home உன்னதம், நேர்காணல் தற்கால நவீன ஹீப்ரு மொழிக் கவிதை

தற்கால நவீன ஹீப்ரு மொழிக் கவிதை

இலி இலியாஹூ நேர்காணல்

இலி இலியாஹூ 1969-ல் பிறந்தவர் ரமத்கானைப் பூர்வீகமாகக் கொண்ட இஸ்ரேல் கவிஞர். ஹீப்ரு மொழியில் மிக அதிகமாகப் பாராட்டுதலுக்குரிய I, and not an Angel (2008) மற்றும் City and Fears (2011) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்:  கவிதைக்கு அப்பால், கவிதை மற்றும் கலாச்சாரம் பற்றி, தான் ஆசிரியராக இருக்கும் Haaretz Daily Newspaper- ல் எழுதி வருகிறார். Poetry International இதழுக்காக, ரேச்செல் ஜெல்மன் மற்றும் கேர்லி ஜாய் மில்லர் நிகழ்த்திய உரையாடல்.

 

ரேச்செல் ஜெல்மன் மற்றும் கேர்லி ஜாய் மில்லர்: கவிதை தவிர வேறு எதில் உங்கள் ஈடுபாடு?

இலி இலியாஹூ: Haaretz Daily Newspaper-ல் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் பற்றி எழுதுகிறேன். எனவே தினசரி நான் ஆசிரியர் குழுவில் செயல்படுகிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை, அவளுக்கு 4 வயதாகிறது. கூடியவரை அவளுடன் இருக்கவே அதிகம் விரும்புகிறேன்.

 

கேள்வி: எப்பொழுது கவிதை எழுதத் தொடங் கினீர்கள், ஏன்?

இலியாஹூ: நான் துவக்கப் பள்ளியில் பயிலும் போது கவிதை எழுதத் துவங்கினேன். ஆரம்பத்திலிருந்தே எனக்குப் புத்தகங்கள், சொற்கள் மிகவும் பிடிக்கும். எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன், சொற்கள் மற்றும் சொற்றொடரியல் மூலம் உருவாக்கப்படும் இசையின் ஜாலவித்தையை எழுத்தில் கொண்டு வர பிரயத்தனம் எடுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கென்று ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட கவித்துவ மொழி இருப்பதை உணர நீண்ட காலம் பிடித்தது. அதன் மூலம் எனது வாழ்வு பற்றிப் பேச முடிந்தது. பிற கவிஞர்களை அப்படியே பின்பற்றுவதில்லை.

 

கேள்வி: உங்கள் மனதில் அதிகமாக வியாபித் திருக்கும் விஷயங்கள் எதைச் சார்ந்தவை மற்றும் உங்கள் கவிதையில் எவ்வாறு வெளிப்படுகின்றன?

இலியாஹூ: நான் வார்த்தைகளால் சூழப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். எனக்கு ஒலியியைபுகள், அதாவது வார்த்தைகளில் உள்ள எழுத்துகளின் ஒழுங்கு மிகவும் பிடிக்கும். ஒரு வார்த்தை பல்வேறு சூழல்களில் பெறும் பல்வேறு அர்த்தங்கள் என் மனம் முழுதும் நிரம்பி உள்ளன. உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி சிந்திப்பதில் கூட நான் சில சமயங்களில் மூழ்கி இருப்பேன். இவையெல்லாம் எனது கவிதையில் பிரதிபலிப்பதாக நினைக்கிறேன்.

 

கேள்வி: உங்கள் கவிதையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பதட்டங்கள் எவை? எது உங்களை நடுயிரவில் எழுப்பி எழுத வைக்கிறது?

இலியாஹூ: பொதுவாகவே கலை என்பது பதட்டங்களை அடிப்படையாகக் கொண்டதும், பதட்டங்களைப் பற்றியதும் என நினைக்கிறேன். நான் எழுதும் அனைத்தும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் அல்லது உணர்வுகள் அல்லது கருத்தியல்களுக்கு இடையில் எழும் பதட்டங்கள் பற்றியவைதான். இந்த அனைத்து முரண்பாட்டு உணர்வுகளையும் ஒருவித ஒழுங்கில் கட்டமைக்கப்படும் தளம் தான் கவிதை. கவிதையில் முதன்மையான பதட்டம் என்பது அழகுக்கும் உண்மைக்கும் இடையில், அழகியலுக்கும் நேர்மைக்கும் இடையில் இருப்பதாகவும் நான் கருதுகிறேன். ஆனால் எது என்னை நடுயிரவில் எழுப்பி எழுத வைக்கிறது என்றால், வழக்கமாக ஒரு கருவோ அல்லது கருத்தியலோ அல்ல, தம்மை மேம்படுத்தச் சொல்லி எனது மனதில் தோன்றும் வார்த்தைகளின் ஒரு கலவை தான் அது.

 

கேள்வி: இஸ்ரேலில் வசிப்பது உங்கள் கவிதை மீது எவ்வாறு தாக்கம் செலுத்தி, அதை வடிவமைக்கிறது?

இலியாஹூ: இது மிகவும் சிக்கலான கேள்வி. இந்த நாட்டைப் போலவே பெரும்பாலும் சிக்கலானதுதான். இஸ்ரேல் மனிதரின் முக்கியமான கட்டமைப்பு அனுபவங்களில் ஒன்று ராணுவ சேவை, குறிப்பாக ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரிவது. இந்த அனுபவத்துடன் நேரடியாகத் தொடர்புள்ள எனது கவிதைகள் சில இருக்கின்றன.
ஆனால், அதற்கும் மேலாக, இஸ்ரேல் மிகவும் பதட்டமான, அதிக மக்கள் தொகை கொண்ட, வன்முறை சூழ்ந்த, இரைச்சல் மிகுந்த நாடு. இவை அனைத்தும் எனது கவிதையின் பின்புலம். இந்தப் பின்புலத்திற்கு எதிரான ஒரு தனிநபரின் போராட்ட ஆவணமாகவே எனது கவிதையின் ஒரு பகுதி இருப்பதாக நினைக்கிறேன். நானும் ஒரு நகரத்தில் வசிக்கிறேன், அந்த நகரம் அதன் கட்டிடங்கள், சாலைகள், நடைபாதைகள், படிக்கட்டுகள், சன்னல்களுடன், எனது கவிதையின் பின்னணிக் காட்சியாகவும் உருமாற்றம் மற்றும் படிமங்களின் முதன்மையான ஆதாரமாகவும் உள்ளது.

 

கேள்வி: உங்கள் மீது கவித்துவத் தாக்கம் செலுத்துபவர்கள் யார் யார்? யாருடைய புத்தகங்களை நீங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கிறீர்கள்?

இலியாஹூ: முக்கியமானது பைபிள். இதை நான் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன். அது அதனுள் மாபெரும் கவித்துவ அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒரு வேளை, ஹீப்ரு மொழியில் சிறந்த கவிதைகள் எழுதப்பட்டிருக்கலாம். மேலும் பல்வேறு வழிகளில் என் மீது தாக்கம் செலுத்தும் பல கவிஞர்கள் இருக்கின்றனர். சிலர் தமது கவிதையில் உள்ள உள்ளீடு மூலம் தாக்கம் செலுத்துகின்றனர், சிலர் தமது குறிப்பிட்ட, தனித்துவமான சொல் வீச்சு மூலம் தாக்கம் செலுத்துகின்றனர். ஒரு சிலர் தமது கவிதையில் உள்ளார்ந்திருக்கும் இசைத்தன்மை மூலம் தாக்கம் செலுத்தி வருகின்றனர். சில பெயர்களைப் பட்டியலிட வேண்டுமென்றால், அமீர் கில்போவா, அவோட் யெஸூரோன், நாதன் ஜாக், பயாலிக், ஆல்டர்மன், டாலியா ரபிக்கோவிச், இட்ஸக் லவோர் மற்றும் பிறர். நான் ஆங்கிலக் கவிதைகளையும் வாசிக்கிறேன். எலியட், யேட்ஸ், தெட் ஹூஸ், பில்லி கோலின்ஸ், கார்ல் சாண்ட்பர்க், அனைவருக்கும் மேலாக வால்ட் விட்மன் கவிதைகள் மீது எனக்குத் தீராக்காதல். நான் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளையும் வாசிக்கிறேன். இஸ்ரேலில் போலந்து கவிதைகளை மொழிபெயர்த்த சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றனர். எனக்கு ஸிம்போர்ஸ்கா மற்றும் மிலோஸ் கவிதைகள் மிகவும் பிடிக்கும். அவர்கள் எனது கவிதைகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.

 

கேள்வி: உங்கள் கவித்துவ அழகியலை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்?

இலியாஹூ: கவிதை என்பது அழகு, அறிவு மற்றும் இசையின் கலவை என நான் நினைக்கிறேன். எனது கவிதையில் இவற்றை ஒருங்கிணைக்க முயல்கிறேன். ஒரு கவிஞன் சொற்பொருள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் அதன் ஒலியியைபு, இசைத்தன்மை, அது அழைத்துவரும் உறவுகள் மற்றும் அது பின்பற்றும் பிற சொற்களுடனான இணைப்புகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். அனைத்துக்கும் மேலாக, கவிதைகள் உட்பொதிந்த இசையைப் பெற்றிருக்க வேண்டும், அது ஒரு கட்டமைக்கப்பட்ட போக்கில் எழுதப்பட்டிருக்கவில்லை என்றாலும்கூட.

 

கேள்வி: ஹீப்ரூ மொழியில் எதை அதிகம் நேசிக்கிறீர்கள்?

இலியாஹூ: ஹீப்ரு மொழியின் பழங்காலப் பின்னணியை மிகவும் நேசிக்கிறேன். ஹீப்ரு மொழியில் பரஸ்பர வேர்களிலிருந்து பலவிதமான வார்த்தைகள் இணையும் நிதர்சனம் எனக்குப் பிடிக்கும். உலகில் நிகழும் நிகழ்வுகளுக்கு இடையில் எப்பொழுதும் ஒரு ஆழமான உறவு உள்ளது என்பதை உணர முடியும். ஹீப்ரு மொழியும் அந்தத் தகுதிப்பாட்டைப் பெற்றிருப்பதை ஒரு சில வார்த்தைகளில் கூற முடியும். பைபிள் இதைக் குறிப்பிடத்தக்க வழியில் செய்துள்ளது.

 

கேள்வி: ஹீப்ரு மொழியில் நீங்கள் ஏதேனும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்களா?

இலியாஹூ: ஆம், சில சமயங்களில். நான் அதனுடன் முழுமையாக ஒத்துப் போகவில்லை. எப்பொழுதாவது நான் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக இருந்தால், அதை ஹீப்ரு மொழியில் வாசிப்பதற்காக, எனக்காக முதலில் மொழிபெயர்ப்பு செய்து கொள்வேன். அது ஹீப்ரு மொழியில் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு கவிதையாக இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் மொழிபெயர்ப்பில் அதன் ஆற்றலும் அழகும் தொலைந்து போவது போல உணர்கிறேன். இதுவரை எலியட்டின் “The Love Song of J. Alfred Prufrock,” மற்றும் சில பில்லி கோலின்ஸ், வால்ட் விட்மன், பிலிப் லார்கின் கவிதைகளையும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்.

 

கேள்வி: உங்கள் கவிதைகளை நாங்கள் மொழிபெயர்த்தோம். குடும்பம் மற்றும் உங்கள் குடும்ப வாழ்வின் கதைக்களம் பற்றி அறிந்தோம் – உங்கள் படைப்புகளில் இந்த உள்ளீடு அதிகம் இடம்பெறுகிறதா?

இலியாஹூ: ஆம். எனது கவிதை வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே எனது வாழ்க்கை, எனது அனுபவங்கள் பற்றிப் பேசுவதற்கான ஒரு ஒழுங்கில் சரியான கவித்துவத் தன்மையைக் கண்டறிய நான் முயற்சித்து வருகிறேன். ஏனென்றால், எனக்கு இது நவீன கவிதை/புனைகதைக்கும் தத்துவத்திற்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று. தத்துவத்தில், ஒரு பெரிய கருத்தியலுடன் துவங்கி, பின்னர் ஒரு தனிநபரிடம் செல்லலாம். நவீன கவிதையில் ஒரு தனிநபர் அனுபவத்தில் துவங்கி ஒரு பெரிய கருத்தியல் நோக்கிச் செல்லலாம். மேல் மட்டத்தில் உள்ள விஷயங்களுக்கும் ஆழத்தில் புதைந்து கிடக்கும் விஷயங்களுக்கும் இடையில், வெளிப்படுத்தப்பட்டது மற்றும் மறைந்து கிடப்பதற்கும் இடையில் உள்ள அந்த இடைவெளி மீதும் நான் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். இந்த இடைவெளி உள்ள தளம் குடும்பத்தினுள் சற்று துருத்திக் கொண்டு நிற்கும். ஏனென்றால், அது மிகவும் அந்யோந்யமான தளம், இன்னமும் பல விசயங்கள் அந்த மட்டத்தின் அடியில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

 

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

 

உன்னதம் 38 வது இதழில் (மே 2017) வெளிவந்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!