home டிரெண்டிங், நேர்காணல் சமூகத்திற்கு நீங்கள் சொல்லும் செய்தி?

சமூகத்திற்கு நீங்கள் சொல்லும் செய்தி?

நளினி ஜமீலாவுடன் ஒரு நேர்காணல்

– ஸமீரா

பாலியல் தொழிலாளர்களை ஒதுக்கி, பாவிகளாக முத்திரை குத்தி, வாழ்க்கைப் பாதையின் அழுக்குப் புறங்களில் தள்ளிய சமூகத்தின் கபட ஒழுக்க நெறிகளுக்கு எதிராக, சவாலுடன் ஒரு பாலியல் தொழிலாளி தமது சுயசரிதை மூலம் குரல் கொடுத்திருக்கிறார்.

கேரள சமூகத்திற்கு ஒரு கேள்விக்குறியாக வந்துள்ள ஒரு புத்தகம் இனம் புரியாத ஈர்ப்பினாலோ, அல்லது வாசிக்கும் பொழுது கிடைக்கக்கூடிய சுகம் கருதியோ, புத்தகச்சந்தையில் அதிரடி விற்பனையாய் வெற்றி பெற்றிருக்கிறது.

வருஷங்கள் அதிகமாகவில்லை. கேரள பாலியல் தொழிளாலர்கள் சங்கமாக ஒருங்கிணைந்து, பாலியல் துறை என்பது ஒரு தொழிலா? என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு இந்த அமைப்பு ஒரு காரணமாகியது. தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக இவர்கள் ஒருங்கிணைந்து தங்களது மனித உரிமைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்தச் செயல்பாடுகள் சமூகத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல விதங்களில் எழுந்தன. இச்சூழலில் ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை எழுதிய நளினி ஜமீலா கேரள சமூகத்தின் முன் தமது கருத்துக்களை முன் வைக்கிறார்.

 

இவ்வளவு அழகான நளினி ஜமீலாவை யாரும் காதலிக்கவில்லையா?

காதலா… (சிரித்துக் கொண்டே) இல்லை என்று சொல்ல மாட்டேன். நான் காதலிக்கவும் காதலிக்கப்படவும் ஆசைப்பட்டிருந்தேன் என்பது உண்மை. ஆனால் காதல் என்பது ஒரு கற்பனைதானே. அங்கேயும் ஆண்களின் உடல் இச்சைகளுக்குத்தானே முன்னுரிமை தரவேண்டியிருக்கிறது. காதல் விஷயத்தில் பெண்கள் காட்டும் நிஜம் ஆண்களிடம் இல்லை. அவர்களுக்கு எல்லாம் கொஞ்ச நேரம்தான். காதல் நம் மனதில் ஏற்படும் ஒரு அழகான உணர்ச்சி. அதுவும் உயிரைப்போல மனிதன் மரிக்கும் வரை ஏங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சி, அது ஒருவரிடம்தான் ஏற்படும் என்பது வெறும் கற்பனை மாத்திரமே.

 

இப்பொழுது திரும்பிப் பார்க்கையில் வாழ்க்கை திருப்தியளிக்கிறதா?

நிச்சயமாக, துவக்கத்தில் மிகவும் வருத்தப்பட்டேன் எத்தனையோ திறமைகளைக் கொண்ட நான், வாழ்க்கையின் ஏதோ உயரங்களைச் சென்றடைய வேண்டிய நான், இப்படியாகிப் போய்விட்டோமே… என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அப்படித் தோன்றவில்லை. இந்தத் தொழிலின் முக்கியத்துவமும், சமூகத்தில் இதன் அடிப்படைத் தேவையும் அறிந்தேன். பிறகு வருத்தப்பட்டதே இல்லை. இந்தத் தொழில் சமூகத்தில் இல்லாதிருக்கும் பட்சத்தில் ஒரு கெட்ட சமூகம்தான் உருவாகி இருக்கும்.

 

‘ஒரு நல்ல பெண்’ அல்லது ‘ஒரு குடும்பப் பெண்’ போன்ற படிமங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

திறந்த மனதுடன் அன்பைச் செலுத்துபவளும், பிறருக்கு உதவுபவளும், கணவனுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்பவளும்தான் ‘ஒரு குடும்பப்பெண்’ என்றால் அவள் ஏமாற்றப்பட்டிருக்கிறாள். ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் அவளை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது தெரிந்தோ தெரியாமலோ வாழ்ந்து கொண்டிருப்பவள்தான் ‘நல்லபெண்’ என்றால், அவளை ‘அடிமை’ என்றுதான் கூறுவேன். எதற்கெல்லாமோ அவள் அடிமை, அவள் தங்கள் விருப்பப் பட்டதை செய்வதற்கும், விருப்பப் பட்டவனோடு சேர்வதற்குமான சுதந்திரம் இருக்கும் பொழுது, அவனுக்காகவே உருவாக்கப்பட்ட சட்டங்களின் பொறியில் மாட்டிக்கொண்டு வாழும் பெண், ‘அடிமை’ அல்லாமல் வேறு யார்?

 

செக்ஸ் ஆபத்தானதா?

என்ன கேள்வி இது, அது ஆபத்தானது அல்ல, அது மிகமிகத் தேவையானது. ஐம்புலன்களின் தேவை மட்டுமல்ல செக்ஸ். அதையும் தாண்டிப் பொருள் கூறமுடியாத மனதின் தேவை அது. சரியாகச் சொன்னால் ஆண் பெண் இருத்தலின், அவர்களின் இயல்பு வளர்ச்சியின் அடித்தளமே செக்ஸ்தான்.

 

காலகாலமாக மனிதன் செக்ஸ் என்பதை ரகசியமாக மூடிவைத்திருந்தான், இதை பகிரங்கப்படுத்துவது, சமூகத்தின் ஒழுக்க நெறிகளுக்கு எதிரானது அல்லவா?

நீங்கள் சொல்வது, நான் செய்யும் வேலையை ஒரு அங்கீகரிக்கக்கூடிய தொழிலாகக் கருதுவது பற்றியா? அப்படி என்றால் இந்தத் தொழில், நீங்கள் சொல்லும் ஒழுக்கம், நெறிமுறை விதிகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஆணாதிக்கத்தின் ஒரு தெளிவான பக்கம்தான் இதை மூடிவைக்கப்பட்டதன் பின்னணியில் உள்ளது. நீங்கள் சொன்ன சட்டங்களை உருவாக்கிய ஆண்கள்தானே சிவப்புத் தெருக்களையும் உருவாக்கினார்கள்.

 

அப்படி என்றால் இந்தச் சட்டங்களும் போலீசும் ஏன் இதற்கு எதிராக இருக்கிறது?

(கோபத்துடன்) இது மிகவும் அநியாயமானது. என்னைப் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதற்காகக் கைது செய்த எத்தனையோ போலீஸ்காரர்களும் அவர்களது அதிகாரிகளும் எனது வாடிக்கையாளராக இருந்திருக்கிறார்கள் என்பதை அந்த நூலிலேயே வெளிப்படுத்தியிருக்கிறேன். சட்டப் பாதுகாவலர்களும் ஆண்கள்தானே? இதற்குப் பின்னால் கொலை, கொள்ளை, கஞ்சா வழக்கு, இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதன் பேரிலேயே இத்தொழிலையும் சமூக விரோதத் தொழிலாக என்னைக் கைது செய்கிறீர்கள், நான் கேட்கிறேன்… மற்ற தொழில் செய்பவர்களிடையே இதுபோன்ற சமூக விரோதிகள் இல்லையா? பாவப்பட்டவர்களின் கிட்னியை எடுத்து விற்கும் டாக்டர்கள் இல்லையா? நோயாளி அறியாமல் ரத்தத்தை உறிஞ்சி விற்கும் மருத்துவமனைகள் இல்லையா? காக்கி உடுப்பில் தவறு செய்பவர் இல்லையா? கைக்கூலி வாங்கும் அரசு அதிகாரிகள் இல்லையா? ஒருவர் இப்படி இருக்கிறார் என்பதற்காகவே எல்லா மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் போன்றோரைத் தவறாகப் பார்ப்பதுண்டா? தண்டனை கொடுப்பதுண்டா? மயக்க மருந்து உபயோகிப்பவர்கள் பாலியல் தெரிழலார்களை விடவும் கல்லூரி மணவர்கள்தானே? அதனால் எல்லா மாணவ மாணவியரையும் தவறாகக் கருதுவதுண்டா?

 

பூரண சுதந்திரம் எங்களுக்கு உண்டு என்று நீங்கள் சொல்கிறீர்களே… இதை நீங்கள் செக்ஸ் அனுபவிப்பது எனும் அளவுகோலில் வைத்துப் பேசுகிறீர்களா?

மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்களே… மனிதனின் முக்கால்வாசிப் பிரச்னைகளுக்கும் காரணம் பாலியல் அதிருப்திதான் என்று. நீங்கள் முதலில் சொன்ன ஒழுக்க நெறி விதிகளுக்குள்ளே மாட்டிக்கொண்டு மூச்சுத்திணறி பித்த நிலையில் வக்கிரங்களாய் மாறிய ஆண்களும் பெண்களும்தான் சமூகத்தில் அதிகம். இப்படிப் பார்க்கும் போது நாங்கள் பரிபூரண சுதந்திரத்தைக் கொண்டவர்கள். மற்றவர்களைப்போல மன உளைச்சல்களோ, மன ரீதியான வக்கிரங்களோ எங்களிடம் சிறிது கூட இல்லை.

 

வாத்ஸ்யாயணன் காமசூத்திரத்தில் பெண்களை வகைப்படுத்தியிருக்கிறான், நீங்கள் இதைப்போல ஆண்களை வகைப்படுத்திச் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக… பலவித்தில் ஆண்கள் இருக்கிறார்கள், சிலருக்கு உடல் உறவு நிர்பந்தமானது. வேறு சிலருக்கு அதற்கும் முன்பான உடல் விளையாட்டுக்கள் பிடிக்கும். வெறுமனே என்னை நிர்வாணப்படுத்தித் தொடாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு. இவர்களுடைய உடல் அமைப்பும் நடவடிக்கைகளும் விருப்பு வெறுப்புகளும் வித்தியாசப்பட்டிருக்கின்றன. அதிகமாக என்ன சொல்ல? சுகத்தை அனுபவிக்கிற விதத்திலும் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். எனக்கு ஒரு ஆளைப்பார்த்தாலே தெரியும், அவரது தேவை என்னவென்று.

 

ஆண்கள் தங்களது தேவைக்குத்தான் உங்களை நாடுவார்களா? அல்லது அவர்களை நீங்கள் வசீகரித்துக்கொண்டு வர முடியுமா?

மிக எளிதாக வசீகரிக்க முடியும். என்னைக் கேவலப்படுத்திய எத்தனையோ ஆண்களை நான் வசீகரித்துள்ளேன். ஆனால் நம் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கவேண்டும். ஆண்களின் பலவீனத்தை அறிவதென்பது மிகமிக எளிது. எத்தனை பெரிய ரவுடியாக இருந்தாலும் செக்ஸ் என்று வந்தால் ஒன்றுமில்லை.

 

இத்தனை வருட வாழ்வியல் அனுபத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு செக்ஸ் திருப்தி கிடைத்துள்ளதா?

ரொம்பக் குறைவு. சில ஆண்கள் நான் திருப்தியடையும்வரை என்னை சந்தோசப் படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் பலரும் என்னை நிஜமாகவே காதலித்தவர்கள். அவர்களின் காதலிலிருந்து வெளியே வர நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். செக்ஸ் வாழ்க்கையின் ஒரு மாந்திரீகப் பக்கத்தைக் கொண்டது. அதற்கு ஒருமுறையாவது கீழ்ப்படியாத மனிதன் அவதாரமாகத்தான் இருக்க முடியும்.

 

சமீப காலத்தில் சில நடிகைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்தனர். ஆனால் ஒரு நடிகரையும் கைது செய்ததில்லை. இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

எந்தத் தொழில் செய்யும் பெண்ணாக இருந்தாலும் தமது தேவைக்காக உடலை விலை பேசிவிட்டால் அது பாலியல் தொழில்தான். அது காசுக்காகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. மற்ற பொருட்களுக்கோ, உயர் பதவிகளுக்கோ, சமூக நிலைகளுக்கோ கூட இருக்கலாம். இது போன்ற நடவடிக்கையுடைய பல நடிக நடிகையரை எனக்குத் தெரியும். ஆனால் காவல் துறை பெண்களை மட்டும் கைது செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்புறம் நடிகர்களைப் பற்றி, அவர்களும் ஆண்கள் தானே… அவர்களது நீதி தனி நீதி…

 

ஒரு சராசரி மலையாளப் பெண்ணைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்ன சொல்ல…? பாவம் பெண்கள், நான் முதலில் கூறியது போல ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களுக்குள்ளே கிடந்து மூச்சுத் திணறி வாழும் அடிமைகள். அவ்வளவுதான் மலையாளப் பெண்கள். அப்படியில்லாத மிகக்குறைவான பெண்களும் உண்டு. சமூகத்தை நோக்கி சுட்டுவிரல் நீட்டுகின்ற போராட்டக் குணம் கொண்ட பெண்களும் உண்டு.

 

நம்முடைய சமூகத்தில் செக்ஸ் ஆண்களுக்கு மட்டுமாகத்தான் உள்ளது…

கேள்வி சரியல்ல, அது எப்படி ஆகும்? பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை உயிரிகளிலும் ஆணும் பெண்ணும் உண்டு. இருவருக்கும் எல்லா உணர்ச்சிகளும் சரிவிகித்தில் உள்ளன. அப்படி இருக்க மனித வாழ்வில் மட்டும் செக்ஸ் எப்படி ஆணுக்கு மட்டுமே சொந்தமாகும். இதுதான் இங்கு கேலிக்கூத்து.

 

சௌந்தர்யம் பாலியல் தொழிலாளர்களுக்குத் தேவையான ஒன்றா?

ஒருக்காலும் இல்லை, நீங்கள் சொல்வது போல அழகுதான் முக்கியமென்பது இல்லை. பாலியல் திருப்திக்கும் அழகுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

 

உங்களுக்கு மிகவும் பிரியமான ஆண் மற்றும் பெண் யார்?

மற்ற துறைகளில் இருக்கும் பெண்களைப் பற்றிச் சொல்ல எனக்கு விருப்பமில்லை. எங்களை நேசிக்கின்ற டாக்டர் ஜெயஸ்ரீ தான் எனக்குப் பிரியமான பெண். அவர் எங்களை ஒருபொழுதும் சமூக விரோதிகளாகவோ, ஒழுக்க நெறிகெட்டவர்களகவோ பார்த்ததில்லை. எங்களுடன் உண்டு உறங்கிப் பழகிய, மனிதம் மட்டுமே நிரம்பிய அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆண்களில் பால்சன் ராபேல் எங்களைப் புரிந்து கொண்டு எங்களுக்காகப் போராடும் இனிய நண்பர்.

 

சமூகத்திலிருந்து ஆண்களாலும் பெண்களாலும் ஒதுக்கப்பட்டு மறுக்கப்பட்ட தொழில் செய்யும் நளினி ஜமீலாவாகிய நீங்கள், சமூகத்திற்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்?

பாடல், நடனம், ஓவியம், சிற்பம் செய்தல் இதுபோன்ற கலைதான் ரதியும்(பாலியல் கலை). இதையும் சமூகம் கலையாக அங்கீகரிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் ஆகமுடியாதல்லவா? பிறரை அண்டி வாழ்வதென்பது, மரணத்தைவிடக் கொடூரமானது. அனுபவங்களின் வெளிச்சத்தில் மட்டுமே உங்களது கருத்துக்களைக் கூறுங்கள்.

 

இங்கு நளினி ஜமீலாவுடனான நேர்காணல் முடிகிறது. அவர் கூறுவது போல ரதியை மனிதனின் அடிப்படைத் தேவையாகக் கருதி வெளிப்படுத்தலாமா? நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. முக்கியமாக மாறிவரும் இன்றைய சமூக ஒழுக்க நெறிமுறைச் சூழலில்…

 

 

ஸமீரா கவிஞர் மற்றும் சுதந்திரப் பத்திரிகையாளர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!