home நேர்காணல், புதிய அலை நீங்கள் ஒரு வினாடிக்கு 60 ஃப்ரேம்ஸ் வைக்கப்போவதாக வதந்திகள் இருக்கின்றனவே…

நீங்கள் ஒரு வினாடிக்கு 60 ஃப்ரேம்ஸ் வைக்கப்போவதாக வதந்திகள் இருக்கின்றனவே…

ஜேம்ஸ் கேமரூன் உடன் ஒரு நேர்காணல் 

உலகப் புகழ் பெற்ற திரைப்பட ஆளுமையான ஜேம்ஸ் கேமரூன் ‘அவதார்-2’ க்கான வேலைச் செயல்பாட்டில் இருக்கிறார். இப்போது, அந்தத் திட்டத்தில், ‘அவதார்-3’, ‘அவதார்-4’ம் அடுத்தடுத்து இருக்கிறது. “திட்ட வரைபடத்துடன் நான் காட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். எந்த வழியில், எப்படி அது நிஜத்தோடு பொருந்திப்போகிறது என்று அதைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன்’’, என்கிறார் அவர்.

புகழ்பெற்ற ‘எம்பயர்’ இதழில் வெளிவந்த நேர்காணல்:  கிறிஸ் ஹேவிட்

 

நியூசிலாந்தில், அதாவது, ஜாக்சன்வில்லேவில் உள்ள உங்கள் வீட்டில்தானே, இப்போது உங்கள் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன?

எனக்கு இது வியாபார ஸ்தலம், மற்றும் குடும்பத்திற்கான வீடு.
அடுத்த ஐந்துவருடத்திற்கு இது இப்படித்தான் இருக்கும், அதுக்குமேல் இல்லாவிட்டாலும்; ’அவதார்’ படங்களில் நிறைய கணினிவரைபட வேலை இருக்கிறது. ‘வீட்டா’ என்றழைக்கப்படும் பூச்சிகள் வெல்லிங்டனில் இருக்கின்றன. எங்கள் பண்ணை வைரராப்பாப் பள்ளத்தாக்கில் இருக்கிறது. இங்கிருந்து 12 நிமிடங்களில் ‘வீட்டா’வை என்னால் அடைந்துவிட முடியும். பீட்டர் குடும்பத்தின் வீடும் வைரராப்பாவில்தான் இருக்கிறது. ஆகையால், அவ்வப்போது நாங்கள் அங்கே சென்றுவிடுவோம்.

 

எப்போது முதன்முதலில் உங்களுக்கு பீட்டரைத் தெரியவந்தது?

முதன்முதலில், அவர் கேட் வின்ஸ்லெட் என்னும் நடிகையை வைத்து ‘Heavenly Creatures’ என்ற படத்தை எடுத்தபோதுதான், அவரை எனக்குத் தெரியும். எதேச்சையாக, கேட்டின் பெயர் ‘டைட்டானிக்’ படத்திற்குப் பரிசீலிக்கப்படுவதற்கு முன்னமே, அந்தப் படத்தை நான் பார்த்திருந்தேன். ஆனால், ‘The Fellowship Of The Ring’ பார்க்கும்வரை, நான் அவரை அவதானிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் ஒரு திறமையானவர் என்று அப்போதுதான் நினைத்தேன் .அவரது அந்த இரண்டாவது படத்தில் கையாளப்பட்டிருந்த performance-capture CG என்னும் தொழில் நுட்ப உத்தியைப் பார்த்தபோது, எனக்குள் ஒரு சுயநலமான எண்ணம் தோன்றியது: அவர்களால் ‘Gollum’ (சிறிய மனித வடிவ பாத்திரம்) பண்ணும்போது, என்னால் அவதார் பண்ணமுடியும். ஒரு காலகட்டத்தில், நான் பீட்டரைத் தேடிப்போனேன்; அதைப்பற்றிப் பேசினேன். ‘அவதார்’ எடுக்கும் விஷயத்தில் இருவரும் நண்பர்கள் ஆனோம். பீட்டரின் சொத்துக்களான ஸ்டோன் ஸ்ட்ரீட் ஸ்டூடியோஸையும், வீட்டா டிஜிடலையும், வீட்டா ஒர்க்‌ஷாப்பையும் நான் பயன்படுத்தினேன். படைப்பு வேலையில், பீட்டரும், அவரது திரைக்கதைக் கூட்டாளிகளான ஃப்ரான் வெல்ஸும், ஃபிலிப்பா பாயென்ஸும் ஒத்துழைத்தார்கள். இரண்டுமுறை அவர்களுடன் முழுநாளைச் செலவழித்தேன்; பல காட்சிகளை, பல கருத்துக்களை விவாதித்தோம். அது வெறும் சம்பிரதயாமான செயல் அல்ல; உண்மையான செயல். அவர்களும் தங்கள் நேரத்தை இதற்கென்று ஒதுக்கினார்கள். அவர்களின் சில உள்ளடக்கங்களைச் சேர்த்துக்கொண்டேன்.

 

குறிப்பாக?

இதோ ஒரு நல்லகாட்சி. நேய்ட்ரி, ஜேக்கைப் பிடித்து அவனை நினைவுக்குக் கொண்டு வருகிறாள். ”நான் உன்னைப் பார்க்கிறேன்’’ என்ற வரி அவர்கள் சொன்னது. ஒரு வேளை பீட்டர் சொல்லி இருக்கலாம். வேறோருஇடத்தில் சொல்லப்பட்டது. நான் அதை எடுத்து இந்தக் காட்சியில் அவர்கள் சொன்னதுபோல் சேர்த்துக்கொண்டேன். “ஆமாம். அது உண்மையில் சரியாக இருந்தது’’, என்று நினைத்தேன்.

 

பீட்டர் ‘The Hobbit’ படத்தில் ஒரு வினாடிக்கு 48 ஃப்ரேம்ஸ் வைத்தார். ஆனால், நமக்குத் தெரிந்து, 24 fps (frames per second)தான் வழக்கம். இதைப்பற்றி, துறைசார்ந்தவர்கள் மத்தியிலும், பார்வையாளர்கள் மத்தியிலும், ஒருஅவநம்பிக்கைதான் இருந்தது. உங்கள் கருத்து என்ன?

அதிக ஃப்ரேம்கள் வைப்பதில் நானும் பீட்டரும் முன்னோடிகள். நாங்கள் இருவரும் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்க முயன்றோம். அவர் முந்திக்கொண்டார். மக்களின் எதிர்வினையை அளக்கப் பார்த்தோம். நான் நினைக்கிறேன். அந்தத் தவறு எதிர்பார்த்தலின் தவறு. 3Dயும் அதுவும் ஒன்றல்ல. அடிப்படையில் 3D, 2Dயை விட வித்தியாசமானது. ஆனால் அதிக ஃப்ரேம்கள் என்பது ஒரு முன்னேற்றம்தான். அது முக்கியமானது என்று நினைக்கிறேன்; அதை மேலும் தொடரவேண்டும் என்றும் நினைக்கிறேன். அதை எந்நேரமும் பார்க்கிறேன்; குறிப்பாக, உயிரூட்டம் கொடுக்கப்பட்ட (animated) பெரிய படங்களில்; பிக்ஸார் படங்களில், ட்ரீம்ஒர்க்ஸ் படங்களில். அவற்றில் இந்தமாதிரி விஷயங்களைச் செய்வதற்கு அவர்களுக்கு நேரமிருக்கிறது. அசத்தலாய் அமைக்கப்பட்ட, கேவலமான மனிதனைப்போல ஒளிவட்டமாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஷாட்டைப் பண்ணியிருப்பார்கள். ஒத்திகைக்காட்சியின்போது சுழலும் ஒளிவட்டத்தைக் கவனித்திருக்கமாட்டீர்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் எல்லாமும் ஒளிவட்டமாய்த்தான் சுழன்றுகொண்டிருக்கும். இன்னும் அந்தச் சலன மங்கலைக் கவனத்தில் கொண்டிருக்கமாட்டீர்கள். அந்த ஷாட்டில் எல்லாச் சலன மங்கலும் இருக்கும். திடீரென்று, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த அற்புதமான ஷாட் வெறும் குப்பையாகத் தோன்றும். அதை மாற்றமுடியாத அளவிற்கு மிகவும் தாமதமாகியிருக்கும். அது வெறும் குப்பையாகத் தோன்றும்; ஏனென்றால் அது ஒரு வினாடிக்கு 24 ஃப்ரேம்ஸ் என்ற முறையில் எடுக்கப்பட்டது. பிரச்சினை என்னவென்றால் வெளிப்பாடு ஊடகத்தின் (projection medium) குறைபாடு. 100 வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது. 48 என்பது அடிப்படையில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் அது பிரச்சினைகளைத் தீர்த்து, அந்தமாதிரி ஷாட்களை எடுக்க அனுமதிக்கும். நான் ‘அவதார்’ எடுக்கும்போது, அகன்ற நிலப்பரப்புக்காட்சிகளை எடுப்பதைத் தவிர்த்தேன். ஏனென்றால் அவை ஒளிவட்டமாய்ச் சுழலும்; அந்த மாதிரியான சுழலும் ஒளிவட்டம் 3Dயில் மிகத் தெளிவாகத் தெரியும். இன்னும் நான் அதை ஆதரிப்பவன்தான். பீட்டரை விட வித்தியாசமாக நான் அதைப் பிரயோகிப்பேன் என்றும் நினைக்கிறேன். படம் முழுக்க இசையை நான் எப்படி வைக்கமாட்டேனோ, அதுபோல, படம்முழுக்க அதை நான் பயன்படுத்தமாட்டேன். தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துவேன். Panning shots இருந்தால், அதை நான் பயன்படுத்துவேன்; எல்லாவற்றிற்கும் அல்ல. எல்லாவற்றிற்கும் அது தேவைப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிலநேரங்களில் ஒரு எதிர்மறையான தாக்கம் இருக்கிறது என்று உண்மையில் நினைக்கிறேன், அதீதமான நிஜமாக பொருட்கள் தோன்றும்போது; நீங்கள் ஒரு படத்தை அல்ல, ஒரு நிஜத்தைப் பார்க்கிறீர்கள் என்று உங்களுக்குத் தோன்றும்போது. ஒப்பனை அணிந்த மாந்தர்களுடன் ஒரு ஒலிமேடையில் நீங்கள் இருப்பதுதான் அந்த நிஜம். நானும் பீட்டரும் இதைப்பற்றிப் பேசியிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கான கொள்கைகளை வைத்திருந்தோம்.

நான் என்னுடையவைகள் சரியாக வருமா என்று பரிசோதித்துப் பார்க்கப் போகிறேன். சரியில்லையென்றால், அவை மறைந்து போகலாம்.

 

அவதாரின் தொடர்படங்களுக்கு நீங்கள் ஒரு வினாடிக்கு 60 ஃப்ரேம்ஸ் வைக்கப்போவதாக வதந்திகள் இருக்கின்றனவே…

நாங்கள் 60ம் பார்த்துவிட்டோம்; 48ம் பார்த்துவிட்டோம். 24யை விட 48 சாலச்சிறந்தது. 60, 48யை விட நிரூபணமுறையில் சிறந்தது; ஆனால் கொஞ்சம்தான். அந்தநேரத்தில் என்னுடைய சிந்தனை என்னவென்றால், 60தான் வீடியோச் சந்தைக்கு ஏற்றவழி என்பதுதான். கணினியில் பொருத்திக் கொண்டு பார்ப்பதற்கு 48 ஃப்ரேம்ஸ்தான் சரியாக இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன்.

 

சினிமா மொழியில் பேசினால், உங்களுடைய ’அவதார்’ படத்தில், சினிமா மொழியையே மறுஉருவாக்கம் செய்தீர்கள். இனிவரப் போகும் படங்களிலும் அதேமாதிரி செய்வதற்கு ஏதேனும் கட்டாயம் இருக்கிறதா உங்களுக்கு?

அது ஒன்றும் சினிமாவைப் புரட்சியாக்கவில்லை. நாங்கள் செய்த பெரும் புரட்சி என்பது ’சிமல்-கேம்’ (Simul-Cam process) மட்டுமே. அது ஒரு நிஜக்கட்டுமானத்தில், புகைப்படக்கலை, கணினிவரைபடப் பாத்திரங்கள், கணினிவரைபடச் சூழ்நிலைகள் ஆகியவற்றை இணைத்து வைத்தன. யாரும் இதை இதுவரை செய்யவில்லை. அடுத்த படத்திற்கு முன்பு, இதைத்தான் செப்பனிட்டு வளர்த்து வைப்பதற்கு ஏராளமான நேரத்தைச் செலவு செய்தோம். அதனால், மக்கள் விழித்து எழுந்து காஃபி சாப்பிடுவார்கள். உங்கள் கேள்விக்குத் திரும்புகிறேன்; ஏதேனும் கட்டாயம் உள்ளதா? இல்லை. நான் அப்படிப் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில், ‘அவதார்’ தொழில்நுட்பப் புதுமையால் வரையறுக்கப்பட்டதில்லை.

 

மண்புழுத் துளை தொழில் நுட்பத்தை (காலவெளிக்குள் இட்டுச்செல்லும், கருத்தியல் ரீதியில் அமைந்த, ஒரு சுருக்குப்பாதை: wormhole technology) நீங்கள் வளர்த்துக்கொண்டு, ‘பண்டோரா’வில் (Pandora; an internet radio) நுழைந்து அங்கேயே படப்பிடிப்புச் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தோம்..

நான் அதைச் செய்யமாட்டேன்.மண்புழுத் துளை தொழில் நுட்பம் எனக்கிருந்தால், நான் காலவெளியில் முன்னே சென்று, 3 படங்கள் எடுத்து, Blu-raysல் அவற்றை எடுத்துவந்து, ஒரே நாளில் திரைக்கதைகளை எழுதிவிடுவேன்.

 

நல்லது. எப்போது ஆரம்பிக்கப்போகிறீர்கள்?

திரைக்கதைகள் தயார் ஆனவுடன், படப்பிடிப்பைக் தொடங்கிவிடுவேன்.
அது ஒரு நீண்ட செயல்பாடு. மூன்றாவது படத்தை ‘மிக்ஸ்’க்கு அனுப்பியபோது, அதை நான் தனியாளாய் தொடர்ச்சியாய் எழுத நேரமில்லை. நானே எல்லாவற்றையும் எழுதத் திட்டமிட்டிருந்தேன்.ஆனால் மூன்று திரைக்கதைகள் என்பது ஒருசில ஆண்டுகளுக்கான வேலை. அதனால், செயல்பாட்டைச் சுருக்கும் வகையில், எழுத்தாளர் குழுக்களை அமைக்கத் தீர்மானித்தேன். (ரிக் ஜாஃப்னா, அமந்தா சில்வர், ஜோஷ் ஃப்ரைட்மான், ஷானே சாலர்னோ). ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு திரைக்க்தை. வசனம், பாத்திரங்கள் ஆகியவற்றின் ஒழுங்கமைதிக்காக, நான் ஒவ்வொரு குழுவிலும் இருந்தேன். நாங்கள் 7 மாதங்கள் சந்தித்தோம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியையும் வெள்ளைப் பலகையில் எழுதினோம். கடைசி நாள் வரை, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் என்ன படம் என்று சொல்லவில்லை. முன்னமே தெரிவித்திருந்தால், மற்ற படங்களைப் பற்றிப் பேசும்போது, அது அவர்களின் எழுத்தைப் பாதித்திருக்கும் (சிரிக்கிறார்). மூன்று படங்களிலும் அவர்கள் சமமாக முதலீடு செய்யப் படவேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால் அவர்கள் பாத்திரங்களில் முதலீடு செய்யப்படவேண்டும். மூன்று படங்களையும் பாத்திரங்கள் நிரப்புகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் சகாப்தத்தின் முடிவில் முடிவுக்கு வருகின்றன. அதை ஒரு சகாப்தம் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இது ஒரு பெரிய கட்டிடக்கலை. எழுத்துவேலையின் அசுரத்தனத்தால், இதுகொஞ்சம் பிரமிப்பூட்டுவது.

 

அதனால், நாங்கள் ‘அவதார் 2, 3, 4’ ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்?

அவற்றைப் பற்றி ஒன்று சொல்லமுடியும். அவை படுபயங்கரமாக இருக்கும்.

 

கொஞ்சம் விளக்கமுடியுமா?

வாயிலியே வடை சுட்டுட்டுப் போய்டுவீங்க..

 

டெர்மினேட்டரின் 30ஆவது ஆண்டுவிழா வருகிறது. இது ஒரு மகத்தான ஆண்டாக நீங்கள் உணர்கிறீர்களா?

‘ட்ரூ லைஸ்’ஸின் 20வது ஆண்டுவிழாவும் கூட. அதற்கப்புறம் இரண்டே இரண்டு படங்கள்தான் எடுத்திருக்கிறேன். நான் ரொம்ப சீக்கிரமாகவே வெடித்து சூடாகவே வெளிவந்திருக்கிறேன். ’டெர்மினேட்டர்’, ‘ராம்போ’, ‘ஏலியன்ஸ்’ ஆகிய மூன்று படங்களுக்கான திரைக்கதைகளை மூன்றே மாதத்தில் எழுதினேன். ’அவதார்’ திரைக்கதைகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நாள் எடுத்தேன் என்று எனக்குப் புரியவில்லை.3 மாதங்களில் 3 திரைக்கதைகள் எழுதினேன்!

 

‘டெர்மினெட்டர்-5’ல் நீங்கள் ஈடுபடவில்லை; வெறும் ஆலோசனை மட்டுமே வழங்கியிருக்கிறீர்கள். ஈடுபடாமல் இருந்தது கஷ்டமில்லையா?

இல்லை. எனக்குத் தெளிவாக ஞாபகமிருக்கிறது. ஒரு கட்டத்தில், இன்னொரு ‘டெர்மினேட்டர்’ வரிசைப்படத்திற்கான கரு, நான் ‘டைட்டானிக்’ முடிக்கும்போது வந்தது. நான் ‘டைட்டானிக்’கில் இருந்தபோது ஒரு திரைப்படப் படைப்பாளியாக வளர்ந்துவிட்டேன். இந்நிலையில், அந்த மாதிரி ஒரு கதையைச் சொல்லி, ‘டெர்மினேட்டர்’ உலகத்திற்குப் போவது என்பது பின்நோக்கிப் போவது போலிருக்கிறது. அதனால் அதை விட்டுவிட்டேன். நான் விட்ட கணம் எனக்குத் தெரியும். நான் விலகினேன்; “பசங்களா, என் ஆசிர்வாதத்தோடு இந்தப் படத்தை எடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு விலகிவிட்டேன். அது நடந்தது 1997ல். அதிலிருந்து ‘டெர்மினெட்டரிலிருந்து உணர்வுபூர்வமாக விலகிவிட்டேன்.

 

2019ல் அந்த உரிமை உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்…

அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. சட்டரீதியில் பரிசோதிக்கப்படாத விஷயம் அது. அசல் படைப்பாளி என்ற முறையில் எனக்கு உரிமை வந்துவிடும். ஆனால் அதைவைத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் யோசிக்கவும் இல்லை.

 

உங்களை நீங்களே விலக்கிக்கொள்வது என்பது ரொம்பக் கஷ்டமாக இருந்திருக்கும்..

‘டெர்மினேட்டர்’ உலகத்திற்கு நான் திரும்பிப் போயிருந்தால், அது ஒரு பரந்த மறுகருத்துருவாக்கமாய் இருந்திருக்கும். ’டெர்மினேட்டர்’ எதைப் பற்றிப் பேசுகிறது என்று நீங்கள் யோசித்தால், அது தொழில்நுட்பத்தின் இருட்டான பக்கத்தைப் பற்றியது என்று புரியும்; தொழில்நுட்பம் மனிதர்களை மனிதம் கடந்த உலத்திற்கு இட்டுச்செல்கிறது என்பதைப் பற்றியது அந்தப் படம் என்று புரியும். எந்திரங்களில் இயங்கும் மனிதர்கள், எந்திர உலகம்… அவற்றைப் போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. நான் அதைப் பற்றி புளகாங்கிதம் அடைவேன் என்றால், அந்த விஷயங்கள் என்ன சொல்கின்றன என்பதற்கு மறுவிளக்கம் கொடுப்பேன். கதை உரிமை மீண்டும் வருவதில் எனக்குப் பிடித்த சமாச்சாரம் என்னவென்றால், புதிய வரிசையில் புதிய கதையை அவர்கள் சொல்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை என்பதுதான். முதல் படத்தை மறுஉருவாக்கம் செய்யும் திட்டம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மறுஉருவாக்கப் படங்களை நான் வெறுக்கிறேன். ‘சைக்கோ’வை ஏன் மீண்டும் எடுக்கவேண்டும்? அது பரிகாசத்திற்குரியது. ‘சைக்கோ’வைப் பாருங்கள், போதும். ’டெர்மினேட்டரை’ ஏன் மீண்டும் எடுக்கவேண்டும், டெர்மினேட்டரை பாருங்கள், போதும்.

 

தமிழாக்கம்: மஹாரதி

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!