்குடி, பல்குடி என்றெல்லாம் சங்ககாலத்தில் குடிகள் அழைக்கப்பெற்றன. இத்தகைய குடியமைப்புடைய தமிழ்ச் சமூகம் ஆரியர்களின் குடியமர்வுக்குப் பின்னர் சாதி அமைப்புடைய சமூகமாக மாற்றப்பட்டது (பக்தவத்சல பாரதி 2013: 10).

பின்னுரை

கால்டுவெல் கண்டறிந்த ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்பது மொழிநூல் ஆய்வுகளில் அவருக்கு முன்னர் எவரும் கண்டறியாத ஒரு கருத்தினமாகும். உண்மையில் ‘திராவிட’ எனும் சொல் பல காலமாகவே பயின்று வந்துள்ள ஒரு சொல்லாகும். இச் சொல்லின் வரலாற்றைக் கால்டுவெல் குறிப்பிடுகிறார் (1998: 3-6). குமாரிலபட்டா; கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு முன்பே மனு இச்சொல்லைக் கையாண்டிருக்கிறார். பாரத தேசத்தின் பல்வேறு இனங்களைக் குறிப்பிடும் போது “பவுண்ட்ரிகர், ஒட்டரர், திராவிடர், காம்போஜர், யவனர், சாகர், பாரதர், பக்லவர், சீனர், கிராதர், தரதர், கஸர்… போன்றவர்கள் மெல்ல மெல்ல இழிந்த இனத்தவராகிவிட்டனர்” என்கிறார் மனு (x. 43-44; காண்க கால்டுவெல் 1998: 4).

மனு தொடங்கி குமாரிலபட்டர், இலங்கையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் வழங்கப்படும் பாலி மொழிச் சொல், பெகிஸ்தன் நாட்டுக் கல்வெட்டுக் குறிப்புகள் ஊடாகப் பின்னர் ஏற்பட்ட இராமாயாணம், மகாபாரதம் வரையில் இச் சொல்லின் தொடர்ச்சி காணப்படுகிறது. திராவிடம் எனும் சொல்லின் மூலத்தையும் வரலாற்றையும் ஆராய்ந்துள்ள மொழியியல் அறிஞர் பி. எம். ஜோசப் (1989) கட்டுரையை நோக்கும் போது இச்சொல்லின் தொன்மையை அறியமுடிகிறது. திராவிடம் எனும் சொல் தொன்மை வாய்ந்தது என்றாலும் கால்டுவெல் கண்டறிந்த ‘திராவிட மொழிக் குடும்பம்’ எனும் கண்டுபிடிப்பு மகத்தானது; அறிவியல் தன்மையானது.

மொழி நூலில் உருவான இக்கண்டுபிடிப்பினை அடுத்து திராவிடம் எனும் கருத்தாக்கம் தென்னிந்தியச் சமூகங்களின் பல்வேறு மரபுகளுக்கும் சுட்டப்படும் ஒரு முதன்மையான அடைமொழியாக உருவானது. திராவிட உறவுமுறை, திராவிடச் சடங்குகள், திராவிடர் திருமணம் என்பன போன்ற பல்வேறு சுட்டுகைகள் இவ்வரிசையில் சொல்லலாம். உலகளவில் காணக்கூடிய ஆறுவகையான உறவுமுறைகளில் ‘திராவிட உறவுமுறை’ என்றவொரு தனிவகையினம் மானிடவியலார்களால் இனங்காட்டப்பட்டுள்ளது. ஏனைய உலகப் பண்பாடுகளை ஒப்பிட்டு அறியும் போதும் இந்தக் கருத்தினம் துணைபுரிகிறது.

கால்டுவெல் முன்னெடுத்த மொழிநூல் ஆய்வுகளில் இலைமறை காயாக இடம்பெற்ற தமிழ் இனவியம் சார்ந்த சில முதன்மையான கருத்துகள் மட்டும் இங்குக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இன்னும் விரிவாக ஆராய்வதற்குக் களங்கள் உள்ளன.

 

துணைநூல்கள்:

 

இராமச்சந்திரன், எஸ் ரூ அ. கணேசன். 2010. தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள். சென்னை: தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்.

கால்டுவெல், இராபர்ட் (தமிழில் கோவிந்தன், கா. ரூ க. ரத்னம்). 1977 (1959). திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம். சென்னை: குறள் நிலையம்.

சிவசுப்பிரமணியின், ஆ. 2001. கிறித்தவமும் சாதியும். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.

டிரவுட்மன், தாமஸ் (தமிழில் இராம. சுந்தரம்). 2007. திராவிடச் சான்று: எல்லிஸும் திராவிடமொழிகளும். சென்னை: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.

பக்தவத்சல பாரதி. 2013. வரலாற்று மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம்.

Caldwell, Robert. 1844. Mission of Edeyenkoody, in the District of Tinnevelly, andeDiocese of Madras   (Part One).  Missions to the Heathen. London:  SPG.

________.1847. Mission of Edeyankoody, in the District of Tinnevelly, and Diocese of Madras   (Part Three).  Missions to the Heathen. London:  SPG.

________.1849. The Tinnevely Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste: With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them. Madras: R. Twigg.

________. 1998 (1856). A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages. New Delhi: Asian Educational Services.( third edition, revised and edited by the Rev. J. L. Wyatt and T. Ramakrishna Pillai).

________. 1857a. Lectures on the Tinnevelly Missions, Descriptive of the Field, the Work, and the Results: With an Introductory Lecture on the Progress of Christianity in India. London:  Bell and Daldy.

________. 1857b. Progress of Christianity in India: The Tinnevelly Missions No. 1-VII. colonial Church Chronicle and Missionary Journal 11: 88-103, 129-136, 177-186, 244-253, 286296, 332-345, 65-378, 494-510.

________. 1875. The Languages of India in Their Relation to Missionary Work. London.

________. 1879. On Reserve in Communicating Religious Instruction to Non-Christians in Mission Schools in India: a Letter to the Right Reverend The Lord Bishop of Madras. Madras.

________. 1880. The First Centenary of the Tinnevelly Mission. Palamcottah: Church Mission Press.

________. 1881. Records of the Early History of the Tinnevelly Mission of the Society of Promoting Christian Knowledge and the Society for the Propagation of the Gospel in Foreign Parts. Madras: Higginbotham.

________. 1881. A Political and General History of the District of Tinnevelly from the Earliest Period to its Cession to the English Government in A.D. 1801. Madras.

________. 1886. On Demonolatry in South India. Journal of the Anthropological Society of Bombay 1, 1: 91-105.

Hodgson, B.H.1849. Aborigines of Southern India. Journal of the Asiatic Society of Bengal 18: 350-59.

Joseph, P. M. 1989. The Word Dravida. International Journal of Dravidian Linguistics XVIII, 2: 134-142.

Ravindiran, V. 1996. The Unanticipated Legacy of Robert Caldwell and the Dravidian Movement. South Indian Studies 1: 83-110.

Said, Edward. 1978. Orientalism. New York: Pantheon Books.

Schroder, Ulrike. 2010. No Religion, But Ritual?: Robert Caldwell and the Tinnevelly Shanars. In Ritual, Caste and Religion in Colonial South India, eds., Michael Bergunder et al. , pp.131-160.  Halle: Verlagder Franckeschen Stiffungen.

Sjoberg, Andree F. 2009. Dravidian Language and Culture. Kuppam: Dravidian University.

Surguner, Samuel. 1883. Bishop Caldwell and the Tinnevelly Shanars.  Palamcottah:  Pillai.

Wyatt, Joseph L (ed.). 1894. Reminiscences of Bishop Caldwell. Madras: Addison & Co.

Zvelebil, Kamil. 1972. The Descent of the Dravidians. International Journal of Dravidian Linguistics 2: 57-63.

________.1990. Dravidian Linguistics: An Introduction. Pondicherry: Pondicherry Institute of Linguistics and Culture.

 

 

முனைவர் பக்தவத்சல பாரதி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

 

 

One thought on “கால்டுவெல் முன்னெடுத்த கீழ்த்திசையியல்: தமிழ் இனவியம் பற்றிய நோக்குநிலை

 1. Respected professor, Regards. Hope u are fine. Have you got any books written by Robert Caldwell ? If so, kindly let me know.

  I need the following books. I have 10 books in digitised form. I need a few more.

  1. March of the Unsaved.
  2. The inner citadel of religion.
  3. The three-way marks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!