home கட்டுரை, தமிழி மணிமேகலையில் தேவகணம்

மணிமேகலையில் தேவகணம்

– முனைவர் சீ. பக்தவத்சல பாரதி

 

வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்குப் பரவிய சமயங்களைப் பண்டைய நாளில் பெரியோர்கள் பிராமணமதம், சிரவணமதம் என்று இரண்டு வகையாகப் பிரித்தார்கள். பிராமணமதம் என்பது வைதிகமதம்; சிராவணமதம் என்பது சமண, பௌத்த சமயங்களாகும். இவற்றில் பௌத்தம் சாக்கியமென்றும் சமணம் ஆருகதம் என்றும் வழங்கப்பெற்றன. பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் பெருஞ்சிறப்புடன் விளங்கிய சமயங்களாகும். இவ்விரு சமயங்களும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை ஓங்கியிருந்தன. அதன் பின்னர் மெல்ல மெல்ல வலுவிழந்து வீழ்ச்சியடைந்துவிட்டன. பல நூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் ஓங்கியிருந்த இச் சமயங்களின் செல்வாக்கும் தாக்கமும் தமிழ் இலக்கியம், சமூகம், சமயம், பண்பாடு, தத்துவம் ஆகியவற்றில் வேரூன்றியிருந்தன.

மணிமேகலை அதனளவில் ஒரு முழுமையான பௌத்தக் காப்பியமாகும். சமணக் காப்பியமான சிலப்பதிகாரம் போன்றே மணிமேகலையும் அது உருவான கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் பன்மைச் சமய மரபுகளை வெகுவாகவே பிரதிபலிக்கிறது.

மணிமேகலை பண்டைய தமிழகத்தின் பன்மைச் சமய மரபுகளை ஒப்பியல் நோக்கிலும், படிமலர்ச்சி (evolution) நோக்கிலும் அறிவதற்குரிய ஒரு முதன்மையான பனுவலாக உள்ளது. இதில் தொல் சமய மரபுகளாகிய யக்ஷ வழிபாடு, நாக வம்சத்தாரின் நாக வழிபாடு, கொற்றவை, பூத வழிபாடு, கன்னித்

தெய்வங்கள், கொற்றவையின் திரிபு வடிவங்கள், கார்த்திகைப் பெண்டிர், கண்ணகி வழிபாடு, கற்புடை நங்கையரை வழிபடுதல், பத்தினிப் பெண்டிர், சம்பாபதியிலிருந்து துர்க்கை வரையிலான வளர்ச்சி, நாச்சிமார் வழிபாடு, காவல் தெய்வங்கள், மன்றம் – பொதியிலிருந்து சைத்தியங்களின் வளர்ச்சி, பேய்களைக் காளி பாதுகாத்தல், ஆலமர் செல்வன், மாயோன் வழிபாடு ஊடாகப் பிந்தைய வைதிகத்தின் வளர்ச்சி வரை ஒரு விரிவான பன்மைச் சமய நெறிகள் காணக்கிடக்கின்றன.

பண்டைய தமிழகத்தில் தாய்த்தெய்வ வழிபாடு பல்வேறு நிலைகளில் காணப்பட்டது. இதனை அறிவதற்கு இரட்டைக் காப்பியங்கள் பெரிதும் துணை செய்கின்றன. சிலப்பதிகாரத்தில் தாய்த்தெய்வங்களாகக் கொற்றவை, சபரி, குமரி, கௌரி, ஐயை, சூலி, நீலி, சங்கரி, அந்தரி, கானமர் செல்வி, விண்ணோர் பாவை, வானநாடி, பழையோள் போன்ற தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன (சிற்றம்பலம்: 1996: 258).

மணிமேகலையில் சம்பாபதி, சதுக்கப்பூதம், கந்திற்பாவை, மணிமேகலா தெய்வம், தீவதிலகை ஆகிய தாய்த்தெய்வங்களே முதன்மையான தெய்வங்களாக உள்ளன. சிந்தாதேவி, சித்திரதெய்வம், மதுராபதி ஆகிய தெய்வங்கள் பற்றிய சில குறிப்புகளும் உள்ளன (உ.வே.சாமிநாதையர் 1981). இந்நிலையில் மணிமேகலை காட்டும் தேவகணம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 

சதுக்கப்பூதம்

சதுக்கப்பூதமானது அல்லவை செய்வாரை ஒறுக்கும் தெய்வமாகும். முசுகுந்தன் என்ற சோழமன்னனுக்கு அசுரர்களால் உண்டாகும் தொல்லைகளை ஒழிப்பதற்காக இந்திரனின் கட்டளைப்படி தேவர் உலகிலிருந்து புகார் நகரம் வந்து அங்குள்ள சதுக்கத்தில் தங்கிய பூதமே சதுக்கப்பூதமாகும்.

இப்பூதத்தை இந்திரன் முசுகுந்த சோழனுடைய தேசத்திற்கு அனுப்பியதற்கு ஒரு காரணமுண்டு. ஒரு சமயம் இந்திரன் அசுரர்களோடு போரிடச் சென்றிருந்தபோது அவன் பொருட்டு அமராவதி நகரைக் காவல் காத்தவன் முசுகுந்த சோழன்.

அதற்குக் கைம்மாறாக இந்திரன் பூதத்திற்கு ஏவலிட்டான் என்று கூறப்படுகிறது (பத்மாவதி: 2003: 113).

புலிக்கணம் சார்ந்த வீரர்கள் கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்கென பூதச் சதுக்கத்தில் பலி கொடுத்த ஓசை நெடுந்தூரம் கேட்டதை மணிமேகலை பின்வருமாறு கூறுகிறது.

‘புலிக்கணத் தன்னோர் பூத சதுக்கத்துக்

கொடித்தேர் வேந்தன் கொற்றங் கொள்கென

இடிக்குரன் முழக்கத் திடும்பலி யோதையும்’ (மணி. 7: 78-80)

ஆதலின் சதுக்கப்பூதம் மன்னர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளதை அறியலாம்.

வெற்றிக்குரிய தெய்வமாக விளங்கிய இச்சதுக்கப்பூதம் நீதி தெய்வமாகவும் விளங்கியது. இப்பூதம் பற்றிக் கூறும் சிலப்பதிகாரம்,

‘தவமறைந் தொழுகும் தன்மையிலாளர்

அவமறைந் தொழுகும் அவலப் பெண்டிர்

அறை போகமைச்சர் பிறர்மனை நயப்போர்

பொய்க் கரியாளர் புறங் கூற்றாளரென

கைக்கொள் பாசத்துக் கைப்படுவோரெனக்

காத நான்கும் கடுங் குரலெழுப்பிப்

பூதம் புடைத்துண்ணும் பூதச் சதுக்கமும்’ (சிலம்பு. 5: 128-134)

என்கிறது. இந்தச் சதுக்கப்பூதமானது பொய்த்துறவியர், தீயநெறியில் ஒழுகும் பெண்டிர், கேடுவிளைவிக்கும் அமைச்சர்கள், பிறர் மனைவியை விரும்புவோர், பொய்ச்சாட்சி கூறுவோர், புறங்கூறுவோர் போன்ற அறுவகை நரகர்களையும் தண்டிக்கும் இயல்புடையது. பூதச்சதுக்கத்தின் வரலாற்றைச் சிலப்பதிகாரம்வழி (5: 128 – 134) மேலும் அறியலாம்.

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலையிலும் புகார் நகரில் இருந்த (இத்தகைய) சதுக்கப்பூதம் பற்றி அறியமுடிகிறது. இப்பூதத்தின் உருவத் தோற்றம் பற்றியும் காணமுடிகிறது. இப்பூதம் மடித்த செவ்வாயையும், வலிய பற்களையும், கையில் பாசக்கயிற்றையும் கொண்டு நகரிலுள்ள நரகர்களைப் புடைத்துண்டது என்று கூறப்பட்டுள்ளது.

‘மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க

இடிக்குரன் முழக்கத் திடும்பை செய்திடும்

தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப்

புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும்’ (மணி. 1: 21-24)

புகார் நகரில்இருந்ததுபோலவே காஞ்சி மாநகரிலும் சதுக்கப்பூதம் இருந்தது . இவ்வகைச் சதுக்க ங் கள் பூமலர்ச்சோலை, மாதவர் இடங்கள், மன்றம், பொதியில் ஆகிய இடங்களுக்கருகில் இருந்துள்ளன (மணி. 20: 29-30).

அறுவகைத் தீயர்களையும் தண்டிக்கும் சதுக்கப்பூதம் நீதித் தெய்வமாகவும் திகழ்ந்துள்ளது. சிலம்பில் பத்தினிப் பெண்ணொருத்தியை ஒருவன் துன்புறுத்தி அவள் கணவனிடம் சென்று பொய் கூறியபோது சதுக்கப்பூதத்திடம் அகப்பட்டுக் கொண்டான். அக்கொடியவனின் தாய்பட்ட துன்பத்தைக் கண்டு பொறாத கோவலன் பூதத்திடம் சென்று, ‘என்னுயிர் கொண்டு அவனுயிர் தா’ எனக் கேட்டபோது,

‘நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு

பரகதியிழக்கும் பண்பீங்கில்லை’

எனக் கூறிவிடுகிறது பூதம்.

மணிமேகலையில் பார்ப்பனி ஒருத்தியைத் தவறான நோக்கில் ஒருவன் பார்த்தபோது அப்பெண் பூதத்திடம் முறையிடுகிறாள். அப்போது அப்பூதம் அப்பெண்ணை நன்னெறிப்படுத்துகிறது. பொய்க் கதைகள் கேட்பது, விழாக்களில் திளைப்பது ஆகியவற்றைத் தவிர்த்து வாழும்படி கூறுகிறது, காஞ்சி நகர்ப்பூதம். இரட்டைக் காப்பியங்களில் காணப்படும் பூதகணமானது வேதாகமத்தில் ருத்ரனாக உருவெடுத்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (பத்மாவதி: 2003: 127).

 

சம்பாபதி

சம்பாபதி நகரைக் காக்கும் தெய்வமாகும். சிலப்பதிகாரத்தில் மதுரையைக் காத்த தெய்வமாக மதுராபதியைக் காண்கிறோம். வணிகமும் வணிகர்களும் வளர்ச்சியுற்ற காலத்தில் நகரங்களைக் காக்கும் தெய்வங்களாக இவை இருந்துள்ளன. சங்ககாலத்தில் கடல்கெழு செல்வியாக இருந்த தெய்வமானது வணிகர்கள் மேம்பட்ட காலத்தில், பௌத்தர்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில் சம்பாபதியாக உயர்வுபடுத்தப்பட்டிருக்கலாம். சிதம்பரத்தில் எல்லைக் காளி பின்னாளில் தில்லைக் காளியாக உயர்வுபடுத்தப்பட்டது போல, பண்டைய ஈழத் தமிழர்கள் வணங்கிய வல்லியக்கன் பின்னாளில் வல்லிபுரநாதராக மேனிலையாக்கம் அடைந்தது போல சமயங்களின் படிமலர்ச்சியில் ஒருவகையான கருத்துநிலை உருவாக்கமும் தத்துவநிலை உருவாக்கமும் அதற்கேற்பச் சாமிகளின் பண்புநிலையேற்றமும் ஒன்றிணைந்து செயல்பட்டன எனலாம்.

இந்திய நாட்டினைத் தென்பகுதி மக்கள் பண்டைக் காலத்தில் ‘நாவலந்தீவு’ என்றழைக்க, வடபுலத்தார் ‘ஜம்புத்தீவு’ என்றழைத்தனர். இச்சம்புத் தீவினை அரக்கர்களின் துன்பங்களிலிருந்து காப்பதற்காக சம்பாபதி உருவானாள். மணிமேகலைக் காப்பியத்தின் முதல் எட்டு வரிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

‘தென்றிசை பெயர்ந்தவித் தீவத் தெய்வதம்

சாகைச் சம்பு தன்கீழ் நின்று

மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு

வெந்திற லரக்கற்கு வெம்பகை நோற்ற

சம்பு வென்பாள் சம்பா பதியினள்

செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்கும் (மணி. பதிகம். 4-9)

சம்பாபதியானது நான்கு பெரிய தீவுகளில் ஒன்றான சம்புத் தீவின் காவல் தெய்வமாகும். சம்பு மரத்தின்கீழ் (நாவல்மரம்) தவஞ்செய்தமையால் சம்பாபதி எனப் பெயர்பெற்றது. இதனால் ‘சம்பு’ எனும் பெயரும் இதற்குண்டு. இப்பெண் தெய்வம் சூரியனைப் போல் செவ்வொளி பெற்றது, விரிந்த சடைமுடி கொண்டது. மேருமலையில் தோன்றித் தென்திசை வந்து நாவலந்தீவில் நாவல் மரத்தடியில் காவல் தெய்வமாகக் குடிகொண்டது. பூவுலக மாந்தர்களுக்குத் தொல்லை தரும் அரக்கர்களுக்குப் பகையாக நின்றது.

சம்பாபதி எனும் தெய்வப்பெண் தங்கியமையால் புகார் நகரமானது காவிரிப்பூம்பட்டினம் எனப்பெயர் பெறுவதற்கு முன்னர் சம்பாபதி எனும் பெயர் பெற்றிருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் அமைக்கப்பட்ட சம்பாபதிக் கோவில் ‘முதியோள் கோட்டம்’ எனப் பெயர்பெற்றது. சம்பாபதிக் கோயிலை ‘முதியோள் கோட்டம்’ என அழைக்கும் மரபு மணிமேகலையில் (17: 88, 18: 169, 19: 39, 21: 3, 22: 3) பல இடங்களில் காணமுடிகிறது. எனினும், ஆதியில் ‘குச்சரக்குடிகை’ எனும் அழகிய கோயிலமைத்து அதில் சம்பாபதியைப் போற்றி வழிபட்டதையும் காணமுடிகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் புதிய மலர்களைத் தூவி சம்பாபதியை வழிபட்டு வந்தார்கள்.

சம்பாபதியைக்  குறிக்கும்  பல்வேறு  பெயர்களைச் சாத்தனார் மணிமேகலையில் குறிப்பிடுகிறார். அவற்றில் முக்கியமானவற்றில் ‘முதியோள்’ என்பதும் ஒன்றாகும்.

 

கந்திற்பாவை

காவிரிப்பூம்பட்டினத்தில் சம்பாபதிக் கோயிலின் கிழக்கில் அமைந்த ஒரு தூணில் மயன் என்பவனால் உருவாக்கப்பட்ட ஒரு பதுமை (பிரதிமை) கந்திற்பாவையாகும். கந்திற்பாவை எனும் தொடரின் மூலம் மூன்று பொருள்களை உணரலாம். கந்து என்பது தூண்; தறி என்பது பற்றுக்கோடு போன்றதொரு பொருள்; பாவை என்பது பதுமை அல்லது பிரதிமை ஆகும். தூணில் அமைக்கப்பட்ட வடிவத்தில் வரைந்துள்ள ஒரு தெய்வம் என்று பொருள் கொள்ளலாம்.

நடப்பட்ட தறியில் அல்லது தூணில் தெய்வம் உறையும் என்னும் மரபு சங்ககாலம் தொட்டு இருந்து வருகிறது. மணிமேகலையில் சாத்தனார் கூறும் கந்திற்பாவையானது தூணில் அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாகக் (bas relief) கருதப்படுகிறது. இதனை மணிமேகலை ‘கந்துடை நெடுநிலை; காரணங்காட்டிய, அந்தில் எழுதிய அற்புதப்பாவை’ என்கிறது.

கந்திற்பாவை தன்னை நாடிவந்து வழிபட்டவர்களுக்கு முக்காலத்திற்கும் உரிய செய்திகளைக் கூறவல்லதாகும். அதனால்தான் கந்திற்பாவை ‘நாவுடைப்பாவை’ என்றும் அழைக்கப்பெற்றது. கந்திற்பாவையானது மணிமேகலைக்குப் பின்வருவனவற்றைக் கூறியதன் நிகழ்வைக் காணும்போது இத்தெய்வம் பற்றி அறியமுடிகிறது (மணி.: 21:72). கந்திற்பாவையின் பல்வேறு தன்மைகளைப் பின்வருமாறு மணிமேகலை கூறுகிறது.

‘கந்துடை நெடுநிலைக் கடவு ளெழுதிய,

அந்திற் பாவை யருளு மாயிடின்’(15: 33-34)

‘கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய,

தந்துணைப் பாவையை’ (17: 89-90)

‘நெடுநிலைக் கந்தி னிடவயின் விளங்கக்

கடவு ளெழுதிய பாவையாங் குரைக்கும்’ (20: 110-111)

‘கடவு ளெழுதிய நெடுநிலைக் கந்தின்

குடவயி னமைத்த நெடுநிலை வாயின்,

முதியோள் கோட்டம்’(21: 1-3)

‘என்றிவை சொல்லி யிருந்தெய்வ முரைத்தலும்’ (21: 35)

‘மன்பெருந் தெய்வ கணங்களி னுள்ளேன்,

றுவதிக னென்பேன் தொன்றுமுதிர் கந்தின்,

மயனெனக் கொப்பா வகுத்த பாவையி, னீங்கேன்’ (21: 130-133)

‘நெடுநிலைக் கந்தி னின்ற பாவை’ (22: 2)

‘இலகொளிக் கந்தி னெழுதிய பாவாய்’ (22: 91)

‘நாவுடைப் பாவை நங்கையை யெடுத்தலும்’ (22: 94)

‘நாவுடைப் பாவையை நலம்பல வேத்தி’ (22: 104)

கந்திற்பாவை முன்னுணர்ந்து வாக்குரைத்தல் திறன் பெற்றவள். ஊரார் அனைவரும் கூடும் உலகவறவி (ஊரம்பலம்) எனுமிடத்தில் மயனால் நிறுவப்பெற்ற உயர்ந்த கந்துவில் (தூணில்) உறைந்திருந்த கந்திற்பாவை சுதமதியின் முற்பிறவியினைப் பின்வருமாறு உணர்த்தினாள். தாரை, வீரை, இலக்குமி ஆகிய மூவரும் சகோதரிகள். அவர்களில் தாரை மாதவியாகவும், வீரை சுதமதியாகவும், இலக்குமி மணிமேகலையாகவும் பிறந்தனர். இது தெய்வம் கூறிய முற்பிறவிச் செய்தி என்கிறது துயிலெழுப்பிய காதை (7: 104-108).

 

மணிமேகலா தெய்வம்

நீர்ப் பரப்புடைய கடலிடத்தைக் காத்துவரும் கடல் தெய்வமே மணிமேகலா தெய்வம். இது பல தீவுகளிலும் வாழும் மக்களை அரக்கர்களின் கொடுமைகளிலிருந்து காக்கும் பொருட்டு இந்திரன் ஏவல்வழிச் செயற்பட்டு வந்த ஒரு தெய்வம். இது கோவலனின் குலதெய்வமாகும். கோவலன் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கடலில் கலம் உடைந்து உயிருக்குப் போராடிய காலத்தில் மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றியது. தன்குல மகனைக் காப்பாற்றியதற்கு நன்றி பாராட்டும் வகையில் தன் மகளுக்கு மணிமேகலை என்று கோவலன் பெயரிட்டான்.

மணிமேகலையை உதயகுமாரனிடமிருந்து பாதுகாக்க மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு சென்று அங்கு அவள் வேற்றுருக் கொள்வதற்கும், பசியாதிருக்கவும், விண்வழி இயங்குவதற்கும் உரிய மூன்று மந்திரங்களை மணிமேகலைக்கு இத்தெய்வம் கூறியது (மணி. 10: 80-91). “என் பெயர்த் தெய்வம் ஈங்கெனைக் கொணர” (11: 15) என்று மணிமேகலை சொல்வதன் மூலம் இதனை அறியலாம். இத்தீவிற்கு வந்த பின்னர் இங்குள்ள பெருமை பொருந்திய பீடிகையால் என் பழம் பிறப்பினையும் அறிந்தேன் என்கிறாள் மணிமேகலை (11: 16). மணிமேகலையின் தூய வாழ்விற்கு வேண்டிய உதவிகளைச் செய்தவள் மணிமேகலா தெய்வம். இத்தெய்வமானது மணிமேகலையை மணிபல்லவத் தீவில் கொண்டுவந்து சேர்த்துவிட்டு இரவே புகாருக்குச் சென்று அரசகுமாரனுக்கு அறிவுரையும் கூறி, சுதமதிக்கும் தேறுதல் உரைக்கிறது (மணி. 7: 1-5).

இந்திரவிழாவை ஆண்டுதோறும் நடத்திவந்த சோழ மன்னன் கிள்ளிவளவன் கடலில் தவறிய தன் மகளைத் தேடி அலைய நேரிட்டதால் ஒரு வருடம் இந்திரவிழா நடைபெறாமல் போனது. இதனால் கோபமுற்ற மணிமேகலா தெய்வம் காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொள்ளுமாறு சபித்தது. மணிமேகலாவின் சாபத்தால் புகார் நகரும் கடல்கோளால் அழிந்தது (மணி. 25: 195-200). மணிமேகலா தெய்வத்தினைத் ‘தலைமகள்’ என்றும் அழைக்கும் மரபு இருந்துள்ளது (மணி: 21: 14).

 

தீவதிலகை

தீவிற்குத் திலகம் போன்றள் தீவதிலகை. இந்திரனின் கட்டளையை ஏற்று மணிப்பல்லவத்திலிருந்த புத்தபீடிகையைப் பாதுகாத்து வந்த ஒரு தெய்வமகள் இவள் (மணி. பதிகம் 53, 11: 27-8). இத் தெய்வத்தின் பெயர்க் காரணம் பற்றி மணிமேகலை பின்வருமாறு கூறுகிறது.

‘அறவி நாவா யாங்குள தாதலிற்

றொழுதுவலங் கொண்டு வந்தே னீங்குப்

பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை

தேவர்கோ னேவலிற் காவல் பூண்டேன்

தீவ திலகை யென்பெய ரிதுகேள்’ (மணி. 11: 25-29)

தீவதிலகை மணிபல்லத் தீவினைக் காவல் காக்கும் தெய்வமாகும். மணிபல்லவமானது புகாருக்கு முப்பது யோசனை தூரத்திலுள்ள ஒரு தீவு. இது இன்று நயினாதீவு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள இரத்தினத் தீவில் (இன்றைய இலங்கை) சமந்தம் (தமிழில் சிவனொளிபாதம், சிங்களத்தில் சிறிபாத) எனும் மலையின் உச்சியில் புத்தனின் பாதமாகிய ‘அறவிநாவாய்’ (தன்னை அடைந்தவர்கள் பிறவியெனும் பெருங்கடைலைக் கடந்து கரைசேர உதவும் அறமாகிய கப்பல்) உள்ளது. அப்புத்த பீடிகையை வலங்கொண்டு வணங்கி அதனைக் காவல் காக்க இங்கு வந்தேன்; என் பெயர் தீவதிலகை என்று மேற்கூறிய பாடல்வழி அறிகிறோம்.

மணிபல்லவத் தீவினை அடைந்த மணிமேகலை அங்கு இரண்டு தெய்வங்களைக் காண்கிறாள். மணிமேகலா தெய்வம் ஒப்பற்ற மூன்று மந்திரங்களை மணிமேகலைக்குக் கூறிச் சென்ற பின்னர், தீவதிலகை தோன்றி புத்த பெருமான் அவதரித்த விசாக பௌர்ணமியாகிய இன்று கோமுகிப் பொய்கையிலிருந்து அமுதசுரபி வெளிப்பட்டுத் தோன்றும் என்றும், இது முன்னர் ஆபுத்திரன் கையில் இருந்தது என்றும், அந்த ஆபுத்திரன் வரலாற்றை அறவணரிடம் கேட்டறிந்து கொள்க என்றுரைத்து வானகத்தே எழுந்து சென்றாள் (மணி. 12: 23-28, 25: 209-213). மணிமேகலையும் தீவதிலகையின் திருவடிகளை வணங்கி அமுதசுரபியைத் தன் மலர்க்கையில் ஏந்தி வான்வழியாக மேலெழுந்து புகாரை நோக்கிப் புறப்பட்டாள் (மணி. 11: 124-127).

 

பிறதெய்வங்கள்

சிந்தாதேவி யாவருக்கும் சிந்தையிற் தோன்றி சொற்பொருள் உணர்த்துபவள்; சரசுவதிக்கு இணையானவள். இத்தெய்வமானது மணிமேகலையில் ‘நாமிசைப் பாவாய்’ (14: 18), ‘செழுங்கலைப் பாவாய்’ (25: 139) என்றெல்லாம் போற்றப்படுகிறது. பசிப்பிணி தீர்க்கும் அமுதசுரபியினை ஆபுத்திரனிடம் கொடுத்தவள் சிந்தாதேவி எனும் கருத்தையும் காணமுடிகிறது (மணி. பதிகம். 59-60).

 

பண்டைத் தமிழ் மரபும் பௌத்த மரபும்

திராவிட நாகரிகத்தின் தோற்றுவாய் எனக் கருதத்தக்க சிந்துவெளி நாகரிகத்திலேயே தாய்த்தெய்வ வழிபாடு இருந்துள்ளதைக் காண்கிறோம். தாய்த்தெய்வ வழிபாடு சிந்துவெளியின் தொல்வழிபாட்டு நெறியாகும். இதன் தொடர்ச்சி திராவிடர்களின் நீண்ட நெடிய மரபில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவங்களாகத் திரிபுற்றுத் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததையும் காண்கிறோம்.

சிந்துவெளி நாகரிகத்திற்கடுத்து நேரடியான தமிழ்மரபில் இயக்கி தாய்த்தெய்வமாக வழிபடப்பெற்றாள். தமிழர்களின் சமய வரலாற்றில் ஆதித் தாய்த்தெய்வமாக இயக்கி சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது. யக்ஷ மரபில் சூலி, சூர்மகள், சூரரமகளிர், வரையரமகளிர், கடல்கெழு செல்வி, கானமர் செல்வி, பாவை, அணங்கு ஆகியவை வடிவமாற்றங்களுடன் வழிபடு தெய்வங்களாக உருவாயின. சங்க இலக்கியங்கள் கூறும் ‘மன்றம்’ அல்லது ‘பொதியில்’ போன்ற இடங்கள் யக்ஷ வழிபாட்டிடங்களான சைத்தியங்களாகும் (சிற்றம்பலம்: 1996: 59).

யக்ஷி வழிபாட்டு மரபானது அடுத்தடுத்த சமய மரபுகளில் உள்வாங்கப்பட்டு உருமாறிப் புதுவடிவங்களாகத் தொடர்ந்தது. மணிமேகலையில் இடம்பெற்றுள்ள சம்பாபதி, மணிமேகலை, தீவதிலகை, சிந்தாதேவி, சித்திரதெய்வம், கந்திற்பாவை ஆகிய தாய்த்தெய்வங்கள் யக்ஷி வழிபாட்டு மரபிலிருந்து கிளைத்ததுதான் என அறிஞர்கள் கருதுகின்றனர் (மேலது. 59).

மணிமேகலையில் காணப்படும் தாய்த்தெய்வ வழிபாடு உண்மையில் தமிழ்ச் சமூகத்தின் நீண்ட நெடிய படிமலர்ச்சியோடு இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விரிவுபெற்று முதன்மையான வடிவமாக உருப்பெறும் எந்த ஒன்றும் வரலாற்றின் காலகதியில் முன்தொடர்ச்சியோடும் பின்தொடர்ச்சியோடும் தொடர்பு கொண்டிருக்கும். அந்த வகையில் மணிமேகலையின் ஊடாகக் காணப்படும் தாய்த்தெய்வ மரபினை இன்றைய பௌத்த மரபிலிருந்து பின்னோக்கிச் சென்று ஆராய வேண்டும்.

தென்னாசியச் சமய மரபில் ஆதியில் உருவான சில வழிபாட்டுக் கூறுகளைப் பின்வந்த சமய மரபுகள் உள்வாங்கிக் கொண்டன. பண்டைய ஜாதகக் கதைகள், பாலி நூல்கள் ஆகியவற்றில் காணப்படும் ‘நாகர்’ பற்றிய ஐதீகங்களைக் காண்போமானால் இந்திய, ஈழ பௌத்த வழிபாட்டிடங்களில் நாக உருவங்கள் இருப்பதைக் காணமுடியும். இந்தியாவிலும் ஈழத்திலும் பண்டைய நாக வழிபாட்டு மரபினை அடுத்து வளர்ந்த நிறுவனச் சமயங்களாகிய பௌத்தம், சமணம், இந்து சமயம் ஆகியவை அவற்றை அழித்துவிடாமல் அல்லது முற்றிலும் ஒதுக்கிவிடாமல் அவற்றைத் தன்னுள் ஏற்றுக்கொண்டு சங்கமித்துவிட்ட போக்கினைக் காணமுடிகிறது.

இந்து சமயத்தின் வளர்ச்சியில் கடவுளர் நாகத்தினை ஓர் அணிகலனாக அணிவதும், நாகத்தின்மேல் துயில் கொள்வதும் ஐதீகங்களாக மாறின. சிவன் ‘நஞ்சுண்ட கண்டன்’ மட்டுமன்றி நாகத்துடன் இணைந்து காட்சி தரும்போது ‘நாகதம்பிரான்’ எனும் பெயர் பெறுகிறார். அவ்வாறே ஈஸ்வரி நாகத்தினை அணிந்துகொண்டு காட்சித்தரும்போது ‘நாகபூஷணி’ ஆகின்றாள். திருமால் பாற்கடலில் ஐந்து தலை நாகத்தின்மீது அறிதுயில் கொள்ளும்போது ஆதிகேசவப் பெருமாள் ஆகிறார். இந்நிலையில் நாக வழிபாட்டின் ஐதீகங்களை அவற்றின் தொல் வடிவங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.

பௌத்த, சமண சமயங்களின் அறக்கோட்பாடுகளைக் கேலிசெய்து வைதிக சமயத்தார் அவற்றை அப்புறப்படுத்த முயன்றார்கள். பௌத்த சமயத்துடனான போராட்டத்தின் இறுதியில் அது தமிழகத்திலிருந்து துரத்தப்பட்டது. ஆனால், மணிமேகலை பின்பற்றிய பௌத்தத்தின் துறவு மார்க்கம் தொடர்ந்து இந்து சமயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது (செல்வி திருச்சந்திரன்: 1997: 23). படிமலர்ச்சி நிகழ்வில் முந்தைய வடிவத்தின் கூறுகள் அடுத்த கட்டங்களில் எஞ்சி நிலைத்தவையாகவோ உருமாறிய கூறுகளாகவோ காணப்படுவது இயல்புதான். அத்தகைய படிமலர்ச்சிப் போக்கினைப் பௌத்த, இந்து சமய மரபுகளில் காணமுடிகிறது.

சங்க இலக்கியங்களிலும் பின்வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் கூறப்படும் பூத வழிபாடானது யக்ஷ வழிபாட்டின் நீட்சி என்பது அறிஞர்களின் கருத்தாகும் (சுப்பிரமணியன் 1966: 375-76). தமிழ்நாட்டில் கணபதி வழிபாடு இப்பூத வழிபாட்டிலிருந்து தோன்றியது என்ற கருத்தும் அறிஞர்களால் முன்வைக்கப்படுகிறது (சி.க. சிற்றம்பலம்: 1996: 58). மணிமேகலை காட்டும் சம்பாபதி, மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சிந்தாதேவி, சித்திர தெய்வம், கந்திற்பாவை ஆகிய பெண் தெய்வங்களும் யக்ஷி வழிபாட்டின் தொடர்ச்சியாகவே அமைகின்றன.

சங்க இலக்கியங்கள் கூறும் ‘மன்றம்’ அல்லது ‘பொதியில்’ எனப்படும் இட ங் கள் யக்ஷி பாட்டிடங்களான சைத்தியங்களேயாகும். பௌத்த ஸ்தூபிகளைச் ‘சைத்தியங்கள்’ என அழைப்பதுண்டு. சைத்தியம் என்பது ஆதியில் யக்ஷ வழிபாட்டிடத்தையே குறிக்கிறது. இந்த யக்ஷ வழிபாட்டிடங்கள் பின்னாளில் இந்து, பௌத்த, ஜைன சமயங்களின் கோயில்களாக வளர்ச்சி பெற்றன (மேலது: 91). யக்ஷியின் சிறப்பையும் தொன்மையையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. மதுரையில் கோட்டைக்கு வெளிப்புறத்தில் பால் உணவைப் படையலாக ஏற்றுக்கொள்ளும் ‘பூங்கண் இயக்கி’ என்றழைக்கப்பட்ட இயக்கி கோவில் ஒன்று இருந்ததாகச் சிலம்பு கூறுகிறது (காதை 15:     115-119). தீர்த்தங்கரரை அருகில் நின்று காக்கும் சாசனா தெய்வமாக இயக்கியரைச் சமணர்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியை மணிமேகலையிலும் காணமுடிகிறது.

ஈழத்தில் பழைய தாதுகோபுரங்களில் யக்ஷி சார்ந்த பெண் சிற்பங்கள் செதுக்கப் பெற்றுள்ளன. அபயகிரி போன்ற இன்னும் சில இடங்களில் விகாரையில் கையில் தாமரையுடன் காட்சி தரும் யக்ஷி உருவங்களும் உள்ளன (சிற்றம்பலம் 1996: 405-406). தாமரை மலர் இந்து சமயத்தில் கஜலட்சுமியின் குறியீடாகவும் ஏற்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இந்து மதத்தில் தாமரைக்கான உள்ளார்ந்த பொருண்மைகளான செல்வம், செழுமை, அழகு போன்றவை பௌத்த மரபில் அறிவு, ஞானம், பரிநிர்வாணம் போன்றவையாக திரிபுபெற்றுள்ளதை காண்கிறோம். இவ்வாறே அரசனுக்கு யானைப்படை அதிக பலத்தைத் தருவதால் யானையானது வளம், பலம், செழுமை ஆகிய மூன்றுக்குமான குறியீடாய் அமைந்தது. இது இந்து, பௌத்தம் ஆகிய இரண்டு சமயங்களிலும் குறியீடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைச் சங்ககால மரபிலிருந்தே காணமுடியும் (நெடுநல். 83-88; மதுரை. 353)

மணிமேகலையில் காணப்பெறும் சம்பாபதி, மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சிந்தாதேவி, சித்திர தெய்வம், கந்திற்பாவை போன்றவை யாவும் கன்னிப் பெண்களை வணங்கும் மரபில் வரக் கூடியவர்களேயாகும். கன்னியரை வழிபடும் மரபு பண்டைத் தமிழ்ச் சமய மரபில் நீண்ட நெடிய படிமலர்ச்சியுடன் காணப்படுவதாகும்.

கந்திற்பாவையானது மூன்று காலங்களையும் முன்னுணரும் திறன் கொண்டது. இது சங்ககாலக் கொற்றவையின் ஊடாகவும் அவளுடைய பெண் பூசாரி சாலினியின் ஊடாகவும் தொடர்ந்து வருவதைக் காணலாம். கண்ணகியைப் பார்த்துச் சாலினி ‘கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப் பாவை, செய்தவக்கொழுந்து, ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி’ என வாக்குரைத்தாள். மறக்குடி எயினர்களுக்கும் பசி தீர்க்கும் உத்தி முறைகளைச் சாலினி கூறினாள். இவ்வாறான முன்னுணர்ந்து கூறும் தொடர்ச்சியை இன்னும் பல தளங்களிலும் காணமுடிகிறது.

சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பெறும் கன்னித் தெய்வங்கள் சங்க இலக்கியங்களில் கூறப்பெறும் கார்த்திகைப் பெண்டிரை நினைவுகொள்ளச் செய்கிறது. உண்மையில் சங்க காலத்தில் கன்னித் தெய்வமானது ‘செல்வி’ என்றே அழைக்கப்பெற்றாள். கன்னி என்பதன் முன் வடிவமாக இது காணப்படுகிறது. இதனையடுத்தே குமரி, கன்னி ஆகிய வழக்குகள் ஏற்பட்டன. மணமாகாக் கன்னிப் பெண்கள் அயோனிய முறையில் பிள்ளைப் பேறு பெறுதல் அல்லது பிள்ளைகளை வளர்த்தல் என்பதற்கான ஒரு முன்வடிவம் முருகனுக்குத் தாய் கொற்றவை எனும் உறவின் மூலம் அறிகிறோம்.

பிற்காலத்தில் அறியப்பெற்ற ‘சப்தமாத்ருக்கள்’ எனப்பட்ட ஏழு கன்னியர் வழிபாடு என்பது கார்த்திகைப் பெண்டிர் வழிபாட்டின் பின் தொடர்ச்சியாக நீளுகிறது. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் குறிப்பிடப்பெறும் கன்னித் தெய்வங்கள் கார்த்திகைப் பெண்டிர் வழிபாட்டை உள்வாங்கியதாக அமைகிறது. ‘மாத்திரிகா’ எனும் சொல் சமஸ்கிருதம் அல்லாத ஒரு பழங்குடி மொழியின் சொல் என்கிறார் பி. எல். சாமி; தமிழில் வழங்கும் மாதர் என்னும் சொல் மேற்கூறிய சொல்லின் திரிபாகும் என்றும் அவர் கூறுகிறார் (பி. எல். சாமி 1925). ஈழத்தில் பௌத்த சிங்களவர்கள் இவர்களை ‘மாத்ருக்கள்’ எனக் கூற, அங்குள்ள பூர்வ திராவிடப் பழங்குடியாகிய வேடர்கள் ‘கிரி அம்மாக்கள்’ என அழைக்கின்றனர் (சிற்றம்பலம் 1996: 252-53).

தமிழ்ச் சமய மரபில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களை மணிமேகலை வாயிலாகவும் நன்கு தெளிவுபடுத்த முடிகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த குமரித் தெய்வம் தொன் மூதாட்டி, முந்தை மூதாட்டி, முது மூதாட்டி, முதியாள் என்றெல்லாம் கூறப்படுவதைக் காணலாம். கன்னியா குமரியில் இருந்த குமரித் தெய்வமானது மணிமேகலை காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் சம்பாபதி என வழங்கப்பெற்றது. இன்று அது பிடாரி என்னும் துடியான தெய்வமாக வணங்கப்படுகிறது. பிற்காலத்தில் மணிமேகலா தெய்வம் கடல்தெய்வமாக மாற்றம் பெற்றது. கண்ணகி காளியாகவும், மாரியம்மனாகவும் மாற்றம் பெற்றது போல, மணிமேகலாவும் ‘கடல்கெழு செல்வி’யாக மாறி ஒரு தாய்த் தெய்வமாக மாறியதை மீட்டுருவாக்கம் செய்யலாம்.

சங்ககாலத்தில் அறியப்பெற்ற காமக்கண்ணி எனும் தெய்வம் காஞ்சியின் கிராம தெய்வமாக வணங்கப்பட்டதைக் காண்கிறோம். பின்னர் இது சமணர்களின் தெய்வமாக்கப்பட்டது. இதே தெய்வம் யக்ஷியுடன் தொடர்புபடுத்தப்பட்டு, அது காமயக்ஷி என அறிப்பெற்று, பின்னர் அது காமாட்சி என மருவியது. மதுராபதி தெய்வம் மதுரையில் காப்புத் தெய்வமாக இருந்தது போல, காமாட்சியும் தொடக்கத்தில் காடுறை தெய்வமாகவும் ஒரு காப்புத் தெய்வமாகவும் இருந்து பின்னர் மனைமாட்சி தரும் தெய்வமாக வீடுகளில் வணங்கப்பட்டது. காமாட்சி விளக்கு, பாவை விளக்கு போல மனைவிளக்குத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பௌத்தர், சமணர்களின் தெய்வமான காமக்கோட்டியானது காமக்கோட்டத்தில் தெய்வமாக நின்றது. சம்பாபதியும் இதன் தொடர்சியாகக் காவிரிப்பூம்பட்டினத்தின் காவல் தெய்வமாக நின்றது. பௌத்த மதத்தின் வழிபாட்டுச் சின்னங்களில் தாது கோபுரம் முதன்மையானது. இந்து சமயத்தில் ஆலயம் பெறும் இடத்தினைப் பௌத்த சமயத்தில் தாது கோபுரம் வகிக்கின்றது. மணிமேகலையில் காளியின் கோயில் ‘முதியோள் கோட்டம்’ எனப்படுகிறது (மணி. 17: 87-88). சம்பாபதிக் கோயிலும் அதே பெயரில் வழங்கப் பெற்றிருக்கிறது. இவையனைத்திலும் ஒரு மெல்லிய படிமலர்ச்சி இழை தொடர்கிறது.

சங்ககாலத்தில் காமக்கண்ணி எனும் ஒரு தொல் தாய்த் தெய்வம் பல்வேறு பெயர்களில் அறியப் பெற்றது. ஆதியில் இத்தெய்வம் ‘ஆய்’ என அழைக்கப்படுகிறது. அசாமிலும் இப்பெயரில் ஒரு தாய்த் தெய்வம் உள்ளது (பி.எல். சாமி 1975/2011: 39). சிலப்பதிகாரத்தில் வரும் துர்க்கையின் பெயரான ‘ஐயை’ ஆய் எனும் பெயரின் மறுவடிவமாகும். ‘ஆயி மகமாயி’ எனும் நாட்டுப்புற வழக்கு இந்தத் தொல் தெய்வத்தின் நீட்சியைக் காட்டுகிறது. இந்தக் காமக்கண்ணியானது காமக் கோட்டியாக பௌத்தர், சமணர்களால் வழிபடப்பெற்றது. எட்டாம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் காமக்கோட்டத்து உமையம்மை கோயிலைக் குறிப்பிடுகிறார். இதனால் 8ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அது இந்த மதத் தெய்வமாக்கப்பட்டுக் காமாட்சியாக்கப்பட்டாள். ஒரு தொல்குடித் தெய்வமாக இருந்த காமக்கண்ணி சமண, பௌத்தத் தெய்வமாக மாறி, இந்நாளில் காஞ்சியில் புகழ்பெற்ற ஓர் இந்துமதக் கடவுளாக அறியப்படுகிறாள்.

நகரத்திற்குக் காவல் தெய்வங்களாகப் பெண் தெய்வங்கள் விளங்கியதைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறுகின்றன. இத்தகைய காவல் தெய்வங்களில் துர்க்கை முதன்மையானது என்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. துர்க்கையே மதுராபதித் தேவதை எனச் சிலப்பதிகாரத்தின் 23வது காதை குறிப்பிடுகிறது. இன்னொரு காதையில் மதுராபதித் தெய்வமானது மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாதுர்க்கை ஆகிய தெய்வங்களின் பண்புகளைக் கொண்டுள்ளது எனப் பின்வரும் பாடல் குறிப்பிடுகிறது.

மாமகளு நாமகளு மாமயிடற் செற்றுகந்த

கோமகளுந் தாம்படைத்த கொற்றத்தாள் – நாம

முதிரா முலைகுறைத்தாண் முன்னரே வந்தாள்

மதுராபதி என்னு மாது (சிலம்பு. மதுரை. 22)

பௌத்தர்களின் தாய்த் தெய்வங்களில் ஒன்று ஜங்குலி ஆகும். ஜங்குலி என்பதற்குப் பொருள் காடுறை தெய்வம் என்பதாகும். இது பாம்பு கடித்தவரின் உடலிலிருந்து நஞ்சை நீக்கிக் குணமாக்கும் என்ற நம்பிக்கை பௌத்தர்களிடம் இருந்து வந்தது. காடுறை தெய்வமான ஜங்குலியைப் பின்னாளில் பௌத்தர்கள் தாய்த் தெய்வமாக்கித் தாராவுடன் இணைத்துக் கொண்டனர் (பி.எல்.சாமி: 2011: 22). முந்தை மரபிலிருந்து தகவமைந்து புதிய வடிவம் பெறுதல் என்பதே படிமலர்ச்சியின் இயங்கியலாகும். சமய மரபுகளில் இதனை நன்கு இனங்காண முடிகிறது.

பௌத்த மதத்தின் சின்னமாக விளங்கும் அரச மரக்கிளை பழந்தழிழ்ச் சமய மரபில் வேரூன்றியுள்ளது. பண்டைய குறியீடுகளைப் புதிய கருத்தினங்களோடு இணைத்துக் கொள்ளும் ‘பண்பியல் தொடர்ச்சி’ (cline) என்பது சமயத்தின் படிமலர்ச்சியில் மட்டுமல்ல, உயிரினங்களின் படிமலர்ச்சியிலும் காணக்கூடிய ஒன்றாகவுள்ளது.

கண்ணகி வேங்கை மரத்தடியில் நின்று தெய்வமானது போல சம்பாபதி சம்புத்தீவில் சம்பு மரத்தின் கீழிருந்து தவமிருந்ததால் சம்பு எனவும், சம்பாபதி எனவும் பெயர் பெற்றாள்.

கி. பி. 5 – 6ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பெற்ற மணிமேகலையில் காணப்படும் ‘சமனொளி’ ஒரு பூர்வ தொல் படிவமாகும். இது இலங்கையில் உள்ள ஒரு மலை. இன்று சிவனோடும், திருமாலோடும், புத்தரோடும் தொடர்புபடுத்தும் ஒரு குறியீடு. படிமலர்ச்சியியல் நிலையில் நின்று ஆராயும் போது ஆதியில் தோன்றிய மலையுறைத் தெய்வத்தின் தொடர்ச்சியாகவே இவற்றைக் கருத இயலும். ‘ஒளி’ என்பது ஒரு தமிழ்க் கருத்துருவமாகும். சிவனும் முருகனும் ஒளிக் கடவுள்களே. சிவந்தமேனியரான இவர்கள் ஆதியில் மலையுறை தெய்வங்களே. எனினும் பின்னாளில் வந்த ‘சிவனொளி’ என்பது மணிமேகலையில் இடம்பெறும் சமனொளி என்பதன் இணைவடிவமாகக் காண்கிறார் அறிஞர் சி.க. சிற்றம்பலம் (1996: 373).

ஈழத்துப் பௌத்த சமய வரலாற்றை எழுதிய ராகுல போன்றோர் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கால் கொண்ட பௌத்தம் அப்போதிருந்த மலைத் தெய்வ வழிபாட்டைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்கிறார் (மேலது: 370). மேலும், பௌத்தர்கள் வணங்கிய மணிமேகலை, தாராதேவி, சம்பாபதி முதலிய தெய்வங்கள் பின்னாளில் காளி, பிடாரி, திரௌபதி அம்மன் போன்ற பெயர்களில் இந்து சமயத்தில் வழிபடப்பெற்றார்கள். இத் தெய்வங்களுக்கான ஐதீகக் கதைகள் மாற்றம் பெற்றன; வடிவமும் உள்ளடக்கமும் புதிய திரிபு வடிவங்கள் பெற்று வேறு பெயர்களில் தொடர்வதைக் காண்கிறோம்.

தொடக்கத்தில் புத்தருக்குச் சிலை எடுப்பதற்குப் பதிலாக அவரின் பாதத்தையே சிற்பமாகச் செய்து வழிபடும் மரபு இருந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் புத்தரது பாதம் கிடைத்தது. இது பாலநாட்டுச் சுண்ணாம்புக்கல் பாளத்தால் ஆனதாகும். மணிமேகலையில் “பிடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை”யின் வயிலாகப் புத்த பீடிகையின் அமைப்பை அறியலாம். புத்தருக்குத் தந்த

தாதுகோபுரம் அமைக்கப்பட்டதற்கு முன்பு பாதங்களும் பீடிகையும் திறந்த வெளியில் வைத்து வழிபடப்பட்டுள்ளன.

பௌத்த மரபினர் பின்பற்றிய இப்பாத வழிபாட்டைப் பிற்காலத்தில் வைணவ மரபும் ஏற்றுக்கொண்டது. மாயோனின் திருவடி பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுவதால் பௌத்த மரபிற்கும் வைணவ மரபிற்கும் ஒப்புமை உறவும் முன்தொடர்ச்சி, பின்தொடர்ச்சி உறவும் உள்ளதை அறியலாம். திருமாலின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் புத்த அவதாரம் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே அனைவருக்கும் அமுதளிக்கும் மணிமேகலையின் திரிபுவடிவமாக இந்து சமயத்தில் அன்னபூரணி காணப்படுகிறாள். இவ்வாறான பண்பியல் தொடர்ச்சி சமயங்களின் ஊடான படிமலர்ச்சியிலும் காணப்படுவதை மேலும் நுணுகி ஆராயலாம்.

கண்ணகிக்குச் சிலை எடுத்தலென்பது தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக வேரூன்றி வந்துகொண்டிருந்த பெருங்கற்காலப் பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாகிய நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சி என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். அவ்வாறே கண்ணகி வழிபாட்டின் முன் தொடர்ச்சியானது சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. நற்றிணை 216ஆம் பாடல் திருமாவுண்ணியைக் கூறுகின்றது.

இன்றைய ஈழத்துச் சிங்கள மரபில் மணிமேகலை காலத்து இந்துத் தெய்வங்கள் பௌத்த மரபோடு ஓரினமாதல் (assimilation) நிகழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இன்றும் சிங்கள மக்கள் கண்ணகியைப் ‘பத்தினி’ என வழிபடுகின்றனர். வெகு விமரிசையாக நிகழும் சிங்கள மக்களின் பெரஹெராவில் (திருவிழா) பத்தினி, விஷ்ணு, கந்தன், நாத (சிவன்) ஆகிய தெய்வங்களைத் திசைக்கு ஒன்றாக நிறுத்தி நாற்றிசைத் தெய்வங்களாக வழிபடுகின்றனர் (ஒபயசேகர 1984; சிறிகாந்தன் 2013).

ஆதலின் கண்ணகி கேரளத்தில் பகவதியாகவும், தமிழகத்தில் கண்ணகி, மாரியம்மனாகவும், ஈழத்தில் தமிழர்களிடையே கண்ணகையாகவும், சிங்கள பௌத்தர்களிடையே பத்தினித் தெய்யோவாகவும் (தெய்வம்) வழிபடப்படுகிறாள் (சிறிகாந்தன் 2013: 143). தேரவாத பௌத்த மரபில் பெண் தெய்வங்கள் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இலங்கையில் நடைமுறையிலுள்ள தேரவாத பௌத்தத்தில் பத்தினித் தெய்யோ முதன்மையடைந்துள்ளது (மேலது: 146).

மணிமேகலையில் புத்தரின் நாமாவளி சமயப் படிமலர்ச்சியை ஆராய்வதற்கு ஒரு முக்கியமான களமாக அமைகிறது. வேதாந்தத்தில் ‘பிரம்மம்’ எவ்வாறு மிக உயர்வாகக் கருதப்படுகிறதோ, அவ்வாறே மணிமேகலையில் சாத்தனார் புத்த பெருமானைப் ‘பெரியவன்’ (25: 54), ‘பெரியோன்’ (26: 66), ‘பெருமகன்’ (25: 62) என்றெல்லாம் சுட்டுகிறார். மேலும், மணிமேகலையில் சாத்தனார் பின்வரும் வேறுபல நாமாவளிகளையும் குறிப்பிடுகிறார்.

 • 1.ஆதிமுதல்வன் (10: 61, 12: 37, 107, 29: 23)
 • 2. ஆதிசால் முனிவன் (7: 10)
 • 3. முதல்வன் (25: 58, 28: 120)
 • 4. மன்னுயிர் முதல்வன் (25: 117, 29: 15)
 • 5. முன்னவன் (27: 141)
 • 6. தொல்லோன் (11: 64)
 • 7. நாதன் (12: 101-2, 29: 24)
 • 8. தலைவன் (11: 30, 43, 13: 55, 15: 26)
 • 9. புராணன் (5: 98)
 • 10. அண்ணல் (26: 53)
 • 11. எங்கோன் (5: 71, 11: 126)

புத்தருக்கு இவ்வகையான பெயர்களை இடும் சாத்தனரின் கருத்துநிலை ‘இறைமை’ நோக்கிய நிலையைக் (theistic view) காட்டுகிறது. இது மகாயான பௌத்தத்தில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட நிலைமாற்றமாகும். ஆதிமுதல்வன், ஆதிபுத்தர், ஆதிநாதர், ஆதிபகவன் (திருக்குறள்) ஆகிய பெயர்களும் கூட சாத்தனாரின் இறைமை நோக்கிய நிலைமாற்றத்ததை வலுப்படுத்துகின்றன. உண்மையில் புத்தர் தன்னை இறைவன் நிலைக்கு உயர்த்திக் கொண்டதில்லை. பின்னாளில் சமயப் பெரியவர்கள் ஏற்படுத்திய மாற்றமாக இது அமைகிறது.

இலங்கையில் பௌத்தர்களிடம் காணப்படும் நடைமுறையை மானிடவியல் ஆய்வாளர் சிறிகாந்தன் (2013: 155) பின்வருமாறு விளக்குகிறார். “இலங்கையில் பௌத்தர்கள் மத்தியில் நிலவும் பத்தினித் தெய்வ வழிபாட்டு மரபானது இந்து சமயம் சார்ந்த பௌத்த வழிபாட்டு மரபாகவே நிலவிவருகிறது. அதுவும் குறிப்பாக இடர்காலச் சூழ்நிலையில் பத்தினியை வரவழைத்து வேண்டுதல் இயற்றி வழிபடும் மரபானது சிறப்புப் பெற்றிருந்தது. இவற்றுடன் நாட்டார் வழிபாட்டு மரபியல் கூறுகளுடன் இணைந்த நிலையில் பத்தினியின் வழிபாடு இடம்பெற்று வருகின்றது”. பௌத்தர்களின் தேவகணத்திலும் சரி, பெரஹரா போன்ற ஆண்டுத் திருவிழாக்களிலும் சரி அவர்கள் வழிபடும் நாற்றிசைத் தெய்வங்கள் யாவும் இந்து சமயக் கடவுள்கள் ஆகும். சமயங்களின் நீண்ட படிமலர்ச்சியைக் காணும் போது தேவகணங்களுக்கு ஊடான ஒருவிதத் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. இந்துக்களின் தேவகணத்தை உள்வாங்கிக் கொண்ட பௌத்த மரபை இன்று இலங்கையில் காண்கிறோம். இது மணிமேகலை காலத்துப் பௌத்த மரபிலேயே காணக்கூடியதாக உள்ளது.

இனி வழிபாட்டு மரபில் காணப்படும் வேறுவகையான தொடர்ச்சியையும் மாற்றங்களையும் காண்போம். ஒவ்வொரு வழிபாட்டு மரபிலும் அந்த மரபிற்குரிய காரண காரியமும் (cause & effect), செயலும் பயன்முறையும் (action & benefit) தருக்க ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். காரணமின்றிக் காரியமும், காரியமின்றிக் காரணமும் இருப்பதில்லை. செயல் சார்ந்த பயனும் பயனுக்கான செயலும் வழிபாட்டு மரபில் ஒழுங்கமைந்திருக்கும். பௌத்த மரபில் போதியின்கீழ் மெய்யறிவின் வடிவமாய் அமர்ந்துள்ள புத்தரின் திருந்திய அடிகளை வலம்வந்து தொழுதால் வினைப்பற்றுகளிலிருந்து விடுபட்டுக் குற்றமற்ற நல்வழியில் செல்லலாம். இதனை மணிமேகலை பின்வருமாறு உரைக்கின்றது.

‘ஓங்குயர் போதி உரவோன் திருந்தடி

தொழுது வலங்கொண்டு தொடர்வினை நீங்கிப்

பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய்’ (மணி. 12: 111-113)

இவ்வாறு வலம் வருவதால் முற்பிறவித் திறனுணரலாம் என்கிறது பௌத்தம்.

மணிமேகலை காலத்து வழிபாட்டு முறைகளில் புண்ணிய நீராடல் ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. புண்ணிய நதிகளிலும் முந்நீர்ப் பரப்பிலும் நீராடுதல் மரபாக இருந்துள்ளது. இதனால் பிறவிப் பாவங்கள் ஒழிவதாக மக்கள் நம்பினர். ஆதலின் மக்கள் நெடும்பயணம் செய்து நீராடிக் கடவுளைத் தொழுதனர் என்பதைப் பின்வரும் அடிகள் மூலம் அறியலாம்.

‘பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக்

காப்புக் கடைகழிந்து கணவனை யிழந்தேன்

எற்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு

தெற்கண் குமரி யாடிய வருவேன்’ (மணி. 13: 80 – 83)

இத்தகைய வழிபாட்டு மரபுகள் இந்து சமயத்திலும் காணப்படுகின்றன. இதன் மூலம் பண்டைய தமிழ்ச் சமய மரபுகளின் தொடர்ச்சி பின்வந்த சமயங்களிலும் காணக்கூடிய ஒன்றாகவே உள்ளது என்பதை எண்ணற்ற சான்றுகள் மூலம் நிறுவலாம். எனினும் சமயங்களுக்கிடையிலான பொதுமைகள் ஒருபுறம் இருந்தாலும் அந்தப் பொதுமைக் கூறுகளினூடாக ஒவ்வொரு சமயமும் ஏற்படுத்திக் கொள்ளும் தனித்துவங்கள் அதற்கான புதிய வடிவத்தைக் கொடுக்கின்றன. உயிரியல், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களில் நிகழும் படிமலர்ச்சிப் போக்குகள் சமயம் எனும் தளத்திலும் நிகழ்ந்துள்ளதை மணிமேகலையில் காணும் தேவகணம் ஊடாக அறியமுடிகிறது.

துணை நூல்கள் :

கந்தசாமி, சோ. ந. 2003. இந்தியத் தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

சாமி, பி.எல். 2011 (1975). தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு. சென்னை: என்.சி.பி.எச்.

சாமிநாதையர், உ.வே. 1981 (1898). மணிமேகலை. சென்னை: டாக்டர் உ.வே. சாமிநாதைய்யர் நூல்நிலையம்.

சிற்றம்பலம். சி.க. 1996. ஈழத்து இந்துசமய வரலாறு. கி.பி. 500 வரை (பாகம்.1). திருநெல்வேலி: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு.

சிறிகாந்தன், ச. 2013. பௌத்த மரபில்; பத்தினித் தெய்யோ: கணநாத் ஒபயசேகராவின் ஆய்வு. சிலப்பதிகாரம்: கவிதை-பண்பாட்டியல்-மொழியியல்-அரசியல் நூலிலுள்ள கட்டுரை. பதி. சிலம்பு நா. செல்வராசு. புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.

செல்வராசு, சிலம்பு நா. 2009. பண்டைத் தமிழர் திருமண வாழ்க்கை. சென்னை: காவ்யா.

———–. 2013. கண்ணகி தொன்மம். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.

திருச்சந்திரன், செல்வி. 1997. தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு. சென்னை – கொழும்பு: குமரன் பதிப்பகம்.

நளினி, மு. & இரா. கலைக்கோவன். 2005. பெண்தெய்வ வழிபாடு: தோற்றமும் வளர்ச்சியும். திருச்சிராப்பள்ளி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்.

பத்மாவதி, ஆ. 2003. சோழர்காலச் சமயம். சென்னை: குமரன் புத்தக இல்லம்.

வேங்கடசாமி, மயிலை சீனி. 2002. பௌத்தமும் தமிழும். சென்னை: மீனாகோபால் பதிப்பகம்.

Obeyesekere, Gananath. 1984. The Cult of the Goddess Pattini. Chicago: Chicago University Press.

Subramanian, N. 1966. Sangam Polity.

 

(‘மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்’ என்ற நூலில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. பதிப்பாசிரியர்கள்: இரா. சீனிவாசன் க. காமராசன். வெளியீடு : தமிழ்நாடு பௌத்த சங்கம் & மெத்தா பதிப்பகம், சென்னை – 600 040)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!