home டிரெண்டிங், நேர்காணல் திகிலை இலக்கியவகையாக ஆக்குவதில் எனக்கு ஆர்வம்

திகிலை இலக்கியவகையாக ஆக்குவதில் எனக்கு ஆர்வம்

கார்மன் மரியா மச்சாடோவுடன் ஒரு நேர் காணல்

 

கார்மன் மரியா மச்சாடோ தற்கால நவீன லத்தீன் அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். விஞ்ஞானப் புனைவு, ஃபேண்டஸி, திகில்வகை எழுத்துக்களை எழுதும் இவர், விஞ்ஞானப் புனைவுகளுக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற நெபுலா விருதுக்கான இறுதித்தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றவர். அயோவா எழுத்தாளர் பயிற்சிப் பட்டறையில் பட்டம் பெற்று, தற்போது பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில்  பேராசிரியராக இருக்கிறார். அவருடைய சிறுகதைகள் Granta முதலிய இதழ்களில் வந்தன. Her Body and Other Parties அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

Her Body and Other Parties என்ற தொகுப்பில் பெண்கள் ஆவியாகிறார்கள், குடல் அறுவைச் சிகிச்சை பற்றிப் பயப்படுகிறார்கள், தலைகளை இழக்கிறார்கள்; தங்களது பாலியல் சந்திப்புகளைப் பட்டியலிடுகிறார்கள். அவர்களது ஒவ்வொரு அனுபவமும் உடலின் மூலமாக, இயற்கையாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்டும், ஆழமாகவும் உண்மையாகவும் வெளிப்படுகிறது. இது உடலின் கதை. பெண் உடலை மீட்டெடுக்கும் பணபாட்டுக்காக, பண்பாட்டில் எழுதப்படும் உடலின் கதை. இன்றைய பெண்ணீயத்தின் வழியாக, பெண்கள் வெளிப்படையாக இக்கணத்தில் உடல் அனுபவத்தை மதிக்கும் பரந்த பண்பாட்டு மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்தும் புதிய கதை. இந்நாள் இலக்கியத்தில் ஏற்படும் மாற்றம் மச்சாடோவின் கதைகளில் வெளிப்படுகிறது. இவருடைய கதைகளும் மற்ற பெண்ணிய எழுத்துக்களின் படைப்புகளும் நனவு நிலையை மாற்றியமைக்கின்றன். உடலை – சதையை – பெண்ணியப் பார்வையில் மீட்டெடுக்கும் எழுத்து இயக்கம் இது. பெண்ணுடலை மீட்டெடுப்பது அதற்கு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிற பாதகத்தை மறப்பதாலோ ஒதுக்கிவிடுவதலோ வருவதல்ல. மச்சேடோவின் சிறுகதையான Husband’s Stitch கதை, பெண்ணுடலை ஆண் தன் இன்பத்திற்காகச் சிதைக்கும் வாதையை அசலாக முன்வைக்கிறது. Husband’s Stitch என்பது குழந்தைப் பேற்றுக்குப் பிறகு உடலுறவுக்கு இணக்கமாக இருக்கவேண்டுமென்பதற்காகப் பெண்ணுறுப்பைத் தைக்கும் கணவனின் குரூரம்.

சென்ற ஆண்டு நான் கதைகளோடு போராடிக் கொண்டிருந்தபோது, என் நெருங்கிய நண்பர், The Husband’s Stitch கதையை எனக்கு அனுப்பிவைத்தார். கதையைப்படித்து முடித்தவுடன் எனக்குள் பல்வேறு உணர்வுகள் அலையடித்தன. விசித்திரமான, திகிலான, வினோதமான மச்சாடோவின் எழுத்து, வடிவத்திலும் உட்பொருளிலும் ஒரு கதையில் என்ன சாத்தியம் என்பது பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துகிறது. சிறுகதை இலக்கியவகையில் அவரது படைப்பு தீவிரத் தன்மை கொண்டது, பெண்ணாக இருப்பதன் உடல் அபத்தங்களைப் படம் பிடிக்கிறது; அவரது வாக்கியங்கள் எவ்வளவு நுணுக்கமாகக் கட்டப்பட்டிருக்கின்றன் என்றால் உங்களுக்கு அவற்றை உரக்க வாசித்துக் கைதட்டவேண்டும்போலத் தோன்றும்.

‘கிரன்டா’ பத்திரிக்கையில் வெளிவந்த The Husband’s Stitch, அவருடைய Her Body and Other Parties என்ற முதல் தொகுப்பில் முதல் கதையாக இடம்பெற்றிருக்கிறது. நூல் வெளிவந்ததும், சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது; புகழ் பெற்ற கிர்குஸ் விருதுக்கான இறுதித் தேர்வுப்பட்டியலிலும் இது இடம் பிடித்திருக்கிறது. அவரைக் கிளர்ச்சிக்கு உள்ளாக்கும் அவரது படைப்பையும் கலையையும் பற்றி மின்னஞ்சல் மூலமாக இந்த நேர்காணல் செய்யப்பட்டது.

லிட் ஹப் இதழுக்காக கார்மன் மரியா மச்சாடோவை நேர்காணல் செய்தவர் : கிளேர் லுச்சேட் 

 

கிளேர் லுச்சேட்The Husband’s Stitch என்னும் உங்கள் கதை, நாட்டுப்புறக்கதை, பயங்கரம், சர்ரியலிசக் கற்பனை ஆகியவற்றின் விசித்திரக் கலவை. நான், சிறுமியாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த கதைகளான, ஆல்வின் ஸ்வார்ட்ஸுடைய Alwin Swartz’s Scary Stories to Tell in the dark தொகுப்புக் கதைகள், பெரிதும் உங்களை பாதித்திருப்பது தெரிகிறது. நீங்கள் அதிலிருந்துதான் உங்கள் கதைக் கருவை உருவாக்குகிறீர்கள். முதன்முதலில் நீஙகள் ஸ்வார்ட்சின் கதைகளை எப்போது படித்தீர்கள்?

கார்மன் மரியா மச்சாடோ: புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தவை போல இந்தப் புத்தகங்கள் எனது குழந்தைப் பருவத்தில் இணைந்த கனவுப்பகுதியாக இருந்தன. அந்தப் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன, அருவருப்படையவும் செய்தன. கதையில் உரக்கப்படிக்கவும் என்று அறிவுறுத்தப்படும் பகுதிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சிறுபிராயத்தில் சாரணர் அமைப்பில் இருந்தபோது சாரணர் முகாமுக்குப் போவேன். அனைத்து சாரணச் சிறுமிகளும் கணப்பருகில் உட்கார்ந்திருப்போம். நான் இந்தத் தொடரிலிருந்து கதைகளைச் சொல்வேன். (அப்போது கதையின் உச்சக்கட்டத்தில் ‘இது தான் அது’ என்று கத்தி அருகிலிருந்த சிறுமியை இறுக்கிப் பிடிப்பது உட்பட). அவை, திகிலை இலக்கியவகையாக ஆக்குவதில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டின. அந்த ஆர்வம் என் வாழ்நாள் முழுவதும் நீடித்தது.

 

கிளேர்: உங்கள் படைப்பில் பட்டியலிடுவதை (lists) நான் விரும்புகிறேன். (ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போலத் தோன்றுகிற நிகழ்ச்சிகள் சிறு சிறு துணுக்குகளாக ஒரு பட்டியல் போலக் காட்டப்படுகின்றன). காலம் நகர்வதைக் காட்டச் சில கதைகள் தொடர் படிமங்களைப் பயன்படுத்துகின்றன.  “Inventory”, “Especially Hineous” போன்ற கதைகள் பட்டியல்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கதை முடிவுறுகிறது என்பதை நீங்கள் எப்போது உள்ளுணர்வில் அறிகிறீர்கள்?

மச்சாடோ: முடிந்துபோன ஒரு உணர்வு – ஒரு மனவெழுச்சியின் வடிவில் முடிவுக்கு வரும். என்னோடு பங்கு பெற்ற உரையாளர் ஒருவர் ‘உங்கள் உணர்வுகளை மதிக்கும் முடிவுப்புள்ளியைத் தேர்வது’ என்று அதை விவரித்தார். வழக்கமாக நான் விரும்புவதைவிட சிறிது அதிகமான நவீனத்தன்மையுடன் அந்த ஆலோசனை இருந்தது. ஆனால் அதற்கு மிகுந்த பொருள் இருந்தது என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எழுதத் தொடங்கும்போது ஒரு கதை எப்போது முடிகிறது என்பதை அறிவது கடினமானது என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு எழுத்தாளராக நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியாது. உங்களுக்குள் ஒரு பகுதியாக வருவது உங்களின் அந்தப் பகுதியோடு ஒத்திசையாக இருப்பது. அப்போது முடிந்துவிட்டது என்பதைச் சொல்வது எளிதாக ஆகிறது என்று நான் நினைக்கிறேன். (குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரையிலாவது)

 

கிளேர்: புத்தகத்தில் வருவதற்கு முன்னர் கதைகள் எப்படி இருக்கும் என்பதுபற்றி எனக்கு ஆர்வம் அதிகம். அச்சாகி வெளிவரும்போது இருப்பதைவிட ஒரு எழுத்தாளரின் முதல் வரைவு வித்தியாசமாக இருந்திருக்கும் என்பதை நினைவு கூர்வது கடினம். Her Body and Other Parties தொகுப்பிலுள்ள கதைகளில் மிக அதிகமான திருத்தங்களும், மீண்டும் எழுதுதலும் எந்தக் கதைகளுக்குத் தேவைப்பட்டன? முதல் வரைவுகள் எப்படி இருந்தன?

மச்சாடோ: மிகவும் அதிகமாகத் திருத்தியெழுதத் தேவைப்பட்ட்து “The Resident”, “Real Women have Bodies” ஆகிய இரண்டுக்கும்தான். இரண்டாவது கதையைப் பொறுத்தவரையில் கதைப் பின்னலில் மாற்றம் இல்லை, ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால் அது ஒரு பழைய கதை. மற்ற கதைகளுக்கு ஒத்துப் போகுமாறு இருக்கிறது என்று எனக்கு மனநிறைவு ஏற்படும் வரையில் நான் அதைத் திருத்தி எழுதினேன். அதற்கு மாறாக, “The Resident”, எனது வெளியீட்டாளர் கிரேவுல்ஃப் வாங்கியபோது அதனை அப்போதுதான் எழுதியிருந்தேன். அதற்கு முன்னர் அது வெளியிடப்படவுமில்லை, திருத்தப்படவுமில்லை.

பெரிய பிரச்சினை என்னவென்றால் “The Resident”, எதைப்பற்றியது என்று எனக்கு முதலில் தெரியவில்லை. என்வே கதைப் பின்னலிலுள்ள் நூலிழைகள் நிறையவே இருந்தன. நடுவில் மொட்டையாக நின்று போனவையும் இருந்தன. அவை இசைவாக ஒன்று சேரவில்லை. எனது தொகுப்பாசிரியர் ஈதன் நோசோவ்ஸ்கி கெட்டிக்காரர். அவருக்கும் கதை எதைப் பற்றியது என்று தெரியவில்லை என்று சொன்னார். ஆனால் இந்தக் குழப்பங்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும் என்று உறுதியாக இருந்தார். எனவே அவர் உற்றுக்கவனித்தது என்ன என்றும் எனது அடிமனம் எதை உள்ளே வைத்திருக்கிறது என்று தான் நினைப்பது என்ன என்றும் அவர் சொன்னார்.

நான் இந்தக் கதையில் பலவாரங்கள் செலவழித்தேன். நான் கல்லூரியில் தங்கியிருக்கும் பேராசியராக இருந்ததால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் செலவழித்தேன். பலவாரங்கள் ஆயின. பிறகு ஒரு நாள் குளித்துக் கொண்டிருந்தபோது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மனதில் பொழிந்தது. கதையின் முதல் வரைவுக்கு ஏறக்குறைய இதே கதைப்பின்னல்தான். ஆனால் கதையின் பல பின்னல் புள்ளிகள், என்னைக் கொண்டு எழுதுவதற்கு ஒரு கதையைக் கற்பனை செய்து கொண்டிருந்தது. (*wavy fingers* Metafictional!). ஆனால், நான் அந்தப் போக்கையே முற்றிலும் தகர்த்தெறிந்து, கதையை களைத்து, இறுக்கிக் கொண்டேன். பெண்களைப் பற்றி விவாதிப்பது – குறிப்பாக தன்பாலுறவுப் பெண்களைப் பற்றி விவாதிப்பது – வழக்கமான குழியில் விழாமல் தங்களைப் பற்றியும் மனநலம் பற்றியும் எப்படி எழுத முடியும் என்ற கருப்பொருளைப் பற்றி நினைத்தேன். இதைத்தான் எனது ஆழ்மனம் செய்ய முயன்று கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்.

 

கிளேர்: 2017 இல் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்?

மச்சாடோ: புதிய கட்டுரைகள், சிறுகதைகளில் முட்டி மோதிக் கொண்டு நீண்ட திட்டங்களைப் பற்றிய கருத்துக்களை எனது வாழ்க்கை வரலாற்றின் அடுத்த பகுதிக்காகக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதை 2019 இல் கிரேவுல்ஃப் பதிப்பகம் வெளியிட இருக்கிறது.

 

கிளேர்: 2017 இல் எந்தக் கலை உங்களைக் கவர்ந்திருக்கிறது?

மச்சாடோ: அழகு, நம்பிக்கையின்மை, திகில்; தற்கால பெண்ணிய எழுத்தாளர்களான, லெஸ்லி அரிமா எழுதிய “What It Means When a Man Falls from the Sky” பென்னெட் சிம்ஸ் எழுதிய White Dialogues, மலோரி ஓர்ட்பொக் எழுதிய The Merry Spinster, ஜென்னி ஷாங் எழுதிய Sour Heart,  சமந்தா இர்பி எழுதிய We are never Meeting in Real Life போன்ற எழுத்துகளைச் சொல்லலாம்.

 

கிளேர்: அண்மையில் நீங்கள் உங்கள் டிவிட்டரில், “ஒவ்வொரு பெண் தன்பாலுறவுப் பதின்மவயதினருக்கும் கேஷாவின் “ஹிம்” பாடலை இசைக்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பெண் தன்பாலுறவுப் பதின்ம வயதினருக்கு நீங்கள் என்ன புத்தகங்கள் அல்லது கதைகளை சிபாரிசு செய்ய விரும்புகிறீர்கள்?

மச்சாடோ: Weetzie Bat, Rubyfruit Jungle, The Price of Salt, Annie on My Mind.. நான என் பதின்மப் பருவத்தில் இந்த நாவல்களைப் படித்தபோது, நான் பிறப்பதற்கு முன்னரே வந்திருக்கும் இவற்றிலுள்ள வித்தியாசமான பாத்திரங்களைப் பற்றி எனது சிறுவயதிலேயே யாராவது சொல்லியிருக்கக் கூடாதா என்று நினைப்பேன்.

 

கிளேர்: உடலைப்பற்றி எழுதுகிற எந்த எழுத்தாளர்கள் உங்களுக்குக் கற்றுத் தருவதாகக் கருதுகிறீர்கள்?

மச்சாடோ: Lidia Yuknavitch, Roxane Gay, Leslie Jamison, Dodie Bellamy, Jenny Zhang, Samantha Irby, and Maggie Nelson.

 

கிளேர் : உங்களுடைய கட்டுரையான “O Adjunct! My Adjunt!”  எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கற்றுக்கொடுத்தல் – ஆசிரியப் பணி – உங்களது எழுத்துப் பணிக்கு எப்படி உதவுகிறது?

மச்சாடோ: கற்றுத் தருவதில் தெளிவானது எதுவென்றால், ஒரு கதை அலது தலைப்பு பற்றி ஆயிரம் முறைகள் உரையாற்றியிருந்தாலும், புதிய மாணவர்கள் புதிய கேள்விகளோடு வருவார்கள். அது பாடப்பொருளைப் புதிய முறையில் பார்க்கச் செய்யும். ஒரு பருவத்திற்கு ஒரு முறையாவது நானும் எனது மாணவர்களும் எழுத்துக் கலைபற்றியோ, இலக்கிய வகை பற்றியோ உரையாடுவோம். அது நான் சிந்தித்துக்கொண்டிருக்கும் எதைப் பற்றியாவது புதிய புரிதலை அல்லது கருத்தைப் பெற ஒரு பொறியைத் தரும். என்னுடைய எழுத்துக்கு உதவாவிட்டாலும்கூட, நான் பாடம் கற்றுத்தருவதை நேசிப்பேன் என்று நினைக்கிறேன். மாணவர்களுக்குப் பணியாற்றுவது எனக்கு உற்சாகத்தையும் மனநிறைவையும் தருகிறது – ஆனால் அது ஒரு போனஸ் தான்.

 

தமிழில் : ச.வின்சென்ட்

 

*(ஆல்வின் ஸ்வார்ட்ஸ் (1927-1992) திகில் வகை அமெரிக்கஎழுத்தாளர். சிறுவர் நாட்டுப்புறக் கதைகள் சார்ந்த 50 நூல்கள் எழுதியுள்ளார். Scary Stories to Tell in the dark என்ற இந்தக் கதைகள், ஸ்டீபன் காமெல் வரைந்த பயங்கரமான படங்களுடன் பலதொகுதிகளாக வந்துள்ளது)

 

கிளேர் லுச்சேட் சிகாகோவைச் சேர்ந்த எழுத்தாளர். பல்வேறு பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!