பெருந் தீ

  • ராபர்ட் ஸ்கிர்மர்

 

‘நிக்கியும் நானும் இரு பழைய நண்பர்களின் அட்டகாசமான திருமணத்தில் கலந்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். கொண்டாடுவதற்கு என்றில்லாமல் ஒருவரை ஒருவர் மறப்பதற்கென்றே மலிவான ஒயினை பாலேட்டு நிறப் பிளாஸ்டிக் தம்ளர்களில் குடித்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் நானிருந்த பக்கமாகச் சாலையில் படபடவெனச் சப்தம் வந்துகொண்டிருந்த அந்த வீட்டைப் பார்த்தோம்.

முதலில், பாதிப்பின் அளவினை எங்களால் கணிக்க இயலவில்லை. ஒரு சன்னலின் கறுத்துப்போன கண்ணாடிக் கதவு பட்டென்று திறந்து பெரும் புகை சூழ்ந்து, தூசி மண்டலம் பேயாக உருக்கொண்டது. ஏதோ ஒன்று வெடித்தது; பயங்கரமான சப்தம்; முன்வாயிற் தூண் ஒன்று பிளந்து, இரண்டாவது தூணும் இடிந்து நொறுங்கித் தரைமட்டமானது. கூரை மீது இரட்டைத் தீநாக்குகள் எழுந்தன; கூரை வெடித்து ஓடுகளும் ஆணிகளும் சிதறிச் சுழன்று வீட்டின் கடைசிப்பகுதியில் போய்த் தலைகுப்புற விழவும், ஆடை கழற்றிய மரங்களில் சிவப்புச் சாட்டைகளாக செந்தீப் பிழம்புகள் பற்றியெரிந்தன.

உண்மையில், நான் நேராக விரைந்து போயிருக்கவேண்டும். திருமணத்துக்கு முன்பே கொஞ்சம் விஸ்கி குடித்திருந்தேன்; அதற்கும் மேலாக, மாஜி மனைவியை இப்போதும் இரவுகளில் அணைத்துக் கிடப்பதாய்க் கனவுகாணும் என்னுடைய முட்டாள் பீட் குளியலறையிலிருந்து அவளை நினைத்துப் புலம்பி அழுததைக் கேட்டிருந்ததால்தான் இப்படியாகி இருக்கும். ‘ ஆனா, அவ போனது நல்லதுதான்.’- நீர் ஒழுகும் கண்களைத் துடைத்துக்கொண்டும், கழுத்துக்குக் கீழே மெல்லிய கீறல்களைத் தடவிக்கொண்டும் சொன்னான். அந்தக் கீறல்கள் காலையில் கவனமற்ற முகம் மழிப்பில் அவன் பெற்றுக் கொண்டவையென்பதை நான் யூகித்துக்கொண்டேன். “ நான் ரோட்ல ஒரு பக்கமா, ரெண்டு காலும் ஒடைஞ்சு, சேசுவே, இடுப்புங்கூட, முட்டாளே, வாத்து! என்னோட ரெண்டு மணிக்கட்லயும், ஆமா, ஒத்தொத்த நரம்பும் அத்துப்போய்க் கிடந்தேன். ஆனா, அவளுக்கு அது ஒண்ணுமே, ஒண்ணுமே இல்லாமப் போயிருச்ச்ச்சி.’’

குளியல் தொட்டியின் விளிம்பில் அமைதியான முகத்தோடு உட்கார்ந்திருந்த அவன், சட்டென்று முன்பக்கமாக என் சட்டையைக் கொத்தாகப் பற்றினான். நாங்கள் சிறுவர்களாய் ஒரு பெட்டிக்கடையின் பின்பக்கமிருந்து சிகரெட்டுகளையும் மஞ்சள் புத்தகங்களையும் திருடிய காலத்திலிருந்தே எனக்கு பீட் நண்பன்; அதையெல்லாம் சொன்னாலும் இப்போது அவனை ஆறுதல்படுத்திவிடமுடியாது. அதனால் அவனது துக்கங்களோடேயே அவனை விட்டுவிட்டு, ஜுனைப்பர் வாசத்தை அள்ளி வரும் நவம்பர் மாதத்து மெல்லிய குளிர்காற்றின் இதமான சுவாசத்துக்காகவே முன்வாயிலுக்கு வந்தேன். ஒரே ஒரு ஜுனைப்பர் கூடக் கண்ணில் படவில்லை. என் தலைக்குள்ளிருந்த அசிங்கம்பிடித்த சந்தேகங்களைத் துடைத்தெறியவே ஆழமாகச் சுவாசித்தேன். அப்போதுதான் லிண்டாவைக் கவனித்தேன்; மரிஜுவானா கலந்த ஒரு சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு, நாலாபுறத்திலிருந்தும் வீட்டை நோக்கி விரிந்துகிடக்கும் பாழ்நிலங்களை வெறித்துக்கொண்டிருந்தாள். வீட்டை நோக்கி விரிகின்றனவா? அல்லது வீட்டிலிருந்து விரிகின்றனவா? அவள் அணிந்திருந்த அழகுப்பின்னல் பதித்த வெள்ளைநிற ஆடை பழுப்புமஞ்சளாகி, விரித்துப் படுத்திருந்தது போலக் கசங்கித் தெரிந்தது. அவள் கல்லாகிவிட்டதாகவே சொல்வேன்; அவள் கண்கள் செயற்கையாக நீர்கொண்டிருந்தன; அவை எதையுமே நோக்கவில்லை., உடுப்பின் கிளர்ச்சியூட்டும் மடிப்புகளைக் கீழாக நீவிக்கொண்டே, ஏதோ கனவுபோல ‘அவன் என்னைக் காதலிக்கவே இல்லை’ என்று உரைத்தாள். ‘அந்தப் பொட்ட நாயி, மார்சியா அவன் மனசுக்குள்ள கிடக்கா, என்ன கொடுத்தாலும் விடமாட்டா போல’.

பீட் `அவளை`க் காதலித்தான் என்று உளறிவிட்டேன்; அவன் லிண்டாவைக் காதலிப்பதைத்தான் அப்படிச் சொன்னேன். ஆனால் அவள் அதை என் பெருந்தன்மையாகவோ அல்லது திருப்திப்படுத்தும் ஆறுதல் வார்த்தையாகவோ கருதிக்கொண்டாள். நான் தவறான சுரப்பிகளைத் தூண்டிவிட்டேன் என நினைக்கிறேன். அவள் அப்படியே என்மீது சாய்ந்தாள்; உணர்வற்ற ஒரு கை என் தொடையை அழுத்தியது. அப்படியே இருவருமாக மரிஜுவானாவை இழுக்கத் தொடங்கினோம்; உள்ளும் புறமும் மரிஜுவானாவின் வாசம்; விறுவிறுப்பு அதிகமாகியது. ‘‘அய்யோ! கடவுளே! நான், என்ன செய்துகொண்டிருக்கிறேன்.’’ — எனக்குள் ஏதோ ஒரு பொறி. லிண்டா, ‘‘ உன்ன மாதிரி ஒரு கரும்பு மனச எப்படி வச்சுக்கிடணும்னு நிக்கிக்குத் தெரியாது, கேக்றயா?’’ என்றாள்.

பீட்டுக்கும் லிண்டாவுக்கும் சொந்தமான பண்ணைவீட்டில் தூசிப் பந்துகளும் நாய்முடிகளும் நிக்கி விழாத்தோற்றமளிக்குமென்ற தவறான முயற்சியில் கணப்படுப்பைச் சுற்றித் தொங்கவிட்ட வண்ணக் காகிதங்களும் அக்கறையற்றதாகச் செய்துவிட்ட, போதும்போதாததுமான வசிப்பறையின் நடுவில் தொடக்க கால வாக்குறுதிகளுடன் திருமண காரியங்கள் நடக்கின்றன. நண்பர்களின் அருகில் மிகுந்த கட்டுப்பாட்டோடு, நிக்கியும் நானும் எங்கள் மோதிரக்கைகள் கருங்கல்லாக, முழங்கால் மூட்டுகள் சொடக்கிட அமைதியான சாட்சிகளாக நின்றோம். இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து நான் ஒருமுறைகூட நிக்கியை முழுவதுமாக ஏமாற்றியதில்லை; இருந்தாலும் அனைத்து வழிகளிலும் ஒரு காதலனைப் போலவே நானும், ஏதேனும் ஒருநேரத்தில் அல்லது மறுபொழுதில் நம்பிக்கைத்துரோகம் செய்திருக்கவில்லையா? புனிதப்படுத்தும் காரியத்தைச் செய்கின்ற போதகர், பெருத்த ஆவலோடு விஸ்தாரமாகக் காதல், அன்பு, கவர்ச்சி, மகிழ்ச்சி, உயிர்த்தெழுதல், லசாரஸ், ரொட்டி, மது என்று பொழுதெல்லாம் பேசினார். ஒரு மது அருந்தகத்தில் அவரைச் சந்தித்திருந்த பீட் இதற்கு ஏற்பாடு செய்திருந்தான். கொஞ்சம், அதிகமான திகிலோடுதான் நாங்கள் அவரை நோக்கினோம். பீட்டையும் லிண்டாவையும் கணவன் மனைவியாக அறிவிக்கும் முன் அவர்களை ஆசீர்வதிக்கப் போகும் உள்ளங்கையிலேயே ஒரு நிமிடம் இருமினார். எல்லோரும் என்னையே பார்த்தார்கள், என்னமோ, அந்தக் குப்பைகூளப் பொய்களிலிருந்து வெளியேறும் வழியைக் கண்டுபிடிக்கும் திட்பநுட்பம் எனக்கு மட்டுமே சொந்தம் என்பது போல.

நான் என்ன செய்தேன்? மரிஜுவானாவைச் சுவாசத்தில் சுமந்து இன்னொரு பெண்ணின் வாசத்தைக் கைகளில் கொண்டு உள்ளுக்குள் வந்துவிட்ட ஏதோ ஒரு வலியுடன் ( சிலர் மனச்சாட்சி என்று சொல்கிறார்களே அது) இருக்கும் ஒருவன் என்ன செய்திருப்பான்? நான் திரும்பிக்கொண்டேன். குனிந்து ஷூக்களைப் பார்த்தேன், அதிகமாகத்தான் அடிபட்டுத் தேய்ந்து விட்டிருந்தன.

அந்த முதல் கணத்தில் என் கண்ணில் பட்டதை என்னவென்று நான் உணரவில்லை. அதனால் எரிந்து கொண்டிருந்த வீட்டை நான் கடக்கத் தொடங்கியிருப்பேன்.

ஒருவேளை அது என்னவென்று தெளிவாகத் தெரிந்ததாலேயும் நான் காரை ஓட்டியிருக்கலாம்.

‘நிறுத்து!’ நிக்கி வீறிட்டாள். எனது பாதங்கள் அந்த மொடாக் குடிகார பிரேக் கட்டைகள் மீது பதிந்தன. கார் ஒரு குலுங்கு குலுங்கி நின்றது. வீட்டின் ஒரு கதவு திறந்தது; ஆடைகளும் தலைமுடிகளும் புகைய வெறுங்கால்களோடு ஒரு ஆணும் பெண்ணும் வெளியே வந்து விழுந்தனர். போலிப் பாலேட்டு நிறத் தம்ளரைப் பனிக்குள் எறிந்தவாறே நிக்கி காரிலிருந்து கசங்கிய தபேட்டாவும் உயர்குதிக் காலணிகளுமாகத் தடுமாறி இறங்கினாள். அவளைப் பின்தொடர்வதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லை. உறைபனி முற்றத்தில் கிடந்த அந்த மனிதர் அவமானத்தோடு மன்னிப்பு கோரி எங்களை உறுத்து நோக்கினார். அவர் வெறுங் கையாலேயே அந்தப்பெண்ணின் தோளில் புகைந்த கனலைத் தட்டிவிட்டார்; ‘‘வேண்டாம்…. அப்படிச் செய்யாதே….. பேபி… தளர்வாக’’ என்ற தொடர்பற்ற வார்த்தைகளோடு வெண்புகையையும் வெளியேற்றிக் கொண்டிருந்தார்.

அவரது சட்டைக்கைகளில் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. தீயின் நாக்கு அவரது முழங்கையைச் சுற்றிக்கொண்டு தலைமுடிக்கு நகர்ந்தது. அந்த ஜ்வாலை சக்தியைத் திரட்டிக்கொண்டு கொடிய நிறமும் வெப்பமுமாக வேகமெடுத்துப் பரந்துகொண்டிருந்ததைப் பார்த்து, நான் அணிந்திருந்த டக்ஸின் (டக்ஸ் – இரவுநேர உடை வகைகளில் ஒன்று) மேல் ஜாக்கெட்டை அவர் மீது விட்டெறிந்தேன். குளிரில் மரித்துப்போன புல்தரையிலும் பனித்திட்டுகளின்மீதுமாக தீ அணையும்வரை, அவர் கண்களில் தெரிந்த அதிபயங்கரப் பேய்க்கனல் தணியும் வரை அவரை உருட்டினேன். எங்கள் உதவியால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அவர் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அவர் முனகினார்,’ ‘ ப்ளீஸ், சிபிலைக் கவனியுங்கள்.’

அந்தப்பெண், சிபில், தரையோடு கூனிக்கிடந்தவள், வீட்டையும் அவளது மீட்பர்களாகத் தோன்றிய என்னையும் நிக்கியையும் குழப்பத்துடன் நோக்கினாள். கைவிரல்களின் கரித்தடங்கள் அப்பிய முகமாக இருந்தாலும், அவள் அந்த மனிதருக்கு முழுமையாகப் பத்து ஆண்டுகள் இளையவள் என்பதை என்னால் காணமுடிந்தது. அவள் அழகாகத் தோன்றினாள்; ஆனால் உடம்பு வயதை மீறிக் கெட்டிருந்தது. இது, புகை, விஸ்கி, மோசமான பாலுறவு, தவறான நம்பிக்கைகள், கெட்ட நடவடிக்கைகள், ஒலியளவைக் குறைக்கும் கருவி பொருத்திய தொலைபேசிகள், காசு போட்டு விரும்பிய பாட்டு கேட்கும் பெட்டிகளில் 60களின் காதல் பாடல்களை வைத்திருக்கும் கபேக்கள், அன்பில்லாத, அந்நியர்களுடன் வழிகெட்டு எவ்வித நோக்கமும் இல்லாமல் பெரும்பொழுதை வீணாக்கிய நேரங்கள் போன்றவற்றின் விளைச்சல். அவள் சுற்றியிருந்த போர்வை இந்தியாவில் நெய்தது. மயங்கும் கதிர் நோக்கியும் குருதிச் சிவப்பு நிலவைப் பார்த்தும் செந்தவிட்டு நிறக் கயோட்டி ஓநாய்கள் ஊளையிட்டன. ஏதோ ஒருநாளில் கயோட்டிகளும் குருதிச் சிவப்பு நிலவும் இருக்குமிடத்துக்குப் போய்வரத் திட்டமிட்டேன்; ஆனால் நிக்கிக்கு பாலைவனங்கள் என்றால் பயம். அவள் சொன்னாள், ‘’பாலைவனம் நமக்காக வைத்திருப்பதெல்லாம் தேள்கள், பாம்புகள், மாமிசம் உண்ணும் பறவைகள் தவிர வேறெதுவுமில்லை.’’

சிபில் கையில் பற்றியிருந்ததெல்லாம், ஒரு ரவிக்கை, ஒரு ஜோடி செருப்புகள், துயரம் தோய்ந்த இதழ் கொண்ட ஒரு பெண்ணின் புகைப்படம் பொருந்திய சட்டகம் ஆகியவைதாம். ‘‘இவ்வளவுதான் என்னால் முடிந்தது, கையை நீட்டினேன், அங்கே இருந்தது இதுதான்.’’ என்றாள், அவள்.

அந்த மனிதர் எழுந்து உட்கார்ந்தார். எரிந்ததின் மிச்சமாக அவரது சட்டை, வெள்ளைத்தோள்களையும், மார்பு என்னும் பெயரில் ஒரு எலும்புக்கூட்டுக் கம்பிச்சிறையையும் காட்டிக்கொண்டு, வார் வாராய்த் தொங்கியது. எங்களை நோக்கி எழுந்தவர், அங்கேயே இருப்பது நல்லதென்று நினைத்ததுபோல மீண்டும் அப்படியே தரையில் அமர்ந்தார்.

நாங்கள் நால்வரும் முழங்கால் புதையும் பனியில் அப்படியே நின்று வீடு தீயால் விழுங்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஹார்ன் ஒலி எழுப்பியவாறே கடந்து போகும் கார் ஒன்றின் சன்னலுக்கு வெளியே தலைநீட்டிய பதின் பருவத்து இணை ஒன்றின் ரோஜாச்சிவப்பு முகங்கள் ஓவல்டின் மாவில் செய்யப்பட்டது போலவும் பையன்களின் பாவனை பொருந்தியுமிருந்தது. அந்த நடுமேற்கு விவிலியப் பள்ளி முகங்கள் காலத்தையும் நேரத்தையும் நினைவூட்டி அது வேறு வகை வாழ்க்கை எனச் சுட்டியது. அவர்களை நோக்கி, ‘‘ நாங்கள் மருத்துவ மனைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.’’ எனக் கத்தினேன், ஏதோ நாங்கள் அங்கேதான் போவதாக எனக்குத் தெரிந்தது போல.

நாங்கள் காரில் போய்க்கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் மிகக்கடுமையாகத் தீப்புண்பட்டிருக்க வேண்டுமென நான் உணர்ந்தேன். முதலில் அது ஒருவித நாற்றமாக என்னை வந்தடைந்தது. நேரம் செல்லச்செல்ல அதிகமான அபினியின் வாடை, ஒருவிதமான இனிப்பும் பூச்சிமருந்தின் வாடையும் கலந்து என் மூக்கைத் துளைத்தது. நிக்கி சன்னல் கதவை இறக்கினாள்; அவள் கண்கள் விரிந்து ஆடையின் முன் பக்கம் ஏதாவது கறையிருக்குமோ எனத் தேடின. ஆனால், அது அழுக்கா அல்லது உறைந்த இரத்தத்தின் கறையா? எங்களில் யாருக்கும் இரத்தக்காயம் இல்லை; அப்படிக் கற்பனை செய்யக்கூட முடியாது.

‘‘ நாம் எல்லோரும் நன்றாகத்தானே இருக்கிறோம்?’’ – நிக்கியின் கேள்விக்கு யாரும் பதில் அளிக்கவில்லை. ஒரு ஆறுதலுக்காக அவள் கையை என் தொடை மீது வைத்தாள் என நினைக்கிறேன்; அதே இடம், அதே மாதிரி, திருமணத்துக்கு முன் அந்தக் கடைசி நேர இறுக்கமான கணங்களில் லிண்டா தன் விரல்களைப் பதித்தாளே, அதே போல. என்னவென நான் கேட்டதற்கு, ‘‘ஒன்றுமில்லை, எல்லாம் சரியாகிவிட்டது’’ என்ற நிக்கி, கையை இழுத்து அவளின் மடிமீது வைத்துக்கொண்டாள்.

ஒருவேளை, நான் அவளைப் புரிந்துகொள்ளவில்லை எனக்கருதி அப்படிச் செய்திருப்பாளோ என நான் உக்கிரமாகச் சிந்தித்தேன். இப்படியுமிருக்கலாம், நாங்கள் ஒருவரையொருவர் நன்கறிவோம், ஆனால் ஒருவிதத் தவறு உள்நுழைந்துவிட்டது.

பின்னாலிருந்த அவர், ‘’என் பெயர் கூப்பர்’’ என்றார்.

அவர் சிபிலுக்கு மிக அருகில், துவண்ட தலையை அவள் தோளின் மீது சாய்த்து, அமர்ந்திருந்தார். இதுவே போதாதா? அவர்களுக்கிடையிலிருந்த இருண்ட இடைவெளியை இல்லாமல் செய்யாதா என நீங்கள் என்னைக் கேட்பீர்களானால், ஒரு பயனும் இல்லை என்பேன். சிபில், அவளுடைய பாலைவனப் போர்வைக்குள் நடுங்கிக்கொண்டிருந்தாள். அதனால் ஒரு சிறிய வருத்த உணர்வோடு அந்த ஜாக்கெட்டை கூப்பர் மீது எறிந்தேன்; அவரைக் காப்பாற்றப் பயன்பட்டதே அதுவேதான்! அது வாடகைதான், ஆனால், இப்போது முக்கியமும் மதிப்பும் வாய்ந்த முதலீடு ஆகிவிட்டது. அவர் அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அதன் கழுத்துப்பட்டையில் ஆழ்ந்து மூச்சிழுத்தார்.

‘’முழுவதுமாக எரிந்துபோனது.’’ என்ற சிபில், ‘’ இது மாதிரி எந்த இடமும் மொத்தமாக எரிந்துவிடாது.’’ என்றாள்.

‘’வீடுகளுக்கு கோபம், தாபம் எல்லாம் உண்டு’’ கூப்பரின் வாய்க்குள் தடுமாறிய வார்த்தைகள் திரிந்து ஒலித்தன. ‘’ அவற்றை எப்போதுமே அழியாமல் பார்த்துக்கொள்வது முடியாதது. வேண்டுமானால் நாம் எதற்கும் முன்கூட்டியே தயாராக இருக்கலாம்.’’

‘’நாங்கள் பின்பக்க அறையில் இருந்தோம்,’’ என்ற சிபில், ‘’ அந்தக் கட்டிலில்’’ என்றாள்.

யாரோ ஒருவரின் கரங்களுக்குள் அடைபட்டுவிட்ட, ஆனால் எந்த நேரமும் உடைத்துக்கொள்கிற அமைதியின் ஊடாகக் கார் ஓடிக்கொண்டிருந்தது. எங்களைத் திணறடிப்பதற்கென்றே பனித்திவலைகள் காற்றுத்தடுக்கும் கண்ணாடியில் படிந்து வழிந்தன. எனக்குள்,‘’ ஆண்களையும் பெண்களையும் ஜோடி சேரவைக்கும் வழிவாய்ப்புகள் தாம் எத்தனை, எத்தனை? அவை எப்படி எப்படியெல்லாம் ஏற்பட்டுவிடுகின்றன!’’ எனச் சிந்தனை ஓடியது. புகைத்திருந்த மரிஜுவானாவின் வாசம் என் மூச்சில் இழைந்தது. ‘’மருத்துவமனையின் பேரைச் சொல்’’ என்றேன், நான்.

‘’மருத்துவமனை பற்றியா? யார், என்ன பேசியது?’’ – கூப்பரின் அவசரக் கேள்வி.

நல்லதொரு மௌனத்துக்குப் பின், நிக்கி, ‘’ என்ன சொன்னீர்கள்.’’ என்றாள்.

‘’அவர் சொல்வதைக் கேட்காதீர்கள், ஆர்லினை இழந்ததிலிருந்து, மருத்துவமனைகள் எல்லாமே மரணத் தொழிற்சாலைகள் என அவர் நினைக்கிறார்.’’ சிபிலிடம் சாம்பல், மக்காச்சோள உமி, கன்றிச் சிவந்த செர்ரிக் கந்து எல்லாம் கலந்த ஒரு வாசமிருந்தது.

‘’எய்லீன். அவளை உனக்குத் தெரியாது. அதனால் இது மாதிரியெல்லாம் பேசக்கூடாது. எனக்கு என்ன வேண்டுமென்பதை இப்போது சொல்கிறேன், கேட்டுக்கொள்.’’ என்று சிபிலுக்குச் சொன்ன கூப்பர், என்னிடம் தொடர்ந்தார். ‘’இப்படியே ஒருசில மைல்கள் போனால், ஒரு தேவாலயம் வரும். அதில்தான் எனக்கு ஞானஸ்நானம். எய்லீனைத் திருமணம் செய்ததும், அவளைப் புதைத்ததும் கூட அங்கேதான். சில விஷயங்கள் உங்களிடம் திரும்பத் திரும்ப வரும். அவள் போய்ச்சேர்ந்தபோது, மிகவும் இளையவள். மரணம் என்பதைப் புதிராக்குகிற விஷயம் அதுதான். நான் சிபிலுக்கு அந்தப் ‘பங்குமேடை’, ‘கறைக்கண்ணாடி’, எல்லாவற்றையும் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறேன்.’’

‘’இப்பொழுது?’’, நான் ஏதோ ஒன்றை நினைவுக்குக் கொண்டுவர முயன்று மிதந்துகொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்கு முன்னால் எரிந்ததே அந்த நெருப்பு, அல்லது இன்னும் ரொம்ப நாட்களுக்கு முன்பாக, இன்னும் முன்பாக என்று கடைசியாக நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பசு ரத்தம் பீறிட்டுப் பனியில் கிடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்ததற்கு வந்து சேர்ந்தேன். அந்த விவசாயி சொன்னார், அந்தப்பசுவுக்கு மிகவும் வயதாகிவிட்டது, காற்றில் உருண்டு, முட்கம்பி வேலியில் சிக்கி, ஊதிப் பெருத்த ஒரு கோணியை, அந்தப்பசு அதன் கிழட்டு மந்தபுத்தியினால், முன்னர் ஈன்று இறந்துபோன அதனுடைய நொண்டிக்கன்று என நினைத்து அதற்குள் போய் மாட்டிக்கொண்டது; தப்பித்து வெளியேவரப் போராடிக் கடைசியில் தன்னையே கிழித்துக்கொண்டது. என்ன நடந்ததோ, அந்த விவசாயி சொன்ன விளக்கம் அதுதான். அவரே வயதானவர்தாம்; அவரிடமிருந்து ஸ்காட்ச்சும் ஒருவித அழுகிய பிணநாற்றமும் வீசியது. தனியாகக் கனவு கண்டால் உண்மையும் போலியும் ஒன்றாகத்தான் தெரியும் என்று அவருடைய ஒழுங்கற்ற, கறைபடிந்த பற்களுக்கிடையே கரகரத்தார். அவர் பசுவுக்குப் பேரின்ப அமைதி கிடைக்கட்டுமென்று சொல்லி, மெல்லத் தடவிக் கொடுத்துவிட்டு, ஒரே முறை சுட்டார்; எங்களைச் சுற்றிலும் பனிப்புகை கிளம்பியது. ‘’இது உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டு அந்த விவசாயி, அவர் வந்த திசைக்கு எதிர்த்திசையில் நடக்க முடியாமல் நடந்து சென்றார்.

‘’அது ஒரு அழகான தேவாலயம்’’ கூப்பர் இப்போது தொடர்ந்தார். ‘’நாங்கள் எல்லாநாட்களிலும் காலையில் தேவநற்பாடல்களைப் பாடிக்கொண்டு அங்கே உட்கார்ந்திருப்போம்; திருமறைகளைக் கேட்டு, திராட்சை அப்பங்களை உண்டுவிட்டு இறந்தவர்களைப் புதைப்போம், வயதானவர்கள், இளையவர்கள் எல்லோரையும்தான்.’’

அவரது சொரசொரப்பான கரங்களால் சிபிலின் மணிக்கட்டு நரம்புகளைத் தடவிக் கொண்டிருந்தார். அவரது பெருவிரலை வாய்க்குள் வைத்து ஈரப்படுத்தி அவள் கண்களுக்குக் கீழே ஒட்டியிருந்த கரியைத் துடைத்தெடுத்தார். அவள் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி, அவரை உறுத்து நோக்கினாள்; ஆனால் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளவில்லை. நிக்கி காருக்குள்தான் இருக்கிறாளா என்று கணநேரச் சந்தேகம் தலைதூக்க, நான் அவளைப் பார்த்தேன். சாலையைத் தழுவிக்கிடந்த ஓக்மரப் பள்ளத்தாக்கின் ஊடாகக் காரை ஓட்டிச் சென்றேன். மரணித்துவிட்ட அந்த ஓக் மரங்கள் வெட்கம் கெட்டு, ஏதோ உயிருள்ளது போலத் தம் ஈட்டிக்கிளைகளை அசைத்துக் கொண்டிருந்தன.

‘’நாம் அதை ஒத்துக் கொள்கிறோமா, என்ன?’’ நிக்கி வினவினாள். ‘’ ‘’அப்படியெல்லாம் இல்லை’’ என்றேன். ஆனால், அதுவே உண்மையென்று நான் முழுமையாக நம்பிவிடவுமில்லை; வானொலியைத் திருகினேன். தி டோர்ஸ், ‘’புயலின் மீதேறிச் செலுத்தும் வீரர்கள்’’, எல்லாவற்றையும் ஒருகணத்தில், திருப்பி, மாற்றித் தெளிவற்றதாக, மிகமிகக் கனமான பொருள் செறிந்ததாகச் செய்துவிட்டது. அதனை யாரால் புரிந்துகொள்ள முடியும்? யாரால்தான் மொழிபெயர்க்க முடியும்?

‘’என் கடவுளே,’’ என்ற சிபில், ‘’ கூப்பர், உங்கள் கைகளைப் பாருங்கள்.’’ என்றாள், அதிர்ச்சிக் குரலில்.

நான், என் கண்களாலேயே பார்த்தேன், அவரது கைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு மணிக்கட்டு, பின்கை, முழங்கை என வேகவேகமாக அமிலத்தைப் போலப் பரவியது. நான் மூச்சுவிட மறந்தேன்; நெஞ்சுக்குள் கற்பாறை ஒன்று அழுத்துவதுபோலிருந்தது. கொப்புளங்கள் ஒருநிமிடம் போல் மறுநிமிடம் இல்லை; பருத்துப் பெரிதாகிக்கொண்டிருந்தன. இது போன்ற கணங்கள் எந்த ஒரு மனிதனையும் அசைத்து, பழங்காலக் கதைகளில் வரும் புனிதர்களின் உள்ளங்கைகள் கடவுளின் கீர்த்திக்காக வெடித்துக் குருதி பீறிடும் கதைகளையும், இருண்ட யுகத்துக் துறவுக்கன்னிகள் வலுவிழந்த தங்கள் நெற்றிகளின் மீது இயேசு கிறித்துவின் கரங்கள் பதிவதாகக் கனவுகண்டதும் அவர்களின் உடல்கள் படுக்கையிலிருந்தும் மேலெழும்பிக் காற்றில் மிதந்ததான கதைகளையும் நம்புமாறு செய்துவிடுகின்றன.

கூப்பரை முழுதும் கவனிக்க முடியவில்லை; சாலையின் மீது கவனம் பதிக்க வேண்டியிருந்தது; கார் ஓட்டுவதற்கே வெறுப்பாகத் தோன்றியது. வேகத்தைக் கூட்டினேன். ‘’ ஹையா!’’ புனித ஜோசப் மருத்துவமனை, இடது பக்கம் எனக்காட்டி, ஆளரவமற்ற குறுக்குச்சாலை ஒன்று என் முன்னால் திரும்பியது.

‘’தேவாலயம், வலது பக்கம்,’’ கூப்பர் முந்திச் சொன்னார். ‘’ மருத்துவ மனை ஒரு பொறிதானென்று உங்களுக்குத் தெரியவில்லையா?

‘’ஒரு பொறி!’’ நான் திருப்பிச் சொல்லிவிட்டு ‘’நிக்கி,’’ என்று கிசுகிசுத்தேன். அவள் காரின் கதவு டபக்கென்று திறந்துவிடும்போல அதனைக் கிடுக்கிபோட்டு இறுக்கிக்கொண்டு, ‘’இடதுபக்கம்’’ என்றாள். ‘’ ஆமாமாம், இடதுபக்கம்,’’ என்றேன், நான்.

இடது பக்கம் திரும்புவதில் என் கவனத்தைச் செலுத்திக் கைகளை இயக்கி வளைத்தேன். அது எங்களைத் திடீரென மரக்கூட்டத்திற்கு வெளியே மிதித்துத் துவைத்த சோளத்தட்டைத் தீவனக்குழிகள் நிறைந்து கிடந்த உறைபனி வயலுக்குள் கொண்டு செலுத்தியது. பத்துப் பன்னிரண்டு கறுப்புப் பறவைகள் வானத்தை நோக்கி எழும்பிக் காரின் மேலாகச் சிறகடித்தன; அது எனக்குள் புதிய நம்பிக்கையை, ‘என்னவானாலும் சரி’ வகைப்பட்ட இனந்தெரியாத உணர்வை நிரப்பியது. நான் சப்தமாகச் சிரித்தேன்; கழுத்துப் பட்டைச்சுருக்கைத் தளர்த்திக்கொண்டேன்; விரக்தியின் முடிவில் உறுதியோடு துணிவும் தோன்ற, கட்டுப்பாடற்ற கானக மகிழ்ச்சியை உணர்ந்தேன்; வேறொன்றுமில்லை; நான் திரும்பிய திசையைக் கூப்பரோ, சிபிலோ கவனிக்கவில்லை என்பது தான். என் நிழலைக்கூடப் பதிக்காமல், நான் எவ்வளவு நேரம் செல்ல முடியும்?

‘’என்ன வேடிக்கை?’’ நிக்கி வினவினாள். நான் தோள்களைக் குலுக்கிக் கொண்டேன்; பிறந்த நாள் கேக் போல என் தலை மிருதுவாகியிருந்தது. ‘’இவற்றிலெல்லாம் என்ன வேடிக்கை இருக்கிறதெனச் சின்னதாக ஒரு குறிப்பினைத் தெரிந்துகொள்ள எனக்கும் ஆர்வம்தான்.’’

‘’இப்போது நீங்கள் நீலமாகிக்கொண்டிருக்கிறீர்கள்,’’ என்றாள், சிபில்.

இரண்டாவது நிறமாற்றம் கூப்பரின் இடது நெற்றிப்பொட்டிலிருந்து கன்னத்திற்கு இறங்கி கழுத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு V வடிவத்தை ஏற்படுத்தியது. அவரது முகத்தின் இடது பக்க மேற்புறத் தோல் எங்கள் கண் முன்பாகவே வெவ்வேறு நுண்சாயல்களில்’சிலநேரங்களில் வாழ்க்கையின் புதிர்களை எரிவாய்வுக்கசிவினாலும் தீப்பற்றவைக்கும் கருவியினாலும் விளக்கிவிட முடியாது.’’ என்று முணுமுணுத்த கூப்பர் என்னுடைய கைகளில்லாச் சட்டையைத்தான் போர்த்துக்கொண்டிருந்தார். மீண்டும், அவர், ‘’ இது வேடிக்கைதான், இந்தப் பாதை தேவாலயத்துக்குப் போகுமென்ற நினைப்பே எனக்கு வரவில்லை.’’ என்றார்.

முன் எச்சரிக்கை எதுவும் தராமலேயே, பனிப்புயல் காருக்குள் நுழைந்தது. முன்புற விளக்குகளின் முன்பாக படப்பெட்டிமீது படிந்திருக்கும் சாம்பல் நிறத் தூசியெனப் பனி படர்ந்தது. உடனேயே பார்வை மறையுமாறு குப்பைத்தொட்டி நிற வெண்படலம் ஒன்று சாலை முழுதுமாகக் கடந்தது. பூமி வெடித்துத் தூக்கியெறியப்பட்டது போலக் கார் குலுங்கியது. காற்று, உறைந்துபோன சன்னல் கண்ணாடிகள் ………….. கூப்பர் திடீரென நிமிர்ந்து உட்கார்ந்தார்; அடையாளம் காணமுடியாத அவருடைய கைகளைப் பீதியோடு நோக்கினார். ‘’ எங்களை எங்கே கொண்டுபோகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

ஈரம் கொட்டும் பனிப்பொழிவினூடே மருத்துவ மனை ஒருவழியாகக் கண்ணில் தெரிந்தது. இரண்டு அவசர ஊர்திகள் ஏனோதானோவென நிறுத்தப்பட்டிருந்தன. அதில் ஒன்றின் பின் கதவுகள் விரியத் திறந்து கிடந்தன. எதனுள்ளும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘’ இதுவல்ல, நாங்கள் போகச் சொன்ன இடம்! உங்களைப் போய் நம்பினோமே!, நாங்கள் சொன்ன இடம் இது இல்லை.’’ என்றார், கூப்பர்.

காரைப் பக்கவாட்டில் நிறுத்துவதற்காகத் திருப்பும்போது, கூப்பரின் கண்டனங்கள் என் காதுகளில் மோதின. கூப்பர் சிபிலின் பக்கமாகத் தடுமாறிக் கொண்டிருந்தார்; அவர் பக்கத்திலும் திறக்கும்கதவு ஒன்று இருப்பதை மறந்திருப்பாரென நினைக்கிறேன். நான் காரை முழுதுமாக நிறுத்தும் முன்பாகவே, அவர் சத்தமின்றி இறங்கி, ஒரு பனிக் குவியலில் முழங்காலிட்டு நின்றார்; முகம், முழங்கைகள், கொப்புளம் வெடித்த இடங்கள் எல்லாவற்றிலும் திடீரெனப் பற்றிக்கொண்ட நெருப்பு மாதிரியான எரிச்சலில் பனியை வாரி இறைத்துக் கொண்டார்.

கூப்பரின் பின்னாலேயே நாங்களும் இறங்கினோம்; ஆனால், வெளிக்காற்று பட்டதும் உடலை முறுக்கிப் பனி பொழியும் திட்டிலேயே சிறிது நின்றோம். சிபில் கூப்பரைப் பார்க்கவில்லை; என்னை நோக்கினாள். குளிர் காற்றினால் அவள் கண்கள் வீங்கிச் சிவந்து தோன்றின. அவள் பனிக்குத் தாக்குப்பிடிக்காத சாதாரணக் காலணியில் இருந்தாள்; இன்னும் அந்த ரவிக்கையையும் படத்தையும் பற்றிக் கொண்டிருந்தாள்.

என்னைப் பொறுத்த வரையில், இந்த இணையிடமிருந்து ஏதோ ஒன்றை நிச்சயமாகப் பெற்றுவிடும் துடிப்பிலிருந்தேன்; ஆனால் மருத்துவமனை கண்ணில் பட்டதுமே, அது மங்கி, அடையமுடியாத ஒன்றாகி விட்டது.

கூப்பரின் இரு கைகளையும் பக்கவாட்டிலேயே இருக்குமாறு செய்து அவனர மெதுவாகத் தூக்கி நிறுத்தினேன்; என்மீது சாய்ந்து அருள் வந்தவன் அல்லது பேய் பிடித்தவன் போல நடுங்கினார்; அவரது எலும்புகளும் தசைகளும் எதிரெதிராக இயங்கின; உடல் கொதித்தது. என் மூளைக்குள் ஒரு மின்னல்; அதுவாகவே தன் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு லபலபவென அடித்துக்கொண்டது. உள்ளிருந்த அழுத்தத்தை என் கரங்களாலேயே நீவி, வெளிப்படையாகத் தெரிவதைத் தாண்டி ஒரு பெரும் இச்சை வாழ்வு இருப்பதை ரகசியமாக உணர்த்தினேன். ஆனாலும், ’நிறுத்து!’’ என்றேன், வாய்மொழியாக.

‘’என்னால் உள்ளே வரமுடியாது.’’ சிபில் என் கையைப் பற்றி, ‘’நான் இங்கேயே உனக்காகக் காத்திருக்கிறேன்.’’ என்றாள்.

‘’அதெல்லாம் முடியாது,’’ என்ற நிக்கி, ‘’நீயும் தான் சோதனை செய்துகொள்ள வேண்டும்.’’ என்றாள். சிபிலின் பின்னாலிருந்து நிக்கி ஒரு கையால் இடுப்பைச் சுற்றி வளைத்துக்கொண்டாள்.

இப்படியாக நாங்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பிணைத்துக்கொண்டு, நெஞ்சுக்குள் உறைபனியைச் சுவாசித்துக்கொண்டு சிறிது நின்றோம்.

கூப்பரைச் சக்கர நாற்காலியில் அமர்த்தி வித்தியாசமாகத் தனிமைப்பட்டு நின்ற அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் உருட்டிச் சென்றார்கள். படிவங்களில் கையொப்பம் பெறுவதற்கென்று வேறொரு அறைக்குள் சிபிலை இழுத்துக் கொண்டார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், சக்கரம் பொருத்திய சோதனைப் படுக்கை மேஜைகள், சுருக்கமான உத்தரவுகள் என முன்னும் பின்னுமாகச் சிறிய பரபரப்பு இருந்தது. அது அடங்கியபின் பார்த்தால், நானும் நிக்கியும் கைவிடப்பட்டு, ஒரு நடுஹாலில் கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளுமாய், காட்சிப்பொருளாக நிற்பதுபோலத் தோன்றியது. தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்த ஒரு துப்புரவாளர் துடைப்பக்கோலின் துணிப்பகுதியை வாளிக்குள் முக்கியவாறே எங்களை, மகிழ்ச்சியின்றி நோக்கினார். நான் வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டேன். தலைக்கு மேலிருந்த வெளிச்சம் மிகமிக அதிகம்; இப்படி எல்லாவற்றையும் முழுதாக வெளிச்சமிட்டுவிட்டால், நம்மில் எவரொருவரும் ஏதாவது ஒரு தெளிவோடு, அனைத்தையும் கண்டுவிட மாட்டோமா?

நான் ஒரு சிறிய மெத்தை நாற்காலியில் அமர்ந்தேன். துப்புரவாளரைத் தாண்டி ஒரு பிரார்த்தனைக்கூடமும் குளியலறையும் இருந்தன. ஆண்,பெண் இணை ஒன்று கூடத்துக்குள் சென்றது. அவளைப் பற்றிக்கொண்டு ஒரு கூனல் பெண்ணும் சென்றாள். ஒரு கணம் கடந்தது. அந்த இணை மட்டும் திரும்பி வந்து கடந்து சென்றனர். நான் அணிந்திருந்த சட்டையைக் குனிந்து நோக்கினேன். அது என்னுடையதல்ல. பீட் அதை எனக்குக் கடனாகத் தந்திருந்தான். அவன் திருமணத்தின் போது, நான் பொருத்தமான சட்டை அணியவேண்டியதன் முக்கியத்துவத்தை அவன் வலியுறுத்தினான். அந்தப் பொருத்தமான சட்டை அவனிடமே இருந்தது. இப்போதும் அந்தச் சட்டைப் பின்னல்களின் மணம் பீட்டை நினைவுபடுத்துகிறது.

நான் நிக்கியை ஒரு மருத்துவமனையில் தான் சந்தித்தேன். ஒரு கார் விபத்தில் என் முழங்கால் மூட்டினை உடைத்துவிட்டிருந்தேன். அவள் ஒரு செவிலியின் உதவியாளராக இருந்தாள். அந்தத் தலைமைச் செவிலி என் காலில் ஒரு சூடான ஊசியைக் குத்தி ஏற்றியபோது நான்,’’ நீ என்னைக் கொல்கிறாய்!’’ என்று கத்தினேன், நிக்கியைப் பார்த்து. அப்போது அவள் அறை முழுதுமுள்ள தலையணைகளைத் தூசுதட்டி உறைமாற்றிக் கொண்டிருந்தாள்.

பாருங்கள், ஒரு மருத்துவமனை மனிதனின் சிந்தனையில் என்னென்ன செய்துவிடமுடிகிறது! எல்லாம் அந்தத் தவறான வெளிச்சம்.

நிக்கி பேசுவது போல் ஒரு உணர்வு; பார்வையை மேலே உயர்த்தினேன். அவள் ஒரு பையனைப்போல் தோன்றிய மருத்துவரைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவர் தன்னம்பிக்கையோடு பளபளக்கும் ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவப் பரிசோதனையின் போது அணியும் மேலாடையில் இருந்தார். அவர் இத்தாலியராக அல்லது கிரேக்கராக இருக்கலாம். பாகுபடுத்திக் கண்டுபிடிக்கும் நிலையில் நான் இல்லை. எப்படியானாலும் அவர் ஒரு கறுப்புநிறமான அயல்நாட்டவர். அவர் நிக்கியிடம், ‘’ நீங்கள் அவருடைய மனைவியா?’’ எனக் கேட்டார்.

‘’அந்த வழியில் வந்தோம்’’ என்றேன், நான். மருத்துவர் என் மீது ஒரு பார்வையை வீசினார். அதில் நீ எந்த மாதிரியான ஆளென்று எனக்குத் தெரியாதா என்ற பொருள் பொதிந்திருந்தது. ‘’ அது உண்மையாக இருக்கலாம்.’’ என நிக்கியிடம் சொன்ன மருத்துவர், ‘’ இருந்தாலும், நீங்கள் அவரது நிலையைத் தெரிந்துகொள்வதில் அக்கறை கொள்ள மாட்டீர்களா?’’ எனக் கேட்டார்.

நிக்கி என்னைப் பார்த்தாள்; தோளைக் குலுக்கி, மருத்துவரைத் தொடர்ந்து அறையைக் கடந்தாள். இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்டதாக நான் உணர்ந்தேன். கூப்பரின் சிகிச்சை விசாரணையில் என்னைத் தவிர்ப்பதற்கான காரணம் எதுவும் எனக்கு விளங்கவில்லை. அவசரப் பிரிவின் கதவுகள் விரிந்து திறந்தன; சரியாகத் தேய்க்கப்படாத வெள்ளை ஆடைகளிலிருந்த இரு செவிலியர் கூப்பரை ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடத்தித் தள்ளிக்கொண்டு வந்தனர். அவர் அப்போதும் விழித்திருந்தார்; ஆனால் உள்ளிருக்கும் கனலின் ஒளிச்சிதறலை அவர் கண்களில் காணவில்லை. இப்போது அவர் மருந்திடப்பட்ட பழைய நபர்; ரொட்டியைப் போல எந்தவியப்பும் ஏற்படுத்தாத, சாதாரணமாகிப் போனார்.

‘’அவரை எங்கே கொண்டு போகிறீர்கள்?’’ நான் அந்த இளைய செவிலியைக் கேட்டேன். எனக்கும் பங்கிருப்பதை இப்படியாவது காட்டிக்கொள்ளத் தீர்மானித்தேன்.

‘’நெருப்புக் காயங்கள் பிரிவு’’ என்ற அவளின் தலைமுடி அலங்காரக் கிளிப்புகளால் ஒளிர்ந்தது.

‘’என் மனைவி இந்த மருத்துவமனையில்தான் இறந்தாள்.’’ என்ற கூப்பர் ‘’அவளுக்கு ஒரு தொல்லையான இதயம் இருந்தது. உங்கள் மருத்துவர்களால் அவளை மீட்டுக் கொண்டுவர முடியவில்லை.’’ என்று குறைப்பட்டார்.

‘’நாம் அற்புதங்களை எதிர்பார்க்கக் கூடாது.’’ வயதில் மூத்தவளும் சோர்ந்த முகத்தவளுமான செவிலி அறிவுரைத்தாள்.

அவர்கள் அறையைக் கடந்து கூப்பரைத் தள்ளிச் சென்றனர். நான் பின்தொடர்ந்தேன்; யாராவது ஒருவர் உடனிருக்க வேண்டுமே என்பதற்காக மட்டுமல்ல; நான் இன்னும் அவரை விட்டுச் செல்ல விரும்பவில்லை; காரில் எங்கள் நால்வருக்கிடையே நிலவியிருந்த உறவினை, அது எத்தகையதாக இருந்தாலும், ஏற்கெனவேயே தவறவிட்டிருப்பதாக உணர்ந்ததாலும் தான்.

‘’நான் உங்களுக்கு அற்புதங்களைப் பற்றிச் சொல்கிறேன்,’’ என்ற கூப்பர், ‘’ நானும் சிபிலும் ஒருவரையொருவர் எப்படிக் கண்டடைந்தோம் என்பதில் ஓரளவு அற்புதம் இருக்கிறது.’’ என்றார்.

அவள் பெயரை, அவரே உச்சரித்ததும் விதிர்ப்புற்றார். ‘’ அவள் எங்கே?’’ என்றார். யாரும் பதில் சொல்லவில்லை; அவர் என் சட்டையின் கைத்தொங்கலைப் பிடித்து இறுக்கி இழுத்தார்.

‘’பெயர் சேர்க்கை மேஜை,’’ என்றேன்.

‘’திருட்டுப் பையா.’’ என்றவர், எழுந்து உட்கார்ந்து அவரது முகமிழந்த கைகளால் என் தொண்டையை நெரித்துக் கூழாக்கி விடுவாரோ என, ஒரு கணம் பயந்தேன். ‘’ நீ என்னை முட்டாளாக்கவில்லையே!’’ என்றார்.

அவருடைய கோபாவேச வார்த்தைகள் தணிந்தன. சக்கரப் படுக்கையில் சாய்ந்தார். செவிலிகள் அவது கைவிரல்களைப் பிரித்தெடுத்தனர்; ஒரு சந்தர்ப்பத்தில் அவரை இழுத்து ஒரு மூலையில் விட்டுவிட்டுக் கிளம்பிப் சென்றுவிட்டனர். திருடன்? என் முன்கையைப் பார்த்தேன்; அதில் பதிந்திருந்த அவரது கைப்பிடித் தடங்கள் மெல்ல மறைந்துகொண்டிருந்தன. நான் மீண்டும் அவசரப் பிரிவுக்குச் செல்லும் ஹால் வழிக்குத் தலைகுனிந்து நடந்தேன். சிபில் ஒரு மெத்தையிட்ட இருக்கையில் அவளுடைய போர்வையின் அந்திம காலத்துக்குள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் முகத்திலிருந்த கரி துடைக்கப்பட்டிருந்ததால் இயற்கையான தோற்றம் மீண்டிருந்தது; ஆனால் துயரம் மாறியிருக்கவில்லை. ‘’கூப்பர் தீக்காயப் பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டார்.’’ என்றேன், நான்.

அவள் போர்வையில் பிரிந்திருந்த நூலை இழுத்தெடுத்துக்கொண்டே தலையாட்டினாள். ‘’ நாங்கள் திருமணம் செய்யவில்லை.’’ என்றவள் மீண்டும், ‘’நான் அவரோடொன்றும் இருக்கவில்லை, நீங்கள் கேட்பதால் தான் இதைச் சொல்கிறேன்.’’ என்றாள்.

ஹாலின் நடுவில் மருத்துவர் அப்போதும், நிக்கியுடன் பேசிக் கொண்டிருந்தார்; அவருடைய தடித்த இதழ்கள் சப்தமற்ற வார்த்தைகளை உருவாக்கிக்கொண்டிருந்தன. அது ஒரு விலைமாது மகனின் மொழியென நான் நினைத்தேன். கசப்புணர்வு கொள்ள எனக்கு மட்டும் உரிமை கிடையாதா? அவனுக்குப் பெண்மையின் மேடுகளை உரசப் போதுமான வயதாகியிருந்தது. அந்த மனிதன், என் காதில் கேட்காத அளவுக்கு நிக்கியிடம் பேச என்ன இருக்கிறது? ஆனால், இந்த நிக்கி, அவன் வார்த்தைகளில் அப்படியே மயங்கிவிட்டாளா, அவளின் திடீர் நெளிவு என் கவனத்தில் உறைத்தது.

‘’நான் எதற்காக இங்கு இருக்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை.’’ குரலைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமென்ற அக்கறையில்லாமலேயே சிபில், பேசினாள். ‘’அந்த மனிதரோடு நான் எப்படிப்போய்ச் சேர்ந்தேனென்று எனக்குத் தெரியவில்லை.’’

‘’காதல் கொண்டிருப்பீர்கள்’’

‘’இல்லை, அது அப்படி இல்லை.’’ சிபில் தடுமாற்றத்துடன் பிரார்த்தனைக் கூடத்துக்குள் சென்றாள்; அவள் ரவிக்கையை எடுத்துக்கொண்டாள்; ஆனால் அந்தத் துயரந்தோய்ந்த இதழ்ப் பெண்ணின் படத்தை விட்டுச் சென்றாள். காதல் – எதைக் குறிப்பிட்டு அப்படிச் சொன்னேன்?

அவள் விட்டுச் சென்ற புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே பிரார்த்தனைக்கூடத்துக்குள் நுழைந்தேன். அந்தக் கணத்தில் சிபிலின் தோள்களிலிருந்த போர்வை ஏதோ எதேச்சையாக நிகழ்ந்ததுபோல நழுவித் திகைக்கவைக்கும் வெளிறிய முதுகை அழகான வரிசையில் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட மூச்சுக்குழல் போன்ற தண்டுவடத்தோடு காட்டியது. அவள் தோள்களில் மகரந்தத்துகள் போலச் சிதறிக் கிடந்த செங்கருநீலப் பருக்கள் நான் நினைத்ததைவிடப் பருமனாக உருண்டிருந்தன. என் பார்வைக்கும் கீழாகப் போர்வை தொய்ந்து நடுக்கமுற்றுக் கடைசியில் சொரசொரப்பான தரையில் விழுந்த நொடிப்பொழுது அவள் உள்ளாடையோடு நின்ற காட்சியை, தண்டுவடம் கீழிறங்கி முடியும் அழகை என் கண்கள் சிறைப்பிடிக்கப் போதுமானதாக இருந்தது. அவள் ரவிக்கையை நழுவவிட்டு, மெல்ல நிதானமாகப் போர்வையில் தன்னைச் சுற்றிக்கொண்டபோது மிகமிகக் குறிப்பிடத்தக்க ஒன்றைப் பார்த்துவிட்ட உணர்வுக்கும் தேவாலயத்தில் ஒரு நிர்வாணப் படக்காட்சியைக் காண்பதில் ஈடுபட்டுவிட்ட உணர்வுகளுக்கும் மத்தியில் அல்லல்பட்டுப்போனேன்.

அவள் என் முகம் நோக்கித் திரும்பினாள். எனக்கு என்னையே என்ன செய்வதென்று தெரியவில்லை. என் கைகளை ஏதோ மாயமந்திர அறுவைசிகிச்சை செய்து என் உடலோடு ஒட்டிவிட்டதான உணர்வு. தேவாலயம் மிகக் குளிராக இருந்தது; என் இரு கைகளையும் சேர்த்துத் தேய்த்துக்கொண்டேன். அந்தநேரத்தில் அதாவது முடிந்ததே! முன்புறத்தில் ஒரு வெல்வெட் திரை, கடவுளின் திருக்குமாரனின் பாதங்களை ஒரு பெண் தன் விரிந்த நீலநதிக் கூந்தலால் நீராட்டுவதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. அக்காட்சி பக்தியைவிட வேட்கையைத் தூண்டுவதாக இருந்தது; கிறிஸ்துகூட வீழ்ந்துவிட்ட மனிதர்களை மீட்பவராகக் காட்சிப்பட்டதற்கும் மேலாக ஒரு வெட்கப்படும் காதலனாகவே தெரிந்தார். நினைத்துப் பார்த்தேன், நிக்கி அவள் கூந்தலால், என் பாதங்கள், கைகள், ஏன், என் உடம்பின் எந்தப்பகுதியையுமே சீராட்டியதில்லை.

நான் அங்கிருந்ததைக் கண்டு வியப்பு, திகைப்பு அல்லது இக்கட்டான, எந்த உணர்வையும் சிபில் காட்டிக்கொள்ளவில்லை. ‘’ நான் இங்கே இருக்கப் போவதில்லை.’’ என்றாள் அவள்.

‘’அப்படியானால், கூப்பர்?’’

‘’கூப்பர்?’’ அவள் என்னை கோபத்துடன் உறுத்து நோக்கினாள். ‘’தயவுசெய்து என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடுங்கள்.’’

நான் எதுவும் பேசாமல் தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்தேன். அவளுடைய சக்திவாய்ந்த தண்டுவடத்தைப்பற்றி நினைக்காமலிருக்கக் கடுமையாக முயன்றேன்.

‘’எப்படியானால் எனக்கென்ன! எனக்கு அக்கறையில்லை, கேட்கிறீர்களா, நான் கவலைப்படமாட்டேன்.’’ அவள் குரல் கெஞ்சியும் மிஞ்சியும் தனக்குத்தானே எதிராகப் போராடியது.

‘’யாராவது வந்து அவரைக் கவனித்துக்கொள்ளுமாறு சொல்லுவதற்கு முன்பாக நான் இங்கிருந்து போய்விட வேண்டும்.’’

நான் மூச்சிழந்து நின்றேன்… என் தொண்டைக் குழியில் கத்தி ஏதோ குத்தி உள்ளிருந்து காற்று வெளியேறிக்கொண்டிருக்கவேண்டும். என்னிடம் சாராய வாடை வீசுவதாக நான் கற்பனை செய்தேன்.

‘’அவர் ஒன்றும் என் கணவரல்ல,’’ அவள் வேகவேகமாகப் பேசினாள். அவள் வார்த்தைகள் குத்தும் அம்புகளாகப் பறந்து வந்தன. ‘’ உண்மை என்னவென்று தெரியுமா? நான் திருமணமானவள், பார்க்கிறீர்களா? ஆனால் கூப்பரோடு அல்ல. முழுக்கதையும் உங்களுக்கு வேண்டுமா? முழுக்கதை. எனக்கு கணவர் இருக்கிறார். குழந்தைகளும். அவர்களில் இருவர் என்னை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

போலி மென்மயிர்க் கழுத்துப்பட்டை கொண்ட கசங்கிய மேல்கோட்டு அணிந்த ஒரு வயதான பெண் பிரார்த்தனைக் கூடத்துக்குள் வந்து முன் வரிசையில் ஒரு ஒழுங்கற்ற மணிகளாலான மாலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்தாள். அந்த மணிகள் செபமாலைக்கானவை அல்ல. ‘’ இது எப்படி இருக்குமென்று நீங்கள் உணரவில்லையா?’’ சிபில் கிசுகிசுத்தாள்.

நான் மறுபடியும் தலையை அசைத்தேன்; அசைக்கும் உணர்வைப் பெறுவதற்கென்றே அப்படிச் செய்தேன்.

‘’ நீங்கள் இப்போது என்னை என் இருப்பிடத்துக்கு கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.’’

நான் உள்ளுக்குள் என்ன உணர்ந்தேன் தெரியுமா? என்னுடைய சில உறுப்புகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு மின் கம்பிகளும் கேபிள்களும் செருகப்பட்டு மின்னணுக்களின் திடீர்ப் பாய்ச்சலால் புதிய சக்தி ஊட்டப்பட்டதாக. இப்போது நான் எடுக்கும் எந்த முடிவும் அல்லது எந்தத் திசை நோக்கிய நகர்வும் பெரும் அழிவுக்கு வழிவகுப்பதாக அமையும். ‘’நான் ஒன்றும் அவரைத் தனியாக விட்டுச் செல்லவில்லை.’’ என்ற சிபில் விடாமல் நம்பிக்கையற்ற துணிச்சலுடன் தொடர்ந்தாள். ’’ அவருக்கென மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கிறார்கள். அவரை நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறார்கள்.’’ அந்த வயதான பெண் காற்றில் சிலுவைக்குறியிட்டு, மாலை இருந்த மணிக்கட்டை உயர்த்தி மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டாள். ‘’ இப்போது நீங்கள் என்னைக் கூட்டிச் செல்லாவிட்டால் நான் நடந்து போய்க்கொள்கிறேன். ஆம், அங்கு வரைக்கும் கூட நடப்பேன். அதைத்தான், நான் செய்ய வேண்டுமா?’’

‘’உன்னால் நடக்க முடியாது.’’

‘’சரி, அப்புறம்.’’

அவள் கதவை நோக்கி நடந்தாள். நான் அவளிடம் நீட்டிய புகைப்படத்தை வெறுப்புடன் நோக்கி, ‘’ அதை விட்டெறியுங்கள்.’’ என்றவள் தொடர்ந்து, ‘’அதைக் கூப்பரிடம் கொடுங்கள். அதுதான் நல்லது. அவர்தான் அவளை இழந்தவர்.’’ என்றாள்.

இதில் எதுவோ சரியில்லாதது போல், மேலோட்டமாகத் தெரிவதைவிடப் பேரளவு சரியற்றிருந்ததாக நான் உணர்ந்தேன். இந்தச் சரியற்ற தன்மை எனக்குள் ஒரு மாற்று இரத்தம் போலப் பரவி என்னை ஊக்கப்படுத்தியது. மறுதலிக்கப்பட்ட, தவறான உணர்வெனில், அதிலிருந்து விரைவாக வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம். ஆனால் நம்மில் யாரொருவரும் இங்கோ அல்லது வேறெங்கோ சென்று சேர்வது எப்படி?

நாங்கள் மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தபோது நிக்கியிடம் சென்றோம். அவள் ரகசியம்போலக் கிசுகிசுக்கும் அந்த இத்தாலிய மருத்துவரிடம் பேசி முடித்திருந்தாள். அவள் அதைப் புரிந்துகொள்ளமாட்டாள் என்று எனக்கு உறைத்தாலும் சிதைக்கப்பட்ட என் சுருக்கெழுத்தில் என்னால் முடிந்த அளவுக்கு கதையை அவளுக்கு விளக்கினேன். ’’நான் சிபிலை வீட்டுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்.’’ என்று திக்கித்திக்கி.’’ அதற்கு ஒன்றும் அதிக நேரமாகிவிடாது.’’ என்றேன்.

‘’கவனமாக இருங்கள்’’ என்னிடமிருந்த புகைப்படத்தை அவள் எடுத்துக் கொண்டாள். அவள் அதைக் கசக்கி எறிந்துவிடுவாள் என்று நினைத்தேன். ‘’அவள் போகிறாளா?’’ என்று மறுபடியும் கிசுகிசுத்தாள்.

‘’ஆமாம், சரிதான், அவள் அப்படித்தான், போகவேண்டுமென்று சொல்கிறாள்.’’

‘’அவள் எந்த ஊரில் வசிக்கிறாள்?’’ நிக்கி கேட்டாள், நான் தோளைக் குலுக்கினேன். சில நொடிகள் எங்களைச் சுற்றி நகர்ந்தன.’’ நானும் உங்களோடு வரவேண்டுமென்கிறீர்களா?’’

நான் மீண்டும் தோள்களைக் குலுக்கினேன். ‘’கூப்பரோடு யாராவது ஒருவர் இருந்தாக வேண்டும்.’’
நிக்கி ஆம் என்று தலையாட்டிவிட்டு, ஒருமுறை தலையை உதறிக்கொண்டாள். ’’ என் கடவுளே’’ அவள் ரகசியமாக முணுமுணுத்தாள். ‘’இதென்ன, வாத்து? அவள் என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள்?’’

அவள் என் கன்னத்தைத் தடவிவிட்டுக் கையை இழுத்துக்கொண்டு, காற்றில் விரிந்த அவள் விரல்களை வெறித்தாள். ஏதோ ஒரு வழியில் அவளையும் இழந்துவிடப் போகிறோமென என் கன்னத்து எலும்புகள் நடுங்கின. ‘’கூப்பர் என்ன ஆவார்?’’ நிக்கி அவள் கழுத்தெலும்பைத் தடவிக்கொண்டாள்.’’ அவர் காயமுற்றிருக்கிறார். அவரது தோல்கள் ஒட்டப்படவேண்டும். என் கடவுளே, மருத்துவர்கள்… கூப்பர் அவளை எதிர்பார்க்கிறார்.’’

நான் நிக்கியின் கையைப் பிடித்துக்கொண்டேன். நான் திடீரென்று அழுதுவிடுவேன் போலிருந்தது; ஏதோ ஒன்றிலிருந்து என்றில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் தோன்றும் வகைப்பட்ட அழுகை. ‘’என்னால் விளக்கம் சொல்லமுடியாது. அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவள் என்ன நினைக்கிறாளென எனக்கும் தெரியாது, பார்த்துக்கொள்.’’ என் வார்த்தைகள் உள்ளத்திற்கோ இதயத்திற்கோ தொடர்புடையதாக இருந்தால், நிச்சயமாக, இவ்வளவு மறைகுரலாக ஒலிக்காது. ‘’ அவள் ஊருக்குப் பக்கத்தில் மெயின் ரோடுவரைக்கும்தான் அவளைக் காரில் கூட்டிச் செல்வேன்; அங்கேயே இறக்கி விடுவேன். அரை மணி நேரத்துக்கு மேல் ஆகாது.’’

எங்கள் மூச்சு எழுவதும் விழுவதும் ஒழுங்கற்று உடைவதுமாக புகை நாற்றம் வீசியது. அந்த நாற்றம் எங்கள் மூச்சில் இருந்ததோ இல்லையோ, என்னிடமிருந்து ஏற்கெனவே ருசித்த புகையிலையின் வாடை வீசியது. சிபில் ஹாலிலிருந்து அந்தப் போர்வையை, மகாராணியின் மெல்லாடை போலத் தரையில் படுமாறு இழுத்துக்கொண்டு வெளியேறினாள். அந்தக் காட்சி என் கால்களுக்குள் ஒரு அடிப்படை சக்தியைத் தூண்டியது. நான் நிக்கியின் வெளிறிய நெற்றியில் முத்தமிட்டு, ‘’ உடனேயே வந்துவிடுவேன்.’’ என்றேன்.

நான் திரும்பிக்கொண்டு ஹாலைக் கடந்தேன். கூப்பரின் இறந்த மனைவியின் புகைப்படமும் கையுமாக நிக்கி சுவரில் சாய்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன் என்று சொல்வதைவிடப் பார்த்தேன் என்றே சொல்லலாம். அவள் என்னையே நோக்கினாள்; கதவுகள் மூடிக்கொண்ட பின்னும் வெறித்தவாறே நின்றாள்.

என் மூட்டிய காலணிகள் பனியை மிதித்து நொறுக்கிய சப்தம் மேலெழுந்து புயலில் அடித்துச் செல்லப்படுவதுபோல் ஒரு நினைவு..

‘’நான் சொன்னது பொய்.’’ என்றாள் சிபில்.

முதல் வெளிவாசலை, இரண்டாவதையும் கடந்து நாங்கள் காரில் சென்றுகொண்டிருந்தோம். என் கைகள் காரோட்டும் சக்கரப்பிடியில் கட்டப்பட்டிருந்தன. ‘’ நான் பொய் சொன்னேன்,’’ என்று சிபில் மீண்டும் சொன்னாள். நான் தலையாட்டினேன். நாங்கள் இப்பொழுது ஏதோ ஒரு விஷயத்தின் இழந்த மற்றும் அரித்துப்போன மையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ‘’ நான் திருமணம் செய்யவில்லை. அப்படிச் சொன்னால்தான் நீங்கள் என்னை அங்கிருந்து அழைத்துச் செல்வீர்கள் என்பதற்காக அப்படிச் சொன்னேன். எனக்குக் குழந்தைகளும் இல்லை; ஒன்றும் இல்லை. எனக்கு எதுவுமே கிடையாது.’’

‘’உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை.’’ விஷயம் முழுவதையும் வெளிக்கொண்டுவர நான் முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

‘’எனக்குக் கூப்பரை மூன்று மாதங்களாகத்தான் தெரியும். மூன்றே மாதங்கள்! அவர் பேசியதிலிருந்து நீங்கள் அப்படிச் சொல்லவே முடியாது. காதல் பற்றி அவர் சொல்வதெல்லாம்……..ஆனால். பேச்சு மட்டுந்தான், பேச்சு. பேச்சு. பேச்சு! அந்தத் தீப்பிடிப்பதற்குச் சற்று முன்னால் நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம் என்று தெரியுமா?’’

பனிப்புயல் கொஞ்சம் குறைந்திருந்தது; ஆனால் என் மனதுக்குள் அது இன்னும் சுழன்றடித்துக்கொண்டிருந்தது; வெண்ணிறத்தில் வெப்பமான நட்சத்திரத் துளிகள்; நிக்கியின் முடியில் விழுந்த பனித்துளி உருகுவதற்கு எவ்வளவு நீண்ட ஆனால் இனிய நேரம் எடுத்துக்கொண்டதை நான் நினைத்துக்கொண்டேன்.

‘’எதுவுமேயில்லை,’’ அவள் சொன்னாள், ‘’ நாங்கள், கூப்பரும் நானும் நிர்வாணமாகச் சும்மாப் படுத்திருந்தோம்; இருவரும் சேர்ந்து படுத்திருந்தோம், அவ்வளவுதான். கட்டுப்பாடாக ஒரு படிப்பு. அது ஒரு தொண்ணூறுகளின் விஷயம். ஆனால் அந்தத் தொண்ணூறுகளை ………த் தள்ளுங்கள், நான் சொல்கிறேன், அவற்றைச் சும்மா ………த் தள்ளுங்கள்.’’

நாங்கள் கடந்து வந்த விளம்பரப்பலகைகள் சுவையான உணவு, வசதியான தங்குமிடம், இளமை. பாடல்கள் என எல்லாவற்றுக்கும் உறுதியளித்தன. இவற்றையெல்லாம் தெரிந்து எனக்கு ஒன்றும் நீண்ட நாட்களாகிவிடவில்லை. ‘’ ஆக, உங்களை இப்போது நான் எங்கே அழைத்துச் செல்கிறேன்?’’ எனக் கேட்டேன்.

‘’எனக்குத் தெரியாது,’’ பட்டத்தின் நூலைப்போல மெல்ல ஒலித்தது, அவள் குரல். ‘’ எங்கே?’’

நான் என் தலையைக் குலுக்கிக் கொண்டேன். நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் எனத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. என் உடம்பின் தேவைகளை அதுவே அறியும். சிபிலின் அருகே அமர்ந்துகொண்டு, என் இச்சையை, தவறான ஏக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதற்கே என்னை இழந்துவிட்டதாக உணர்ந்தேன். காமம், இதுவெல்லாம் அதுதானா? அவள் அழகாக, வெறுப்பின் உச்சத்தில் எதற்கும் துணிந்தவளாக இருந்தாள்; தவறான மனிதனால் வெளிப்படையாகக் காதலிக்கப்பட்டவள் என்பதை, அது அடிப்படையற்றதாக இருந்தாலும் அந்த எண்ணத்தை உதறித்தள்ள என்னால் இயலவில்லை. ‘’ நிறுத்துங்கள், வேண்டுமானால் என்னை இங்கேயே விட்டுவிடுங்கள்.’’ என்ற சிபில், ‘’ நான் எங்கேயாவது போய்க்கொள்கிறேன்.’’ என்றாள், அவளாகவே.

நான் நிறுத்தவில்லை. நிறுத்துகின்ற நிலையை நாங்கள் இருவருமே தாண்டிவிட்டோம்.
சிபில் என்னருகே நெருங்கி அமர்ந்து, என் தொடை மீது கையை வைத்தாள். அவள் மணத்தை என்னால் உணர முடிந்தது, பாருங்கள் – தீ நாக்குகள், வெப்பம் – அந்த மணம் ஊசலாடும் என் நினைவுகளை, மருத்துவ மனை, கூப்பர், நிக்கியின் முடி மீதிருந்த பனித்துளி எல்லாவற்றையும் சக்தியிழக்கச் செய்துவிட்டது.

‘’உண்மையைச் சொல்வதென்றால், என்னிடம் அதிகப் பணம் இல்லை. எனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் தீயில் இழந்துவிட்டேன்.’’

நான் தலையாட்டினேன். ஏதாவது சாலையோர விடுதியொன்றில் மலிவான அறை ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த வார முடிவினை இருவரும் சேர்ந்து படுக்கையில் எந்தக்கவலையுமின்றி, எதைப்பற்றியும் சிந்திக்காமல், எங்களுக்கிடையே தீயால் மூண்ட இச்சையின் மீதத்தை எந்தக் கட்டுப்பாடுமின்றி அனுபவிக்கலாமென நான் எண்ணினேன்.

ஆனால், நெருப்பின் அதிர்ச்சியும் கிளர்ச்சியும் எங்களின் மானங்கெட்ட வழிகளில் வடிந்தபின் எங்கே போவது?

சிபில் என் தோள்களைத் தட்டினாள்; என் மீதே தலையைச் சாய்த்தாள். ‘’என்னை விட்டுப் போய்விடாதே’’ அவள் ரகசியம் போல் மெல்லப் பேசினாள். அவள் குரலில் ஒரு குழந்தையின் நம்பிக்கை இருந்தது.

ஆணையும் பெண்ணையும் இணைத்து வைக்கும் வழிகள், பிரித்தும் வைக்கும். என நான் நினைத்தேன். காரை வெகுதூரம், ஏற்கெனவே வந்த திசையிலேயே திரும்பி ஓட்டிவந்து விட்டேன்; என் நினைவுகளிலிருந்து பீட்டின் கண்ணீர், லிண்டாவின் கைகள் கட்டிடக் கூளங்கள் இறைந்து கிடந்த வயலுக்கு அப்பால் பீட்டுக்கும் லிண்டாவுக்குமான வீடு தூரத்தில் மங்கலாகச் சாம்பல் நிறத்தில் தெரிந்தது. இந்த ஒரே வாரமுடிவுக்கெனில், முற்றிலும் நம்பிக்கையிழந்த அவர்களின் ஒன்றிணைவுக்கு போதகர் வழங்கிய மகிழ்ச்சியற்ற ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அழித்துவிடக்கூடும்; அழித்துவிடவும் செய்வேன்.

நான் அமைதியோடிருந்தேன்; பீட்டும் லிண்டாவும் ஒருவருக்கொருவர் காதல் இல்லாமலேயே மரணம் வரைக்கும் இணைந்திருப்பதாக உறுதியளித்துக்கொண்ட போதிருந்த அமைதியைப் போன்றதுதான்.

நான் சிபிலின் கரத்தை எடுத்து என் இதழ்களில் பொருத்தி, ஒவ்வொரு விரலிலும் முத்தமிட்டேன்.

‘’கவலைப்படாதே,’’ நான் பொய்யாகத்தான் சொன்னேன்.

‘’யாரும் எவரையும் விட்டுப்பிரிவதில்லை.’’

 

**************

தற்கால எழுத்தாளர்களில் முக்கியமானவரான ராபர்ட் ஸ்கிர்மர் நியூயார்க்கில் வசிக்கிறார். BURNING என்ற இந்தச் சிறுகதை 1998ல் ஓ`ஹென்றி பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரது Living With Strangers என்ற சிறுகதைத்தொகுப்பு விமர்சகர்களால் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. இவரது Barrow’s Point என்ற நாவல் 2015 ஆம் வருடத்திற்கான Gival Press Novel Award பெற்றிருக்கிறது.

 

தமிழில் : ச.ஆறுமுகம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!