home கட்டுரை, தமிழி பௌத்தத்தின் ஹாரீதீ மரபும் – தமிழ் பௌத்தத் தாய்த்தெய்வ வழிபாட்டுத் தொடர்மரபுகளும்

பௌத்தத்தின் ஹாரீதீ மரபும் – தமிழ் பௌத்தத் தாய்த்தெய்வ வழிபாட்டுத் தொடர்மரபுகளும்

–  பி.ஏ.அன்புவேந்தன்

இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தொடங்கி, ஆசியக் கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் வரையிலும் அகன்றதோர் பரவலாக்கத்தையும், வரலாற்றுக் காலத்தின் நீண்ட நெடியதோர் தொடர்ச்சியையும் பௌத்தத்தைத் தவிரவும் வேறெந்த மார்க்கங்களும் கொண்டிருக்கவில்லை எனலாம்.

பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற பௌத்தமானது, அசோகச் சக்கரவர்த்தியின் பிராமிக் கல்வெட்டுச் செய்திகளின்படி இந்தத் துணைக்கண்டம் முழுவதிலும் பரவலாக்கம் பெறத் தொடங்கியது எனக் கொள்ளலாம்.

வைதீக மதங்களுடனும், வருணக் கோட்பாடுகளுடனும் கடுஞ்சமர் செய்து, தத்துவ அரங்கிலும் செல்வாக்குப் பெற்று நாடுகளெங்கிலும் விஹாரங்களும், சைத்தியங்களும் அமையப்பெற்று, அரசர் முதல் பெருவணிகர்கள், இதர தொழிற்பிரிவினர் மற்றும் எளிய மக்கள் வரையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கமாக பௌத்தம் விளங்கியதும் இதுவரையிலான வரலாறு அறிந்ததே.

பௌத்தம் பெரும்பாலும் அரசு, மற்றும் வணிக ஆதரவு பெற்ற பெருஞ்சமயமாக மட்டுமே சித்தரிக்கப் பெற்றிருக்கிறது. வைதீக எழுச்சிக் கால கட்டங்களில், வைதீக சமய வழிபாட்டு நிறுவனங்களாக மாற்றப் பெற்ற விஹாரைகளின் வரலாறுகள்கூடச் சொல்லப் பெற்றிருக்கின்றன. ஆனால், அதே வேளையில் கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் வாழுகிற எளிய மக்களின் வழிபாட்டு மரபுகளினது பௌத்த மூலம் பற்றியும், வைதீக ஆக்கிரமிப்பால் திரிபுகளுக்கு உள்ளான இம்மரபுகளின் பௌத்த எச்சங்கள் பற்றியும் பெரும்பாலான வரலாற்றாய்வாளர்கள் வாய்திறப்பதில்லை.

இவ்வகையில் வரலாற்றுப் புறக்கணிப்புகளுக்கும், மறுப்புகளுக்கும் திரிபுகளுக்கும் இலக்கான பௌத்தத்தினுடைய மக்கள் வழிபாட்டு மரபுகளைப் பற்றி ஆய்வதும், அவற்றின் மெய்ம்மையை வெளிக் கொணர்வதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஹாரீதீ வழிபாட்டு மரபின் தோற்றமும் பரவலாக்கமும்:

‘ஹாரீதீ’ என்னும் மீவியல்பு மிக்க பௌத்தத் தாய்தெய்வம் பற்றிய கதைகளும் குறிப்புகளும் மூலசர்வாஸ்திவாத வினய, அவதான கல்பலதா, சீனத்து டய்ஷோ பனுவல்கள், தாமரை சூத்திரத்தின் 26-வது அத்தியாயம், மற்றும், சீன யாத்ரிகர்களான ‘ஐ-சிங்’ மற்றும் யுவான்சுவாங் ஆகியோரின் பதிவுகளிலும் காணக்கிடைக்கின்றன.

ஹாரீதீ கதை:

சீனமொழியில் மொழியாக்கம் பெற்ற திரிபிடகங்களான ‘டய்ஷோ’ பனுவல்களில் பதிவு பெற்றுள்ள ‘ஹாரீதீ’ யின் கதையைக் காண்போம்:

(‘டய்ஷோ’ பனுவல்களானது கி.பி. 8- ஆம் நூற்றாண்டு வாக்கில் குமாரவஜ்ரரால் சமஸ்கிருதத்திலிருந்து சீனத்திற்கு மொழியாக்கம் பெற்றவையாகும்.)
செல்வச்செழிப்பு மிக்க ராஜகிருஹ நகரத்தின் காவலனொருவனின் மகளாவாள் ‘ஹாரீதீ’. அவள் பிறப்பதற்கு முன்பொரு நாளில், அவளின் தந்தையானவர், தனது நண்பனும் பிறிதொரு குடியிருப்பின் காவல் இயக்கனுமான ஒருவனின் பிறக்கவிருக்கும் மகனுக்கும், தனக்குப் பிறக்கவிருக்கும் மகளுக்கும் மணம் முடித்து வைப்பதாக சத்தியம் செய்தார். அவருக்கு மிகவும் அழகிய பெண்மகவு பிறக்கிறது. அம்மகவுக்கு ‘மகிழ்ச்சியான பெண்’ எனும் பொருள்பட ‘அபிரதி’ எனப் பெயரிடுகின்றார். அவள் வளர வளர அவளுக்குள் ஒரு ரகசிய ஆசையும் வளர்கிறது. அது என்னவென்றால் நகரத்திலுள்ள குழந்தைகளைத் திருடிக் கொன்று, அவற்றின் மாமிசத்தை உண்ணவேண்டும் என்பதாகும். அவளை எப்படியேனும் இந்த ஆசையிலிருந்து திசைதிருப்ப வேண்டுமென, அவளது தந்தைக்குப்பின் பொறுப்பேற்ற தமையனான இயக்கன் முடிவு செய்கிறான். தந்தையின் வாக்குப்படி அவளுக்கு மணம் முடித்து வைக்கிறான். அவளுக்கு ஐநூறு பிள்ளைகள் பிறக்கின்றன. சோர்வுற்ற தன் உடல் வலுப்பெறவேண்டி அவள் ராஜகிருஹத்து மக்களின் குழந்தைகளை வேட்டையாடத் தொடங்குகிறாள். அது முதல் ராஜகிருஹத்து மக்கள் அவளைத் ‘திருடி’ எனும் பொருள் தொனிக்க, “ஹாரீதீ” என அழைக்கலாயினர். மேலும், அவளது தீயசெயல்கள் குறித்து ராஜகிருஹத்தில் இருந்த புத்தரிடம் புகார் அளித்தனர் மக்கள். அவளுக்குப் பாடம் புகட்ட விரும்பிய புத்தர், தனது பிச்சைப் பாத்திரத்தினுள் அவளின் ஐநூறாவது (கடைசி) குழந்தையைக் கவர்ந்து கொணர்கிறார். தனது பிள்ளையைக் காணாது மனஉளைச்சலுக்கு ஆளான ஹாரீதீ அங்குமிங்கும் தேடியலைகிறாள். சில தேவர்களின் அறிவுரைகள் கேட்டு, புத்தரை வந்து சந்திக்கிறாள். தன் குறையை முறையிடுகிறாள். தன் பிள்ளையில்லாமல் தன்னால் இனி வாழ இயலாது என மன்றாடி அரற்றுகிறாள். புத்தர் அமைதியாக அவளை நோக்கி, “ஐநூறு குழந்தைகளில் ஒன்றை இழந்ததற்காக இவ்வளவு பதறும் நீ, தங்களின் ஒரேயொரு குழந்தையையும் இழந்து தவிக்கும் ராஜகிருஹத்து மக்களின் துயரை ஒரு கணம் சிந்திப்பாயாக…” எனச் சொல்கிறார். உண்மையை உணர்ந்து கொண்ட ஹாரீதீ அதுமுதல் தனது தீய நடத்தைகளை ஒழித்து விடுவதாக சத்தியம் செய்து பின், புத்தரின் ஐவகை ஒழுக்கங்களையும், மூன்று சரணங்களையும் தழுவுகிறாள். புத்தர் அவளுக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் உணவளிக்க வேண்டி, பிக்குகள் எடுத்துவரும் பிச்சையில் அவர்களுக்கான பங்கினை உறுதி செய்கிறார். அவள் சென்ற பின், புத்தர் பிக்குகளை நோக்கி, “ஹாரீதீ முற்பிறப்பில் இடையனொருவனுக்கு மனைவியாகவிருந்தாள். அவள் நிறைசூலியாகவும் இருந்தாள். அப்போது நடந்த விருந்தொன்றில், மகிழ்வூட்டும் குழுவினரால் நடனமாடும்படி வற்புறுத்தப்பட்ட அவளின் கரு கலைந்து போகிறது. மரணிக்கும் முன்பு, இதற்குப் பழிதீர்க்க வேண்டி, அடுத்த பிறவியில் ராஜகிருஹத்தின் குழந்தைகளைத் தின்பேன் எனச் சூளுரைத்தாள்” எனக் கூறுகிறார்.

இதுதான் டய்ஷோ பனுவல்களில் பதிவாகியுள்ள ‘ஹாரீதீ’யின் கதையாகும்.

ஐ-சிங் எனும் சீனப் பயணி கி.பி.671 – கி.பி.695 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பகுதிகளுக்கு வருகை புரிந்தவராவார். அவரது குறிப்புகளில் இந்திய பௌத்த மடாலயங்களில் நடைபெற்ற ‘உபவஸ்தா நாள்’ விழாவினைக் கண்டது பற்றியும், அங்கே ‘அரஹத்களுக்கும், ‘பிக்கு’களுக்கும் அடுத்ததாக ‘ஹாரீதீ’க்கும் அளிக்கப்பட்ட கொடை வழிபாடு பற்றியும் பதிவு செய்துள்ளார்.

‘ஹாரீதீ’யின் பரவலாக்கம்:

கி.மு.3-ம் நூற்றாண்டு முதல், கி.பி.16-ஆம் நூற்றாண்டுவரை பல விதமான ‘ஹாரீதீ’ இயக்கியின் உருவங்கள் காணக்கிடைக்கின்றன. தொல்லியல் துறையினரின் கூற்றுப்படி மஹாயான பௌத்தத்தின் உருவாக்கத்தின் போது முதற்கொண்டு ஹாரீதீயின் இடம் பௌத்தத்தில் வகிக்கத் தொடங்கியது. மார்பிள், கற்கள், மரம், பாறைப் புடைப்புச்சிற்பம் என பல வகையான ‘ஹாரீதீ’ உட்பட பலவகையான இயக்கியர் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

‘ஹாரீதீ’ வழிபாட்டு மரபானது இந்தியத் துணைக்கண்டம் தவிர்த்து, திபெத், சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட இதர ஆசிய நாடுகளிலும் நன்கு வேர்விட்டுப் பரவியுள்ளது. ‘ஹாரீதீ’ சீனாவில் ‘கூய்ஸீமூ’ என்னும் பெயரிலும், ஜப்பானில் ‘கிஷிமோஜின்’ என்னும் பெயரிலும், ‘க்விஜாமோஷின்’ என்னும் பெயரில் கொரியாவிலுமாக வழிபடப் பெறுகிறாள். காந்தராப் பகுதிகளில் ‘ஹரௌஹூதி’ என்னும் பெயரிலும் வழிபடப் பெறுகிறாள்.

‘ஹாரீதீ’ உருவமும் நம்பிக்கைகளும்:

பலவிதமான பொருட்களில் கிடைக்கப்பெறும் ‘ஹாரீதீ’யின் உருவங்களில் பொதுவான சில கூறுகளை நம்மால் காண இயலும். ஒரு காலை மடித்து சுகாசன நிலையில் அமர்ந்தோ, இரு கால்களையும் தொங்கவிட்டு அமர்ந்த நிலையிலோ, குத்தவைத்து அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ இருக்கும் பெண்ணுருவமானது தனது கைகளிலோ, அல்லது மடியிலோ குழந்தையொன்றினை ஏந்தியபடி காணப்பெறும். அதன் காலடியில் சில குழந்தைகள் விளையாடும் பாவனையில் அமையப்பெற்றிருக்கும்; சில இடங்களில் தன் இணையாகிய ‘பஞ்சிகா’வுடன் சேர்ந்து அமர்ந்த நிலையிலுமிருக்கும்.

‘ஹாரீதீ’ சின்னம்மையின் தெய்வமாக பெரும்பகுதிகளில் வழிபடப்படுகிறாள். வேறு சில பகுதிகளிலும் வெவ்வேறு கொள்ளைநோய்களின் தெய்வமாகவே வழிபடப்படுகிறாள். அதைத் தவிர குழந்தைகளின் பாதுகாப்பிற்கான தெய்வமாகவும், நலமான குழந்தைப்பேறுக்கான தெய்வமாகவும், குழந்தைப் பேற்றின் பின்னான தாய்-சேய் நலம் காக்கும் தெய்வமாகவும், வளமையின் தெய்வமாகவும் என இந்த விதமான நம்பிக்கைகளின் தெய்வமாகவே வழிபடப் பெறுகிறாள்.

பௌத்தத்தின் பரவலாக்கமும் தொன்மங்களின் பொருண்மையான அடித்தளமும்:

பௌத்த தருமமானது அதன் தொடக்ககால பரவலாக்கத்தின் போதிருந்தே தனது அறவழிப்படுத்தும் பணியை அரசர்கள், வணிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அடித்தளத்திலுள்ள எளியமக்கள் மத்தியிலும் திறம்படச் செய்து வந்தமையை பௌத்த இலக்கியங்கள், கல்வெட்டு ஆதாரங்கள் உட்பட இதர தொல்பொருள் தரவுகள் மூலமும் அறிந்து தெளியலாம்.

“இந்தியத்துணைக்கண்டத்தின் பௌத்த மடாலயங்கள் முக்கியமான வணிகப் பெருவழிகளில் அமைந்திருந்தன. வணிகர்கள் மக்களை அடையப் பயன்படுத்திய இப்பாதைகளையே பௌத்தர்களும் தேர்ந்து சென்றிருக்க வேண்டும். நிலையான வேளாண்முறைகள் வளர்ச்சியடைந்திராத அக்காலகட்டங்களில், காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த அம்மக்கள் பலவிதமான பின்தங்கிய மற்றும் கரடுமுரடான பழக்கவழக்கங்களையும் கைக்கொண்டிருந்தனர். அம்மக்களிடையே கொல்லாமை உள்ளிட்ட நன்னடத்தைகளைப் போதிக்கும் பொருட்டும், அவர்களை அறவழிப்படுத்தும் பொருட்டும் அம்மக்களிடம் செல்வதென்பது பௌத்த பிக்குகளுக்கு அவசியமானதாகிறது.

இந்த மக்களின் இருப்பிடங்களும், பௌத்த பிக்குகளின் குகைகளும் வணிகப் பெருவழிகளிலேயே அமைந்திருப்பது இங்கே பொருத்தி நோக்கத்தக்கது. மேலும், இவ்வணிகப் பெருவழிகளின் நாற்சந்திகளில் பௌத்த மடாலயங்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்தின் பொருட்டே நிறுவப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, இவ்விடங்களில்தான் கொடூரமான, நாகரீகமற்ற கூட்டத்தினரும் நடமாடினர். வணிகர்களும் தமது வணிக வெற்றி நிமித்தம் உயிர்பலியிடுதல் மேற்கொண்டு வந்ததும் இந்த வழிகளில்தான். எனவே, இவர்களையும் அறவழிப்படுத்தியாக வேண்டியதன் பொருட்டும் பௌத்த பிக்குகள் இவ்விடங்களைத் தேர்வு செய்தனர்.” என்கிறார் அறிஞர் டி.டி.கோசாம்பி.

மேலும், “பிக்குகள் ஒரு மரத்தடியிலோ, குகையிலோ, குன்றின் மேலோ, அல்லது இடுகாட்டிற்கருகிலோதான் தங்கவேண்டும். இதுபோன்ற இடங்களில் நடைபெறும் கொடூரமான பழைய சடங்குகளைக் கண்டு ஒரு பிக்கு பயப்படக்கூடாது. நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடும் பிக்குகள் இவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற இடங்களில்தான் புத்தர் தங்கிப் பிறருக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆவிகளுக்குக் கொடுக்கப்படும் பலியை அவர்தடுத்து நிறுத்தினார்” என்று சுத்தநிபாதத்தின் பகுதிகள் பேசுகின்றன.

இனி, ‘ஹாரீதீ’ போன்ற இயக்கியர் வழிபாட்டின் தொன்ம உருவாக்கத்திற்கான பொருண்மையான அடித்தளம் பற்றி ஆராயலாம். பெண் தெய்வங்கள் பற்றிக் குறிப்பிடுகையில், “இப்பெண்கடவுள்கள் மரணதேவதைகளும்கூட. அவர்களை சாந்தப்படுத்தவில்லை என்றால், சில சமயங்களில் மரணத்தைக் கூட கொடுப்பார்கள். ‘தேவி’ என்பது ‘பெரியம்மை’க்குப் பெயர். ‘சீதளா’ தேவி பெரியம்மையிலிருந்து காப்பவள். ‘மாரி ஆயி’ ‘காலரா’விலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுபவள். ‘கௌரா ஆயி’ சின்னம்மையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுபவள்.” என்று மக்களின் நம்பிக்கைகளைப் பற்றி டி.டி.கோசாம்பி எழுதிச் செல்கிறார்.

ஆக, ‘ஹாரீதீ’ பற்றிய பௌத்த தொன்மக் கதையாடலானது கீழ்க்கண்ட பொருண்மையான அடிப்படைகளைக் கொண்டது எனலாம்.

‘ஹாரீதீ’ என்பவள் சின்னம்மைக்கான தெய்வமாக இருக்கிறாள். சின்னம்மை ஒரு கொள்ளை நோயாக இருந்த காலகட்டங்களில் அது தொற்றும்போது ஏராளமான அளவில் குழந்தைகள் மடிந்திருக்கிறார்கள். மருத்துவமும், நாகரீகமும் பெரிதும் வளர்ந்திராத அந்த காலகட்டங்களில் மக்கள் தீய ஆவியொன்று குழந்தைகளைக் காவு வாங்குவதாக எண்ணியிருக்க வேண்டும். அவ்வப்போதுகளில் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க, அந்த தீய ஆவிக்கு கால்நடைகளைப் பலியிட்டிருக்க வேண்டும். இதை ஒட்டியே இதர பலிச் சடங்குகளும் நடந்திருக்க வேண்டும். அவ்விதமான மக்களை எதிர்கொண்ட பௌத்தர்கள் மக்களின் அத்தகைய சடங்குகளில் குறுக்கீடோ, விமர்சனமோ செய்யாமல் அவற்றை அறிவுப்பூர்வமான மற்றும் உணர்வுப்பூர்வமான வழியில் அறவழிப்படுத்தினார்கள். அதாவது, நோய் பரவும் காலங்களில் போதுமான அளவிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்தும், மருத்துவ சிகிச்சை முறைகளை மக்களுக்குப் போதித்தும் அறிவுப்பூர்வமாக குணமாக்குகிறார்கள். மற்றும் நோயின் குறியீடாக இருந்த ‘தீய ஆவி’யை ‘ஹாரீதீ’ போன்ற இயக்கியர் தொன்மங்களை உருவாக்கியதன் மூலம், ‘குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகவும், பௌத்த தர்மத்தையும் சீலத்தையும் கடைபிடிக்கும் பெண் தெய்வமாகவும் மாற்றியமைத்து உணர்வுப்பூர்வமான வழிமுறையிலும் உயிர்பலியைத் தடுத்து, அறம் வளர்த்தமை புலப்பாடாகிறது.

இதர பௌத்த இயக்கியர்கள்:

வெள்ளைதாரா, பச்சைதாரா, மஞ்சள்தாரா, சிவப்புதாரா உட்பட 21 தாராக்கள், ஜாங்குலி, சுந்தா, ப்ரிஹூதி, குருகுல்லா உள்ளிட்ட இயக்கியர்கள் பௌத்த இயக்கியர் ஆவார்கள். மணிமேகலையில், சம்பாபதி, தீவதிலகை, சிந்தாதேவி, சித்ர தெய்வம், மணிமேகலை, கந்திற்பாவை போன்ற பௌத்த இயக்கியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் சூலி, சூர்மகள், வரையமகளிர், கடல்கெழுசெல்வி, கான்அமர்செல்வி, பாவை, மற்றும் அணங்கு போன்ற பெயர்களிலும் இயக்கியர்கள் குறிப்பிடப்படுகின்றனர். மேலும், தற்காலத் தமிழகத்தில் வழிபடப்பெறும் தாய்தெய்வங்களான காளியம்மாள், மாரியம்மாள், முத்தாளம்மன், அங்காளம்மன், செல்லியம்மன், செல்லாண்டியம்மன், செல்லத்தம்மன், பேச்சியம்மன், பெரியாச்சியம்மன், பொன்னியம்மன், காத்தாயி, பச்சையம்மன், இசக்கியம்மன், பகவதியம்மன் உள்ளிட்ட பெரும்பாலான தெய்வங்களும் பௌத்த இயக்கியர்களேயாவர். கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதற்கொண்டே பௌத்தத் தலங்களின் தோரண வாயில்களிலும், தூண்களிலும், சைத்தியங்களிலும், இயக்கியர் இடம்பெறலாயினர் என்பதைத் தொல்லியல் சான்றுகளும், இலக்கியங்களுமே நமக்கு நன்குணர்த்திவிடுகின்றன. வேஸ்ஸந்தரக, முகபக்க, மஹாஜனக போன்ற பௌத்த ஜாதகக் கதைகளிலும் இயக்கியர் பற்றிய நிறைய குறிப்புகளுள்ளன.

பௌத்தம் உருவாக்கிய அறவழிப்படுத்தப்பட்ட இயக்கியர் வழிபாட்டினையே, பின்னாட்களில் எழுச்சி பெற்ற ஜைனம் சுவீகரித்துக் கொண்டதோடு, தம் ஜைன தீர்த்தங்கரர்களின் காவல் தெய்வங்களாகவும், மாற்றிக் கொண்டன. அவர்கள் அம்பிகா, பத்மாவதி, சக்ரேஸ்வாஜீ, ஜூவாலாமாலினி, சித்தாக்ரியா போன்ற பெயர்களில் வழங்கலாயினர். இம்மாற்றமானது கி.பி.ஆறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.பத்தாம் நூற்றாண்டில் உச்சமடைந்தது என அறியப் பெறுகிறது.

தமிழ் பௌத்தத்தின் சில ‘ஹாரீதீ’ வடிவங்களும், திரிபுகளும்:

தமிழகத்தில் பரவலாக வழிபடப்பெறும் சில தாய்த்தெய்வ மரபுகளை ஹாரீதீ வழிபாட்டு மரபின் தொன்மக் கதையாடலோடு ஒப்பு நோக்கியும், இதர வரலாற்று, பணபாட்டுக் கூறுகளைக் கொண்டும் அவற்றின் பௌத்த வேர்களை இவ்விடத்திலே அடையாளம் காண முயல்கிறேன்.

இசக்கி அம்மை:

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, போன்ற இடங்களில் பரவலாக வழிபடப்பெறும் உக்கிரமான தாய்த் தெய்வமாவாள். ‘இசக்கி’ என்ற பேச்சு வழக்கின் செம்மையான தமிழ் சொல் ‘இயக்கி’ என்பதாகும். இது சமஸ்கிருதத்தில் ‘யக்ஷ’ என்பதற்கும், பாலி மொழியின் ‘யக்க’ என்பதற்கும் இணையான பெண்பால் சொல்லாகும்.

இந்த இசக்கியைப் பற்றிய பலதரப்பட்ட தொன்மக்கதைகள் உலவுகின்றன. அதில் ஒரு கதை அப்படியே ‘அம்பிகா’ இயக்கியின் கதையைப் போலவுள்ளது. சோமசன்மா என்பவனின் மனைவியான அம்பிகா, தனது கணவன் நீராடி முடிந்து வருவதற்குள், பித்ருக்களுக்குப் படையலிட வைத்திருந்த உணவை, பிச்சைக்கு வந்த துறவி ஒருவருக்கு அளிக்க, செய்தியறிந்து ஆத்திரங்கொண்ட அவன் மனைவியையும், கைக்குழந்தையையும் விரட்டிவிடுகிறான். அம்பிகா மனமுடைந்துபோய் தற்கொலை செய்து விடுகிறாள். பிறகு தேவர்களிடம் வேண்டி, பிள்ளை மேலுள்ள பாசத்தால் இயக்கி ரூபம் கொண்டு வந்தாள். இதுவே அக்கதையாகும்.

தாசியொருத்திக்கு மகளாகவும், நட்டுவாங்கனொருவனுக்கு தங்கையாகவும் பிறந்த பெண்ணொருத்தி மேல், மையல் கொண்டு மணம் முடிக்கிறானொரு வேதியன். மாமியாரின் வஞ்சனைமிகு சொல்கேட்டு, மனைவியையும் குழந்தையையும் வெறுத்தொதுக்கிச் சென்று விடுகிறான். அவள் பின்னாலேயே கெஞ்சியபடி சென்ற மனைவியை கள்ளிச் செடியருகில், தந்திரமாய் கொலை செய்து விடுகிறான். உடனேயே கருமவினையாய் பாம்புகடித்துச் சாகிறான். இறந்துபட்ட மனைவி வரும் பிறவியில் அவனைத் தன் கையால் கொல்வதாகச் சபதமேற்கிறாள். தங்கை உடலருகே அண்ணனும் வந்த மாண்டு போகிறான். அடுத்த பிறவியில் அண்ணன், தங்கை இருவருமே அரசனின் பிள்ளைகளாகப் பிறக்கின்றனர். இருவரும் ரத்தவெறி கொண்டு ஊரிலுள்ள கால்நடைகளைத் திருடித் தின்றுவர, செய்தியறிந்த அரசன் இருவரையும் காட்டில்போய் விடுகிறான். இப்பிறவியில் வேதியன், வணிகனாகப் பிறந்து அவ்வழியே, வியாபார நிமித்தம் வரவும், தந்திரம் செய்து இவள் வணிகனைத் தன் கையால் கொன்று சாந்தமடைகிறாள். பிறகு தேவர்களின் சொல் கேட்டு, பிள்ளைகளைக் காக்கும் இயக்கியாக மாறுகிறாள். இது பிரிதொரு கதை.
இக்கதைகள் இரண்டிலும் இரண்டாவது கதையும் ஹாரீதீ தொன்மமும் ஒத்துப்போகிறது; உருவ அமைப்பிலும் கூட. இசக்கி அம்மன் பெரும்பாலும் இடதுகரத்தில் குழந்தையை ஏந்திய சுதைச் சிற்பமாகவே காணப்பெறுகிறது. இரண்டுகதைகளிலுமே காணப்பெறும் முக்கியமான அம்சமானது, முற்பிறவியில் அநீதியான முறையில் மாண்ட பெண்கள், இயக்கியராக மறுபிறவி எடுத்தாலும், இறுதியில் குழந்தைகளுக்கான காவல் தெய்வமாக மாறுவதுமாகும்.

பொதுவாக இசக்கியம்மனுக்கு ஆடிமாதமே கொடை நடத்தப் பெறுகிறது. பெரும்பாலும் கொள்ளைநோய்களின் தெய்வங்களுக்கும் ஆடிமாதமே வழிபாடு நடத்தப்பெறுவது உண்டு. விளைச்சலில் ஒரு பகுதியை இசக்கியம்மைக்கெனத் தனியே எடுத்து வைத்துப் படையலிடும் வழக்கமுமுண்டு. எல்லா இசக்கிகளும் உதிரபலி பெறுபவை அல்ல. பெரும்பாலான இசக்கிகள் பொங்கல், புளிசோறு படையல்கள் பெறுகின்றன. இசக்கியம்மளை பெண்கள் பெரும்பாலும் மாதவிடாய் பிரச்சனைகள் தீரவும், பிள்ளைப்பேறுக்காகவும், பிள்ளைகளின் காவலுக்காகவும் வழிபடுகிறார்கள்.

பேச்சியம்மன்:

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற இடைநிலைப்பட்ட மாவட்டங்களில் பேச்சியம்மன் வழிபாடு பரவலாகக் காணப்பெறுகிறது. கைகளில் அல்லது இடையில் குழந்தையை ஏந்திய நிலையிலேயே காணப்பெறும் சிலைகளைக் கொண்ட பேச்சியம்மனும் ‘ஹாரீதீ’யுடனேயே தொடர்புபடுத்தப்படுகிறாள். மதுரை நகரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் ஆயிரமாண்டுகள் பழமையான பேச்சியம்மன் கோயிலானது முற்காலத்தில் மயானமாக இருந்த ஆலங்காடு ஆகும். மேலும், அய்யனாருக்கு இங்கு தனி சன்னிதி உண்டு.

பேச்சியம்மன் பற்றி வழங்கப்பெறும் தொன்மக்கதைகள் பொதுவாக முற்பிறவியில் அநீதியான முறையில் மரணமடைந்த நிறைசூலி, அடுத்த ஜென்மத்தில் பழிதீர்ப்பவள், குழந்தைகளுக்குக் காவலிருப்பவள், சுகப்பிரசவத்தை அளிப்பவள் போன்ற தன்மைகளைக் கொண்டிருக்கிறது. பெரியாச்சி அம்மன்(எ)பேராச்சிஅம்மன் மற்றும் அங்காளம்மனும் பெரும்பாலும் பேச்சியம்மன் தொன்மத்துடனும், உருவ மற்றும் நம்பிக்கைகளுடனும் பெருமளவிற்கு ஒத்த தன்மைகளுடனயே காணப் பெறுகின்றனர்.

பேச்சியம்மன் வழிபாட்டுக்கும் ஆடிமாதம் செவ்வாயும், சில பகுதிகளில் கடைசி வெள்ளியும் சிறந்த நாட்களாகக் கொள்ளப்படுகின்றன. பேச்சியம்மன் பெரும்பாலான கோவில்களில் புலால் உணவுப்படையலை ஏற்பதில்லை.

நிறைசூலி ஒருத்தியை பேச்சி கொன்றாள் என்னும் வேறொரு தொன்மக்கதைக்கு ஒப்ப, மதுரை மாவட்டம் கருமாத்தூர் பேச்சியம்மன் கோயிலில் ‘சூலி ஆடு’ பலியிடப்படும். அவ்வழிபாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆக, பேச்சியம்மன் தொன்மத்திலும் ஒரு செய்தி புலனாகிறது. அதாவது, பழிதீர்த்தலாக நிறைசூலிகளைக் கொல்லும் இயல்புள்ள தீவினை ஆற்றலானது, நல்வினைப்படுத்தப்பட்டு நிறைசூலிகளைக் காக்கும் இயக்கியாக மாறியதானது, ‘ஹாரீதீ’யின் தீவினையிலிருந்து நல்வினைக்கான மாற்றத்துடன் ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

பச்சையம்மன் – பச்சைவாழி அம்மன்:

வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வழிபடப்பெறும் தாய்த்தெய்வங்களுள் ‘பச்சையம்மன்’ முக்கியமான தெய்வமாவாள். சில பகுதிகளில் இவள் ‘காத்தாயி’ எனவும் வழிபடப் பெறுகிறாள்.

பல பௌத்த அறிஞர்களால் பச்சையம்மன் என்பது ‘ஹாரீதீ’யின் தமிழ்ப் பௌத்த தெய்வ வடிவமே என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ‘ஹாரிதம்’ என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு ‘பச்சை’ (நிறம்) என்று பொருள். மேலும், மஹாயான பௌத்தத்தின் எழுச்சிக்காலமே ‘ஹாரீதீ’ மற்றும் இதர இயக்கியர் வழிபாட்டின் எழுச்சிக்காலமென அறிஞர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. மஹாயான பௌத்தத்தின் பிறப்பிடமே தென்னிந்தியப் பகுதிதான், அதிலும் குறிப்பாக இன்றைய ஆந்திராவின் தென்பகுதியும், தமிழகத்தின் வடபகுதியுமான பகுதிகள்தான் என்பதாக இந்திய பௌத்தம் பற்றி ஆராய்ந்த ஏ.கே.வார்டர் போன்ற அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலும், பச்சையம்மனுக்கு இணைத் தெய்வமாக வழிபடப்படும் ‘மன்னார்சாமி’ என்பது புத்தரையே குறிப்பதாகவும், புத்தர் வழிபாடு தமிழகத்தில் பரவலாக ‘தருமராசா’, ‘முனீசுவரன்’, ‘மன்னார்சாமி’, ‘மாசாத்தன்’ போன்ற பெயர்களில் நிலவியிருப்பதையும் ஆய்வறிஞர்கள் கூறியுள்ளவையும் இங்கு நோக்கத்தக்கது.
பச்சையம்மனின் இன்னொரு வடிவமாக வழிபடப் பெறும் ‘காத்தாயி’ அம்மனுக்கும், இணையர் ‘மன்னார்சாமி’யே ஆவார். பச்சையம்மன் வழிபாடு சைவசமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவள் பார்வதியின் அம்சமாகவும், புத்தர் ‘மன்னாதன்’, ‘மன்னாதீஸ்வரர்’, மற்றும் ‘மன்னாரிஸ்வரர்’ போன்ற பெயர்களில் சிவனுடைய அம்சமாகவும் மாற்றப்பெற்றனர். மத்திய மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கிடைக்கப்பெறும் இயக்கியர் தொன்மங்கள் போலன்றி, இங்கே சைவசமயத் தொன்மக்கதைகள் கிடைக்கப்பெறுவதால் இப்பகுதிகளின் வைதீக தாக்கத்தினை அறிந்து கொள்ள முடிகிறது.

இவளுக்கும் ஆடிக்கடைசி வெள்ளி உகந்த நாளாகக் கொண்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. சுகப்பிரசவம், தாய்-சேய் நலம் காத்தல், வேளாண் வளமை பெருகவும், வழிபடப்பெறுகிறாள் பச்சையம்மன். இவளுக்கும் உயிர்பலிகள் கிடையாது.

இதுவரையிலும் தீவினை பலிச்சடங்கிலிருந்து அறவழிப்படுத்தப்பட்ட பௌத்த இயக்கியர் வழிபாட்டின் தோற்றத்தினைப் பற்றியும், இந்தியத்துணைக்கண்டம் தவிரவும், மத்திய, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலான ‘ஹாரீதீ’ தாய்த்தெய்வமரபு பற்றியும், ‘ஹாரீதீ’யின் தமிழ்பௌத்தத் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபுகளையும், இன்றுவரையிலான அவற்றின் தொடர்ச்சியில் எஞ்சியிருக்கும் பௌத்த மீதங்களையும் அவை பண்பாட்டு வகையில் எஞ்சியிருப்பதையும் கண்டோம்.

இதர பௌத்த இயக்கியர் பற்றின மேலதிக ஆய்வுகளுக்கான தேவை பரந்த அளவிலிருப்பதைக் கருத்திற் கொண்ட செயல்பாட்டின் தொடக்கமாக இக்கட்டுரையினை இவ்விடத்திலே நிறைவு செய்கிறேன்.

 

*Hārītī என்ற சம்ஸ்கிருத உச்சரிப்புச் சொல், “ஹாரீதீ” என்று  தமிழில் உச்சரிக்கப்பட்டு (மொழியாக்கம்) உள்ளது.

——-

துணை நின்ற நூல்கள்:

  1. Asian and African Area Studies
  2. Myth and Reality – D.D.Kosambi
  3. Icons of Grace – Frontline June – 2012
  4. ‘பௌத்தமும் தமிழும்’ – மயிலை சீனி.வேங்கடசாமி
  5. Sutta-Nipata –  Pali Canon
  6. Lotus Sutra – Pali Canon
  7. Taisho Texts (1451) – Chinese Tipitaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!