home கட்டுரை, தமிழி பழங்குடியில் கரைந்த உலகம்

பழங்குடியில் கரைந்த உலகம்

  • ஒடியன் லட்சுமணன்

 

கிழக்கை பொதுவாய் ‘கொங்கு’ என்று இலக்கியங்கள் கூறுகின்றன. இருளர்களும் கிழக்கிலிருந்து வந்த அனைவரையும் அப்படியே அழைக்கிறார்கள். ‘கொங்கர் தலைவன் எனப் போற்றப்பட்ட இரும்பொறைகள் ‘கொங்குப்புறம் பெற்ற கொற்றச் சோழர்கள்’ ‘கொங்கர் ஒட்டி நாடு பல தந்த பசும்பொன் பாண்டியர்கள்’ இப்படி வரலாறு நெடுகிலும் அரசும் அதன் படைகளும் சொல்லவொன்னாத் துயரங்களை மலைகளின் மேல் நிகழ்த்திப்போயிருக்கிறது.

சோழர் காலங்களில், காடு கொன்று நாடாக்கும் முயற்சியில் இம்மண்ணின் பூர்வீகக்குடிகள் பரந்து விரிந்த அவர்களின் பரப்பிலிருந்து தொடர்ந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு எதிர்ப்பு மேலோங்கிய இடங்களில் முப்பலிகள் கொடுப்பதன் மூலமும் கொட்டகைகள் கட்டித் தருவதன் மூலமும் பழங்குடிகளின் துர்க்கைகள் சாந்தப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். மீறியவர்கள் களப் பலியாக்கப் பட்டிருக்கிறார்கள்.ஆள்பவர்களோடு வந்த சமணமும் சைவமும் ஆழ்வார்களோடு வந்த வைணவமும், பழங்குடிகளின் ‘குருமொட’ நம்பிக்கைகளை சூறையாடிவிட்டுப் போயிருக்கின்றன.

நெருக்கமாக அமைந்திருக்கும் எறிவீரபட்டினங்களும், அஞ்சினான் புகலிடங்களும்,கோக்கண்டன் கல்வெட்டுகளும், ஹொய்சாளர் நடுகல்களும் விஜயநகரத்தின் சிதிலங்களும் பாண்டியர்களின் பராக்கிரமங்களும் நாயக்கர்களின் வழிபாட்டு மண்டபங்களும் சுல்தான்களின் குதிரை லாயங்களும் மேன்மை தங்கிய வெள்ளைதுரைகளின் காட்டு பங்களாக்களும் கைவிடப்பட்ட பெருவழிகளும் எளிதில் சென்று சேரமுடியாத பழங்குடிகளின் வனங்களுக்குள்ளும், அவர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிற பழைய சமவெளிகளிலும்,பேரரசுகளின் ஆதிக்கத்ததின் அழிக்கமுடியாத சாட்சிகளாக இன்றளவும் நின்று கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

இந்த நூற்றாண்டின் இறுதிவரை மலையின் கிழக்குப் பகுதிகள் கொத்துக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததைப் போலவே மலைப்பகுதியின் மேற்குப்புறம் முழுவதும் மன்னார்க்காடு மூப்பில் நாயர் ஆர் எம் பலாட் மற்றும் இருள்பட்ராஜாஆகிய மூவரின் கட்டுப்பாட்டிலேயேதான் இருந்து வந்திருக்கிறது. வெள்ளையர்கள் வந்து காடெரிப்பு தடை செய்யப்பட்ட பின்பு கொத்துக்காடு ஏறுகாடு என்ற இரண்டு வகையான நிலத்தில் அவர்கள் நிலைத்த விவசாயம் செய்யத் தொடங்கினர்.

அதற்குப் பிறகு கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்த வந்தேறிகளின், வெற்றிலைக்கும், புகையிலைக்கும், இட்லிக்கும், அரிசிச் சோற்றுக்கும்.. சூழ்ச்சிகளே அறியாத பழங்குடிகள் மிக எளிதாக நிலத்தை இழக்கத் தொடங்கிவிட்டிருந்தனர். வனம் அவர்களைச் சார்ந்தும், அவர்கள் வனத்தைச் சார்ந்தும் இருக்க முடியாதபடி அது கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுப் போய்க் கொண்டே இருந்தது.

இழப்பு, இந்த நொடி வரைக்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

அவர்கள் வாழ்க்கை மற்ற பழங்குடிகளுக்கு நேர்ந்ததைப் போலவே மீட்க முடியாதபடி சின்னாபின்னப் படுத்தப் பட்டு விட்டது.

அவர்களின் இழந்த வாழ்வும், சின்னாபின்னப்படுத்தப்பட்ட பண்பாடுகளும், வரலாற்றுச்சிதைவுகளின் கூறுகளும் பாடல்களுக்குள்ளும் விடுகதைக்குள்ளும் அவர்களின் இன்னபிற வடிவங்களுக்குள்ளும் உயிர்ப்புடன் இருந்து கொண்டுதானிருக்கிறது.

சமவெளியைப் போலல்லாது பழங்குடிகளுக்கென்று தனித்த மேம்பட்ட நாகரீகமும், பாரம்பரியமும் இன்னமும் இருக்கிறது. பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல்களிலிலும் பொருளியல் இழப்புகளிலும் தங்களுக்கான சிறப்புகளை முடிந்த அளவுக்கு கெட்டியாகப்பற்றிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தனது மொழியை முற்றாக இழந்துவிடவில்லை. அவர்களின் கலையும் கற்பனைத் திறனும் கரைந்துவிடவில்லை. நீண்டு தொடரும் பாடல்களும் பழமொழிகளும் நம்பிக்கை சடங்குகளும் அற்புதமான இலக்கியமாக தனக்கான தளத்தை அமைத்துக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான அவர்களின் பாடல்கள் வெறும் பொழுது கழிக்கின்ற வகையானவைகளாக மட்டும் அல்லாமல் அந்த மக்களின் மண்ணில் நிகழ்ந்த வரலாற்றுச் சாட்சிகளாகவே ஒலித்துக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது .

‘இவே நம்தாளு’ என்ற நம்பிக்கை ஏற்பட்டால் ஒழிய பழங்குடிகள் அன்னியர்களிடத்தில் தான் என்ன நினைக்கிறோம் என்பதை ஒருபோதும் கூறுபவர்களில்லை. மேலும் அவர்கள் அதிகாரத்தின் கண்காணிப்புகளுக்கிடையிலும் கேட்பாரற்றோர் என்ற மனநிலையிலும் உழன்று வருவதால் தனக்கான பேச்சை ஒரு போதும் பேசமுடிந்ததில்லை. தனக்கான கண்ணீரை ஒருபோதும் அழுதவர்களில்லை. தனக்கான கோபங்களை அதற்கான வீரியத்துடன் காட்டியவர்களில்லை. அவற்றை வேறு வேறு வடிவங்களில் விடுகதைகளில், பழமொழிகளில், பாடல்களில் தான் காணமுடிந்தது

அவர்களுக்குள் நடக்கும் சச்சரவுகளையும், ஊரின் பிரச்சினைபாடுகளையும் பாடல்களில் வைத்து கூட்டாட்டத்தின் போதோ ஊட்டாட்டத்தின் போதோ நேரில் கேட்டும் பார்த்தும் வியந்திருக்கிறோம். அதற்கென்று ஒரு நீண்ட நெடிய தொடர்ச்சி இருந்து வந்திருப்பதை உணர்ந்தபோது பாடல்களை அணுக வேண்டிய இன்னொரு கோணமும் புலப்பட்டது.

மேலும் பாடல்களை அவர்களாக இருந்து உணர்தலும் அதே சமயம் கொஞ்சம் எழுதப்படாத வரலாற்றோடு வெளியில் நின்று அணுகுவதும் எவ்வளவு அவசியம் என்பதை ‘கோவமூப்ப நாடுலய’ என்ற பாடல் உணர்த்திப்போனது. அந்தப்பாடல் அவர்களில் பல நூற்றாண்டு வரலாற்றை 20 வரிகளுக்குள் தேக்கி வைத்திருந்ததை அறிய முடிந்தது.

‘வள்ளி வள்ளி ’ என்ற பாடல் அந்நியர்கள் சொல்வது போல் வெறும் கூத்துப்பாடலாக மட்டுமே அமைந்திருக்கவில்லை. உணவு சேகரிக்கும் கால நிலையிலிருந்து விவசாய காலத்துக்கு மாறும் எல்லா அம்சங்களும் அதில் பொதிந்துகிடந்தது..

கிழக்கிந்திய கம்பெனியை மூர்க்கமாக எதிர்த்து, இந்த மண்ணில் முதல் சுதந்திரப்போரை தொடங்கிவைத்தவர்கள் என்ற பெயரை தக்கவைத்திருக்கிற திராவிடப்பழங்குடிகளான கோண்டுகள், முரியாக்களைப் போல அவ்வளவு தீரமாக போராடவிட்டால்கூட அந்நிய எதிர்ப்பில் இருளர்களின் பங்கை எளிதில் புறந்தள்ளிவிடமுடியாதபடிக்கு ‘வெள்ளேக்காரெ தோட்டாத்திலே, வாராண்ட வாராண்ட வெள்ளெக்காரே’, ‘சோதோ சோதோ சின்னாத்தொரே’ போன்ற பாடல்கள் பதிவு செய்துள்ளன.

தங்களிடம் வரிகளை வசூலிக்கவும் நிலம் பிடிக்கவும் வருகிற உள்ளூர் ஜமீன்தார்களை நேரடியாக அச்சுறுத்தும் படை பலமோ, பணபலமோ இல்லாத பழங்குடிகள் தன் காட்டுக்குள்ளிருக்கும் சக ஜீவராசிகளின் கைமாறுகளால் அவர்களை எப்படியெல்லாம் விரட்டியடித்தார்கள் என்பதை ‘சோதோ சோதோலப்பா பண்ணாடி’ என்ற பாடல் நையாண்டி சாட்சியாக வைத்திருக்கிறது.

தொல்குடிகளின் பாடல்களை காணும் போது வெறும் வரிகளை மட்டுமே வைத்து அதிலிருந்து அதன் அர்த்ததை விளங்கிக்கொள்வது அபத்தமாகவே இருக்கும் என்பதை பல பாடல்களின் இடைவெளியில் நிகழ்ந்தப்படுகிற கணக்கிலடங்காத மெளனமான பொருள்பொதிந்த அசைவுகள் உணர்த்திக் காட்டுகிறது.

இந்த இடத்தில் வானமாமலை குறிப்பிடும் திராவிடப் பழங்குடிகள் என்று அறியப்பட்ட ஆஸ்திரேலிய பழங்குடிகளின் வேட்டை நடனத்தையும் பாடலையும் நினைவு கூறமுடிகிறது. அவர்களின் வேட்டை நடனம் இப்படித் தொடங்குகிறது:

புதர்களை விலக்குவது போலவும் விலங்குகள் சத்தமிடுவது போலவும், அது வெளியேறுவது போலவும் குரல் கொடுத்துப் பறையை அடிக்கிறார்கள். அப்புறம் ஈட்டிகளை எரிந்து அதனைக் கொல்வது போலவும் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் நடனமாடுகிறார்கள். கூடவே பாடல் இடைவெளி விட்டுவிட்டு போய்க்கொண்டிருக்கும் இருளர்களின் சில பாடல்களை பார்க்கும் போது அத்தகைய தன்மையை கொண்டிருப்பது நன்கு புலப்படுகிறது. குறிப்பாக லே லே லேக் கரடிப் பாடலுக்கான ஆட்டத்தைப் பார்க்கிறபோது ஒரு கரடியை அழைப்பது போலவும், அது முரண்டு பிடிப்பது போலவும், அது குதித்து நடந்து வருவது போலவும், மனிதனைக் கண்ட கரடியின் ஒவ்வொரு நகர்வுகளையும் அப்படியே அச்சு அசலாக ஆவணப்படுத்துகிறது.

வரிகள் திரும்ப வருவதை பல்வேறு இலக்கணத்துக்குள் பொருத்தி புரிந்துகொள்ளும் நமது அறிவுசார் சமூகம் திரும்பத் திரும்ப வரும் வரிகளில் மாறிவருகிற ஒற்றை சொல், அதன் பொருளை திடீரென அதீத உயரத்துக்கு கொண்டு போய் நிறுத்திவிடுவதைக் காண மறுப்பதை, ‘சொடலிமுள்ளுக்கே சிக்கிகொண்ட மல்லிகா மல்லிகா..’ போன்ற பாடல்கள் புலப்படுத்துகின்றன.

பரந்து விரிந்த காடு நமக்கு சொந்தமானது என்றிருந்த பழங்குடிகளுக்குள் சொத்துக்காக நடத்திருக்கும் கொலைகள் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. மேலும் கூட்டுக்குரலாக அல்லாமல் அவை தனிக்குரலாய் இருப்பதும் இவையெல்லாம் அடுத்த இனம் குறித்த கதைகளாக இருக்கவேண்டும் அல்லது வந்தவர்கள் செய்த கொலைகளுக்கான பழிகள் ஏதாவது ஒரு காரணத்துக்காக இவர்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதை மலைக்கிழங்கின் ஈரப் பதத்துடனிருக்கும் அவர்களது சொல்கதைகள் உணர்த்துகின்றன.

சென்ற நூற்றாண்டுவரை இசைக் கருவிகளை இசைத்த பெண்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் இப்போது கொகால் இசைக்கும் நீலியையோ பொரையடிக்கும் வள்ளியையோ துருளியும் மங்கேயும் ஊதுகிற மூப்பத்தியையோ களப்பகுதிகளில் காண முடியவில்லை. வெளியாட்களின் கட்டளைகளைத் துச்சமென எதிர்த்தும் அடங்க மறுத்தும் தாய்வழிச் சமூகத்தின் மிச்சங்களாக இருந்த மூப்பத்திகள் இயல்பாகவே பெரும் பிரச்சனையாகவே இருந்திருக்ககூடும். மேலும் மூப்பன், வண்டாரி, குறுதலை என்கிற பதவிகள் மன்னர்களும் ஜமீன்தார்களும் வெள்ளையர்களும் இங்கே சுரண்ட வரும் வரை இதே வடிவத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

இதில் பழங்குடிகள் அஞ்சி நடுங்குகின்ற பீ ஒடியனையோ, ஒடியனையோ, நேரடியாக எந்தப்பாட்டிலும் காண முடியவில்லையென்றாலும் சில இடங்களில் பெரும் தெய்வங்களும் பல இடங்களில் ஏனைய ஆதிக்கச் சமூகமும் ஒடியனைப் போல இயங்குவதைக் காணமுடிகிறது.

பல்வேறு மொழிக் கலப்புகள், ஆக்கிரமிப்புகள் இருளமொழியை அவர்களின் உணர்வுகளை ஏறக்குறைய விழுங்கி விட்டபோதும், இன்னும் அவர்களின் ஆழ்மனதில் அது ஒரு இயக்கமாக இருந்து வருவதால் உணர்வற்ற நிலையில் பாடப்படுகிற ‘பே’ப்பாட்டில் இன்னும் தூக்கலாக அவர்களுடைய இழந்த வாழ்வைக் காணமுடிகிறது.

கீழ்நாடுகளில் நிகழும் அளவுக்கு ஆய்வுகளோ, முனைவுகளோ மலைகள் மேல் நிகழ்ந்துவிடவில்லை. இதற்கெனப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் துறைகளால் தீவிரமான தேடல்கள் தொடரப்படவில்லை. பீகாரைப்போல் தங்களுக்கென்று தனிப்பல்கலைகழகம் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகள் பல்வேறு கோரிக்கைகளைப் போலவே கண்டுகொள்ளப்படாமல் கை விடப்பட்டுவிட்டது. இருக்கிற சில ஆய்வுகள் சமவெளிக்காரர்களின் கண்ணோட்டத்தோடும் முனைவர் பட்டங்களோடும் போய்விட்டது

பாடல்களுக்கு கீழே வருகிற ஒவ்வொரு கதையும் பெரும்பாலும் இருளர்களிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறையாக புழங்கி வருகிறவைதான் கடந்த பதினைந்து வருடங்களாக அவர்கள் சொல்லிக்கேட்ட கதைகளை நேரில் பார்த்த சம்பவங்களை நானறிந்த வரலாற்றை அவர்களின் பாடல்களோடு பொருத்திப்பார்க்கிற முயற்சியை இதில் மேற்கொண்டிருக்கிறேன்.

அவர்களின் முன்னோர்களான கோவனைப் பற்றியோ துடியனைப் பற்றியோ தங்களது பாடல்களில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இன்றும் எங்களது கோவமூப்பன் ஆண்ட நாடு என்றுதான் கோவையைச் சொல்கிறார்கள். அந்த வரலாற்றை மீட்டு அவர்கள் கையில் கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் அவர்களும் வாசிப்பை நோக்கி நகரவேண்டும் என்ற உந்துதலுமே அவர்களின் மொழியை கையாளும் திடத்தை எனக்குக் கொடுத்தது என நினைக்கிறேன்.

தனக்கு கொஞ்சமும் பொருந்தாத, தனது சுதந்திரமான நிலைகளுக்கு எதிராக இயங்கும் அரசுகளின் கீழ் வாழ நேர்ந்த போதுதான் பழங்குடி மனம் பிளவுண்டு போயிருக்கிறது. அத்தகைய மனப்பிளவுக்கு ஆளான ஆதிவாசிகளிடம் மலை நெடுகிலும் உரையாடிய போதும் நீண்ட இரவுகளில் சேர்ந்தியங்கிய போதும் அவர்களின் நனவிலியில் தேங்கியிருக்கிற, எல்லாவற்றையும் மிஞ்சுகிற அசாத்தியமான இலக்கியத்திறன் இப்பணியை மேலும் செழிப்பாக்கியது.

தமிழும் இருள மொழியும் கலந்துதான் படைக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் வரவில்லை. ஏனென்றால், அப்படி திட்டமிட்டு எழுதப்படவும் இல்லை, அது இயல்பாகவே வந்தது. இன்னும் சொல்லப்போனால் இறுதியில் திருத்தப்பட்டிருக்காவிட்டால் முழுக்க அது அவர்கள் பேச்சு மொழியிலேயேதான் வந்து சேர்ந்திருக்கும். இத்தொகுப்பைத்தொடங்கும்போது அழிந்துவருகிற அவர்கள் மிச்ச மொழியையாவது பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்போது எனக்கு இருந்ததா என்று உறுதியாக சொல்லத்தெரியவில்லை. அவர்களோடு வாழ்கிறோம், அவர்களின் வாழ்வை உள்வாங்கியிருக்கிறோம், அவர்கள் தொன்மங்களில் இயங்கியிருக்கிறோம், அவர்கள் மொழியில் உரையாடுகிறோம், அவர்களின் வளமான கூட்டு வாழ்வை – மொழியை சிதைத்ததில் நமக்கோ நமது தந்தைக்கோ நமது பாட்டனுக்கோ நிச்சயம் கடுகளவேனும் பங்கிருக்கிறது என்ற குற்ற உணர்வுகளால் மனம் அடிக்கடி அலைபாயத்தொடங்கியிருந்த வேளையில்தான் இந்தப்பணியைத் தொடங்கியிருந்தேன்.

மேலும் அவர்களிடம் கேட்டடதை கேட்டபடி எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும். முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைமுறையைக் கொண்ட பழங்குடிகளின் சிந்தனைப்போக்கை தமிழ்படுத்தலாம். ஆனால், அந்த உணர்வுகளை அவர்களின் மொழியின்றி பதிவு செய்ய முடியுமாவென்று எனக்குத் தோன்றவில்லை. இது தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது. பழங்குடிகளுக்கென்று மொழிகள் இருக்கின்றன. அவை நமது தமிழ்போலவே அன்பையும் வெறுப்பையும் நேசத்தையும் வனமையுடன் வெளிப்படுத்தும் ஆற்றலும் ஆழமும் கொண்டவை. மேலும், அழிந்து வரும் அம்மொழியைக் காக்கும் ஒரு கடமை நம்மிடம் இருக்கிறது.

*****

கட்டுரையாளர், பழங்குடி மக்கள் சமூக செயல்பாட்டாளர். தமிழ் இலக்கிய உலகில் முதல் முறையாக இருளர் பழங்குடிகளின் வீரியமிக்க கோபத்தோடும் அவர்களின் வலியோடும் பழங்குடிகளின் மொழியிலேயே, ‘ஒடியன்’ மற்றும் ‘சப்பெ கொகாலு’ ஆகிய இரு நூல்களைப் படைத்து தமிழ் இலக்கியத்தின் கவனத்தைப்பெற்றவர்.

One thought on “பழங்குடியில் கரைந்த உலகம்

  1. பழங்குடிகள் பற்றிய பல அரிய தகவல்களோடு கூடிய அருமையான கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!