home நேர்காணல், புதிய அலை சமூகத்தில் கற்பு என்பதற்கான மதிப்பீடு என்ன?

சமூகத்தில் கற்பு என்பதற்கான மதிப்பீடு என்ன?

கிம் கி டுக் உடன் ஒரு நேர்காணல்

 

கொரிய பத்திரிகை ‘Cine21′  இதழுக்காகப் பின்வரும் இந்த நேர்காணலை யுங் சியோங் II என்ற கொரிய சினிமா விமர்சகர் கிம் கி டுக்குடன் மேற்கொண்டார். ஜனவரி 30,  2002 அன்று ஒரு மதியநேரத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது.

 

இனிமேல் பேட்டிகளே தரப்போவதில்லையென்று அறிவித்த கிம்மைச் சந்தித்தேன். அவரது புதிய படமான ‘Bad Guy'(கொரியா 2001) வெளியான சிறிது நாளில், இனி பேட்டிகள் தருவதில்லை என அறிவித்தார் கிம். நிறைய விமர்சகர்கள் அவரைத் தொடர்ந்து விமர்சித்து வந்ததால் அவர் மௌனம் காக்க முடிவெடுத்தார். எனினும், நான் அவரை நேர்காணல் செய்ய விரும்பினேன். அவர் என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். அவரது இணையதளத்தை நான் பார்த்தேன். அதில் அவர் படங்கள் பற்றிய எனது விமர்சனங்கள் இருந்தது. மேலும் 21 நேர்காணல்களும், அவரது புதிய படமான ‘Bad Guy’ பற்றி 37 மதிப்புரைகளும் இருந்தன. அவரது விசிறிகள் மற்றும் எதிர்தரப்பினரால் எழுதப்பட்ட 184 கட்டுரைகளை நான் பிரதியெடுத்து வரிசைக்கிரமமின்றி அவற்றைப் படித்தேன்.

அவரது விசிறிகள், எதிரிகள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் அவரைப்பற்றி விவரிக்க ஒரே மாதிரியான உருவகங்களைப் பயன்படுத்துவது போலுள்ளது. மிருகம் என அவர் அழைக்கப்பட்டார்; காட்சிப்பொருளான விலங்கைப் போல அவர் நடத்தப்பட்டார்; அவரை ‘சைக்கோபாத்’ என அழைத்தனர். அவரைப் பற்றிக் கூறுவதற்கு மருத்துவ அறிவியல் வார்த்தைகளை அனைவரும் பயன்படுத்தினர். அவரது படைப்புக்களை விளக்க ஒருவகையான செக்ஸ் – அதிகாரம் தொடர்பான சொல்லாடல் கூட பயன்படுத்தப்பட்டது. அவரது படைப்பின் மீது பிரியமானவர்கள் கூட, அவரை ஒரு கலைஞன் எனக் கருதிய அதே நேரத்தில், அவரைத் தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றனர்.

‘சினி21’ன் முந்தைய கட்டுரையில் யுங் கிவா-ரி  என்ற இலக்கிய விமர்சகர் ‘Bad Guy’ படம் பற்றி ஒருவிதமான அமைதி நிலவுவதாகக் கூறியிருந்தார். எந்தவிதமான முறையான கல்வியறிவுமின்றி அவர் ஒருவிதமான புனிதத்தன்மை மற்றும் வக்கிரத்தன்மையுடன், உலகின் எல்லா சாத்தியமான கோட்பாடுகள் மற்றும் உரையாடல்களைப் பற்றி உள்ளுணர்வின் அடிப்படையில் தொட்டுச் சென்றிருக்கிறார். வழமையான சினிமா கோட்பாடுகளை அவர் பின்பற்றவில்லை. தனக்கான கோட்பாடுகளை அவர் உருவாக்கினார். இதுதான், கிம் கி டுக் என்பவர் யார் என்பதைப் பற்றியும், அவரது படங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் முக்கியமானதாக அமைந்தது. நியூவேவ் கொரியன் சினிமா உருவாக்குபவர்களின் இக்காலகட்டத்திற்கு கிம் தரும் மதிப்பு, அவர் தனது பார்வையாளர்களுக்கு அளிக்கும் நெருக்கடியிலிருந்து துவங்குகிறது. ஸேட் குறித்து ஃபூக்கோ கூறினார்: “பீஸ்ட்(Beast) பற்றி அறிந்து கொள்ள நாம் முயலவில்லை; வேறுபட்ட தரமதிப்புகள் உள்ள அதேபோன்ற மனிதர்தான் அவர் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இது சமூக எதிர்பார்ப்புகளின் அதிகாரம் மற்றும் தாக்கத்திற்கு எதிராக நம்மை இணைக்கும். நாம் மாற்றவேண்டியது சமூகத்தின் ஒவ்வாமைகள்தானேயன்றி, அதில் பிறந்துள்ள கலைப்படைப்பை அல்ல. நாம் இலட்சியத்தை மாற்றமுடியாது.” நான் கிம்மை பாதுகாக்கவோ புரிந்துகொள்ளவோ முயற்சிக்கவில்லை. அவரது பார்வையினூடாக பார்க்கும்போது, எது நம்மை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன். எனவே, இந்த நேர்காணல் ஒரு துவக்கம் மட்டும்தான்.

நேர்காணல் : யுங் சியோங் II

 

சமீபகாலம் வரையிலும் உங்கள் படங்கள் வெகுஜன மக்களிடையே புகழ் பெறவில்லை. எனினும், ‘Bad Guy’ அதிலிருந்து வேறுபட்டுள்ளது. இறுதியில் புகழ் அடைந்துவிட்டீர்கள் என்பதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

நான் என்ன உணர்கிறேனா? நான் வித்தியாசமாக எதையும் உணரவில்லை. எனது வேலைக்கான சந்தை கூடியுள்ளது. எனினும், எனது பார்வையாளர்களில் மூன்றில் ஒருபகுதியினரே எனது படத்தை விரும்புவார்கள்; மீதியுள்ள இரண்டு பங்கினர் பார்க்க விரும்பமாட்டார்கள். சர்ச்சைக்குரிய ‘Bad Guy’ படத்தின் மையக்கருவானது அவர்களை எனது படங்களிலிருந்து தள்ளிவைக்கும்; கிட்டத்தட்ட நிரந்தரமாக. எனவே, எனக்கு ஒன்றும் வேறுபாடு தெரியவில்லை.

 

‘Bad Guy’ படத்தில் வரும் முக்கிய நிலப்பகுதியைப் போன்றுள்ள யாங்சன் மாவட்டத்திலுள்ள இந்த சிவப்பு விளக்குப் பகுதியில் நமது இந்த நேர்காணல் நடக்கட்டும் என நான் கூறினேன். நாம் இப்போது இருக்கிற சிவப்புவிளக்குப் பகுதியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மற்ற இடங்களில் வேலை செய்து வாழ்வது போலத்தான் சிவப்புவிளக்குப் பகுதியிலும் மக்கள் வேலை பார்க்கிறார்கள். இங்கே வாழ்பவர்கள் இரவையும் பகலையும் சமமாகப் பாவிக்கிறார்கள் என்பதுதான் ஒரு பெரிய வேறுபாடு. அவர்கள் உழைப்பே அவர்கள் வாழ்க்கை. தாங்கள் வசிக்கும் கொடூர உலகிலிருந்து இன்பம் பெறுவதற்காக மக்கள் இதுபோன்ற இடங்களுக்கு வருகிறார்கள். எனது படத்திற்கு இந்த உலகத்திலிருந்து கதாபாத்திரங்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கின்றேன். ஏனெனில், இங்கே வேலை செய்கிற,  வாழ்கிற மக்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கின்றனர். கதைக்கான கலவைப் பொருட்களாக இவர்கள் இருக்கின்றனர்.

 

விபச்சாரத்தை நீங்கள் வேலை என்கிறீர்கள். எந்த விதத்தில் அதை உழைப்பின் ஒரு வடிவம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

சில வருடங்கள் நான் பல தொழிற்சாலைகளில் வேலை பார்த்தேன். அவை சிறந்த வேலை அல்ல என்றாலும், நான் செய்யக்கூடிய வேலைகள்தான் அவை என நான் கருதினேன். எனக்கு அதில் வெட்கம் இருக்கவில்லை. ஏனெனில், தொழிற்சாலை வேலைதான் எனது எதிர்காலம் என நான் நினைத்தேன். அந்த இறந்தகாலத்தை நான் எண்ணிப் பார்க்கிறபோது, கடினமான வாழ்வு ஒன்றை தனது வாழ்விற்கான ஒரே வழி என ஒருவன் ஏற்றுக்கொண்டால், பிறகு இந்த யதார்த்தம் வாழ்க்கையாகிவிடுகிறது என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான். Seongchul என்ற புகழ் பெற்ற கொரிய மாங்க் ஒருமுறை சொன்னார், “மலைகள் மலைகளே”. மலையை ஒருவரால் மாற்றமுடியாது. ஏனெனில், அது அதுவாகவே இருக்கிறது. வாழ்க்கை வாழ்க்கையே. ஒருவரின் சுயமுயற்சிகள் பற்றிய அக்கறையின்றி வாழ்க்கை நிகழ்கின்றது. எனவே,  ஒருவரின் உழைப்பு அவன் / அவளது வாழ்க்கையாகிறது, பிறர் அதனை மதிக்காவிட்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.

 

உங்கள் இணையதளத்திற்கு வந்துள்ள பல மதிப்புரைகளையும்,  நேர்காணல்களையும் நான் படித்திருக்கிறேன். உங்களது பல ரசிகர்களும்,  விமர்சகர்களும் ‘Bad Guy’ போன்ற சர்ச்சைக்குரிய படம் ஒன்றை நீங்கள் எடுக்கவேண்டும் என எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளனர். சிவப்புவிளக்குப் பகுதி என்ற நிலப்பகுதி ஆச்சரியமானதல்ல. ஏனெனில்,  உங்களது அத்தனை படங்களும் கொரிய தேசத்தின் இருண்ட பகுதிகளைப் பற்றி பேசுகின்றன. கடந்த காலங்களில் பிற கொரிய படங்களும் இதேபோன்ற விஷயங்களைப் பேசின. 1975ல் KIM Ho-Shun, ‘Young-Ja’s Day ‘ எடுத்தார்; 1981ல் YI Jang-Ho, ‘Children of Darkness ‘ எடுத்தார்; 1997ல்  IM Kwon-Taek , ‘Window ‘ எடுத்தார். இந்தப் படங்களனைத்தும் சிவப்பு விளக்குப் பகுதிகளைக் காட்டியவகையில் சர்ச்சைக்குரியவை. கொரிய கலாச்சாரத்தில் கற்பு அதிமுக்கியமான அம்சம். எனவே,  சிவப்புவிளக்குப் பகுதியில் வேலை பார்க்கும் பெண்கள் மிக மோசமான வாழ்க்கை வாழ்வதாக கருதப்பட்டனர். கொரிய சமூகத்தில்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது முறையான இடம் அவர்களுக்கு இல்லை.

நீங்கள் சொல்வது சரிதான். இப்படிப்பட்ட இடத்தை மக்கள் ஒரு குப்பைமேடாகத்தான் பார்க்கின்றனர்.

 

தங்கள் காலத்தை குறியீடாகக் காட்டுவதற்கு கொரிய படங்கள் சிவப்புவிளக்குப் பகுதியை பயன்படுத்தியிருக்கின்றன. நீங்கள் அந்தப் படத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டபோது, சமூகம் பற்றிய உங்களது சொந்த அபிப்ராயம் அதில் இருக்கும் என எனக்குத் தெரியும்.

எனது கதையை இயல்பான ஒன்றாக மக்கள் பார்ப்பார்கள் என நான் நம்புகிறேன். கதையில் பின்னணி மற்றும் கதாபாத்திரங்கள் போன்ற அனைத்து அம்சங்களும் நிஜமான ஒரு இடத்தில் வேலை பார்த்து வாழும் நிஜமான மக்களை அடிப்படையாகக் கொண்டவை. நான் மிக அதிகமாகச் செய்யக்கூடியது இதுதான். நமது கொரிய சமூகத்தின் பிளவுபட்ட பிம்பங்களை இப்படம் காட்டுகிறது; சுய விருப்பு வெறுப்புகளால் நிர்வகிக்கப்படும் ஒரு சமூக அமைப்பை அது விமர்சிக்கிறது. விதிமுறைகள் மற்றும் மாற்று சிந்தனைக்கான வழிகள் என்பனவற்றிற்கு இடையேயான எல்லைகளை நான் மங்கலாக்க விரும்புகிறேன். கொரிய பாணியில் மட்டுமே பார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பல விஷயங்கள் உண்டு என்பதை நான் கண்டுகொண்டுள்ளேன். எடுத்துக்காட்டாக,  கொரியர்கள் பலரும் பிறரை அவர்களது கல்வித்தகுதி மற்றும் சமூக பின்னணியைக் கொண்டே எடைபோடுகின்றனர். ஒரே நோக்கில் மக்கள் என்னைப் பார்க்கின்றனர். படைப்பாற்றலுள்ள சினிமாக்காரன் என அவர்கள் என்னைப் பற்றி பேசுவதில்லை. முறையான கல்வியறிவு இல்லாத,  கீழ்மட்ட சமூக பொருளாதார பின்னணியிலிருந்து வந்தவன் என்றே என்னைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். எனினும்,  என்னை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களும் ரசிகர்களும், இப்படிப்பட்ட பிரித்துப் பார்க்கும் சிந்தனை இருப்பதற்கு,  அவர்கள் சமூக அமைப்பின் மையத்தில் இருப்பதே காரணம் என்பதைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். பிரித்துப் பார்க்கும் சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் அவர்கள் கவனிக்கவில்லை. ‘Bad Guy’ படம் கீழ்மட்ட சமூக பொருளாதார பின்னணியிலிருந்து வருபவர்களும் பிறரைப்போல மனிதர்கள்தான் என்பதைக் காட்டுகிறது. குப்பைமேட்டில் வசிக்கும் வீணாய்ப்போனவர்கள் அல்ல அவர்கள்.

 

‘சினி21’ இணையதளம் மூலம்,  இனிமேல் பேட்டிகள் தரப்போவதில்லயென்று நீங்கள் அறிவித்தீர்கள். உங்களை வைத்தே உங்கள் வார்த்தைகளை உடைக்க வைத்ததற்காக நான் வருந்துகிறேன்.

இதை நேர்காணல் என நான் கருதவில்லை. இது நட்புரீதியிலான ஒரு சந்திப்பு.

 

பல மதிப்புரைகள் உங்களைக் காயப்படுத்தியதால் நீங்கள் நேர்காணல்களைப் புறக்கணித்தீர்கள். இருந்தபோதும், பல விமர்சகர்கள் உங்களது புதிய படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘சினி21’ன் கடந்த இதழ் (338) இலக்கிய விமர்சகர் யுங் கிவா-ரி  மற்றும் பேக் சாங்-பின் என்ற உளவியல் நிபுணர் ஆகியோரின் நேர்காணல்களைக் கொண்டிருந்தது. யுங் உங்களது கதைசொல்லும் பாணி பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்; முழுக்கவும் அது ஒரு புதிய வடிவம் என அவர் நினைக்கிறார். உங்கள் படங்களிலுள்ள கதை சொல்லும் அமைப்புகள் பற்றி ஆழமான விவாதங்கள் வரவில்லையென அவர் நம்புகிறார். உங்களது ‘Bad Guy’ பற்றி ஒரு உளவியல் ரீதியிலான வாசிப்பு தேவை என பேக் நினைக்கிறார். இந்தக் கருத்துக்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதனால்தான் நேர்காணல்கள் தருவதில்லையென நான் புறக்கணித்தேன். அவர்களின் மதிப்புரைகள் அவையளவில் நன்றாக உள்ளன. நான் எல்லாக் கருத்துகளையும் மதிக்கிறேன். எனினும்,  அவைகளில் ஒரு கோழைத்தனத்தை நான் பார்க்கிறேன். இதை நான் கூறும்போது,  நான் கூறுவது தவறாக வந்துவிடக்கூடாது. சமீபத்தில் நேர்காணல் செய்தவர்களில் பலர் எனது வார்த்தைகளை வேறுமாதிரியாக எழுதி எனக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டனர். எடுத்துக்காட்டாக,  ஷிம் யங்-சியோப் என்ற சினிமா விமர்சகர் எனது அம்மாவிற்கு என்னைப் பிடிக்காது என்று எழுதிவிட்டார். என் குடும்பத்தைப் பற்றி தவறான கருத்துக்களை எழுதுவது என்னை வருந்த வைக்கிறது. இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மன்னிப்பே கிடையாது. என் அம்மா படிப்பறிவற்றவர் என நான் முன்பு கூறியிருந்தாலும்,  அவர் ஒரு அருமையான அம்மாவாக இருந்தார். ஒரு சினிமாக்காரன் என்ற வகையில்,  எனது வேலையைக் குறித்து இத்தகைய தனிநபர் தாக்குதல்கள் செய்யப்போவது எதுவுமில்லை.

 

உங்கள் மதிப்புரைகளைப் பார்க்கும்போது ஒரு ஆச்சரியமான விஷயத்தை நான் பார்த்தேன். தங்களை அறிவுஜீவிகள் எனக் கருதிக்கொண்டு சினிமா விமர்சகர்கள் எனத் தங்களை கூறிக்கொள்பவர்கள், ‘Bad Guy’படம் கொரிய சமூகத்திற்கான படிமம் அல்லது உருவகம் எனப் பார்க்கவில்லை. உங்கள் படத்தை ஆழமாகக் கவனிக்காமல் கடுமையாக விமர்சிப்பது விசித்திரமானதாக இருக்கிறது. அடோர்னோ கூறியது நினைவிற்கு வருகிறது: “கலை எப்போதும் மறைமுகமாக இருப்பதால், அதைப் பற்றிய விமர்சனமும் எப்போதும் மறைமுகமாக இருக்கவேண்டும்”. உங்கள் விமர்சகர்கள் இவ்வாறு அணுகுவதற்கு என்ன காரணம்?

எனது படைப்பின் கதையாடல்கள் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என மக்கள் பார்க்க முனைகின்றனர். இது நல்லதுதான். ஒரு படத்தின் பிரதியை அது உண்மைக்கதை என்றும், நிஜமான கதாபாத்திரங்களைக் கொண்டதென்றும் கருதிப் பார்ப்பது சரியானதுதான். ‘Bad Guy’யிலுள்ள யதார்த்தம் படத்திற்கு துணையாக இருக்கிறது.

 

பார்வையாளர்களிடம் உங்கள் படம் ஆழமான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. வலுவான எதிர்வினைகளை அவர்களிடமிருந்து நீங்கள் தூண்டுகிறீர்கள்.

அது உண்மை. எனக்கு முக்கியமெனப்படுகிற உருவகங்களை விளக்குவதற்கு சினிமாவை நான் ஒரு ஊடகமாகப் பயன்படுத்துகிறேன். நான் காட்டுகிற கடுமையான யதார்த்தங்கள் காரணமாக பலர் எனது உருவகங்களைப் பார்க்க மாட்டார்கள். ஒரு இயக்குநர் முடிந்தளவு வார்த்தைகளைப் பயன்படுத்தாது இருக்கவேண்டும் என்றும் படம்தான் பேசவேண்டும் என்றும் நான் ஒருமுறை படித்திருக்கிறேன். ஒரு இயக்குநரின் வாழ்க்கைமுறையும் சிந்தனைகளும் பார்வையாளர்களிடமிருந்து மறைக்கப்படவேண்டும். தத்துவவியலாளர் மற்றும் கலைஞன் ஆகியோரின் சரியான செயல்பாடு இது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும்,  நான் ஒரு கலைஞன் என்று சொல்லிக் கொள்ளவில்லை.

 

நீங்கள் ஒரு கலைஞன். (சிரிக்கிறார்)

ஒரு கலைஞன் சிந்தனைகளை வெளிப்படையாக கூறக்கூடாது. அதே சமயம், எனது படங்களிலுள்ள உருவகங்களை மக்களால் காணமுடிந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

 

‘Bad Guy’ படத்தை விளக்குவதற்கு ஃபேண்டஸி என்ற வார்த்தையை யுங் கிவா-ரி என்பவர் பயன்படுத்தியிருப்பது சுவாரஸ்யமானது. படத்தின் பெரும்பகுதியும் ஹான்-கியின் ஃபேண்டஸி என அவர் பார்க்கிறார். எனினும், மற்ற மதிப்புரைகளுக்கு மாறாக, அவளை நடமாடும் செக்ஸ் டிரக்கில் அழைத்துச் செல்லும் அந்தக் கடைசிக் காட்சி யதார்த்தமானது என்கிறார். இரண்டு அடுக்கு ‘மேஜிக்கல் ரியலிசம்’ இந்தப் படத்தில் இருப்பதாக நான் கருதியபோதும் இந்த ஆய்வு எனக்குப் பிடித்திருக்கிறது. முதலில்,  ஒரு பல்கலைக்கழக மாணவியை பாலியலாளியாக்குவது பற்றிய ஃபேண்டஸி ஹான்-கிக்கு இருக்கிறது. இரண்டாவதாக,  படத்தின் நடுவில்,  இறக்கும் தருவாயில் ஹான்-கி ஃபேண்டஸைஸ் செய்கிறான். பாலியலாளியான பல்கலைக்கழக மாணவியைக் காதலித்து அவளுடன் இனிமையாக வாழ்வதாக ஹான்-கியின் ஃபேண்டஸி இருக்கிறது. மேலும் சில படங்களை நீங்கள் செய்தபிறகு,  மேஜிக்கல் ரியலிசத்தை நீங்கள் பயன்படுத்துவது பற்றி நாம் பேசுவோம். தினசரி வாழ்வின் யதார்த்தநிலை பற்றி உங்களுக்கு உண்மையில் ஆர்வமில்லை அல்லவா? (சிரிக்கிறார்)

அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

 

‘ஃபேண்டஸி’ பற்றிய உங்கள் கருத்தென்ன?

நான் ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ‘இது ஒரு கனவா?’ என நான் என்னையே கேட்டுக்கொள்வதுண்டு. நான் பௌதீகமாக,  ஸ்தூலமாக ஒரு நபராக இருக்கையில், எனது வாழ்க்கை ஒரு கனவாக இருக்கவேண்டுமென விரும்புகிறேன். ஒரு பூடகமான நபராக நான் இருக்க விரும்புகிறேன். பௌதீகரீதியிலான உலகில் வாழ்வது சிரமமானதாகும்; இந்த சிரமங்கள் பணப்பற்றாக்குறையினாலோ அல்லது மரியாதைக்குறைவினாலோ ஏற்பட்டவையல்ல என்றபோதும். எனது குழந்தைப் பருவம் மற்றும் பதின்பருவ வயதுகளின் ஆரம்பத்தில் ஒரு கிறிஸ்துவ மிஷன் பள்ளியில் நான் படித்தேன். மீட்பின் உறுதிமொழிகளாலும் நம்பிக்கைகளாலும் நான் மூளைச்சலவை செய்யப்பட்டேன் என நினைக்கிறேன். இப்படிப்பட்ட கண்டிப்பான கிறிஸ்துவ மன அமைப்பிலிருந்து தப்பிவிட நான் என்னால் முடிந்தளவு முயன்றேன்; இறுதியில் அதைச் செய்தேன். ஆனால்,  அதிலிருந்து தப்பியபிறகு, கிறிஸ்துவ மதிப்பீடுகள் முக்கியமானவை என்பதை அறிந்துகொண்டேன். அவை எனக்கு நெருக்கமாக இருந்தபோது அவற்றைப் பின்பற்றுவது எனக்குக்  கடினமானதாக இருந்தது. மீண்டும் மீண்டும் நிகழும் கஷ்டங்கள் நிரம்பியதாக ஒருவனின் வாழ்வு இருக்கும்போது, வாழ்க்கையை தாங்கிக்கொள்வதற்கு, ஃபேண்டஸி உலகில் வாழ்வதென்பது உதவுகிறது.

 

மீண்டும் ‘Bad Guy’ படம் பற்றி பேசுவோம். கதையாடலின் லாஜிக் என்பது ‘ஷாட்ஸ்’களின் லாஜிக்கிலிருந்து மாறுபாடானது. எடுத்துக்காட்டாக, மாணவர்களால் நிரம்பிய உயிர்த்துடிப்புள்ள சியோல் பகுதியான டேகாக்-ரோ என்ற பகுதிக்கு ஹான் -கி மேற்கொள்ளும் விஜயம் கதையை முன்னகர்த்துகிறது. ஆனால், யதார்த்தமாகப் பார்த்தால்,  ஹான்-கி போன்ற ஒரு ஆள் அங்கு செல்ல எந்தக் காரணமும் இல்லை. தவறான இடத்திற்குச் சென்றுவிட்டான் அவன். அவனுக்கும் அந்த இடத்திற்கும் அங்கிருக்கும் பிறருக்கும் எந்த பொருத்தமும் இல்லை. இந்த துவக்கக் காட்சி ஒரு முதலை பூந்தோட்டமொன்றில் நுழைவதைப்போல இருந்தது.

அதனாலென்ன? ஏன் அவன் அங்கு போகக்கூடாது?

 

ஹான் -கிக்கு மாணவர் பகுதி ஒத்துவராத இடம்; அது பார்வையாளர்களுக்குத் தெரியும். அவன் தனியாக இருக்கிறான். அவனுக்குப் பேசுவதற்கு ஆளில்லை. ஷியோன் -ஹ்வா என்ற பல்கலைக்கழக மாணவியை, அவளை அவன் அறிவதற்கு முன்பாகவே, பார்ப்பதற்குச் சென்றதுபோல ஹான் –கி, டேஹாக் -ரோவிற்குச் சென்றது இருந்தது.

ஹான் -கி இந்த இடத்தில் இருப்பதுபோல வந்திருப்பது பொருத்தமற்றதாக இருக்கலாம். இருந்தபோதிலும்,  மனிதர்களுக்கிடயேயான வித்தியாசமான உறவுகள் மற்றும் இடம்பெயர்தல் தொடர்பான உணர்வுகளும் படத்தின் முக்கியமான நோக்கங்களாகும். கொரிய சமூகத்தில் மக்கள் எவ்வாறு கலந்துரையாடுகிறார்கள் என்று நான் பார்ப்பதின் உருவகம்தான் அது. ஹான் -கி அங்கேயிருக்கக் கூடாது என்பதற்கு எந்தவிதமான காரணத்தையும் நான் காணவில்லை.

 

ஷியோன் -ஹ்வாவுடன் முதல் பார்வையிலேயே ஹான் -கி காதல் கொள்வதுபோலத் தோன்றவில்லை. ஏனெனில்,  அவன் அவளருகில் அமரும்போது, அவள் ஒரு இழிவான பார்வையை தந்ததால் இருக்கலாம். எப்படியிருந்தபோதும், அவள் கவனத்தைக் கவருவதற்கும்,  பிறகு அவனை முத்தமிடுமாறு அவள்  தள்ளப்படுவதற்கும் இந்தப் பார்வை ஒரு காரணமாக அமைகிறது.

ஒரு பெண் என்னருகில் அமர்ந்து,  அப்படி என்னைப் பார்த்தால்,  நானும்கூட அதே காரியத்தைச் செய்திருப்பேன். தோற்றத்தை வைத்து யாரையும் இழிவாகக் கருதவேண்டியதில்லை.

 

ஹான் -கி ஏன் அவளை முத்தமிடுகிறான்? அவள் கவனத்தைக் கவருவதற்கு பல வழிகள் இருக்கின்றன. அவன் அவளை அடித்திருக்கலாம். அவன் அவளைக் கட்டிப்பிடித்திருக்கலாம். முத்தம் என்பது மிக நெருக்கமான ஒரு செயல் வெளிப்பாடு. இந்த முத்தக்காட்சி படத்தில் ஒரு சக்தி வாய்ந்த முக்கிய காட்சி.

பாலுறவைவிட முத்தமிடுதல் இந்த இடத்தில் அதிக அதிர்ச்சிமதிப்பு கொண்டதாக உள்ளது. சந்தடி மிகுந்த இடத்தில் ஒரு அறிமுகமற்றவரால் முத்தமிடப்படுவது மிகக் கேவலமானது. பெரும்பாலான படங்களில் முத்தமிடுதல் வழக்கமானமுறையில் காணப்படுகிறது. புதியமுறையில் அல்லது வித்தியாசமாக காட்டப்படாவிட்டால், அது சுவாரஸ்யமாக இருக்காது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான மிக முக்கிய உடல்மொழியாக முத்தமிடுதல் இருக்கிறது.

 

ஹான் -கியும்,  ஷியோன் -ஹ்வாவும் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்கு விசித்திரமாக இருந்தது. அது ஒருசெயற்கையான குடும்ப ஓவியம் போல இருந்தது. காட்சியின் கோணமும்,  கதாபாத்திரங்களின் இடமும் ஆழமற்றவையாக இருக்கின்றன. ஏன் இந்தக் காட்சி இவ்வாறு தட்டையாக அமையும்படி எடுத்தீர்கள்?

நான் ஓவியத்திற்குப் ‘போஸ்’ கொடுப்பது  போன்ற நேர்கோணங்களில் வைத்துப் படமெடுப்பதை விரும்புகிறேன். ஒரு கணத்தைக் காட்சிப்படுத்துகிற ‘ஸ்டில்’ புகைப்படங்கள் போலவே படத்தின் பல காட்சிகளும் எடுக்கப்பட்டன. இந்தவிதமான துவக்கக் காட்சி,  ஒரு குடும்பபுகைப்படம் போன்ற தோற்றத்தை தருகிறது. கதாபாத்திரங்களின் உடல்களை முழுமையாக காட்டும்படி கதாபாத்திரங்களைப் படமெடுக்க நான் விரும்புகிறேன். இது சமயங்களில் கதாபாத்திரங்களைச் சுற்றி ஒரு ஹெட்ரூம் மற்றும் எதிர்மறை வெளியை உருவாக்குகிறது. கதாபாத்திரங்களுக்கிடையே சமத்துவத்தை உருவாக்குவதற்கு இதுபோன்ற தட்டையான காட்சிகள் உதவுகின்றன.

 

இதுபோன்ற காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஏதாவது குறிப்பிட்ட செய்தியைச் சொல்கின்றனவா?

ஆம். நேர்கோணங்களை ஒரு நேர்மையான தருணத்தை நேர்வழியில் காட்சிப்படுத்துவதற்காக நான் பயன்படுத்துகிறேன். காட்சி கட்டமைப்புகளுக்குள்ளேயே அர்த்தங்களை எனது பார்வையாளர்கள் கிரகித்துக்கொள்ள முடிந்தால் நான் மகிழ்வேன்.

 

முன்பு உங்கள் சொந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உங்கள் படங்களை விவாதிக்க முனையும் விமர்சகர்களை உங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் அதைச் செய்யப்போவதில்லை (சிரிக்கிறார்). ஆனால், ‘Bad Guy’ உங்கள் அப்பவைப் பற்றி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் எப்படிப்பட்டவர்?

என் அப்பா மிக அருமையானவர். ஆனால்,  எனக்கு அருமையானவராக அவர் இருக்கவில்லை. கொரிய யுத்தத்தில் அவர் சுடப்பட்டார்; அதனால் பல வருடங்களாக அவருக்கு chronic pain’ (ஒருவகை வலி) இருந்தது. நான் வளரும் பிராயத்தில் அவர் மிகக் கண்டிப்பானவராக இருந்தார். எளிதில் கோபப்படுபவராக அவர் இருந்ததால் அவரை நெருங்கமுடியவில்லை. எனது முந்தைய படமான ‘Address Unknown ‘(2001)ல் வரும் மையமான அப்பா கதாபாத்திரம் என் அப்பாவை மனதிற்கொண்டு உருவானது. கொரிய யுத்தத்தில் போரிட்டதற்காக இருவருமே பெருமைப்படுவார்கள். கடைசியில் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது யுத்தகால வீரம் அங்கீகரிக்கப்படும்வரை சமூகத்தால் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டனர். எனக்கு சிறந்தவைகள் பற்றியே என் அப்பா கவனமாக இருந்தாலும், அவரிடமிருந்து தப்பவேண்டியது எனக்கு அவசியமாக இருந்தது. எனினும், அவர் என்னை சிறப்புக் கடற்படையில் சேருமாறு கூறினார். எனது ராணுவப்பணிக்குப் பிறகு,  வீட்டுக்குச் செல்வதைத் தவிர்க்க ஐரோப்பாவில் நான் தங்கினேன். இப்போது என் அப்பா என்னிடம் நன்றாக நடந்துகொள்கிறார்; நான் அவருக்கு நன்றியுடன் இருக்கிறேன். விமர்சகர்கள் ஏன் தொடர்ந்து என் அப்பாவின் தாக்கம் பற்றி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. உண்மையில்,  நான் விரும்பியவற்றை செய்வதற்கு என் அப்பா தடைபோட்டதில்லை. ஒரு தொழிற்சாலை மேலாளராக நான் வரவேண்டும் என அவர் விரும்பினாலும், நான் அந்த வேலையைவிட்டு விட்டு ஒரு கலைஞனாக மாறினேன்.

 

நான் உங்கள் அப்பாவைப் பற்றிக் கேட்டதற்குக் காரணம்,  உங்களின் பல கதாபாத்திரங்கள் அப்பாவாக  ஆவது பற்றிய பயத்துடன் உள்ளனர். அதே சமயத்தில் தம்மைச் சுற்றியுள்ளவர்கள் பற்றிய பயத்துடனும் அவர்கள் உள்ளனர். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையேயான சிக்கலுள்ள கருத்தியல் ரீதியிலான பிளவைச் சந்திக்க மறுக்கிற கொரியர்களை இந்தக் கதாபாத்திரங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா?

‘Address Unknown ‘னில் வரும் பாத்திரங்கள் கொண்டிராத விஷயம் என்பதை,  நான் நவீன கொரிய சமூகத்தின் பிரச்சினைகளின் குறியீடாகப் பார்க்கிறேன். நிறைய பிரச்சினைகள் உள்ள சமூகத்தில் நமது அப்பாக்கள் நம்மை வளர்த்தார்கள். ‘ஹான்’ என்ற கருத்து,  மறக்கவியலாத ஒரு ஆழமான கொரிய சோக உணர்வு, எனது அப்பாவின் தலைமுறையிலிருந்து நீக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக,  என் அப்பா ‘ரெட் கம்யூனிஸ்ட்’ என்ற பெயரை இன்னும் ஏளனமாகவே பயன்படுத்துகிறார். தென்கொரிய அரசு வடகொரியாவிற்கு அரிசி தருவதைப் பார்த்து அவர் கோபம் கொள்கிறார். அவர் வடகொரிய ராணுவத்தினரால் சுடப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். நமது நவீன வரலாற்றில் கொரிய யுத்தம் மிகத் தீவிரமான மற்றும் மிக ஆழமான ஒரு அனுபவமாகும். இந்த நினைவுகள் அவருக்கு மறப்பதற்கு கடினமானவையாகும். அவரது உடற்காயங்கள் ஆறினாலும், அவரது மனக்காயங்கள் ஒருபோதும் ஆறப்போவதில்லை. என் அப்பாவின் மனநெருக்கடி என்னுடையதாக மாறிவிட்டது. இந்த உணர்வுகள் எனது படங்களில் வருகின்றன. எப்படியோ என் அப்பாவின் கடந்தகாலம் எனது நிகழ்காலத் தன்னுணர்வுடன் கலந்து விடுகிறது. இதுதான் எனக்கு ‘Address Unknown ‘ பற்றிய கருத்தைத் தந்தது.

 

உங்கள் அப்பாவின் ஹான் கொரிய யுத்தம் என்றால்,  உங்களுடையது என்ன?

மையநீரோட்ட சமூகம் அல்லது அதன் கலாச்சார இழைகளுடன் என்னால் இயைந்திருக்க முடியவில்லை என்ற எனது நம்பிக்கையிலிருந்து எனது ஹான் கிளைக்கிறது. இதே சூழலிலுள்ள பிற கொரியர்கள் தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக,  கொரியாவை விட்டு ஃபிரான்ஸ் சென்றதன் மூலம் எனது தாழ்வுமனப்பான்மையை சில வருடங்களுக்கு முன்பு என்னால் விட முடிந்தது. இந்த சர்வதேச அனுபவம் என்னை நான் கண்டுகொள்ள உதவியது. தாழ்வுமனப்பான்மை உள்ள அந்த கொரியர்களுக்கு ‘கலாச்சாரம்’ அல்லது ‘உயர்வகுப்பு’ என்றால் என்னவென்று தெரியாது. சமூகத்திலிருந்து சிலவற்றை அவர்கள் ‘கடன்பட்டுள்ளதாக’ விசித்திரமாக கூறுகிறார்கள். அவர்கள் ஏதோ கனவுலகில் வசிப்பதுபோல இருக்கிறது. அவர்கள் சுதந்திரமான சிந்தனையாளர்கள் அல்ல. எனது படங்களைப் பற்றி சார்பற்ற வகையில் சிந்திக்குமளவு அவர்கள் சுதந்திரமானவர்களாக இல்லை. எனவே,  என் படங்கள் விசித்திரமாகவும்,  ‘ரா'(raw) ஆகவும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனக்கு ‘ரா’ என்ற வார்த்தை பிடிக்காது. ஏனெனில்,  அது என் படங்கள் முழுமையற்றவை அல்லது நன்றாக எடுக்கப்படாதவை என்று குறிப்பதைப் போல இருக்கிறது.

 

இந்தக் கருத்துக்களைப் ‘புதியவை’ என நீங்கள் கருதமுடியாதா?

என்னைப் பொறுத்தவரையில்,  ‘ரா’ என்ற வார்த்தை எதிர்மறை அர்த்தத்தை தருகிறது; ‘நிறைய வைரஸ்கள் உள்ளது’ அல்லது ‘கிருமிகளுடன் உள்ளது’ என்பது போல. பதிலாக, ‘ஆதியானது'(primitive), ‘முரட்டுத்தனமானது'(Wild) போன்ற வார்த்தைகளை என் படங்களை விளக்க பயன்படுத்த விரும்புகிறேன். காட்டுப்பகுதிகளில் மீன் பிடிக்கும் வலிமைகொண்ட பழக்கப்படுத்தப்படாத மனிதன் வாழ்ந்த பழங்காலங்களைப் பற்றி நான் அடிக்கடி எண்ணிப்பார்ப்பதுண்டு. அதன் பிறகு, தங்களை வெளிப்படுத்துவதிலிருந்து மக்களைத் தடுக்கும் வகையில் சமூகக் கட்டுப்பாடுகள் அல்லது பழக்கவழக்கங்கள் இருந்ததாக தெரியவில்லை. ஆனால்,  காலங்கள் மாறிவிட்டன. கட்டுப்படுத்தப்பட்ட/பழக்கப்படுத்தப்பட்ட சமூகத்தில் வாழ நாம் அனைவரும் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம். பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தமக்கு முன்பாக நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இல்லை. போட்டி அதிகமாக உள்ளது; மிக அதிகமானவர்கள் சில இடங்களுக்காக தமது பட்டங்களுடன் போட்டியிடுகின்றனர். கொரியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது; வெளிநாட்டு பட்டதாரி வகுப்புகளிலும்,  பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து சமூகத்தில் நல்ல நிலையை அடைய பலரும் படிக்கின்றனர். அப்படிப்பட்ட நல்லநிலை என்பது முற்காலத்தில் எளிதாக அடையக்கூடியதாக இருந்தது. சிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்க்கே வேலை எனும் நிலை அதன்பிறகு உள்ளது. நாம் செய்கிற எல்லாவற்றிலும் இந்த ‘பிரிஜுடிஸ்’ஸின் தாக்கம் உள்ளது. கொரிய சமூகத்திலுள்ள இந்த சார்புத்தன்மையை கவனிப்பதில் எனக்கு ஆர்வமுண்டு. அது உண்டாக்கும் தாக்கத்தை ஆய்வு செய்யவும் நான் தயார்.

 

உங்களுக்கு இதைக் கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால்,  உங்கள் சொந்த வாழ்க்கையின் கதைகளை உங்கள் படங்கள் பிரதிபலிக்கின்றன என்பது எனது கருத்து. உங்கள் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள் என்பதன் மீது அமைந்திருக்கிறது என்று இதற்கு அர்த்தமில்லை. விளிம்பு நிலை மற்றும் ஓரங்கட்டப்பட்ட நிலையிலுள்ள கதாபாத்திரங்களில் உங்கள் வாழ்வு மற்றும் உங்களை நான் காண்கிறேன். எடுத்துக்காட்டாக,  ‘Bad Guy’ படத்தில் அந்தப் பெண்ணை முத்தமிட்டதும், ஹான் -கி யை பொதுவிடத்தில் மூன்று ராணுவ வீரர்கள் கடுமையாக அடிக்கின்றனர். உங்கள் கடந்தகால ராணுவ வாழ்வை நீங்கள் விரும்பவில்லையா?

உங்கள் கேள்விக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. நான் இப்போது ‘ஹாரிசன்'(Horizon) என்ற என் படத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது ராணுவப்பணியின்போது நான் பயிற்சி மேற்கொண்ட கொரிய கடற்படை சிறப்பு அணியைப் பற்றிய மஸோகிஸ்டிக் கதை அது. எங்கள் லட்சியம்: ‘ஒருமுறை கடற்படை சிறப்பு வீரர் என்றால்,  எப்போதும் கடற்படை சிறப்பு வீரர்தான்’. இவை நேர்மறையான வார்த்தைகள்; இவற்றின் மூலம் நாம் வாழ்கிறோம்; ஏனெனில்,  நாம் ஒருவருக்கொருவர் கடன்பட்டுள்ளோம் என்பதை இந்த வார்த்தைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. ஆனால்,  இந்த ராணுவ உணர்வை எதிர்மறையாகவும் காணமுடியும். ஹான் -கியை அடிக்கும் அந்த மூன்று ராணுவவீரர்களும் மோசமானவர்கள் என்று நாம் கூறமுடியும். மற்றவர்களைக் காயப்படுத்துவதன் மூலம் அவர்கள் இன்பம் காண்கின்றனர்…  பார்வையாளர்களின் கண்ணாடி பிம்பம் போல எனது படங்கள் இருக்கின்றன. எனது படங்களில் ஒன்றைப் பற்றிச் சொல்ல ஒருவர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்றால்,  முதலில் அவர் அவர்களின் கெட்ட வார்த்தைகளைக் கேட்கப் போகிறார். படுத்துக்கொண்டே ஒருவர் எச்சில் துப்பினால் அது அவர் முகத்தின் மீதே வந்து விழும் என்பது கொரியப் பழமொழி. ஒரு படத்தைப் பற்றிய எந்த பார்வையும் அவருக்கும் படத்துக்குமான தொடர்பை பிரதிபலிக்கும். திரையில் தெரியும் கதாபாத்திரங்களில் நாம் நம்மையே காண்கிறோம்; அவற்றுடன் பலவேறு வழிகளில் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். பார்வையாளர்கள் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர்; யாருடைய கருத்து சரியானது அல்லது தவறானது எனக் கூறுவது சிரமமானதாகும். இருந்தபோதிலும்,  ஒரு மத்திமமான பார்வையாளருக்கு எனது படங்களில் ஒன்று இவ்வளவு பெரிய தாக்கம் கொடுத்திருக்கிறது என்பதைக் கேட்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே. ஒரு விமர்சகரின் நேர்மறையான புகழுரையைப் பற்றி நான் குறைவாகவே அலட்டிக்கொள்கிறேன்.

 

‘Bad Guy’ யையும் JANG Sun-Woo வின் ‘Lies’ ஐயும் நான் ஒப்பீடு செய்ய விரும்புகிறேன். ஒரு வயதான மனிதனுடன் வக்கிரமான பாலியல் உறவு கொண்டுள்ள ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவியைப் பற்றிய ஸேடிஸ்டிக்/மஸோகிஸ்டிக் கதை ‘Lies’. அவர்கள் உறவு தெரியவந்ததும்,  குடும்பத்திலிருந்து அவள் ஒதுக்கப்பட்டு கொரியாவைவிட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அப்படம் அதீதமான பாலுறவு பற்றிய மறைக்கப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசினாலும், நேர்மறையான பெண்ணிய விமர்சனங்களை அப்படம் பெற்றது. விமர்சகர்கள் ஜாங் சுன் -வூ வை ஒருauteur (அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆளுமை கொண்டவர்)  எனப் புகழ்ந்தனர். அதே பெண்ணிய விமர்சகர்கள் உங்கள் படத்தைப் பற்றி பெருந்தன்மையாக நடந்து கொள்ளவில்லை. பாலுறவு கொள்ளும்போது பெண்னும் ஆணும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளுவதை சில விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வதுபோல தெரிகிறது. ஆனால்,  அவர்களால் ஒரு பல்கலைக்கழக மாணவி பாலியலாளிவதை தாங்கமுடியவில்லை. இது முரண்பாடாக உள்ளது. எடுத்துக்காடாக, ‘Lies’ பெற்றதைப் போன்ற அதேவிதமான இண்டர்டெக்ஸூவல் மற்றும் எக்ஸ்ட்ரா டெக்ஸூவல் அணுகல்களை ‘Bad Guy’ படத்தைச் சூழ்ந்த விமர்சன உரையாடல்களும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு விமர்சகரின் கருத்து என்பது அவரது பாலினம் மீறிய அளவில் மதிப்பு மிக்கது என நான் நினைக்கிறேன். ஒரு விமர்சகர் எனது படத்தை தாக்கலாம். எனினும்,  அவர் அதனை பழிகூற முடியாது. அது ஒரு கருத்து மட்டுந்தான்.

 

ஸேடிஸம் அல்லது மஸோகிசம் ஆகியவற்றில் ஒன்றைச் சார மக்கள் கூறப்படுகின்றனர். நீங்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள்?

பார்வையாளர்களைக் குழப்பக்கூடிய கதையை நான் உருவாக்கியிருக்கிறேன் என்பதை நான் உணரும்போது,  நான் என்னை மஸோகிச வழியில் தண்டித்துக்கொள்ள வேண்டும் போல உணர்கிறேன். மற்றொரு தருணத்தில்,  பார்வையாளர்களை மனதறிந்தே ஏமாற்றவேண்டும் என நான் நினைக்கையில்,  நான் ஸேடிஸ்ட் போல உணர்கிறேன். இந்த ஸேடோமஸோகிஸ்டிக் உணர்வுகள் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகளில் மட்டும் இல்லை.

 

நான் உங்கள் படங்களை சர்ச்சைக்குரிய விவாதத்தின் மையத்திற்குள் தள்ள விரும்பவில்லை. ஆனால்,  உங்கள் படம் உங்கள் பார்வையாளர்களில் பெரும்பகுதியினரை அதன் உள்ளடக்கத்தால் தள்ளிவைத்துவிட்டது. உங்கள் படங்களைப் பார்ப்பது ஒரு வலி மிகுந்த சிரமமான அனுபவம்.

நான் ‘நல்ல நடத்தை’ உடையவனா எனச் சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். நான் அப்படியில்லை என வழக்கமாக சொல்வதுண்டு. நான் முழுமையானவன் அல்ல. ஆனால்,  நான் கொரிய சமூகத்தின் இருண்ட மற்றும் வறிய பக்கங்களைக் காட்ட அஞ்சாதவன். இது எனது தார்மீக வேலை. எனது முந்தைய படங்களைவிடச் சிறந்த சுத்தமான படங்களை என்னால் எடுக்க முடியும்; ஆனால்,  நான் ‘சாதாரண’ படங்களை எடுப்பதாகக் குற்றம் சாட்டப்பட வாய்ப்பிருக்கிறது. அதே சமயத்தில்,  எதிர்காலத்தில்,  எனது சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் காரணமாக,  மையநீரோட்ட படங்களை எடுக்க எனக்கு படைப்பூக்கம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் இருக்கிறது.

 

கடைசியாகக் கூறியதை விளக்கிச் சொல்ல முடியுமா?

எனது உதவியின்றி தான் உண்மையில் எப்படியிருக்கிறோம் என்பதை சமூகம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள விரும்புகிறேன். கவனிக்கப்படவேண்டிய சமூகப்பிரச்சினைகள் கொரியாவில் இருக்கின்றன. புறந்தள்ளமுடியாத இருண்டபகுதி நமது சமூகத்தில் இருக்கிறது. இதனால் சமூகம் பற்றிய சந்தேகத்தோடு நான் இருக்கிறேன். இந்த சந்தேகத்தை எனது படங்கள் பிரதிபலிக்கின்றன.

 

‘Bad Guy’ படத்தில் வரும் கடைசி காட்சியான வாடிக்கையாளர்களைத் தேடும் நடமாடும் விபச்சார வண்டி காட்சிதான் அனைத்திலும் பெரிய பாவகரமான காட்சியாகும். ஆனால்,  மீட்பு பற்றிய கிறிஸ்துவ ‘Gospel’ பாடலை அக்காட்சியில் நீங்கள் ஏதோ நோக்கத்துடன் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் கதாபாத்திரங்கள் முக்தியில் அதிக ஆர்வமுள்ளவர்கள் எனக் கூறவருகிறீர்களா? அல்லது பாவமும் முக்தியும் ஒரே மாதிரியானவைதானா? இந்த முடிவு உண்மையில் மற்றொரு படத்தின் ஆரம்பம் போலத் தெரிகிறது. உங்கள் படங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு முக்கிய வழியாக இருக்கலாம்.

எனது முதல் படமான ‘Crocodile’ லிலிருந்து மத நோக்கங்கள் கொண்ட படங்களை நான் எடுக்க முயற்சித்தேன். பாவம்,  சுய காயப்படுத்தல்கள் போன்ற கருத்துக்களுடன் இந்த நோக்கங்கள் கலக்கப்பட்டன. என் படங்களில் எவற்றைப் பார்க்கவேண்டுமென மக்கள் விரும்புகிறார்களோ அதைப் பார்க்கலாம். அந்த வாய்ப்பை நான் பார்வையாளர்களுக்கு விடுக்கிறேன். இருந்தபோதிலும்,  என் கதைகளில் உள்ள மத அம்சங்கள் இயற்கை அன்னை மற்றும் அப்பாவித்தனம் ஆகியவற்றை நோக்கித் திரும்புதல் பற்றிய வாய்ப்பைத் தருகிறது. இப்போது நமது வாழ்வு முழுவதும் செயற்கைத்தனம் இருக்கிறது. நமது அப்பாவித்தனத்தை மீண்டும் பெற மிகக் கடுமையாக நாம் முயற்சிக்கவேண்டியிருக்கிறது. இதனால், ‘Bad Guy’ படத்தில் வரும் மோசமான கதாபாத்திரங்கள் கடவுளின் வார்த்தைகளைக் கேட்கும் தேவையுள்ளது.

 

‘Bad Guy’ படத்திற்கு நாம் மீண்டும் திரும்பச் சென்று,  ஷியோன் -ஹ்வா தனது முதல் வாடிக்கையாளரைச் சந்திக்கிற படத்தின் அந்த முதல் பாலுறவுக்காட்சியைப் பற்றி பேசுவோம். ஷியோன் -ஹ்வா தனது கன்னித்தன்மையை இழந்துவிட்டாள் என்பதையே பெரும்பாலான கொரிய படங்கள் காட்டியிருக்கும். அவளுக்கு ஒரு அனுதாபத்தையாவது அவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இதிலெல்லாம் நீங்கள் ஆர்வம் காட்டுவது போலத் தெரியவில்லை. உண்மையில்,  அவள் விபச்சாரியாவதற்கு முன்பு, அவளது ஆண்நண்பனால் தனது கற்பை இழக்கக்கூடிய நிலை வந்தபோதுகூட அதற்கு அவள் அனுமதிக்கவில்லை. கற்பை இழப்பது என்ற ‘சென்டிமெண்ட்’டைவிட உங்கள் படம் விபச்சாரம் என்பதன் உடல் உழைப்பையே அதிகமாக மையப்படுத்துகிறது.

கொரியாவில் உள்ள கற்பு எனும் பிரச்சினை பற்றி நான் மிகுந்த  தன்னறிவுடன் இருக்கிறேன். ஆனால்,  எனது முதல் நோக்கம்,  ‘melodramatic’கான காட்சியை தவிர்ப்பதாகும். மலினமான அனுதாபத்திற்கு எனது படத்தில் இடமில்லை. பாலுறவு ஆசையைக் குறிப்பாக வெளிப்படுத்த அவசியமற்ற (gratuitous) நிர்வாணத்தை சினிமாக்கள் காட்டும்போது நான் அசூயையாக உணர்கிறேன். ‘Bad Guy’ படத்தின் பாலுறவுக் காட்சி குரூரமாகவும் யதார்த்தமாகவும் உள்ளது. விருப்பமில்லத பாலுறவிற்கு உலகெங்குமுள்ள பெண்கள் அடிக்கடி வற்புறுத்தப்படுகிறார்கள். பாலுறவுக் காட்சிகளைப் படம்பிடிக்கும்போது அந்த நடிகர்களை நான் பார்க்கக்கூட மாட்டேன். அந்தப் பெண் கத்துவதை கேட்டேன். அதை என்னால் காணச் சகிக்கவில்லை. இந்தக் காட்சியைக் காண்கிற விமர்சகர்கள் அதற்காக என்னை விமர்சிக்கிறவர்கள், என்னைவிட குரூரமானவர்கள்; ஏனெனில், அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக்கொள்ளவில்லை. ‘Bad Guy’ படத்தில் ஒரு பெண் ஸ்கிரிப்ட் எடிட்டருடன் நான் வேலை பார்த்தேன். பாலுறவுக் காட்சியைக் காணும்போது அந்தப் பெண் வெளிறிப்போனதை நான் பார்த்தேன். பல கொரியப் பெண்களும் இதேபோலவே உணர்வார்கள். கற்பு என்பதன் புனிதத்தன்மை கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளதால், அவர்கள் இந்தக் காட்சியால் புண்படுவார்கள். எடுத்துக்காட்டாக,  ஷியோன் -ஹ்வா கன்னித்தன்மையை இழந்ததும் சிவப்பு ரத்தத்துளிகளை துணிவிரிப்புகளில் நான் காட்டவில்லை. ஏன் பார்வையாளர்கள் இதை ஸேடிஸ்டிக்காக பார்க்கிறார்கள் என என்னால் காணமுடிகிறது.

 

மற்றொருபுறம், ஹான் -கி பாலுறவிலிருந்து தப்பிச் செல்கிறான். அவன் யாருடனும் உறவு கொள்ளவில்ல்லை.

ஆம். அது விரைவாக நிகழ்ந்து மறைகிறது. எனவே அது நடப்பதில்லை போலத் தெரிகிறது.

 

பேசுவதில் ஹான் -கிக்கு ஏன் பிரச்சினை உள்ளது? ஏறத்தாழ படம் முழுவதும் அவன் ஏன் அமைதியாக வருகிறான்? அவன் கழுத்தில் பெரிய தழும்பு ஒன்று இருந்தாலும்,  அவன் ஏன் அதிகம் பேசமாட்டேனென்கிறான்?

ஹான் -கி அதிகம் பேசுபவனாக இருப்பானேயானால், அவன் con artist என பார்க்கப்படுவான்.

முதலில் அவன் பேச வசனங்கள் வைத்திருந்தோம். இருந்தும்,  சில ஒத்திகை வாசிப்புகளுகுப் பிறகு அவற்றை நீக்கிவிட்டேன். எனது முந்தைய படமான ‘The Isle’லிலும் சில நடிகர்களுக்கு இதுவே நிகழ்ந்தது. அவர்களின் அமைதி எந்தளவுக்கு வலிமையானது என்பதை உணர்ந்தபின்,  அவர்களின் வசனங்களை நான் பெருமளவு நீக்கிவிட்டேன்.

 

ஹான் -கி கொண்டுள்ள உடல்காயங்கள் உங்களின் பெரும்பாலான படங்களில் காணப்படுகிறது. உடல் காயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் மீது உங்களுக்கு ஆர்வமிருக்கிறது. எடுத்துக்காடாக, ‘Address Unknown ‘னில் வரும் ஒரு கதாபாத்திரம்,  ஒரு ஸ்டீல் வயரை விழுங்கிய பிறகு கழிவில் வெளியேற்றுகிறான். ‘The Isle’லில் வரும் கதாபாத்திரம்,  ஒரு கொத்து மீன்பிடி ஊக்குகளை விழுங்குகிறான். இத்தகைய உடல்வலியின் மூலம் உங்கள் கதாபாத்திரங்கள் ஒருவிதமான சுதந்திரத்தை பெறுகிறார்களா?

இத்தகைய சுயசிதைத்தல் காட்சிகள் அனைத்தும் ஸேடோமஸோகிசம் தொடர்பானவை. அது ஒன்றுதான் எனது கதாபாத்திரங்கள் உடனடியாக வெளிக்காட்டக்கூடிய பதில் வினைகளாகும். அதே சமயத்தில்,  சமூகத்தில் அக் கதாபாத்திரங்கள் எப்படி போராடிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்தும் குறியீடுகளாக உடல்காயங்கள் இருக்கின்றன. ‘Bad Guy’யில் ஒன்றிரண்டு காட்சிகள் இருக்கின்றன; ஷியோன் -ஹ்வா முன்னால் ஹான் -கி சிலரால் அடிக்கப்பட்டுக் காயப்படுவது போல. இந்தக் காட்சிகளில் நான் ஷியோன் -ஹ்வாவை வைத்தேன்; அதன் மூலம் ஹான் -கியின் வலியை,  அவன் பேசுவதைவிட அவள் பார்க்கட்டும் என. தனது அமைதியின் மூலமாக ஹான் -கி தனது வலியை உணர்த்துவதை பார்வையாளர்கள் காணமுடியும் என நான் நம்புகிறேன்.

 

‘Bad Guy’ படத்தின் காட்சிகளை எத்தனை முறை நீங்கள் ஷூட் செய்தீர்கள்?

ஒரு மாதம் பிடித்தது. 25 நாட்கள் ஒரு ஸ்டூடியோவிலும், 5 நாட்கள் பல்வேறு பகுதிகளிலும் படம் பிடித்தோம்.

 

எந்தக் காட்சிகள் அதிகம் ‘டேக்’ வாங்கின?

முதல் நாளன்று எடுக்கப்பட்ட முதல் முத்தக்காட்சி. எனது மனதிலிருந்த அந்த காட்சியின் உருவம் கேமராவில் பிடிக்க சிரமமானதாகயிருந்தது. ஒரு முதலையைப் போல அப்பெண்ணை அந்த முரடன் விழுங்கிவிடுகிறான் என்ற உணர்வை உருவாக்க நான் விரும்பினேன்.

 

உங்கள் படங்களில் உங்கள் வாழ்வை அதிகம் பிரதிபலிக்கும் படம் எது?

‘Address Unknown ‘. அதன் மையக் கதாபாத்திரத்தின் வாழ்க்கை எனது வாழ்க்கை போன்றது. தன்னைத்தானே நாட்டுத்துப்பாக்கியால் காயப்படுத்திக்கொள்கிற பலவீனமான சிறுவன் அவன். நீங்கள் பார்க்கலாம்,  எனது இடது பெருவிரலில் இப்போதும்கூட ஒரு தழும்பு உள்ளது. அது சிறு வயதில் துப்பாக்கி செய்யும்போது ஏற்பட்டது. எனினும்,  ‘Real Fiction ‘ என்ற படத்தைத்தான் நான் முக்கியமாக கருதுகிறேன். அப் படம் போதிய கவனம் பெறாவிடினும்,  எனக்குப் பிடித்த கதை அம்சத்தை அது உள்வாங்கியுள்ள விதம் எனக்கு பிடித்திருக்கிறது.

 

நான் தயாரித்து வந்த கேள்விகளை உங்களிடம் கேட்டேன். இறுதியாக நீங்கள் ஏதேனும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

உங்களை ஒரு முதலை என நினைத்துக்கொண்டு உங்கள் கடினமான கேள்விகளுக்கு என்னைத் தயார் படுத்திக்கொண்டேன். நாம் இருவருமே நன்றாகத் தயாராயிருந்தோம். இது ஒரு நல்ல நேர்காணல்.

 

******

 

கிம் கி டுக் ஒரு வெளிப்படையான மனிதர். அவரால் தன் இதயத்தை மறைக்க முடியாது. பார்வையாளர்களும் விமர்சகர்களும் அவரது படத்தை ரசிக்கலாம் அல்லது ரசிக்காமல் இருக்கலாம். ஆனால்,  அவர் தவறு என அவர்களால் கூறமுடியாது. அவரது உதவியின்றித் தனது பிரச்சினைகளை சமூகம் பேசமுடியக்கூடிய ஒரு காலத்தில் வாழ அவர் விரும்பினார். இதனால்தான் அவரது படங்களை நாம் வரவேற்று,  அவைகளை உலகின் பிரச்சினைகளுக்கான ஒரு சம்பாஷணையாக பயன்படுத்தும் தேவை இருக்கிறது. அசூயை தரும் கதையம்சம் காரணமாக நாம் நம்மை அவரது படங்களிலிருந்து விலக்கிக்கொண்டால்,  நமது சமூகப் பிரச்சினைகளைப் பெரிதாக்கிக் கொள்ளக்கூடிய அபாயம் நிகழ வாய்ப்பிருக்கிறது. கிம் கி டுக்குடனான சம்பாஷணை இப்போதுதான் துவங்கியுள்ளது. இப்போதுதான் அவர் புரிந்து கொள்ளப்படத் துவங்கியிருக்கிறார்.

 

நன்றி : கொரியன் போஸ்ட் நியூவேவ் ஃபிலிம் டைரக்டர் சீரிஸ்: கிம் கி டுக்

ஆங்கிலமொழியாக்கம்: Aegyung Shim Yecies

தொகுப்பு: Brian Yecies

 

தமிழ் மொழியாக்கம்: ஆனந்த் ராஜ்

 

 

 

One thought on “சமூகத்தில் கற்பு என்பதற்கான மதிப்பீடு என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!