home உன்னதம், சிறுகதை பயங்கரக் கதை

பயங்கரக் கதை

  • கார்மன் மரியா மச்சாடோ

 

 

அது மிகச் சிறியதாகவே துவங்கியது: மர்மமாய் அடைத்துக் கொண்ட சாக்கடை; படுக்கையறை ஜன்னலில் விரிசல். அப்போதுதான் அந்த இடத்துக்குக் குடி போயிருந்தோம், சாக்கடை ஒழுங்காக வேலை செய்து கொண்டு இருந்தது, கண்ணாடி முழுசாக இருந்தது, அப்புறம் பார்த்தால் ஒரு நாள் காலை அவை அப்படியில்லை. என் மனைவி ஜன்னல் கண்ணாடியின் விரிசலை தன் விரல் நகத்தால் மெல்லத் தட்டினாள், யாரோ ஒருவர் உள்ளே விடச் சொல்லித் தட்டுவது போல் அது ஒலித்தது.

அதன்பின் வாசனைப் பொருட்கள் காணாமல் போயின. கடல் உப்பு, மரிக்கொழுந்து, ரோஸ்மேரி, நாங்கள் தயார் செய்து வைத்திருந்த கறி மசாலா பொடியும்கூட. கடைசியில், குங்குமப்பூ – நாற்பது டாலர் மதிப்புள்ளது -, சமையலறை சாமான்களை மாற்றி அடுக்கிக் கொண்டிருக்கிறாயா, என்று என் மனைவியிடம் கேட்டேன். இல்லை என்று அவள் சொன்னாள். அந்த மெல்லிய சிவப்பு இழைகள் என் பிராவின் ஒவ்வொரு கப்பிலும் தூவப்பட்டிருப்பதை சில நாட்கள் சென்றபின் கண்டேன். அவளிடம் சென்று அதை ஆதாரமாய்க் காட்டியிருப்பேன் – எதன் ஆதாரம் அது, அதில் எனக்குச் சந்தேகம் இருந்தது -, ஆனால் தூங்கப் போகும் முன் நான் பிராவை அவிழ்த்து தரையில் போட்ட அந்த இரவு அவள் ஊரில் இல்லை, அடுத்த நாள் காலை அதை நான் எடுத்து வைக்கும்போது அவள் வந்திருக்கவில்லை. குங்குமப்பூக்களைத் திரட்டப் பார்த்தேன், ஆனால் என் விரல்களுக்குக் கீழ் அவை துகள்களாய்க் கரைந்து, விரல் நுனிகளில் கரிந்த ஆரஞ்சு வண்ணம் பூசின, கழுவியபோதும் பல நாட்கள் மறையாதிருந்தன.

நாங்கள் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களைக் குற்றம் சொன்னோம். பூனை மேல் பழி போட்டோம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டோம். அதிலும் குறிப்பாக, நான் குளியல் அறையிலும் அவள் படுக்கை அறையிலும் இருக்கும்போது, “லவ், பேஸ்மெண்ட்டில் ஏதோ சத்தம் கேட்கவில்லை? கொஞ்சம் போய் பாரேன்”, என்று அவளும், “டார்லிங், பரணில் ஏதோ சத்தம் கேட்கவில்லை? போய் என்னவென்று பாரேன்,” என்று நானும் சொல்லக் கேட்கையில். பின்னர் எங்கள் பாதைகள் குறுக்கிடும்போது, நாங்கள் ஒருவரையொருவர் ஹால்வேயில் எதிர்கொண்டோம் – அல்லாவிடில், வீட்டின் அந்த அடைசல் ஓட்டைகளில் எங்களுக்கென்று எது காத்துக் கொண்டிருந்ததோ, யாருக்குத் தெரியும்.

ஆனால் அந்த எண்ணம் எனக்கு அப்புறம்தான் தோன்றியது. அந்த சமயத்தில், நாங்கள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டோம், அதன் பின், இனி இது பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டோம்.

இதன் விந்தை எங்கள் அதிருப்தியை வளர்த்தது. நாங்கள் பட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தோம், மென்மையானவர்களாய் இருந்திருந்தோம், ஆனால் இப்போது நாங்கள் பச்சிளம் குழந்தைகளின் நுண்ணுணர்வு கொண்டவர்களாய் அவரவர் மிதவைகளில் படபடத்துச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். சாக்கடை அடைத்துக் கொள்வதற்கும் கண்ணாடி விரிசலுக்கும் முன்னரே நாங்கள் வழிகாட்டு ஆலோசனை பெறுவது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது தான் அழுவதற்கான காரணத்தை உன் மனைவி உன்னிடமே சொல்ல மாட்டாள் என்னும்போது, மின்சார வெட்டு நேர்ந்த அந்த மாலைப் பொழுதில் எனக்கு நேர்ந்தது போல் கண்ணுக்குத் தெரியாத இருப்பு ஒன்று தந்தி மொழியில் உன் இடக்கரத்தின் உள்ளங்கையில் சில்லிட்ட துண்டங்களைத் தட்டும்போது, ஆலோசகரைக் காண்பதற்கான நேரத்துக்கு எங்கே போவது?

அதன்பின், இரவில் ஏதோ ஒன்று நகர்ந்தது. அதன் சத்தம் பூனை போல் இருந்தது, பூனை காணாமல் போகும் வரை; அதன் பின் மெத்தென்ற கால்கள் நடக்கும் ஓசை தொடர்ந்தது, அது ஒரு துணைக்கோள் போல் எங்கள் படுக்கையைச் சுற்றி வந்தது. மென்பாதம்தான், ஆனால் இப்போது ஆசுவாசப்படுத்துவதாய் இல்லை. நாங்கள் இருளில், ஒருவரையொருவர் கேள்விகள் கேட்டுக் கொண்டு படுத்திருந்தோம்: “நாம் சந்தித்துக் கொண்டது எப்போது என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” “ரெனோவில் ஹோட்டல் படுக்கை எங்கும் அந்த ஷாம்பெயின் பாட்டிலைக் கொட்டியது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” “மளிகைக் கடையில் நாம் பார்த்த அந்த கிழவி உனக்கு ஞாபகம் இருக்கிறதா, குழந்தை பொம்மையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாளே?” “நம் பதினைந்தாவது ஆண்டு மணநாள் அன்று படிக்கட்டில் உருண்டு விழுந்தாளே உன் கஸின், அது ஞாபகம் இருக்கிறதா?” “உன் விரலை மென்மையாய் கடிக்க நினைத்து, தெரியாத்தனமாக நன்றாக கடித்து வைத்தேனே, ஞாபகம் இருக்கிறதா?” எங்களைச் சுற்றி நடந்து செல்வது எதுவோ, அது நாங்கள் மௌனமாய் இருந்தபோதெல்லாம் தணிக்க வைத்த சூட்டில் கொதிக்கும் உலை போல் ஒலித்தது. எனவே கவலைப்படக்கூட முடியாதபடி களைக்கும் வரை நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பைஜாமா அணிந்து கொண்டு தூங்கப் போனோம், விழிக்கும்போது அவை படுக்கையில் எங்கள் கால்புறத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். ஒரு நாள் காலை, என் மனைவின் காலில், கொலுசு போல் ஒரு நீல வண்ண ரிப்பன் கட்டப்பட்டிருந்தது, அதில் ஒரு சிறு வெள்ளி மணி கோர்க்கப்பட்டிருந்தது.

என் ஹேர்பிரஷ் காணாமல் போய், டாய்லெட் போலில் கிடைத்தது. என் மனைவி தினமும் சாப்பிடும் விட்டமின்களுக்கு பதில் எட்டு பென்னி விலைக்குக் கிடைக்கும் ஆணிகள் இருந்தன. செவ்வாய்க் கிழமைகளில் ஆளுயரக் கண்ணாடி எங்கள் சிறு பெண் உருவங்களைப் பிரதிபலித்தது – ஒருவரையொருவருக்கும் இந்த வீட்டுக்கும் எங்களைக் கொண்டு வந்து சேர்ந்த உண்மையின் வெளிப்பாட்டுக்கு பல ஆண்டுகள் அப்பால், அவள் உயரமாய், நான் குண்டாய், இருவரும் அசௌகரியமாய். கண்ணாடியை உடைத்தேன், விபத்தால் அல்ல.

இது குறித்து நூலகத்தில், டவுன் ஹாலில், உள்ளூர் வரலாற்றுச் சங்கத்தில் ஆராய்ச்சி செய்தோம். இப்போது எங்கள் வீடு இருக்கும் இடத்தில் குற்றவாளிகளுக்கான கல்லறை ஒன்று இருந்தது என்ற உண்மை வெளிப்பட்டது. வீடு கட்டி முடிக்கப்பட்டதும், எங்கள் படுக்கையறையில் ஒரு பெண் தனது காதலனால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருக்கிறாள். பெரும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்ட காலகட்டத்தில் பரணில் ஒருவர் தூக்கு மாட்டிக் கொண்டு செத்திருக்கிறார். எழுபதுகளில் ஒரு பதின்பருவப் பெண் கடத்திக் கொண்டு வந்து, பேஸ்மெண்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள். அவளை கடத்தி வந்தவன், மீட்புத் தொகை எதுவும் கேட்காமல், ஒன்றினுள் ஒன்றிருக்கும் ருஷ்ய பொம்மைகளில் துண்டு துண்டாக அவள் உடலின் பகுதிகளை அவளது குடும்பத்துக்கு அனுப்பி விட்டு, அவளில் மிச்சமிருந்ததை முன்புற புல்வெளியில் எரித்திருக்கிறான். எங்களுக்கு முன் இங்கு வாடகைக்கு இருந்தவர்களைக் கண்டு பிடித்தோம். ‘உயிர் வாழ்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் உரிய உலகுகளைப் பிரிக்கும் கோடு வரவேற்பு அறையின் குறுக்கே செல்கிறது’ என்று அவர்களின் எட்டு வயது மகன் சொன்னான்.

ஒரு பாதிரியாரை அழைத்து வந்தோம். அவர் ஒவ்வொரு அறையிலும் பிரார்த்தனை செய்து, புனித நீரை வால்பேப்பரில் தெளித்தார், ஆனால் ஒவ்வொரு அறையின் வாசலடியிலும் நின்று எங்களைச் சந்தேகமாய்ப் பார்த்தார், இறுதியில் நாங்கள் இருவரும் சகோதரிகளா என்று கேட்டார். ஆவிகளுடன் பேசும் ஒருவரை அழைத்து வந்தோம், சலிப்பாக இருப்பது போன்ற பாவனையுடன் அவள் வீட்டைச் சுற்றி வந்தாள். ட்ரையரின் மூடியைத் திறந்தவுடன் கண்ணுக்குத் தெரியாத சிலுவை ஒன்றில் தொங்கிக் கொண்டிருப்பதுபோல் காற்றில் விறைத்து நின்று, எங்களுக்குப் புரியாத, ஆனால் இவ்வளவென்று சொல்ல முடியாத தொன்மை கொண்டது போலிருந்த, மொழியொன்றில் ஏதோ ஜெபித்தாள். சமையலறை மேசையில் ஒரு Ouija board (ஆவிகள் சம்பந்தப்பட்ட பலகை) ஒன்று அமைத்தோம். ஆனால் நாங்கள் எதுவும் கேட்பதற்கு முன் அந்த planchette (ஆவி மீடியம்) காற்றில் பறந்து, எங்கள் தலைகளுக்கு அருகே இருந்த பலகையில் தன்னைப் புதைத்துக் கொண்டது.

இறுதியில், வாய் வார்த்தையாய் கேள்விப்பட்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து வந்தோம். அவள் தன் பெயர் ‘மிஸ்’ என்று மட்டுமே சொல்லிக் கொண்டாள். எல்லாரும் தோற்றுப் போன இடங்களிலும் வெற்றி பெறுவது அவளது சிறப்பு என்று பிறர் சத்தியம் செய்தார்கள், ஆனால் அவளும் தோற்றுப் போனாள். அவள் போகும்போது, இருப்பதை எல்லாம் எரித்து விட்டு எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னாள். தன் தலைமுடியில் இருந்து கண்ணாடித் துகள்களைப் பொறுக்கிக் கொண்டே, தன் உடலைச் சுற்றி ஜாதிபத்திரி புகை போட்டபடி, “இந்த மாதிரி கதைகளின் முடிவு சந்தோஷமாக இருக்காது,” என்றாள்.

இதற்காகவும் நானும் என் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டோம். அவள் வேறு வீடு போக வேண்டும் என்றாள், எனக்கு விருப்பமில்லை. “இதை என்னால் சமாளிக்க முடியவில்லை,” என்றாள். “என் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டும் போதும்”. அவள் காபி பில்டருள் மூக்கு சிந்தினாள், வீட்டில் இருந்த ஒவ்வொரு டிஷ்யூ பேப்பரும் சாம்பலாகி விட்டது என்ற காரணத்தால்.

“ஆனால் நம் வாழ்வு இங்கே,” என்றேன். “லீஸ் எடுத்திருக்கிறோம், அதை விட்டுவிட்டுப் போகக் கட்டுபடியாகாது”.

அதுதான் இருப்பதிலேயே பெரிய கீழ்மையாய் இருந்தது; சந்தை விலையைவிட கூடுதல் வாடகைக்கு வீட்டுக்காரர் எங்களுக்கு இந்த வீட்டைத் தந்திருக்கிறார். வேறு இடம் பார்த்துக் கொண்டு போகவும் எங்களிடம் பணம் இல்லை. இந்த விஷயம் பற்றி அவருக்கு சில வாய்ஸ்மெயில்கள் அனுப்பினோம். ஆனால் எடுபிடி வேலை செய்பவன் ஒருவனை அனுப்பியதைத் தவிர – அவன் சாக்கடையின் ஆழங்களில் இருந்து கொத்து கொத்தாய் செந்நிற தலைமுடியும், புரிந்து கொள்ள முடியாத குறி ஒன்று கீறப்பட்ட குருவி எலும்பையும் எடுத்துக் கொடுத்தான்- எங்கள் சிக்கல் குறித்து அவருக்கு எந்த அக்கறையும் இருந்ததாகத் தெரியவில்லை.

அந்தக் கடைசி நாள் மதியம், நான் படுக்கையறை கதவைத் திறந்தபோது, திரைச்சீலைகளை இழுத்து மூடி என் மனைவி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் படுக்கையறையைப் பார்ப்பதற்கு பதில், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய இளம் பெண் ஒருவளின் ஓய்வறையைக் கண்டேன். அந்தப் பெண் ஒரு கண்ணாடியின் முன் நிர்வாணமாய் அமர்ந்திருந்தாள், தலை முடிந்து கொண்டிருந்த அவள் என்னைக் கவனித்தது போல் தெரியவில்லை. படுக்கையில், சல்லடைத் துணி போர்த்தப்பட்ட கூட்டினுள், நீண்ட, சோம்பல் நிறைந்த ஒரு கனவிலிருந்து அப்போதுதான் எழுந்தது போல் ஓருடல் அசைந்து கொண்டிருந்தது. போர்வையின் உள்ளிருந்து ஒரு பாதம் எட்டிப் பார்த்தது, அதன் உள்ளங்கால் அழுக்காய், பழுப்பாய் இருந்தது. பல மாதங்களில் முதல் முறையாய், அச்சுறுத்தல் நிறைந்த உணர்வளிக்கும் உள்ளறையாய் அது இருக்கவில்லை. ஜன்னல்கள் உலகின் பல ஆபத்துக்களை உள்ளே பூட்டி வைப்பதற்கு மாறாய், தடுத்துக் காத்திருந்த நாட்கள் போய், எவ்வளவு காலமாயிற்று? ஆனால் இந்த அறை பாதுகாப்பானது, எங்கும் போர்வை உறைகள், நறுமணம், பின்கோடையின் முற்பகல் அமைதி.

இளம் பெண் தன் தலைமுடியையைக் கரங்களால் தடவி விட்டுக் கொண்டாள், மோவாயை மேல்நோக்கி உயர்த்தினாள், தன் உதட்டை முன்னிழுத்து பற்களின் மீது ஈரமாய் விழும் வகையில் கைவிட்டாள். அதன்பின் அவள் படுக்கையின் மீது தவழ்ந்து சென்றாள், அங்கு அவளது காதல் – இன்னொரு இளம் பெண், சிவந்த சருமமும், கன்னங்களில் குழிப்பாதைகளைச் செதுக்கிய சிரிப்பும் கொண்டவள் – எழுந்து அமர்ந்து அவள் முகத்தை மெல்லத் தடவிக் கொடுத்தாள். அவர்கள் இருவரும் நெருங்கி வந்தனர். அவர்கள் சிரிக்கக் கேட்டேன், அவர்களது முத்தம் ஈரமாகவும் தொட்டுணரக்கூடியதாகவும் இருந்தது, இருவருக்கும் இடையில் ஒரு சிப்பி கடந்து சென்றது போல். நான் கண்ணீரின் சிலிர்ப்பை உணர்ந்தேன். கதவை ஓங்கிச் சாத்தினேன்.

மீண்டும் அதைத் திறந்தபோது, என் மனைவி அங்கு நின்று கொண்டிருந்தாள் – அப்போதுதான் எழுந்தது போல், துயரம் நிறைந்தவளாய்.

அதன்பின், நாங்கள் தனித்திருந்தோம், இணைந்து.

******

தற்கால சர்வதேச எழுத்தரங்குகளில் பரபரப்பாகப் பேசப்பட்டு கவனம் பெற்று வரும் கார்மன் மரியா மச்சாடோ, நவீன லத்தீன் அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். விஞ்ஞானப் புனைவு, ஃபேண்டஸி, திகில்வகை எழுத்துக்களை நவீன இலக்கியத் தன்மையடைன் எழுதும் இவர், விஞ்ஞானப் புனைவுகளுக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற நெபுலா விருதுக்கான இறுதித்தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றவர். அயோவா எழுத்தாளர் பயிற்சிப் பட்டறையில் பட்டம் பெற்று, தற்போது பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில்  பேராசிரியராக இருக்கிறார். HORROR STORY என்னும் இந்த சிறுகதை உட்பட அவருடைய சிறுகதைகள்  புகழ்பெற்ற இலக்கிய இதழான Granta வில் வெளி வந்திருக்கின்றன.  Her Body and Other Parties அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

Her Body and Other Parties என்ற தொகுப்பில் பெண்கள் ஆவியாகிறார்கள், குடல் அறுவைச் சிகிச்சை பற்றிப் பயப்படுகிறார்கள், தலைகளை இழக்கிறார்கள்; தங்களது பாலியல் சந்திப்புகளைப் பட்டியலிடுகிறார்கள். அவர்களது ஒவ்வொரு அனுபவமும் உடலின் மூலமாக, இயற்கையாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்டும், ஆழமாகவும் உண்மையாகவும் வெளிப்படுகிறது. இது உடலின் கதை. பெண் உடலை மீட்டெடுக்கும் பணபாட்டுக்காக, பண்பாட்டில் எழுதப்படும் உடலின் கதை. இன்றைய பெண்ணீயத்தின் வழியாக, பெண்கள் வெளிப்படையாக இக்கணத்தில் உடல் அனுபவத்தை மதிக்கும் பரந்த பண்பாட்டு மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்தும் புதிய கதை. இந்நாள் இலக்கியத்தில் ஏற்படும் மாற்றம் மச்சாடோவின் கதைகளில் வெளிப்படுகிறது. இவருடைய கதைகளும் மற்ற பெண்ணிய எழுத்துக்களின் படைப்புகளும் நனவு நிலையை மாற்றியமைக்கின்றன். உடலை – சதையை – பெண்ணியப் பார்வையில் மீட்டெடுக்கும் எழுத்து இயக்கம் இது. பெண்ணுடலை மீட்டெடுப்பது அதற்கு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிற பாதகத்தை மறப்பதாலோ ஒதுக்கிவிடுவதலோ வருவதல்ல. மச்சேடோவின் சிறுகதையான Husband’s Stitch கதை, பெண்ணுடலை ஆண் தன் இன்பத்திற்காகச் சிதைக்கும் வாதையை அசலாக முன்வைக்கிறது. Husband’s Stitch என்பது குழந்தைப் பேற்றுக்குப் பிறகு உடலுறவுக்கு இணக்கமாக இருக்கவேண்டுமென்பதற்காகப் பெண்ணுறுப்பைத் தைக்கும் கணவனின் குரூரம்.

 

தமிழாக்கம் : சிவராஜ் மாதவன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!