home நேர்காணல், புதிய அலை கேமராவும் பேனாவும் சந்திக்கும் முனை

கேமராவும் பேனாவும் சந்திக்கும் முனை

மார்க் மன்றோ உடன் ஒரு நேர்காணல் 

  • ப்ராடன் கிங் 

 

கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆவணப்பட எழுத்தாளர் மார்க் மன்றோ தன்னுடைய துறையில் நிறைவான, அதே சமயம் வெற்றிகரமான ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ளார். அவருடைய வெற்றிக் கூடையில் பல படங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவற்றில் சில, லூயி சைஹோயோஸின் ஆஸ்கார் புகழ் திரைப்படமான The Cove (Racing Extinction என்கிற சமீபத்திய படம் உட்பட), சண்டேன்ஸ் படங்களாக வெளிவந்து விருது வாங்கிய Chasing ICE, Who is Dayani cristal? மற்றும் The Tillman Story, Foo Fighter ராக் பேண்ட் குழுவின் டேவ் க்ரோலின் எம்மி விருது  வாங்கிய HBO தொடரான Sonic Highways மற்றும் ரான் ஹோவார்டின் பீட்டில்ஸ் ஆவணப்படம் என பல சாதனைகள்.

நான் சமீபத்தில், Film Maker இதழுக்காக மன்றோவின் உலகத்துடனான பயணத்தில் The Road from Hainan என்கிற சீன களச்செயல்பாட்டாளர்கள் தொடர்பான ஆவணப்படத்தின் திரையிடலில் கலந்து கொண்ட போது, அவருடன் இந்த நேர்காணலைச் செய்தேன். அதில் அவருடைய வாழ்க்கைப் பாதை, ஆவணப்பட உலகில் அவருக்கு இருக்கும் தனித்துவமான இடம் மற்றும் அவரது இருப்பினால் இந்த துறை எப்படி பயனடைந்திருக்கிறது என்பது குறித்து விரிவாக பேசினார்.

 

மக்கள் உங்களிடம் “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

நான் முக்கியமாக அவர்களுக்கு சொல்லும் பதில் இதுவாகத் தான் இருக்கும். “ஒரு ஆவணப்படத்தை உருவப்படுத்தும் முயற்சியில் நான் இறங்கி இருக்கிறேன்”. அதாவது மக்கள், கதை சொல்லும் படங்களை சுவாரசியமென்று கருதுகிறார்கள். ஒரு படத்தை மூன்றடுக்கு வடிவத்திலும், தரமான அணிநய சொல்லாடலாகவும் என்னிடம் கொண்டு வரும் போது, அதை ஒரு புதிர் போல கருதி, அந்தக் கதையை எப்படி சுவாரசியம் குன்றாமல் சொல்லலாம் என்று மட்டுமே நான் பார்ப்பேன். நீங்கள் நேற்று பார்த்த, The Road from Hainan படத்தையே எடுத்துக் கொண்டாலும் கூட, “அந்த பக்கம் 26 க்கு காரணமான சம்பவத்தை எடு” என்று செயற்கையாக நான் வேலை செய்வதில்லை.

 

உங்களுடைய பின்புலம் பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் திரைக்கதை எழுத படித்தீர்களா?

நான் இதழியல் கல்லூரியில் படித்தேன். திரைக்கதை கல்வியில் நான் பூஜ்ஜியம். எல்லோரையும் போல ஆயிரக்கணக்கில் படம் பார்த்து, அவற்றால் பாதிக்கப்பட்டு, “சரி இதை என்னால் செய்ய முடியும். இனி இது தான் என் வேலை” என்று முடிவு செய்து களம் இறங்கியது தான். படம் எடுக்கையில் எஞ்சிய பதிவுகளை டிவிடிக்களின் மூலம் பார்த்துத் தான் நான் இயக்குனர்களின் வர்ணனைகளை அறிந்து கொண்டேன்.

 

நாம் ஆவணப்பட எழுத்தின் பொருள் குறித்து மேலும் பேசி வரையறுப்போம். பொதுவாக ஆவணப்பட எழுத்து என்றாலே அவர் கதை சொல்லியின் வார்த்தையாக செயல்படுகிறார் என்றே மக்களுக்கு தோன்றும். ஆனால் அந்தத் துறையின் வேலை வேறல்லவா?

என்ன காரணமோ தெரியவில்லை. இந்த அங்கீகாரம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதை நான் தக்க வைத்துக் கொண்டேன். ஆனால், ‘எழுத்து’ என்கிற வார்த்தைக்கு அருகில் என் பெயரைப் படிக்கும் போது நான் அந்தப் படத்தின் வசனத்தை மட்டும் எழுதி இருக்கிறேன் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் வேலை செய்யும் பல படங்கள் கதையுடன் இருக்காது. என்னுடைய வேலை, படத்தொகுப்பு வேலையை ஒத்தது. படத் தொகுப்பாளர்கள் நான் செய்யும் வேலையை எப்போதுமே செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அந்த அங்கீகாரம் கொடுக்கப் படவேண்டும். படத் தொகுப்பாளர்கள் சில காட்சிகளில் உள்ள மிக நுணுக்கமான விஷயங்களை வைத்து சில நொடிகளில் அசாத்தியமான ஆச்சரியங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள். நான் செய்வதெல்லாம் ஒரு படத்தின் ஒட்டுமொத்த மதிப்பீட்டை எவ்வாறு கூட்டிக் காட்ட முடியும் என்கிற ஆய்வைத் தான். எப்படி கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது? கதை பேசும் பிரம்மாண்ட களத்தை, வாதத்தை எவ்வாறு அலங்கரித்து பரிமாறுவது? என்கிற ஆய்வில் தான் நான் ஈடுபட்டிருக்கிறேன். என் திறமை, மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சொல்லிவிடாமல், மக்களை சுவாரசியம் குன்றாமல் கட்டி வைப்பதில் தான் இருக்கிறது.

 

நீங்கள் இயக்குனர் மற்றும் படத் தொகுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்த போது, அது ஒரு முக்கோண உரையாடல் போலிருந்தது. அதில் ஒரு விஷயத்தை கவனித்தேன். அவர்கள் இருவரும் படத்திற்குள் மூழ்கி விட்டிருந்தனர். நீங்கள் பார்க்கும் கோணத்தில் அவர்களால் பார்க்க முடியவில்லை.

பல நேரங்களில் ஒரு நபர் கூறிய விஷயம் தன்னை எப்படி புல்லரிக்க வைத்தது என்கிற அனுபவத்திற்குள் இயக்குனர் சிக்கிக் கொள்கிறார். அந்த நபருடன் படம் எடுக்கும் போது உரையாடலில் பேசிய அனைத்தையும் அப்படியே திரையில் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அது கிட்டத்தட்ட முடியாத காரியமாகவே இருக்கும். ஏனெனில், அந்த நபருடனான சந்திப்புக்கு முன்பும் பின்பும் வருடக் கணக்கிலான தொடர் அனுபவத்தை இயக்குனர் மட்டுமே பெற்றிருக்கிறார் என்பதை இயக்குனர் மறந்து விடுகிறார். அடுத்ததாக, படத் தொகுப்பாளர்கள் அடுத்து வர இருப்பது பற்றி யோசிக்காமல் இந்த நொடியை எப்படி பெரிதாக மாற்றியமைக்கலாம் என்று சிந்திப்பார்கள். நான் அவருக்கு ஒரு சியர் லீடர் போல செயல்படுவதோடு, அடுத்து வருவதைப் பற்றியும் சிந்தித்து அவர் மீதிருக்கும் பாரத்தை சற்றுக் குறைப்பேன்.

 

ஒரு குழுவோடு நீங்கள் வேலை செய்யத் தொடங்கும் கட்டம் என்று ஒன்று உள்ளதா?

இது ஒவ்வொரு முறையும் மாறுபடும். தொடக்கத்தில் நான் பல படங்களுக்கு முடிவு கட்டத்தை எட்டும் போது தான் வேலைக்கு அழைக்கப்படுவேன். ஒரு கட்டம் வரும். பணம் போட்டவர்கள் கவலையோடு இருப்பார்கள், இயக்குனர் பதட்டத்தில் இருப்பார், படத் தொகுப்பாளர் முயன்று கொண்டிருப்பார். ஆனால், தேவையான விளைவு கிடைக்கவில்லை என்கிற இக்கட்டான கட்டம் வரும். அப்போது நான் என்னைப் பற்றி, “எல்லாவற்றையும் நான் தான் சரி செய்யப் போகிறேன்” என்று அதீதமாக நினைத்துக் கொள்ளாமல், “இப்படிச் செய்தால் என்ன?” என்ற கேள்வியோடு வருகிறேன். அதை ஏற்றுக் கொள்ள அனைவரும் சம்மதிக்கிறார்கள். தற்போது நான் செய்து கொண்டிருக்கும் பாதி வேலையில் இப்படித் தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதே சமயம், முதலில் இருந்தே பயணிக்கவும் எனக்கு அழைப்புக்கள் வரும். நான் ஒரு விஷயத்தை எப்படி அணுகுவது என எழுதும் போது அது பணம் போட்டவர்களைக் கவர்கிறது. பின்பு படத்தில் கேட்கப்படும் கேள்விகள் குறித்தும், எடுக்கப்படவிருக்கும் ஷாட்டுகள் குறித்தும் என் ஆலோசனையைச் சொல்வேன். ஒரு படத் தொகுப்பாளருடன் நான் தொடக்கத்தில் இருந்தே பயணிப்பேன். ஆறு மாத காலத்தில் படத்தை ஒரு உருவத்திற்குள் கொண்டு வருவோம். பின்பு அதை மெருகேற்றி மெருகேற்றி வெளியிடுவோம்.

 

உங்களுடைய சம்பளம் எவ்வாறு முடிவு செய்யப் படுகிறது? ஒரு படத்துக்கான சம்பளமாக வாங்கிக் கொள்வீர்களா? அல்லது, செலவழிக்கும் நேரத்தைப் பொறுத்தா?

இந்த வியாபாரத்தில் அதன் வடிவம் தான் பிரச்சனை (சிரிக்கிறார்). ஒரு வருடத்தில் 10,000 ஆவணப் படங்கள் வரலாம். ஆனால், அதில் நான்கில் இருந்து ஐந்து படங்கள் தான் பணம் சம்பாதிக்கின்றன. ஒரு தயாரிப்பை என் சம்பளத்தால் நான் மூழ்கடிக்க முடியாது. அதனால் நான் சாதாரண சம்பளத்தையே கோருகிறேன். நேரக் கணக்கில் அல்ல. படத்திற்கு இவ்வளவு என்று பேசிக் கொள்வேன். என் சம்பள பாரத்தை ஏற்கக் கூடிய தயாரிப்புகளுக்கு WGA அமைப்பின் வரம்பிற்குள் நிர்ணயிக்கப் பட்ட தொகையைக் கேட்டுப் பெற்றுக் கொள்வேன். முடியாத தயாரிப்புகளுக்கும், எனக்கு மிக நெருக்கமான படங்களுக்கும் சம்பளம் வேண்டாம் என்றோ, குறைவான சம்பளம் போதும் என்றோ பேசிக் கொள்வேன். சில நேரங்களில் படத்தின் உரிமையில் ஒரு பங்கு என்னை வந்து சேரும்.

 

இந்தத் துறையில் உங்கள் பாதை குறித்து மேலும் சொல்லுங்கள்

இந்தப் பணியில் நான் ஈடுபடத் தொடங்கியது ஒரு விபத்து. என் அப்பா பேப்பர் போட்டுக் கொண்டிருந்தார். பின்பு ஒரு பத்திரிக்கையாளராக வேலை பார்த்தார். நானும் அதுவாகவே ஆக விரும்பினேன். ஆனால் நான் என் படிப்பைத் தொடங்கிய போது காட்சி ஊடகமே அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதனால் காட்சி ஊடகத் துறையில் பட்டம் பெற்றேன். பள்ளிக்கு பிறகு CNN ல் ஐந்தாறு வருடம் செய்தி எழுதிக் கொண்டிருந்தேன். அது தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலைக்கு நல்ல அடித்தளமான பயிற்சியைக் கொடுத்தது. ஒரு செய்தி என்பது முக்கியமான விஷயத்தை 25 நொடிகளுக்குள் சுருக்கி வரைவது. ஒரு வரி விதிப்பைப் பற்றியோ, சிரியப் புரட்சி பற்றியோ இரண்டு பக்க கட்டுரையை எடுத்துக் கொண்டு அதில் மொத்தக் கதையையும் தெரியப் படுத்த ஐந்து வாக்கியங்களைக் கண்டு பிடிக்க வேண்டும். இதையே ஒரு இரவில் 25 ல் இருந்து 30 தடவை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். இதை நான் செய்து கொண்டிருந்த போது என்னுடைய இருபதுகளின் முடிவில் இருந்தேன். அதனால் இரவில் அதிகமாகக் குடித்து, பெண்கள் பின்னால் சுற்றி சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொண்டேன். அதோடு, “நான் போஸ்னியாவிலும், ஹெர்ஸ்கோவினாவிலும் நடக்கும் போர் பற்றி விளக்க வேண்டிய ஆளல்ல” என்று யோசித்தேன். அதனால் அட்லாண்டாவில் ஒரு குழந்தைகள் தொலைக்காட்சிக்கு வேலை செய்யத் தொடங்கினேன். அது எனக்குள்ளிருந்த மடையைத் திறந்து கற்பனையைக் கட்டவிழ்த்து விட்டது.

இதற்கிடையில் என் நண்பன் லாஸ் ஏஞ்செல்ஸுக்கு குடி பெயர்ந்தான். அவனுடன் இரண்டு வாரங்கள் தங்க முடிவு செய்து பின்பு அதுவே என் வீடாகவும் மாறியது. ஆவணப்பட சாயலில் இருந்த Beyond the Glory, Behind the Music போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளை எடுத்தேன். தயாரிப்பாளர், எழுத்தாளர், படத் தொகுப்பாளர், இயக்குனர் என்று எந்த வேலையாக இருந்தாலும் செய்யத் தயாராக இருந்தேன். அதனால் அத்தனை விதங்களிலும் சம்பாதிக்க முடிந்தது. எட்டு வாரத்திற்குள் முடியும் படத் தொகுப்பு வேலை எல்லாம் என்னைத் தேடி வரும். இது போன்ற இரண்டு மூன்று காட்சிகளுக்கு உழைத்து விட்டால், ஒரு மாதத்திற்கு ஐரோப்பாவிற்கு சென்று வந்து விடும் அளவிற்கு பணம் கிடைக்கும். இப்படியான காலக் கட்டத்தில் தான் ரியாலிட்டி ஷோக்கள் என் துறையைத் திருப்பிப் போட்டது. நான் நினைத்துக் கொண்டேன், “இது எனக்கான ஆப்பிள் அல்ல. இதை என்னால் சாப்பிட முடியாது” என்று. இந்த நேரத்தில் தான் என் நண்பன் பால் க்ரௌடர் Dog Town படத்தில் தொகுப்பாளராக வேலை செய்தபோது எனக்கு அறிமுகமானான். அவனுக்கு வந்த பல பட வாய்ப்புகளில் ஒன்று என் பாதையை வகுத்தது. அவன் என்னை அழைத்து, “நீ Behind the Music ல் செய்ததையே இதிலும் செய்து விடு. அது போதும். நாம் மொத்தத்தையும் படித்து, அதை ஒரு கதையாகக் கொண்டு வந்து வெளியிடலாம்” என்று சொன்னான். நான் அதை ஏற்றுக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அதன் தயாரிப்பாளர் passion pictures நிறுவனத்தின் புகழ்பெற்ற ஜான் பேட்ஷெக். ஒரு வருடத்தில் ஐந்து படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் அவர். அந்த வேலையின் முடிவில் அவர்கள் என் பெயரை என்னவென்று போடுவார்கள் என்று கூட எனக்குத் தெரியாமல் இருந்தது. அப்போது, “மொத்த எழுத்துப் பணியையும் நீ தானே செய்தாய்? எழுத்து என்று போட்டுக் கொள்வதற்கு உனக்கில்லாமல் யாருக்குத் தகுதி உண்டு?” என்று சொன்னார்கள். அதனால் அப்போதிருந்து நான் எழுத்து என்கிற அடையாளத்தை சுமக்கத் தொடங்கினேன். அதையே விரும்புகிறேன். ஏனெனில், பத்து வரிகளில் கதையின் வசனத்தைச் சொல்வதை விட, அந்தக் கதை எப்படி எல்லாம் பயணிக்க வேண்டும் என்கிற பாதையை வகுக்கும் பணி பெரிதாகத் தெரிந்தது.

 

உங்களுடைய பாதை, எழுத்து குறித்த முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. எழுத்து என்பது வெறும் காகிதத்தில் எழுதுவதா? அல்லது வேறெதுவோ ஒன்றா? டான் டெலிலோ எழுத்தை “குவிமையப்படும் சிந்தனை” என்று சொல்கிறார்.

நான் மின்னஞ்சல் அனுப்பும் முறை நன்றாக இருக்கிறது என்று சிலர் என்னிடம் கூறுகிறார்கள். அந்த திறமை என்பது உங்கள் தலைக்குள் உதிப்பதை எழுத்துப் பூர்வமாக பிறருடன் நேரடியாகப் பகிர்வது தான் என நினைக்கிறேன். ஒரு படத்தின் அனைத்து காட்சிகளையும் எடுத்து படத் தொகுப்புக் களத்தில் நிறுத்தி, ஏழு மணி நேர கத்தரிப்புக்குப் பின்பு, “அப்பாடா! இந்த காட்சி நன்றாக வந்திருக்கிறது. இதை இந்த இடத்தில் போடுவோம்” என்று சொருகுவது பலருக்கு நல்ல படத்தொகுப்பாக தெரியலாம். ஆனால், நான் அந்த வேலையைச் செய்வதில்லை. ஒரு படத்தின் முக்கிய காட்சி என்பது அந்த படத்தில் வரும் எதிர்பாராத சம்பவங்கள் மட்டுமல்ல. ஆம், எதிர்பாராத சம்பவங்கள் கதையை பெரிய தளத்திற்கு கொண்டு செல்வதாக இருக்கலாம். ஆனால், தன் வாழ்க்கையையே அந்த கதை சொல்வதற்காக செலவிடும் ஒரு இயக்குனர் என்னிடம் கொடுக்கும் முதல் தகவல் தான் எனக்கான முக்கிய காட்சி.

 

இதில் ஒரு முரணான விஷயம். ஒரு படைப்பாளியின் அனுபவமும், பயணமும் என்று அந்த களத்தில் ஒரு முக்கியமான முத்திரையை பதிக்கத் தயாராக இருக்கும் அவருடைய முயற்சி ஒரு புறம் இருக்க, படத் தொகுப்பின் போது, “இவ்வளவு தான். இதைத் தான் பார்வையாளருக்கு காட்ட முடியும்” என்று வரம்பு அமைப்பது ஒரு படைப்பாளிக்கு வலியை ஏற்படுத்தும் இல்லையா?

சரி. மிகச் சரி. இந்த இடத்தில் தான் நான் சற்று சுயநலத்துடன் பேசப் போகிறேன். என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆவணப் படங்களின் எழுத்து என்று தனியாக எந்த அங்கீகாரமும் இல்லை. கடந்த 10, 15 ஆண்டுகளில் தான் WGA அமைப்பு இந்த துறையை அங்கீகரித்து பிறரையும் கவனம் கொள்ளச் செய்திருக்கிறது. இத்தனை நாட்களாக இந்த அங்கீகாரம் இல்லாததற்குக் காரணம், ஒரு படத்தின் எழுத்தாளராக அந்த படத்தின் இயக்குனரே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் தான். மக்கள் நினைக்கிறார்கள், “ஒரு இயக்குனருக்கு தனியாக எழுத்தாளர் என்கிற உதவி எதற்கு? அது அபத்தம் இல்லையா?”. என்னைப் பொறுத்த வரையில் ஒரு இயக்குனர் தான் அந்த படைப்பின் காரணகர்த்தா. அவர் தான் ஒன்றைத் தேடிச் சென்று பல ஆண்டுகள் செலவு செய்து படம் பிடிக்கிறார். லூயி சைஹோயோஸ் இந்த வேலையை வேறு எவரைக் காட்டிலும் சிறப்பாகச் செய்கிறார். இது ஒரு அசாத்தியமான திறமை. அதே இயக்குனர் எதற்காக கதை போகும் திசையை கண்டுபிடிக்கும் திறமையைக் கொண்டிருக்க வேண்டும்? அந்தத் திறமை இல்லை என்றால் அவர் சிறந்த இயக்குனர் இல்லை என்றாகி விடுமா? எனக்கு அது சரி என்று படவில்லை.

 

இந்த பதில், காட்சி ஊடகம் எப்படி எல்லாம் பரிணமிக்கிறது? நாம் எப்படி முன்னேற வேண்டும்? நம்முடைய முன்முடிவுகள் எவை என்பன போன்ற பல சுவாரசியமான கேள்விகளைக் கிளப்பி விடுகிறது.

இப்போது எடுக்கப் படும் படங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு வேறு மாதிரி எடுக்கப்பட்டதை நான் கவனிக்கிறேன். இப்போது புதிதாக ஒரு பழக்கம். அதாவது பல மாதங்களுக்கு இரண்டு மூன்று புதிய படத் தொகுப்பாளர்கள் வேலை செய்து விட்டு, கடைசியில் முடியும் போது ஒரு பெரிய தொகுப்பாளர் வந்து படத்தை முடித்துக் கொடுத்து விட்டுப் போகிறார். அதனால் ஒரு படத்தின் மீது பல கைகள் பதிகின்றன. பலரது மூளைகளில் இருந்து புதிய யோசனைகள் உருபெற்று ஒரு படத்தை மாற்றி அமைக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் இது ஒரு ஒற்றையடிப் பாதையாக இயக்குனரின் தனிமைக்கு விடப்பட்டிருந்தது. ஒரே ஒரு படத் தொகுப்பாளரை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த வேலையையும் முடித்து விடுவார்கள்.                           

 

இது உரையாடலின் கிளைக் கேள்வியாக இருக்கலாம். ஆயினும், புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புக்கள் இரண்டுமே, ஒரு வண்டியின் துணைச் சக்கரங்கள் போலத் தான் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது. சினிமா என்பதே ஒரு வடிவத்தின் பல்வேறு பயன்பாடுகளை அனுபவிப்பது மட்டுமே என்கிற விமர்சனத்தையும் முன்வைக்கலாம் அல்லவா? ஒரு கட்டத்தின் வேலைக்கான அங்கீகாரம், அடையாளம் அனைத்தையும் தாண்டி, நல்ல சினிமா எடுக்கிறீர்கள். அவ்வளவு தானே?

இந்தக் கேள்விக்கான பதில் இது தான். பத்து வருடங்கள் முன்பு ஆவணப்படங்களின் உலகம் மிகவும் பரபரப்பாக மாறியது. அப்போது கதை சொல்வதற்கான புதிய தொழில்நுட்பம் உருவாகி, வடிவத்தை வைத்து சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால், பார்வையாளர்கள் ஒரு ஆவணப் படத்திற்கும், புனைவுக் கதைக்கும் இடையில் நடுவாந்திரமான நிலையில் பயணிக்கும் ஒரு படைப்பைக் கொண்டு வரும் போது, அசௌகர்யமாக உணர்ந்தார்கள். எதைக் காண்கிறோம் என்பது பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லை. இதனால் மிகப் பெரிய வெற்றியைப் பெறவேண்டிய படைப்புகள் கூட மிகச் சாதாரணமான வெற்றியையே பெற்றன. பார்வையாளர்களில் ஒரு பகுதியினருக்கு “இது என்ன அவ்வளவு பெரிய படைப்பா?” என்கிற மனோபாவம் தொற்றிக் கொண்டது. இந்த மனோபாவத்தை மாற்றி, சிறந்த படைப்புக்களை மக்கள் ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு உதவும் முயற்சியிலேயே நாங்கள் இருக்கிறோம்.

 

என்னைப் பொறுத்த வரையில், பார்வையாளர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பு, பொதுவாக, நாம் நமது அனுபவத்தைத் தொகுத்து, ஒரு சார்புநிலை எடுத்து, நமது வாழ்க்கையில் அவற்றை பிரயோகிக்க முயற்சி செய்கிறோம். ஆனால் ஒரு படம் விதிகளை வளைத்து அசௌகர்யமானவற்றை எடுத்துச் சொல்லும் போது, அது பார்வையாளரின் எதிர்ப்பு அணுக்களை முடுக்கி விட்டு, அந்தப் படைப்புக்கு எதிராகத் திருப்பு விடும் என நினைக்கிறேன். அது அவர்களை புதிய அனுபவத்தை ரசிப்பதற்கு பதிலாக குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

உங்களுடைய குழந்தை எப்படிப் பிறந்தது என்கிற கதையை நீங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பும் பின்பும் கூறும் விதம் ஒரே மாதிரியாக தான் இருக்கும். அந்தக் கதையை ஒருவர் சொல்லும் போது அது நமக்குப் பிடிக்கும். ஏனெனில் நமக்கு நிதர்சனங்களை கதையின் மூலம் கேட்பது பிடிக்கும். அதுவே ஒரு படம் இந்த வரம்பை மீறும் போது, சொல்லப் படுவது உண்மையா? இது நிஜமா? என்கிற கேள்வி நம் மனதில் எழும். அத்தகைய ஒரு படத்தில் வேலை செய்வது மிகவும் மலர்ச்சியூட்டுவதாக இருக்கும். ஆனால், அதையே பல முறை செய்து நினைக்கும் போது, எதில் தலையை நுழைக்கிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். இதன் மூலம் வரப்போகும் விளைவுகள் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

நீங்கள் ஒரு படத்தை எடுப்பதற்கு தேவையான உழைப்பைப் போடாமல் அந்த படத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் கைவைத்து, அதனை மாற்றி அமைப்பதற்கு மட்டும் ஒரு சுலபமான வழியைக் கண்டு பிடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே!

ஆம். என்னைப் பற்றி சரியாக சொல்லி விட்டீர்கள். நான் தான் இந்த உலகில் மிகப் பெரியதொரு மோசடிக்காரன். சிலர் என்னிடம் கேட்பார்கள்.

“ஏய்! இவ்வளவு பேசும் நீ. ஒரு படத்தை எடுத்துக் காட்ட வேண்டியது தானே?” என்று. இதைப் பற்றி நான் முன்பே கூறி விட்டேன். இருந்தாலும் சொல்கிறேன். வியாபார வடிவம் என்பது இந்த உலகில் மிகவும் மோசமானதாக இருக்கிறது. வெறும் ஆவணப் படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒருவன் வாழ்க்கையை ஓட்ட முடியாது. அப்படி ஆவணப் படம் எடுத்தே தன் வாழ்க்கையை நடத்துபவர்கள் தாங்களே ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறார்கள். என்னிடம் ஒரு கதை உள்ளது. அதை அந்தக் கதைக் களத்தில் வசிப்பதால் நான் படம் எடுக்க நினைக்கிறேன். நான் தயங்கினால் இந்தக் கதையை யார் எடுப்பார்கள் என்கிற இந்த நினைப்பு என்னை, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, அதிகம் போனால் பத்து ஆண்டுகள் வாழ வைக்குமா? இப்படி நினைத்துக் கொண்டிருப்பவனுடைய வாழ்க்கைக்கு யார் பணம் கொடுத்து உதவுவார்கள்? நான் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். நான் லாஸ் ஏஞ்செல்ஸில் வசிக்கிறேன். என்னால் இதைச் செய்து கொண்டே வேறு வேலையைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அதனால் மற்றவர்களின் திரைப்படங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறேன்.

 

திரைக்கு வெளியில் உங்களது வாழ்க்கை பற்றி அறிய ஆவலாய் உள்ளது.

திரைக்கு வெளியே எனக்கு வாழ்க்கை ஏது?

 

நீங்கள் உங்களுடைய துறை சார்ந்த பிரச்சனைகளை பிறர் அணுகும் விதத்தில் இருந்து மாறுபட்ட ஒரு அனுபவத்தைக் கொண்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த யோசனையை என் சிந்தைக்குள் உதிக்கச் செய்வதால், என்ன தகவலை என்னோடு பகிர நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

உண்மையில் சொல்லப் போனால் இதில் நான் மூழ்கி விட்டேன். என் தேவைகளைப் பூர்த்தி செய்ய நான் எனக்கு முன்னால் வரும் அனைத்து வாய்ப்புகளையும் எடுத்துக் கொள்கிறேன். என் வாழ்க்கையின் பிற முக்கியமான விஷயங்களைக் கவனிக்காமல் நான் அதிகமாக உழைத்து விட்டதாக நினைக்கிறேன். இது போதையூட்டுவதாகவும் இருக்கிறது. படத்தைப் பார்ப்பது, அதை வெளியிடுவது மட்டுமில்லாமல், இதில் வேலை செய்வதே போதையூட்டுவதாக இருக்கிறது. நான் நேற்று இரவு பாதியில் விட்டதைத் தொடர சீக்கிரம் எழுந்து கணினியைத் திறக்க முற்படுகிறேன். அதை முயற்சிக்க என் மனம் பொறுமை இழந்து தவிக்கிறது.

 

எத்தனை படங்களை ஒரே நேரத்தில் ஒப்புக் கொள்கிறீர்கள்?

ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் எனச் சொல்லும் விதத்தில் பல படங்கள். இப்போது எல்லோரும் சண்டேன்ஸ் திரைப்படவிழாவிற்கு அனுப்புவதையே முக்கியமாக நினைக்கிறார்கள். அது உண்மையாகவே சண்டேன்ஸில் வெளி வர வேண்டிய படமோ இல்லையோ, காலக் கெடுவுடனேயே என்னிடம் வருகிறார்கள். மக்கள், “ஒலிம்பிக்கிற்குத் தயாராவோம். வெற்றி பெறவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்ப்போம்” என நினைக்கிறார்கள். அதனால் முடிந்தது என்று அறிவிக்கத் தகுதியான ஐந்து படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. வசந்த காலத்தை குறிவைத்து மூன்று படங்களில் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

 

நீங்கள் சொன்னது போல, உங்களுடைய சம்பளம் படத்திற்குத் தானே ஒழிய வருடத்திற்கு இல்லை. அப்படி இருக்கும் போது, ஒரு படத்தின் வேலை அதிக காலம் பிடித்தால் என்ன செய்வர்கள்?

அது பிரச்சனை இல்லை. நான் கொடுத்துள்ள வாக்குறுதியே முக்கியம். நான் உங்களுடைய படத்தில் வேலை செய்ய ஒப்புக் கொண்டு விட்டால், அது ஐந்து வருடம் அதிக காலம் எடுத்துக் கொண்டாலும், ஐந்து வருடங்கள் வேலை செய்து தான் ஆக வேண்டும். ஆனால், நான் என்னுடைய சம்பளத்தைக் கொடுக்கச் செய்ய சில உந்துதல்களை ஏற்படுத்துவேன். ஒரு தோராயமான வடிவத்தை ஏற்படுத்தி விட்டு அதைக் காண்பித்து ஒரு பகுதி பணத்தை வாங்கிக் கொள்வேன். பிறகு, முழுமையாக முடித்துக் கொடுத்து விட்டு மீதிப் பணம். நான் என் வேலையை சரியான இடைவெளிக்குள் வகைப்படுத்திக் கொண்டு ஒரு கால நிர்ணயம் செய்து கொள்கிறேன். அது சரியாக வரும் என்கிற ஒரு தோராயமான கணக்கு தான்! வேறென்ன?   

 

தமிழாக்கம் : கண்ணன் ராமசாமி 

ப்ராடன் கிங் : தற்கால இளம் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்.           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!