home கட்டுரை, டிரெண்டிங் பிரதிமீதான இடையீட்டு வாசிப்பு

பிரதிமீதான இடையீட்டு வாசிப்பு

  • இமாம் அத்னான்

 

வாசகர்புலத்திலிருந்து கவிதைப் பிரதிகளை அணுகி வாசிப்பை நிகழ்த்திப் பார்க்கும், அப்பிரதிகளின் உள்ளடுக்குகளில் பதுங்கியிருக்கும் வன்முறைகளை வாசிக்க முனையும் செயன்முறையை அண்மைக்காலமாக பயிற்சி செய்து வருவதன் ஒரு பகுதியாகவே இவ்வாசிப்புப் பிரதியையும் அமைத்துக் கொள்கிறேன்.

தமிழ் இலக்கிய வெளியில் பிரதிகளை வாசிப்பதற்காக அதிகம் பயன்படுத்துகின்ற வழிமுறைகளில் இரண்டினை தலைகீழாக மாற்றியமைத்துக் கொண்டே கவிதைப் பிரதிகளை வாசிக்க முற்படுகிறேன்.

  1. பொதுவாக நம் விமர்சகர்கள் புறச்சூழலிலிருந்து கவிதைப்பிரதிக்குள் நுழைந்து வாசிப்புச் செய்ய முனைந்திருப்பர். இவ்வழிமுறையானது, புறச்சூழலின் எதார்த்த அம்சங்களை வைத்துக் கொண்டு கவிதைப் பிரதிக்குள் ஒருவித reality check ற்கான ஒப்பீட்டுப் பார்வைகளுக்கே இட்டுச்செல்கிறது. அதனால்தான், நாம் அதிகம் எதிர்கொள்ளும் கவிதை விமர்சனங்கள்: இது எதார்த்தத்தை நுண்மையாக பிரதிபலிக்கிறது, நம் கால நிலவரங்களை அழகியலாக வெளிப்படுத்துகிறது, நம் வாழ்வின் சிடுக்குகளை மொழிக்குள் கலையாக்குகிறது போன்ற வாக்கிய உதிர்ப்புகளையும் அதற்கான ஆதாரங்களை பிரதிக்குள்ளிருந்து அடுக்கிக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

 

இங்கு நான் குறிப்பிடும் வாசிப்பானது பிரதிக்குள் இருந்து வாசிப்புச் செய்து புறச்சூழலுக்குள் இணைந்து கொள்ளும் வழிமுறையை கொண்டிருக்கும். இது reality check இற்காக பிரதிக்குள் தேடும் பார்வையை விலக்கி, ஒரு பிரதியை அதன் போக்கிலேயே பின்தொடர்ந்து அப்பிரதி தனக்குள் என்ன செய்து கொள்கிறது? ஏன் அப்படிச் செய்துகொள்கிறது? என வாசிப்புச் செய்ய வழியேற்படுத்துகிறது.

 

  1. கவிதைப்பிரதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சொற்கள் அல்லது பொருட்கள் ஏதோ ஒன்றிற்கான குறியீடாகவும் அது ஆழ்ந்த அர்த்தத்தை பொதிந்து வைத்திருக்கும் என்பதாகவும் நினைத்துக் கொண்டு ஆழ்நிலை பொருட்கோடலை செய்துகாட்டவே நம் விமர்சகர்கள் அதிகம் முனைந்திருப்பர்.

 

மாறாக, வைக்கப்படும் சொற்களையோ பொருட்களையோ எதற்குமான குறியீடாக எண்ணி நகர்வதைத் தவிர்த்து, அது பிரதிக்குள் என்ன செய்கிறது? அப்படிச் செய்வதனூடாக எதைக் கதைத்துக்கொள்ள முனைகிறது என்பதை நோக்காக கொண்டு வாசிப்பை நகர்த்துகிறேன். அதாவது, ஆழத்திற்குள் முக்காமல் மேலோட்டமான வாசிப்பை நிகழ்த்துதல். (ஆசிரியர் என்னதான் மெனக்கெட்டு குறியீடாக பயன்படுத்தி இருந்தாலும் நமக்கென்ன. அவர் என்ன நினைத்து எழுதியிருக்கிறார் என்பதை ஊகித்துக் காட்டுவதுதான் வாசகர்களின் வேலையா என்ன?)

வாசிப்பை நிகழ்த்திப் பார்ப்பதற்காக குரானாவின் ஒரு கவிதையை எடுத்துக் கொள்ளலாம். முதலில் அப்பிரதியை வாசித்து விடுங்கள்.

 

|| நாமெ கடசியா பார்த்தது என்ன படம்..? ||

முள்மரங்கள் நிறைந்த பத்தைக் காடு

அந்த பத்தைகளை ஊடறுத்து

நுழைந்தும் நெளிந்தும்

மிக வேகமாக போய்க்கொண்டிருக்கிறது

அந்தப் பாதை.

பார்வையைவிட அதிவேகமாக

எங்கு போகிறதென்று தெரியவில்லை.

சுற்றுச் சூழல்,

ஆளரவமற்று வெறித்துக் கிடக்கிறது என

எழுதும் போதே,

அந்தப் பாதையால் பத்திப் பதறி

ஒரு பெண் ஓடிவருகிறாள்

இரண்டு தடியன்கள்

அவளைத் துரத்திக்கொண்டு வருகிறார்கள்

 

இடைவேளை

 

சிறிது நேரத்தின் பின்

பத்தைகளினூடே நுழைந்து சென்ற

அந்தப் பெண், போன வழியால்

திரும்பி நடந்து வருகிறாள்

 

கூந்தலைக் கயிறாகத் திரித்து

கோர்த்தெடுத்த இரு புட்டானங்களும்

தோளில் ஒரு புறம் அசைந்தபடி இருக்க

நீண்டு வளர்ந்திருந்த

கறுப்பு மயிர்களை இரண்டு பகுதியாகப் பிரித்து

நீள்பட்டி பின்னப்பட்ட

ஜிப்பில்லாத தோள்பையென மாறிவிட்ட யோனி

தோளின் மறுபுறம் ஆடிக்கொண்டிருக்க

அவள் நடந்து வருகிறாள்

சிறு அலங்காரத்துடன் ஒற்றை முலை

தலையில் தொப்பியாக மாறியிருக்கிறது

சீன வேலைப்பாடுகளுடன் கூடிய

அவளின் கையிலிருந்து பளபளக்கும் பாத்திரம்

மற்றதாக இருக்க வேண்டும்.

 

அவளை இடைமறித்து

தம்பி, இஞ்சால ஒரு பொட்டை

ஓடிப்போனதை பாத்தயா? என

தடியன்கள் விசாரிக்க

இல்லை என்றபடி மெதுவாக நழுவுகிறாள்

நமக்குத் தெரியும் அவள்தான் தம்பியென்று

எல்லா சினிமாக்களையும் போல

இதிலும் தடியன்கள் கண்டுபிடிப்பதில்லை

 

அந்தத்திரைப்படத்தில்

கற்பழிப்புக் காட்சி ஆரம்பிக்கும் போதே,

அவளுக்கென ஒரு மாறுவேடத்தை

நினைக்கத் தொடங்கிவிட்டேன்

வேறெப்படி அவளைக் காப்பாற்ற இயலும்..?

எனக்கு குங்க்பூ எல்லாம் தெரியாது

துப்பாக்கியும் கையிலில்லை.

 

திரையில் வணக்கம் என்று வந்தது தெரியாமல்

இப்படி அங்கங்களைக் கொண்டே அலங்கரித்து

மாறுவேடமிட முடிந்தால்

பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்குமென

யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

 

விசிலடித்தது போதும்

படம் முடிந்துவிட்டது

எழும்புங்கள் போகலாம் என்றாள் மனைவி

இது நடந்து இன்றோடு சரியாக

ஒரு மாதமாகிறது

வெட்கத்தைவிட்டு இன்றுதான்

அவளிடம் கேட்டேன்

நாமெ கடசியா பாத்தது என்ன படம்…?

**      **       **

தியட்டரில் சினிமாப்பட திரையிடலின் கட்டமைப்பைத் தழுவி இப்பிரதிக்குள் கவிதை சொல்லல் அமைக்கப்பட்டிருக்கிறது. திரையில் நிகழும் காட்சிகளை விபரிப்பதாகவும், அக்காட்சியில் கவிதை சொல்லியும் தன் கற்பனையூடாக இடையீடு செய்து மாற்றியமைப்பது பற்றி சிந்திப்பதாகவும், அத்தகைய திரைப்படம் பார்த்தது ஒரு மாதத்திற்கு முன்பென அறியத்தருவதாகவும் கவிதைக்கான சம்பவங்கள் பின்னப்பட்டிருக்கிறது.

திரையில் நிகழும் காட்சிகளாக விபரிக்கப்படுபவைகள் தியட்டரினுள்ளாக நிகழ்ந்திருக்கிறதெனக் கேட்டால், அப்படி வாசிப்பதற்கு இப்பிரதி இடம்தராது.

இடைவேளைக்கு முந்திய பகுதியில்,

//சுற்றுச் சூழல்,

ஆளர்வமற்று வெறித்துக் கிடக்கிறது என

எழுதும் போதே,

அந்தப் பாதையால் பத்திப் பதறி

ஒரு பெண் ஓடிவருகிறாள்//

என வருகிறது. பிரதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் காட்சிச்சம்பங்கள் கவிதை சொல்லியால்தான் எழுதப்படுகிறது. ஆக, திரையில் நிகழும் காட்சிகளோ அக்காட்சியில் துரத்தப்படும் பெண்ணைக் காப்பாறுவதற்கான கற்பனையை யோசித்ததாகச் சொல்வதோ எங்கோ நிகழ்ந்த சம்பவங்கள் அல்ல. அது பிரதிக்குள் நிகழும் சம்பவங்கள். கவிதை சொல்லியாலேயே எழுதப்படும் சம்பவம். அதுவே இப்பிரதியை metafiction தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிறது. Metafiction வகைப்பிரதிகள் தன்னை எதார்த்தமானது, உண்மைத்தன்மை கொண்டது, எதோ ஒன்றின் சாட்சியம் என்பதாகவெல்லாம் முன்வைப்பதில்லை. மாறாக நூறுவீதம் தானொரு புனைவுப்பிரதி என்பதாகவே காட்டிக் கொள்கிறது. அதனூடாக இலக்கியப்பிரதிகள் தக்கவைத்துக்கொண்டிருந்த ‘எதார்த்தவியல்’ அரசியலை கவிழ்த்தி விடுகிறது.

**     **    **

ரேப் பண்ணுவதற்காக குண்டர்களால் துரத்தப்படும் பெண்ணை, பிரதிக்குள்ளிருக்கும் கவிதை சொல்லி தன் கற்பனையைச் செலுத்தி அவளை மாற்றியமைத்து ஒரு தற்காலிக பாதுகாப்பிற்கான சூழலை பிரதிக்குள் உருவாக்கிப் பார்க்கிறார்.

நவீன கவிதைப் பிரதிகளில் வைக்கப்படும் கவிதை சொல்லிகள் இத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ளும் பொழுது: அய்யோ பாவம்.. காலம் கெட்டுவிட்டது.. நம்மால் என்னதான் செய்ய முடியும் என்பதாகக் குறைபட்டுக் கொள்ளும் தன்மை கொண்டவர்களாகவே அமைந்திருப்பர். லீனா மணிமேகலையின் இக்கவிதைப் பிரதியைப் பார்க்கலாம்:

*
கடைக்கார கிழவன் தன் மனைவியை ஒரு முப்பது நிமிடத்திற்குள் அடித்திருப்பானா
பைக்கில் செல்பவன் தன் வீட்டு சிறுமியின் முலையைப் பற்றியிருப்பானா
நேற்று
சென்ற வாரம்
*
இரண்டு பேருந்துகள் தவற விட்டேன்.
படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போகும்
இளைஞர்களிடமிருந்து என் பின்புறத்தைக் காப்பாற்றி கொள்ள வேண்டும். என்னருகில் இன்னும் இரண்டு பெண்கள். அவர்களுக்கும் பேருந்து ஆண்களிடமிருந்து தற்காத்து கொள்ள ஏதாவது இருக்கலாம்.
ஒன்பதாம் எண் பேருந்தில் ஏறி விட்டேன்
ஒரு சிறுவன், ஏழு வயதிருக்கும்.
சில வருடங்களில் அவன் யாரையாவது காதலுக்கு வற்புறுத்தலாம்
இல்லை தன் தங்கையின் பொம்மைகளை இன்று மாலை உடைக்கலாம்
*
பத்தில் ஒரு பெண் எல்லைகளில் கடத்தப் படுகிறாள்
எதிர்ப்படும் பெண்களில் ஒருவரை நாளை பார்க்க முடியாமல் போய் விடுவேனா
பக்கத்து வீட்டுக் குழந்தை காணாமல் போய்விடுமா
என்னை யாரவது எண்ணிட்டிருக்கிறார்களா
*
கடந்து செல்லும் ஆண்களின் சட்டைப் பைகளை சரி பார்க்க வேண்டும்
அதில் நானறிந்த சிறுமியின் வாசனை இருக்கலாம்.
அல்லது ஒரு வன்மையான வார்த்தை
மேலும் ஒரு வயாக்ரா மாத்திரை

(‘புள்ளிவிபரம்’ கவிதையின் சிலபகுதிகள்)

லீனாவின் இப்பிரதியில் வைக்கப்பட்டிருக்கும் கவிதை சொல்லி தான் இயங்கும் சூழல் கொண்டிருக்கின்ற பெட்ரியாக்கல் நிலைமைகளால் அதிகம் விரக்தியுற்றிருக்கிறார். எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் ஆண்களால் வஞ்சிக்கப்படுவதாகவும் – எதிர்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் பெண்களைத் துன்புறுத்தவே அலைவதாக பிரதிக்குள் அங்கலாய்க்கவும் குமுறவும் செய்கிறார். பிரதிக்குள் தான் எதிர்கொள்ளும் பெட்ரியாக்கல் சூழலை மாற்றியமைப்பதற்கோ, தற்காலிக தீர்வு நோக்கிய புனைதலை சிந்திப்பது பற்றியோ முனைப்பற்று வெறுமனே மனக்குமுறலாய் விரக்தியை முன்வைக்கும்படி கவிதை சொல்லி வைக்கப்பட்டிருக்கிறார்.

எத்தகைய சிந்திப்பிற்கும் புனைவிற்குமான சாத்தியங்களுக்கு வாய்ப்பளிக்கும் நிலையிலேயே மொழியும் அதன்வழியான பிரதியும் அமைந்திருக்கிறது. ஆனால், நவீன கவிதைகளில் வைக்கப்படும் கவிதை சொல்லிகள் விரக்தியை, அங்கலாய்ப்பை, மனக்குமுறலை வெளிப்படுத்துவதுடன் நிறுத்திக் கொள்வர். குரானாவின் பிரதியில் வைக்கப்பட்டிருக்கும் கவிதை சொல்லி இந்தத் தன்மையைக் கடந்து ஒரு தற்காலிக தீர்வு நோக்கி பிரதிக்குள் புனைவை நிகழ்த்திப்பார்க்கும் மனோநிலையுடன் இயங்குகிறார்.

**     **      **

குரானாவின் பிரதியில் வைக்கப்பட்டிருக்கும் கவிதை சொல்லி, துரத்தும் குண்டர்களிடமிருந்து அப்பெண்ணைக் காப்பாற்ற சிந்திக்கும் கற்பனையானது: அக்கவிதை சொல்லியும் பெட்ரியாக்கல் சிந்தனைப் போக்கு உடையவர்தான் என்பதைச் சொல்கிறது.

ரேப் பண்ணத் துரத்தும் குண்டர்கள் x தப்பமுனையும் பெண். இந்த எதிர்வில் அப்பெண்ணைக் காப்பாற்ற நம் சமூகவெளியில் பாலியல் உறுப்புக்கள் என கற்பிதம்கொண்டிருக்கும் முலைகள், யோனி, புட்டணங்களை இடம்மாற்றி உருமாற்றி விடுகிறார்.

இந்தக் காப்பாற்றும் சிந்திப்பை இடையீடு செய்து இப்படி விபரிக்கலாம்:

இன்னும் எமது சமூக உரையாடலில், பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு பெண்களே காரணம். அவர்கள் அரைகுறையாக உடுக்கிறார்கள். கவர்ச்சி காட்டுகிறார்கள். இரவில் தனியாகச் செல்கிறார்கள். அப்படியெல்லாம் அவர்கள் செய்யாமல் இருந்தால் யார் துன்புறுத்தப் போகிறார்கள் என்பதாகக் கூறிக்கொண்டு பெண்களை ஒழுங்குபடுத்தும் போக்கினை அவதானிக்கலாம்.

அது போன்ற ஒன்றைத்தான் இக்கவிதை சொல்லியும் செய்கிறார். அவளிடமிருக்கும் பாலியல் உறுப்புக்கள்தான் ரேப் பண்ணத் துரத்தப்படுவதற்குக் காரணம். அவைகளை இடமாற்றி உருமாற்றி அமைத்து, துரத்தி வந்தவர்களே இவளையும் ஒரு ஆணாகப் பார்க்கவும் நம்பவும் வகையில் அடையாளமாற்றி காப்பாற்றுகிறார். அப்படி பெண்களால் உருமாற்றிக் கொள்ள முடிந்தால் அவர்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள் என உச்சுக்கொட்டிக் கொள்கிறார். இது வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களிடம் சென்று நீங்கள்தான் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி பரிந்துரைக்கும் நுண்மையான வன்முறை.

அப்பெண்ணைக் காப்பாற்ற கவிதைசொல்லி தன் கற்பனையை அக்குண்டர்கள் மீது ஏன் செலுத்தவில்லை? பெண்ணின் உறுப்பை இடம்மாற்றி உருமாற்ற சிந்தித்த கவிதைசொல்லி அவ்விரு குண்டர்களின் உறுப்புக்களை மாற்றியமைப்பது பற்றி ஏன் சிந்திக்கவில்லை? அட்ஜஸ்ட் பண்ணுவதும் மாற்றிக் கொள்வதும் பெண்கள்தான் செய்யவேண்டுமெனும் பெட்ரியாக்கி சிந்தனையினாலா? அல்லது பெண்களின் பாலியல் உறுப்புக்களைக் கொண்டு கற்பனை வேலைப்பாடுகளைச் செய்வதில் இருக்கும் -நம்மனம்களில் கட்டமைந்திருக்கும்- சமூகக்கவனஈர்ப்பு கவர்ச்சி தன்மையை பிரதிக்குள் வைத்துக் கொள்வதற்காகவா. அல்லது இவைகளல்லாத வேறு என்னவாக இருக்கும்.?

 

 

2 thoughts on “பிரதிமீதான இடையீட்டு வாசிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!