home கட்டுரை, டிரெண்டிங் நோம்  சோம்ஸ்கி – மாற்றிலக்கணம் : ஓர் அறிமுகம்

நோம்  சோம்ஸ்கி – மாற்றிலக்கணம் : ஓர் அறிமுகம்

– ர் பாலகிருஷ்ணன்

 

நோம்  சோம்ஸ்கி 1928 டிசம்பர் (7) மாதத்தில் பிறந்தவர். அமெரிக்கர் என்றாலும் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சிப்பவர். அவரது தந்தையார் ரஷியாவிலிருந்து குடி பெயர்ந்தவர். ஒரு மொழியியலாளராக இருப்பினும் அவரது அரசியல் பார்வை மிகவும் கவனத்துக்கு உரியது. அத்துடன் பாலஸ்தீன் குறித்த அவரது பார்வை மிகவும் முக்யத்துவம் வாய்ந்தது. அவருடைய மாபெரும் பங்களிப்பு மாற்றிலக்கணம் ஆகும். மாற்றிலக்கணம் என்பது மொழி விளக்கம் பற்றிய ஒரு கோட்பாடு அல்ல.  மொழி  எவ்வாறு தோன்றுகிறது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் முன்பிருந்த கோட்பாடுகளை மறுதலித்ததில் அவரின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. அவர் சமூகவியல், உளவியல் கோட்பாட்டாளர்களுடன் முரண்பட்டதை இது விளக்கும்.

மொழி  என்பதே ஒரு அறிவாக உள்ளது என்கிறார் சோம்ஸ்கி. மொழி உருவாக்கும் அமைப்பு மூளையினில் ஒரு உறுப்பாக உள்ளது என்பது அவர் கருத்து. தன்னை ஒரு மார்க்ஸாலஜிஸ்ட் அல்ல என்று கூறும் அவர் மனிதனின் மூளை  உருவாக்கும் ஒன்றாக மொழியை   வடிவமைப்பதனின்று அவர் தனி மனிதப் படைப்பியலுக்கு முக்கியத்துவம் தருகிறார். சமூகவியல் ஆய்வாளர்களின் மொழி குறித்த பங்களிப்பிற்கு இது முற்றிலும் முரணான ஒரு கோட்பாடு. மார்க்ஸியம் மொழி என்பது ஒரு சமூக  அடிக்கட்டுமானம் என்பதினின்று உருவாகும் மேற்கட்டுமானம் என்று கூறுகிறது. பல்வேறு இனக்குழுக்கள் சமூக இயக்கங்கள் இல்லாமல் மொழி உற்பத்தி ஆகியிருக்க வாய்ப்பில்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் மொழி குறித்த பங்களிப்பு. ஆனால் சாம்ஸ்கியின் விளக்கங்களை வைத்துப் பார்க்கும் போது அவர் மனதின் படைப்பாற்றலைப் பெரிதும் முக்கியக் காரணமாகக் கருதுகிறார் என்று இதன் மூலம் அறியலாம்.

மொழி என்பது ஒரு அறிவாக உள்ளது. மனது, மூளை இரண்டின் தொடர்பினாலும் துவக்க காலம் தொட்டு குழந்தை  கற்றுக்கொள்ளும்  மொழியின் பரிமாணமும் புறச் சூழல் ஆகியவற்றால் உருவாகும் பரிமாணமும் ஆக இரண்டு நிலைகளில் மொழி உருவாகிறது என்கிறார் சோம்ஸ்கி. முந்தைய கருத்தாக்கங்களான மொழிக் கிடங்கு மற்றும் மொழி சேமிப்பு ஆகியவற்றின் விளைவாக மொழி உருவாகிறது என்பதை அவர் மறுதலிக்கிறார். சோம்ஸ்கி மூளையின் நடுப் பகுதியில் மொழி உற்பத்திக்கான களம் உள்ளது  என்கிறார். இந்த உற்பத்திக் களம் துவக்க, வளர்ச்சியுறும், முதிர்ந்த நிலைகளில் குழந்தையிடம் உற்பத்தி செய்வதன் விளைவாகவே மொழி சீரடைகிறது, மொழித் திறன் வளர்கிறது. அது புறச் சூழல்களால் கட்டமைக்கப்படுவதில்லை. புறச் சூழல்களை எதிர் கொள்ளும் மொழித் திறனுள்ள மூளை அல்லது மனம் மொழி கற்றுக்கொள்ளும் செயலாக்கத்தில் முரண்களினூடே வளர்கிறது. அல்லாமல் அமைப்பியல்வாதிகள் கட்டமைப்பது போல், சொற்களின் எதிர்ப் பண்புகளால் அது வளர்வதில்லை. அவற்றின் பட்டியல் மற்றும் அட்டவணை  ஆகியன இதில் பொருத்தமான விளக்கங்களைத் தர வாய்ப்பில்லை. அது இலக்கணவறையறைகளால் உருவாக்கப் பட்டது என்பதை அவர் மறுக்கிறார். சமூகக் குழுக்கள் ஒன்றிணைந்து நீண்ட கால நடைமுறையினால் அது உருவாக்கப் படவும் இல்லை. பட்டியல்கள் மற்றும் அட்டவணைகளின் தொகுப்பாகவும் அது இல்லை. ப்லூம் ஃபீல்ட்  போன்ற அமெரிக்க அமைப்பியல் வாதிகள் மொழி உற்பத்தியாகும் களங்களை வைத்தே அது உருவாகும், இயங்கும் நிலையைக் கணிக்க இயலும் என்பர். மொழி விவரிப்பையும் அவ்வாறே  இயலும் என்ற கருத்தும் சாம்ஸ்கியால் மறுதலிக்கப்பட்டது.  சாம்ஸ்கி தனது “Syntactic Structures” -வாக்கிய  வடிவ அமைப்பியல் எனும் நூல் வாயிலாக எவ்வாறு மொழி தன் போக்கில் மூளையினில் ஒரு சீரான அலகு உற்பத்தியாக வெவ்வேறு இலக்கண அமைப்புகள் மற்றும் வரி அமைப்புகள் கூறுகளாக அமைந்துள்ளன என  நிரூபிக்கிறார். இவை மூளையின் சுயாதீனமான உற்பத்தி முறையை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத் தகுந்தது. மூளை இவ்வாறு ஒரு உற்பத்திக் கேந்திரமாக படைப்பாற்றலோடு அறிவையே உற்பத்தி செய்கிறது எனலாம்..

சசூர்சசூர் மொழி ஆய்வில் பெரிய பங்களிப்பு எதனையும் செய்திடவில்லை என்பது சாம்ஸ்கி கருத்து. கிடங்கு என்ற அவரின் கோட்பாட்டின்படி மொழி ஒரு சேமிப்பு மையமாக உள்ளதை  சாம்ஸ்கி மறுக்கிறார்.அந்த  மையம் ஒரு அமைப்பாகவும் இல்லை. ஒவ்வொரு முறை உரையாடும் போதும் மனிதனால் மொழி புதியதாக உற்பத்தி செய்யப் படுகிறது. ஆகவே உலகே ஒரு அர்த்தவியல் களமாக உள்ளது. புதிய சொல் புதிய வரி வடிவம் ஆகியன தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் களமாக மனித மூளை உள்ள நிலையில் சேமிக்கப் பட்ட மொழி என்பதே தொடர்ந்து செயல் பாட்டில் உள்ளது என்பது பொறுத்தமற்ற விவாதம். ஒரு அமைப்பு என்பது தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும், வளர்ச்சியடையும் தன்மையுள்ள  ஒன்றையே அவ்வாறு கூற முடியும். ஆனால் எஸ்பெர்சன் மொழி அலகுகள்  மற்றும் இலக்கண அலகுகள், அர்த்த அலகுகள் குறித்து உரைக்கிறார். இது முக்கியமானது  என்கிறார் சோம்ஸ்கி. எனினும் சசூரின் ஆய்வுகள் மொழியியலுக்கு நல்ல தொடக்கம் என்றும் அவர் ஒப்புக் கொள்கிறார். பின்னாட்களில் அவர் அமைப்பியல்வாதிகளை முற்றிலும் தவிர்ப்பது குறிப்பிடத் தகுந்தது.

மெக்ஸ் வேபெர் : மெக்ஸ் வேபெர் ஒரு ஜெர்மன் தத்துவவியளாலர், அனுபவவாதம் என்பதில் தொடங்கி அனுபவத்தினைப் பொறுத்தே எதனையும் நிறுவ முடியும் என்று வலியுறுத்தியவர். புறவய அணுகுமுறை, சித்தாந்தம் மற்றும் மதம் உடன் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் தொடர்பை  இவ்வகை அனுபவவாதம் கொண்டே விளக்க முடியும் என்பார். தத்துவவியலாளர்கள் மொழி ஒரு விளையாட்டாக நிகழ்வதாகக் கூறுவர்.

மார்க்ஸிசம் இதே வகையினில் சமூகத்தின் ஒரு உற்பத்தியாகவே மொழியை நிறுவ முயல்கிறது. மேல் கட்டுமானம் அடிக்கட்டுமானம் என்ற வகையினில் மொழியை  அது மேல் கட்டுமானமாக, சமூக உற்பத்திப் பொருளாகவும் விவரிக்கிறது. சபிர் போன்ற சமூகவியலாளர்கள் எப்படி மொழி சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் உருவாக முடியும் என்று கேட்கின்றனர். மூளையின் ஒரு செயலியாக எவ்வாறு மொழியைக் கருத இயலும் என்று மனிதவியல் சிந்தனையாளர்களும் வினவுகின்றனர். சாம்ஸ்கி இவ்விதத்தில்  ஸ்கின்னெர் போன்ற உளவியலாளர்களுடன் ஒன்றிப் போகிறார். அனிச்சையான  நடவடிக்கைகள் எவ்வாறு மிதி வண்டி ஓட்டுதல் போன்றவற்றை வடிவமைக்கின்றனவோ  அப்படியே மொழியும் மூளையால் வடிவமைக்கப் படுகிறது என்பதை நிரூபிக்க அவர் உருவாக்கிய முறை தான் “Syntactic Structures“. மொழி வெவ்வேறு மொழி சார் நுண் அலகுகளின்  வாயிலாக தன்னைத்தானே கட்டமைக்கிறது. இது மூளையின் மிக அரிதான நடவடிக்கை. சமூக அளவில் நிகழும் தாக்கங்களை அது எதிர் கொள்ளும் விதம் முரண்களை எதிர் கொள்ளுதலுக்கு ஒப்பானது. இதனால் புறத் தாக்கங்கள் அதன் அரிய வகை மாற்றங்களுக்கு உட்பட்டே அதாவது அதன் சீரமைப்பு அல்லது படைப்பாற்றலுக்கு உட்பட்டே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஒரு வித கணித்தல், நுண் உணர்தல் நிலைப்பாடு இது எனலாம். அது அவ்வாறு நிகழ்கிறது என்பார் சோம்ஸ்கி. ஆகவே மொழி தானாக உற்பத்தியாகிறது. தத்துவவியலாளர்கள் மொழி ஒரு விளையாட்டாக நிகழ்வதாகக் கூறுவர். இவ்வகை விளக்கங்கள் மனிதனின் மதி நுட்பத்துக்கு  எதிரானவை. நுண்ணறிதல் மேலுள்ளவற்றை நீக்கி உள்ளார்ந்த ஆய்வினாலேயே இதனை அறிய முடியும். ஆகவே இவ்வகை விளக்கங்கள் பொறுத்தமற்றவை. சமூகத்தின் புறச் சொல்லாடலை ஒத்து உள்ளார்ந்த ஒரு செய்கையாகவே மொழி உருவாக்கம் நிகழ்கிறது. மூளையின் பார்வைத் திறன் பகுதிகள் இவற்றை வடிவமைக்க உதவும். தமிழ் இவ்விதத்தில் மலையாளம் அல்ல. மொழி அறிதல் என்பது இவ்வாறு நீண்ட காலமாக பேசுபவரின் அறிவு சார் நடவடிக்கையாக உருவாக்கப் படுகிறது. விளைவாக இலக்கணக் கட்டமைப்பும் நிகழ்கிறது. வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வெளியாடலை இவ்வாறு ஒருவரால் உருவாக்க முடியும்.

இறுதியாக அவர் மாற்றிலக்கணத்தை இந்த அடிப்பைகளிலேயே வடிவமைக்கிறார். மாற்றிலக்கணம் ஆழ் கட்டமைப்பு மற்றும் மேல் கட்டமைப்பு என இரண்டு நிலைகளை உடையது. மாற்றத்தை உருவாக்கும் செயல் ,அடிப்படைக் கட்டமைப்பில் தோன்றுகிறது. அதாவது ஒவ்வொரு உப அலகும் – (இலக்கண, வரி சார், அர்த்த -) இத்தகைய செயலை நிகழ்த்த வல்லன. இதன் அடிப்படையில் உருவானதே உலகு நிறை இலக்கணம். (universal grammar). மானுடர்களின் உடல் மற்றும் மனதின் திறத்தால் வடிவமைக்கப் பட்டவை. அவர்களால் எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்ள இயலும். அடிப்படையான இலக்கண ஒலி மற்றும் அர்த்தக் கூறுகள் எல்லா  மானுடராலும் உருவாக்கத் தகுந்தவை.

 

உலகு நிறை இலக்கணம் 

என்பது மிகச்செறிவான ஒரு அறிவுக் கூறு முறை எனினும் குறுகலான வடிவமைப்பைக் கொண்டது. உள்ளார்ந்த வழிமுறைகள்  மூலம் அது நிகழ்வுகளை முன் கூறும். அதன் முக்கியச் செய்கையானது மாறுதலடைதல்; ஆழ் மற்றும் மேல் தளங்களில் மாற்றங்கள் நிகழ்த்துதல். மனித மூளை தனது கட்டமைப்பை  அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அறிதல் திறன்களை வெளியிடும். தானே செப்பனிட்டுக் கொள்ளவும் செய்யும். சிந்தனைகளை உற்பத்தி செய்யும் அதன் அடிப்படை அறிவு உருவாக்கத்திற்குக் காரணம். இவ்விரண்டையும் தொடர்புறுத்திடும் நிலையே மொழி. மொழி விதி முறைகள் எல்லா மொழிகளுக்கும் பொருந்துவன.

 

சோம்ஸ்கியும் மார்க்ஸிசமும் 

சோம்ஸ்கி தன்னை ஒரு மார்க்ஸிஸ்டாக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. எனினும், அவர் வியட்னாம் போர் மற்றும் பாலஸ்தீனம்  குறித்து மார்க்ஸியர்களை ஒத்தே கருத்துக் கூறி உளளார். உலகெங்கிலும் நிலவும் அநீதிக்கெதிராக அவர் கருத்துகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அறிவாளிகள் எவ்வாறு அதிகாரத்திற்குச் சேவை செய்கிறார்கள், மக்களைச் சுரண்ட  அவர்கள்  எவ்வாறு உதவுகிறார்கள் என்பதை சோம்ஸ்கி எடுத்துக் காட்டுகிறார். 16 ஆம் நூற்றாண்டு ஜெர்மானிய மேதை ஹம்பொல்ட்டின் கருத்துகளால் கவரப்பட்டு தன் கல்வி மற்றும் சிந்தனை சார்ந்த கொள்கைகளை வகுக்கிறார். ஹம்பொல்ட் மனிதரில் உள்ள ஒரு படைப்பாற்றலே அறிவு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்குக் காரணம் என்கிறார். இதனை ஒட்டிய சோம்ஸ்கியின் சிந்தனைகள் மார்க்ஸிசத்துடன் பொருத்தமுடையன அல்ல. ஏன் என்றால் மார்க்ஸியம் அறிவு என்பது சமூகத்தின் சமனிலையை  உண்டாக்க வேண்டிய பொறுப்புள்ளது என்ற கருத்தைக் கொண்டது. மேலும் வால்டெர் லிப்மனின் “ஒப்புதல் உற்பதியாக்கம் ” என்பதில் சோம்ஸ்கி தீவிர நம்பிக்கை கொண்டவர். 50 மற்றும் 60 களில்  மேலைப் பல்கலைக்கழகங்கள் போருக்குப் பிந்திய அரசியல் மற்றும் வியட்னாம்  போரால் மாணவர்களின் நிலை குலைந்த அரசியலால் பாதிப்புக்குள்ளாகின. அதிகாரக் குழுக்கள் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு கல்வி மற்றும் ஆய்வுகளுக்குத் தடையில்லாத அரசியல் நிலைப் பாட்டை  உருவாக்க விரும்பின. விளைவாக ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் அல்லாத இடை நிலை அறிவு நிறுவனங்கள் மாற்று அறிவு நிலையை உருவாக்குவதாகத் தோற்றம் கொண்டன. இவ்வகை செயல்பாடுகள் ‘ஒப்புதல் உற்பத்தி’ என்கிறார் சோம்ஸ்கி. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் நூலுக்கு முன் ஒரு ஆய்வு முறையியல் எழுதியதைப் போல (க்ரன்றிஸ்) இவரும் ஒரு ஆய்வு முறையியல் ஒன்றை எழுதி உள்ளார். “methodological preliminaries to  Syntactic Structures என்று அதன் பெயர். 60 களில் வியட்னாம் போரை எதிர்த்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் நடந்து வந்தன. இது பல்கலைக் கழகங்களில் நிகழும் ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளைப் பாதித்தது. சோம்ஸ்கி இதைக் கல்வி எவ்வாறு தனது முதலாளித்துவ இலக்குகளை நோக்கி நகரும் வழியில் இடர் காண்கிறது, மாணவர்களுக்கான இலக்குகள் அவர்களை ஒட்டி இருக்க வேண்டும் என்ற அளவில் உருவாக்கியதே “Manufacturing Consent” என்ற கருத்து.

சோம்ஸ்கி பின் நவீனத்துவ, அமைப்பியல்  மற்றும் மார்க்ஸிய அறிவுவாதிகளுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

********

ஆர். பாலகிருஷ்ணன், ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

 

 

2 thoughts on “நோம்  சோம்ஸ்கி – மாற்றிலக்கணம் : ஓர் அறிமுகம்

  1. தரமான கட்டுரை. எளிமையான முறையில் நோம் சாம்ஸ்கியின் மொழிச்செயல்பாடுகளை எடுத்துரைத்திருக்கிறது. வாழ்த்துகள்! தொடர்ந்து இது போன்ற மொழியல் சார்ந்த கட்டுரைகள் வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!