home உன்னதம், சிறுகதை பழிதீர்ப்பு

பழிதீர்ப்பு

  • ஜோஸ் சரமாகோ

 

அந்த இளைஞன் ஆற்றுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தான். வெற்றுக் கால்கள்; முழுநீளக்காற்சட்டை மூட்டுக்கு மேலாக ஏறிச் சுருண்டிருக்க,  கால் முழுவதும் சேறு அப்பியிருந்தது; முன்பக்கம் திறந்திருந்த ஒரு சிவப்புச் சட்டை அணிந்திருந்தான். அவன் மார்பிலிருந்த பருவ வயதுப் பூனைமுடி கருக்கத் தொடங்கியிருந்தது. அவனது அடர்கறுப்புத் தலைமுடியை ஈரமாக்கிய வியர்வை, அவனது மெலிந்து நீண்ட கழுத்துக்கும் கீழாக வழிந்துகொண்டிருந்தது. நீண்ட துடுப்புகளின் கனத்தால், அவன் முன்பக்கமாகச் சிறிது குனிந்து வளைந்திருந்தான்; துடுப்புகளின் இருமுனைகளிலும் ஆரங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த பாசிகளிலிருந்து, அப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. கருநிறத் தண்ணீரில் அசைந்துகொண்டிருந்த படகின் அருகில் அதை வேவுபார்ப்பதுபோல, ஒரு தவளையின் உருண்டைக் கண்கள் திடீரென்று தோன்றின. பின்பு அந்தத் தவளை நகர்ந்து சட்டென மறைந்தது. ஒரு நொடிப்பொழுது சென்றதும் அலையடங்கிச் சாந்தமாகி, ஆற்றின் மேற்பரப்பு, அந்தப் பையனின் கண்களைப் போலவே பிரகாசித்தது. சேற்றின் மூச்சாக, மெதுமெதுவாக வெளித்தோன்றிய காற்றின் மெல்லிய நுரைக்குமிழ்களை நீரோட்டம் வெகுதூரத்துக்கு இழுத்துச் சென்றது. பிற்பகலின் கடும் வெப்பத்தில் உயரமான பாப்லார் மரங்கள் மெல்ல அசையச் சட்டென்று நீரைக் கடைந்தெழுந்த நீலப்பறவையொன்று நடுவானத்தில் சட்டென்று மலர்ந்த ஒரு பூவைப் போல. வேகமாகப் பறந்து மறைந்தது. அந்தப் பையன் தலையை உயர்த்திப் பார்த்தான். ஆற்றின் மறுகரையில், குறுமகள் ஒருவள் அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பையன் வெற்றுக்கையை மேலே உயர்த்தவும் அவனது முழு உடலும் சத்தமற்ற ஏதோ ஒரு வார்த்தையைக் கண்டுகொண்டது. ஆறு மெல்ல ஓடிக்கொண்டிருந்தது.

அந்த இளைஞன் பின்பக்கம் திரும்பிப் பார்க்காமலேயே சரிவில் ஏறினான். புற்களின் திடல் அங்கேயே முடிகிறது. கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு உழப்படாத நிலங்களின் மண்கட்டிகளையும் சாம்பல் நிற ஆலிவ் தோப்புகளையும் வெயில் எரித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் வளிமண்டலம் முழுவதும் நடுங்கித் தெரிந்தது.

சம்மணமிட்டு அமர்ந்திருந்த அது, ஒரு ஒற்றைத் தளவீடு; வெள்ளையடிக்கப்பட்டு, சுவர் ஓரங்கள் மட்டும் ஒளிரும் மஞ்சள்  வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. சாளரங்கள் ஏதுமில்லாமல், விறைப்பாக நின்ற சுவரில் பார்வைக்கான ஒற்றைத் துவாரம் மட்டும்  கொண்ட ஒரு கதவு. உட்பக்கம், மண்தளத்தின் நிறைந்த குளிர்ச்சியைப் பாதங்கள் உணர்ந்தன. அவன் துடுப்புகளைக் கீழே வைத்துவிட்டு முழங்கை வியர்வையினைத் துடைத்தான். மீண்டும் வியர்வை துளிர்க்கும் வரையில், இதயம் துடிப்பதை மட்டும் கேட்டுக்கொண்டு, அப்படியே அசையாமல் நின்றான். வீட்டின் பின்பக்கச்  சத்தங்களுக்குக் காதுகொடுக்காமல், பல நிமிடங்களுக்கு அவன் நின்றிருக்கையில், திடீரென்று அந்தச் சத்தம்  செவிப்பறை கிழிக்கும் ஓலமாக வெடித்தது; பிடிக்குள் அகப்பட்ட பன்றியின் எதிர்ப்பொலி. உறுதிகுலைந்து, அவன் கலக்கமுற்றுப் பதறத் தொடங்கும்போது, காயம்பட்டு, வெறியேறிய அந்த ஜீவனின் ஓலம் அவனைச் செவிடாக்கியது. மற்ற ஓலங்கள் தொடர்ந்து வந்தன; நெஞ்சைத் துளைக்கின்ற, சீற்றம் நிறைந்த ஒரு கையறுநிலைக் கோரிக்கை; எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற ஒரு வெற்று ஓலம்.

அவன் முற்றத்திற்கு ஓடினான்; ஆனாலும் வாயிற்படியினைத் தாண்டிவிடவில்லை. இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமாகச் சேர்ந்து பன்றியைக் கீழே தள்ளிப் பிடித்துக்கொண்டிருந்தனர். இன்னொரு ஆள், இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த கத்தியால் பன்றியின் விதைப்பை செங்குத்தாக இரண்டாகப் பிளக்குமாறு அறுத்துக்கொண்டிருந்தான். வைக்கோல் மீது கருஞ்சிவப்பு இரத்தக் கோளமொன்று சிதைந்து கலங்கிப் படர்ந்திருந்தது. பன்றியின் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது; கயிற்றால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்த அதன் தாடைகளுக்குள்ளிருந்து உறுமலும் ஓலங்களும் பீறிட்டுக் கொண்டிருந்தன. காயத்தைப் பிளந்து விரித்து, இரத்தம் தோய்ந்த வெண்மைநிற விதைகள் தெரிந்ததும், அந்த மனிதன் விரல்களைப் பிளவுக்குள் நுழைத்து, விதைகளை இழுத்துத் திருகிப் பிடுங்கியெடுத்தான். அந்தப் பெண்ணின் முகம் இறுகி, வெளிறியது. அவர்கள் பன்றியின் கட்டுகளைத் தளர்த்தி, அதன் நீண்ட மூக்கினைச் சுற்றியிருந்த கயிற்றினை அவிழ்த்ததும், அவர்களில் ஒருவன் குனிந்து திரட்சியும் மென்மையுமாகத் தோன்றிய இரண்டு விதைகளையும் பொசுக்கெனப் பற்றியெடுத்துக்கொண்டான். திகைத்து நின்ற அந்த ஜீவன் சுழன்று சுற்றிப் பெருமூச்சும் இளைப்புமாகத் தொங்கிய தலையுடன் குனிந்து நின்றது. பின்னர், அந்த மனிதன் விதைகளைத் தரையில் எறிந்தான். பன்றி அவற்றை வாயில்பற்றியெடுத்து, அவசர, அவசரமாக மென்று தின்றது. அந்தப் பெண் ஏதோ சொல்ல, அந்த ஆட்கள் தோள்களைக் குலுக்கிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் சிரிக்கத்தொடங்கினான். அதே கணத்தில் வாசலில் அந்த இளைஞன் நின்றதை, அவர்கள் கண்டனர். எதுவும் தெரியாதவர்கள் போல, அவர்கள் அமைதியாகி, ஒரு கணம் ஏது செய்வதெனத் தெரியாமலாகி, அந்த ஜீவனைப் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவோ, பெரும் இளைப்புடன் வாயோரம், அதன் சொந்தக் குருதி படிந்த கறையுடன் வைக்கோலில் வீழ்ந்து கிடந்தது.

அந்த இளைஞன் திரும்பி, வீட்டுக்குள் சென்றான். ஒரு கோப்பையை நிறைத்துக் குடிக்கத் தொடங்கினான்,  தண்ணீர், இதழ்க்கடைகளில் வழிந்து, பின்னர் அவன் கழுத்துக்கும் தாண்டி அடர் கறுப்பாகத் தெரிந்த அவனது மார்பு முடிகளுக்குள்ளும் செல்லுமாறு குடித்தான். குடிக்கும்போதே, வைக்கோல் மீது தெரிந்த இரத்தக் கறைகள் இரண்டினையும் வெறித்துப் பார்த்தான். பின்னர், அவன் மிகுந்த களைப்புடன் வீட்டிலிருந்தும் வெளிவந்து, எரிக்கும் வெயிலில் ஆலிவ் தோப்பினை மீண்டும் ஒருமுறை கடந்தான். சுடுமண் புழுதி அவன் பாதங்களைப் பொசுக்கியது; ஆனாலும், அதை உணராத பாவனையில்,   சூட்டினைத் தவிர்க்கக் குதிகாலைத் தூக்கி, முன்பாதங்களில் நடந்தான். அதே சிள்வண்டு, தாழ்ந்த குரலில் கிறீச்சிட்டுக்கொண்டிருந்தது. பின்னர் சரிவில் இறங்க, ஆவிபறக்கும் இலைச்சாறு வாசனையில் புல் திடல், மரக்கிளைகளின் கீழாக, மதுவாசனையுடனான குளிர்மை,  பாதங்களில் அப்பிக், கால்விரல்களுக்கிடையில் புகுந்த சேறு, பின்னர் அவற்றை முழுவதுமாக மூடிமறைத்தது.

அந்த இளைஞன் ஆற்றைக் கவனித்தபடி, அங்கேயே நின்றான். துளிர்ப்பாசிகளின் நடுவே திடமாக அமர்ந்திருந்த தவளை, முதல் தவளையைப் போலவே, பழுப்புநிறமும் துருத்திய வில்வடிவப் புருவங்களின் கீழான உருண்டைக்கண்களுமாகக் காத்துக் கிடப்பதாகத் தோன்றியது. அதன் தொண்டைப்பகுதியின் வெண்மை மட்டும் துடித்துக்கொண்டேயிருந்தது. அதன் மூடிய வாயிதழ்களில் இகழ்ச்சிக் கசிவு படிந்திருந்தது. நேரம் கடந்தது; ஆனாலும், தவளையோ, அந்த இளைஞனோ அசையவேயில்லை. பின்னர், ஏதோ ஒரு கெட்ட கணம் கடந்து சென்றது போலக் கடும் சிரமத்துடன் கண்களைத் திருப்பியபோது, ஆற்றின் மறுபக்கம், வில்லோ மரங்களின் தாழ்ந்த கிளைகள் நடுவே அந்தப் பெண்மகள் மறுபடியும் தென்படுவதைக் கண்டான். மீண்டும் ஒரு அமைதியான எதிர்பாராத கணத்தில், நீலநிற ஒளிமின்னலொன்று நீரின் மேலாக எழுந்து கடந்தது.

அந்த இளைஞன்  மெதுவாக, அவனது சட்டையைக் கழற்றினான். மெதுமெதுவாக அவன் ஆடை முழுவதையும் அகற்றி முடிக்கையில், அவனிடம் ஆடைகள் எதுவுமில்லாமலாகி, அவனது நிர்வாணம் மெல்ல வெளிப்பட்டது. அவனது சொந்தப் பார்வையின்மை நோயினை அவனே குணப்படுத்திக்கொண்டிருப்பதுபோல அந்தப் பெண்மகள், தூரத்திலிருந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர், அதே மெதுவான மெய்ப்பாட்டசைவுகளுடன் அவள், ஆடைகளை அவிழ்த்து, அணிந்திருந்த அனைத்தையும் அகற்றி முடித்தாள். மரங்களின் பச்சைப் போர்வைப் பின்னணியில் நிர்வாணம்.

 

அந்த இளைஞன் மீண்டும் ஆற்றினைப் பார்க்கத் தொடங்கினான். முடிவேயில்லாத அதன் திரவத் தோல் முழுவதுமாக அமைதி மெல்லக் கவிந்தது. தவளை பாய்ந்து மூழ்கிய இடத்தை மட்டும் அடையாளமிட்டுவிட்டு, வட்டங்கள் பெரிதாகிப் பெரிதாகிப் பின்னர் அமைதிப்பரப்பில் காணாமற்போயின.  அந்த இளைஞன் தண்ணீருக்குள் இறங்கி, எதிர்க்கரை நோக்கி நீந்த, நீந்த, அந்தப் பெண்மகளின் வெள்ளை நிர்வாண வடிவம், மரக்கிளை நிழல்களுக்குள் உள்ளடங்கிப்போனது.

**********

உலகப் புகழ் பெற்ற ஜோஸ் சரமாகோ சர்வதேச இலக்கிய அரங்கில் தனது போர்த்துகீசிய மொழிக்கு பெரிதும் கவனத்தை ஏற்படுத்திய நவீன இலக்கிய ஆளுமை. 1998 இல் இலக்கியத்திற்காக நோபல் விருது பெற்றவர். இவரது இரண்டு நாவல்கள் (பார்வையைத் தொலைத்தவர்கள், அறியப்படாத தீவின் கதை)  தமிழில் வெளிவந்துள்ளன.

 

ஆங்கில மொழியாக்கம் : ஜியோவான்னி போன்டீரோ 

தமிழில் : ச. ஆறுமுகம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!