home கட்டுரை, தமிழி கொங்கன் படை – ஓலை முறி

கொங்கன் படை – ஓலை முறி

 

பாலக்காடு மாவட்டத்தில் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சித்தூரில், மாசி-பங்குனியில், கொங்கன் படைத் திருவிழா நடைபெறுகிறது. மலையாளிகளும் தமிழர்களும் சேர்ந்து இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். இரவு பத்துமணியளவில், இத் திருவிழாவின் ஒரு பகுதியாகப் படைமறித்தல் என்பது நிகழ்த்தப்படுகிறது. பகவதி கோயிலுக்குச் சென்று, மூன்று முறை வலம் வந்து கோயிலின் உள்ளே சென்று வழிபட்டு, கொங்கன் போர் ஓலையை எல்லோரும் கேட்கும்படி கொங்கன் வேடம் புனைந்தவர் வாசிப்பார். சிற்றிடத்து வீட்டார் என்ற குடியைச் சேர்ந்தவர்களுக்கு மூல ஓலை எவ்வாறோ கிடைக்க, அதைப் பத்திரப்படுத்திப் புதைத்து வைத்திருக்கிறார்கள். யாரும் அதைப் பார்த்ததில்லை. வழிவழியாகத் தாய் மாமனிடமிருந்து, அவரது தம்பிக்கும் பின் மருமகனுக்கும் இந்த ஓலையின் வாசகங்கள் மனப்பாடத்திலிருந்து கற்பிக்கப் படுகின்றன. பல தலைமுறைகளாய் மனப்பாடமாய் இருந்து வரும் இவ்வோலையின் வாசகங்கள் நல்ல தமிழில் மூல ஓலையின் அசலாய் இருக்கிறது. இந்த ஓலை வாசிப்பு ஒரு நாழிகை நேரமே நடைபெறும். கொங்கன் வேடம் புனையும் உரிமையுடைய சிற்றிடத்து வீட்டுப் பெரியவர், ஒரு நீண்ட பனை ஓலையை இரண்டு கைகளாலும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு மனப்பாடமாய் கடகடவென்று ஒப்புவிப்பார். ஓலையிலே ஒன்றும் இருக்காது.

ஒரு வரலாற்று நிகழ்ச்சியே, இத்திரு விழாவுக்குக் காரணமாக அமைந்துள்ளது: சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்து 1947 வரை கொச்சி ராஜ்ஜியத்தைச் சேர்ந்ததாகவே சித்தூர் இருந்தது. கொச்சி அரசர்கள், முதலில் பொன்னானி அருகிலுள்ள வத்தலைச்சேரிப் பெரும்படப்பில் சித்ர கூடத்திலிருந்தும், பிறகு எர்ணாகுளத்தை அடுத்த திருப்பூணித் துறையிலிருந்தும் சித்தூர் பகுதியை ஆண்டுவந்தனர். அன்றைய கொச்சி நாடு, இன்றைய எர்ணாகுளம், திருச்சிவப்பேரூர் ஆகிய இரு மாவட்டங்களைக் கொண்டதாகவே இருந்தது. எர்ணாகுளம் தலைநகரமாக இருந்தது. திருச்சிவப்பேரூர் மாவட்டத்தில் ஒரு தாலூக்கா சித்தூர். இப்போது 1956 க்குப் பிறகு சித்தூர், பாலக்காடு மாவட்டத்தின் தாலூக்காவாக ஆகிவிட்டுள்ளது.

‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் பொன்வானியாறு’ என்னும் பாரதப் புழையாறு, சித்தூரின் தென்பகுதியில் மேற்கு நோக்கி ஓடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மூணாறுப் பகுதியிலே ஆனைமுடிச் சிகரத்திலிருந்து பிறந்து வரும் இவ்வாறு, எல்லாக்காலத்திலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவது. எனவே, அந்தக் காலத்திலேயே, ஆங்காங்கே பல அணைகளைக்கட்டி, பாசனத்துக்கு உதவும் வாய்க்கால்களை வெட்டியுள்ளனர். இவ்வூரிலே பல்வேறு சாதியினர், மொழியினர், சமயத்தினர் வசிக்கிறார்கள். தெலுங்கர், கன்னடியர், மராட்டியர், குடகிலிருந்து வந்த ஜைனர், துளுவப்பிராமணர் ஆகியோரோடு மலையாளிகளும் தமிழர்களும் சேர்ந்து மிகவும் நேசத்தோடு கலந்து வாழ்கிறார்கள். விவசாயத்தோடு வியாபாரமும் நன்றாக நடைபெற்றுவருகிறது. பண்டைக் காலத்திலேயே பாலக்காட்டுக் கணவாய் வழியாக அமைந்த முப்பெரும் வணிக வழிகளில் ஒன்றில் அமைந்தது சித்தூர். இனி தவிர திருவிழாக்கள் இல்லாத மாதமே இவ்வூரில் இல்லை எனலாம். இவ்விழாக்கள் சாதி, மத, மொழிப் பாகுபாடுடையவைதான். ஓணத்தை தமிழர்களும், ஆடிப்பெருக்கை மலையாளிகளும் கொண்டாடுவதில்லை. தமிழர்கள் தீபாவளியில் பட்டாசு வெடிக்க, மலையாளிகள் சித்திரை விஷு கனிக்குத்தான் பட்டாசு கொளுத்துகின்றனர். ஆனால், மாசி, பங்குனியில் நடைபெறும் கொங்கன் படை விழாவில் மட்டும் மலையாளிகளும் சேர்ந்து கொண்டாடுகின்றனர். மற்ற சமயத்தவரும் கலந்து கொள்கின்றனர். பாலக்காட்டு மாவட்டத்தின் தேசியத் திருவிழாவாக இது கொண்டாடப் படுவதால் சித்தூர், தத்தமங்கலம் ஆகிய நகரங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசாங்கமே விடுமுறை அளித்து வருகிறது.

கொங்கன் என்றால் கொங்கு நாட்டவன் என்றுதான் பொருள். ஆனால், மலையாளிகளுக்குத் தமிழ் நாட்டவர் அனைவரும் கொங்கர்களே. தமிழர் எல்லோரும் கொங்கு நாட்டின் வழி (கோவை மாவட்டம்)யாகவே மேலைக் கடற்கரை நகரங்களோடு அந்தக் காலத்திலிருந்து தொடர்பு கொண்டிருந்ததால், இப்படி அறியப்பட நேர்ந்தது. எனவே கொங்கன் படை நிகழ்ச்சியில் மதுரை நாயக்க மன்னன் சம்பந்தப்பட்டிருந்தும் கொங்கு நாட்டின் வழியே வந்த காரணத்தால் அது கொங்கன் படையெடுப்பு என்றே அறியப்பெற்றது. ராணி மங்கம்மாள், தன்மகன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கனுக்குப் பதிலாகவே ஆட்சி புரிந்து வந்தார். 1682 ல் முடிசூடப்பட்டு 1689 வரை ஆட்சிபுரிந்த இவர், இளவரசனாக இருந்தபோது, இளங்குடி முத்து வீரப்பன் என்று அறியப்பட்டார். இரணியமூர்த்திப் பிள்ளை இவரது பிரதானியாக இருந்து வந்துள்ளார்.

மகோதயபுரப் பேரரசு வீழ்ந்த பிறகு, மேலைக் கடற்கரையில் பொன்வானி தாலூக்காவின் ஆதவநாடு ஆண்டவர்கள், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அப்பகுதிகளைக் கொச்சி அரசருக்குக் கொடுத்து விட்டு சித்தூர் தாலூக்காவின் சில பகுதிகளைப் பெற்று, ஆலத்தூர் தாலூகாவின் பழையனூர் அருகே தரூர் என்னும் இடத்தை இருப்பிடமாகக் கொண்டு பாலூர் நாடு எனப் பெயரிட்டு பாலக்காட்டு மன்னர்களாக ஆண்டு வந்தனர். இவர்களது ஆட்சியில் சித்தூர், ஆலத்தூர், பாலக்காடு ஆகிய தாலூக்காக்கள் உட்பட்டிருந்தன. இவர்களது வம்சம் தரூர் சொரூபம் என்று அழைக்கப்பட்டது. சேகரிவர்மா என்ற பட்டத்தை இவர்கள் வைத்துக் கொண்டனர். இப் பாலக்காட்டு அரசர் மேல், கோழிக்கோட்டு சாமூதிரி அரசர் மேலாதிக்கம் செலுத்த முயன்று வந்ததால், இவ்விருவருக்குமிடையே சுமூகமான நிலை இருக்கவில்லை.

மேலைக் கடற்கரையில் முன்பு, முசிறியும் தொண்டியும் பந்தரும் பெற்றிருந்த வியாபாரத் தலைவாசல் சிறப்பை இப்போது கோழிக்கோடு துறைமுகம் கைப்பற்றியிருந்தது. வியாபாரத்துக்காக வந்த போர்த்துக்கீஸியரும், டச்சுக்காரரும், உள்நாட்டு விஷயங்களில் சிறுகச் சிறுகத் தலையிட்டு, அவற்றை தமக்கு உரிமையாக்கி வந்தனர். இப்பரங்கியருக்கு எதிராகப் பின்பு ஆங்கிலேயரும், பிரஞ்சுக்காரரும் தோன்றி தம் ஆதிக்கத்தை நிறுவினர். இந்த ஆதிக்கப்போட்டிகளால் தென்னகத்தின் சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் அயல்நாட்டாரின் ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்தனர். இவர்களுக்கிடையே பூசலை மூட்டி, பரங்கியரும் வெள்ளையரும் பயன் பெற்றனர். பாலக்காட்டு கொச்சி அரசருக்கும் மதுரை நாயக்க மன்னருக்கும் இடையே பகையை மூட்டுவதில் வெற்றி பெற்றதன் விளைவே கொங்குப் படையெடுப்பு என்று தெரிகிறது.

தமிழகத்து விளைபொருள்களைக் கோழிக் கோட்டுத் துறைமுகத்துக்கு பொதிமாடுகள் மூலமாகக் கொண்டு சென்று பண்டமாற்றுப் பெற்று மீண்டும் மதுரை போன்ற இடங்களுக்கு திரும்பும் நிலையிருந்தது.  சாமூதிரி அரசரையும் கொச்சி அரசர் கேசவராம வர்மரையும் சந்தித்து, பல பரிசுகளைக் கொடுத்து, அவர்கள் நாட்டில் ஆங்காங்கே பண்டக சாலைகளைக் கட்ட அனுமதி கோரினர். பரங்கியர், அனுமதி மறுக்கப்பட்ட போது வஞ்சம் தீர்க்க, இவர்கள் அடியாட்களுடன் பதுங்கியிருந்து சமயம் பார்த்து, ஊர்களையும் வியாபாரிகளையும் கொள்ளையடித்தனர். ஆனால், பழியோ அந்தந்த நாட்டு அரசர் தலையில் விழுந்தது. இது போன்ற நிகழ்ச்சியே கொங்கன் படையெடுப்புக்கும் காரணமாகியுள்ளது தெரிகிறது.

மதுரை இளங்குடி வீரப்ப நாயக்கரின் மந்திரிப் பிரதானி இரணிய மூர்த்திப் பிள்ளையென்பவருக்கு, மலையாளப் பகுதியிலிருந்த பொதிமாடுகள் சுமந்துபோன பண்டமாற்றுப் பொருள்களை வாளையாற்றுக் கானலில் சிலர் மறைந்திருந்து கொள்ளையடித்தனர். அப்படிக் கொள்ளயடித்தவர், சித்தூர், பட்டஞ்சேரி உள்ளிட்ட நாலூர் மலையாளிகளே என்று பொதிமாடுகளை நடத்திச் சென்ற வணிகர் குற்றம் சாட்டினர். பறித்த பொருட்களைத் தம் ஆட்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் அல்லது கொள்ளையடித்தவர்களைக் கைது செய்து தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால், இந்த நாலூர் மலையாளர்களின் நகரான சித்தூரில் புகுந்து கொள்ளையடித்து ‘மட்டை பரப்பிச் செல்வது நிச்சயம்’ என்று இரணிய மூர்த்திப் பிள்ளை ஓலை அனுப்பி எச்சரிக்கை செய்தார்.

வியாபாரிகளைக் கொள்ளையிட்டது சித்தூர் மலையாளிகள் அல்லர் என்பதற்குக் காரணங்கள் கூறப்படுகின்றன. பாலக்காடு – மதுரைப் பெருவழிக்குச் சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சித்தூரிலிருந்து, அக்காலத்தில் நடந்து சென்று, வணிகச் சாத்தாக – கூட்டமாக – காவலுடன் வருகின்ற வியாபாரிகளைக் கொள்ளையடிக்க சாதாரண கிராமத்தவரால் முடியாது. அக்காலத்தில் இவ்வகைக் காரியங்களை பரங்கியரே செய்தனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

படையெடுப்பும் நிகழ்ந்தது. சித்தூர் மக்கள் பெரும்பாடு பட்டு வெற்றி பெற்றனர். போரில் தக்கசமயத்தில் படை அனுப்பி உதவிய கொச்சி அரசருக்கு, சித்தூர், நெம்மாறை உள்ளிட்ட சித்தூர் தாலூகாவைப் பாலக்காட்டு அரசர் சேகரிவர்மா பரிசாகத் தந்தார். சித்தூர் அன்றிலிருந்து கொச்சி அரசின் பகுதியாகியது. போரிலே வெற்றி தேடித் தந்தவரான சித்தூர் பகவதிக்கு, மூலக்கோயிலின் சமீபம், கதையால் சிலைப் பிரதிஷ்டை செய்தனர். ஒரு பெண் யோகி எங்கிருந்தோ தோன்றி, அச்சிலையை எடுத்து யாரிடமும் எதுவும் கூறாமல், தற்போதுள்ள இடத்தில் வைத்துவிட்டு மறைந்தாராம். தங்களைக் காப்பாற்றி காளிக்கு இரவும் பகலும் நடைபெறும் நன்றியறிதல் விழாவாகத் தொடங்கிய இத்திருவிழா, காலப் போக்கில் பல நிகழ்ச்சிகளுக்கும் இடம் தந்து, பெரிதாகக் கொண்டாடப்படுகிறது.

சிவன் ராத்திரியில் திருவிழாவை நடத்தும் உரிமை பெற்ற பிரமாணக்காரர்களான அம்பாட்டு, தச்சாட்டு, பொறையத்து, எழுவத்து என்ற நாலுவீட்டு மேனவர்களும் கோயிலில் கூடி, மாசிமாதம் அமாவாசை முடிந்து வருகிற முதல் புதன்கிழமை கணியார் விழா, வெள்ளிக்கிழமை கும்மாட்டி விழா, அதனையடுத்து  திங்கட்கிழமை கொங்கன் படைவிழா நடத்துவது என்று நிச்சயம் செய்வார்கள். சில ஆண்டுகளில் சிவன் ராத்திரி மாசி மாதக் கடைசியில் வருவதால், அப்போது பங்குனி மாதத்தில் இத்திருவிழா நடைபெறும். கணியார் விழா தொடங்கி பதினான்காம் நாள் பள்ளுடன் திருவிழா முடிவடையும்.

 

 

ஓலை முறி

கலியுகத்தில் ஸ்ரீமன் மகா மண்டலேசுவரன்

அரியராய விபாடன்

வார்த்தைக்குத் தப்பு வராயிரகண்டன்

மூவராயர கண்டன்

கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான்

துலுக்கத் தளவிபாடன்

துலுக்க மொகரந் தவிர்த்தான்

ஒட்டிய தளவிபாடன்

ஒட்டிய மொகரந் தவிர்த்தான்

ரெட்டித் தலை கொண்ட கண்டன்

ராசாதி ராசன், ராச பரமேசுவரன்

ராசமார்த்தாண்டன்

ராசாக்கள் தம்பிரான்.

ஒருகுடை நிழற்கீழ் உலகமுழுதாண்டான்

திரிபுரமெரிக்கும் திண்புயன்

தெஷிண புரபதிராஜன்

நாடடிமப் படக்கொண்டருளிய ராசன்

நாடன் வெங்கிடராசன்

அட்ட திக்கும் வணங்கன ராசன்

அட்ட போக புரந்தர ராசன்

பதினெட்டு கோட்டத்துக்கும் மன்னியற் கண்டன்

அன்னியராட்டந் தவிர்த்தான்

பதரார மறியாத மன்னியற் மணவாளராசன்

அருளோக நரலோகர் கண்டன்

அருளோகர் நரலோகர் சூரியன்

மேதின ஸுரர் கண்டன்

ஸ்ரீ முப்பாரிய கண்டன்

ஸ்ரீ புவன கட்டாரி

குல புவன கட்டாரி

சாளுவ கட்டாரி

துலுக்கர் சுரத்தாளன்

படரொளி சுரத்தாளன்

கலவர சுரத்தாளன்

முகம்மது சுரத்தாளன்

கோள சுரத்தாளன்

சேகரி கண்டன்

கேசரி கண்டன்

அரிய கேசரி

பீமகேசரி

பதா கற்பகாவாசி

கேசரி

பரி ஒட்டிய குஞ்சரி

புலி முகவாரி

சிங்கக் கொடி சீரங்கன்

அனுமக் கொடி அருச்சுனன்

மகாட மாள வீரனென்று சொல்லப்பட்ட

தீவல்லக் கோட்டயும் கொண்டருளிய ராசன்

சோம மண்டலத்தில் பிரதான னிந்திரன் சேகரன்

சோழ மண்டலத்தில் பிரதான விந்திரன்

பாண்டி  மண்டலத்தில் பிரதிட்டாசாரி

கொங்கு மண்டலத்துத் தானவனாச் சாரியன்

கெங்க மண்டலத்துக் கோரசந்த சம்மேளன்

மலை மண்டலத்து மத்தகாசுரன்

முகங்கண்டு முதுகிட்டோடும்

ராசராசனருளிய கண்டன்,

தானை மன்னரைத் தரியலராய்

அருஞ்சேனை செருக்களத் தமரிட்டு

கையோடு சுற்றிட்டு

மூண்டெழு துட்டர் களைந்த

ராம ரெங்கிற ராசன்

மல்லு அடில்கான் அழியவும்

மனமா துரகா பாலகன்

கரி, துரகா வேதவன்

பூர்வதிக்கில் புரண்டரீகலட்சுமி

காருண்ய தெஷிணாதிக்கில்

திரிலோக நாராயணன்,

பச்சிமாதிக்கில் பரிசம்மேளன்

உத்தர திக்கில் லோக மன்மதன்

ஷாஷ்டாத் அம்பது தேசத்தும்

தானவனாச்சாரியன்

சம்பிரம சௌபாக்கிய புத்திர சல்லாபதி

வல்லபராசன்

அரபுத்திர சரசம் மேளன்

சண்முகப் பிரமாணப் பேறு

தானவனாச் சாரியன்,

சித்தியான ராஜன்

அரன், அரிதவன், அசவினும் மறவாத ராஜன்,

துஷ்டநிக்கிரக சிட்டபரிபாலன சம்மேளன்

வல்லபராசன்.

வில்லுக்கு விசயன்

பொறைக்குத் தருமன்

கரி மேல் உதயன்

பரிமேல் நகுலன்

வாளுக்குச் சகாதேவன்

தோளுக்குப் பீமன்

தண்டுக்கு பீமன்

வாளுக்கு இந்திரன்

மருத்துக்கு மன்னியன்

வார்த்தைக்கு அரிச்சந்திரன்

துங்காக் கரையில் தங்கும்

ராசனருவிய கண்டன்

பசவத்தராசன்

ராச கேசரி

ராச கோளரி

ராச கேயவீரன்

ராச மார்த்தாண்டன்

ராசா பவன்

மனுராசக் கொடிபாலன்

ராச பூபாலன்

ராசா துரிபாலன்

ராஜேந்திர பாலன்

ராஜ புருசோத்தமன்

மனவெட்டி பாலன்

கரி துரக பாலநாராயணன்

அசுவ பதி

கஜபதி

நரபதி

நகரபதி

நவக் கொடி நாராயணன்

பூர்வ பச்சிம சமுத்திர

தெஷிணா சதுர் சமுத்திர பதிராசன்

அச்சுத ராசன்

ஸ்ரீ வீர சிறப்புடைய தெய்வராசன்

சதாசிவராசன்

ஸ்ரீ வீர பசவத்தராசன்

வீர சமஷ்மாகிய மகாமண்டலத்திலே இருந்து

ஓதி உணர்ந்து உலக முழு தாண்டவன்

அறமும் நிலையும் முதலிலே அமர்த்தி

ஆறிலே ஒன்று கடமை கொண்டு

அல்லலைக் கடிந்து நல்லதே நாடி

பிருத்வீ ராச்சியம் செய்தருளாகின்ற நாளில்

கலியுக சாகாத்தம்

பதினேழு நூறாயிரத்திப்பரம்

நாலு பத்து நாலாயிரத்தி

எழுநூற்றுத் தொன்னூற்றஞ்சுமே

நாட் சென்றது. செல்லாநின்ற

உத்தராயன காலே

மாசி மாதம் 18-ம் திகதி திங்கட் கிழமையும்

திருவாதிரை நட்சத்திரமும்

பூர்வ பட்சத்து தெசமியும் பெற்ற நாளில்

பெரும் படப்பில் சித்ர கூடத்திலிருந்து

கொச்சி ராசாக்களாம்

ராம கோர்ம்ம அரசரும்

வீர கேரள அரசரும்

கோதகோர்ம்ம அரசரும்

ராச்சிய பாரம் செய்து

அருளாநின்ற நாளில்

 

பட்டஞ்சேரி மலையாளர்களும் சித்தூர் மலையாளர்களும் அந்த நாலூர் மலையாளர்களும் கூட இளங்குடி வீரப்ப நாயக்கரு பெறதானி இரணிய மூர்த்திப் பிள்ளைக்குக் கொண்டு வருகிற பாக்குப் பொதி, சீனிமுளகாப் பொதி, பட்டு பட்டா, வெள்ளிப் பொதி, சீனிசர்க்கரைப் பொதி அத்தனை யுமெல்லாம் மறைந்திருந்து அடித்துப் பறித்து அடக்கிக் கொண்டார்கள். அது எப்படியோ? மந்திரிப் பிரதானி இரணிய மூர்த்திப்பிள்ளை இதுக்கு விவரம் என்னவென்று விசாரித்துக் கொண்டு, பெரும்படப்பில் நாலூர் மலையாளர்களும் அந்த ஊர்களிலேயுள்ள பெறதானி மார்களுமாக விசாரித்து நம்முடைய உடமை வரக் காட்டவும் வேணும் -அதுமல்லாவிட்டால் நம்முடைய உடமை பறித்த கள்ளர்களைக் கட்டி வரக் காட்டவும் வேணும். அது மல்லாவிட்டால் இரணிய மூர்த்திப் பிள்ளை மணி மண்டப சாலையிலே சென்று இந்த வர்த்தமானம் அறிவித்து, அவரும் அந்தப் பேச்சு கேட்டுக் கோபித்து, வரும் பிள்ளாய்; இரணிய மூர்த்திப் பிள்ளை இதுக்கு விசாரம் எப்படியென்று விசாரித்துக் கொண்டு நாமும் நம்முடைய செட்டி வெள்ளாளருக்கும் பல தடவையும் பல துறையும் போகவும் வரவும் வேணுமென்று கற்பித்து, பதினெட்டு இலட்சம் படையும் ஆனையும், குதிரையும் காலாளும் கூடி ஞாயிற்றுக் கிழமை நாள் மணலித் துறையிலே சென்று கூடாரமும் போட்டிருந்து, ஓலை விட்டால் அந்தப் படிக்கு நம்முடைய உடமைகள் வந்தால் நமக்கு அதே போதும். அதுமல்லாவிட்டால் ஞாயிற்றுக் கிழமை நாள் அந்த மணலித் துறையிலே சென்று நம்முடைய ஆடவரை அனுப்பு. அந்தப் படிக்கு நம்முடைய உடமைகள் வந்தால் நமக்கு அதுவே போதும். அதுமல்லாவிட்டால் உடமைகளைப் பறித்த வந்த கள்ளர்களைக் கட்டி வரக் காட்டவும் வேனும் அதுமல்லா விட்டால் மறுநாள் திங்கட் கிழமையினாலே ஊட்டு பாறையிலே சென்று கட்டிச் சோத்தை அவிழ்த்து, அசனம் பண்ணி மத்தியானம் திரும்பி, ஐயடிக்கு மேலே, சித்தூரு என்கிற ஊரிலே புகுந்து, கொள்ளை கொண்டு, தீக்குத்தி மட்டை பரப்பிப் போகிறது தப்பாது; எம்மாணை! உம்மாணை! சத்தியம் தானே! தப்பாது தலையரிந்து, முலையரிந்து, மூக்கரிந்து போவோம்!

சொக்கராணை! திருவுள்ளத்தாணை!

இது சத்தியம்தான்! குருவே துணை.

 

 

 

இக்கட்டுரைக்கான செய்திகள்,

ஓலைமுறி ஆகியவற்றுக்கு மறைந்த கு.அருணாசலக் கவுண்டர் எழுதி வைத்திருந்த ‘பாலக்காடு-சித்தூர் கொங்கன்படை-மாசித் திருவிழா-வரலாற்று அடிப்படையில்’ என்ற நீண்ட கட்டுரையே ஆதாரமாக அமைந்துள்ளது. அதில், திருவிழாவைப் பற்றியும் விரிவான செய்திகள் உள்ளன. அக்கட்டுரையைத் தந்துதவியவர்: கு.மகுடீஸ்வரன்.

 

– கால. சுப்ரமணியம்

 

One thought on “கொங்கன் படை – ஓலை முறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!