home டிரெண்டிங், நேர்காணல் நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள்

நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள்

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான சமந்தா ஸ்வெப்லின் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்

 

 

நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா?

சமந்தா ஸ்வெப்லின்: எனக்கு நினைவிருக்கிறது, எப்படி எழுதுவது என்பது கூட தெரியாத எனது ஐந்தாவது வயதில் உறங்குவதற்கு முன் எனது தாயாருக்கு கதைகளைக் கூறி, அவற்றைக் குறிப்பெடுக்க அவரிடம் கேட்டு, சில சித்திரங்களைப் பின்னர் இணைக்க ஏதுவாக பக்கங்களுக்கிடையில் சில வெற்றிடங்களை விடச் சொல்லிக் கேட்டதெல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. எனவே, கதைகளைக் கூறுவதற்கான இந்த வேட்கை என்னிடம் எப்பொழுதும் உள்ளதாக நினைக்கிறேன். எனது பதினேழாவது வயதில் முதல் முறையாக சில இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றதுண்டு. அது அடுத்த நகர்வாக இருந்ததென நினைக்கிறேன்: ஒரு பிரதியின் மீது எந்த அளவுக்குச் செயல்பட வேண்டும் என்பதை உணர்வது – அதிக துல்லியமாக, எளிமையாக, தெளிவாக இருக்க மீண்டும் மீண்டும் முயற்சிப்பது – எழுதுதல் எனும் செயல்பாங்கின் ஒரு பகுதி. இந்த உபகரணங்களுடன் எனக்கான பரிச்சயமும் அதிக ஆக்கப்பூர்வமாக நான் எழுதத் துவங்கியது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நான் கண்டடைந்தேன். எனது புகைப்படக் கலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்த பின்னரும் எழுதுதல் என்பது எனது முதன்மையான இலக்காக இருந்தது. அப்போதுதான் எனது முதல் இரண்டு புத்தகங்களை வெளியிட்டேன். ப்யூனஸ் ஏர்ஸிலிருந்து பெர்லினுக்கு இடம் பெயர்ந்தது எனது எழுத்திற்கான மற்றொரு நகர்வாக இருந்தது. அது ஒரு புதிய, ஆழமான தனிமையைத் தந்தது. எழுதுவதற்கான அதிக நேரத்தையும் பல வழிகளில் அதிக சுதந்திரத்தையும் அது தந்தது.

 

உங்கள் நாட்டின்/மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீண்ட சூழலுக்குள் உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்? எந்த விதமான தாக்கங்களை / எழுத்தாளர்களை / எழுத்தாளர்களின் குழுக்களை நீங்கள் உள்வாங்குகிறீர்கள், அல்லது எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள் எழுத்து புறக்கணிக்கிறது?

சமந்தா ஸ்வெப்லின்: அனைவரிடமிருந்தும் நான் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்கிறேன். எந்தப் பாரம்பரியத்துடனும், குழுவிடமும் முரண்பட்டதாக நான் நினைக்கவில்லை. உண்மையில் நான் எனது தனிப்பட்ட ஆசான்களையே தெரிவு செய்திருக்கிறேன். அவர்கள்: அடோல்ஃபோ பயோ காசரஸ், அண்டானியோ டி பெனெடெட்டோ, சில்வினா ஒக்காம்போ மற்றும் ஃபெலிஸ்பெர்ட்டோ ஹெர்னாண்டஸ். நான் இந்த ‘*rioplatense’ இலக்கியத்தால் முழுமையாகக் கவரப்பட்டதாக உணர்கிறேன். அந்த எழுத்தாளர்கள் அற்புதம் பற்றி குறிப்பிட்ட சிந்தித்தல் போக்குகளைப் பெற்றுள்ளனர் என நினைக்கிறேன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் வாழ்ந்த திகிலூட்டும் விலங்குகளைப் பற்றிய அச்சம் போல அல்ல, நமது நிஜ வாழ்வில் ஒரு ஐயப்பாட்டை உருவாக்குகிற, நாம் இழந்த ஏதோ ஒன்றான, நாம் நினைப்பதைவிட மிகப் பெரியதான, முற்றிலும் வித்தியாசமானதான சிறு சிறு விஷயங்கள், உணர்வுகள் மற்றும் உள்ளுணர்வுகள்.

யுவான் ருல்ஃபோ, அல்லது ஜூலியோ கொர்த்தஸார் அல்லது மரியா லூயிஸா போம்பால் போன்ற லத்தீன்-அமெரிக்க எழுத்தாளர்களை வாசிப்பதில் நான் மோகித்திருந்தேன் என்பதை எப்பொழுதும் என்னால் கூற முடியும். பின்னர் பிரிட்டிஷ், அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்தும் நான் எழுதக் கற்றுக் கொண்டதுண்டு. முன்னவர்கள் எவ்வாறு படைப்பில் இயங்கினார்கள் என்பதைக் கண்டறிய அவர்களுடைய கதைகளைக் கட்டுடைத்து ஆராயத் தூண்டினார்கள். பின்னவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு முக்கியம் என்பதையும், வாக்கியங்களுக்கு இடையில் உள்ள பதட்டம், வாசிப்பவர் மனதில் எழுப்பச் சாத்தியமான அனைத்தையும் எனக்குக் காண்பித்தார்கள். எனவே நான் எழுதும் பொழுது, எனது பின்புலமாக உள்ள இந்த இரண்டு மாறுபட்ட பாரம்பரியங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

 

உங்கள் எழுத்து தவிர இலக்கியப் பாரம்பரியத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? அது உங்கள் எழுத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தியது?

சமந்தா ஸ்வெப்லின்: ஒரு கடினமான போக்கில் என்னை அதிர்ச்சி அடையச் செய்த கடைசியாக வாசித்த புத்தகங்களில் ஒன்று அகோதா கிறிஸ்டோஃப் எழுதிய Klaus and Lukas. அவர் 1935-லிருந்து ஒரு ஹங்கேரிய எழுத்தாளர், அவருடைய வாழ்வில் அதிக காலம் வாழ்ந்தது ஸ்விட்சர்லாந்தில். ஃப்ரெஞ்சு மொழியில் எழுதினார். ஆனால் அவருடைய புத்தகங்களை வாசித்தால் நிச்சயமாக மாபெரும் புத்தகங்களைப் போல – அதீத சமகாலத்திய புத்தகங்களை வாசிப்பது போல இருக்கும். Klaus and Lukas ஒரு செவ்வியல் தன்மை கொண்ட எளிமையான புத்தகம். கதை சொல்லுதலின் ஒரு புதிய, சக்தி வாய்ந்த போக்கை அது அதனுள் ஒளித்து வைத்திருக்கிறது – வாக்கியங்களுக்கு இடையில் கண்ணுக்குப் புலப்படாமல் ஊடாடும் அதி பிரம்மாண்டமான ஆனால் உறுதியான இன்மைகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் மூன்று வித்தியாசமான ‘உண்மை’களிலிருந்து ஒரு கதைக்களத்தை கிறிஸ்டோஃப் கட்டி எழுப்பும் போக்கு. இது நிச்சயமாக வாசிக்க உகந்த புத்தகம்.

 

*Rioplatense: அர்ஜெண்டினா மற்றும் உருகுவே பகுதிகளில் பேசப்படும் ஸ்பானிஷ் வட்டார மொழி.

 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!