home கட்டுரை, தமிழி பக்கிர்ஷாக்கள் என்னும் கதை சொல்லிகள்

பக்கிர்ஷாக்கள் என்னும் கதை சொல்லிகள்

  • ஹெச்.ஜி.ரசூல்

 

பக்கிர்ஷாக்கள் முஸ்லிம் நாட்டுப்புறக் கலைஞர்கள். மஸ் அலாக்களையும் கிஸ்ஸாக்களையும் பாடல்வடிவில் இசைத்துச் சொல்லும் கதைச் சொல்லிகள். இஸ்லாமிய மஸ் அலா(கேள்விக்கு பதில் தேடுதல்) கிஸ்ஸா(கதைப்பாடல்) நாமா(சரித்திரம்) முனாஜாத்து(ரகசியம்) வடிவங்களை அழிந்துபோகாமல் நினைவுப்பரப்பில் வாழவைக்கும் நிகழ்த்துக் கலைஞர்கள். அன்பு, விடுதலை, மனிதநேயம், சமத்துவ லட்சியங்களை சூபி ஞானிகளின் பாடல்களின் மூலமாக பரப்புரை செய்பவர்கள். இந்திய விடுதலைப்போராட்டகாலத்தில் பிரிட்டீஷாரை எதிர்த்து கொரில்லா தாக்குதலை நடத்திய பக்கீர் – சந்நியாசி கலகத்தின் போராளிகளே இவர்களது முன்னோடிகள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளத்தின் நடைபெற்ற பக்கிர் – சந்நியாசி கலகம் பிரிட்டீஷ் ஆட்சியாளரை எதிர்த்தும், பிரிட்டீஷ் கிழக்கிந்திய ராணுவப் படைக்கு எதிராகவும் இந்திய நிலவுடமையாளர்கள், கந்துவட்டிக்காரர்களின் வரிவசூல் கொடுமைக்கு எதிராகவும் நடைபெற்றது. 1770 களில் பத்துமில்லியன் மக்களைக் காவுகொடுத்த வங்காளப்பஞ்சமும் இதற்கொரு காரணமென வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வட இந்தியாவில் புறப்பட்டு வங்காளத்தின் சூபிஞானி தர்காக்களுக்கு பயணித்த பக்கிர்கள் நாடோடி வழிப்போக்கர்களாகவும், ரகசிய குழுக்களாகவும் செயல்பட்டுள்ளனர். மஜ்னுஷா சூபியின் தலைமையில் ஒன்றுதிரட்டப்பட்ட ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கிர்களும் சந்நியாசிகளும் 1767 – 1786 காலகட்டத்தில் கொரில்லாமுறை சார்ந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 1771ல் மட்டும் ஏறத்தாழ 150 க்கும் மேற்பட்ட பக்கிர்கள் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் முதலாவது சுதந்திர யுத்தம், வேலூர் கோட்டை புரட்சியின் போது தகவல்களை கொண்டு சேர்த்ததும், ஒவ்வொரு ஊரிலும் சிலம்பம், குத்துவரிசை, மடுஉ, சுருள்.. என தற்காப்பு கலைகளை கற்பித்தவர்களும் பக்கிர்ஷாக்களே என்ற வரலாற்றியல் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

பக்ர் என்ற அரபுச் சொல்லுக்கு ஏழ்மை என்பது பொருள். பக்ர் என்ற சொல்லில் இருந்தே பக்கீர் என்ற சொல் உருவாகி உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியப் பகுதியில் முஸ்லிம் சூபிகளே பக்கீர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இஸ்லாத்தின் அறவியல் சிந்தனைகளைப் பரப்பும் நாடோடிகளாக அலைபாயும் இவர்களை தர்வேஷ்கள் என்று அழைப்பதும் உண்டு. தர் என்ற பாரசீகச் சொல்லுக்கு வாசல்/கதவு என்ற பொருளும் உண்டு. வாசல்தோறும் செல்லும் ஒருவர் தர்வேஷ் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்களின் மனநிலையை, வாழ்வை கற்பதற்கான ஒரு பயிற்சியாகவே வீடு தோறும் செல்லும் பணியை தர்வேஷ்கள் செய்கிறார்கள். தங்களது தேவைகளை நிறைவு செய்வதற்காக அல்லாமல்,  துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதற்கே இதனை நடைமுறைப் படுத்துகிறார்கள் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எகிப்தில் காதிரிய்யா என்றும் துருக்கியில் காதிரி என்றும் அழைக்கப்படும் இவர்கள் அடித்தள தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர்.

பக்கீர் என்னும் பாரசீகச் சொல்லுக்கு இரவலர்கள் என்று தமிழில் அர்த்தம். யாரிடமும் யாசகம் கேட்பவரல்ல. தங்களைது பாடலைக் கொடுத்து அதற்கு பதிலாக பெறும் உதவியால் தங்கள் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முயல்பவர்கள். ஊர்சுற்றிகளாகவும், பள்ளிவாசல், தர்கா வாசல்களை இருப்பிடங்களாகக் கொண்டும் நாடோடிவாழ்வு வாழ்பவர்கள். ரமலான் நோன்பு காலங்களில் மக்களை அதிகாலை மூன்றுமணிக்கே எழுப்பி அத்தாளம் குடிக்க வைக்க தாயிரா கொட்டி தெருத்தெருவாய் வாசல்தோறும் செல்பவர்கள். பக்கிர்கள் பன்னிரெண்டு அடையாளங்களால் தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். தலையில் பச்சை அல்லது வெள்ளை தலைப்பாகை இதில் ஒன்று. இது ஆறு முதல் பதினெட்டுவரை மடிப்புகள் கொண்டது. தாயிரா என்னும் தோல்பறை இசைக்கருவியில் தாளமெழுப்பி குரலிசைப் பாடலைப் பாடுவார்கள். தாளமிசைக்கும் வகையில் கைவிரல்களில் குப்பிகளும் அணிந்திருப்பார்கள். முழுக்கை ஜிப்பாவும்,தோளில் துணிப்பையும் அணிந்திருக்கும் இவர்கள் தங்கள் கழுத்தில் போட்டிருக்கும் பலவண்ண பாசிமாலைக்கு ‘கண்டமாலை’ என்று பெயர்.

ஆய்வாளர் வ. ரஹ்மத்துல்லா பக்கிர்கள் பற்றி குறிப்பிடும் போது சூபிகளின் மீதான பேரன்பினால் 12 மலக்குகளாக 12 விருதுகள் என்னும் அணிகலன்கள் அணிந்திருப்பர். தாயிரா, மணிச் சோட்டா, ஷாலியா கயிறு, திருச் சக்கரம், கண்ட கோடாரி, திருவோடு, காவி உடை , கண்ட மாலை, அல்மதர், ஆசாக்கோல், தபீசு,தோள்பை என்பதான விருதுகள் அவை எனக் குறிப்பிடுவார். மதுரை வட்டாரத்தில் வாழ்கின்ற பக்கிர்கள் ரிபாய் பிரிவினரைச் சேர்ந்தவர்கள். பாக்தாத்தை சேர்ந்த செய்யத் அகமது ரிபாய் கி.பி. 1182 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தற்போது இவர்கள் காதிரியா பிரிவு தரீகாவைத் (ஞான வழி) தோற்றுவித்த முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி ஞானவழியை பின்பற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். பக்கிர்களில் பிற தரீகா மரபை பின்பற்றுபவர்களும் உள்ளார்கள். பித்தளை கொம்பினாலாகிய ஊதுகுழலினைக் கொண்டு ஊதியபடி மக்கள் மத்தியில் அலைந்து திரியும் குழுமமாக முல்லாங்கு பிரிவினர் உள்ளனர். நீண்ட சாட்டையினால் தன் முதுகில் அடித்துக் கொண்டு யாசகம் செய்யும் பிரிவினராக ஜலாலியா பிரிவினர் உள்ளனர். மாட்டுத்தோலினால் ஆன முரசு போன்ற நகரா என்ற தோல் கருவியில் அடித்து இசை எழுப்பி செல்பவர்கள் பீர்மலக்கு என்று அழைக்கப்படுகின்றனர். தவ்காத்தி என்ற குழுமத்தினர் கருவிகள் எதையும் பயன்படுத்துவதில்லை. நோய்நிவாரனம் செய்யும் புரதான மருத்துவர்களாக அழைக்கும் வீடுகளுக்குச் சென்று எலுமிச்சம் பழத்தில் திருக்குரானின் ஆயத்துக்களை ஓதி ஊதி மக்களிடத்தில் வழங்கிவிட்டு செல்பவர்களாக உள்ளனர். மவ்லவியா தரீகாவைச் சேர்ந்தவர்கள் தோல்கருவிகளும் நரம்புகருவிகளும் உருவாக்கி கிளர்த்தும் இசையில் இறைவனை நினைத்து திக்ரு செய்து சுழன்று ஆடுவார்கள். பாரசீக கவிஞானி மவ்லானா ஜலாலுதீன் ரூமியின் வழிமுறையைப் பின்பற்றும் மவ்லவியா தரீகாவினரின் சுழல்நடனம் உலகப் புகழ் பெற்ற ஒன்றாகும்.

இந்திய மண்ணில் வாழும் பக்கீர்கள் பல குழுமங்களாக வாழ்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் சையின், ஜோகி பக்கீர், ஜலாலியா, ஸிந்தா ஸாஹி, சிஸ்தி, கலந்தரி, பாக்கியா, ரிபாயி என்கிற எட்டுவகை பிரிவுகளாக பக்கீர்கள் அடையாளப்படுத்தப் படுகின்றனர். ஈரானிய பூர்வீகத்தை முன்வைத்து ஜலாலியா பிரிவினர் தங்களை மேல்நிலைப் பிரிவாக கருதுவதும், கலந்தரி பிரிவினர் சமூக அடுக்கில் அடிநிலை வாழ்மக்கள் பிரிவாகக் கருதப்படுவதும், இப்பிரிவுகளுக்குள் ஏற்றத்தாழ்வான படிநிலை அமைப்பு இருப்பதும் புலப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்காள மாநிலங்களிலும் பக்கீர்கள் பல குழுமங்களாக வாழ்ந்து வருகின்றனர். வட இந்தியச் சூழலில் பக்கீர்கள் தங்களை பட்டியலிடப்பட்ட சாதிப் பிரிவிற்குள் ஒதுக்கீடு செய்ய கோரிக்கையும் வைத்துள்ளார்கள்.

இலங்கை ஆய்வாளர் பர்சானின் பதிவு ஒன்று பக்கீர்கள் குறித்து இவ்வாறாக அறிமுகம் செய்கிறது. பக்கீர் இலங்கையில் “பாவா”க்கள் என அழைக்கப்படுகின்றனர். இங்குள்ள பாவாக்களிடமும் இதே ஆடையமைப்புக்களும் பாசிமணிமாலையும் காணப்படுகிறது. இவர்களின் வேர்களுக்கு இடையிலான தொடர்புகளை அறிதல் முக்கியம் எனக் கருதுகிறேன். இலங்கையில் விஜயனின் வருகைக்கு முன் வாழ்ந்த அரசிதான் குகேனி எனப்படுபவள். ஆரிய பரம்பரையைச் சேர்ந்த விஜயன் இலங்கைக்கு விரட்டியடிக்கப்பட்டு சோனக அல்லது நாகப் பரம்பரையைச் சேர்ந்த இலங்கையின் மூத்த குடியான குகேனியையும் அவளின் சாம்ராஜியத்தையும் ஆக்கிரமித்ததான். பின்னர்தான் சிங்கள வம்சம் உருவானதாக மகாவம்சம் சொல்கிறது. இந்த ஆதிக்குடிகள் ஒர் இறை வணக்கவழிபாடு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள்தான் முதல் மனிதர்களான ஆதம் – ஹவ்வாவின் பரம்பரையினர் ஆவர். முதல் இரு புதல்வர்களின் அடக்கஸ்தளம் ராமேஸ்வரத்தில் இருக்கிறது

இலங்கையில் சோனக இனவழித் தோன்றல்களில் பழையவர்களாகவும் தங்களை இஸ்லாத்திற்கு முற்பட்ட அல்லது அதன் பிற்பட்டதுமான இறை நேசர்களின் சேவகர்களாக மாற்றிக் கொண்ட ஒரு பிரிவுதான் இந்த பக்கீர்கள் – பாவாக்கள் என அறியமுடிகிறது. இவர்களிடமிருக்கும் பல நூற்றுக் கணக்காக பாடல்களில் இஸ்லாமிய அகீதா கோட்பாடுகளுடன் முரண்படும் சில வரிகள் இருப்பதையும் அவதானிக்கிறோம். அது அவர்கள் ஏற்றுக் கொண்ட இறை நேசர்களின் பாற்பட்ட அன்பினாலும் பற்றுறுதியினாலும் பாடப்பட்டவைகளாவே இருக்கின்றன.

இவற்றிற்கு எல்லாம் அப்பால், இந்த நிலம் சார்ந்த தெய்வீகத்தின் வரலாற்றைச் சுமந்தவர்களாகவும் தங்கள் வாழ்வை இந்த அவசர யுகத்திலும் அழகியல் வழிப்பட்ட இஸ்லாத்தின் படிமமாய் காண்பித்துக் கொண்டு வாழ்கிற ஜிப்ஸிக்களாகவும் இருக்கிற பாவாக்களை மனதார வாழ்த்தி அந்த தலித்துக்களையும் அங்கீகரிப்போம் என்பதான பர்சானின் பதிவு இலங்கை மண்ணில் பக்கீர்பாவாக்களின் தோற்றம் குறித்த வரலாற்றியல் எழுத்தை அறிமுகப்படுத்துகிறது.

நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்
சிடிக்கள் டிவீடிக்கள் உருவாகாத காலமது. எழுபதுகளில் எல்லாம் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிங்கப்பூர் சபுறாளிகள் (பயணிகள்) சொந்த மண்ணுக்கு வரும்போது அள்ளிக் கொண்டுவரும் சாதனங்களில் ஒன்று கேசட்டுகள். தகவல் அறிவுப்பரிமாற்றத்திற்கு புரதான காலங்களில் எழுத்தாணிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள், மரப்பட்டை,தோல்களில் எழுதுதல் என்பதான வடிவங்கள் பயன்பட்டன. நவீன தொழில்நுட்பம் உருவாகிய போது அச்சு ஊடகம் முதன்மை பெற்றது. ஓலைச்சுவடி கருவூலங்கள் அச்சு வடிவில் பாதுகாக்கப்பட்டன. இதன்பின்னர் உருவான எலக்ட்ரானிக் மீடியா காலத்தில் இந்த கேசட்டுகள் எனும் ஒலிநாடாக்கள் உருவாகின. தற்போது ஒலியும் ஒளியும் கலந்த காட்சி ஊடகங்கள் முக்கிய வினை புரிகின்றன. முஸ்லிம்கள் கொண்டுவரும் அப்போதைய கேசட்டுகளில் நாகூர் அனிபா,ஷேக்முகமது பாடல்கள் ஏராளம் இருக்கும். அத்தோடு ஒலிவடிவில் தொகுக்கப்பட்ட பக்கிர்ஷாகளின் கிஸ்ஸா, மசலா, நாமா போன்ற பழந்தமிழ் இஸ்லாமிய நாட்டுப்புறப்பாடல்களும் அடங்கும்.

அந்தக்காலத்தில் இந்த பக்கிர்ஷாக்களின் இசை வடிவங்களின் அருமை பெருமை தெரியாமல் முஸ்லிம் குடும்பங்களின் பெரும்பாலான இளைஞர்களும் இந்த கேசட்டுகளை அழித்து சினிமாபாடல்களை பதிவு செய்து ரசித்து கேட்கும் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டனர்.

தொண்ணூறுகளுக்கு பிறகு உருவான வகாபிய கருத்துருவாக்கத்தின் காரணமாக இப்பாடல்களின் உயிர்த்தன்மை குறித்த உண்மைகள் திரும்பவும் மறைக்கப்பட்டன. இந்நிலையில் பக்கிர்ஷாக்கள் பாடி முன்னால் வெளிவந்த நூறு மசலா, ஆயிரம் மசலா, ஸகராத்துநாமா, சைத்தூன் கிஸ்ஸா யூசுப் நபி கிஸ்ஸா உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் மக்களிசைப் பாடல்களை முஸ்லிம் கலைஞர்கள் படைப்பாளிகள் வாசகர்கள் மீட்டுருவாக்கம் செய்யவேண்டும். தமிழகத்திலும் இலங்கையிலும் வாழும் முஸ்லிம்களின் தமிழ், அடையாளங்களை இக்கலைவடிவங்களின் மூலம் நாம் பாதுகாக்க முடியும். இசைதாண்டிய விசித்திரங்களை நிகழ்த்தும் கலைஞர்களாகவும், நாட்டுப்புற மருத்துவர்களாகவும் பக்கிர்ஷாக்கள் இருந்துள்ளனர்.

மானிலேயும் பெரிய மானு..
தமிழ் முஸ்லிம்களின் நாட்டுப்புற மக்கள் இலக்கிய வகைமைகளில் ஒன்று நூறு மசலா. மஸ் அலா என்ற சொல்லுக்கு தேடுதல் என்பது பொருள். மஸ் அலாவே பின்னர் மொழிவழக்கில் மசலா என்று ஆனது.. நூறு மசலா என்பதற்கு நூறு கேள்விகளுக்கான பதிலைத் தேடுதல் என்பது பொருள். இது இரண்டுபேர் எதிரும் புதிருமாக பாடும் உரையாடல் வடிவத்தைக் கொண்டது. இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கேள்வியும் பதிலுமாக அமைந்திருக்கும் எளிமையான வடிவத்தில் புதிர்த்தன்மை, விடுகதைத் தன்மைகளோடு பாடல் வடிவத்தில் அமையப் பெற்றதே நூறு மசலா. இது வாய்மொழி வரலாற்றின் அடிப்படையில் பாடப்பட்டு வருவதால் இதன் மூல ஆசிரியர் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மக்கள் இசையின் ஒரு வடிவமாக இது மிஞ்சியுள்ளது.

ஐந்துமாநகர் பதியின் பாதுஷாவாக ஆட்சி புரிந்த அகமதுஷா உடைய மகன் அப்பாஸ் சிகாமணி. சீனமாநகர் பாகவதி அரசுடைய மகளான நூறரசி ஞான அலங்காரவல்லி – இந்துப் பெண்ணான அவள் மெகர்பானுவாகிறாள். மசலா மண்டபத்தில் மெகர்பானு கேட்கும் கேள்விகளுக்கு போட்டியில் கலந்து கொள்ளவருபவன் சரியான பதிலை சொல்லவேண்டும். இல்லையெனில் அவனது தலை துண்டிக்கப்படும். இங்கு அப்பாஸை நோக்கி மெகர்பானு கேட்கும் கேள்விகளும் அதற்கு அப்பாஸின் பதிலுமாக இது அமையப் பெற்றிருக்கிறது.

1087 கண்ணிகளால் இந்நூலின் கேள்விகள், அதற்கான பதில்கள் அமைகின்றன. இதன் வழியாக முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கும் இஸ்லாமிய நெறிகளின் நுட்பங்கள் குறித்து அறிய முடிகிறது. இப் பதில்களின் குறிப்புகளிலிருந்து நீண்டதொரு அறிவுத்தேடலின் பயணத்தை ஒரு வாசகன் உருவாக்கிக் கொள்ளமுடியும். இங்கு நாம் நூறு மசலாவின் ஒரு பாடல் பகுதியை உற்று நோக்கலாம்.
……..
மானிலேயும் பெரியமானு அறுபடாத மானுமென்னா?
மீனிலேயும் பெரியமீனு அறுபடாத மீனுமென்னா?
மாவுலேயும் நல்ல மாவு இடிபடாத மாவுமென்னா?
இடிபடாத மாவானதை எந்தனுக்கு சொல்லும் மன்னா
சொன்னா உயிர்பிழைப்பாய் – மன்னா
சொல்லாவிட்டால் தலையறுப்பேன்…
……….

விடை:
மனிலேயும் பெரிய மானு – பெண்ணே
அறுபடாத மானானது – அல்லா
அறுபடாத மானானது – அது
ஈமானடி மெகர்பானே…

மீனிலேயும் பெரியமீனு
அறுபடாத மீனானது – அது
ஆமீன் என்றதாகுமே…

மாவுலேயும் நல்ல மாவு – பெண்ணே
இடிபடாத மாவானது
ஐந்து நல்ல கலிமா பெண்ணே…

இங்கு மசலாவிற்கு கிடைத்த விடைகளான ஈமான் – ஆமீன் – கலிமா என்பதான கருத்தியல் சொல்லாடல்களிலிருந்து விரிவானதொரு அறிதல் தளத்திற்கான பாதையில் ஒவ்வொரு கேட்பாளனும் பயணிக்க முடியும்.

நூறு மசலாவினைப் போன்றதொரு மசலா இலக்கியத்தின் பெயர் ஆயிரம் மசலா என்பதாகும். இதன் காலம் கி.பி.1572. இந்நூலை எழுதியவர் மதுரையைச் சேர்ந்த வண்ணப் பரிமளப்புலவர். இதற்கு அதிசயப் புராணம் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு.

வெள்ளாட்டி மசலா – விடை சொல்ல கேள்விகள்
ஆயிரம் மசலா, நூறுமசலா இலக்கியங்களைப் போன்று மஸ் அலா(கேள்வி பதில்) இலக்கிய வகைமையில் மிச்சமிருக்கும் மற்றொரு இலக்கியம் வெள்ளாட்டி மசலா. தவத்துது என்ற வெள்ளாட்டி மஸ் அலா ஹதீது விலாசம் என்று இந்நூல் அழைக்கப்படுகிறது. காயல்பட்டினம் செய்கப்துல் காதிர் லெப்பை ஆலிம் ஹாஜி சாகிபு அவர்கள் எழுதியுள்ளார். ஹிஜ்ரி 1296-ல் பதிப்பு செய்யப்பட்ட இந்நூலின் மறுபதிப்பு 1969 ல் வெளிவந்தது.

வெள்ளாட்டி மசலா நபிநாயக அறவுரை மொழிகளின் அடிப்படையில் இஸ்லாமிய கோட்பாடுகளை விளக்கும் முறையைக் கொண்டுள்ளது. தவத்தது என்னும் வெள்ளாட்டிப் பணிப்பெண்ணின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் 669 கேள்விகளுக்கான பதில்களாக இவ்விலக்கியம் அமையப் பெற்றிருக்கிறது.

அப்பாசியக் கிலாபத்தின் ஆட்சிக்காலத்தில் அரபுக்கதைகளின் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஹாரூன் அல் ரஷீதின் பாக்தாதை தலைமையிடமாகக் கொண்ட ஆட்சிக் காலத்தையும் இங்கு குறிப்பிடலாம். இது கி.பி. 763-809 க்கு இடைப்பட்ட காலமாகும்.

செல்வந்த வணிகரின் மகனான பத்றுஸ்ஸமான் தந்தை தேடிய செல்வங்களை அழித்து முடித்தபோது அவனுக்கு பணிப் பெண்ணாக இருந்த அழகையும், திறமையுங் கொண்ட தவத்தது, தன்னை மன்னன் ஹாரூன் ரஷீதின் அரண்மனையிலேயே பதினாயிரம் பொற்காசுகளுக்கு விற்கக்கூறுகிறாள். இரண்டாயிரம் பொற்காசுகள் தருவேன் என மன்னன் கூற அவளது அறிவுத்திறமைக்காக பத்றுஸ்ஸமான் பதினாயிரம் பதினாயிரம் பொற்காசுகள் கேட்கிறான். ஹாருன் அல் ரஷீது தவத்தது வின் அறிவுத்திறனை உலமாக்களைக் கொண்டு வந்து சோதிக்கிறான். இவ்வாறாக நான்கு அறிஞர்களால் கேட்கப்பட்ட 669 கேள்விகளுக்கான பதில்தான் வெள்ளாட்டி மசலா. இறுதியில் தவத்ததுவின் அறிவுத்திறனைப் பாராட்டி அவளை பத்றுஸ்ஸமானுக்கே பதினாயிரம் பொற்காசுகளோடு திருப்பித் தந்துவிடுகிறான்.

அவையின் சேகு அஹ்மது அறிஞரின் ஒரு கேள்வி:
உன்னில் எத்தனை கடல் உண்டாயிருக்கிறது என்பது.
இதற்கு பதிலாக தவத்தது கூறுகிறாள்:
பார்வை, கேள்வி, பேச்சு, அக்லு(அறிவு), திக்று, இன்ஸானுடைய ஸுரத்து, ஹயாத்து எனும் எழுகடல் உண்டாகியிருக்குதென்று கூறுகிறாள்.

சில கேள்விகளுக்கான தவத்ததுவின் விடைகள்:
வணக்கமில்லா ஆலிம் – மழையில்லா மேகம்
கொடையில்லாத சீமான் – பழமில்லாத மரம்
பொறுமையில்லாத பக்கீறு – தண்ணீரில்லாத ஆறு
நீதியில்லாத ராஜன் – மேய்ப்பனில்லாத ஆடு
தவுபா இல்லாத வாலிபன் – மோடில்லாத வீடு
வெட்கமில்லா மங்கை – உப்பில்லா ஒஜீபனம்.
நம் தமிழ்மரபு விடுகதை அமைப்பாக்கம் போன்றதொரு வடிவம். பதில்கள் அனைத்துமே குறியீட்டு மொழியிலேயே அமைந்திருக்கின்றன.

கிஸ்ஸாக்கள் என்னும் கதைப்பாடல்கள்
ஒரு காலத்தில் கிஸ்ஸாக்கள் எனப்படும் கதைப் பாடல்களை இசைக்கும் மரபைக் கொண்டவர்களாக பக்கிர்ஷாக்கள் இருந்துள்ளனர். கஸஸ் என்ற அரபு மூலச் சொல்லிலிருந்து கிஸ்ஸா என்ற சொல் உருவாகி உள்ளது. கஸஸ் என்பதற்கு கதை சொல்லுதல் என்று அர்த்தம். தமிழக மரபில் நாட்டுப்புறக் கதையாடல் வடிவங்கள் பல உண்டு. கட்டபொம்மன், மதுரைவீரன், ஐவர்ராசாக்கள், நல்லதங்காள் என வரலாற்றியல் சார்ந்த கதைப்பாடல்கள் நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். முஸ்லிம் பண்பாட்டின் நிலைபாட்டில் தமிழகத்தில் எழுதப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிஸ்ஸாக்கள் (கதைப்பாடல்கள்) உள்ளன. மிகப்பழமை வாய்ந்த கி.பி. 1874 ஆண்டை சேர்ந்த சைத்தூன் கிஸ்ஸா, அய்யூபுநபி கிஸ்ஸா, முகமது அனீபு கிஸ்ஸா, யூசுப் நபி கிஸ்ஸா என அரபு சூழல் சார்ந்த வரலாற்றியல் கதாபாத்திரங்கள் சார்ந்து இந்த கிஸ்ஸாக்கள் எழுதப்பட்டுள்ளன.

இஸ்லாமிய வரலாற்றியல் கதா பாத்திரங்கள் அல்லாத சமூக வாழ்வியல் கதாபாத்திரங்களை முன்நிறுத்திய கிஸ்ஸாக்களில் காழியாருக்கும் கள்ளனுக்கும் நடந்த கிஸ்ஸா, குலேபகாவலி கிஸ்ஸா, விறகுவெட்டியார் கிஸ்ஸா, காலி கோரி கிஸ்ஸா, கபன்கள்ளன் கிஸ்ஸா என்பதான வகையினங்களும் அடங்கும்.

இதில் பக்கிர்ஷாக்களால் ஒலிவடிவில் சொல்லப்பட்ட கிஸ்ஸாக்களில் குரானிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட யூசுப் நபி வரலாறு கதைப்பாடல் மிகப் புகழ் பெற்றது. இதனை அய்யம்பேட்டை மதாரு சாஹிபு புலவர் 1925 களில் எழுதியுள்ளார். அரபுநாட்டின் கன்னான் நகரின் யாகூபின் மகனான யூசுப் தனது பதினொரு சகோதரர்களால் வஞ்சிக்கப்பட்ட இக்கதையாடலின் துவக்கம், உலகக் கவிதை வரலாற்றில் வஞ்சிக்கப்பட்டவர்களின் துயரமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டே வருகிறது. பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வேஷின், ‘தந்தையே என் பெயர் யூசுப்’ என்ற உலகப் புகழ் பெற்ற கவிதையையும் இத்தருணத்தில் நினைவு கொள்ளலாம்.

சைத்தூன் கிஸ்ஸாவை ஆம்பூரைச் சேர்ந்த அப்துல்காதர் சாகிப் எழுதியுள்ளார். சைத்தூன் என்கிற பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு போர்க்கால வரலாற்றை இந்த கிஸ்ஸா, கதைப்பாடலாய் சொல்லித்தருகிறது. நபிகள் பெருமானுக்கு பிறகு நான்காவது கலீபாவாக ஆட்சிபுரிந்த இமாம் அலியின் புதல்வர்களில் ஒருவரான முஹம்மது ஹனீபு, நால்வருடன் ஒரு காட்டுக்கு வேட்டையாடச் செல்கையில், அக்காட்டுப் பகுதிக்கு தலைவியான சைத்தூன் அவர்களை எதிர்த்துப் போரிடுகிறாள். முஹம்மது ஹனீபு மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை, இறந்துவிட்டார் எனக் கருதி மீதி நான்கு பேர்களையும் கைது செய்து கொண்டு செல்கிறாள். பின்னர் முஹமது ஹனீபு மதினா திரும்புகிறார். சைத்தூன் திரும்பப் போர் புரிகிறார். சைத்தூன் போரில் தோல்வியுற பிறகு இஸ்லாத்தில் இணைகிறாள் என்பதான அக் அக்கதைப்பாடல் விரிவடைகிறது.

இந்த வகையில் தமிழ் சமூகத்தாலும் முஸ்லிம் அறிஞர்களாலும் அதிகமும் கவனப்படுத்தப் படாத ஒரு முக்கியமான கிஸ்ஸாவாக காலிகோரி கிஸ்ஸாவைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.இந்துஸ்தானியில் காலி என்றால் கறுத்தவள். கோரி என்றால் சிவந்தவள் என்று பொருள்.இந்த கிஸ்ஸாவில், ‘கோரி என்கிற சிவந்த நிறமுடையவள் தன் நிறம் உயர்ந்தது அதனால் தான் உயர்ந்தவள் எனவும், கருப்பு கீழானது, மோசமானது எனவே கறுப்பு நிறமுடைய பெண் கீழானவள்’ என்றும் கூற, காலிப்பெண் கறுப்பின் பெருமையைப் பற்றி விரிவாக கூறுகிறாள். இருவரும் தர்க்கரீதியாக விவாதித்த பிறகும் அதில் யாரும் ஒரு முடிவை எட்டவில்லை. எனவே இறுதியாக பத்வா மார்க்கதீர்ப்பு வாங்க ஒரு ஹாஜியிடம் செல்கிறார்கள். அவர் தனது தீர்ப்பில் கறுப்புநிறமும் அல்லாஹ்வுக்கு பொருத்தமானதே எனத் தீர்ப்பு வழங்குகிறார்.

இக்கதைப்பாடல் தமிழ் சமூக வரலாற்றில் இஸ்லாமியர்களின் வருகையின் போது நிகழ்ந்த ஒரு கலாச்சார நெருக்கடியைக் குறிப்பிடுகிறது. அரபுநாடுகளில் இருந்து இங்கு சமயம் பரப்ப வந்த அரபுமுஸ்லிம்கள் இங்குள்ள கறுப்புநிறமுடைய பெண்களை மணந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரபுலகப் பெண்கள் சிவப்பு நிறமுடையவர்களாக இருக்கும் நிலையில் கறுப்புநிறமுடைய தமிழ்பெண்கள் குறித்த தாழ்வான கண்ணோட்டத்தை தகர்ப்பதற்கான குறியீடாகவும் இந்தக் கதைப்பாடல் செயல்பட்டிருக்க கூடும் என்பதை அனுமானிக்க முடிகிறது.

பக்கீர்ஷாக்கள் தாயிரா தோல் பறை இசைக்கருவியை இசைத்துக் கொண்டு மஸ் அலாக்களையும், கிஸ்ஸாக்களையும் பாடிய வரலாறு நம் முன் நிழலாடுகிறது.

இன்றைய காலப்பின்னணியில் இத்தகைய மக்கள்சார் கலைவடிவங்கள் அழிந்து போகிற சூழலில் இவற்றின் அடையாளங்கள் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளும் நடை பெற்றுவருகிறது. அண்மையில் லயா திட்ட ஒருங்கிணைப்பின் கீழ் மண்ணின் குரல்களை அறிமுகப்படுத்தும் செயல்பாடாக நாகூர் செஸ்சன்ஸ் என்ற நிலையின் கீழ் பக்கீர்ஷாக்களின் பாடல்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் நாகூர் பகுதியின் பக்கீர்ஷாக்கள் தாயிரா இசைக்கருவியோடு சில பாடல்களைப் பாடியுள்ளனர்.

தமிழக மக்களால் நாகூர் ஆண்டவர் எனப் புகழப்படும் மீறான் சாகிபு ஆண்டவர் என்னும் அப்துல்காதிறு ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம், வடஇந்திய எல்லையான மாணிக் கப்பூரில் கி.பி 1490ல் தோன்றியவர். அறுபத்தெட்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் தனது இறுதி 28ஆண்டுகளில் தமிழகத்தின் நாகூரில் தங்கியிருந்து சேவை புரிந்து மரணித்த பின் அங்கேயே அடங்கப்பட்டிருக்கிறார். நாகூர் தர்கா என்ற பெயரில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமாக அது நிகழ்கிறது. பல்சமயத்தினரும் பங்கு கொள்ளும் தர்கா நிகழ்வுகள் மாறுபட்ட நல்லிணக்க இழைகளைக் கொண்டுள்ளது.

நாகூர் வாழும் கோமானே …நாதா எங்கள் சீமானே
உமைத்தேடி வந்தோம் தாதா – உமைத் தேடி வந்தோமே

இந்த பக்கிர் ஷாக்களின் இசை ஆல்பத்தில் மிக அற்புதமான உணர்ச்சிப் பாங்கு பதிவாகியுள்ளது. குரலின் இனிமை, தாளலயம், முகபாவனை, நாகூர் நாயகத்தின் மீதான அன்பு என ஒரு சேர சங்கமித்துள்ளது. நவீன தொழில் நுட்பத்தோடான இயற்கை சார்ந்த ஒளிச்சேர்க்கை கலவை இன்னும் மனசை வருடுகிறது.

இது போன்றதொரு பாடல் மரபு அஜ்மீரில் அடங்கப்பட்டிருக்கும் சூபிஞானி ஹாஜா முகைனுதீன் சிஸ்தியைப் பற்றிய பாடலாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீரில் அடங்கப் பெர்றுள்ள ஹஜ்ரத் குவாஜா முகீனுத்தீன் சிஸ்தி கி.பி. 1192ல் இந்திய மண்ணுக்கு தனது சீடர்கள் குழுமத்தோடு வந்தவர்கள். சூபிவழியில் மனத்தூய்மை, அன்பு, சமத்துவம், மக்கள்சேவை லட்சியங்களை நடைமுறைப் படுத்தியவர்.

யா ஹாஜா.. யா..ஹாஜா…
அஜ்மீரினில் வாழும் ராஜா.. எமை கண் பாரையா…

சூபி பாடகர்கள் அப்துல் கனி, அஜாஹ் மைதீன், சபுர்மைதீன் பாபா சபீர்.. போன்ற கலைஞர்களின் பங்களிப்பு இதில் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.

பக்கீர்ஷாக்கள் எழுத்துப் பிரதிகளை ஒலிப்பிரதிகளாக உருமாற்றம் செய்யும் திறன் படைத்தவர்கள். இந்த வகையில் மஸ் அலா, கிஸ்ஸாக்கள் என பரந்து விரிந்து கிடக்கும் கதை சொல்லும் பாடல் மரபுகளை அழிந்துவிடாமல் பாதுகாத்து மறு உருவாக்கம் செய்யவேண்டியதாக உள்ளது. பக்கீர் ஷாக்கள் இதனை நிகழ்த்துக் கலைவடிவமாகவும் மாற்ற சாத்தியமுள்ளது. தமிழ் இசை பண்பாட்டுப் பாரம்பர்யத்தில் பக்கீர்ஷாக்களின் இசைமரபு எளிதில் புறந்தள்ள முடியாத கலைமரபென்றே சொல்லலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!