home கட்டுரை, டிரெண்டிங் பிக் பாஸ் : ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..

பிக் பாஸ் : ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..

– கௌதம சித்தார்த்தன்

 

நெதர்லாந்தைச் நேர்ந்த ஜான் டி மோல் என்பவரால் 1997 ஆம் ஆண்டில் உருவாக்கிய ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ தான் பிக் பிரதர் (Big Brother). “1999 மற்றும் 2000 ம் வருடத்தில் நாங்கள் பிக்பிரதர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய பொழுது, அதுவரை இல்லாத ஒரு புதிய பொழுதுபோக்கு வடிவத்தை/ வகையை உருவாக்கினோம். ரியாலிட்டி டிவி வகைப்பாட்டில் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் வருவதற்கு பிக்பிரதர் ஒரு முன்னோடியாக அமைந்தது.” என்று பெருமையுடன் கூறுகிறார். இவர் உருவாக்கிய இன்னொரு நிகழ்ச்சியான ‘டீலா நோ டீலா?’ தமிழ் உட்பட பல மொழிகளில் பெரு வெற்றியடைந்த நிகழ்ச்சி. பிக் பிரதர் நிகழ்ச்சி முதலில் நெதர்லாந்தில் ஒளிபரப்பப்பட்டு உலகம் முழுவதிலும் பெரும் புகழடைந்து, சர்வதேச நாடுகளில் பரவியது. இதுவரை சற்றேறக்குறைய 54 நாடுகளில் 387 பருவங்களாக வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்வு அந்தந்த நாட்டின் கலை கலாச்சாரம், வெகுஜன சுவாரஸ்யம் சார்ந்து பிராந்திய பதிப்புகளாக சிற்சில மாற்றங்களுடன் வெளியாகின்றன.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘டச் தொலைக்காட்சி மீடியாவின் புயல்’ என்று குறிப்பிடுமளவிற்கு பெரும் புகழடைந்தார் இவர். நூற்றுக்கணக்கான கேமராக்களின் கண்காணிப்பின் கீழ், ஒரு தனிமையான வீட்டில் எவ்விதப் புறத் தொடர்புமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகின்ற குழுவினரே போட்டியாளர்கள். இந்தக் குழுவினரில் யார் கடைசிவரை அந்த வீட்டில் தாக்குப்பிடிக்கின்றாரோ அவரே ஐந்து லட்சம் டாலர் பரிசுத் தொகையை வெல்லும் வெற்றியாளர். இது அறிமுகமான புதிதில் ஒரு பெரும் Boom போல மீடியா தீயாய்ப் பரவியது. புகழ்பெற்ற பத்திரிகைகளிலும், வாராந்திர போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஒவ்வொரு வாரமும் காரசாரமாக விவாதித்தார்கள்.

இதுவரையிலான மெகாதொடர்களின் (soap operas) சலிப்பிலிருந்து மீண்டு, முற்றிலும் ஒரு புதுவகைக் கதை சொல்லல் போன்ற நிகழ்ச்சியாக இருக்கும் இதன் வடிவமைப்பு, உலகம் முழுக்க பெருமளவிலான பார்வையாளர்களை ஈர்த்தது.

உலகம் முழுக்க டாப் 10 இல் முதல் 3 இடத்திலேயே இருந்துகொண்டிருந்தது இந்த நிகழ்வு.

பிக்பிரதர் நிகழ்ச்சி பிரம்மாண்டமான வெற்றியடைந்த தாக்கத்தில் அந்த நிகழ்ச்சியை சற்றே உல்டா செய்து பல நிகழ்வுகள் வர ஆரம்பித்தன. அதில், லவ் ஐலண்ட் (Love Island) என்ற நிகழ்ச்சி இன்னும் ஒரு படி சரேலென்று மேலே எகிறியது. லண்டனின் ITV நிறுவனம் உருவாக்கிய இந்த நிகழ்ச்சி, ஒரு டேட்டிங் ரியாலிட்டி ஷோ.

இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்யும்போது, பிரபலங்களை விட, பொதுமக்களில் இருந்து சாமான்ய மனிதர்களையே தேர்வு செய்கின்றனர். 10 அல்லது 15 காதல் ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு தனிமையான ஒரு சிறு தீவில், வில்லா எனப்படும் சொகுசு வீடுகளில், போட்டி விதிகள் குறிப்பிடும் காலம் வரை வசிக்க வேண்டும். அந்தத் தீவு முழுக்க அவர்கள் டூ பீஸ் உடையில் (தமிழில், இரட்டைத்துண்டு உடைதானே?) தங்களது ஜோடிகளுடன் அடிக்கும் லூட்டியும் டேட்டியும்தான் ஷோ. இந்த ஜோடிகளில் இருபாலினத்தன்மை கொண்ட ஆணும் பெண்ணும் இணைந்த ஜோடி மட்டுமல்லாது, ஒரு பாலினத்தன்மை கொண்ட (gay) ஜோடிகளும் உண்டு. தீவு முழுக்க நிறுவியுள்ள கேமராக்கள் அவர்களது அரங்கத்தையும் அந்தரங்கத்தையும் ஒளிவு மறைவில்லாமல் காண்பிக்கின்றன. உலகமே பித்துப்பிடித்ததுபோல இந்த நிகழ்வைப் பார்த்தது. இது வரை வெளியான ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலேயே மிகப் பிரபலமானதும், அதிக வருமானத்தை ஈட்டித் தந்ததும் இந்த நிழ்வுதானென உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முதலாக என்னும் புள்ளிவிபரங்கள் கண்சிமிட்டுகின்றன.

தொண்டை கிழியக் கத்தும் பெண்ணியவாதிகளின் உரத்தகுரல்களையும், கலாச்சாரக் காவலர்களின் காட்டுக்கூச்சல்களையும், தீவின் பவளப்பாறைகளில் ஆவேசமாகக் கழற்றி வீசப்படும் இரட்டைத்துண்டு ஆடைகள் அடக்கி விடுகின்றன.

இந்த லவ் ஐலேண்டில் பயன்படுத்தப்படும் வீட்டு உபகரணங்கள், பர்னிச்சர்கள், ஆடைகள், ஆபரணங்கள், காலணிகள்.. அதேபோன்ற தோற்ற வடிவமைப்புடன் வெளிவந்து சந்தையில் பரபரப்பாக விற்க ஆரம்பித்தன. கணினி மற்றும் செல்பேசியின் சுவர்ப்படங்கள், தீம் படங்கள்.. பல்லாயிரங்கோடி ரூபாய் வணிகம் கொண்டது லவ் ஐலேண்ட்.

இதிலும் பலகோடி ரூபாய் பரிசுத் தொகை இருக்கிறது. வாக்கெடுப்பு இருக்கிறது. போட்டியாளர்கள் வெளியேற்றம் இருக்கிறது. உங்கள் இதயத்துடிப்புகளை அதிகப்படுத்த அவ்வப்போது ஜோடி மாற்றம் நிகழும் அபாயமும் இருக்கிறது.

வெல்கம் டூ போஸ்ட் மாடர்ன் வேல்டு!

அந்தக் கொடுப்பினையெல்லாம் தமிழனுக்கு இல்லை என்பதால், பிக் பிரதர் நிகழ்ச்சிக்கே திரும்புவோம்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் ஆர்வெல், ரஷ்யாவில் நிகழ்ந்த ஸ்டாலின் ஆட்சியின் போதான ஏகாதிபத்தியத்தையும், கண்காணிப்பின் அரசியலையும் பகடி செய்து எழுதப்பட்ட ‘1984’ என்னும் நாவலின் மையக் கருத்திலிருந்து இந்த நிகழ்ச்சிக்கான உள்ளடக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று இலக்கிய விமர்சகர்கள் இந்த நிகழ்வைப் பாராட்டித் தள்ளினர். நாவலில் அனைவரையும் கண்காணிக்கின்ற பிக்பிரதர் என்னும் கதாபாத்திரமும் அதன் அச்சமூட்டும் கண்காணிப்பும்தான் அந்த நிகழ்வின் மையம். இது சராசரி மக்களின் அன்றாட பேசுபொருளாக மாறிப்போனது.

இந்த மாபெரும் ஆதரவைப் பெற்ற அதேசமயத்தில் கடுமையான விமர்சனங்களையும் எதிர் கொண்டது. போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை அவமானப்படுத்தும், புறம்பேசும் காட்சிகள், பார்வையாளர்களை உளவியல் ரீதியாக, அவர்களது ஆழ்மன குரூரத்தைத் திருப்திப்படுத்துகிறது என்று ஒரு சாராரும், ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட நாடகம், போலித்தனமான நடிப்பு, சகமனித உறவுகளைக் கொச்சைப்படுத்தும் தன்மைகள் என்று பிரிதொரு சாராரும் முன்வைத்த விமர்சனங்கள் இந்த நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாக்குவதற்குத்தான் வழிவகுத்தன. அதுபோலவே, நிகழ்ச்சியில் கொச்சையான வசனங்கள், இன ரீதியான தாக்குதல்கள், போட்டியாளர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு நிஜ போலீஸ் வந்து நடவடிக்கை எடுத்த அம்சங்களெல்லாம் நடந்தேறின. ஒருகட்டத்தில், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுதல் வகுப்புகளெல்லாம் பலநாடுகளில் துவங்கி விட்டன என்றால் பாருங்கள் இதன் வீச்சை.

நிகழ்ச்சியின் இடைவெளியில் புகழ்பெற்ற உளவியலாளர்களுடன் ஆலோசனைகளும் தீவிரமான உரையாடல்களும் நிகழ்வை மேலும் சுவாரஸ்யப்படுத்தின. ஒரு சமூகவியல் மனிதக் கண்ணோட்டத்தில், தன் சுயநலத் தன்மைக்காக சகமனிதஉறவுகள் எவ்வாறெல்லாம் சிதிலமடைகின்றன என்பதை ஒரு அழகான பகுப்பாய்வாக பார்வையாளன் எதிர் கொள்ளலாம். பிக்பிரதரிடம், பிற போட்டியாளர்களைப் பற்றி தங்கள் அபிப்ராயங்களை ரகசியமாக வெளிப்படுத்தும் தன்மை, 1984 நாவலில், சகமனிதர்களை துரோகிகளாகச் சித்தரித்து பிக்பிரதரிடம் காட்டிக்கொடுக்கும் தன்மையின் ஆட்டமாகவும், அந்த ஆட்டவிதிகள், வரலாற்றில் நாஜி அதிகாரிகளிடம் சக புரட்சியாளர்களைக் காட்டிக் கொடுக்கும் சக கலைஞர்களின் கைக்கிளையாகவும் மாறி மாறிச் சுழலும் காலச்சுழற்றியின் பல்வேறு பரிமாணங்கள் பாப்புலரான ரியாலிட்டி ஷோவாக மாறி நிற்பதை உணரமுடியும்.

இரண்டாம் உலகப்போர் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணம் அது. போருக்கு எதிராக குரல் கொடுக்கும் கலைஞர்களை ஏகாதிபத்திய அரசுகள் துரத்தித் துரத்தி வேட்டையாடின. அப்பொழுது உலகம் முழுக்க பரவிக் கொண்டிருந்த சர்ரியலிஸத்தின் பார்வை போருக்கு எதிரான படைப்புகளில் குறிப்பாக ஓவியங்களில் பெருமளவில் உருமாற்றம் பெற்றது. போருக்கு முந்தைய பிக்காஸோவின் ‘குவெர்னிகா’ இதற்கு ஒரு முன்னோடி என்று சொல்லலாம்.

இந்த ரீதியில் வந்த சர்ரியலிஸ ஓவியரான மார்ஷல் மெரின் என்பவர் பற்றி இங்கு பேசுவது பொருத்தமானதாக இருக்கும்.

1939 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரில் போராடுவதற்காக பெல்ஜியன் இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு, போர்க்களத்தில் ஜெர்மனியில் போர் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து 1943 ஆம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸிற்கு திரும்பினார், சர்ரியலிஸப் போக்கில் ஈர்க்கப்பட்டு புதுமையான முறையில் புகைப்படங்களை எடுத்தார். வாழ்வின் அபத்தத்தையும், தப்பித்தலற்ற கண்காணிப்பையும் படங்களாக உருவாக்கினார். அப்படியான ஒரு படைப்புதான் “L’INTROUVABLE” (The Untraceable).

ஒற்றைக்கண் கொண்ட கண்ணாடிச் சட்டகத்தின் வடிவம். இந்த வடிவம் இன்று வரை பெரும் பாராட்டுதல்களையும், சமூக நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியாத கண்காணிப்பின் குறியீடாகவும் உலகம் ழுழுக்க விளங்குகிறது.

பிக்பிரதரின் அச்சுறுத்தும் ஒற்றைக்கண் கொண்ட லோகோவைக் கவனியுங்கள். நீங்கள் கண்காணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எந்தப்புறம் திரும்பினாலும் அந்த ஒற்றைக்கண் ‘ஒற்றைத் தன்மையுடன் மட்டுமே’ முன்வைக்கும்.

இந்த ஒற்றைக் கண்ணாடியின் சட்டகத்தை 1984 நாவலின் ஒவ்வொரு பக்கமும் அணிந்திருக்கிறது.

உலகளவிலான வெகுஜனக் கலையியலாளர்கள், தங்களது கலை இலக்கியச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் போது, இதுபோன்ற செவ்வியல் கலை வடிவங்களையே தற்கால பாபுலர் சூழலுக்கேற்ப உருமாற்றுகிறார்கள். தமிழ் போன்ற இரண்டாந்தர மசாலா தன்மை கொண்ட மலினமான கலைப் போக்குகளை முன்வைக்காமல், செவ்வியல் கலை வடிவங்களிலிருந்து நேர்த்தியாக உருமாற்றுகிறார்கள். இது ஒருவகையில் பின்நவீனத்துவக் கலைச்செயல்பாடுகள் என்கிறார் பாபுலர் கலைகளை முன்னெடுக்கும் விமர்சகர் ரிச்சர்டு ஹோகார்த்.

1984ல் ரத்தமும் சதையுமாக நிகழ்ந்த வாழ்வியல் அவலத்தை, வாழ்வியல் அபத்தமாக, ஆட்டக் காட்சியாக (Game Show) உருமாற்றியிருக்கிறது வெகுஜன கலை ஊடகவெளி.

ஜார்ஜ் ஆர்வெல்லின் மையக்கருத்திலிருந்து உருவானதுதான் இந்த நிகழ்ச்சியின் வடிவாக்கம் என்று ஆர்வெல்லின் வாரிசுகள் வழக்குத் தொடுத்தனர். இதைப் பெரிது பண்ணாமல் ஒரு தொகையைக் கொடுத்து சுமுகமாகத் தீர்த்துக் கொண்டனர்.

1992 ல் வந்த MTV யின் ‘தி ரியல் வேல்டு’ என்னும் நிகழ்ச்சியின் பாதிப்பில் உருவானது என்று குற்றம் சாட்டியது அந்நிறுவனம். முன்பின் அறிமுகமில்லாத அந்நியர்கள் சந்தர்ப்பவசத்தால் ஒரு வீட்டில் தங்கநேரும்பொழுது அவர்கள் தரும் ‘ஒப்புதல் வாக்குமூலங்களை’ அடிப்படையாகக் கொண்டது அந்நாடகம்.

அதேபோல, வாஷிங்டனைச் சேர்ந்த ஜெனிஃபர் ரிங்லி என்னும் பெண், தனது வீட்டில் ஒரு கேமராவைப் பொருத்தி 24 மணிநேரமும் நடக்கும் தனது ஒவ்வொரு அசைவையும் தனது இணையதளத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அது பெரும் பரபரப்புக்குள்ளானது. இந்த நிகழ்விவிருந்து உருவானதுதான் பிக்பிரதர் என்று சர்ச்சையை எழுப்பினார் ஜெனிஃபர் ரிங்லி.

Voyeurdorm.com என்னும் இணையதளம் தொடுத்த வழக்கில், தங்களது தளத்தில் வெளிவந்த 55 காமிராக்கள் கண்காணிக்க, எட்டு இளம் பெண்கள் ஆடிப்பாடி, சாப்பிட்டு, தூங்கி, படித்து, நிர்வாணமாக சூரியக்குளியல் செய்து, அமர்க்களம் செய்யும் அன்றாடச் செயல்பாடுகளை உல்டா செய்து இந்த நிகழ்வை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியது. இது போல பல வழக்குளைச் சந்தித்தது பிக்பிரதர்.

மேலும், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட வரலாற்றுச் சம்பவமும் நடந்தேறியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வெற்றி பெற்றவர்கள் எங்களுடைய அடையாளத்தை இந்த நிகழ்ச்சி திருடிவிட்டது என்றும், சக போட்டியாளர்கள் தங்களை ஆளுமைப் படுகொலை (Character assassination) செய்துவிட்டதாகவும், தாங்கள் பெரும் மன உளைச்சலில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் பேட்டிகள் தந்தார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகளைப் பொறுத்தவரை, இவை ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதையாக்கங்கள் என்று சொல்வது முட்டாள்தனம் என்று அறிவுபூர்வமாக வாதிடும் தன்மையை நுட்பமாகப் பார்க்கலாம். அதாவது, எழுதித் தரப்பட்ட ஸ்கிரிப்டில், யாரும் தங்களது அடையாளங்களைக் கொலை செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்பது வாதம். விஷயம் அதுவல்ல நண்பர்களே.. எழுதித் தரப்பட்ட திரைக்கதையில் போட்டியாளர்கள் நடிக்கவில்லை. அவர்களது செயல்பாடுகளை திரைக்கதையாக மாற்றுகின்றார் ஒரு மறைந்துள்ள (Invisible) இயக்குனர். இங்குதான் இன்விஸிபிள் தியேட்டர் என்னும் புலனாகாத நாடக அரங்கு என்னும் வடிவத்தை உருவாக்கிய பிரேஸில் நாட்டைச் சேர்ந்த அகஸ்டோ போவால் புலனாகிறார். ஆம், எழுதித் தரப்படும் திரைக்கதை என்பது, விஸிபிள். எழுதப்படாத திரைக்கதையில் அவர்களாகவே நடிகர்களாக உருமாற்றம் பெறும் தன்மை இன்விஸிபிள்.

அதாவது, போட்டியாளர்கள் செயல்படும் ஒவ்வொரு அசைவையும் ஒருங்கு கூட்டி அனைத்து வீடியோ துண்டுகளையும் பார்வையாளர்கள் முன் வைப்பதில்லை. அதற்கு நேரம் இல்லை என்கிறது ஒன்றறை மணிநேர நிகழ்வு. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோ துண்டுகளை மாத்திரமே நமக்குக் காட்சிகளாக வைக்கிறது. எனில் ஒரு குறிப்பிட்ட போட்டியாளரின் நல்ல அணுகுமுறைகளை மாத்திரமே முன்வைக்கலாம். வேறொரு போட்டியாளரின் மிக மோசமான செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகப் பரப்பலாம். திறமையான தேர்ந்த இயக்குனரால் ஒரு அற்புதமான திரைக்கதையை உருவாக்கமுடியும். அவர்கள் நடிக்காமலேயே அவர்களை தனது புலனாகாத திரைக்கதைக்குள் நடிகர்களாக உலவ வைக்கமுடியும்.

அதுமட்டுமல்லாது பார்வையாளர்களும் இதில் ஒரு பாத்திரமாக (ஆட்டக்காரர்களுக்கு ஆதரவு – எதிர்ப்பு தெரிவிக்கும் வகைகளில்) மாற்றப்படுவார்கள்.

எது எப்படியோ, பிக்பாஸ் என்பது ஒரு புலனாகாத அரங்கு (Invisible theatre).

இந்த ஆட்டம் பல்வேறு விதமான புலனாகாத திரைக்கதைகள் கொண்ட பின் நவீனத்துவ நாடகம். கண்ணுக்குப் புலனாகாத இந்த திரைக்கதையாக்கத்தில் நீங்கள் ஒரு பாத்திரமாகத் தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள். உங்கள் பாத்திரத்தை எப்படி வடிவமைக்க வேண்டும் என்பது உங்கள் கையில் இல்லை.

இந்த விரிவான பார்வையில்தான் தற்பொழுது தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவதானிக்க வேண்டும்.

உலகில் எந்த மொழி நிகழ்ச்சியிலும் நடக்காத Irony தமிழில்தான் நடந்திருக்கிறது. ஆம். அந்தந்த நாடுகளில் சாமான்ய மக்களிலிருந்து பல்வேறு துறைகள் சார்ந்த ஆளுமைகளாக நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்து நடத்துகிறார்கள். ஆனால், தமிழ் மொழியில் மட்டும் முழுக்க முழுக்க சினிமாக்காரர்களையே ஆட்டக்காரர்களாக களமிறக்கியுள்ளார்கள். வாழ்க செம்மொழி தமிழ்!

உலகம் முழுக்க இந்த நிகழ்ச்சியை சமகால வெகுஜன அரசியல் பார்வைகளுடனும், வெகுஜன கலாச்சாரக் கொண்டாட்டங்களுடனும், பாப்புலர் கலை இலக்கியத் தன்மைகளுடனும் கொண்டாடிக் களிக்கிறார்கள். இந்த நிகழ்வில் குதூகலமும்,பரபரப்புகளும், கொண்டாட்டங்களும் பெருமளவில் இருந்தாலும் கூட, அரசு அதிகாரம் மற்றும் சமூகச் சூழல் எவ்வாறெல்லாம் சக மனிதனை கண்காணிப்பு செய்யக்கூடும் என்கின்ற எச்சரிக்கையுணர்வையும், கண்காணிப்பின் அரசியலை கோடி காட்டும் முகமாக கலாபூர்வமாய் உணர்த்தும் வடிவமாய் இதை நிகழ்த்துகிறார்கள். ஆனால், தமிழில் மட்டும் அதன் அரசியல் சார்ந்த, சமூகப் பிரக்ஞை சார்ந்த தன்மை நீர்த்துப்போய் வெறும் புறணி பேசுதல், பெண் உடலை கவர்ச்சியாக முன்வைத்தல், சினிமா பிம்பங்களை முன்வைத்தல்.. என்று முழுக்க முழுக்க மசாலாத்தன்மை கொண்ட நிகழ்வாகவே முன்வைக்கப்படுகிறது.

தூத்துக்குடி நிகழ்வுக்குப் பிறகு சமீபகாலமாக நாடுமுழுக்க மாற்றுச் சிந்தனை கொண்டஅரசியல் செயல்பாட்டாளர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. சர்வதேச அளவில் நடக்கும் இதுபோன்ற கொடூரமான சூழல்களை முன்வைக்கும் அறப்போராட்டமாக உருவாக்கப்பட்டதுதான் பிக் பாஸ் என்கிறார் ஜான் டி மோல்.

ஆனால், எல்லாவற்றையும் நீர்த்துப்போக வைத்து மசாலா ஐட்டமாக மாற்றிவிடுவதில் கில்லாடியாயிற்றே தமிழன்!

 

(தினமணி (8.7.2017) நாளிதழில் வெளிவந்தது )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!