home உன்னதம், நேர்காணல் தற்கால நவீன ஸ்பானிய மொழிக் கவிதை

தற்கால நவீன ஸ்பானிய மொழிக் கவிதை

ஜி.ஏ.சேவ்ஸ் நேர்காணல்

 

ஜி..சேவ்ஸ் 1979-ல் கோஸ்டா ரிக்காவில் பிறந்தவர். க்வெண்டஸ் எக்ஸெட்ரா சிறுகதைகள் (2004) மற்றும் விதா அஜேனா கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். ராபின்சன் ஜெஃபர்ஸ்ஸின் கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்துள்ள சேவ்ஸ், கோஸ்டா ரிக்காவைச் சேர்ந்த கார்லோஸ் டி லா ஓஸ்ஸாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளையும் தொகுத்துள்ளார். சமகால ஸ்பானிய மொழிக் கவிதை பற்றியும் ஒரு மொழிபெயர்ப்பாளராக அவருடைய ஆக்கங்கள் பற்றியும் மேலும் மொழிபெயர்ப்புக்கும் கவிதைக்கும் இடைப்பட்ட அனைத்துக் கூறுகள் பற்றியும் சேவ்ஸ் உடன் Poetry International இதழுக்காக நேர்காணல் கண்டவர் ஜெனிஃபர் மின்னிட்டி ஸிப்பி.

 

ஜெனிஃபர் மின்னிட்டிஸிப்பி : உங்கள் பார்வையில், இன்றைய காலகட்டத்தில் ஸ்பானிய மொழியில் எழுதும் மிகச் சுவாரஸ்யமான கவிஞர்கள் எவர்? எது அவர்களை அவ்வாறு கட்டமைத்தது? எது அவர்களை நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய கவிஞர்களாக உருவாக்கியது?

ஜி.ஏ.சேவ்ஸ்: தனித்துவமான குரல்களைக் கொண்ட ஃபேபியா மாரபிட்டோ (மெக்சிகோ) மற்றும் ரேஃபெல் குர்த்தோஸி (உருகுவே) ஆகியோர் எனக்குத் தெரிந்தவரை சிறப்பு மிக்கவர்கள் எனக் கருதுகிறேன். மாரபிட்டோ அவருடைய மொழிக்கு மிக நெருக்கமான ஒரு புகார் வகையைப் பெற்றவர். குர்த்தோஸி முடிவற்ற பரிசோதனை ரீதியான ஒரு நற்பேறு வகையைச் சார்ந்தவர்.

நான் சமீபத்தில் லூயி ஃபெலிப் ஃபேபர் என்ற மற்றொரு மெக்சிகோ கவிஞரின் படைப்பு பற்றி அறிந்தேன். அவருடைய கவிதைகள் பழைய தந்திரங்களை (ஒலியியைபு கொண்ட சிறு செய்யுள் போல) மீண்டும் பயன்மிக்கதாகவும் வேடிக்கைமிக்கதாகவும் உருவாக்குவதற்கு தகுதி பெற்றவையாகத் தோன்றுகின்றன.

ஸ்பெயின் மொழியில், ஜ்வான் கார்லோஸ் மேஸ்டரின் பல வகையான படைப்புகள் எனக்குப் பிடிக்கும். அவர் மிக ஆழமான சுயம் சார்ந்தவர். ஆனால் ஒப்புதல் வாக்குமூலக் கவி அல்ல. மிக வலுவான சமூகவியலாளர். ஆனால் கொஞ்சம் கூட அரசியல் வகையைச் சார்ந்தவர் அல்ல. அவர் எனக்கு நவீன கால ஜான் டான் போலக் காட்சி தருகிறார்: அவர் காணும் அனைத்தும் கவிதையாக உருவாகிறது.

ஜேவியர் பாயரஸ் (கெளதமாலா) நாடகீய விவரணைகளுக்கான அற்புதமான பார்வையுடன் கூடிய நம்பமுடியாத வகையில் ஒரு கண்டுபிடிப்புக் கவிஞர்.

மேலும் இரண்டு கோஸ்டா ரிக்கா கவிஞர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பல வருடங்களுக்கு வாசித்துக் கொண்டே இருப்போம் என நினைக்கிறேன்: சில்வியா பிரனேஸி (ஒரு வஞ்சக மனப்பான்மையுடன் கூடிய கோபக்கனல் சாமுவேல் பெக்கட்) மற்றும் க்ளாஸ் ஸ்டைன்மெட்ஸ் (அறிவுக்கூர்மை என்பது உள்ளார்ந்த உணர்வுகளின் மறுப்பு அல்ல என்பதைப் புரிந்து கொண்ட கவிஞர்). ஸ்டைன்மெட்ஸையும் பிரனேஸியையும் வாசித்த பொழுது நான் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருந்தது. ஆம், கவிதை மூலமாக மட்டுமே வெளிப்படுத்தச் சாத்தியமானவை இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும் கவிதை எனும் ஊடகம் ஒப்புக் கொள்ளத்தக்கது மட்டுமல்ல, மிகவும் அவசியமானதும்கூட. வேறு இரண்டு கோஸ்டா ரிக்கா கவிஞர்களும் இருக்கின்றனர். அவர்கள் நான் வாழும் இடம் எனக்கு எழுத உகந்தது என உணர வைத்தவர்கள். லூயி சேவ்ஸ் (பொருத்தப்பாடு எதுவுமில்லை) மற்றும் ஆல்ஃபிரட்டோ ட்ரேஜோஸ். அவர்களுடைய கவிதைகள் நான் வாழும் நகரத்தைப் போலவே எனக்கு மிகப் பரிச்சயமானவை.

 

ஜெனிஃபர்: ஐரோப்பியக் கவிஞர்களில் யார் யார் அவர்களுடைய சமகால ஸ்பானிய மொழிக் கவிஞர்களால் நன்கு அறியப்பட்டவர்கள் அல்லது நேசிக்கப்பட்டவர்கள்? மேலும் எந்த அமெரிக்கக் கவிஞர்கள்?

சேவ்ஸ்: நான் இங்கு குறிப்பிடுபவர்களில் சில பெயர் விடுபடல்களாக இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.  அனைத்து முதன்மையான பெயர்களும் (கின்ஸ்பெர்க், ஆஸ்பெர்ரி, ஸெலான், ஸிம்போர்ஸ்கா, என்ஸென்பெர்க்கர், பாவேஸ், பான்ஃபாய், ட்ரான்ஸ்ட்ரோமர்) நன்கு அறியப்பட்டவை. அனைத்து இடங்களிலும் உள்ளவர்கள் ஒரு கருத்தியலை நாடுகின்றனர் என நினைக்கிறேன். அவர்களுடைய படைப்புகள் அதற்குச் சான்று. டான் பேட்டர்சன் மற்றும் ஜர்கன் பெக்கர் பற்றி பலருக்குத் தெரியாது என நினைக்கிறேன். இது சற்று வெட்கப்பட வேண்டிய விஷயம். ஒரு வேளை நான் ஒரு தவறான அண்டை இடத்தில் கூட வெறுமனே அலங்கரித்துக் கொண்டிருக்கலாம்.

 

ஜெனிஃபர்: சிருங்கார மொழியில் ஈடுபடும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்தில் அதன் அதீத வரம்புக்குட்பட்ட ஒலியியைபுகளுடன் அந்தந்த மொழிகளின் இசைத்தன்மையைக் கைப்பற்றுவதிலேயே அதிகமாகப் போராடுகின்றனர். நீங்கள் ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிய மொழிக்குக் கவிதைகளை மொழிபெயர்க்கும் பொழுது, உங்கள் செயல்பாடு எவ்வாறு இருந்தது? எந்தக் கவிஞர்கள் ஸ்பானிய மொழிக்கு மொழிபெயர்க்க ‘இணக்கமாக’ இருக்கின்றனர்? எவர் கடினமாக இருக்கின்றனர்?

சேவ்ஸ்: இது தவறு என நினைக்கிறேன். எங்கள் இலக்கு மொழிகள் அசல் நிலைப்புத் தன்மையைக் கொஞ்சம்கூட மறு உருவாக்கம் செய்ய இயலாத பொழுது, மேலும் எங்கள் தாய்மொழிகள் சற்று பொருத்தமற்றவையாக இருப்பதாக நினைத்தவாறு மொழிபெயர்ப்பை முழுமை செய்ய இயலாத பொழுது நாங்கள் மிக விரைவாக நம்பிக்கை இழந்து விடுகிறோம். உதாரணத்திற்கு, ஸ்பானிய மொழி ஒலியியைபு மிகுந்து இருப்பதாகத் தோன்றுவதற்குக் காரணம் அதன் ஐந்து உயிர் ஒலிகளுடன் அது முற்றிலும் ஒழுங்கான வடிவத்தில் இருக்கிறது. “ஓ” எனும் எழுத்து எப்பொழுதும் “ஓ” எனும் ஒலியியைபுடன் இருக்கிறது. அதனால் தான் “ரிஸோ” மற்றும் “மோஸோ” எனும் வார்த்தைகள் ஒலியியைபுகளாகக் கடந்து செல்கின்றன. எனினும், யாப்பிலக்கணத்தின் சிறந்த தன்மையுடன் உள்ள ஒவ்வொரு எழுத்தாளரும் இது ஒரு வரம்பு எனக் கூறுவார் என நினைக்கிறேன். ஆங்கிலம் சற்று வெறியூட்டும் விதமாக முறையற்றதாக உள்ளது. அதாவது அது ஸ்பானிய “ரிஸோ” (rezo) எனும் வார்த்தையை “ரிஸில்” (wrestle) எனும் ஆங்கில வார்த்தை போல உச்சரிக்கிறது. இது ஒரு வரம்புக்கும் மேலாக ஒரு வாழ்த்து என நினைக்கிறேன்.

ஸ்டான்லி க்ராஃபோர்ட்டின் நாவலான Log of the SS வரை மொழிபெயர்ப்பு செய்து விட்டேன். நான் செய்ததிலேயே மிகக் கடினமாக இருந்தது Mrs. Unguentine. அது நூறு பக்கங்களை மட்டும் கொண்டது. இருந்தாலும் அதைச் செய்து முடிக்க இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டியிருந்தது. நான் மற்றொரு மொழிபெயர்ப்பாளரான ஆண்ட்ரியா மிக்கஸுக்கு ஒரு ஆலோசகராகவே பெரும்பாலும் செயல்பட்டு வந்தேன். ஆயினும் அது மிகவும் சவாலான, முழுமையான செயலாக இருந்தது.

 

ஜெனிஃபர்: மொழிபெயர்ப்பாளராகச் செயலாற்றுவது உங்கள் கவிதைகள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது? பிற எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வதிலிருந்து இளைய கவிஞர்கள் எதைக் கற்றுக் கொள்ள முடியும்?

சேவ்ஸ்: எவ்வாறு எழுதுவது என்பதைக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முழுமையான தேவையிலிருந்தே நான் மொழிபெயர்க்கத் துவங்கினேன். உங்கள் அமைப்பினுள் ஊக்கத்தை நுழைய அனுமதிப்பதற்காக மாமேதைகளின் மாபெரும் படைப்புகளை மறு அச்சு செய்வது பற்றிய மிகப் பழமையான இந்த அறிவுரையை எழுத்தாளர்களிடமிருந்து நீங்கள் அதிகமாகக் கேட்டிருப்பீர்கள்.  நல்லது, நான் ஊக்கத்திற்காக அதிகமாகக் கவலைப்படுவதில்லை. ஆயினும், இவ்வாறு செயல்படுவதிலிருந்து நான் நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன். உங்கள் முன் மிகவும் ஆற்றல்மிக்க ராபின்சன் ஜெஃபர்ஸின் கவிதை இருக்கிறது, ஸ்பானிய மொழியில் உள்ள ஒரு கதையின் தளர்ச்சியான சிறு நகைச்சுவையும் உங்கள் முன் இருக்கிறது. இரண்டுக்கும் என்ன தொடர்பு என உங்களுக்கு வியப்பு எழுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அசல் நுட்பத்தின் மீது மிக உன்னிப்பாக உங்கள் கவனத்தைச் செலுத்தி, அதை உங்கள் படைப்பில் உபயோகிக்கவும் கற்றுக் கொள்கிறீர்கள். இறுதியாக, வாசிப்பது எவ்வாறு என்பதை மொழிபெயர்ப்பு கற்றுத் தருகிறது. அது ஒரு சிறந்த படைப்புக்கு அவசியமானதும்கூட.

 

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

 

உன்னதம் 38 வது இதழில் (மே 2017) வெளிவந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!