home உன்னதம், சிறுகதை கால இயந்திரம்

கால இயந்திரம்

– டினோ புஸாட்டி

 

காலத்தைத் தாமதிக்கும் முதல் மாபெரும் இயந்திரம் மாரிஸ்கோனோவில், க்ராசெட்டோ அருகில் நிர்மாணிக்கப்பட்டது. உண்மையில், அதைக் கண்டுபிடித்தவர், புகழ்பெற்ற ஆல்டோ கிரிஸ்டோஃபரி, க்ராசெட்டோவில்தான் பிறந்திருந்தார். பிசா பல்கலை பேராசிரியரான கிரிஸ்டோஃபரி குறைந்தது இருபது ஆண்டுகளாவது இது குறித்து ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தனது ஆய்வுக்கூடத்தில் அற்புதமான பல ஆய்வுகளை நிகழ்த்தியுமிருக்கிறார். அதிலும் குறிப்பாக, பருப்பு வகைகள் முளை விடுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார். ஆனால், கல்வித்துறை உலகில் அவர் ஒரு தரிசனவாதியாகவே கருதப்பட்டார். அதாவது, அவர் தனது புரவலர், முதலீட்டாளர் ஆல்ஃபிரடோ லோபஸ்ஸின் ஆதரவில் டையகோசியா அமைப்புக் கழகம் துவங்கும்வரை. அதன் பின் ஆல்டோ கிரிஸ்டோஃபரி, ஒரு மேதையாய், மானுட போஷகராய், கருதப்பட்டார்.

அவரது கண்டுபிடிப்பு “பீல்டு சி” என்று அழைக்கப்பட்ட, சிறப்புத்தன்மை கொண்ட மின்னியல் வெளியொன்றைக் கொண்டிருந்தது. அதனுள் இயற்கை நிகழ்வுகளின் வாழ்க்கைச் சக்கரம் நிறைவு பெற அசாதாரண அளவில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. வெற்றி கண்ட முதல் ஆய்வுகளில் ஆயிரத்துக்கு ஐந்து அல்லது ஆறு அலகுகள் என்ற அளவில்தான் காலதாமதம் நிகழ்ந்தது; அதாவது, நடப்பில் கவனிக்கத்தக்க எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அடிப்படைக் கோட்பாட்டை கண்டறிந்தபின் கிரிஸ்டோஃபரி மிக வேகமாக முன்னேறினார். மாரிஸ்கோனோ இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டபோது காலதாமதம் பாதிக்குப் பாதி என்ற அளவில் அதிகரிக்கப்பட்டு விட்டது. இதனால், பத்து ஆண்டுகள் வாழக்கூடிய உயிரினம் ஒன்று பீல்டு சியினுள் புகுத்தப்பட்டால் அது இருபது ஆண்டுகள் வாழ்வது சாத்தியமானது.

இயந்திர அமைப்பு மலைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. அதன் ஆற்றல் 800 மீட்டர் பரப்பளவே செயல்பட்டது. ஒன்றரை கிலோமீட்டர் விட்டம் கொண்ட வட்டத்தினுள் விலங்குகளும் செடிகளும் வளர்ந்து, பூமியில் பிறவற்றைவிட பாதியளவு வேகத்தில் முதுமை எய்தும். இனி மனிதன் இருநூறு ஆண்டுகள் வாழ முடியும் என்று நம்பலாம். எனவே, இருநூறு என்பதன் கிரேக்கச் சொல்லைக் கொண்டு, டையகோசியா என்ற பெயர் உருவானது.

உண்மையில் அந்த மண்டலத்தில் மனிதர்கள் எவரும் வாழவில்லை. அங்கு வாழ்ந்திருந்த விவசாய மக்களுக்கு அங்கிருக்கலாம், அல்லது கணிசமான தொகை பெற்றுக்கொண்டு வேறு இடத்தில் குடியேறலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவர்கள் வெளியேறவே விரும்பினார்கள். கடந்து செல்ல முடியாத வேலியோன்றினுள் அப்பகுதி முழுமையாய் பாதுகாக்கப்பட்டது. அதனுள் நுழைய ஒரே ஒரு வாயில்தான் இருந்தது. அதுவும் கவனமாய்க் கண்காணிக்கப்பட்டது. சிறிது காலத்தில் அங்கு மகத்தான கட்டிடங்கள் விண்ணை நோக்கி எழுந்தன. காடெனப் படர்ந்த அடுக்ககங்களிடையே, திரைக்கூடங்களும் நாடக அரங்குகளும், மரணத் தறுவாயில் இருந்தவர்களுக்காக, மிச்சமிருந்த குறுகிய ஆயுளை  நீட்டிக்க விரும்பியவர்களுக்காக, மருத்துவமனையும் அமைக்கப்பட்டன. இவற்றின் மையத்தில், நாற்பது மீட்டர் உயரத்தில் வட்ட வடிவில் ஒரு ஆண்டென்னா எழுந்தது. ராடார் போன்ற அதுதான் பீல்டு சியின் மையம். அதன் மின் உற்பத்தி இயந்திரம் முழுமையாய் மண்ணுக்கடியில் இருந்தது.

நிர்மாணம் செய்து முடிந்ததும், மூன்று மாதங்களுக்குள் அந்நகரின் கதவுகள் திறந்து கொள்ளும் என்ற அறிவிப்பு உலகனைத்தும் செய்யப்பட்டது. அனுமதி பெறவும், எல்லாவற்றைவிட முக்கியமாக, அங்கு வசிக்கவும், மிகப் பெரும் தொகை கட்டணம் வைக்கப்பட்டது. இருந்தாலும்கூட, பூமியின் அத்தனை மூலைகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அறிவிப்பால் ஈர்க்கப்பட்டனர். வசிப்பிடங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஆனால் அதன் பின் அச்சம் துவங்கிற்று, எதிர்பார்த்ததைவிடக் குறைவான மக்களே விண்ணப்பித்தனர்.

அஞ்சுவதற்கு என்ன இருந்தது? முதலாவதாக, அந்நகரில் சொல்லத்தக்க காலகட்டம் வசித்தவர்கள் யாரும் காயமின்றி அதிலிருந்து வெளியேற முடியாது. பௌதீக இருப்பில் நிதானமான, தாமதமான வேகத்துக்கு பழகிக்கொண்ட ஒரு உயிரை நினைத்துப் பாருங்கள். திடீரென்று அதை பீல்டு சியிலிருந்து இரு மடங்கு வேகமாக வாழ்வு விரையும் ஒரு பகுதிக்கு இடம் மாற்றுகிறோம்; இப்போது ஒவ்வொரு உறுப்பும் இரு மடங்கு விரைவாக இயங்கியாக வேண்டும். வேகமாக ஓடுபவன் ஒருவனால் நிதானிக்க இயலும், ஆனால் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒருவனால் வெகு வேகமாக ஓட்டமெடுப்பது அவ்வளவு சுலபமல்ல. இதனால் ஏற்படும் தீவிரச் சமநிலையின்மை ஆபத்து விளைவிக்கலாம், அல்லது உயிரையும் மாய்ப்பதாக இருக்கலாம்.

இதன் விளைவாய், அந்நகரில் பிறந்தவர்கள் எவரும் அதைவிட்டு வெளியேறக் கூடாது என்று கடுமையாய் தடை செய்யப்பட்டனர். நிதானமான வேகத்தில் வாழ்வதற்கென்று உருவான உயிரி ஒன்று, அதைவிட இரு மடங்கு வேகத்தில் செல்லும் வாழ்வுக்கு மாற்றப்படும்போது அழிந்து விடும் சாத்தியம் உண்டு என்பது தர்க்க நியதிகளுக்கு உட்பட்டதே. இந்தச் சிக்கலை எதிர்நோக்கியே, பீல்டு சியைச் சுற்றியும் விரைவுபடுத்தவும் தாமதிக்கவும் சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டன. உள்ளே நுழைபவர்களும் வெளியேறுபவர்களும் புதிய வேகத்துக்கு ஏற்ப தங்களை மெல்ல மெல்ல பழக்கப்படுத்திக் கொண்டு, திடீர் மாற்றத்தால் ஏற்படும் அதிர்ச்சியைத் தவிர்க்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது (ஆழ்கடலினுள் மூழ்குபவர்களின் அழுத்தத்தை குறைப்பதற்கு அமைக்கப்பட்ட அறைகள் போன்றவை இவை). ஆனால் இந்த அறைகள் மிகவும் நுட்பமானவை, இன்னும் வரைவு நிலையில்தான் இருந்தன. பல ஆண்டுகள் ஆனபின்னரே இவை பயன்பாட்டுக்கு வர இயலும்.

சுருக்கமாய்ச் சொன்னால், டையகொசியாவின் மக்கள் மற்ற ஆண்களையும் பெண்களையும்விட நீண்ட காலம் வாழ்வார்கள், ஆனால் அந்த வாழ்வு நாடு கடத்தப்பட்டவர்களின் வாழ்வாய் இருக்கும். தங்கள் தேசத்தையும் பழைய நண்பர்களையும் பயணத்தையும் அவர்கள் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. பல்வகைப்பட்ட காதலர்களோடும் அறிமுகங்களோடும் அவர்களால் உறவைத் தொடர முடியவில்லை. கற்பனை செய்யப்படக்கூடிய அத்தனை இன்பங்களையும் வசதிகளையும் அனுபவிக்க முடிந்தாலும் அவர்கள் வாழ்வு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது போலானது.

ஆனால் அதற்கு மேலும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தப்பித்துச் செல்வதன் அச்சுறுத்தல் நிர்மாணத்தில் ஏற்படக்கூடிய எத்தகைய ஆபத்திலும் இருந்தது. ஆற்றல் இயந்திரத்தில் இரு உற்பத்தி சாதனங்கள் இருப்பது உண்மைதானா, ஒன்று நின்று போனால் மற்றொன்று தானாய் இயங்கும் என்பதும் உண்மைதானா? ஆனால் இரண்டும் செயல்படாமல் போனால் என்ன ஆகும்? மின்வெட்டு நேர்ந்தால் என்ன ஆகும்? அதன் ஆண்டென்னாவை மின்னலோ புயல் காற்றோ தாக்கினால் என்ன ஆகும்? போரோ அல்லது வேறு எந்த கொடூரமோ நிகழ்ந்தால் என்ன செய்வது?

11,365 பேர் கொண்ட அதன் முதல்குடி குழுவின் கொண்டாட்ட நிகழ்வில் டையகோசியா துவக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐம்பது வயது கடந்தவர்கள். கிரிஸ்டோஃபரிக்கு அங்கு தங்கும் எண்ணம் இல்லை. அவர் அதில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஸ்டோர்மர் என்ற ஒரு ஸ்விஸ் பங்கேற்றார். அவர் அந்த நிர்மாணத்தின் இயக்குனர். ஒரு எளிய விழா நடைபெற்றது.

ஒரு பொதுத் தோட்டத்தில் உயர்ந்து எழுந்த ஆற்றல் பரப்பும் ஆண்டென்னாவின் கீழ், சரியாக நண்பகல் பொழுதில், இக்கணம் முதல் டையகோசியாவின் ஆண்களும் பெண்களும் முன்னைவிட பாதியளவு தாமதமாகவே மூப்பெய்துவர் என்று ஸ்டோர்மர் அறிவித்தார். ஆண்டென்னா ஒரு மெல்லிய சுதி எழுப்பியது. அது செவிக்கு இனிமையாகவும் இருந்தது. துவக்கத்தில் யாரும் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கவில்லை. மாலைப் பொழுதைத் தொடும்போதுதான் ஒரு வகை சோம்பலை சிலர் உணர்ந்தனர், யாரோ அவர்களைப் பற்றி இழுப்பது போன்ற உணர்வு இருந்தது. விரைவிலேயே அவர்களும் வழக்கப்படியான வகையிலேயே பேசவும் நடக்கவும் மென்று உண்ணவும் செய்தனர். வாழ்வின் இறுக்கம் தளர்ந்தது. எதைச் செய்யவும் கூடுதலாக பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

ஒரு மாதம் சென்றபின், பஃப்பலோவில் வெளியாகும் ‘டெக்னிகல் மன்த்லி’ என்ற பத்திரிக்கையில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எட்வின் மெடினர் ஒரு கட்டுரை எழுதினார். அது டையகோசியாவின் சாவு மணியாக ஒலித்தது. கிரிஸ்டோஃபரியின் நிர்மாணம் பேராபத்து கொண்டது என்ற வாதத்தை முன்வைத்தார் மெடினர். காலம்- அவரது வாதத்தை இங்கு நாம் எளிய சொற்களில் அளிக்கிறோம் – தலைதெறிக்க விரைவது. அது எந்த ஒரு பருப்பொருளையும் எதிர்கொள்ளாதபோது மேலும் மேலும் வேகமெடுத்து விரைவதை இயல்பாய்க் கொண்டது, அது அடையக்கூடிய வேகத்துக்கு எல்லையில்லை. காலத்துக்கு வேகம் கூட்டுவது என்பது எளிய விஷயம், ஆனால் காலத்தின் ஓட்டத்தை எவ்வகையில் தாமதப்படுத்துவதானாலும் அதற்கு மாபெரும் ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரு ஆற்றின் நீரோட்டத்தோடு செல்வது சுலபம், ஆனால் அதை எதிர்த்துச் செல்வது கடினமாக இருக்கும். இதைக் கொண்டு மெடினர் கீழ்க்கண்ட விதியொன்றை வரையறுத்தார்: இயற்கைச் செயல்களை தாமதிப்பதனால், அதற்குத் தேவைப்படும் ஆற்றல் தாமத அளவைக் காட்டிலும் சதுக்க அளவு அதிகமாக இருக்கும், ஆனால் அவற்றை விரைவுபடுத்துவதானால், அளிக்கப்படும் ஆற்றலைக் காட்டிலும் விரைவு வேகம் கன அளவு அதிகரிப்பதாக இருக்கும். உதாரணத்துக்கு, பத்தாயிரம் அலகு என்ற அளவில் வேகம் கூட்ட பத்து அலகு ஆற்றல் போதுமானதாக இருக்கும். ஆனால் காலத்தைத் தாமதிக்க அதே பத்து அலகு ஆற்றல் செலவிடும்போது, மூன்று அலகு மட்டுமே காலதாமதம் நேரிடும். முதல் விஷயத்தில், காலத்தின் திசைக்கு ஏற்ப, அது எதிர்பார்க்கக்கூடிய வகையிலேயே, மனிதன் அளிக்கும் விசை இயங்குகிறது. பீல்டு சி இரு திசைகளிலும் செயல்படக்கூடியது என்றார் மெடினர். அதை நிர்வகிப்பதில், அல்லது அதில் உள்ள ஒரு சிறு பொறியில் ஏற்படக்கூடிய பிழையால், அதன் அதிர்வுகள் பின்னோக்கிச் செல்லக்கூடும். அப்படி ஆகும்போது, ஆயுளை இரு மடங்கு நீட்டிப்பதற்கு பதில், அதை படுபயங்கர வேகத்தில் உட்கொண்டு விடும். ஒரு சில நிமிடங்களிலேயே டையகோசியாவின் மக்கள் பல பத்தாண்டுகளைக் கடந்து முதுமை எய்துவர். இதற்கு ஒரு கணிதச் சமன்பாட்டையும் ஆதாரமாய் அளித்தார் மெடினர்.

எட்வின் மெடினர் உண்மையை அம்பலப்படுத்தியவுடன் நீண்ட ஆயுள் நகரத்தில் பீதி ஒரு அலையெனப் பரவியது. “விசையுறுச் சூழலுள்” மீண்டும் திடீரென்று புகுவது குறித்த ஆபத்தை அலட்சியப்படுத்திய சிலர் தப்பியோடினர். கிரிஸ்டோஃபரி தன் நிர்மாணத்தின் செயல்திறன் குறித்து அளித்த உறுதிமொழிகளும் எதுவும் நடக்கவில்லை என்ற உண்மையும் கவலைகள் அடங்க உதவின. ஒரே மாதிரியான, அமைதியான, வண்ணங்களற்ற நாட்கள் அடுத்தடுத்து தொடரும் அலுப்பூட்டும் வாழ்வு டையகோசியாவில் நிலவியது. இன்பங்கள் சுவையற்றவையாய், வலுவற்றவையாய் இருந்தன. காதலின் துடிக்கும் பித்து நிலை முன்னிருந்த மயக்க ஆற்றலை இழந்தது. வெளியுலகிலிருந்து வந்த செய்திகள், குரல்கள், ஏன் இசையும்கூட இப்போது ரசக்கேடான அனுபவமாக இருந்தது, அவை மிகவும் துரிதமான வேகம் கொண்டிருந்ததால். சுருக்கமாய்ச் சொன்னால், கவனக்குலைவுகள் எப்போதும் இருந்தாலும் வாழ்க்கை சுவை குன்றிப் போனது. ஆனால் இந்த சலிப்பும்கூட, டையகோசியாவின் குடிமக்கள் இளமை குன்றாமல், வலு இழக்காமல் இருக்கும்போதே, தம் சமகாலத்தவர்கள் ஒவ்வொருவராய் எதிர்காலத்தில் இறந்து போவார்கள் என்ற எண்ணத்தோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லாததாய் இருந்தது. அதன்பின் சமகாலத்தவர்களின் குழந்தைகள் ஒவ்வொருவராய் மாண்டு போவார்கள், ஆனால் டையகோசியர்கள் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். சமகாலத்தவர்களின் பேரர்களும் கொள்ளுப் பேரர்களும் இவ்வுலகைவிட்டுச் செல்லும்போதும், உயிரோடு இருப்பவர்கள், இன்னும் பல பத்தாண்டுகள் வாழப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களின் இரங்கற்குறிப்புகளை வாசிப்பார்கள். இந்த எண்ணமே டையகோசிய சமூகத்தில் ஓங்கியிருந்தது. இது நிலைகொள்ள முடியாமல் தவித்த மனங்களை அமைதிப்படுத்தியது. பொறாமைகளையும் சச்சரவுகளையும் தீர்த்து வைத்தது. இதனால்தான் காலவோட்டம் முன் போல் இவர்களுக்கு வேதனையளிக்கவில்லை. எதிர்காலம் ஒரு மாபெரும் சூழ்நிலமாய் விரிந்தது. ஏமாற்றங்கள் நேரும்போது ஆண்களும் பெண்களும், ஏன் கவலைப்பட வேண்டும், நாளை பார்த்துக் கொள்ளலாம், ஒரு அவசரமுமில்லை, என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

இரண்டு ஆண்டுகளில் மக்கள் தொகை 52,000 தொட்டது. அதற்குள் முதல் தலைமுறை டையகோசியர்கள் பிறந்திருந்தனர். நாற்பது வயதில் அவர்கள் வயதுக்கு வருவார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பின், அந்த ஒற்றை கிலோமீட்டரில் 1,20,000 பேர் குவிந்திருந்தனர். மெல்ல மெல்ல, பிற நகரங்களில் காலம் விரைந்தோடும்போது, டையகோசியாவின் கோபுரங்கள் கிறுகிறுக்க வைக்கும் உயரங்களைத் தொட்டன. இப்போது உலகின் மகத்தான அதிசயமாகி விட்டது டையகோசியா. அதன் எல்லையில் சாரி சாரியாய் பயணிகள் வந்து குவிந்தனர். நரம்புக் கோளாறால் வாதநோய் வயப்பட்ட நோயாளிகள் போல் மெல்ல நடந்த இந்த வித்தியாச மனிதர்களை வாயிற்கதவுகள் வழியே கண்டு நின்றனர்.

இந்த நிகழ்வு இருபதாண்டுகள் நிலவியது. ஆனால், ஒரு சில நொடிகளே அதை அழிக்கப் போதுமானதாய் இருந்தது. அப்பெருந்துயர் நிகழ்ந்தது எவ்வாறு? அது மனிதனின் சித்தத்தில் விளைந்ததா? அல்லது அது ஒரு விபத்தா? கருவிகளை இயக்கியவர்களில் ஒருவன், காதல் அல்லது நோயின் வாதையில், தன் சித்திரவதைக்கு முடிவு கட்ட நினைத்திருக்கலாம், அதனால் அவன் அந்தப் பேரிடர் நிகழக் காரணமாகி இருக்கலாம். அல்லது, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே நோக்கம் என்றிருந்த வெறுமையான, அகங்கார வாழ்வு அலுத்துப் போய் அவன் சித்தம் கலங்கிப் போனதா? அவன் வேண்டுமென்றே இயந்திரத்தின் திசையைத் திருப்பினான், காலத்தில் அழிவுச் சக்திகளைக் கட்டவிழ்த்தான்.

அன்று மே 17. கதகதப்பான, வெயிலடிக்கும் நாள். வயல்களில், சுற்று வேலியையொட்டி, நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களைப் போன்றவர்கள்தான், ஆனால் இவர்கள் வாழ்வு இரு மடங்கு மெல்லச் செல்கிறதென கண்ணொட்டாமல் நோக்கி நின்றனர். நகருக்குள்ளிருந்து ஆண்டென்னாவின் சன்னமான, இசைவான ஒலி எழுந்தது. அது ஒரு மணி போல் ஒலித்தது. அந்த நாளன்று இந்த எழுத்தாளர் அங்கிருந்தார். நான்கு சிறுவர்கள் ஒரு பந்து வைத்துக் கொண்டு விளையாடுவதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். “உன் வயது என்ன?” என்று அவர்களில் பெரியவளைக் கேட்டேன். “போன மாதம் என் வயது இருபது,” என்று அவள் பணிவுடன் சொன்னாள், ஆனால் மிகையான நிதானம் அவள் குரலில் இருந்தது. அவர்கள் ஓடுவதும் விநோதமாக இருந்தது: மெல்ல, தேன் போல் கெட்டித்து, ஸ்லோ மோஷனில் நகரும் திரைக்காட்சி போல். அவர்களுக்காக பந்தும்கூட மெல்ல எழுந்தது.

வேலிக்கு அப்பால் புல்வெளிகளும் தோட்டப் பாதைகளும் இருந்தன. கட்டிடங்களைச் சூழ்ந்திருந்த தடுப்புச்சுவர்கள் ஐம்பது மீட்டர் தொலைவில் துவங்கின. பாரம் சுமப்பது போல், மரங்களின் இலைகள் காற்றில் மெல்ல அசைந்தன.  திடீரென்று மதியம் மூன்று மணியளவில், தொலைவில் கேட்ட ஆண்டென்னாவின் ஓசை ஓர் அபாய மணி போல் உயர்ந்தது, தாங்க முடியாத ஒரு கீச்சொலி விசிலடிப்பது போல் எழுந்தது. அடுத்து நடந்ததை எப்போதும் என்னால் மறக்க முடியாது. இன்றும்கூட, பல ஆண்டுகள் தொலைவில், இரவின் அமைதியில் திடுக்கிட்டு எழுகிறேன், அந்தக் கொடூரமான காட்சி என் கண் முன்  வந்து நிற்கிறது.

என் கண் முன் சிறார்கள் நால்வரும் ராட்சதத்தனமாய் நீண்டனர். அவர்கள் வளர்ந்து, பெருத்து, பெரியவர்கள் ஆனதைக் கண்டேன். ஆண்களின் தாடைகளில் தாடி முளைத்தது. இவ்வாறு உருமாற்றம் பெற்று, மின்னல் வேக வளர்ச்சியின் அழுத்தத்தில் குழந்தைப்பருவ ஆடைகள் கிழிந்து பாதி நிர்வாண நிலையில் அவர்கள் பீதிக்குள்ளானார்கள். பேசுவதற்கு வாய் திறந்தார்கள், ஆனால் நான் முன் எப்போதும் கேட்டிருக்காத வினோத ஒலியொன்று வெளிவந்தது. வேகமாக, பைத்தியக்கார வேகத்தில் சுழலவிட்ட ஒலித்தட்டு போல், கட்டற்ற காலச்சுழலில், சொற்களின் அசைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. குமிழிடும் ஓசை விரைவில் ஒரு மூச்சிரைப்பாய் ஆனது, அதன்பின் ஒரு பெரும் ஓலம்.

சிறார்கள் நால்வரும் உதவி நாடி சுற்றும் முற்றும் பார்த்தார்கள், எங்களைக் கண்டதும், வேலியை நோக்கி ஓடி வந்தார்கள். ஆனால் ஆயுள் அவர்களுள் பற்றியெரிந்து பொசுங்கியது; வேலியை, ஒரு ஏழெட்டு நொடிகளில், நரைத்த முடியும் தாடியுமாய், சதை தளர்ந்து, எலும்பும் தோலுமாய், முதியவர்கள் நால்வர் அடைந்தனர். தன் குச்சிக் கைகளால் ஒருவர் வேலியைத் தொட்டு விட்டார். ஆனால், உடனே அவரும் அவரது சகாக்களும் கீழே விழுந்தனர். அவர்கள் இறந்திருந்தனர். பாவப்பட்ட அக்குழந்தைகளின் சிதைந்த உடல்கள் கணப்பொழுதில் நாற்றமெடுக்க ஆரம்பித்தன. அவர்கள் அழுக ஆரம்பித்தனர், சதை பிய்ந்து விழுந்தது, எலும்புகள் தென்பட்டன, அதன்பின் எலும்புகளும்கூட – என் கண் முன்னே- வெண்ணிறப் பொடியாய்க் கரைந்தது.

அதன்பின்தான் இயந்திரத்தின் மரண ஓலம் அடங்கி, முடிவுக்கு வந்து அமைதியானது. மெடினரின் கணிப்பு உண்மையாகி விட்டது. என்றென்றும் அறிவதற்கில்லாத காரணங்களால், கால இயந்திரம் திசை திரும்பியிருக்கிறது. மூன்று அல்லது நான்கு நூற்றாண்டு வாழ்வை விழுங்கச் சில நொடிகளே போதுமானவையாய் இருந்திருக்கின்றன.

இப்போது இருண்ட, கல்லறையின் கனத்த மௌனத்தில் அந்நகர் உறைந்திருந்தது. கையாலாகாத வயோதிகத்தின் நிழல், இக்கணம் வரை மகோன்னதமும் நம்பிக்கையுமாய் பிரகாசித்துக் கொண்டிருந்த அதன் விண்ணைத் தொடும் கட்டிடங்களின் மேல் கவிந்து விட்டது. அவற்றின் சுவர்களிலும் சுருக்கக் கோடுகள் விழுந்தன; அச்சுறுத்தும் மடிப்புகளும் பிளவுகளும் தோன்றின. அவற்றிலிருந்து தோன்றிய சிலந்தி வலைகளின் அழுகும் விளிம்புகளில் கருந்திரவங்கள் கசிந்தன. எங்கும் புழுதி. புழுதி, மௌனம், அமைதி. ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை கொண்ட கல்லறைகளில் படியும் புழுதி போல் ஆங்காங்கே வெண்தூசாய் குவிந்தது போக, பல நூறாண்டுகள் வாழ விரும்பிய அந்த இருநூறாயிரம் பணக்கார, அதிர்ஷ்டக்கார மனிதர்களில் எதுவும் எஞ்சவில்லை.

 

தமிழாக்கம் : சிவராஜ் மாதவன்

 

டினோ புஸாட்டி (1906 – 1972) உலகப் புகழ் பெற்ற இத்தாலிய இலக்கிய ஆளுமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!