home கட்டுரை, தமிழி சூஃபி பெண் கவிஞர் செய்யிது ஆசியா உம்மா

சூஃபி பெண் கவிஞர் செய்யிது ஆசியா உம்மா

 

  • கால சுப்ரமணியம்

 

இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்களில் சூஃபி ஞானிகளான குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களையும் பீரப்பாவின் பாடல்களையும் பற்றித்தான் நமக்குத் தெரியும். பெண்பால் சூஃபி கவிகளான தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள், கீழக்கரை அல் ஆரிஃபா செய்யிது ஆசியா உம்மா ஆகிய மூவரும், பக்தி கால சைவத்தின் காரைக்காலம்மையாரையும் வைணவ ஆண்டாளையும் போன்று குறிப்பிடத் தகுந்தவர்கள்.

கச்சிப்பிள்ளையம்மாளின் ‘மெய்ஞ்ஞானக்குறம்’, ‘மெய்ஞ்ஞானக் குறவஞ்சி’, ‘மெய்ஞ்ஞானக் கும்மி’ ஆகிய பாடல்கள், ‘மெய்ஞ்ஞான மாலை’ என்ற பெயரில் 1918-ல் அச்சாகியுள்ளன. ஆசியா உம்மாவின் ‘மெய்ஞ்ஞான தீப இரத்தினம்’ (62 பாடல்கள்), மாலிகா இரத்தினம் (22 பாடல்கள்) போன்றவை அரபுத்தமிழில் அச்சாகி வெளிவந்தன. இஸ்லாமியத் தமிழை அரபு வரி வடிவத்தில் எழுதி வைப்பதே அரபுத் தமிழ் எனப்படுவது. வேறு பல பாடல்களையும் ஆசியா உம்மா பாடியுள்ளார். இவைகளிலிருந்தெல்லாம் தேர்ந்தெடுத்த பாடல்களை, அரபுத் தமிழ் வடிவத்திலிருந்து தமிழ் வடிவத்திற்கு மாற்றி, 1988-ல் எம்.இத்ரீஸ் மரைக்காயர் என்பவர், ‘மெய்ஞ்ஞானப் பாடல்கள்’ என்ற நூலாகப் பதிப்பித்துள்ளார் (மரைக்காயர் பதிப்பகம், 85, தம்புச்செட்டி தெரு, சென்னை-1).

பாடல்கள் தவிர, ‘தரீகுஸ் ஸூலிஹீன்’ என்ற பெயரில், இஸ்லாமிய ஞான மார்க்கத்தை எளிய முறையில் விளக்கும் வசன நூல் ஒன்றையும், ஆசியா உம்மா அரபுத்தமிழில் எழுதியுள்ளார்.

வள்ளல் சீதக்காதியின் பரம்பரையில் வந்த ஹபீபு முகம்மது மரைக்காயருக்கும், ஹபீப் அரசனின் வழிவந்த உம்மு ஹபீபு உம்மாவுக்கும் மகள கப் பிறந்த செய்யிது ஆசியா உம்மாள் (1865-1947), இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் வாழ்ந்து மறைந்தவர். கல்வத்து நாயகத்தின் சீடராக விளங்கி, அவரிடம் தீட்சை பெற்றவர். பல்லாக்கு ஒலியுல்லாவிடம் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர்.

சிறுவயதில் இருந்தே, எப்போதும் இறைத் தியானத்தில் லயித்து, துதிப் பாடல்களை மனனம் செய்து, பாடிவந்திருக்கிறார். இறை வேட்டல்களையும் முனஜாத்துகளையும் மெய்ஞ்ஞானப் பாடல்களையும் இயற்றிப் பாடக்கூடிய திறமைபெற்று விளங்கியிருக்கிறார். பிறரிடம் அதிகம் பேசாது, தம் இல்லத்தின் மேல்மாடியில், பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்ததன் காரணமாக, ‘மேல்வீட்டுப் பிள்ளை’ என்று இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

மெய்ஞ்ஞானப் பாடல்கள் தொகுப்பின் முதலாவது பாடல், ஹலாஸிப் பாடலாக அமைந்துள்ளது.

‘வாடுதே மனம் வாடுதே அறி யூனுஸுல்
தேடும் பொருள் தந்தே சீக்கிரம் ஹலாசாக்குவாய்.’

‘விடுதலை – நிவாரணம் – ஆறுதல் – மீட்சி தருவாயாக’ என்பது போன்ற கருத்தைக் கொண்டது ‘ஹலாசாக்குவாய்’ என்ற சொல்தொடர். இரண்டாவதாக உள்ள ‘முனஜாத் வல்லபம்’ எனும் புகழ்ப்பாடலில் அல்லாவின் நாமங்களைப் பாடிக் குறையிறைஞ்சுகிறார்.

‘மாணிக்கவிளக்காக்கி வை, மதி தந்ததைதூண்டச் செய்
பூணிக்கமாய் கேட்டதெல்லாம் புகழாய் அருள்புரி ஆமீன்.’

தொடர்ந்து, குரு முஹியித்தீன் வணக்கம், குணங்குடி மஸ்தான் சாகிபு, கல்வத்து நாயகம் வலி, பல்லாக்கு வலி ஆகியோர் மீது துதிப்பாடல்கள் உள்ளன. உதாரணமாகச் சில வரிகள்….

‘எத்தனையோ ஓதிடினும் எவ்விதங்கள் கற்றாலும்
சித்தந் தெளியார்க்கு சித்தி ஜெயமோ பேரானந்தமே.
பணமும் ஜனமும் பண்பான ஆஸ்திகளும்
ஜனங்களை விட்டேகையிலே சதமோ பேரானந்தமே.’

‘ஆண் என்பதும்பெண் என்பதும் ஆதியன்றி வேறொன்றில்லை
தான் என்பதையறிய தலமருள் பேரானந்தமே….
மூலப் பொருளை நன்றாய் மோனமுடனே யறிந்தால்
வாலைப் பிராயம் வந்து வாய்க்குமே பேரானந்தமே.’ (பேரானந்தக் கண்ணி)

‘ஏழு கடல் அளந்திடலாம்,
என் விதியளக்கவே எலாதே எந்தன் நபியே….
பொல்லாளின் நெஞ்சிருள் எல்லாந் தொலைந்திடுமே
புகழாக வந்த நபியே.’ (நபி தாஜுல் அன்பியா வணக்கம்)

‘சிந்தையும் நாவையும் ஜெயிக்க முடியவில்லை
ஜெயிக்க வலுதாரும் வலியே
சித்தி ஆனந்தமெனும் சிவராஜ யோகமென்னில்
தெளிவாக்க அருளும் வலியே
விந்தையாய் வந்ததொரு வேதாந்த தீபமெனும்
வெளிச்சமுள்ளருளும் வலியே
வேதாவே நல்ல உயர்நாதாவே என்றன் உயிர்
தாதாவே அருளும் வலியே
எந்தனுயிர் உந்தனுயிர் என்நிலை உன் முன்னிலையாய்
ஏகநிலை அருளும் வலியே.’

‘எந்தனுக்குள்ளே இலங்கும் உயர் சூட்சியத்தை
விந்தையுடன் காட்டியருள்வேதா சதக் வலியே
பேசமுடியாத உயர் பேரின்ப சாகரத்துள்
ஆசையுடன் முழுக அருளும் சதக் வலியே.’

‘ஆவி கலங்குதையோ ஆதரிப்பார் நீயன்றி இல்லை
பாவி என்றே தள்ளாதென்னைப் பாரு, கப்பாரானவனே.’

என்றெல்லாம் உருகிப் பாடியுள்ளார் ஆசியா உம்மா.

•••

ஆசியா உம்மா பற்றி இவ்வாறு விதந்து கூறியுள்ளார் கவிஞர் பிரமிள் :

“பக்தி இயக்கம் சூஃபிகளுக்கும் இந்திய உண்மை தேடிகளுக்கும் பொதுவாக இருந்திருக்கிறது. மத வரம்புகளை மீறி இதயத்தை உருக்கும் ரஸவாதமாக சூஃபி பாடல்களும் பக்தி இயக்கப் பாடல்களும் உள்ளன. அருள் சொல்லாடல்கள் மூலம் இவை தத்துவ மறைபொருள் புதையல்களாகவும் பிறந்துள்ளன. இவ்விதம் பார்த்தால் ஜலால் உத்தீன் ரூமியின் பாடல்களும் மாணிக்கவாசகரின் பாடல்களும் இந்தவகை இலக்கியத்தின் சிகரங்களாகும். தமிழில் இன்று சூஃபிகள், இலக்கிய வடிவினை ஆண்டு தங்களை வெளியிடுகின்றனர். சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மாவின் மெய்ஞ்ஞானப் பாடல்கள், இதற்கு ஒரு உதாரணம். தனக்கு முந்திய மகான்களைக் குறித்து இவர் பாடியிருப்பவை, மிகவும் ஆழமாக இதயத்தை நெகிழ வைப்பவை ஆகும்.

“குணங்குடி மஸ்தானைப் பலரும் அறிவர். ஆனால், சமகாலத்திய சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மாவைப் பலரும் அறியவில்லை. இவர் எழுதியுள்ள மெய்ஞ்ஞானப் பாடல்கள், எவ்விதமான போலித்தனமும் அற்ற சுயமுத்திரை கொண்ட, எளிமையான உயிரோட்டத்தில் பிறந்தவை.

“ஆசியா உம்மாவின் பாடல்கள் அரபித்தமிழில் இயற்றப்பட்டவை. சூஃபி ஞானவான்கள் பலரது பெயரும் புகழுமே இவற்றின் கருப்பொருளாகும். சமஸ்கிருத மரபும் தமிழ் மரபும் இணைகிற மணிப்பிரவாள முறை போன்றது அரபுத் தமிழ் மரபு. மொழியூடகப் பிணைப்புகளின் காலங்காலமான இயக்கங்களுள் ஒன்று இது. தமிழில் சமஸ்கிருதத்தையும் சமஸ்கிருதத்தில் தமிழையும் காண்கிறதோடு நின்றுவிடாமல் அரபி, பார்ஸி, ஹீப்ரூ மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையில் உள்ள தொடர்புகளையும் நாம் காண இத்தகைய படைப்புகள் தூண்டுதல் தரவேண்டும்.” (பிரமிள். ‘சூஃபிஇயக்கம்’ லயம், அக்டோபர்1996.)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!