home நேர்காணல், புதிய அலை சிறுமுதலீட்டுப் படங்களுக்கான விநியோக நிறுவனம் காலத்தின் தேவை

சிறுமுதலீட்டுப் படங்களுக்கான விநியோக நிறுவனம் காலத்தின் தேவை

லெஸ்லி வூச்சட் உடன் ஒரு நேர்காணல் 

 

ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியிடுவதற்கு தயாரான பிறகு அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தலையாய பணி. அப்பணியைத் திறம்படச் செய்யும் திரைப்பட விநியோகஸ்தர்களைப் பற்றியும் அவர்களுடைய பொறுப்புகளைப் பற்றியும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. சமீப காலமாக உலகம் முழுக்கவும் சிறு முதலீட்டுப் படங்களுக்கு வெளியிடுவதற்கான திரையரங்கங்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  திரையரங்கமல்லாத மாற்று தளங்களில் வெளியிடுவதற்கான ஒரு புதியவிநியோக நிறுவனத்தை துவங்கியிருக்கும் நிறுவனர் லெஸ்லி வூச்சட் இது குறித்து விரிவாக Film Maker இதழுக்கு அளித்த இந்த நேர்காணலில் விவாதிக்கிறார்.

நேர்காணல் கண்டவர்: டைலர் ஹெஸ் 

 

அந்த சிறிய 190°F அறையில் அமர்ந்திருக்கிறேன். என்னுடைய மூக்குகண்ணாடியைக் கழட்டிவிட்டேன். ஏனெனில் அவை உருகிவிட்டால் என்னால் பிறகு பார்க்கவே முடியாது. இங்கு என்னை சுற்றி இருப்பவர்களைப் போலவே நானும் அரைநிர்வாணமாக இருக்கிறேன். நானும் என் தோழியும் அருகிலுள்ளவர்களின் நிர்வாணத்தால் சலனப்பட்டு முனகிக்கொண்டிருக்கிறோம், ஆனால் பெர்லினிலுள்ள நீராவி ஓய்வறைகளில் என்னுடைய முதல் அனுபவம் இதுதான்,  அதனால் ஜெர்மானியர்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வரும் இந்த இடத்தின், வியர்வை நெடி கலந்த அமைதிக்கு, நான் பழக்கப்பட்டிருக்கவில்லை. அங்குள்ள வித்தியாசமான குளியலறைகளுக்கிடையே என்னை, என்னுடைய தோழி அழைத்துச் சென்றாள், நான் என் மனநிலையைத் திறந்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன், பெர்லினின் ஸ்டாட்பட்டில் கழிக்கும் இரவு பாதுகாப்பானதுதான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு நண்பர்கள் பெர்லினிலுள்ள ஸ்டாட்பட்டுக்கு பயணம் செய்தனர். அச்சமயத்தில் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பிராண்டன்பர்க் கதவின் வழியே பெருந்திரளாக நுழைந்தனர். இரண்டு நீராவிக்குளியல்காரர்களில் ஒருவர் இப்போது ஜெர்மனியின் அதிபராக இருப்பவர், அவர் கூறியதிலிருந்து, “அந்த சுவர் தகர்க்கப்பட்டுவிட்டால் மீண்டும் மூடுவதென்பது கடினமான காரியம், அதனால் நான் காத்திருக்க முடிவு செய்தேன்… வியாழக்கிழமை எனக்கு நீராவிக்குளியல் இருக்கும் அதனால் நான் அங்கு சென்றுவிட்டேன்.” இன்று, ஏஞ்சலா மெர்கல் தனது வாராந்திர நீராவிக்குளியல் தரும் அதே உற்சாகத்தில் நாட்டை வழிநடத்துகிறார். அவருக்கு, தான் எப்போது எங்கு ஒரு அரசியல் தலைவராக நடந்துகொள்ள வேண்டுமென்று அறிந்தவர், சும்மா வெறுமனே மேற்கு ஜெர்மனில் கூட்டம் வழிந்துகொண்டிருக்கிறது என்பதற்காகவெல்லாம் வருபவர் அல்ல.

ஐந்து வருடங்களுக்கு முன்பு, லெஸ்லி வூச்சட் லண்டனின் ஹான்வே பிலிம்ஸிலிருந்து வெளியேறி பாரிசில் குடியேறினர். அங்கு திரைப்படவிழாக்களுக்கு படங்களை அனுப்பும் ஒருநிறுவனத்தை நிறுவினார். அதன்மூலம் திரைப்படவிழாக்களில் இயக்குனர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதும் படத்தின் தலைப்புகளுக்கான அனுமதியைப் பெறுவதும் விழாக்குழுவினர்களுக்குப் படத்தின் பிரதிகளை வழங்குவதுமான பல வேலைகளைச் செய்கிறார். பாரிசில் பிறந்து வளர்ந்த வூச்சட் முதலில் Bertelsman Music Group (BMG) ல் பணிபுரிந்தார். பிறகு Focus Features International பணிபுரிந்தார், அடுத்ததாக லண்டனின் ஹான்வே பிலிம்சில் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவில் பணிபுரிந்தார். அவர் லா சார்போனில் பொழுதுபோக்கு சட்டம் மற்றும் தொழில் துறையில் முதுகலைப்பட்டம் முடித்தவர்.

இது போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்க, குறிப்பாக வரையறுக்கப்படாத விஷயங்களையும் பட்டியலிட்டுக்காட்டும் ஒரு நபரால் மட்டுமே முடியும். நிச்சயம் அவர் தீர்க்கமானவராகவும், சமசரத்திற்குட்படாதவராகவும் விஷயத்தில் ஆழமான ஈடுபாட்டோடும் இருக்க வேண்டும், அதேசமயம் மார்கெல் போலவே நீராவிக்குளியலுக்கான இடைவேளைகளையும் அல்லது குழந்தைப் பெற்றுக்கொள்வதையும் குற்றவுணர்வில்லாமல் அனுபவிப்பவராகவும் இருக்க வேண்டும். அப்படி ஒருவர்தான் வூச்சட். ஒரு நிறுவனராகவும் தாயாகவும், வூச்சட் பற்றிய எதிர்பார்ப்புகளும் அனுமானங்களும் யாராலும் ஊடுருவ முடியாதவை. தன்னைத் தவிர வேறு எதன் ஆதிக்கத்தாலும் அவர் இயங்குவதில்லை. அவரும் மார்கெல் போல வழிநடத்தும் ஒரு தலைவர்தான்.

ஐந்து குழுக்களை வழிநடத்தும் வூச்சட்டை ஒரு நாட்டை வழிநடத்தும் மார்கெல்லோடு நான் ஒப்பிட்டது மிகையாகக்கூட இருக்கலாம். ஆனால் ஃபோர்ப்ஸ் மார்கெலை சக்திவாய்ந்த பெண்மணியாக 2014இல் அறிவிக்கும் முன்பு, அவர் நீராவுக்குளியலறையில் இருந்த 35 வயது வேதியியலாளர். எனவே விஷயம் என்னவென்றால், ஒருவர் தன் சுய ஈடுபாட்டில் செயல்படும்போது அவர் நாட்டை வழிநடத்துகிறாரா அல்லது ஒரு நிறுவனத்தை வழிநடத்துகிறாரா என்பது முக்கியம் அல்ல. நாம் செய்வதில் என்ன பலன் இருக்கிறது என்பதைவிட முக்கியம் நாம் அதை எப்படி செய்கிறோம் என்பதுதான். அடுத்தமுறை நான் ஸ்டாட்பட்டுக்கு அழைக்கப்படும்போது, இதை மனதில் வைத்துக்கொள்வேன், அப்போது என்னுடைய அமெரிக்க போலிவெட்கங்கள் ஜெர்மானியர்களுக்கேற்ப நிச்சயம் மாறியிருக்கும். நேர்மையான வெளிப்பாடுகள்தான் எந்த நிலையிலும் சரியானதாக இருக்கும்.

 

 

ஏன் நீங்கள் திரைப்படவிழாக்களுக்கான நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்? 

சர்வதேச விற்பனை நிறுவனங்களில் பணிபுரிந்தபிறகு எனக்குப் புலப்பட்டது, பல நல்ல படங்கள் இந்தக் கடினமான மற்றும் போட்டி உலகில் விற்பனைக்காகப் போராட வேண்டியிருக்கிறது. இது போன்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது, திறமையான பல படைப்பாளிகளுக்குத் தங்கள் படங்களின் இருப்பை உலகுக்குக் காட்டவும் தங்களுக்கான சந்தைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் வழிவகை செய்து தருவதாக அமைய வேண்டும் என்பதுதான் நோக்கம்.  நாங்கள் சர்வதேச திரைப்படவிழாக்கள் உலகத்திற்கும் விற்பனை உலகத்திற்கும் இடையே ஒரு தகவல் பரிமாற்றத்தை செய்பவர்களாக இருக்கிறோம். நாங்கள் விழாக்குழுவினரிடம் அவர்களுடைய லட்சியங்களைப் பற்றியும், படங்களின் உள்ளடக்கம் பற்றியும் மேலும் திரையிடப்பட முக்கியமாக என்ன தேவை என்பதையும் பற்றி பேசுவோம். நாங்கள் விற்பனை முகவர்களோடும் தொழில் செய்வோம், மற்றும் பல்வகை வெளியீட்டு உத்திகளுக்காக கேட்பு ஆர்டரின் பேரில் விடியோ ஆன் டிமாண்ட்  முறையில்  படங்களை விற்பனையும் செய்யும்  உரிமம் பெற்றவர்களுடனும் கைகோர்த்துக்கொள்வோம்.

 

ஏன் நீங்கள் இசைத்துறையிலிருந்து திரைத்துறைக்கு மாறினீர்கள்? 

ஒரு வருடம் இசைத்துறையில் பணிபுரிந்தேன், ஆனால் அதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு என்னுடைய ஈடுபாட்டிற்கான வேலைகள் இல்லை, அதனால் நான் திரைத்துறைக்கு மாறியது இயல்பான விஷயம்தான். நான் திரைப்படம் மற்றும் இசை இரண்டையுமே ஒரே அளவில்தான் நேசிக்கிறேன். ஆனால், திரைத்துறை தொழில் சிக்கல்கள் நிறைந்த ஒரு துறையென்று நான் நினைக்கிறேன். மேலும் அங்கு உண்மையான ஒரு சமூக உணர்வு கிடைக்கும்.  திரைத்துறையும் பத்து வருடத்திற்கு முன்பு இசைத்துறை இருந்தது போலவே (ஜாம்பவான்கள் ஆதிக்கத்தால்) ஒரே திசையில்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் திரைத்துறையில் விநியோகத்திற்கான பல்வேறு வழிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

 

திரைப்பட விழாக்கள் சினிமா உலகில் என்ன மாதிரியான பங்காற்றுகிறது?

திரைப்படங்களை அறிமுகப்படுத்துவதற்கும் வெளிக்கொணர்வதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் இந்தத் திரைப்பட விழாக்கள் மிக மிக முக்கியமானவை. ஒரு திரைப்படத்தின் வாழ்சுழற்சியில் மிக முக்கியமான தருணம் இது. திரைப்பட விழாக்களின் நுட்பமான செயல்பாடும் அங்கீகாரமும் பார்வையாளர்களுக்கு உண்மையில் தாங்கள் விரும்பவது எதை என்பதைத் தொடர்வதற்கான வழியை ஏற்படுத்தித் தருகின்றன. அதோடு இயக்குனர்கள் தங்கள் தொழிலையும் திறமையும் வளர்த்துக்கொள்ளத் தேவையான தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவும் தயாரிப்பாளர்களைச் சந்திக்கவும் விநியோகத்திற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளவும் உதவுகின்றன. எங்களுக்கு, திரைப்பட விழாக்கள் பல முக்கிய மனிதர்களைச் சந்திக்கவும், சினிமா சந்தையின் தற்போதைய போக்கைப் பற்றி விவாதிக்கவும், பரந்து விரிந்த பார்வையைப் பெறவும் உதவுகின்றன. சமீபத்தில் நடந்த ஸுண்டான்ஸில் 100 சந்திப்புகளும், பெர்லினேலில் 300 சந்திப்புகளுமாக உலகிங்கெங்கிலுமிருந்து வந்திருந்த மனிதர்களைச் சந்தித்தோம்.

 

விழாக் குழுவினரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? 

இந்தச் சினிமாத் துறையில் பேரார்வம் கொண்டவர்கள் (மிகச்சிறந்த அறிவாளர்களும்கூட) திரைப்பட விழாக்குழுவினர்கள். அவர்களோடு வெறுமனே நாங்கள் முன்வைக்கும் படங்களைப் பற்றி மட்டுமே பேசுவதில்லை, மாறாக நிகழ்காலப் போக்கு, பார்வையாளர்களின் விருப்பு வெறுப்பு, நாடுகள் பற்றியும் சினிமா சந்தைகள் பற்றியும் புரிந்து கொள்வதற்காகவும் பேசுகிறோம். அதோடு முக்கியமாகக் காட்டப்பட வேண்டியது என்ன என்பது பற்றியும் விவாதிப்போம்.

 

சொல்லுங்கள் முக்கியமாகக் காட்டப்பட வேண்டியது என்ன?

மக்கள் பார்க்க விரும்பும் பல படங்கள் திரைப்பட விழாக்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றன – அவை மிகக்கடுமையான கதைகள், அவை பொதுவானவை அல்ல. துணிச்சலான கதை சொல்லல். இப்படங்கள் முதல் உலகளாவிய வெளியீட்டுக்குப் பிறகு வேறெங்கும் வெளியிடுவதற்கும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் தேவையான வெளியீட்டு வாய்ப்புகளை எப்போதுமே பெறாமல் போகலாம். ஆனால் அவை நிச்சயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான பார்வையாளர்களைச்  சென்றடைய வேண்டும்.  உலகம் முழுவதும் உள்ள அத்தகைய பார்வையாளர்களை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம்.

 

இதற்கு பயணம் ஒரு முக்கிய காரணியாக இருப்பது எப்படி? 

பயணம் மிக முக்கியமானது, ஏனெனில் அப்போதுதான் எது எந்த இடத்தில் வேலைக்காகும், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் சந்தைகளிலும் எப்படிப் படங்களை அறிமுகப்படுத்துவது போன்றவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நாங்கள் பலதரப்பட்ட மக்களின்  உண்மையான அனுபவத்தைப் பெறவும் விரும்புகிறோம். பணிநிமித்தம் ஒருபுறம் இருந்தாலும், பயணம் செய்வதில் கிடைக்கும் இன்பம் எப்போதுமே ஒரு பெரும்பாக்கியம்தான். பலதரப்பட்ட இடங்களும் காலமும் சூழ்நிலையும் உங்களையும் வித்தியாசமாக சிந்திக்க வைத்துக்கொண்டேயிருக்கும். நான் என் குழுவுக்கு ஆட்களை எடுக்கும்போது பார்க்கும் மிக முக்கியமான தகுதியே அவர்களுக்கு பிற கலாச்சாரங்கள் மீதான ஆர்வம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதுதான். ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட 30 நாடுகளுக்குப் பயணம் செய்வோம். சமீபத்தில் ஐந்து வாரங்கள் லாஸ் ஏஞ்சல்சில் தங்கினேன், மிகவும் பிடித்திருந்தது. திரைப்பட இயக்குனர்களுக்கு சர்வதேச மூலோபாயங்கள் நிச்சயம் தேவை என்று நினைக்கிறேன்.

 

நீங்கள் தயாரிப்பாளர்களுடனும் இயக்குனர்களுடனும் விநியோக உத்திகளைப் பற்றி விவாதிப்பதுண்டா? 

நிச்சயமாக. நாங்கள் அதிகம் தயாரிப்பாளர்களிடம்தான் பேச வேண்டியிருக்கும், பிறகுதான் இயக்குனர்கள். ஆனால், சிலசமயங்களில் ஒருவரே இரண்டையும் கையாள்பவராக இருப்பார். தயாரிப்பாளர்களுடன் பேசுவது கொஞ்சம் எளிதானது. ஏனெனில், வியாபாரம், விற்பனை தவிர்த்து படத்தைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவது குறைவாக இருக்கும். ஆனால் இயக்குனர்களுடனான விநியோகம் மற்றும் வெளியீட்டு உத்திகள் பற்றிய உரையாடல்களில் சிலசமயங்களில் பாரம்பரிய அணுகுமுறையே அதிகமிருக்கும், அவ்வேளைகளில் நாங்கள் அவர்களை விற்பனைப் பிரதிநிதிகளுடனும் விநியோகஸ்தர்களுடனும் தொடர்புகொள்ளச் செய்வோம்.

 

உங்களுடைய சட்டப் படிப்பு உங்களுக்கு உதவுகிறதா?

பிரான்சில் நீங்கள் சட்டம் அல்லது பொருளாதாரம் படிக்க தொழிற்பள்ளிக்கோ அல்லது பொது பல்கலைக்கழகத்திற்கோ போகலாம். அப்போது, எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை. ஆனால், ஒரு இடத்தை அடைய ஏதோ ஒன்று செய்ய வேண்டுமென்று நினைத்தேன். பெரும்பாலும், பல்கலைக்கழகத்தில் எனக்கு சலிப்புதான் ஏற்பட்டது. ஆனால், பட்டம் பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. ஏனெனில், சட்டம் நம் மனநிலைக்குப் பல வடிவம் கொடுக்கிறது, எப்படி எதைச் சிந்திக்க வேண்டுமென்று வழிசெய்து கொடுக்கிறது. நான் இன்றும் என்னுடைய ஒப்பந்தங்களைச் செய்வதற்கு கஷ்டப்படுகிறேன் ஆனால் அவற்றின் அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருக்கிறேன் என்பது உதவியாகவும் தைரியமாகவும் இருக்கிறது.

 

உங்கள் நிலையில் ஒரு நிறுவனத்தின் தலைவராக நீங்கள் வளர்ந்துவிட்டதாக உணர்கிறீர்களா? 

அப்படித்தான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் எதிர்கால நோக்கம் பற்றிய தெளிவில்லாமல் இருந்தேன். கடந்த சில வருடங்களில் பெற்றிருந்த பலவித அனுபவங்களும் தொடர்புகளும், இப்போது என்னை நான் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்த ஒரு தலைவராக உணர்கிறேன். இது மிகப்பெரிய பொறுப்பு, அதைவிட மிகப்பெருமையானதும்கூட. ஒரு நிறுவனத்தை உருவாக்கியதோடு என் வேலை நின்றுவிடவில்லை, இக்குழுவைச் சிறப்பாகக் கட்டமைப்பதே என்னுடைய தலையாய கடமை. அவர்கள் இந்நிறுவனத்தின் கட்டமைப்பில் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள் என்றால் நான் மகிழ்ச்சியாயிருப்பேன்.

 

நீங்கள் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்பும் ஒன்று என ஏதேனும் இருக்கிறதா?

இந்நிறுவனம் ஆரம்பித்து ஏற்கனவே ஐந்து வருடம் ஆகிவிட்டது, சிலநேரங்களில் ஏன் நம்மால் இன்னும் வேகமாக அதிகமாகச் செய்ய முடியவில்லை என்று நினைப்பேன். அப்போது நாம் எந்தளவுக்கு வளர்ச்சியை எட்டியிருக்கிறோம் என்று பார்ப்பேன். இப்போது எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. சிறப்பாகவும் வேகமாகவும் இருப்பது போலவே நான் ஒரு பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், சிலநேரங்களில் நாம் மெதுவாக செல்ல வேண்டியதும் அவசியமானதுதான். நான் பெண்ணியவாதியாக இருந்ததில்லை. இதுவரையிலும் அதற்கான தேவை இருப்பதாகவும் நினைக்கவில்லை. ஆனால் இது எனக்கு ஒரு உற்சாகமான திருப்புமுனைதான்.

 

அடைந்த மாற்றம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பிரான்சில், எங்களுடைய தலைமுறைப் பெண்களிடம் நாம் சண்டையிடத் தேவையில்லை என்கிற எண்ணம்தான் வளர்ந்திருக்கிறது. 60 மற்றும் 70களில் இருந்த பெண்ணியவாதிகளோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. அதனால் பெண்ணியவாதியாக இருப்பது காலாவதியாகிவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால் நான் உணர்ந்துவிட்டேன், நாம் வளர்ந்துவரக் காரணமாயிருந்த அந்தப் பெண்ணிய சிந்தனைதான் காலாவதியாகியிருக்கிறது. சமீபத்தில் பல்வேறு ஆண், பெண்களின் வருமான விவரங்களைப் பார்க்கும்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. பெண் தொழில்முனைவோருக்கான நிகழ்வுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய ஆரம்பித்திருக்கிறேன், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லது ஒரு குடும்பம் போல இருக்கும். நான் இதுவரை பெண் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தியதே கிடையாது. ஆனால் இப்போது அதைச் செய்ய வேண்டியிருக்கிறது.

 

உங்களுக்குக் குழந்தைப் பிறந்ததிலிருந்து ஏதேனும் மாற்றம் உண்டாகியிருக்கிறதா?

ஒரு குடும்பம் உருவாவது இயல்பு, இயற்கையின் முதல் முன்னுரிமை. எனக்குத் தொழில் இன்னொரு குழந்தை அவ்வளவுதான். அதற்கு முழுமையான ஈடுபாடும், தரமான நேரமும் பொறுமையும் அவசியம். மாற்றமடைந்தது என்னவென்று பார்த்தால் மக்களின் பார்வை மட்டும்தான். என்னுடைய குழந்தைக்கு மூன்று மாசமாகும்போதெல்லாம் நான் பெர்லினேலில் இருந்தேன், சிலர் வித்தியாசமாக எதிர்வினையாற்றினர். எனக்கு எரிச்சலூட்டுவது என்னவென்றால் குழந்தை பெற்றுவிட்டால் ஒரு வருடத்திற்கு வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார்கள் என்கிற அனுமானம்தான். ஆனால் எனக்கு என்னுடைய தொழிலையும் குழுவையும் கட்டமைப்பையும் வளர்ப்பதுதான் மிக முக்கியம். உருவாக்குவதையும் நிர்வகிப்பதையும் விட பணிசெய்வதற்கான பரந்து விரிந்த ஒரு இடமாக மாற்றுவதுதான் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்.

 

அடுத்து என்ன?

இந்த நிறுவனத்தை நீண்டகாலம் நடத்த வேண்டும் என்பது என் கனவு. நாங்கள் செய்வதை நேசித்து செய்கிறோம், இதிலேயே செய்ய நிறைய இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கிறோம் என்பதே பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது.

 

எப்போது அது வெற்றியடைகிறது என்பது, எப்படி உங்களுக்குத் தெரியும்?

மகிழ்ச்சியான இயக்குனர்கள். மகிழ்ச்சியான விழாக்குழுவினர்கள். நல்ல படங்கள் பெரும்பாலான மக்களைச் சென்றடைய வேண்டும்.

 

 தமிழில்: ஜெய சரவணன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!