home உன்னதம், கவிதை தஸ்லிமா நஸ்ரின் கவிதைகள்

தஸ்லிமா நஸ்ரின் கவிதைகள்

செங்கல் உடைக்கும் பெண்

 

நடைபாதையில் செங்கல் உடைக்கும் பெண்

உடைக்கும் செங்கல் போல சிவப்புநிற புடவை, கொதிக்கும் வெயிலில் கல்லுடைக்கிறாள்,

அந்த மாநிறப் பெண் கல்லுடைக்கிறாள்.

இருபத்தொன்று இருக்குமா? பார்ப்பதற்கு நாற்பதை போல, ஏழு குழந்தைகளுக்கு தாயாகி,

பத்து டாகாவிற்கு நாள் முழுதும், ஏழில் ஒன்றுக்கு கூட உணவுக்கு போதாமல்,

தினம் தினம் கல்லுடைக்கிறாள்.

அவளுக்கு பின்னால், குடையின் கீழ் ஒரு ஆண் கல்லுடைக்கிறான்,

நாள் முழுவதும் கல்லுடைக்கிறான்,

நிழலில் அவன் நாளொன்றுக்கு இருபது டாகாவிற்கு கல்லுடைக்கிறான்.

கல்லுடைக்கும் அவன் என்ன கனவு காண்பான்?

குடையின் நிழலில் கல்லுடைப்பவன் ?

கல்லுடைக்கும் அவள் என்ன கனவு காண்பாள்?

அவளுக்கு ஒரு கனவு இருக்கிறது, ஒரு குடை வாங்கும் கனவு,

வெயில் படாமல் கல்லுடைக்கும் கனவு,

ஒரு விடியலில் ஆணாக மாறி, 

இருமடங்கு சம்பளத்திற்கு கல்லுடைக்கும் கனவு.

 

அவள் கனவு கனவாகவே போய்விடுகிறது

விடியலிலும் அவள் பெண்ணாகாவே இருக்கிறாள், கல்லுடைக்கிறாள்

ஒரு குடையுமில்லை, கிழிந்தது கூட, கொதிக்கும் வெயிலில் கல்லுடைக்கிறாள்.

புதுச்சாலைகளும், உயர் கோபுரங்களும் இவள் உடைத்த கல்லாலே கட்டப்பட்டன

ஆனால் போன வருட புயல்கொண்டு போனது அவள் வீட்டுக்கூரையை

இக்குடிசையோ ஒழுகுகிறது, ஒரு தகரக்கூரை வாங்கும் கனவும் அவளுக்குண்டு

அவள் கனவு கனவாகவே போய்விடுகிறது

காலையில் அவள் கூடாரமோ நீரில் மூழ்கிக்கிடக்கிறது

அக்கம் பக்கத்தாரிடமும், அகிலத்திடமும் அவள் கூக்குரலிடுகிறாள்

கனவு, எனக்கொரு கனவென்று, ஆனால் குடையும் இல்லை, தகரக்கூரையும் இல்லை

காறித்துப்புகிறார்கள் அக்கம்பக்கத்தினர், ஏழும் பட்டினி கிடக்கிறதை பார்,

தலைக்கு எண்ணெயும், பூச பவுடரும் கேட்கிறது இவளுக்கு!!

அவள் தோல்நிறம் அன்றாடம் கறுத்துப்போகிறது

அவள் விரல்கள் மரத்து மரத்து உடைக்கும் செங்கல் போலானது

இவ்விதம் தன் சுத்தியால், உடைக்கிறாள், உடைக்கிறாள் உடைத்துக்கொண்டே

ஒரு செங்கல்லாக மாறிக்கொண்டிருக்கிறாள், ஒரு உடைக்க முடியாத செங்கல்லாக,  

சூரிய வெப்பத்தாலும், அரைவயிற்று கஞ்சியாலும், ஒரு கனவூறும் இதயத்தாலும் 

 

தமிழாக்கம் : அண்ணல் 

 

தஸ்லிமா நஸ்ரின் எழுதிய புகழ்பெற்ற “The Woman Breaking Bricks” என்னும் கவிதை இங்கு மொழியாக்கமாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!