home உன்னதம், நேர்காணல் நான் ஒரு நாடுகடத்தப்பட்ட எழுத்தாளனாகவே இருப்பேன்

நான் ஒரு நாடுகடத்தப்பட்ட எழுத்தாளனாகவே இருப்பேன்

நூருதீன் ஃபாரா  உடன் ஒரு நேர்காணல் 

 

சோமாலியாவின் முதல் பெரிய இலக்கிய ஆளுமையும், முதல் நாவலாசிரியருமான நூருதீன் ஃபாரா, வாய்மொழி இலக்கியப் பாரம்பரியத்தில் (இன்று இது ஆடியோ பதிவில்) வந்தவர். அவர் தம் 25 வயதில் 1970 இல் லண்டனில், தம் முதல் நாவலான From a Crooked Rib – ஐ வெளிப்படுத்தினார். அவருக்கு சோமாலி மொழியோடு இத்தாலி, அரபு, அம்கரிக் மற்றும் அவரது 9 நாவல்களும் வெளிவந்த அற்புதமான ஆங்கிலமும் பேசத் தெரியும். அவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் படித்தார். பெரும்பாலும் அவர் சோமாலியா என்ற இடம் சார்ந்து எழுதினாலும், காஸ்மோபாலிட்டன் பார்வையுள்ள ஒரு பெண்ணியவாத எழுத்தாளர் அவர். 1974 ஆம் ஆண்டு, அவரது நாடோடி சோமாலி முன்னோர்களைப்போல் சோமாலியாவை விட்டு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா வாழ்க்கையை வாழ்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தாம் வெளியிட்ட A Naked Needle நாவல் காரணமாக அவர் சையத் பேரி என்ற சோமாலியா சர்வாதிகாரியினால் 22-ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட தண்டனையைப் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பேரியின் ஆட்சிமுடிவுக்கு வந்தது. அவர் தற்போது கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான ஆங்கிலோ-நைஜீரிய மனைவி, அமினாவுடனும் இரண்டு குழந்தைகளுடனும் தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

BOMB இதழுக்காக நேர்காணல் கண்டவர் : குவாமே அந்தோணி அப்பியா

 

 

குவாமே : சரி, நீங்கள் இப்போது என்ன செய்துவருகிறீர்கள் என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

ஃபாரா : நியூயார்க்கின் மேற்பகுதில் ஆர்ட் ஓமி என்பதன் ஒரு வதிவிடத் திட்டத்தில், நிம்மதியாக ஒரு நாவலை மறுபடைப்பு செய்துகொண்டு இருக்கிறேன். மிகவும் கொஞ்சமே தூங்கி, 18 மணி நேரம் வேலை. மிக அடர்த்தியான முறையில் வேலை. கதையின் பலவீனங்களைக் கண்டறிய நான் பார்க்க இந்த வழி உதவுகிறது. நான் நான்கு அல்லது ஐந்து முறை நாவலை மாற்றியமைப்பேன். நான் எப்போதும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கி நிறுத்தாமல் சென்று, ஒரு வரைவை எழுதி முடித்துவிடுவேன். ஆறு மாதங்கள் கழித்து திரும்பிச் சென்று நினைவில் இருந்து மீண்டும் மாற்றியமைப்பேன்.

 

குவாமே : இந்த வரைவுகளை நீங்கள் பாதுகாத்து வைத்துள்ளீர்களா?

ஃபாரா : அவை அனைத்தையும் நான் முடிக்கும்வரைதான் வைத்திருப்பேன். சில மோசமானவைகளை – மிகவும் மோசமாக இருக்காது – வைத்திருக்கிறேன்.

 

குவாமே : இலக்கியத் தொல்பொருள்களை பாதுகாத்து வைப்போர் அவற்றைப்பெற விரும்புவார்கள் நிச்சயம்.

ஃபாரா : அந்த வரைவுகள் யாருக்கும் அதிகம் பயன்படும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் என் முந்தைய வரைவுகளில் சிலவற்றைப் பார்த்தீர்கள் என்றால், எனக்கு எழுதவே தெரியாது என்று நினைப்பார்கள். நான் வேகமாக எழுதி பின்னர் வேகமாக மாற்றியமைப்பேன். முதல் முறையாக, நான் 570 பக்கங்களில் ஒரு நாவல் எழுதினேன். 300 பக்கங்களுக்கு அதைக் குறைத்தேன். பொதுவாக நான் 100 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகம் எழுதி, பின் மிக நீண்டதாக அதை ஆக்குவேன். என் முந்தைய ஒன்றை போலவே ஒரு நாவல் வெளியிடுவதைத்தான் நான் மிகவும் வெறுக்கிறேன். முழுமையாக, முற்றிலும் வேறுபட்ட ஒன்றை உற்பத்தி செய்யும் நம்பிக்கையில், புதியதாக இருக்கிறேன் என்று என்னையே சமாதானப்படுத்திக்கொண்டு நான் ஒரு கட்டுரை அல்லது ஒரு நாவல் அல்லது ஒரு நாடகத்தை ஒவ்வொரு முறையும் எழுதமுனைகிறேன்.

 

குவாமே : எனவே எழுதும் வேளையில் ஒரு நாவலைப் பொறுத்து எவை மாறுவதில்லை?

ஃபாரா : ஒரு அறையில் தனியாக நானே விளையாடும் ஒரு விளையாட்டுப்போலத்தான், நான் எழுதுவதும். இது மிகவும் இனிமையான தொழிலாக எப்படி இருக்கமுடியும்? நீங்கள் ஒரு அறையில் உங்களை வைத்துப் பூட்டிக்கொண்டு ஒரு தொழிலாக எழுதுதல், மிகவும் சுவாரஸ்யமாக இல்லை, கடினமான உள்ளது. அதேசமயம் இது பெரிதும் பயன்படுகிறது.

 

குவாமே : எப்படி நீங்கள் இந்த விரும்பத்தகாத காரியத்தைச் செய்யவந்தது?

ஃபாரா : நான் செய்வது பற்றி எவருக்குத் தெரியும்? (சிரிப்பு). சிறுவயதில் அரபு எழுத்தலங்காரங்கள் எங்கள் வீடுகளை அலங்கரித்தன. மிகவும் கண்ணைக்கவரும் அரபு எழுத்துக்களை வரைவதில், இந்தப் படைப்புவேலை தொடங்கியது என்று சொல்லமுடியும். நான் அவற்றை நகல் செய்தேன். குரானைப் படித்து ஓதினேன். எங்கள் ஊரார், எழுதப்படிக்கத்தெரியாதவர்கள், என்னை ஒரு எதிர்காலமுள்ள கலைஞன் என்று நம்பினர். குரானோ அரபுவோ புனிதமானவை என்று, சோமாலியர்களிடம் மிகவும் பக்தி மயமான நம்பிக்கை இருக்கும். ஆனால் குரான் பற்றி அல்லது இஸ்லாமியம் பற்றி எந்த ஆழமான அறிவும் இராது. படித்தலும் நகலெடுத்தலும் என் பகுத்தறிவு வழிவகையாகவே இருந்தது. பின்னர் நான் அரபு மதச் சார்பற்ற எழுத்துடன் தொடர்பு கொண்டேன். என் பெயர், நூருதீன், ஆயிரத்தொரு இரவுகள் புத்தகத்தில் ஒரு இளவரசரின் பெயராக இருந்தது என்று அறிந்தபோது உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு புத்தகப் பிரதியிலிருந்தும் அக்கதைப் பகுதியைக் கிழித்து என் பயிற்சிப் புத்தகங்களில் நானே எழுதியதாக ஒட்டிக்கொண்டு, குறும்பாக, (சிரிப்பு) “நான் ஒரு எழுத்தாளன்” என்று பையன்களிடையே பெருமை பெற்றேன். பின்னர் நான் கிறித்துவத்தையும் எம்மை மாற்ற அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமெரிக்க மதநிறுவனக் கல்விக்கூடத்திலும் கற்றறிந்தேன். 15 வயதில் ஒரு நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக்கொண்டு, ஒரு பூனையைத் தனித்தனியே எதிர்த்துப்போராடும் எலிகளைப்பற்றிய கதையை எழுதினேன். என் பள்ளித்தோழர்களின் பெயர்களை அவைகளுக்கு வைத்தேன்.

 

குவாமே : எனவே முதலில் நீங்கள் ஒரு வாய்மொழிக்கதையை மறு ஆக்கம் செய்தீர்கள்?

ஃபாரா : எனது விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப அதை மறுவடிவமைப்பு செய்தேன். என் சகோதரர் படிக்க எனக்கு தாஸ்தாயவ்ஸ்கி, விக்டர் ஹியூகோ அரபி மொழிபெயர்ப்புகளைத் தந்தார். படிக்கத்தெரியாத ஆங்கில நூல்களையும் கொடுத்தார். நான் ஒவ்வொரு வார்த்தையும் அடிக்கோடிட்டு அகராதியில் சென்று அதை பார்த்துப் படிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது முழுதாக அகராதியைப் படித்துவிட வேண்டும் என்று கூறினார். அதையும் கடைபிடித்தேன்.

 

குவாமே : எனவே நீங்கள் சிறுவயதில், சோமாலி, அரபு ஆகிய இரு மொழிகளைக் கற்றீர்கள். பின்னர் உங்கள் சகோதரரால் ஆங்கிலம் உங்களுக்கு கிடைத்தது. ஆனால் நீங்கள் குரான் பற்றி அதிகம் விமர்சனபூர்வமாக இருந்தீர்கள் இல்லையா? உங்களுக்கு அது மனப்பாடமாக நன்றாகத் தெரியும்.

ஃபாரா : என் தந்தை நான் குரான் கற்பதில் மிகவும் கடுமையைக் கடைபிடித்தார். நான் நான்காவது மகன். பல ஆண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் அவர்களில் ஒருவரை குரான் மற்றும் மதம் பற்றியதற்கு ஒதுக்கி வைக்கும் ஒரு பாரம்பரியம் இருந்தது. நான் இந்த ஆன்மீக விஷயங்களுக்கு ஒதுக்கப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனக்குச் சிறந்த நினைவாற்றல் இருந்தது. தொடக்கத்தில் இருந்து முடிவுவரை குரானை என்னால் ஓத முடியும். எனவே எனது தந்தை இதை நல்ல விஷயம் என்று கருதினார். துரதிருஷ்டவசமாக, மற்ற நூல்களில் ஆழ்ந்து என் நினைவுவாற்றல் நாளாக ஆக மங்கியது. உலகில் பழைய மரபுகள் நிராகரிக்கப்பட அல்லது சவாலுக்கு ஆளான 1945-ன் இறுதியில் பிறந்தவன் நான். உலகையும் வாழ்வையும் பார்க்கும் என் பார்வையும் மாற்றங்கள் பெற்றது.

 

குவாமே : Ogaden பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது நீங்கள் பிறந்தீர்கள்.

ஃபாரா : ஆமாம், என் தகப்பன் பிரிட்டிஷ் கவர்னரின் ஒரு மொழிபெயர்ப்பாளராக பிரிட்டிஷ் சிவில் சேவையில் இருந்தார். நான் பிறந்த நகரம், Baidoa, இத்தாலியர்களிடமிருந்தது Ogaden யுத்தத்தின்போது பிரிட்டிஷ்காரர் கைப்பற்றியது. எத்தியோப்பியாவுக்கு Ogaden கையளிக்கப்பட்டது. 1948இல், என் தந்தை இங்கு மாற்றப்பட்டார். அவரது துபாஷி வேலையில் இருந்து போதுமான பொருள்வசதிபெற்று விவசாயப்பண்ணை ஒன்றைத் தொடங்கினார். அதில் எள், சோளம், கீரை, எலுமிச்சை, பப்பாளி வளர்ந்தன.

 

குவாமே : எனவே உங்கள் நினைவுகளில் அப் பண்ணை இருக்கிறது?

ஃபாரா : பண்ணைக்குப் பத்து மைல் தூரத்தில் நான் வசித்த நகரம் இருந்தது. நான் அங்கு எடுத்துச்செல்லப்பட்ட நினைவுகளில் ஒரு சிறு குழந்தையாக யாரோ ஒருவர் தோள்களில் அமர்ந்திருக்கிறேன். நான் பெரியவனானபோது நானே நடந்து பண்ணையைச் சுற்றிவந்தேன்.

 

குவாமே : பின்னர் நீங்கள் பல இடங்களில் – இந்தியா, காம்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, உகாண்டா, ஜெர்மனி, அமெரிக்கா – வாழ்ந்து பார்த்திருக்கிறீர்கள்.

ஃபாரா : ஆமாம், ஆனால் நான் சோமாலியாவில் வாழ்ந்ததே என் எழுத்துக்கு விசுவாசமாக இருக்கிறது. நான் மற்ற இடங்களில் பெற்ற விஷயங்களை விட இன்னும் அது பற்றி ஆயிரம் வார்த்தைகளில் ஒரு கட்டுரையில் பொதிய முடியும் என்று நம்புகிறேன். நிச்சயமாக, நான் பிற நாடுகளில் நாவல் களத்தை அமைக்கமுடியும். அவற்றுக்கும் சிறு இலக்கிய மதிப்பு இருக்கவே செய்யும்.

 

குவாமே : நீங்கள் சோமாலியா விட்டு வெளியேற சோமாலியா அரசு வரலாறு காரணம். நீங்கள் மற்ற இடங்களில் வசிப்பதை நீங்களாகத் தேர்வு செய்யவில்லை. வெளிநாட்டில் இருந்தது உண்மையா?

ஃபாரா : ஆமாம், நான் சோமாலியாவை விட்டுச்செல்வதை நானாகத் தேர்வு செய்யவில்லை.

 

குவாமே : உங்களை வெளியேற்றிவிட்டார்கள், ஆனால் நீங்கள் மீண்டும் அங்கே செல்ல முடியவில்லை. என்ன நடந்தது?

ஃபாரா : 70களின் ஆரம்பத்தில் நான் சோமாலியாவில் என் இரண்டாவது நாவலை எழுதினேன். நான் 1970ல், From a Crooked Rib என்ற என் முதல் நாவலை வெளியிட்டபோது, மிகவும் பிரபலமானது, குறிப்பாக பெண்கள் மத்தியில். ஒரு cult புத்தகமாக அது மாறியது. பிரிட்டனில் பெங்குயின் கிளாசிக்ஸில் மறுவெளியீடு பெற்றது. நான் இந்தியாவின் ஒரு மாணவனாக இருந்தபோது அதை எழுதினேன்.

 

குவாமே : நீங்கள் ஆங்கிலத்தில்தான் உங்கள் முதல் நாவலை எழுதினீர்களா?

பாரக்ஸ் : ஆமாம்.

 

குவாமே : அரபு அல்லது சோமாலி அல்லது ஆங்கிலத்தில் எழுதும் உங்களிடம் இக்கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டிருக்கலாம். நீங்கள் படைப்பெழுத்தை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

ஃபாரா : சோமாலி, எனது தாய்மொழி. அந்த நாட்களில் அதற்கு வரிவடிவம் இல்லை. எனவே ஆங்கிலத்தில் எழுதத் தேர்வுசெய்தேன். ஆனால் நான் ஏன் அரபு, அம்ஹரிக், இத்தாலி மொழிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை? ஒரு நல்ல அமெரிக்கன் டைப்ரைட்டர் கிடைத்ததே நான் ஆங்கிலத்தில் எழுதும் முடிவுக்குக் காரணமாயிற்று. அதன் தோரணை, ஓசைநயம் எனக்குப் பிடித்திருந்தது. நான் மற்றமொழிகளில் எழுதி இருக்கலாம். ஆனால் அந்த மொழிகளில் எந்த ஒரு நல்ல போதுமான டைப்ரைட்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே முக்கிய காரணியாக உள்ளது. நான் ஆங்கிலத்தின் வழியாகவே என் அறிவார்ந்த ஒப்பனைகளைப் பெற்றேன். மேலும் மிகவும் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்ததாகவும் அது இருந்தது. அம்ஹரிக்கில் பல எழுத்துக்கள் உள்ளதால் டைப்ரைட்டருக்கு ஏற்றதாக அமையவில்லை. அரபுத் தட்டச்சு இயந்திரம் எங்கள் பிராந்தியத்தில் பொதுவாக இல்லை, மேலும் அரபு கூட எனக்கு வெளிமொழியாகவே இருந்தது. 1972 இலையுதிர்காலம் வரை எந்த வரிவடிவமும் சோமாலிக்கு இல்லை. இருந்த ஒரே ஒரு Mogadishuவின் நாளிதழில், நான் ஒரு வாரத் தொடராக சோமாலியில் ஒரு நாவலை எழுதத் தொடங்கினேன். ஆனால் தணிக்கை குழுவினர் அனுமதிக்க மறுத்து மாற்ற வலியுறுத்தினர் என்பதால் அது கைவிடப்பட்டது. அதுமட்டுமல்ல, பிரசுரமாகியிருந்த என் ஒரே ஒரு நாவலான From a Crooked Rib நூலும் தடைசெய்யப்பட்டது. நான் அப்போது சோமாலியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் இலக்கியம் போதித்துக்கொண்டிருந்தேன். ஆட்சியுடன் இன்னும் கூடுதலாகும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இங்கிலாந்தின் பிரிட்டிஷ் கவுன்சில் உதவித்தொகையில், நான் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் நாடகம் பற்றி முதுகலை செய்ய, 1974 ஆம் ஆண்டில், நாட்டைவிட்டுச் சென்றேன். இரண்டு ஆண்டுகள் கழித்து, A Naked Needle வெளியான சமயத்தில் நான் சோமாலியா திரும்பலாம் என்றிருந்தேன். பிரிட்டிஷ் பத்திரிகைகளில் பல சாதகமான விமர்சனங்களை அந்நாவலுக்குத் தந்திருந்தது. சையத் பாரேயின் ஆட்சிக்கு விரோதமான ஒரு நையாண்டி நாவலில் இருந்தது. நான் Mogadishu விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச்செல்ல என் தமயனாருக்குப் போன் செய்தபோது, “நீ அரசின் எதிரி நம்பர் 1 ஆக உள்ளாய். சோமாலியா பற்றி மறந்துவிட்டு வேறு எங்காவது செல்வது நல்லது” என்றார். நான் இப்படித்தான் ஒரு புலம்பெயர்ந்தவன் ஆனது.

 

குவாமே : நீங்கள் சோமாலியாவைப் பற்றி மட்டுமே எழுத விரும்புகிறீர்கள். ஆனால் அந்த இடம் உங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. உங்கள் நாட்டை விட்டு நீங்கள் வெளியே இருப்பது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது. சையத் பேரி ஆட்சி உங்கள் வாழ்க்கை முழுவதும் நீடித்து இருக்கலாம். நீங்கள் உலகில் சோமாலியாவைத் தவிர எங்கும் பயணிக்கலாம். ஆனால் நீங்கள் சோமாலியா பற்றி மட்டுமே எழுதப்போகிறீர்கள்.

ஃபாரா : சையத் பேரி இப்போது இறந்து அடக்கம் பெற்றிருக்கலாம், ஆனால் சர்வாதிகாரங்கள் எப்போதும் தம் பின்னால் குழப்பங்களையும் தீமைகளையும் நிறைய விட்டுத்தான் சென்றிருக்கும். சோமாலி உள்நாட்டுப் போர்கள் அவரது சர்வாதிகாரத்தில் இருந்து விளைகிறவைதாம். இந்த ஆண்டு மட்டும் அங்கு நான் மூன்று முறை சென்றிருக்கிறேன். அங்கு நிரந்தரமாகத் திரும்பி செல்ல முடியும். ஆனால் ஒரு சிக்கல் உள்ளது: என்னுடையது ஒரு இளம் குடும்பம். நாங்கள் ஒரு வீடு வாங்கியிருக்கிறோம். கேப் டவுன், சந்தோஷமாக இருக்கும். என் மனைவிக்கு ஒரு அற்புதமான வேலை, குழந்தைகள் திருப்தியுடன் குடியமர்ந்துள்ளனர். அதைவிட்டு அவர்களை வேர்பிடுங்கி நட விரும்பவில்லை. சோமாலியாவில் நிரந்தரமாக வாழவிரும்புகிறேன் என்றாலும்கூட, அதற்கு வாய்ப்பு இல்லை. அங்கே நல்ல பள்ளிகள், மனைவிக்குப் பொருத்தமான வேலை போன்றவை இல்லை. நிற்க, சோமாலியா என் படைப்புகளின் ஒரு சாத்தியமான கருத்தாகவே இருக்கும். யாருக்கு தெரியும், தென் ஆப்ரிக்காவும் கூட ஒரு பிரச்சனை மிகுந்ததாக மாறிவிடலாம். எல்லாம் சிந்திக்கத்தான் வேண்டும். இதற்கிடையில், நான் ஒரு நாடுகடத்தப்பட்ட எழுத்தாளனாகவே இருப்பேன். ஆனால் உலகில் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவன் நான். என் முதல்மொழிஅல்லாத ஒன்றில் எழுதிக்கொண்டு, புலம்பெயர்ந்த எழுத்தாளனாகவே, நான் வாழ முடியாத ஒரு நாட்டை பற்றி எழுதிக்கொண்டிருப்பது தொடரும்.

 

குவாமே : உங்கள் இரண்டாவதுமொழியில்…

ஃபாரா : என் இரண்டாவது அல்லது என் மூன்றாவது. (சிரிப்பு) இந்த முரண்பாடுகள் எனக்கு என்னுடைய நிலையைப் பரிசீலிக்க உதவும். ஒரு வகையில், இந்த உபாதைகள் எனக்கு என் கற்பனையில் என்னில் ஒரு பகுதியாக உள்ளன. என் விஷயத்தில் கவனம் கூர்மையாகும் என்றும் நரம்புத்தளர்ச்சி ஏற்படும் என்றும் நரம்பியல் கூறலாம்.

 

குவாமே : எவ்வாறு சர்வாதிகாரம் சமுதாயத்தைச் சீரழிக்கிறது என்று, சிறிய சோமாலியாவின் பிரச்சனை மட்டுமல்ல இது என்று, ஆண்பெண் இடையே பல நூற்றாண்டுகளாக உள்ள உறவுச் சிக்கல்கள் என்று நீங்கள் பலவேறுபட்ட மக்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்திருக்குமே?

ஃபாரா : நான் ஒருமுறை புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் பிரெடெரிக் டியுரண்மார்ட்டை ஒரு விமானப்பயணத்தில் சந்தித்துப் பேசியது நினைவு வருகிறது.

 

குவாமே : உண்மையாகவா?

ஃபாரா : நாங்கள் ஒன்றாக ஒரு விமானத்தில் பயணித்தோம். நான் அவருடைய சில நூல்கள் படித்திருந்ததைச் சொன்னேன். அவர் என்னை கேட்டார், “நீங்கள் அவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கமாட்டேன். ஆனால் நான் உங்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என்றால், நான் ஏன் உங்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என்று காரணம் சொல்லுங்கள்? ”

 

குவாமே : (சிரிப்பு) சரி, பதில் என்ன?

ஃபாரா : அவர் என் புத்தகங்களை படித்திருந்தார் என்றால், ஒரு ஜெர்மன் புத்தகத்தில் ஒரு அரபு, ஒரு சுவிஸ், ஒரு நைஜீரிய புத்தகத்தில் காணமுடியாத ஒரு உலக கண்ணோட்டத்தைப் பெறலாம் என்று கூறினேன். அவர் “எனக்கு என்னுடைய உள்ளடக்கம் போதுமானது. எனக்கு மற்றொருவருடைய உலகக் கண்ணோட்டத்தை கண்டறிவதில் ஆர்வம் இல்லை,” என்றார். நான், “ஒரு உலக கண்ணோட்டத்தை – ஸ்விஸ், அமெரிக்கா, சோமாலியா போன்றவற்றை – கொண்டு திருப்திகரமாக சந்தோஷமாக இருப்பதில் ஏதும் பயனில்லை. இன்னும் கூடுதல் உலகங்கள் இல்லாமல் ஏதும் முழுமையடையாது.” என்றேன்.

 

குவாமே அந்தோணி அப்பியா, ஆப்பிரிக்க அமெரிக்க கலாச்சாரம் குறித்த ஒரு புகழ்பெற்ற அறிஞர். லாரன்ஸ் எஸ் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் பணி. An Introduction to Contemporary Philosophy (Oxford University Press, 2003), The Encyclopedia of the African and African-American Experience (Ed) முதலிய பல விருதுபெற்ற நூல்களின் ஆசிரியர்.

 

தமிழாக்கம் : கால சுப்ரமணியம்

 

One thought on “நான் ஒரு நாடுகடத்தப்பட்ட எழுத்தாளனாகவே இருப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!