home கட்டுரை, புதிய அலை சினிமாவில் வரும் ஜோக்கர் என்னும் உருவகத்தின் வரலாறு

சினிமாவில் வரும் ஜோக்கர் என்னும் உருவகத்தின் வரலாறு

  • டார்ஸி நாடெல்

 

துவக்கத்தில்

வரலாறு முழுவதும் பெரும்பாலான கலாச்சாரங்களில் கோமாளிகள் தோன்றியிருக்கின்றனர். ஏறத்தாழ 2500 முதல் 2400 BCE காலகட்டத்தில் பழங்கால எகிப்து தேசத்தில் கோமாளிகளைப் பற்றிய முதலாவதான ஆவணங்கள் கிடைத்தன. பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய சமூகங்களிலும் கோமாளிகள் இருந்து வந்திருக்கின்றனர். மத்தியகால ஐரோப்பாவில் அரசவைக் கோமாளிகளாகப் பரிணாம வளர்ச்சியடைந்த இவர்கள், ”வெளிப்படையாக காமம், உணவு, பான வகைகள் மற்றும் அரசாட்சி ஆகியவற்றை சிரிப்பு மூட்டுவது என்ற ஒன்றுக்காகப் பைத்தியத்தன்மையுடன் நடந்துகொண்டு கிண்டலடிப்பார்கள்”.

அச்சமூட்டும் கோமாளிகளைப் பற்றிய விஷயங்களில் புலமையுள்ளவராகக் கருதப்படுகிற அமெரிக்காவின் சுனி யில் உள்ள Buffalo பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ மெக்கானல் ஸ்டோட் இது குறித்து விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அரசவைக் கோமாளிகளைக் குறித்து, “மத்தியகால கோமாளி என்பவன், நமது நிரந்தரமின்மை, விலங்குத்தன்மை ஆகியவற்றுடன் புத்தியற்றும் மலிவாகவும் நாம் எவ்வாறெல்லாம் இருக்கமுடியும் என்பது பற்றியும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருந்தான்.” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியரின் கோமாளிகளைப் பற்றி அவர் சொல்லும்பொழுது, “அவர்கள், அடிக்கடி இறப்புடனும் அவல உண்மைகளுடனும் தொடர்புபடுத்தப்பட்டனர். கிங் லியரின் கோமாளி, ஒவ்வொருவரையும், அவர்கள் தங்களை புத்திசாலிகள் என்று நினைக்குமளவிற்கு அவர்கள் புத்திசாலிகளல்லர் என நினைவுபடுத்திக் கொண்டிருந்தான்.” என்கிறார்.

ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் மனோவியல் நிபுணர் ஸ்டீவன் ஸ்க்ளோஸ்மன், அரசவைக் கோமாளியைப் பற்றிக் கூறும்பொழுது, இவர்கள் எவ்வாறு அச்சமூட்டும் உருவங்களாக மாறினார்கள் என்று விவரிக்கிறார். “மத்தியகால கோமாளிகள் அரசரைச் சிரிக்க வைக்காவிட்டால் கடும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் எப்போதும் புன்னகையிலிருக்க கோமாளிகளின் ஒரு பெரும் குழு சிதைவுற்றிருந்தனர். வாய் வெறித்திருக்கும்படி சதையை அறுத்துக் கொள்வார்கள் அவர்கள்.” மேலும் இந்த அச்சமூட்டும் கோமாளியைப் பற்றிய பிம்பம் நவீன பார்வையில் எவ்வாறு ஊடுருவுகிறது எனவும் தெரிவிக்கிறார்.

 

மிக நவீன படிமம்

கோமாளியைப் பற்றிய மிக நவீன கருத்துருவம் ஜோஸப் கிரிமால்டியுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. கோமாளியின் கிளாஸிக் வடிவத்தை கிரிமால்டி உருவாக்கினார், முகம் வெள்ளையாகவும் முடி வண்ணமயமாகவும் கொண்டு, தனது நடிப்பில் நிறைய அங்க சேட்டைகளைப் பயன்படுத்தினார். எனினும், நடிப்பிற்கு வெளியே கிரிமால்டியின் வாழ்க்கை சிரமங்களின் தொடர்ச்சியாக இருந்தது. மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார், பேறுகாலத்தின்போது அவரது முதல் மனைவி இறந்தார், கோமாளியாக இருந்த அவரது மகனும் கூட மதுப்பழக்கத்தினால் முப்பத்தியோரு வயதில் இறந்தார். அதுவன்றி, தொடர்ச்சியான ஸ்லாப்ஸ்டிக் நிகழ்ச்சிகள் கிரிமால்டியை நலிவடைய வைத்தன, நிரந்தரமாக வலியுடன் இருக்க வைத்தன. அவர் கூறிய ஒரு புகழ்பெற்ற கூற்று, ”பகல் முழுவதும் வேதனையுடன் நான் இருக்கிறேன், ஆனால் இரவில் உங்களைச் சிரிக்க வைக்கிறேன்.” அவரது மறைவிற்குப் பிறகு கிரிமால்டியின் நினைவுகளை சார்லஸ் டிக்கன்ஸ் தொகுத்தார். தனது எண்ணங்களையும் கலந்து டிக்கன்ஸ் செய்தது பிரபலமடைந்தது. அதுதான் அச்சமூட்டும் கோமாளிகளைப் பற்றிய கருத்திற்கான ஆரம்பமாக இருந்தது என ஆண்ட்ரூ ஸ்டோட் கூறுகிறார்.

பியேர்ரோட் என மேடைகளில் அறியப்படுகிற கிரிமால்டிக்குப் ஃபிரான்ஸ்-ஸின் இணை கோமாளியான ழீன்-கேஸ்பர்ட் டெபுரா என்பவரும் இத்தகைய அச்சமூட்டும் கோமாளி படிமம் உருவாதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். 1836ல் இவரை நோக்கி அவமானப்படுத்தும் வகையில் கத்தியதற்காக தனது நடைப்பயிற்சிக் கம்பியினால் ஒரு சிறுவனை இவர், அடித்துக் கொன்ற நிகழ்வு இப்படியான உருவகத்திற்கு மேலும் வலிமை சேர்த்தது. இறுதியில் டெபுரா விடுதலை செய்யப்பட்டாலும் கூட இந்த நிகழ்வு முக்கியமான உதாரணமாகப் போய்விட்டது.

1800களின் இறுதியில் சர்க்கஸ்களில் கோமாளிகள் தவிர்க்க முடியாதவர்களாகி விட்டனர். 1876ல் அவர்களைப் பற்றி ஃபிரெஞ்சு இலக்கிய விமர்சகர் எட்மண்ட் தெ கான்கார்ட் சொன்ன வாசகங்கள் இந்த அச்சமூட்டும் படிமத்தை மேலும் மேலும் இருக்கமாக்கின. “கோமாளிகளின் கலை என்பது தற்சமயம் அச்சமூட்டுவதாகவும் பதற்றமுடையதாகவும் மர்மமானதாகவும் இருக்கிறது; அவர்களது சுயவதை முயற்சிகள், அவர்களது பிரமிக்கத்தக்க உடலசைவுகள் மற்றும் கட்டுங்கடங்காத உணர்வெழுச்சியுடனான அமானுஷ்யமான குரலானது ஒரு மனநலக் காப்பகத்தின் முற்றத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.”

 

கோல்ரோஃபோபியா (coulrophobia)

துவக்கத்திலிருந்தே கோமாளிகள் தம்மிடம் ஒரு இருண்ட பக்கத்தைக் கொண்டிருப்பதாக ஆண்ட்ரூ ஸ்டோட் குறிப்பிடுகிறார்; பயங்கரக் கோமாளி பற்றிய நவீன வடிவம் என்பது வெறுமனே அந்த இருண்மையின் மற்றொரு வெளிப்பாடுதான். ரிங்லிங் பிரதர்ஸ் மற்றும் Barnum & Bailey சர்க்கஸின் பயிற்சிப் பிரிவின் இயக்குநர் டேவிட் கிசர் இதனை ஏற்றுக் கொள்கிறார். மேலும் சமூகத்தின் வக்கிரத்தன்மையை கதாபாத்திரங்கள் அவர்களுக்கேயுரிய வகையிலான நகைச்சுவையில் உணவு, பானங்கள் மற்றும் காமம் பற்றிய விஷயங்களையும் தமது கிறுக்குத்தனமான செய்கைகளிலும் எதிரொளித்தனர் எனக் கூறுகிறார். நவீன காலத்தில் கோமாளிகளின் அச்சமூட்டும் படிமத்திற்கு பல விஷயங்கள் காரணமாக இருக்கின்றன.

போகோ என்னும் பெயரால் அறியப்பட்ட ஜான் வேய்ன் கேஸி என்ற தொடர் கொலைகாரர், அதற்கு மேலும் ஒரு காரணம். அவர் கோமாளி உடையணிந்து கொண்டு எந்தக் கொலையும் செய்யாவிட்டாலும் கூட, எந்தவிதமான காரணமும் இல்லாமல், தொடர்ச்சியான கொலைகளை செய்து வந்ததனால், ‘கொலைகாரக் கோமாளி’ என புனைப்பெயரிடப்பட்டார். அப் பெயரை ஏற்றுக்கொண்ட அவர், சிறையிலிருந்தபோது பல கோமாளி ஓவியங்களை வரைந்தார், ‘போகோ’ உடையிலிருக்கும் அவரது ஓவியங்கள் உட்பட. கேஸி கூறியதில் பிரபலமானது: “கோமாளிகள் கொலையை எளிதாகக் கடந்து செல்ல இயலும்.”

1980கள், 1990களில் கோமாளிகளைப் பற்றிய பயம் அதிகரித்ததாக சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்டீஃபன் கிங் எழுதிய நாவல் ‘It’ வெளியாகி, பிறகு அது ஒரு தொலைக்காட்சிக் குறுந்தொடராக வந்தது. 2014ல் வெளிவந்த ‘Clown’ என்ற திரைப்படம், ‘ American Horror Story: Freakshow’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் ஊடகங்களில் இந்தக் கருத்து தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. ‘அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி’ நிகழ்ச்சியில் ட்விஸ்டி என்ற கொலைகாரக் கோமாளியைக் காட்டிய விதத்தில் Clowns of America International என்ற அமைப்பிலிருந்து பலமான எதிர்ப்பு எழுந்தது.

கோமாளிகளின் முக அலங்காரத்துடன் அவர்கள் மீதான பயம் நேரடியாகத் தொடர்புடையது என பல கோட்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. ‘The Image of the Clown’ என்ற நூலில் ஜெர்மானிய மானிடவியல் ஆய்வாளர் உல்ஃப்கேங் எம் ஷுக்கர், கலாச்சார ரீதியிலான தீய உருக்கள் பற்றிய பதிவுகளுக்கும் கோமாளிகளின் தோற்றங்களுக்கும் ஒப்புமைகள் உண்டு எனக் குறிப்பிடுகிறார். கோமாளிகளின் முகத்தைப் பற்றி ஸ்டோட் சில கருத்துக்களைத் தெரிவிக்கிறார். “மர்மம் இருக்குமிடத்தில் தீமை இருப்பதாகக் கருதப்படுகிறது, எனவே, ‘எதை நீங்கள் மறைக்கிறீர்கள்?’.” என்கிறார் அவர்.

கோமாளிகள் குறித்து அஞ்சுபவர்கள், அவர்களது ஒப்பனையின் ஊடாக எழும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கலிஃபோர்னிய மாநிலப் பல்கலைக்கழகத்தின் உளவியல்துறைப் பேராசிரியரான ரொனால்ட் டாக்டர், “குழந்தைகள், இரண்டு வயதிலிருந்தே, அறிந்த உடலமைப்பும் அறியாத முகவமைப்பும் கொண்ட உருவத்திற்கு எதிராக தீவிர வினையாற்றுகின்றனர். ஆரம்பநிலையிலேயே இவ்வாறு கோமாளி பற்றி எதிர்வினையாற்றுவதால் அது வாழ்க்கை முழுவதும் தொடர்கிற ஒரு பயமாக ஆகிவிட வாய்ப்புள்ளது.” என்கிறார். பிரிட்டிஷ் திகில் கதையாசிரியர் ராம்ஸே கேம்ப்பெல், “முகமூடிதான் பயமூட்டுகிறது, அது மாற்றமின்றியும் முடிவற்ற நகைச்சுவைத்தன்மையுடனும் இருக்கிறது.” என்கிறார்.

“அந்நியர்கள் ஆபத்தானவர்கள்” என்ற பொதுப் புத்தியில் உலவும் கருத்து கோமாளிகள் மீதான மக்களின் பயத்திற்கு வலுச்சேர்த்திருக்கிறது எனவும் ஸ்டோட் கூறிகிறார். “கோமாளியைப்போல உடையணியும் ஒருவரின் பாலியல் நோக்கம் பற்றிக் கேள்வியெழுப்பும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம், கோமாளி வேஷம் போடுபவர்களில் பெரும்பான்மையானவர்களைப் பற்றி வருத்தமளிக்கக்கூடிய வேடிக்கையற்ற விஷயம் இருக்கிறது.” என்கிறார். மேலும், “இப்படிப் பல்வேறு வகையிலான அறியப்படாதவை பற்றிய கருத்துக்களை ஒன்றிணைப்பதில் பல பயங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை சிறுவயது கால அனுபவங்களோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன. குழந்தைகளைச் சுற்றியிருக்கும் அந்நியர்கள் மீதான நமது பயம், அடங்காத அராஜகக் கோமாளி பற்றிய கருத்துடன் கலந்துவிட்டிருக்கிறது.” டொராண்டோவிலுள்ள ரையர்சன் பல்கலைக்கழக உளவியல்துறைப் பேராசிரியரான டாக்டர் மார்டின் ஆண்டனியின் கூற்று அவர்களது தற்சூழலை விவரிக்கிறது. “இனியும் கோமாளிகளை அந்த வகையிலான பாதுகாப்பான, வேடிக்கையான சூழல்களில் நீங்கள் காண முடியாது. திரைப்படங்களில் நீங்கள் காணும் அவர்கள் அச்சமூட்டுகின்றனர். குழந்தைகளும் அப்படிப்பட்ட வழக்கமான பாதுகாப்பான, வேடிக்கையான சூழல்களுக்கு உட்பட்டிருக்கவில்லை, ஊடகங்களில் இருக்கும் எதிர்மறை பிம்பங்கள் அங்கே இருக்கின்றன.”

 

பேயுருக் கோமாளி எனும் நிகழ்வு

வரலாறும் குழந்தைப்பருவ அதிர்ச்சி நிகழ்வுகளும் அச்சமூட்டும் கோமாளி உருவம் பற்றி விவரித்தாலும், சமீபத்திய சில குறிப்பிட்ட சம்பவங்கள் அதற்கான உதாரணங்களாக இருக்கின்றன. பெஞ்சமின் ராட்ஃபோர்டு எழுதிய நூலான ‘Bad Clowns’, தீய கோமாளிகள் மற்றும் கோமாளிகள் மீதான அச்சம் ஆகியவற்றின் வரலாற்றைத் தேடுகிறது. சிறிது காலத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை பேயுருக் கோமாளி என்பதற்கான வகைப்படுத்தலாகக் கூறலாம் என அவர் கருதுகிறார். 1981ல் லோரன் கோல்மன் என்பவர், அமெரிக்கா முழுவதும் கோமாளிகள் தொடர்புடைய பயமூட்டும் சம்பவங்கள் நடந்தபோது, “phantom clowns” என்ற கோட்பாட்டை உருவாக்கினார். அமெரிக்காவில் வெகு விமரிசையாக நடக்கும் பேய்த்திருவிழாவான Halloween திருவிழாவை யொட்டிய மாதங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன என்பதும், அது நிகழுமிடங்களில் கிடைக்கும் அறிக்கைகள் ஒரேமாதிரி இருக்கின்றன என்பதும், கண்ணால் கண்டவர் மட்டுமே அதற்கு சாட்சியாக உள்ளனர் என்பதும் இதில் பொருந்துகிறது.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு பரவலான பின்பு கோமாளிகளைப் போல உடையணிந்துகொண்டு பொதுமக்களைப் பின்தொடர்ந்து அச்சமூட்டுகிற செயலும் அதிகரிப்பதாகவும் ராட்ஃபோர்டு கூறுகிறார். இவை சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. 2013ல் அலெக்ஸ் பாவெல் என்பவர் இங்கிலாந்தில் நார்த்தம்டன்-னில் இவ்வாறு நடந்துகொண்டு அதை சமூக ஊடகத்திலும் பதிவுசெய்தார். ஒவ்வொரு காரணமும் மற்றொன்றுக்கு சாதகமாக இருக்கிறதா எனத் தெரியாத நிலையில் அச்சமூட்டும் கோமாளிகள் இங்கே இருக்கிறார்கள் என்பது தெளிவு.

 

– தமிழாக்கம்: ஆனந்தராஜ்

(கட்டுரையாளர், அழிந்துபோன உயிரினங்கள், பயங்கரமான ஆவிகள் பற்றிக் கற்றுக்கொள்வதும் எழுதுவதுமாக இருப்பவர். 2014ல் எலி ரோத் தயாரிப்பில் வந்த ‘க்ளவுன்’ திரைப்படம் பார்த்த ஆர்வத்தில் எழுதிய கட்டுரையாக இதை நினைவு கூர்கிறார்.)

நன்றி : owlcation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!