home உன்னதம், நேர்காணல் சாலமன் பாடல்கள் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டன

சாலமன் பாடல்கள் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டன

ஜுனாட் டயஸ் உடன் ஒரு நேர்காணல்

தற்கால புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஜுனாட் டயஸ், புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளில் வலிமையுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 1999-ல் நியூயார்க்கர் பத்திரிகை அந்த வருடத்தின் முக்கியமான ஆளுமைகளில் 20 பேர்களில் ஒருவராக இவரைத் தேர்வு செய்தது. அவரது முதல் கதைத் தொகுப்பான ‘Drown’ விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ‘This Is How You Lose Her’ என்ற அவரது இரண்டாவது கதைத்தொகுப்பு, தேசிய விருதுக்குக் இறுதிச்சுற்று வரை வந்தது. ‘The Brief Wondrous Life of Oscar Wao’ என்ற அவரது நாவல் புலிட்சர் விருதைப் பெற்றிருக்கிறது. புலிட்சர் விருது தவிர, ‘Oscar Wao’ தேசிய புத்தக விமர்சகர்கள் வட்ட விருதையும், ஜான் சார்ஜெண்ட் சீனியர் முதல் நாவல் பரிசையும் வென்றது. ‘பாஸ்டன் ரெவ்யூ’ இதழில் புனைவுக் கதைகளுக்கான ஆசிரியராகவும் இருக்கிறார். ‘Voices of Our Nation’ என்ற அமைப்பின் சகநிறுவனர். எழுத்து, இனம் ஆகியவற்றைப் பற்றி நியூயார்க்கரில் அவர் எழுதிய வலைப்பதிவு பிரபலமானது. தற்போது மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருக்கிறார்

நேர்காணல் கண்டவர் : டேவ் எக்கர்ஸ்.

 

டேவ் எக்கர்ஸ் : நீங்கள் பாஸ்டனில் வசிக்கிறீர்கள். அங்கே ‘826 பாஸ்டன்’ என்ற லாபநோக்கில்லாத ஓர் அமைப்பு இருக்கிறது. எனது முன்னாள் மாணவன் ஒருவன் அங்கே படிக்கப் போயிருந்தான். அவன் MIT-யில் உங்கள் வகுப்பு ஒன்றில் கலந்து கொண்டான். அப்போதுதான் நாங்கள் தொடங்கிக் கொண்டிருந்த ஓர் அமைப்பில் பணிபுரிய அவன் உங்களைச் சம்மதிக்க வைத்தான். ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பேசுவதற்கு அவன் உங்களை அழைத்து வந்தான். அது ஒரு பொதுமக்கள் உயர்நிலைப் பள்ளி. நிதிவசதியில்லாததாலும், மோசமான ஊடகக்கருத்துக்களாலும், அது மூடப்படும் அபாயத்தில் இருந்தது. மாணவர்கள் ஒருமாதிரி மிகவும் நொந்துபோயிருந்தனர். அப்போதுதான் நீங்கள் வந்து பேசினீர்கள். ஞாபகம் இருக்கிறதா?

ஜுனாட் டயஸ் : ஆம். ஞாபகம் இருக்கிறது.

டேவ் : அதற்குப்பின் ஒரு மாணவனிடம் நான் பேசினேன், நீங்கள் வந்து போனபின்பு. நீங்கள் அவனையும், எல்லா மாணவர்களையும் பிரமிக்க வைத்திருந்தீர்கள். உங்கள் விஜயத்திற்குப் பின்பு, எட்வின் கான்ஷாலெஷ் என்ற ஒரு பையன் எழுத்தாளனாக வேண்டும் என்று விரும்பினான். மாணவர்களின் கட்டுரைத் தொகுப்பில் அவன் ஒரு கட்டுரை எழுதினான். அதன் தலைப்பு: ’அவர்கள் என்னைக் கேட்டிருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’. ஓர் இளம்பெண் தற்கொலை செய்ய யோசிக்கும் கோணத்தில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரையை 826 பாஸ்டன் வெளியிட்டது. எட்வின் கல்லூரி ராணுவப்பயிற்சி எடுத்த மாணவன். பெரிய பிரபல்யம் அடைந்தவன். அவன்தான் இந்த அழகான மென்மையான கட்டுரையை எழுதினான். எட்வின் தொடர்ந்து எழுதலானான். எல்லா விஷயங்களிலும் வேலை செய்தான். இப்போது கல்வி உதவித்தொகை பெற்று ப்ராண்டெய்சில் இருக்கிறான். இந்த பையனின் வாழ்க்கையில் நீங்கள் ஒரு பெரும் மாறுதலை உண்டாக்கிவிட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு தடவையும் பாஸ்டனில் நிதிதிரட்டும் நிகழ்வு நடக்கும்போதும், அவன் பேசுவான். அவன் கேட்கும் முதல்கேள்வி இதுதான்: “ஜுனாட் இங்கே வருவாரா?” அந்த நிகழ்வின்போது நீங்கள் என்ன பேசினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? அல்லது நீங்கள் பள்ளி மாணவர்களிடம் பேசும்போது என்ன பேசுவீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறதா?

ஜுனாட் : நிச்சயமாக. இது சுயமாய்த் தேர்ந்தெடுத்துக் கொண்ட கூட்டம். நீங்கள் இங்கே இருக்கும்போது, நீங்கள் இளைஞர்களோடு வேலை செய்யும் வாய்ப்புகள் உண்டு. உங்களில் எத்தனைபேர் இளைஞர்களோடு வேலை செய்கிறீர்கள்? கையைத் தூக்குங்கள். எல்லாருமே. இது மிகவும் பைத்தியகாரத்தனமானது. இந்த உடன்பாடு பார்வையாளர்களுக்குத் தெரியும். மர்மமில்லை. நமக்கும் இது தெரியும். நேராகவோ அல்லது மறைமுகமாகவோ தெரியும். விஷயங்கள் உண்மையிலே மாறிவிட்டன. கல்விக் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, ஆகப்பெரிய சமூகத்திலும். இளைஞர்கள் முன்பு எப்போதையும் விட வயதில் பெரியவர்களை விட்டு அதிகமாகவே தனிமைப்பட்டுப் போய்விட்டார்கள். இளைஞர்களோடு ஏதோவொரு வழியில் சம்பந்தப்படுவதற்கு சம்பளம் பெறாத வயது வந்தவராக நீங்கள் இருந்தால், பெரியவர்களுக்கும் அவர்களுக்குச் சம்பந்தமில்லாத இளைஞர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இந்தப் பேதம் அமைப்பியல் ரீதியானது; ஆழமானது; கண்ணுக்குப் புலப்படுகிறது. இது தேசத்தை இரண்டாகப் பிரித்து வைக்கிறது: தங்களுக்குத் தொடர்பில்லாத இளைஞர்களோடு தினமும் தொடர்பு வைத்திருக்கும் மக்கள் ஒரு பிரிவு; தொடர்பு வைத்திருக்காத மக்கள் மறுபிரிவு. இதைப்பற்றிய ஓர் அசாதாரண விஷயம் என்னவென்றால், இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல; இளைஞர்களுக்கு பெரிய ஆதரவும், நிறைய சம்பாஷணையும், அவர்களின் வாரத்தைகளைக் காது கொடுத்துக் கேட்பதற்கு ஆட்களும் தேவைப்படுகின்றன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சும்மா உங்கள் மூஞ்சியை அவர்களிடம் காட்டுவதுதான் (சிரிப்பு); கொஞ்சம் காது கொடுத்துக் கேட்பதுதான் (அதிகமான சிரிப்பு). நான் நிஜமாகச் சொல்கிறேன். கடுமையான இன்மையை இளைஞர்கள் சந்திக்கிறார்கள்; அதனால் கிடைக்கும் கொஞ்சம் என்பதுகூட அவர்களுக்கு நிறைவாகத் தெரிகிறது. நான் இளைஞர்களைச் சந்திக்கும்போது என்ன செய்கிறேன் என்பது முக்கியமில்லாத வெறும் கிளை வாக்கியம்தான். அவர்கள் நமக்காக ஏங்குகிறார்கள்; மனிதன் கிடைக்கமாட்டானா என்று விரக்தியோடு இருக்கிறார்கள். இது ஒரு செயற்கையான பிரிவு; இதன் விளைவுகள் மக்களுக்குக் கடுமையாக இருக்கின்றன. நாம் அதிக விலைகொடுக்கிறோம், இளைஞர்களிடமிருந்து விலகி நிற்பதற்காக. இளைஞர்கள் வெறும் எண்ணிக்கை அரூபம் என்பது சமூகத்தின் பலத்தைப் பிடுங்கி விடுகிறது. நான் அமெரிக்காவிற்கு வந்தபோது, அந்நிய மனிதர்கள் கற்பழிப்பார்கள், ஆட்களைக் கடத்துவார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை; அதைப்பற்றி அவர்கள் நம்மை நம்ப வைக்கவில்லை. அந்நிய மனிதர்களிடம் நீங்கள் பேசலாம்; அச்சம் நம்மைப் பிரித்து விடவில்லை. பெரும்பாலான கற்பழிப்புகள், துஷ்பிரயோகம், தாக்குதல் எல்லாம் குடும்பங்களிலே நிகழ்கின்றன. அந்நியர்கள்மீது அச்ச உணர்வு ஏற்படுத்துவது மிகவும் எளிதானது. ஆங்கில உயர்நிலைப் பள்ளியைப் பற்றி எனக்கிருக்கும் ஞாபகம் இதுதான்; அங்கே சும்மா உட்கார்ந்து. ‘சரி, நான் இங்கே இருக்கிறேன். நாம் பேசலாம். நீங்கள் பேசுவதை நான் கேட்கிறேன்’ என்பது போலான ஒரு நிகழ்வு.

டேவ் : உங்களது நாவல் ‘ஆஸ்கார் வாவோ’ வெளியானதற்குப் பின் உங்களுக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. திருவிழாக்களுக்கு, உங்கள் புத்தகத்தின் மொழிபெயர்ப்புக்காக ஐரோப்பாவிற்கு செல்லும் பயணம், ஆங்கில உயர்நிலைப் பள்ளியைப் போன்ற இடங்களில் நிகழும் நிகழ்ச்சிகள்.. எப்படி எல்லாவற்றையும் சமாளிக்கிறீர்கள்? எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது?

ஜுனாட் : முதல் விஷயம்: எனக்கு எழுதுவதற்கு நேரம் கிடையாது. இரண்டாவது, எனக்கு ஒரு வேலை இருக்கிறது. அது நிறைய விஷயங்களைத் தவிர்க்க வைக்கிறது. நான் போதிக்கிறேன். அதனால்தான் வேலை பார்க்காமல் இருந்திருந்தால் நான் செய்திருக்கக்கூடிய விஷயங்களை இப்போது என்னால் செய்யமுடியவில்லை. ‘ஆஸ்கார் வாவோ’ எழுதுவதற்கு நான் 10 வருடங்கள் செலவழித்தேன். ஆனால் “இது அற்புதமானது. ஒரு மேதைக்கு பத்துவருடங்கள் ஆகத்தான் செய்யும்’’ என்று நினைத்து நான் இந்த 10 வருடங்களைச் செலவழிக்கவில்லை. (சிரிப்பு) சந்தோசமில்லாமல், உணமையில் துயரத்துடன் இந்தக் காலத்தைச் செலவழித்தேன். அவ்வளவு நீண்டகாலத்தைச் செலவழிக்கும்போது, உங்களிடம் இருக்கும் அறிவுச்சரக்கு பாலைவனத்தில் தொலைந்துபோகும். ஒரு கலைஞனாக நான் கற்றுக்கொள்ளும் அடிப்படைப்பாடம் பணிவுதான். அதனால் ‘இந்த விஷயம் வேண்டுமா? அந்த விஷயம் வேண்டுமா?’ என்பது போன்று நிறைய விஷயங்கள் மண்டைக்குள் உதிக்கும்போது, எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்: “இதெல்லாம் எனக்கு ஏன் வேண்டும்? நான் கைதட்டலை விரும்புகிறேனா? என் அம்மா எனக்கு போதுமான அளவு மரியாதை கொடுக்கவில்லை என்பதற்கான நஷ்டஈடாக இந்தப் பாராட்டுதலை நான் விரும்புகிறேனா? அல்லது நான் சமுதாயத்திற்குச் சேவை செய்கிறேன் என்ற உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வா இது?” இப்படித்தான் நான் தேர்ந்தெடுக்கிறேன்.

டேவ் : 2006-ல் நீங்கள், ‘Drown’ நாவலின் நாடக வடிவத்திற்காக இங்கே வந்தபோது, ‘கிரோனிக்கள்’ இதழில் ஒரு நேர்காணல் கொடுத்தீர்கள். ‘ஆஸ்கார் வாவோ’ எழுதும்போது நீங்கள் அனுபவித்த மனஅழுத்தத்தைப் பற்றி அதில் நீங்கள் பேசினீர்கள். ‘மனப்பிறழ்வு’ என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினீர்கள், அந்த நாவல் வேலை முடிந்த பின்பு வந்த வருடங்களில் இருந்த உங்கள் மனநிலையைப் பற்றிப் பேசும்போது. நீங்கள் அந்த வேலையை முடித்த பின்பு, ஒரு தீர்வைக் கண்டுபிடித்தீர்களா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அதாவது, நீங்கள் ஏதோவொரு புலமையை அடைந்துவிட்டீர்களா?

ஜுனாட் : கலைகள் பற்றிய ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், மற்ற துறைகளில் ஒரு வேலையை முடித்தபின்பு அடுத்த வேலைக்குத் தயாராகிற ஒரு நிலை கலைகளில் இல்லை என்பதுதான். என் நண்பர் ஒருவர் அறுவை சிகிச்சை நிபுணர். அவர் ஈராக்கில் சர்ஜனாக இருந்தவர். நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம்; ஒன்றாகவே புலம்பெயர்ந்து வந்தோம். ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் உங்களை அடுத்ததற்குத் தயாராக வைத்திருக்கும் என்று அவர் சொல்வார். ஆனால் நான் எழுதும் எதுவும் அப்படி என்னை உணரவைத்ததில்லை. அடுத்த வேலை எதுவென்றாலும், அது ஒரு போராட்டமாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு கலைஞனாக இருந்து இப்படி நீண்டகாலமாக வேலைசெய்தால், உங்கள் வேலையின் தாளகதி உங்களுக்குப் புரிந்துவிடும். என்னுடைய தாளகதி மிகவும் மந்தமானது என்று எனக்குப் புரிய ஆரம்பித்து விட்டது. என் முதல் நூல் ஒரு விபத்து என்பது போல நான் உணர்ந்தேன். ஆனால் இதுதான் என் தாளகதி என்று இப்போது நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். இதை என் நண்பர்கள் கேள்விப்பட்டு பத்துவருடங்களா என்ற ஆச்சரியத்தில் பைத்தியமாகி பாலத்திலிருந்து குதித்துவிழலாம் என்று விரும்புகிறார்கள். நானும் ஒரு பெரிய படைப்பை எழுதிவரலாம் என்று ஆசைப்படுகிறேன். ‘மாபி டிக்’ எழுதினார் மெல்வில்; அவருக்கு எத்தனை மாதங்கள் ஆயின என்று யாருக்காவது தெரியுமா? 14 மாதங்கள்!

டேவ் : எட்வர்டு பி ஜோன்ஸ் பற்றி ஒரு கதையுண்டு. ‘The Known World’ என்ற அவரது நாவலை 10 வருடங்களாகவே தன் தலைக்குள் வைத்துக்கொண்டு அவர் திரிந்தார். ஒரு வார்த்தைகூட எழுதாமலே இருந்தார். ஆனால் இறுதியில் அதற்கான வடிவத்தைக் கண்டுபிடித்தவுடனே எழுதத் தொடங்கி மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் அதை அவர் முடித்தார். நான் இதை ஒவ்வொருவரிடமும் சொல்கிறேன். எத்தனை நாளாகும்; எப்படி இதைச் செய்யப்போகிறீர்கள் என்றெல்லாம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களின் வேகம் பிடிபட்டவுடன், நீங்கள் இதை முடித்துவிடுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். என் சமீபத்திய நூலை (What is the What) எழுதி முடிக்க எனக்கு நான்கு வருடங்கள் ஆயின. இந்தப் புதிய நூல் (Zeitoun) எழுத மூன்று வருடங்கள் ஆயின. என்ன காரணமாக இருந்தாலும், நீங்கள் வேகமாக எழுதவேண்டும் என்று நினைத்தால், அது உங்களைப் பைத்தியமாக்கிவிடும்.

ஜுனாட் : நாம் ஒரு நல்ல களத்தில் இருக்கிறோம். ஏனென்றால் நமது செயல்களின் சிறப்பம்சம் நமக்குள் இருக்கும் வாசகர்கள். அவர்களின் தனியறை அலமாரிகளில் நம் புத்தகங்கள் மட்டும் இருப்பதில்லை. நமக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும், எப்படிப்பட்ட போராட்டமாக இருந்தாலும், இளம் எழுத்தாளர்கள் ஒரு நல்ல சரக்கோடு வெளியே வருகிறார்கள்; மோசமானதைப் பிரசுரம் செய்து வெளியே வரும் நம்மைப்போன்ற மக்களும் இருக்கிறார்கள். வாசகர்கள் நமக்கான வெளியை, நேரத்தைக் கொடுக்கிறார்கள். நீங்கள் உண்மையில் நான் நம்புவது போல வாசகர்களை நம்புகிறீர்கள் என்றால், யாரோ ஒருவன் நமக்காகக் காத்துக்கொண்டுதான் இருக்கிறான். முதன்முதலில் நம் புத்தகத்தைப் படித்த கூட்டமாக இருக்காது. ஆனால் ஒரு நல்ல கும்பலாக இருக்கும். வாசகர்கள் உண்மையில், உண்மையில் விசுவாசிகளாக இருக்கிறார்கள்; எல்லோரும் அப்படியல்ல. ஆனால் நாம் செய்கின்ற விஷயம் அற்புதமானது என்று உணரவைக்கும் அளவுக்கு இருக்கிறார்கள்.

டேவ் : ‘ஆஸ்கார் வாவோ’வுக்கும், ‘Drown’விற்கும் கிடைத்த வாசகர்களுக்கு இடையில் என்ன வித்தியாசம்? ‘ஆஸ்கார் வாவோ’ பல திசைகளில் கொளுத்திப்போட்ட நாவல். ‘Drown’வை வாசித்தவர்கள் சிறுகதை வாசிக்கும் பட்டதாரி மாணவ வாசகர்கள். ஆனால் ‘ஆஸ்கார் வாவோ’ பரவலாக வாசிக்கப்பட்டது. நூல் விவாதிப்பு சங்கங்கள், உயர்நிலைப்பள்ளிகள் என்று எல்லா இடங்களில் சென்றடைந்தது. இந்தப் புதிய வாசகர்களின் எழுச்சி அதிர்ச்சியாக இருந்ததா?

ஜுனாட் : இந்த நாவலுக்கு இரண்டு வாழ்க்கைகள் உண்டு. 2007 செப்டம்பரில் இது முதன்முதலாக பிரசுரிக்கப்பட்டது. ஏழு மாதம் வரைக்கும் அதற்கு புலிட்ஸர் விருது அறிவிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் சில கட்டுரைகள் எப்படி அது தோற்றுப்போனது என்று சொல்லி, ‘இவ்வளவு பிரதிகள்தான் விற்றிருக்கின்றன; படுமோசம்’ என்ற கருத்தை முன்வைத்தன. என் புத்தகத்தின் முதல் ஏழுமாதங்களை என்னால் மறக்கமுடியாது. அப்போது வாசகர்கள் கருணையற்றவர்களாக இருந்தார்கள். சான்பிரான்ஸிஸ்கோவில் மட்டுந்தான் அது ஒரு வாரத்திற்கு சிறந்த விற்பனைப் பட்டியலில் இருந்தது. புலிட்சர் விருது பெற்ற பின்புதான் அது தேசம் முழுவதும் படிக்கப்பட்டது. என் புத்தகத்திற்கு இரண்டு பருவங்கள் இருந்ததாக நான் உணர்ந்தேன்; முதல் பருவம் எனக்குத் தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது. அதுதான், அதற்குப்பின் நடந்தவை பற்றி ஒரு தெளிவான சிந்தனையை எனக்குத் தந்தது. ஒரு புத்தகத்திற்கு புதிய வாசகர்கள் கிடைப்பது நல்ல விஷயம். புலிட்சர் பரிசு கிடைக்கும்போது உங்கள் புத்தகம் வேகமாக முன் நகருவதைப் பார்ப்பீர்கள். இருபது வருடத்தில் கிடைக்கும் வாசகர்கள் உங்களுக்கு ஆறே மாதத்தில் கிடைக்கிறார்கள். வினோதமான சிந்தனைகள் ஏற்படுகின்றன; முதல் ஏழுமாதங்களுக்கு என்னால் அவற்றை விட்டு வெளிவர முடியவில்லை. “இந்தப் புத்தகம் நல்லாயிருக்கு,” என்று சொல்லும் கையடக்கப் பதிப்புகளின் வாசகர்கள்தான், யாரோ ஒருவர் இந்தப் புத்தகத்தைப் பரிசுக்குச் சிபாரிசு செய்யும் அளவுக்கு, நீண்ட காலம் உயிர்ப்போடு இதை வைத்திருக்கிறார்கள்.

டேவ் : அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இதை நீங்கள் எழுதினீர்களா? அதாவது, ‘ஆஸ்கார் வாவோ’, தனக்குச் சாத்தியமான வாசகர்களைப் பற்றிய பிரக்ஞையேதும் இல்லாதது போல தொனிக்கும் அளவுக்கு மிகத்தூய்மையாக இருந்தது.

ஜுனாட் : நான் இந்தப் புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தபோது, நியூ ஜெர்சியில் இருந்த டொமினிக்கன்ஸ் என்ற கிறித்துவக் குழுவைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற பிரக்ஞை எனக்குள் இருந்தது. நான் இந்த அனுபத்தை உலகம் முழுமைக்கும் பொதுவானது என்று கருதியிருந்தபோது, இந்தப் பெரிய உலகம் அதை அப்படிப் பார்க்கவில்லை என்ற பிரக்ஞையும் எனக்குள் இருந்தது. ஆனால் என்னால் எதையும் குப்பைப்போல கொட்டமுடியாது. ஏனென்றால் நான் ஏதோவொரு மையநீரோடை வாசகர்களுக்காக எழுதமுயன்றால், புத்தகத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் எல்லாவற்றையும் நான் இழந்துவிடுவேன். அற்புதமான குறிப்பான அம்சத்தன்மையை இழந்துவிடுவேன்; இறுதியில் சொல்வதற்கு எதுவும் இல்லாமல் போய்விடும். நீங்கள் என்னைப்போல ஓர் எழுத்தாளராக இருந்தால், பிரபஞ்சத்தின் மையமாக இல்லாத கறுப்பின மக்களைப் பற்றி எழுதும்போது, நீங்கள் நுட்பமான வாசகர்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் மையநீரோடை பின்னால் வந்து உங்களைப் படிக்கும் அளவுக்கு உங்கள் புத்தகம் ஜீவனோடு இருக்கும். உண்மையில் நான் இப்படித்தான் உணர்கிறேன். கறுப்பின வாசகர்கள் இல்லையென்றால், ஆசிரியர்களும் எழுத்துத்துறை ரசிகர்களும் இல்லையென்றால், என் கதை முடிந்திருக்கும். இந்த வாசகர்களைத்தான் நான் முதலில் நினைக்கிறேன். ஏனென்றால் நான் மையநீரோடை ஆள் அல்ல. குறிப்பான வாசகர்களுக்காக மட்டுமே நீங்கள் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களின் இரண்டு படைப்புகளிலும் நீங்கள் அப்படித்தான் எழுதினீர்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அப்போதுதான் அங்கிருந்து பொதுவெளிக்கு வரமுடியும். எதிர்மறையானது அல்ல இது. பெரிய வாசகப்பட்டாளத்திற்காக எழுதிவிட்டு, பின்பு உங்கள் படைப்பு பொதுவான உலக அங்கீகாரம் பெறும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நூறுவருடங்கள் பிந்தி நாம் படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் அந்த அசாதாரண குறிப்புத்தன்மை இருக்கிறது.

டேவ் : நீங்கள் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் செய்த விஷயங்களில் ஒன்று ‘நம் தேசிய கலைகள் மையத்தின் குரல்கள்’ என்ற அமைப்பில் வேலை செய்தது. நீங்கள் அங்கே என்ன செய்தீர்கள்? அந்த அமைப்பின் இலக்குகள் என்ன? இவற்றைப்பற்றி நீங்கள் சொல்ல முடியுமா?

ஜுனாட் : எனக்கு ஞாபகம் இல்லை. நுண்கலைகளில் முதுகலைப் பட்டப் படிப்பு படித்திருக்கிறீர்களா?

டேவ் : நான் கல்லூரியில் படைப்புத்திறன் படிப்பு படித்தேன். ஆனால் தோற்றுப் போனேன். அந்த நிகழ்வு மிகக் கொடுமையானது. எந்த நுண்கலை முதுகலைப்படிப்பிலும் என்னால் சேரமுடியவில்லை.

ஜுனாட் : நல்லது. நான் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் ‘குரல்கள்’ என்ற பயிற்சிப்பட்டறை நடத்தினேன். அது நுண்கலை முதுகலைப்படிப்பிற்கு மாற்று. ஒவ்வொரு பள்ளியிலும் அது இருக்கிறது. அது குறிப்பாக கறுப்பின மக்களுக்காக அமைக்கப்பட்ட ஒன்று. நிஜத்தில் ஓர் அற்புதமான அனுபவம். நான் இதை 12 வருடங்களாகவே செய்துகொண்டிருக்கிறேன்.

டேவ் : எந்த வயது மாணவர்களும் வரலாம்தானே..

ஜுனாட் : வயது தடையில்லை. நமக்குக் கிடைத்த எழுத்தாளர்கள் மரபுசாரா எழுத்தாளர்கள்; அவர்கள் முதுகலைப்பட்டம் பெற்றவர்களாகவோ அல்லது முதுகலைப்படிப்பிற்குச் செல்பவர்களாகவோ இல்லை. குடும்பம், தொழில் என்று இருப்பவர்கள்; அதேநேரம் எழுத்தாளர்களாகவும் இருக்க ஆசைப்படுபவர்கள். அது ஓர் அற்புதமான பயிற்சிப்பட்டறை. ஒருசில பல்கலைக்கழகத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய அனுபவத்தை மரபுசாரா எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு இது. ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவர்கள் அல்லது தனிமையில் இருக்கும் தாய்மார்கள், எழுத்தாளர் ஆகும் கனவுகளோடு வந்தால் அவர்களுக்கு கதவு திறந்தே இருக்கும். கிறிஸ்டினா கார்சியா, சுஹெய்ர் ஹமாட், டேவிட் மூரா, சால் வில்லியம்ஸ், கிறிஸ் அபானி ஆகிய பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளோடு பரிச்சயம் கிடைக்கும். இது ஓர் அற்புதமான விஷயம்.

டேவ் : நுண்கலை முதுகலைப் பட்டப்படிப்புகள் நன்றாக இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய முன்னாள் மாணவர்களுக்காக, கறுப்பினத்து இளம் எழுத்தாளர்களுக்காக நான் சிபாரிசுக் கடிதங்கள் எழுதி எந்த நல்ல விளைவுகளும் ஏற்பட்டதில்லை. அது ஒரு விரக்தியான அனுபவம் எனக்கு. நிறைய முதுகலைப் பட்டப்படிப்புகள் மரபுசாரா மாணவர்கள்மீது அக்கறை காட்டுவதில்லை; வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீதோ அல்லது நல்ல கல்விப் பின்னணி இல்லாதவர்கள் மீதோ அக்கறை செலுத்துவதில்லை. சில நேரங்களில் அதனால் எனக்குக் கோபம் வருகிறது.

ஜுனாட் : இல்லை. நீங்கள் பயணத்தை ஆரம்பித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். நுண்கலை முதுகலைப் பட்டப் படிப்புகளைப் பற்றிய பயங்கரமான விஷயம் என்னவென்றால், இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு நிறைய சிறப்புரிமைகள் இருக்கின்றன. சுதந்திரமாக எழுதுவதற்கு ஆண்டாண்டு கால அவகாசங்களை அவை தருகின்றன. இந்தப் படிப்பைப் படிக்கும் எழுத்தாளர்களின் விவரங்களைப் பார்த்தால், சமூகத்தில் அவர்கள் மற்றவர்கள் போல இல்லை என்பது ஒரு கவர்ச்சிகரமான விஷயம். அவர்களின் வயது கிட்டத்தட்ட 23-லிருந்து 27-க்குள்தான் இருக்கும்; அதனால் அவர்களுக்கு குடும்பங்கள் கிடையாது. அதனால் தகுதியான பலர் நீக்கப்படுகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு பணமெல்லாம் கொடுப்பதில்லை என்பதால், உங்கள் குடும்பம் இருந்தால், இந்த இரண்டாண்டு கால எழுத்தை உங்களால் பண்ணமுடியாது. என்னைப் பொறுத்தவரை, தேசத்தில் மற்ற விஷயங்களைப் போல எதுவும் இங்கே இல்லை என்றால், என்ன எழவுதான் இங்கே நடக்கிறது? மையநீரோடை சேராத 26-வயது இளைஞர்களின் எழுத்தை நான் படிக்க விரும்புவதில்லை. நானே அந்த வகையான எழுத்தாளன்தான். அறுபதுக்கு மேலான விழுக்காடு மக்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த வகையான வயது ரேஞ்சில் இருப்பவர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். ஆனால் அது இலக்கிய மரபை ஆழப்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். எழுதப்படும் எல்லாமும் நுண்கலை முதுகலைப் படிப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. நிறைய பணத்தையும், நிறைய சிறப்புரிமைகளையும்தான் அவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. நானும் உங்களைப் போலத்தான் யோசிக்கிறேன். குறைந்தபட்சம் மூன்றில் இரண்டிலிருந்து, இரண்டில் ஒன்றுவரை முதுகலைப் படிப்பின் சீட்கள் குடும்பத்தோடு இருப்பவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். குடும்பஸ்தர்கள் எழுதுவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு, பல்கலைக் கழகங்கள் பணம் தேடும் வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். அப்போதுதான் மிகச் சவாலான வழிகளில் இலக்கியம் மாறும்.

டேவ் : நாம் ஓர் அறிக்கை எழுதுவோம். நாம் அதை நாளை செய்வோம். உங்கள் தலைமையில் நடக்க வேண்டும். நீங்கள் நுண்கலை முதுகலைப் பட்டம் பெற்றவர்.

ஜுனாட் : ஆனால் நாமிருவரும் அங்கே ஒன்றாக இருக்கவேண்டும். விஷயம் என்னவென்றால், “26 வயது நவநாகரிக மாணவர்களை தூக்கிக்கொண்டு போய் சுட்டுத்தள்ள வேண்டும்,” என்று நான் சொல்லவில்லை. நாற்பது, ஐம்பது, அறுபது வயதுக்காரர்களோடு அந்தக் குழந்தைகள் வகுப்பறையில் இருந்தால், எல்லோருக்கும் நஷ்டம் என்று நான் நினைக்கிறேன். இலக்கியத்திற்கும் நஷ்டம்தான்.
டேவ் : சரி. நாம் இப்போது விஞ்ஞானப் புனைகதையை, ஒபாமாவைப் பற்றிப் பேசலாம். விஞ்ஞானப் புனைகதையைப் பற்றித் தெரிந்தவரை நாம் ஜனாதிபதியாக வைத்திருப்பது வினோதமானதா? ஜான் ஹாட்ஜ்மன் ஒபாமாவிற்கு முன்பு பேசிய உரையில் விஞ்ஞானப் புனைகதையான ‘Dune’ நாவல் பற்றிய குறிப்புகள் இருப்பதைக் கேட்டேன். ஒபாமாவுக்கு அவை புரிந்தது என்பதே மிகவும் வேடிக்கையாக இருந்தது.

ஜுனாட் : இது சூடான விஷயம் என்று நினைக்கிறேன். இது ஒரு வகையான அதிகாரச் சமச்சீர்வு. ரீகனை கொடூரமான வோல்ட்மோர்ட் (ஹாரி பாட்டர் நாவலில் வரும் வில்லன்) ஆகக் கொண்டு வளர்ந்த நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம்; அவரும் இந்தப் புண்ணாக்கு விஞ்ஞானப் புனைவுகதையில் இருந்தவர்தான். ஆனால் அவர் தீயவர் என்பதால், நாம் அதைப்பற்றிக் குறிப்பிடுவதில்லை. ரீகன் உண்மையில் விஞ்ஞானத் திரைப்படங்களில் இருந்தவர். நமக்கு ஒரு தீமையான திறன்கொண்ட ஜனாதிபதி கிடைத்தார். அதுமாதிரி அமைந்தது அதுதான் முதல்தடவை. அவர் அரக்கன் அல்ல; அதீத நிபுணத்துவத்தின் வீச்சுக் கொண்டவர். படங்களில் நடித்தார். ஆனால் புத்தகங்கள் வாசித்ததில்லை. ஆனால் ரீகனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், அவர் நேசித்த விஞ்ஞாப்புனைவுத் திரைப்படங்கள் அவரது செயல்களை எப்படி உருவேற்றின என்பதை நீங்கள் பார்க்கலாம். (சிரிப்பு)

(பார்வையாளர்களின் கேள்விகள்)

பார்வையாளர் 1: போதித்தலைப் பற்றிய கேள்வியிது. நான் ஓர் ஆசிரியர். எழுத்து உங்கள் முதல் உணர்ச்சி; போதித்தல் கொஞ்சம் மதிப்புக் குறைவானதுதான் உங்களுக்கு. நீங்கள் பட்டதாரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதியவர்களுக்கும் போதிக்கிறீர்கள். சரிதானே? என் மகன் அடுத்த வருடம் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்திற்கு விண்ணப்பிக்க இருக்கிறான். ஆங்கிலப் பாடத்தை எடுத்துப் படிக்காமல் இருப்பது தனது நோக்கமென்று அவன் கூறுகிறான். அவனை மாதிரியான மாணவர்களை நீங்கள் எப்படி அணுகிறீர்கள்?

ஜுனாட் : நல்லது. கலைகளைச் சிறுமைப்படுத்தும் ஓரங்கட்டும் தேசத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கலைகள் பற்றி தேசம் உதட்டளவில் பேசிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், உங்கள் மகன் தேசத்தின் உண்மையான நியதியைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். “என்னால் பொருத்தமில்லாத மேம்போக்கான செயலைத் தவிர்க்கமுடியாதா?” என்று கேட்பது போலான நியதியது. நான் இதுவரை வாழ்ந்திருக்கும் காலம் வரை நீங்கள் வாழ்ந்தால், அதைச் சமாளிக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், கலைகளை விரும்பாத, கலைகள் முட்டாள்தனமென்று சொல்கின்ற இளைஞர்களுக்கு அமெரிக்கா MIT போதனைக்கு சிறந்த பயிற்சிக்களமாக இருக்கிறது.. என் நம்பிக்கை எப்போதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. கலைகளின் மீதான ஈடுபாடு, அதுவும் உணர்ச்சிகரமான ஈடுபாடு கொடுங்கோல் அரசனையும் உருக்கிவிடும். கலைகளின் மையத்துவத்தை மறுக்கும் ஒரு தேசத்தில் போராட்டத்தின் மூலமாகத்தான் கலைகளின் ஈடுபாட்டை நாம் அதிகரிக்க முடியும். இந்த இளைஞனை என்னிடம் கொடுங்கள். நான் எவ்வளவு போதிக்கமுடியுமோ அவ்வளவு போதிக்கிறேன் அவனுக்கு. இப்படி எல்லோரையும் வழிக்குக் கொண்டுவரமுடியாது. பத்தில் ஒருவரை வழிக்குக் கொண்டு வந்துவிட்டாலே, நிதியுதவியோடு செயல்படும் சில கலை நிறுவனங்கள் செய்வதை விடவும் அதிகமாகவே செய்வது போலாகும். இதை இப்படிப் புரிந்துகொண்டால் நல்லது. கலைகளுக்கெதிரான கலாச்சாரத்தில் மூழ்கிப்போயிருக்கும் இளைஞனை அவனது கலைவெறுப்பிற்காக நான் வெறுப்பதில்லை. நனவிலி மனதில் இந்த மாதிரியான கருத்துக்கள்தான் எல்லோரிடமும் இருக்கின்றன. MIT மாணவர்களிடமிருந்து இந்த மாதிரி கேள்விப்படுவது இது முதல் முறையல்ல. சில மாணவர்கள் என் வகுப்பறையில் நுழைந்து, “எனக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் இருந்தால், நான் இங்கே இருக்க மாட்டேன்,” என்று சொல்வது போல இருப்பார்கள். நானும், “ஓ, ஆமாம். நாம் எப்படி அமெரிக்கா செய்ததைச் செய்யாமல் இருக்கமுடியும் என்று பார்ப்போம்.” என்பேன்.

பார்வையாளர் 2: நீங்கள் இப்போது என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? முதன்முதலில் எதை வாசித்தபின் நீங்கள் எழுத்தாளர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்?

ஜுனாட் : மிகவும் கடினமான கேள்வி. ஒரே நேரத்தில் பல விஷயங்கள் படிக்கிறேன். மோனிக்கா அலியின் ‘In the Kitchen,’ என்ற புதிய புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ச்லோ எழுதிய புத்தகமும் வாசிக்கிறேன்; அவளுடைய கடைசிப்பெயரை எனக்கு உச்சரிக்கத் தெரியவில்லை. அது என்ன அரிட்ஜிஸ்ஸா? ‘Book of Clouds’ தெரியுமா? அது உண்மையில் அற்புதமான, விசித்திரமான, பரீட்சார்த்தமான புத்தகம். இரண்டாம் உலக யுத்த சரித்திர ஆசிரியர் மாக்ஸ் ஹாஸ்டிங்ஸ் வாசிக்கிறேன். மாக்ச் ஹாஸ்டிங்ஸ் இரண்டாம் உலக யுத்தம் பற்றிய பாரபட்சமற்ற சரித்திர ஆசிரியர் என்று கருதப்படுபவர். ஆனால் நிஜத்தில் அவர் ஜப்பானியர்களை வெறுப்பவர். (சிரிப்பு). அவர் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் கொண்டவர். ரொம்பவும் சம்பிரதாயமாகப் பேசுவதுபோல பேசுகிறார். அவர் ஜப்பானியர்களிடம் பேசும் ஒவ்வொரு தடவையும், “அவர்களுக்கு ஒழுக்கம் கிடையாது; கொடுமையானவர்கள்,” என்பது போல பேசுகிறார். நான் இளமையாக இருந்த காலங்களில், இந்த விஷயங்கள் எல்லாம் கவனத்தில் கொண்டதில்லை. இப்போது வயதான பின்பு (நமட்டுச்சிரிப்பு), “சரிதான், மகனே, அமைதியாக இரு,” என்பது போல இருக்கிறது. என்னைத் தூண்டிய புத்தகங்கள் என்ற வகையில், நான் திரும்பத் திரும்பச் சொல்லும் ஓர் ஊமையான கதையை என்னால் மறக்கவே முடியாது. நான் கல்லூரிக்குப் போன முதல் வருடத்தில், முதல் வகுப்பில் நாங்கள் படிக்க வேண்டியிருந்த புத்தகம் ‘Song of Solomon.’ இந்த நூல் குப்பைகளை வாசிப்பதிலிருந்து என்னை மாற்றிவிட்டது. அது மிகவும் முக்கியமானது. புனைகதை நிலையில் மட்டுமல்ல, அடிப்படை மனிதத்துவ நிலையிலும் கூட மாற்றப்படுவது சாத்தியமானது என்பதை கண்டுபிடிக்க வைத்தது ‘Song of Solomon.’ நான் வாழ்ந்த நிஜ உலகத்தைத் திடீரென்று நான் பார்த்தேன். மேலும் இதற்கு முன் நான் பார்த்திராத வழிகளில் என்னை நானே தரிசித்தேன். அந்தப் புத்தகம் எழுத்தாளராகப் போகும் சாலையில் என்னைப் பயணிக்க வைத்தது. ‘Song of Solomon’ நான் படித்த முதல் இலக்கியப் பிரதி என்ற வகையில் மிகவும் அசாதாரணமானது.

பார்வையாளர் 3: எழுத்தும் இலக்கியமும் எங்கே போய்க்கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஜுனாட் : நல்லது. இப்படிச் சொல்லலாம்: ‘ஆரூடங்கள் சொல்லுங்கள். முட்டாளைப் போல தோன்றுங்கள்.’ (சிரிப்பு). கலை எப்படி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். வாசகர்கள் என்ன வாங்குகிறார்கள் என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. என்னுடைய உணர்வு என்னவென்றால், நமக்கு நிறையக் கதைகள் மிகமிகமிகத் தேவையாக இருக்கின்றன. நமது மனிதகுலத்தை நாம் அடைவதற்குத் தேவையான கதைகளில் 99.9 விழுக்காடு கூட நம்மிடம் இல்லை. பிரசுரிக்கப் பட்ட எழுத்தாளர்களான நாங்கள் எல்லோரும் அந்தப் பெரிய இடைவெளியைப் பிடித்து வைத்திருக்கிறோம். ஆனால் நாம் அதே நேரத்தில் வாசகர்களை ஊக்குவிக்க வேண்டும். VONA (கறுப்பினத்திற்கான எழுத்துப்பட்டறை) அல்லது 826 Valencia (6-18 வயதினருக்கான எழுத்துப் பட்டறை அமைப்பு) ஆகியவை எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்றன; ஆனால் அவை வாசகர்களை ஊக்குவிப்பதில்லை என்பது வருத்தத்துக்குரியது. கறுப்பின வாசகர்களை உருவாக்குவதை விட கறுப்பின எழுத்தாளர்களை உருவாக்கும் வேலையை நன்றாகச் செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது. ஒரே ஒரு புத்தகத்தை வாங்கப் போகும் ஒரே ஒரு வாசகனுக்காகப் போராடும் 25 கறுப்பின எழுத்தாளர்களை நாம் உருவாக்குகிறோம். வாசிக்கும் மக்களை உருவாக்கும் ஒரு நல்ல வேலையை நாம் செய்யவேண்டியிருக்கிறது. நீங்கள் என்ன எழுதினாலும், பிரசுரித்தாலும், உங்கள் படைப்பைப் போல ஒன்று சாத்தியமானது என்று கற்பனை செய்து பார்த்திராத நம்மை ஆச்சரியப்படுத்தலாம். புத்தகச் சங்கங்களின் கூட்டம் நடக்கும் போது, நீங்களும் நானும் மட்டுமல்ல அங்கே முக்கியம் என்னும் அளவுக்கு நாம் போதுமான வாசகர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.

*******

டேவ் எக்கர்ஸ் சர்வதேச நவீன இலக்கியச் சூழலில் காத்திரமாக இயங்கி வரும் முக்கியமான எழுத்தாளர். இதுவரை 10 க்கும் மேற்பட்ட நூலாகை எழுதியுள்ளார். Your Fathers, Where Are They? And the Prophets, Do They Live Forever?, The Circle..  மற்றும் (2012 தேசிய புத்தக விருதுக்கான இறுதிச்சுற்றில் வந்த A Hologram for the King ஆகியவை குறிப்பிடத்தகுந்த அவரது படைப்புகள். சான் ஃபிரான்ஸிஸ்கோவில் இருக்கும் ‘McSweeney’s’ என்னும் சுதந்திரமான பதிப்பகத்தின் நிறுவனராக இருக்கிறார். ‘Voice of Witness’ என்ற லாபநோக்கு இல்லாத புத்தகத் தொடரை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகங்கள் வாய்வழிச் சரித்திரத்தின் மூலம் மனித உரிமை நெருக்கடிகளை விளக்குகின்றன. இந்த பதிப்பகத்திலிருந்து இதே தலைப்பில் புதுவகை எழுத்துக்கான காலாண்டு இதழ் ஒன்றையும், The Believer என்ற தலைப்பில் மாதஇதழ் ஒன்றையும் நடத்திவருகிறார்.

மேலும், ‘826 National’ என்ற அமைப்பின் சகநிறுவனர். இந்த அமைப்பு கல்லூரிகள், பள்ளிகள், கல்விப் பயிற்சிமையங்கள் போன்ற பல்வேறு கல்வி மையங்களை இணைத்து மாணவர்களுக்கு பல்வேறு விஷயங்களை போதிக்கும் லாபநோக்கற்ற அமைப்பாக்க செயல்படுகிறது. தற்போது இவர் தன் குடும்பத்தோடு வடக்கு கலிஃபோர்னியாவில் வசிக்கிறார்.

(‘பாஸ்டன் ரெவ்யூ’ இதழில்  வெளி வந்த இந்த நேர்காணல், ஆசிரியரின் அனுமதியோடு இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.)

அனுமதி வாங்கித் தந்த டேவ் எக்கர்ஸின் உதவியாளரான பெக்கி வில்சன் அவர்களுக்கு நன்றி.

 

தமிழில் : மஹாரதி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!